Saturday, June 5, 2010

எங்கே செல்கிறது (தமிழ்ப்) பதிவுலகம்?

தமிழில் பதிவுகளை நான் எழுத ஆரம்பித்தது கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான். தமிழில் பதிவுகள் எழுதுகிறேன் என்ற காரணத்தினாலேயே உலகெங்கும் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள் ஏராளம்.  அதிலும், எனக்கு அமீரகத்தில் கிடைத்த நண்பர்களுக்கும் தொடர்புகளுக்கும் காரணம் தமிழில் பதிவெழுதுவதே. பல தரப்பட்ட கருத்துகளையும் பார்வையிட ஒரு தளமாக தமிழ்ப் பதிவுலகம் மாறி வருவது கண்கூடு. சினிமா, பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், வரலாறு, இலக்கியம், சுற்றுச்சூழல் என "தமிழில்" கட்டுரைகளும், கருத்துகளும் காணக்கிடைப்பது பதிவுலகில் தான்!! 

இப்படிப் பல துறைகளைப் பற்றியும் தமிழ்ப் பதிவுலகத்தின் வாசகர் வட்டம் எப்படி உள்ளது?

நண்பர்களிடம் விவாதித்ததில் 10000 பேர் படிப்பதே அதிகம் என்று தான் பலரும் கருதுகின்றனர். 7 கோடி மக்கள் பேசும் மொழியில் இயங்கும் ஒரு தளத்தை 10 ஆயிரம் பேர் தான் வாசிக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியதே. ஆங்கிலத்தில் பதிவெழுதி வரும் என் நண்பர்களைத் தமிழில் பதிவெழுதுமாறு கேட்டுக்கொண்டும், தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை அறிமுகப்படுத்தியும் வருகிறேன். அப்படி அறிமுகப்படுத்திய நண்பர்களுள் ஒருவர் இன்று என்னைத் தொடர்புகொண்டு, "என்ன தமிழ் மணம் பேஜைத் திறந்தா ஏதோ சண்டை நடக்கற மாதிரி தெரியுது?" என்றார்.

"ஆமா, ஒரு பிரச்சனை ஓடிட்டு இருக்கு" என்றேன்.

"ஏன்டா, திருந்தவே மாட்டமாடா நம்ம? அரசியல்ல தான் ஏதோ ரவுடிக, படிக்காதவங்க சண்டைப் போடறாங்கன்னா, இங்கேயுமா? இதுல நீ தமிழ்ல எழுத வேற சொல்ற!!..ம்ம்ம் " என்றார்.

அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழித்தேன். இது என்னை நோக்கி எழுந்த கேள்விகள். என்னைப் போலவே தமிழில் பதிவெழுதும் நண்பர்கள் அனைவரும் இது போன்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கக் கூடும். கடந்த ஒரு வருடமாகவே நான் சந்திக்கும் தமிழன்பர்கள் அனைவரையும் தமிழ்மணம் போன்ற திரட்டியைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அப்படி செவிவழிச் செய்திகளால் தமிழ்மணத்தைப் பார்வையிடும் வாசகர்களும், சில நாட்களாகத் தமிழ்மணத்தில் பிரபலமாகும் பதிவுகளைப் படிப்பவர்களுக்கும், தமிழில் பதிவு எழுத நினைக்கும் அன்பர்களுக்கும் என்ன மாதிரியான எண்ணங்கள் எழும்? தமிழில் பதிவெழுதும் அல்லது பதிவெழுத நினைக்கும் பெண்கள் என்ன மாதிரியான மன உளைச்சலிற்கு ஆளாகியிருப்பார்கள்?
பதிவுலகம் ஒரு பொதுவெளி என்பதை மீறி நட்பு பாராட்ட நினைக்கும் எவருக்கும் சில நாட்களாக நடக்கும் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை மணியாகத் தான் தோன்றியிருக்கும். பதிவுலக நண்பர்கள் சந்திக்கும் சூழ்நிலையில் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் வெளியிடுவது கூட தவறோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியலில் தான் நாகரிகமின்றி கொ.ப.செ.க்களை வைத்துத் தனிமனிதத் தாக்குதல்கள் நடக்கிறதென்றால், இங்கே படித்தவர்கள் (??) மத்தியிலும் நடப்பது வேதனையானது.

"இல்லீங்க.. ஆமாங்க" என்று மரியாதை நிமித்தமாக "ங்க" போட்டுப் பேசிப்பழகிய எனக்கு பொதுவெளியில் ஒருவரைக் கீழ்தரமான வசவுகளை வெளிப்படுத்திய பதிவைப் பார்த்த பிறகு, "இன்று இவரிற்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றே தோன்றுகிறது. இந்த வசவுகள் ஒரு பெண்ணை நோக்கித் தொடுக்கப்பட்டதைப் பார்த்த பிறகு, எத்தனை தோழிகளை நான் தமிழில் பதிவெழுதப் பரிந்துரைப்பேன்?

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

ஒரு முறை கொட்டிய வார்த்தைகளை எடுக்க முடியாதோ, வலையுலகில் ஏற்றிய விசயத்தையும் அழிக்க முடியாது எனபதை மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது இந்த சம்பவம். 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்

என்ற வள்ளுவன் வாக்கை மனதில் நிறுத்தினாலே நாம் பிரச்சனைகளைத் 
தவிர்க்க வழி பிறக்கும்.

o

ஆங்கில பதிவுகளின் திரட்டி www.digg.com சென்று பாருங்கள். சில கட்டுரைகள் 5000 வாக்குகள் கூட பெற்றிருக்கும். 5000 வாக்குகள் வாங்கவேண்டுமென்றால் எத்தனை இலட்சம் பேர் படித்திருக்க வேண்டும்? பல்லாயிரக்கணக்கானோர் ஒரு மொழியைப் பயன்படுத்தும் பொழுது, அம்மொழியில் படைப்புகளைப் படைக்கும் பொழுது தான் அம்மொழி வளரும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளைப் போல தமிழிலும் படைப்புகள் வரவேண்டுமென்றால் பல்துறையைச் சேர்ந்தவர்களும் வரவேண்டும். இங்கே நடந்து வரும் விசயங்களைப் பார்த்த பிறகு எத்தனை பேர் தமிழில் படைப்புகளை எழுத வருவார்கள்?

o

இனி வரும் காலத்தை சமூக ஊடகங்களில் (Social Media) காலமாக பெரும்பாலான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பிளாக்கர், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகத் தளங்களில் தான் அடுத்த வளர்ச்சி இருக்கிறது என்கின்றனர்.

* சில காலம் முன்புவரை www.naukri.com ல் வேலைக்கு ஆட்களைத் தேடியவர்கள் இன்று சமூக ஊடகத் தளமான லிங்க்ட் இன்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

* சில காலம் முன்பு வரை சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களை நம்பி வந்து பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விவாதிக்கும் விசயங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

*கூகுள் வழியாகவும், இணையதள விளம்பரங்கள் மூலமாக வாடிக்கையாளர்களைச் சென்றடைய நினைத்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று பிளாக்கர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வாய்வார்த்தையை (Word or Mouth) நம்ப ஆரம்பித்துள்ளனர்.

இப்பொழுது ஆங்கில பதிவுத்தளங்களைப் பார்வையிட ஆரம்பித்துள்ள வணிக நிறுவனங்கள் சில ஆண்டுகளில் வட்டார மொழிகளையும் பார்வையிட ஆரம்பிப்பார்கள். அப்படி பார்வையிட ஆரம்பிக்கும் பொழுது நம் மொழியிலும் பல துறைகளிலும் சிறந்த ஆய்வுகள், விவாதங்கள் எல்லாம் வந்தால் தான் கணக்கில் எடுக்கும் நிலைவரும். அதைவிடுத்து... :((

சமூக ஊடகங்களுக்கு கோடிக்கணக்கான கண்கள் உண்டு. அவை நம்மைப் பார்வையிட்டுக்கொண்டேயிருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?

27 comments:

எட்வின் said...

என்னவெல்லாமோ நடக்குது... ஒண்ணும் புரியல. மாறி மாறி திட்டிக்கிறாங்க. நம்ம பேந்த பேந்த விழிக்க வேண்டியது தான். ஆனா எதுவுமே நல்லதுக்கு இல்ல.

முகுந்த் அம்மா said...

என்னுடைய வருத்தமும் அது தான்.

//தமிழில் பதிவெழுதும் அல்லது பதிவெழுத நினைக்கும் பெண்கள் என்ன மாதிரியான மன உளைச்சலிற்கு ஆளாகியிருப்பார்கள்?//

பதிவெழுதும் பெண்கள் அனைவரும் என்னைபோலவே கட்டாயம் மன உளைச்சலிற்கு ஆளாகியிருப்பார்கள். புதிதாக எழுத வேண்டும் என்று நினைபவர்களும், "நமக்கு வேண்டாம் இந்த வம்பு " என்று நினைத்து வராமல் இருக்கவும் வாய்புகள் அதிகம்.

:((

வானம்பாடிகள் said...

தெரியலைங்க செந்தில். சுதந்திரம் துறந்துதான் பதிவிடவேண்டுமா என்ன? நட்பாய், தோழமையாய், அன்பு மட்டுமேயாய் இருக்க மாட்டோமா?

மசக்கவுண்டன் said...

ஆழ்மனத்தின் வக்கிர புத்திக்கு ஒரு வடிகாலாய் பதிவுலகம் அமைந்துவிட்டது ஒரு துர்ப்பாக்கியமான நிலை.

இன்னொன்று கவனித்தார்களா, செந்தில். முகமூடி அணியாமல் பதிவு எழுதுபவர்கள் நூற்றுக்கு பத்து பேர் கூட இல்லை.

இரண்டாவது, பதிவு எழுதும் பொருள்கள் என்னவென்று பார்த்தால் எதற்கும் உதவாத பொருள்கள். தனி மனித வாழ்க்கைக்கோ, சமுதாயத்திற்கோ பயன்படக்கூடிய செய்திகள் அபூர்வமாகவே பதிவிடப்படுகின்றன.

இதில் பதிவர்களுக்குள் சண்டை வேறு. முகமறியாமல் இருக்கும்போதே இந்த நிலை. வெட்கக்கேடு.

smart said...

எல்லாவற்றிற்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மையே காரணம்.
இது தமிழர்களின் கலாச்சார உடமையைய்யா

முனைவர்.இரா.குணசீலன் said...

அவலத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

நல்லதோர் வீணை செய்தே..

வலைப்பதிவர்கள்,
சிந்திக்கவேண்டிய நேரம் இது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்ல அழகா சொல்லிட்டீங்க,யோசிக்க வேண்டிய விடயம்.ஒரு 2 ப்ளாக்க இங்க எதிசலாத்தில் தடையே செஞ்சிட்டாங்கன்னா அதில் விடயம் எவ்வளவு வீர்யமா இருக்கும் பாருங்க.
நிச்சயம்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

Prohibited Content Categories
1.
Internet Content for Bypassing Blocked Content
This category includes Internet Content that allows or assist Users to access Blocked Content.
2.
Internet Content for Learning Criminal Skills
This category includes Internet Content that either provides instructions for or identifies methods to promote, encourage or provide the skills to commit illegal or criminal or unethical activities. These include bomb-making, phreaking (breaching phone security or phone service theft), scams and fraud, terrorism, evading law enforcement, stalking, lock picking, selling pirate material such as commercial software, music, videos or others.
3.
Dating Internet Content
This category includes Internet Content that provides online dating or matchmaking which contradicts with the ethics and morals of the UAE.
Exemptions: Chatting services, chatting groups, social networking and forums.
4.
Internet Content for Illegal Drugs
This category includes Internet Content that provides information on purchasing, manufacturing, promoting and using illegal drugs.
5.
Internet Content containing Pornography and Nudity
This category includes Internet Content that contains material of a pornographic nature, or relates or depicts acts of homosexuality, nudity and sexual material (including stories, jokes, animations, and video) or Internet Content that promotes sexual activity. It includes Internet Content which promote the distribution of above material (such as Peer-to-Peer websites and links).
6.
Gambling Internet Content
This category includes Internet Content that is relevant to gambling or such as gambling links, tips, sports picks, lottery results, as well as horse, car or boat racing.
7.
Internet Content for Hacking and Malicious Codes
This category includes Internet Content that distribute information and tools for hacking (root kits, kiddy scripts, etc.) that help individuals gain unauthorized access to computer systems. Also include Internet Content
Page 1 of 2
Page 2 of 2
that distributes tools or information for producing and distributing malicious codes such as viruses, worms or Trojan horses.
Exemptions: Information security including ethical hacking

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

8.
Internet Content that are offensive to Religions
This category includes Internet Content that contains material which expresses hate to religions.
9.
Phishing Internet Content
This category includes Internet Content where entities or persons falsely represent themselves as a “legitimate” businesses or enterprises for the purpose of deceiving and obtaining form Users, valuable information such as bank account or email account information including details such as usernames, passwords, credit card details or bank account details.
10.
Internet Content that downloads Spyware
This category includes Internet Content that downloads Spyware which gathers private information of the users without his or her knowledge.
11.
Internet Content providing Unlicensed Voice over Internet Protocol (VoIP) service
This category includes Internet Content that allows access to services which are prohibited in accordance with the TRA’s Voice over Internet Protocol Policy.
12.
Terrorism Internet Content
This category includes Internet Content of terrorism groups and related Internet Content that support terrorism and publish and distribute materials for terrorism or include material for training and encouraging terrorism or help to serve terrorism groups such as funding, facilitating communication and other direct and indirect services.
13.
Prohibited Top Level Domain (TLD)
This category includes Internet Content under a Top Level Domain names which offends against, is objectionable to, or is contrary to the public interest, public morality, public order, public and national security, Islam morality or is otherwise prohibited by any applicable UAE law, regulation, procedure, order or requirement.

இப்படி வருகிறது,தமிழ் பதிவர்கள் சண்டை இவர்களுக்கும் தெரிந்து,வெடிகுண்டு செய்பவனோடு ஒப்பிட்டு சேர்த்துள்ளனர்.கொடுமை.நாலை பயனுள்ள பதிவுள்ள பிளாக்குகளையும் எதிசலாத்தில் தடை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

shortfilmindia.com said...

:( மிகவும் தேவையான பதிவு செந்தில்..

LK said...

//புதிதாக எழுத வேண்டும் என்று நினைபவர்களும், "நமக்கு வேண்டாம் இந்த வம்பு " என்று நினைத்து வராமல் இருக்கவும் வாய்புகள் அதிகம்.//

repeat. some of my new blogging friends asking this qn what i can answer them

butterfly Surya said...

தேவையான பதிவு.

கே.ஆர்.பி.செந்தில் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு ..

சேட்டைக்காரன் said...

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே-ஆஹா
அண்டங்காக்காய்க்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே!

க.பாலாசி said...

வருத்தமாகத்தான் இருக்கிறது.....

இராகவன் நைஜிரியா said...

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்.

ஈரோடு கதிர் said...

செந்திலுக்கே உரித்தான நிதானமான எழுத்து..

நல்ல அலசலும் கூட

தலைப்பை பார்த்து இதற்கும் நாலு பேர் வம்பிழுக்க வராமை குறித்து மகிழ்ச்சி

நாகாவை கொஞ்சம் எழுதச் சொல்லுங்கப்பா

கிளியனூர் இஸ்மத் said...

உங்களின் பார்வை முற்றிலும் உண்மை...

ஜோதிஜி said...

செந்தில் சில கேள்விகள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவது என்றாலும் உங்கள் எழுத்தின் அக்கறையினால் எழுதித்தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.

1. நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகளில் இருந்து, இது குறித்து நடுநிலையான,ஒரு பக்கச் சார்பான அத்தனை இடுகையிலும் வஞ்சகம் இல்லாமல் மைனஸ் ஓட்டுகளும் விழுகின்றது. ஆனால் எத்தனை பேர்கள் தங்கள் பெயருடன் தைரியமாக நான் மைனஸ் தான் குத்துகிறேன் என்று சொல்லும் தைரியம் இருக்கிறது?

2. பரபரப்பு இல்லாமல் பக்குவத்துடன் ருத்ரன் போன்ற இடுகையில் தான் என்னைப் போன்றவர்கள் பின்னோட்டம் இட முடிகின்றது.

3.கருத்துச் சுதந்திரம் என்ற இந்த வார்த்தையை எவர் கண்டு பிடித்தார்? என்று தேடிக் கொண்டுருக்கின்றேன்.
வினவு தளம் செய்தது அப்பட்டமாக போட்டு உடைத்தது. இந்த சூழ்நிலையில் வேறொன்றும் வழியிருப்பதாக தெரியவில்லை. ருத்ரன் சொன்னது போல் இன்னும் ஒரு மாதத்தில் இது எத்தனை பேர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்பதே கேள்விக்குறி?

4. புத்திசாலிகளால் இந்திய நாடு ஆளப்படுகிறது என்பது இன்று எத்தனை கேள்விகுறிகளை உருவாக்கி எதிர் கால சமூகத்தை உருக்குலைத்துக் கொண்டுருக்கிறதோ அது போலவே இந்த வலை உலகத்திலும் நான் புத்தியை கொள்முதல் வைத்து எழுதுகிறேன் என்றவர்கள் அத்தனை பேர்கள் உத்தமர் தானா சொல்லுங்கள்?

5. என்னுடைய சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார்? என்று கேட்பவர்கள் கழிப்பறையை எட்டிப் பார்க்க எவர் சுதந்திரம் கொடுத்தது. வஞ்சப் புகழ்ச்சியை பயன்படுத்தி எழுத, அதை வஞ்சகத்தை மட்டுமே துணை கொண்டவர்களுடன் முன்னெடுக்க வந்தது வினை. வேறு எதை அறுவடை செய்ய முடியும்.

5000 ஓட்டுக்களை விடுங்கள். இங்கு படிப்பவர்களிடம் எந்த துறை சார்ந்த இடுகை பிடிக்கும் என்று கேட்டுப்பாருங்கள்?

மூத்த குடி மூழ்கும் குடியாக இருப்பதற்கு வேறு யாரை சுட்டிக்காட்ட முடியும்?

நாகா இது குறித்து ஏற்கனவே அவர் அனுபவம் வாயிலாக பழைய இடுகையில் எழுதி உள்ளார். அப்போது அது எத்தனை பேர்களுக்கு புரிந்தது?

மற்றவர்களை திருத்த முயல்வது எத்தனை முட்டாள்தனமோ அதை விட கேவலம் தன்னை உணராமல் வாழ்ந்து கொண்டுருப்பவது உச்சக்கட்ட மடத்தனமான கொடுமை.

நன்றி செந்தில்.

ஜோதிஜி said...

இன்னொன்று கவனித்தார்களா, செந்தில். முகமூடி அணியாமல் பதிவு எழுதுபவர்கள் நூற்றுக்கு பத்து பேர் கூட இல்லை.

இரண்டாவது, பதிவு எழுதும் பொருள்கள் என்னவென்று பார்த்தால் எதற்கும் உதவாத பொருள்கள். தனி மனித வாழ்க்கைக்கோ, சமுதாயத்திற்கோ பயன்படக்கூடிய செய்திகள் அபூர்வமாகவே பதிவிடப்படுகின்றன.

இதில் பதிவர்களுக்குள் சண்டை வேறு. முகமறியாமல் இருக்கும்போதே இந்த நிலை. வெட்கக்கேடு

சுருக்கமாக ஐயா சொல்லியுள்ளார்.

ச.செந்தில்வேலன் said...

@@ எட்வின்,

ஆமாங்க.. ரொம்ப வேதனையா இருக்கு நடக்கறது. நன்றி.

@@ முகுந்த் அம்மா,

//பதிவெழுதும் பெண்கள் அனைவரும் என்னைபோலவே கட்டாயம் மன உளைச்சலிற்கு ஆளாகியிருப்பார்கள். புதிதாக எழுத வேண்டும் என்று நினைபவர்களும், "நமக்கு வேண்டாம் இந்த வம்பு " என்று நினைத்து வராமல் இருக்கவும் வாய்புகள் அதிகம்.

:((

//

இந்த நிலை மேலும் வருத்தமானதே. இங்கே நடப்பவற்றைப் பார்த்து ஒதுங்கிப் போவது பல் துறைகள் சார்ந்த பதிவுகள் வருவதையே குறைக்கும்.

நன்றி.

ச.செந்தில்வேலன் said...

@@ வானம்பாடிகள்,

சரியான கேள்விகள்.. பதில்??

@@ மசக்கவுண்டன்,

நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு விசயமும் வருந்தத்தக்கதே.

@@ Smart

//எல்லாவற்றிற்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மையே காரணம்.//

உண்மை.

@@ முனைவர்.இரா.குணசீலன்,

//நல்லதோர் வீணை செய்தே..

வலைப்பதிவர்கள்,
சிந்திக்கவேண்டிய நேரம் இது//

சிந்திப்போமா?

ச.செந்தில்வேலன் said...

@@ கார்த்திகேயன்,

உங்கள் கேள்வி எனக்கும் எழுந்திள்ளது. சில தமிழ் வலைத்தளங்களை இங்கே உள்ள ETISALAT தடை செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

தாங்கள் கொடுத்துள்ள இணைப்பு அனைவரும் படிக்கவேண்டியவை.

//இப்படி வருகிறது,தமிழ் பதிவர்கள் சண்டை இவர்களுக்கும் தெரிந்து,வெடிகுண்டு செய்பவனோடு ஒப்பிட்டு சேர்த்துள்ளனர்.கொடுமை.நாலை பயனுள்ள பதிவுள்ள பிளாக்குகளையும் எதிசலாத்தில் தடை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? //

இது மிகவும் நியாயமான கேள்வி. அந்த நிலை வராமல் இருக்க வேண்டும். நன்றிங்க நண்பரே.

ச.செந்தில்வேலன் said...

@@ கேபிள்,

நன்றிங்க

@@ எல்.கே,

நன்றிங்க

@@ வண்ணத்துப்பூச்சியார்,

நன்றிங்க

@@ கே.ஆர்.பி.செந்தில்,

நன்றிங்க.

@@ சேட்டைக்காரன்,

சரியா சொன்னீங்க நண்பரே.

@@ க.பாலாசி,

நன்றிங்க

@@ இராகவன் நைஜீரியா,

நன்றிங்க

@@ கதிர்,

நன்றிங்க. நாகாவிடம் சொல்கிறேன்.

@@ கிளியனூர் இஸ்மத்,

நன்றிங்க.

ச.செந்தில்வேலன் said...

@@ ஜோதிஜி,

நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தவை.

நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை, அறிவு சார்ந்த கட்டுரைகள் எழுதுவோர் அதிகரிப்பதே. படித்தோர், அறிஞர்கள் அதிகரிக்கும் பொழுது தான் இந்த நிலை மாற ஆரம்பிக்கும்.

பார்ப்போம்.. அந்த நாள் எப்பொழுது வருமென்று.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////தமிழில் பதிவுகளை நான் எழுத ஆரம்பித்தது கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான். தமிழில் பதிவுகள் எழுதுகிறேன் என்ற காரணத்தினாலேயே உலகெங்கும் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள் ஏராளம்./////

ஒருவேளை நாம் நட்பு என்ற வார்த்தையின் பொருள் முழுமையாக உணர்ந்திருந்தால் . இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் முகம் காட்டி இருக்காது . எல்லாம் கண்மூடித்தனம் .

ஹுஸைனம்மா said...

ஒரு பிரச்னை எப்படியெல்லாம் திசைதிருப்பப்படும், எத்தனை நாட்டாமைகள் தோன்றுவார்கள், தீர்வு காண்பதைவிட தம் வசதிக்குப் பெரிதுபடுத்துவது ஆகிய தொடர்நிகழ்வுகளே பெரும் அதிர்ச்சி தருகின்றன.

கொஞ்சம் நடுக்கம் வரத்தான் செய்கிறது!!

Related Posts with Thumbnails