Friday, May 7, 2010

சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்.

சாதி/ குலம் என்றால் என்ன? சாதி எப்பொழுதிருந்து  வழக்கத்தில் இருக்கிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் பல ஏடுகளில் தேடினேன். அதில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் (பக்கம் 161) உள்ள கருத்துகளைக் கீழே சேர்த்துள்ளேன்.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் "மக்கள் செய்துவந்த தொழிலிற்கு ஏற்பத்" தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமனக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு  பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்ப்பட்டு வந்தது.

மக்கள் செய்து வந்த தொழிலிற்கு ஏற்ப பல குலங்களாகப் பெயரிடப்பட்டு வாழ்ந்தது மேலே உள்ள பத்தியில் இருந்து விளங்குகிறது. ஆனால், அந்த காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், இது எப்பொழுது மாறியது? ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்பித்தது எப்பொழுது? ஒரு குலத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை வர ஆரம்பித்தது எப்பொழுது?

இந்நிலைக்குக் காரணம் இன்னார் தான் என்று விடையளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. சாதிகளின் இன்றிய நிலை என்ன? இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா? என்ற கேள்விகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.உணவு, உடை, இருப்பிடம், காற்று, ஒளி, போல நம் இந்தியர்களின் வாழ்வில் ஒன்றாய்க் கலந்திருக்கும் விசயம் சாதி.

எப்படி சில சாதியினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்? சில சாதியினர் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு விடை கல்வி, வெளியுலகப் பட்டறிவு (Exposure), ஆள்வோரின் துணை போன்றவையை விடையாகக் கூற முடிகிறது. தொழிலின் அடிப்படையில் குலங்கள் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் வரக் காரணம், சிலரின் தொழில் வெளியுலக உறவைப் பலப்படுத்தும் வகையிலும், சிலரின் தொழில் குறுகிய வட்டத்தில் இருந்ததையும் புரிய முடிகிறது. அப்படி கல்வி, வெளியுலக அறிவு போன்றவை சில குலங்களை பலப்படுத்தியும், போதிய கல்வியறிவு இல்லாதது பல குலங்களைச் சமூக சூழ்நிலையில் தாழ்த்தவும் செய்தன. இதற்கு மேலாக ஆள்வோரின் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவையும் சேர்ந்து கொள்ள சாதிய வேறுபாடுகள் நம் சமூகத்தில் வேறூன்றி விட்டது.

சமூகத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் தாழ்ந்திருப்பதற்கும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட (என்று கூறப்படும்) குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வெளியுலக உறவு / அறிவு போன்றவையே காரணம்.

ஒரு குழந்தை அறிவாளியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை விட வளர்ந்த சூழ்நிலை, கல்வி, வெளியுல அறிவு போன்றவற்றைத் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி கல்வி, வெளியுலக அறிவு/உறவு போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தினர்க்கு உதவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு. 

o

பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது வகுப்பாசிரியர், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு வரை சாதி ஏதோ பெயரிற்குப் பின்னார் போட்டுக்கொள்ளும் விசயம் என்றே எண்ணியிருந்தேன். பிறகு 12 படித்து முடித்து பொறியியர் படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிய பொழுது தான் தெரிந்தது சாதிக்கு நம் கல்விமுறை கொடுக்கும் முக்கியத்துவத்தை. எத்தனையோ கேள்விப்படாத சாதிகள். பொறியியல் பட்டியலில் என்னுடைய வரிசை எண் - 1650. பி.சி. எண் - 847. அதாவது பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் எனக்கு 847வது இடம். 1500வது எண் உள்ள பொதுப் பிரிவில் வரும் மாணவரை விட எனக்கு அதிக முக்கியத்துவம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது  கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டதால், சாதியைக் குறிப்பிட வேண்டிய சூழல் பிறகு ஏற்படவில்லை.

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா? 

o

இட ஒதுக்கீடு எவ்வாறு வகுக்கப்படுகிறது?

சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் மூலமும் கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நிர்ணிக்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. தேவையேற்படும் பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முறையாக வைத்துள்ளனர்.

2011 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.

o

இந்தக் கோரிக்கைக்குத் தேவையென்றும்.. தேவையில்லை என்றும் கருத்துகள் வெளியாகின்றன.

கல்வித் துறை முதல் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது வரை இட ஒதுக்கீட்டிற்கு சாதியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையே என்பது ஒரு தர வாதம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.

சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதிக் கட்சிகளுக்கு வசதியாகி விடும். இன்று பி.சி., எம்.பிசி, எஸ்.சி. எஸ்.டி என்று உள்ள நிலை மாறி மேலும் பல உட்பிரிவுகள் வரக் காரணமாகிவிடும். ஏற்கனவே பிரிவினைவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், சாதிவாரியான மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதே அடுத்த தரப்பின் வாதம். 

o

தொழில்வாரியாக வகுக்கப்பட்ட சாதிகள், இன்று அரசியல் காரணியாகவும், வாக்கு வங்கியாகவும் மாறிவிட்டது வேதனையானது. அதற்கான காரணம் வெவ்வேறு சாதிகளிடையே இருந்த பொருளாதார சமூக வேறுபாடுகளே!! அந்த வேறுபாடுகளை இந்த இட ஒதுக்கீடுகள் அகற்ற உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?

பிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா? அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா?

சாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும். அதற்கான வழிவகைகள் எப்பொழுது ஏற்படும்? அப்படி பொருளாதார அடிப்படையையும் சேர்க்க ஆரம்பித்தால், சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்ற சூழலும் வர ஆரம்பிக்கும்.

அதுவே படிப்படியாக சாதிகள் இல்லாத சமூகம் வர உதவும்.

உங்கள் கருத்துகளைக் கீழே குறிப்பிடுங்கள்!!

20 comments:

வஜ்ரா said...

ஒரே கேள்வி.

சாதி அடிப்படை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டுமா கூடாதா ?

நான் வேண்டும் என்கிறேன்.

க.பாலாசி said...

நான் ஓ.பி.சி.. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்கு முன்பாக ஒரு அன்க்ஸர் சீட்டில் என்னுடைய சாதிக்கான நம்பரை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.. அப்பொழுதான் பார்த்தேன்... மொத்தம் இத்தனை சாதிகளா என்று... 10-20 பக்கத்துக்குமேலாக ஒரு புக்கே இதற்காக இருக்கிறது.

//சாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும்.//


பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள் அவரவர் சுயநலனை உதறிவிட்டு மனசாட்சிப்படி இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் இருப்பது உண்மையாகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கு ஒப்பாகும்....

நல்ல இடுகை...

தாராபுரத்தான் said...

வணக்கம் தம்பி..இது புலி வாலை பிடிக்கும் முயற்ச்சி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை !
சந்தோசமாக வாழ்வதற்கு சாதிகள் தேவை இல்லை !
மிகவும் சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி !

அருள் said...

///சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர்.///

தவறு. சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்தான் பின் தங்கிய நிலைமை அளவிடப்படுகிறது. சாதியின் இடத்தை நிர்ணயிக்க பொருளாதாரம் ஒரு அளவுகோளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

///சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?///

இதற்கு பதில் அளிப்பது மிக எளிது.
சாதிகள் இடையே ஏற்றத்தாழ்வு நீடிக்கும் வரை மட்டும் இடஓதுக்கீடு அளித்தால் போதும்.

///பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இடஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும்.///

இதுவும் நல்ல கருத்துதான்.
ஆனால், "க்ரீமி லேயர்" என்பது உள்ஓதுக்கீடாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு பிரிவினரின் இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதைவிடுத்து பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை பொதுப்பட்டியலில் சேர்ப்பது ஓ.பி.சி,க்களுக்கு எதிரான சதி.

எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டிலோ, பொதுப்பிரிவிலோ "க்ரீமி லேயர்" கருத்தை யாரும் புகுத்தவில்லை என்பதை கவனிக்கவும்.

http://arulgreen.blogspot.com/2010/05/blog-post.html

மாபெரும் வெற்றி: சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஒப்புதல்.

Chitra said...

ஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?

பிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா? அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா?


.....நீங்கள் மக்கள் நலனை குறித்து யோசித்து சொல்றீங்க. அப்புறம், சாதி அடிப்படையில் வோட்டு போட்டு.... ... எல்லாத்திலும் அரசியல் ஆதாயம், தலைவர்களுக்கு கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. வேதனையான உண்மை.

ஈரோடு கதிர் said...

மிக விரிவான அலசல் செந்தில்

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல அலசல் செந்தில்.......ஆனால் இது அவ்வளவு எளிதாக முடியக் கூடியதல்ல......

கிடைக்காத பொருளுக்கு ரேஷன் சிஸ்டம் இருப்பது போல் தான் இதுவும். கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் போது, இனிவரும் காலங்களில் இதற்கான தேவையிருக்காது என்றுதான் நினைக்கின்றேன்.

அரசாங்க வேளை வேண்டும் என்றிருப்போர் தவிர மற்றவர்களுக்கு இதில் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை.

1 ரூ அரிசி, இலவச தொலைக்காட்சி, போன்ற வற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்லூரிகளுக்கு நேரடியாக செலுத்தி, மொத்த கல்வியும் இலவசமாக வழங்கினால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்

vivekanandan said...

Let us first think why this reservation policy came. Just because of the upper class people fully occupied the higher post and not allowed the lower caste (as they think) to study and come up in life.

Now the caste based system must. But at the same time those who are in higher income group are to be eliminated from getting the benefits from Govt. Agricultural income should also be taken in to account. Because most of the people are exploiting the benefits in their favour under the name "Agriculturist" (Including famous artists and politicians). Free should reach only to the needy only and not just the ration card holders.

Think for a while

ச.செந்தில்வேலன் said...

@@ வஜ்ரா,

நன்றி!

@@ பாலாசி.

//பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள் அவரவர் சுயநலனை உதறிவிட்டு மனசாட்சிப்படி இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் இருப்பது உண்மையாகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கு ஒப்பாகும்.... //

சரியான கருத்துங்க பாலாசி. நன்றி.

@@ தாராபுரத்தான்

//வணக்கம் தம்பி..இது புலி வாலை பிடிக்கும் முயற்ச்சி.//

என்னங்க செய்யறது.. புலி வாலை பிடிக்கற ஆள் ரிங் மாஸ்டரா இருந்தா தேவலை. நன்றிங்க

ச.செந்தில்வேலன் said...

@@ அருள்,

//அருள் said...
///சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர்.///

தவறு. சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்தான் பின் தங்கிய நிலைமை அளவிடப்படுகிறது. சாதியின் இடத்தை நிர்ணயிக்க பொருளாதாரம் ஒரு அளவுகோளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.//

கல்வி, சமூக ரீதியில் ஏன் பின் தங்கியிருக்கிறார்கள்? பொருளாதாரம் மற்றும் உலக அறிவு இல்லாததே!! உலக அறிவு ஏன் இல்லை? பொருளாதார முன்னேற்றம் இல்லாததே..

//இதுவும் நல்ல கருத்துதான்.
ஆனால், "க்ரீமி லேயர்" என்பது உள்ஓதுக்கீடாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு பிரிவினரின் இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதைவிடுத்து பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை பொதுப்பட்டியலில் சேர்ப்பது ஓ.பி.சி,க்களுக்கு எதிரான சதி.

எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டிலோ, பொதுப்பிரிவிலோ "க்ரீமி லேயர்" கருத்தை யாரும் புகுத்தவில்லை என்பதை கவனிக்கவும்.//

க்ரீமி லேயரை எப்படி அறிவீர்கள்? இதை அறிமுகப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமா?

இதற்கு எளிய வழிமுறை பொருளாதாரம் மேம்பட்டவர்கள் பொதுப்பிரிவில் செல்வதே!!

பொருளாதாரம் மேம்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது?

பான் கார்டு மற்றும் வருமான விதத்தைக் கணிக்கில் கொள்ளலாம்.

ச.செந்தில்வேலன் said...

@@ பனித்துளி சங்கர்,

சிறப்பான கருத்து. நன்றிங்க.

@@ சித்ரா,

//.....நீங்கள் மக்கள் நலனை குறித்து யோசித்து சொல்றீங்க. அப்புறம், சாதி அடிப்படையில் வோட்டு போட்டு.... ... எல்லாத்திலும் அரசியல் ஆதாயம், தலைவர்களுக்கு கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. வேதனையான உண்மை.//

முற்றிலும் உண்மை சித்ரா.

@@ கதிர்,

நன்றிங்க.

ச.செந்தில்வேலன் said...

@@ ஆரூரன் விசுவனாதன்,

அருமையான கருத்துங்க.

எல்லோருக்கும் கல்வி வசதிகள், வேலைவாய்ப்புகள் இருந்தால் எதற்கு இட ஒதுக்கீடு தேவை??

இது தான் வழிமுறை.

@@ விவேகானந்தன்,

என் கருத்தும் அதே..

உயர்வகுப்பினர் எப்படி சிறந்த உயர் பதவிக்கு வர முடிந்தது. சிறந்த கல்வி, சிறந்த உலக அறிவு தான்.

நல்ல கல்வி, அரசாங்க செல்வாக்கு, சிறந்த உலக அறிவு எப்படி கிடைத்தது?

காலங்காலமாக அவர்கள் பார்த்த தொழில் அவர்களை அந்த இடத்திற்கு இட்டுச் சென்றது.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

nerkuppai thumbi said...

உள் மனதிலிருந்து வெளிப்பாடு.
நிறைய கோணங்களில் ஆராய வேண்டிய ஒரு தலைப்பு.
//பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா? //

இவ்வாறு சொல்லக் கேட்பது ஒதுக்கீடு முறையில் "வாய்ப்பு மறுக்கப் பட்ட" (என்று கூறிக்கொள்ளும்) மனதுக்கு நிறைவு தரும்; ஒரு நாள் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு முறை பொருளாதாரநிலை அடிப்படையில் அமையும் ஒதுக்கீடு என மாறும் என நம்பிக்கை அளிக்கும்.
பல விஷயங்களில் qualitative மற்றும் quantitative parameters உள்ளன. உங்களுக்கு தெரியும்.
நீண்டகாலமாக இருந்தபாகுபாடுகளால் இரண்டு விளைவுகள் நேர்ந்துள்ளன:
ஒன்று சிலரின் சமூக நிலை தாழ்ந்து உள்ளது(qualitative); இரண்டு : பொருளாதார நிலை தாழ்ந்து உள்ளது (quantitative ) ;
ஒதுக்கீடு முறை இரண்டாவது விளைவை மாற்ற ஏதுவாகும். இதனால் ஓரிரு தலைமுறைக்குப்பின் சமூக நிலையும் உயரும். ஆகவே, ஒதுக்கீடு இரண்டு தலைமுறைக்கு இருப்பது சரியே; அதாவது ஒரு குடும்பம், ஒதுக்கீடு முறையின் பலனால் கல்வியிலும், வேலையிலும் பயன் அடைந்து இருந்தால் மூன்றாம் தலைமுறைக்கு அதை மறுப்பது சரியே; க்ரீமி லேயர் என்பது இதன் அடிப்படையில் வந்ததே; .
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இந்த க்ரீமி லேயர் என்ற வாதம் மூன்று தலைமுறையாவது இருக்க வேண்டும். ஆனால் அதன் பின் நீடிப்பது சரியில்லை.

க்ரீமி லேயர் முறை கூடாது என்பவர், தாம் அடைந்த பயனை தம் சந்ததியாரும் அடைய வேண்டும்; தம் குலத்தில் உள்ள பொருளாதாரத்தில் மேம்படையாத சகோதரர்களுக்கு போவதை தடுப்பது ஆகும்.

எந்த ஒரு திட்டமும், சில ஆண்டுகளுக்கு பிறகு, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது நடைமுறை; ஒரு திட்டத்தின் விளைவுகளை ஆராய்ந்து, அது எதிர் பார்த்த பயன் அளித்திருக்கிறதா, சட்டங்கள் மாற்றப் படவேண்டுமா, பக்க விளைவுகள் எதிர் பார்த்ததை விட வேறாக இருக்கின்றனவா என ஆய்ந்து மாற்றுவது, கூட்டுவது, குறைப்பது அவசியம்.

அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள ஒதுக்கீடு முறை எந்த அளவு பயன் அளித்திருக்கிறது என சீர் தூக்கி பார்ப்பது அவசியமே.
ஆதலால் , சாதி முறை கணக்கெடுப்பு சரியே.

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் ஏன்?

குழப்புகிறது உள்துறை

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் திரட்டப்படவேண்டும் என்பது நியாயமானது மட்டுமல்ல; சட்ட ரீதியாகவும் சரியான ஒன்றே!

ஜாதி இன்னும் சட்ட ரீதியாக ஒழிக்கப்படவில்லை. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதும் சட்ட ரீதியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும்போதுகூட, நீதிபதிகள் கேட்கும் முதல் வினா இத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான அளவுகோல்புள்ளி விவரம் உள்ளதா? என்பதுதான்.

மக்கள் தொகையில் பெரும்பகுதியினராக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன.

அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் மிக அழகாக இதுபற்றிக் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஆ. இராசா மிகச் சரியாக அவருக்கே உரித்தான சட்ட அறிவுடன் திராவிட இயக்கக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

மத மறுப்பாளன், கடவுள் மறுப்பாளன்கூட இந்து மதத்தில்தான் வைக்கப்படுகிறான் ஏதோ ஒரு ஜாதிக்குள் அடைக்கப்படுகிறான் இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பது அவசியமாகிறது என்று மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

இதில் மத்திய அரசின் உள்துறை ஏன் குளறுபடியைச் செய்கிறது என்று தெரியவில்லை.

வேறு மாநிலத்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் குடியிருந்தால் ஜாதிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுவதாக உள்துறை சொல்கிறது. இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இங்கு வந்து கல்லூரிகளில் படிக்க வந்தால் அவர்களின் சொந்த மாநிலத்தில் அவரின் ஜாதி எந்தப் பட்டியலில் உள்ளதோ, அந்தப் பட்டியலில் தானே வைக்கப்படுகிறார்?

ஏதேனும் அய்யப்பாடு இதில் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பட்டியலைப் பெற்றுக்கொள்வதில் என்ன சிரமம்?

அறிவியல் வளர்ந்த இந்தக் கணினி யுகத்தில் இதில் குழப்பம் வருவதற்கு எங்கே இடம் உள்ளது?

மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்கள் குறிப்பிட்டதுபோல, கார் இருக்கிறதா? வீட்டில் குளியல் அறை இருக்கிறதா? என்று தகவல் கேட்டுப் பதிவு செய்யும்போது (இவை மாறக்கூடியவை) மாறாத தன்மை வாய்ந்த ஜாதியைப்பற்றி விவரம் கேட்பதை ஏன் தவிர்க்கவேண்டும்?

அனந்தகுமார் போன்ற பார்ப்பனர்கள் குறுக்குச்சால் ஓட்டுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதியைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்புள்ள ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு தெளிவு இருக்கவேண்டாமா?

ஜாதியை சட்ட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் ஒரு பக்கத்தில் காப்பாற்றிக் கொண்டு, அந்த ஜாதியின் காரணமாக உரிமைகள் இழக்கப்பட்டு வந்திருக்கிற மக்களுக்காக தேவைப்படும் ஒரு புள்ளி விவரத்தைத் திரட்டத் தயங்குவது பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான முடிவுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும்.

பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியாகவேண்டும். அதில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் வரும் 10 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம்!

துண்டு அறிக்கைகள், முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்ல வகையில் பிரச்சாரம் செய்து ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, ஆர்ப்பாட்டத்தின் வீச்சு மத்திய அரசை எட்டும் வகையில் நடத்திக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


-----------------------"விடுதலை” தலையங்கம் 7-5-2010

ரம்மி said...

சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடக்க வேண்டும்.நேர்மையாக நடக்குமா? ஒரே பலன் ராம்தாஸ் அவர்களின் பலம் கண்டு கொள்ளலாம்!

Ravi said...

Good one Vela.. last week i was also reading about cast system in India in Wikipedia. It also states that cast was there in vedic periods just to know what job you are doing. Later with famous "Divide & Rule" system made it higher, lower & untouchables.

We have to accept that cast system has helped to upgrade life standard for many even me. But we need to change the system with time passing. We need reservation to bring up people lying in the bottom of development and at same time should avoid already developed people using it. It is a complex job, but we need a good leader to do it.

Bitter truth is that our political leaders will not to do it. So common people has to take the lead. Now you can see the cast system slowly going off in big cities, hopefully it will go to villages as well.

பொன்னியின் செல்வன் said...

/ சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர்./

பொருளாதார அடிப்படையில் சாதிகள் கணக்கிட பெறவில்லை.
இது நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்து, என்று எங்கேயோ கேள்வி பட்ட நினைவு.

Vijayakumar Kasilingam said...

ரம்மி ///சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடக்க வேண்டும்.நேர்மையாக நடக்குமா? ஒரே பலன் ராம்தாஸ் அவர்களின் பலம் கண்டு கொள்ளலாம்!///////அதை தான் நாங்களும் கேட்கிறோம் ....இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ஏமாற்றுவது ? ஒரு குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் ஒரே விதமான சலுகை என்பது எப்படி சமூக நீதி ஆகும் ........முதல் குடும்பத்தில் இருந்து ஒருவர் கல்வி பெற்றால் இன்னொரு குடும்பத்தில் இருந்து இரண்டு பேராவது விகிதாசாரத்தில் அடிப்படையில் படித்து வர வேண்டுமே ....அதற்கு தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு கேட்கிறோம் ...

Vijayakumar Kasilingam said...

அதை தான் நாங்களும் கேட்கிறோம் ....இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ஏமாற்றுவது ? ஒரு குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் ஒரே விதமான சலுகை என்பது எப்படி சமூக நீதி ஆகும் ........முதல் குடும்பத்தில் இருந்து ஒருவர் கல்வி பெற்றால் இன்னொரு குடும்பத்தில் இருந்து இரண்டு பேராவது விகிதாசாரத்தில் அடிப்படையில் படித்து வர வேண்டுமே ....அதற்கு தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு கேட்கிறோம் ...

Related Posts with Thumbnails