Sunday, May 30, 2010

அமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை!!

"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.

"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.

வெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது "வெயில் அதிகமா இருக்கப்பா" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

என் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம். 

அமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்கின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.

பேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பேருந்தில் அரை மணி நேரம்  தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள். 

ம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே?

தட்பவெப்பம் அதிகரிப்பதனாலே!! 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, "நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று!!". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!o

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், "கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில்லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.கோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((

o

உலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம்.  இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்??

o

11 comments:

வானம்பாடிகள் said...

அடப்பாவிங்களா. மேட்டூர் ரோட்டு மரங்களையா வெட்டுறாங்க.80களில் இருந்ததைவிட இன்னும் அழகாக சீராக 90களில் இருந்த மரங்களாச்சே. கிணத்து தண்டி கேன் 40-50னு வாங்கும்போதே புத்தி வரலைன்னா என்ன பண்ண.

பழமைபேசி said...

நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது, மரங்களை எல்லாம் வளைத்து வளைத்துக் காணொளி ஆக்கினேன்.... மனைவி கடிந்து கொண்டார்....

சென்ற வாரத்தில் அதை நினைத்து வருத்தமுற்றார்.... உடுமலை - பொள்ளாச்சி சாலையையாவது விட்டு வைப்பார்கள் என நினைக்கிறேன்....

அநன்யா மஹாதேவன் said...

//சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள்.//இங்கே பஸ் பிரயாணங்களைப்பத்தி நானும் என் பதிவில் இதே வரிகளைத்தான் எழுதி இருக்கேன்.
http://ananyathinks.blogspot.com/2009/10/6.html

பிரகாசம் said...

((யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று))

இதுவும் இந்தியாவில் கனவுகூடக் காணமுடியாத ஒரு விஷயம்

ஹுஸைனம்மா said...

//சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!//

அது சீக்கிரம் நடக்கட்டும். இப்பவே பகல்ல 42 டிகிரி!! வெளியே வேலை பாக்கிறவங்களை நினச்சா பாவமா இருக்கு.

அப்புறம், கோவை - மரங்கள்: ஒண்ணும் சொல்றதுக்கில்லை!! :-(((

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு செந்தில். வெயிலைப் பொறுத்தவரை இங்கே சவுதியிலும் அதே நிலைதான். 45 தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது, விரைவில் 50ஐ தொட்டுவிடும். எனினும் இங்கே மி்ன்தட்டுப்பாடு கிடையாது. சவுதி அரசு அந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கிறது. மேலும் நகரங்களைப் பசுமைப் படுத்தும் முயற்சிகளிலும் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

பதிவின் இறுதியில் எழுப்பியிருக்கும் வினா மிக முக்கியமானது நண்பரே.

க.பாலாசி said...

//பழமைபேசி said...
நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது, மரங்களை எல்லாம் வளைத்து வளைத்துக் காணொளி ஆக்கினேன்.... மனைவி கடிந்து கொண்டார்....//

ஃபிரேம் போட்டு பத்திரப்படுத்திக்கோங்க... ஏன்னா இனிமே பாக்குறது கஷ்டம்.... :-)

வருத்தம் தரக்கூடிய செயல்... சாலைப்பயணங்களுக்கு அழகே இருமருங்கிலும் உள்ள அடர்த்திமிகு மரங்கள்தான்.. அதுவும் புளியமரங்கள்.... இனி அந்த வெறிச்சோடின சாலையை கடக்கும்பொழுதெல்லாம் வலிக்கத்தான் செய்யும்....

ச.செந்தில்வேலன் said...

@@ பாலாண்ணே,

ஆமாங்க, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரங்களும் :((

@@ பழமைபேசி,

நல்ல வேலை செஞ்சீங்க!! இனி காணொளியைப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ள மரங்கள் நான்கு வழிப்பாதையாக்கும் பொழுது வெட்டப்பட்டு விடும்.

@@ அநன்யா,

நன்றிங்க. உங்கள் பதிவைப் படிக்கிறேன்.

@@ பிரகாசம்,

ஆமாங்க. நன்றி

@@ ஹூசைனம்மா,

வெயிலில் வேலை பார்ப்பவர்கள் படும் அவஸ்தை வார்த்தையால் கூற முடியாதுங்க :((

@@ செ.சரவணக்குமார்,

நன்றிங்க நண்பா.

@@ க.பாலாசி,

ஆமாங்க.

//இனி அந்த வெறிச்சோடின சாலையை கடக்கும்பொழுதெல்லாம் வலிக்கத்தான் செய்யும்....//

அந்தக் காட்சியை நினைக்கும் பொழுதே வலிக்கிறது :(

ஈரோடு கதிர் said...

மரம் வெட்டினா தமிழ் வளருமோ!!!???

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பரே மிகவும் அவசியமான பதிவு இது,இது படித்தவுடனேயே என் வீட்டில் இரண்டு தொட்டி செடியாவது வாங்கி வைக்க தோன்றுகிறது,நம் நாட்டிலும் இங்கு உள்ளது போல வேப்ப மரங்கள் வளர்க்க வேண்டும்,உயர் வெப்ப நிலையில் கூட வேப்ப மரங்கள் நன்றாய் வளர்ந்து பலன் கொடுக்கும்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்./////

நன்றி நண்பரே நானும் அமீரகத்தில்தான் இருக்கிறேன் . இங்குள்ள நிலையை மிகவும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் ஆகிவுக்கு நன்றி

Related Posts with Thumbnails