Friday, April 30, 2010

லிவிங்க்-டு-கெதர், குஷ்பு, திருமணம் - ஒரு பார்வை!!

"திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் (லிவிங்க் டுகெதர்) என்ன தவறு இருக்கிறது?" என்று உச்ச நீதி மன்றம் குஷ்பு மீது தொடுத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

"படித்த எந்த ஆணும் தன் மனைவி கற்புடையவளாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டான். பெண்கள் திருமணத்திற்கு முன்பான உறவுகளில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்தது வழக்குகளுக்கும், குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டங்களுக்கும் காரணம்.

o

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? குஷ்புவின் கருத்து சரியானதா? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இந்த விசயம் தொடர்பாக பல எண்ணங்கள் மனதில் எழுகின்றன. அதைப் "பொதுப்புத்தி"யுடன் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்பது தீர்ப்பு. இங்கே கவனிக்க வேண்டிய விசயம்.. திருமண வயதை அடைந்தவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டையெல்லாம் கூறவில்லை இந்தத் தீர்ப்பு. ஒருவர் யாருடன் சேர்ந்து வாழ்வதும் அவரவரின் விருப்பம். ஆக..  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரிவதில்லை.

திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை மட்டும் பார்ப்போம். ( ஓர் ஆண் ஆணுடனோ, ஒரு பெண் பெண்ணுடனோ சேர்ந்துவாழ்வது இங்கே விவாதிக்கவில்லை.)

o

"எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது, எனக்கும் இந்த ஆணைப் பிடித்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம்" என்பது மாநகரங்களில் இன்று பரவலாகி வருகிறது. "நானும் நீயும் ஒரு கூரையின் கீழ் வாழ திருமணம் என்ற "சடங்கு" தேவையா?" என்பதே இவர்களின் மனதில் எழும் கேள்வி. அவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் சேர்ந்து வாழத் திருமணம் தேவையில்லை தான்.  

இந்த முடிவை எடுப்பவர்கள் இருபதுகள், முப்பதுகளில் இருப்பவர்கள் தான் அதிகம். இவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?

முதலில் வாழ்விடம்..

தாங்கள் சேர்ந்துவாழ, ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, வெளியூரிற்குச் செல்லும் பொழுது விடுதியில் அறை எடுப்பது வரை சிக்கல் தான். தாங்கள் கணவன் மனைவி தான் என்று நிரூபித்தால் தான் இன்றும் ஹோட்டல்களில் அறை எடுக்க முடியும். கமலஹாசன் முன்பொரு பேட்டியில், "ஹோட்டலில் அறை எடுப்பதற்காகத் தான் திருமணம் செய்தேன்" கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஹோட்டல் நிர்வாகத்தினர் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலேயே இருக்கிறது நாட்டு நடப்பு!! சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி படைத்தவர்கள் இதில் அடங்க மாட்டர்.

அடுத்து குழந்தை..

சேர்ந்து வாழும் இருவர்.. தங்களுக்குக் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால் வருவது அடுத்த சிக்கல். கற்பமான தன்னவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்.. உறவுமுறையைக் கூற வேண்டிய இடத்தில் ஆரம்பிக்கிறது சிக்கல். சேர்ந்து வாழ்பவர் என்ற உறவுமுறையை நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் ஏற்கலாம். சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ.. சிக்கல் தான். ஆனால், பிறந்த குழந்தையை வளர்ப்பதில் எந்த குறையும் இன்றி கண்டிப்பாக வளர்க்க முடியும்.  திருமணமாகாத பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும் போது.. சேர்ந்து வாழும் பெற்றோரால் கண்டிப்பாக நன்றாகவே வளர்க்க முடியும். 

வெளிநாட்டு வாழ்க்கை.. விசா.

சேர்ந்து வாழும் இருவருள் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல நேர்ந்தால்.. தன்னைச் சார்ந்தவர் (Dependent) என்ற முறையில் "மனைவியையோ/ கணவரையோ" மட்டுமே அழைக்க முடியுமே தவிர.. சேர்ந்து வாழ்பவரை அல்ல. மேலும்.. துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில்.. நீங்கள் திருமணமாகத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். "One should not live with a person out of their marriage"

சேர்ந்துவாழ்பவர்களுக்கு ஏற்படும் சிக்கலை விவரித்த அதே நேரத்தில்.. தேவையற்ற சடங்குகள், கணவன் மனைவிக்கென்று சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், பிடிக்கவில்லை என்றால் எளிதில் பிரிந்து செல்ல முடிவது போன்றவையை நன்மையாகக் கூறலாம். சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் நண்பர்களும் எனக்கிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சேர்ந்து வாழ்ந்த இருவர் பிரிய நேர்ந்தால் என்ன நிலை ஏற்படும்? அந்த ஆண் அல்லது பெண் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வதை எப்படி அனுகுவது? இங்கே தான் வருகிறது குஷ்புவின் கருத்து!!

சேர்ந்து வாழ்ந்த ஆணோ பெண்ணோ பெற்றோரின் நிர்பந்தத்தால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டால், அவர்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப் படுவர்? விவாகரத்து ஆனவர் என்பதைப் போல சேர்ந்து வாழ்ந்தவர் என்றா? 

நண்பர்கள் மத்தியில் திருமணம், தான் திருமணம் செய்யப் போகும் பெண் பற்றியெல்லாம் பேச்சு வரும்பொழுது, "மாப்ளே, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தாப் போதும்டா" என்றோ, "நான் எந்த பெண்ணுடனும் தொடர்பில்லாம இருக்கேன், என் மனைவியும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருப்பதில் என்ன தவறிருக்கிறது" என்றோ தான் பேச்சு அடிபடும். 

ஆக குஷ்பு கூறியது போல "படித்த ஆண் மகன் எவரும் தன் மனைவியாக வருபவர் கற்புடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டார்" என்ற கருத்தை ஏற்க முடிவதில்லை. திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தவர்கள் சில சதவிதத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும், பெருவாரியான மக்கள் இப்படித்தான் என்பது ஏற்புடையதில்லை.

இந்த நபர் இன்னாருடன் சேர்ந்துவாழ்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால் எத்தனை சதவிதத்தினர் திருமணத்திற்கோ சேர்ந்து வாழவோ ஏற்றுக் கொள்வர்?

-பிடிக்காத நபருடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே சரி என்று கூறும் வேளையில் வாழ்க்கையின் அடுத்த நிலை என்ன என்பதை யோசிப்பது மிகவும் தேவையான ஒன்று. வாழ்க்கையின் அடுத்த நிலையில், திருமணம் பற்றி யோசிக்க நேர்ந்தால் தன்னைப் பற்றிக் கூறிவிடுவதே ஏற்புடையது.

o

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, (இந்திப் படங்களில் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்து) லிவிங்க்-டு-கெதர் உறவுமுறை மீது ஆர்வம், ஏதோ நவீனத்துவ சிந்தனையாளன் என்ற எண்ணம் போன்றவையால் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் முன்பு வாழ்வின் அடுத்த நிலை பற்றி சிந்திப்பது நல்லது. "இன்றைய பொழுதை இனிமையாக்கு, நாளையை நாளை பார்க்கலாம்" என்பதெல்லாம் சரிதான். ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!!

o

9 comments:

பிரபாகர் said...

நல்லா சொல்லியிருக்கீங்க செந்தில்... ஆனால் முழு மனசா ஏத்துக்க முடியல!

ஒருவேளை நாம் சார்ந்து வந்த சமூக சூழலோ....?

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

கடைசி வரிகள் மட்டும் ”நச்”...

Chitra said...

////இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?////



......இதையும் முதலில் ஜங்கு புங்கு என்று சொல்லி விட்டு பிறகு ஏற்றுக் கொள்வார்களோ என்னவோ? நிறைய விஷயங்கள் மாறி கொண்டு வருகின்றன. எதை சமூகம் வரவேற்கிறது எதை ஒதுக்குகிறது என்று ஒண்ணும் தெரியல ......

kiristians said...

மிகவும் வருத்தமாக உள்ளது.குஷ்பூ சொன்னால் அது அவரது தனிப்பட்ட கருத்து.ஆனால் நீதிபதி இப்படி சொல்லலாமா?.மனிதர்கள் மனசாட்சியில் பொய்யை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.அமெரிக்க
கெட்டது அம்பது வருஷத்தில்.இந்தியாவுக்கு இருபது வருஷம்.

ரவி said...

In EU Countries, You can Get a Visa for a Girlfriend too, as a dependent.

செந்தில்குமார் said...

இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?



ஒருவேளை நாம் சார்ந்து வந்த சமூக சூழலோ....?

கடைசில கலக்கிட்டீங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ பிரபாகர்,

மனசு ஏத்துக்க முடியாதது நாம் வளர்ந்த சூழல் தான் காரணம். நன்றி.

@@ சங்கர்,

நன்றி

@@ கதிர்,

நன்றி

@@ சித்ரா,

ஆமாங்க, அடுத்த தலைமுறையினர் வரும்பொழுது, நம் தலைமுறையினர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன்.

@@ கிரிஸ்டியன்ஸ்,

எதுவும் அவ்வளவு சீக்கிரம் கெடாதுங்க. இன்னும் ஐம்பது வருடம் ஆனாலும் :))
நன்றிங்க.

@@ செந்தழல் ரவி,

நல்ல தகவல். ஆனால் அவர்களுக்கு என்ன நடைமுறை தேவைப்படுகிறது?
தகவலிற்கு நன்றிங்க.

@@ செந்தில்குமார்,

ஏத்துக்க முடியாதது நாம் வளர்ந்த சூழல் தான் காரணம். நன்றிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

னல்லாருக்கு.குரிப்பா ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!! எண்ட்ர line super. cp senthilkumar
chennimalai

Unknown said...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுவது சமுகத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் இதனால் குப்பை தொட்டிகளில் சிசுக்களை பார்க்கலாம் இன்னும் அதிக குழந்தைகள் அனாதைகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நீதிபதிகளும் அரசாங்கமும் சிந்தித்து பார்க்கவேண்டும் இது திருமணம் முறையாக சட்டமாக்க பட்டால் தடுக்கப்படும்

Related Posts with Thumbnails