Sunday, April 11, 2010

சபாபதி முதல் நல்லசிவம் வரை! - பத்துக்குப் பத்து!!

பதிவுலகின் சுவாரஸ்யங்களில் தொடர்பதிவுகளும் ஒன்று. இந்த விசயத்தைப் பற்றி எழுதினால் என்ன என்று யோசித்துக் கொண்டிப்போம். அதே சமயம் "இதையெல்லாம் ஒரு பதிவாக எழுத வேண்டுமா?" என்றும் உள்ளுக்குள் தோன்றும். அந்த நேரத்தில் தொடர் பதிவெழுத அழைப்பு வரும் பொழுது "அழைத்தவரிற்காக" என்று சொல்லிக்கொண்டு (காரணம் வேணும்ல??) எழுத ஆரம்பித்துவிடுவோம். அப்படி இந்த முறை "எனக்குப் பிடித்த பத்து படங்களை" எழுதுமாறு நண்பர் பிரபாகர் அழைத்திருக்கிறார்.

விதிகள்: 

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே பட்டியலில் வரவேண்டும்.

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை.

சிறுவயதில் இருந்து பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒரு பத்தை மட்டும் பட்டியலிடுவது கடினமான விசயம்!!

படங்களை எப்படிப் பட்டியலிடுவது? 

மிகத் திறமையாக இயக்கப்பட்ட படங்களா? சிறப்பான கதை, திரைக்கதையுள்ள படங்களா?, அதிகமான விருதுகள் வாங்கியவையா?, சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் கொண்ட படங்களா? அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி எடுக்கப்பட்ட படங்களா?

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் வீரபாண்டிய கட்டபொம்மன், அதே கண்கள், எதிர் நீச்சல், ராஜராஜ சோழன், கர்ணன், கந்தன் கருணை, ஆறு முதல் அறுபது வரை, உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, சேது, கன்னத்தில் முத்தமிட்டால், குணா, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும், பருத்திவீரன், சேது, பிதாமகன், மகாநதி, தேவர் மகன், சுப்பிரமணியபுரம்,  ஹே ராம், அஞ்சலி, ஹவுஸ்புல், புதிய பாதை, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராப், ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், நான் கடவுள் போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெறும். 

இது போன்ற ப்டங்களைப் பார்க்கும் பொழுது நல்ல படங்கள் என்ற நிறைவும், தமிழ் சினிமா மீதும் பெருமிதமும் ஏற்படுகிறது!! மேலே குறிப்பிட்ட படங்கள் யாவும் என் கலெக்சனிலும் உள்ளன. ஆனால் இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தால் "இல்லை" என்று தான் கூற வேண்டும். 

அப்படி நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த/ரசிக்கும் படங்களைப் பட்டியலிடுகிறேன், பல அக்மார்க் மசாலாப் படங்கள் என்றாலும்!! 

1. சபாபதி - 1941:

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தயாரித்து இயக்கியிருக்கும் படம். 1941ல் வெளியாகியிருக்கும் படத்தில் சபாபதி என்ற பெயரிலேயே இரண்டு கதாபாத்திரங்கள். எஜமான் சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரன் (கதாநாயகர்) வேலையாள் சபாபதியாக சாராங்கபாணி!! இருவரும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் தாங்க முடியாது. தூர்தர்ஷன் காலத்தில் முதன் முதலில் பார்த்தது. என் இளம் வயதில் அவ்வளவு சிரித்து மகிழ்ந்தது இந்தப் படமாகத் தான் இருக்கும்.
பள்ளிகளில்/ கல்லூரிகளில் ஆசிரியரை கிண்டலடிக்கும் வழக்கம் இந்தப் படத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இன்று வரை நாம் பார்க்கும் கிண்டல் காட்சிகள் யாவும் இந்தப் படத்தின் பிரதியே!!

கிளப், சீட்டாட்டம் என்று திரியும் செல்வந்த முதலாளி, படிப்பில் கவனம் இல்லாத மகன், செல்லம் கொடுக்கும் தாயார், முட்டாள் வேலையாள், சபாபதிக்குப் பார்க்கப்படும் பெண், வேலைக்காரி என்று குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு அருமையான படத்தைத் தந்திருப்பார் ஏ.வி.எம். செல்வந்தர்களிடம் இருந்த( ஏன் இன்னும் இருக்கும்) ஆங்கில மோகம், சமூகத்தில் இருந்த இன்னல்கள் என்று ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவை நிரவியிருக்கும். 

படத்தின் அதிகபட்ச நகைச்சுவை சபாபதியின் தேர்வுத்தாள். தெற்கு ரயில்வேயைப் பற்றி எழுதச் சொன்னால்..

"இருப்புப் பாதை என்றால் இருப்புப்பாதை என்று அர்த்தம். தெற்கு ரயில்வே மெட்ராஸில் இருக்கிறது. மெட்ராஸில் இருந்து கிளம்பிய ரயில் குப்..சிப்..
குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப். குப்..சிப்..குப்..சிப்.." என்று எழுதியதை "சபாபதி" படிக்கும் காட்சியைப் பார்ப்பவர்கள் கண்ணில் நீர் வர நான் உத்திரவாதம்.

தேன் நிலவு:(1961)

வழக்கமாக வரலாற்றுப் படங்கள் அல்லது சோகப் படங்களைப் போடும் தூர்தர்ஷனில் பார்த்த பொழுது ஸ்ரீதரின் தேன் நிலவு ஒரு மாறுதல். 

இளமையான ஜெமினி கனேசன், அழகான நம்பியார், காமெடியில் கலக்கும் தங்கவேலு, ஓவியம் போல வைஜெயந்திமாலா என அருமையான கூட்டனியுடன் சிறிது சோகம் இருந்தாலும் மென்மையான படம். "ஓஹோ எந்தன் பேபி.. நீ வாராய் எந்தன் டார்லிங்" என்று ஜெமினியும், வைஜெயிந்திமாலாவும் காஷ்மீர் ஏரியில் டூயட் பாடும் காட்சி போல தமிழ் படங்களில் காட்சி வந்ததில்லை. இப்பொழது, தேன் கின்னம் நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்கமுடிவதில்லை :)

பாட்டுப் பாடவா, காலையும் நீயே மாலையும் நீயே, ஊரெங்கும் தேடியே ஒருவரைக் கண்டேன், நிலவும் மலரும் பாடுது என்று படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் கிளாசிக்கல் ரகம். இசை ஏ.எம்.ராஜா. 

3. காதலிக்க நேரமில்லை (1964)

தமிழ் சினிமாவின் Trend Setterஆக அமைந்த படங்கள் இரண்டு. ஒன்று காதலிக்க நேரமில்லை. இரண்டாவது 16 வயதினிலே. இரண்டாவது செட்டில் இருந்து வெளியே கிராமத்திற்கு கூட்டிச் சென்றதற்கு. முதலாவது முழுக்க முழுக்க நகைச்சுவையாக அமைந்ததற்கு.

ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜ்ஸ்ரீ, பாலய்யா கூட்டனியில் ஸ்ரீதர் இயக்கிய படம். இந்தப் படத்தில் நாகேஷ் இயக்குனர் ஆகும் எண்ணத்தில் பாலய்யாவிற்குக் கதை சொல்லும் காட்சி இப்பொழுது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது.

எங்க ஊரிற்கு அருகே இருக்கும் ஆளியார் அணையில் தான் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். 

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்" பாடல் என்னுடைய All time Favourite!!

4. தில்லுமுல்லு (1981):

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்ற பாத்திரத்தில் ரஜினி கலக்கியிருக்கும் படம். மீசையை வைத்து நகைச்சுவை செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கும் படம். 

ரஜினி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி கூட்டனி அடிக்கும் கூத்திற்கு அளவே கிடையாது. படத்தின் ஹை-லைட் நகைச்சுவை காட்சி தேங்காய் சீனிவாசன் நடத்தும் நேர்முகத்தேர்வு தான்!!

சுப்பிரமணிய பாரதி என்ற பெயரில் ஒருவர் வருவார்..

அவரிடம் தே.சீ., "வணக்கம் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதி, உங்க பேரக் கேட்டாலே குழந்தைகளுக்கும் சுதந்திர தாகம் எடுக்கும். உங்களுக்கும் கவிதைகள் எழுதத் தெரியுமா?" என்பார்.

அதற்கு அவர், "பல(ழ)க்கம் இல்லீங்க..." என்பார்.

"பலக்கம் இல்லியா? உங்களுக்கு இந்த "ழ"ன்னா வராதா?"
"வரும், ஆனா கொஞ்சம் கஸ்(ஷ்)டப்படும்"
அதற்கு தே.சீ.,"கஸ்டப்படும். அப்ப உங்களுக்கு இந்த "ஷ"னாவும் வராது. சரி, இப்ப நான் சொல்றத திரும்ப சொல்றீங்களா? 'ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோண சுள்ளி'.. எங்க இத சொல்லுங்க.."
"வேண்டாங்க ரிஸ்க்கு.." என்பார் பாரதி..
" 'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது. பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. இது நாட்டுக்கும் அவருக்கும் பண்ற பெரிய துரோகம்யா.. முதல்ல உங்க பேர மாத்துங்க.." என்பார் தே.சீ.. 
"மாத்தீட்டேன் சார்.. ஷார்டா சுப்பி.."
"பேரப்பாரு சுப்பி கப்பினு.. GET OUT........" :)

5. இன்று போய் நாளை வா (1981)

தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்த்துவரும் அனைவருக்கும் இந்தப் படத்தைத் தெரியாமல் இருக்காது. 80களில் கோவை நகரின் வீதிகளை கண் முன்னே நிறுத்தியிருப்பார் பாக்கியராஜ். 

"ஏக் காவ் மேன் ஏக் கிஷான் ரஹ தாத்தா" காமெடி இன்றளவும், தமிழக இளைஞர்கள் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வசனம்.

நான் அதிகமாகப் பார்த்திருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

6. முதல்மரியாதை (1985)

50 வயது மதிக்கத்தக்க ஊர்ப் பெரியவருக்கும் 20 வயது மதிக்கத்தக்க பரிசல் ஓட்டும் பெண்ணிற்கும் பூக்கும் காதலை மண் வாசனையுடன் கொடுத்திருப்பார் பாரதிராஜா.

சிவாஜி!! 

"உன்னோட தங்கச்சி மவன் முக்கியமா, சாதி முக்கியமாய்யா? உன் வீட்டுல கூடு கட்டியிருக்கே குருவி, அதெல்லாம் சாதியாய்யா பாக்குது? நல்லவேளை தேவர் கொக்கு, நாடார் குருவி, செட்டியார் மைனான்னு அதுக சொல்றதில்லை. உனக்கு உன் சாதி தான் முக்கியம்னா வெட்டுயா பாக்கலாம்" என்று ராதா பேசும் வசனம் இன்றும் நினைவில் நிறுகிறது.

இளையராஜா... ஒரு ராஜாங்கமே நடத்தியிருப்பார். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது எங்கள் ஊரிற்குப் பக்கத்தில் இருக்கும் கிராம நினைவுகள் வந்துவிடும். ரஞ்சனி இறக்கும் முன்பு ஒரு புல்லாங்குழலில் ஒரு BGM வரும் பாருங்கள்! ராஜா ராஜா தான்!!

7. மைக்கேல் மதன காமராஜன் (1992)

கமல் - கிரேசி மோகன் கூட்டனியில் வந்த நகைச்சுவைப் படங்களில் இந்தப் படத்திற்கு தனி இடம்!!

நான்கு பாத்திரத்தையும் எந்த வித ஒப்பனையும் இல்லாமல், Body Languageயையும், வாட்டார மொழியையும் மட்டுமே வைத்துக்கொண்டு செய்ய முடியும் என்று காட்டியது சிறப்பு!! இந்தப் படத்தில் ஒன்று முடிந்த அளவிற்கு ஏனோ தசாவதாரத்தில் 10 பாத்திரங்களில் வரும் பொழுது ஒன்ற முடியவில்லை.

பாலக்காட்டு ஐயர்-ஊர்வசி கூட்டனியில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் கலக்கல்!!

"நீங்களும் குக்கா.. உங்க ஊரும் குக்கு...", "ஐ.மீன்.. வாட் யூ மீன்.." என்று படம் முழுக்க நகைச்சுவை வசங்கள் பரவிக்கிடக்கும். 

8. அக்னி நட்சத்திரம் (1988) :

சுத்தமான மசாலாப் படமானாலும் சிறந்த பொழுது போக்குப் படம். ஆண்மையான கார்த்திக், அளவான உடம்புடன் பிரபு, அழகான அமலா, இளமையான நிரோஷா என்று சூப்பர் கூட்டனி.மணிரத்னம் படங்களில் அந்தக் காலகட்ட இளைஞர்கள் பேச்சு வழக்கு இடம்பெறும்.ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் வசனங்கள், அலைபாயுதேவில் மாதவன், அக்னி நட்சத்திரத்தில் அமலா, நிரோஷா பேசும் வசனங்கள் "ஆ"வெனப் பார்க்க வைத்தது.

இந்தப் படம் வந்த பிறகு "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சேய்... தங்கமணி ஊருக்குப் போயிடுச்சேய்..." என்ற வசனத்தை பயன்படுத்தான் கணவன்மார்கள் இருப்பார்களா? வி.கே.ராமசாமி, ஜனகராஜ் அடிக்கும் கொட்டம் கலகலப்பு.

இளையராஜ டிஸ்கோ சாந்தி வரும் காட்சிக்குப் போட்டிருக்கும் BGM கலக்கல். பல நாட்கள் என் ரிங்டோன் அது தான்!!

9. பாட்சா (1995)

ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது புல்லரிப்பது இந்தப் படத்திற்குத் தான். பல முறை ரஜினியைக் கிண்டல் செய்தாலும் ரஜினியைத் தவிர இது போன்ற பாத்திரத்தை யாரும் செய்ய முடியாது.

தீவிர கமல் ரசிகனாக எனக்கு, "உள்ளே போ..." என்று ரஜினி பேசும் பொழுது விசிலடிக்கத் தோணும்.



10. அன்பே சிவம் (2003):

"யார் யார் சிவம்.. அன்பே சிவம்.. ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்" என்று வரும் பாடலில் தான் எத்தனை அர்த்தம்?

"தீவிரவாதிக எல்லாம் என்னை மாதிரி கோரமா இருக்க மாட்டங்க. (மாதவனை நோக்கி) உங்களை மாதிரி நல்ல ஸ்மார்ட்டாத் தான் இருப்பாங்க!!" என்று மாதவனிடம் பேசும் இடத்திலிருந்து..

தன் பெயர் ஏ.அரஸ் என்று கூறும் மாதவனிடம்.."அன்பு உங்களுக்குப் பிடிக்காதா?" 

"சோவியத் யூனியன் தான் உடைஞ்சிருச்சே.. இன்னும் ஏன் கம்யூனிசம்னு அலையறீங்க...?" என்று கேட்கும் மாதவனிடம்.."தாஜ்மஹால் இடிஞ்சு போச்சுன்னா.. காதலே இல்லைன்னு சொல்லீருவீங்களா?"

"எனக்குத் தெரிஞ்சு நீங்க தான் கடவுள்... ஒருத்தனைக் கொல்லனும்னு வந்துட்டு.. கொல்லாமப் போகனும்னா எவ்வளவு பெரிய மனசு வேணும். நீங்க தான் கடவுள்.."

என்று படம் முழுக்க வரும் வசனங்கள்... முத்துக்கள்

ரயில் எவ்வளவு நிமிடம் நிற்கும் என்பதற்கு "டு டு டு டு டு டு... " என்ற (1:58 - 2:02) வசனம். "யாரு சார் அது.. சும்மா.. சரஸ்.. சரஸ்.."என்று படம் முழுக்க வரும் வசனங்களில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை!!

"எந்நாடுடைய சிவனே போற்றி"என்று பாடும் நாசர், கிரன், மாதவன், முகத்தில் உள்ள தழும்பையும் நடிக்க வைத்த கமல், உமா ரியாஸ், சந்தான பாரதி என அனைவரின் நடிப்பும் அருமை. 

இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுவது இயல்பு!!

o

எனக்குப் பிடித்த படங்களை கொஞ்சம் பெரியதாகவே பட்டியலிட்டுள்ளேன். இதைத் தொடர நான் அழைப்பது...


நன்றி!!
o

13 comments:

பிரபாகர் said...

உங்களை எழுத அழைக்கும்போது எழுதுவீரகளோ என தயக்கம் இருந்தது! எழுதிக் கலக்கிவிட்டீர்கள்...

எல்லாம் என் பிடித்த வரிசையில் இருக்கும் படங்கள் தான்.

சபாபதி - இயல்பான நகைச்சுவை படம் முழுதும். உதவியாய் வரும் அந்த நபர் செய்யும் யாவும் சிரிப்பாய் இருக்கும்.

தில்லு முல்லு - முழு நீள நகைச்சுவைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது!

எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். அருமையான தொகுப்பு செந்தில்....

மொத்தத்தில் கலக்கல்!

பிரபாகர்...

Chitra said...

கலக்கல் தொகுப்பு. சான்சே இல்லை! அசத்திட்டீங்க.

தாராபுரத்தான் said...

நாங்கள் எல்லா பத்து தடவை பார்தத படங்கள் 1.சபாபதி. 2. முதல் மரியாதை.

செந்தில்குமார் said...

அருமை நால்லாஇருக்கு செந்தில்வேலன்

இதில் என்னைகவர்ந்தது

முதல் மரியாதை இருதிகட்சியில் நான் அழுதஞாபகம்
தில்லுமுல்லு
என் வயிரு வலித்தே (சிரித்து)அழுதேன்
அன்பேசிவம்
கமலை பார்த்து நான் வியர்ந்தபோன படம்
காதலிக்கநேரமில்லை,தேன்நிலவு நான் பலமுறை கண்டு கழித்தபடம்

எல்லாம் சேர்ந்த உங்கள் தொகுப்பு நல்லாதன் இருக்கு......

கோபிநாத் said...

கலக்கல் தொகுப்பு தல ;)

க.பாலாசி said...

//வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்கமுடிவதில்லை :)//

எனக்கு பத்மினிங்க... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன... அடடா... ஸ்ஸ்ஸோ சுவீட்....

அடுத்து முதல்மரியாதை... ராதா நம்மவீட்டுக்கு பக்கத்துவீட்டு பொண்ணுமாதிரி இருப்பாங்க... அவ்ளோ இயல்பா இருக்கும்....

நல்ல தொகுப்பு... உங்களின் ரசனையுடன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super collection

ஞானவெட்டியான் said...

அம்பிகாபதி, அடுத்த வீட்டுப் பெண், அறிவாளி, ஆண்டவன் கட்டளை, அன்னையின் ஆணை இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே!

கண்ணா.. said...

அட... அசத்தல் கலெக்‌ஷன்ஸ்..

என்னையும் ஆட்டைல சேர்த்தாச்சா...!!

ரைட்டு சீக்கிரம் தொடர்ந்திருவோம்.

அழைப்பிற்கு நன்றி..

geethappriyan said...

அருமையான தொகுப்பு நண்பரே,
நானும் நேரம் கிடைக்கையில் தொடர்கிறேன்.

Prathap Kumar S. said...

எல்லாம் நல்ல சேகரிப்பு.

சபாபதி முன்பு சென்னை தொல்லைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அருமையான நகைச்சுவைப்படம்.

பாட்ஷா அளவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் சினிமா இதுவரை வரவில்லை என நினைக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ பிரபாகர்,

நன்றிங்க. அழைப்பிற்கும்!!

@@ தாராபுரத்தான்,

நன்றிங்க ஐயா.

@@ சித்ரா,

நன்றிங்க.

@@ செந்தில்குமார்,

நன்றிங்க நண்பரே.

@@ கோபிநாத,

நன்றிங்க கோபி.

@@ க.பாலாசி,

நன்றிங்க. ஓ.. உங்களுக்கு பத்மினியா? :)

@@ ரமேஷ்,

நன்றிங்க

@@ ஞானவெட்டியான்,

ஓ.. இது உங்களுக்குப் பிடிச்ச படங்களா? இது நல்லாவே இருக்குங்க..

@@ கண்ணா,

எழுதுங்க கண்ணா..:)

@@ கார்த்திகேயன்

நன்றிங்க

@@ நாஞ்சில் பிரதாப்,

நீங்க சொல்றது உண்மை.. நன்றிங்க.

வினோத் கெளதம் said...

முதல் மரியாதை
அக்னி நட்சத்திரம்
பாட்ஷா
தில்லு முல்லு ..
அப்புறம் நீங்கள் எழுதியுள்ள அனேக படங்கள் என்னோடைய பிடித்த படங்கள் கூட செந்தில்..
நானும் எழுதிவிடுகிறேன்..:)

Related Posts with Thumbnails