Wednesday, June 23, 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்!!


கோவையில் செம்மொழி மாநாடு துவங்கியுள்ளது. 

ஊரெங்கும் தமிழைப் பற்றியே பேச்சு!! இப்படி ஒரு நிலை இதற்கு முன்பு வந்ததாகத் தெரியவில்லை. செம்மொழி மாநாட்டியொட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பலவற்றிலும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

நம் தாய்மொழியின் சிறப்பினை உலகிற்குப் பறை சாற்ற, தமிழ் மொழியில் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட, அறிவியல் தமிழ், இணையத் தமிழ், மருத்துவத் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல இப்படி ஒரு மாநாடு உதவ வேண்டும். மதுரை மற்றும் தஞ்சையில் தமிழ் மாநாடு நடத்திவிட்டு, மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கிடப்பில் போட்டது போல இந்த முறை கிடப்பில் போடாமல் இருந்தால் நல்லது.

செம்மொழி மாநாட்டையொட்டி வெளியாகி உள்ள சிறப்புக் கட்டுரைகளில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அஸ்கா பார்ப்போலா எழுதியுள்ள கட்டுரை சிறப்பு மிக்கது. "சிந்துவெளிப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் பல தமிழ் மொழியைக் குறிக்கிறது" என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறார். இவரது ஆராய்ச்சி உலக அறிஞர்களால் ஏற்கபட்டால் அது தமிழ் மொழியைத் தனி இடத்திற்குக் கொண்டு செல்லும். அந்தக் கட்டுரை இங்கே

செம்மொழி மாநாட்டு இணையதளம் சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடுகின்றனர். ஆய்வரங்க நிகழ்ச்சிகள், எந்தெந்த அமர்வுகளில் என்னென்ன தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன என்ற செய்திகளெல்லாம் தரவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளது பாராட்டத்தக்கது. இது போல செம்மொழி மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இணையத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியினைச் செய்தால் நன்றாக இருக்கும்.

செம்மொழியான தமிழ் மொழியாம்..

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியாகியிருக்கும் பாடலைக் கேட்கக் கேட்க சிலிக்கிறது. இந்தப் பாடலைக் காட்சிப் படுத்தியிருக்கும் விதத்தைப் பார்க்கையில் எப்பொழுது தமிழகத்திற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.நம் மொழியில் உள்ள சிறந்த கருத்துகள் பலவற்றையும் உள்ளடக்கி வெளியாகியிருப்பது சிறப்பு.

இந்தப் பாடலைப் பார்க்கும் கேட்கும் எவர்க்கும் சிறிதளவேனும் மொழிப்பற்று, பெருமை வரவாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு பாடல் வந்ததென்றால் அது "தாய் மண்ணே வணக்கம்" என்ற பாடலாகத்தான் இருக்கும். அதுவும் ஊரே சேர்ந்து தேசியக்கொடியைத் தூக்கி நிறுத்தும் காட்சியிருக்கிறதே...

"அ" முதல் ஒவ்வொரு எழுத்தையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. "ஒ"வில் இருந்து யானையை வரைவதை என் தாத்தா எனக்கு சொல்லிக்கொடுத்த நினைவு வருகிறது இந்தக் காணொளியைப் பார்க்கையில். "ந"வில் இருந்து பறவைகளை வரைவது மற்றொன்று. கிரிக்கெட் ஸ்டம்பை வைத்து "ஈ"யை வரைவது, பாவாவை தாவணியணிந்த பெண்கள் டிராக்டர் ஓட்டிக்கொண்டே "ண"வை வரைவது அழகு. 



பல விசயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள் மத்திய வர்க்கத்தினரை மட்டுமே காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் இவரைப் பாட வைக்கவில்லை, ஏன் இவரை நடமாட வைத்துள்ளனர் என்ற கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் பாடலையும் பாடலின் பொருளையும் கேட்கும் பொழுது மகிழ்ச்சி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.


"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல்.. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!


ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!


அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

*

இந்தப் பாடலைப் பாடியவர்கள்...

டி.எம்.சௌந்தர்ராஜன்
ஏ.ஆர்.ரகுமான்
ஹரினி
சின்மயி
கார்த்திக்
ஹரிஹரன்
யுவன்சங்கர் ராஜா
பி.சுசீலா
விஜய் யேசுதாஸ்
ஜி.வி.பிரகாஷ்
டி.எல்.மகராஜன்
பாம்பே ஜெயஸ்ரீ
அருணா சாய்ராம்
நித்யஸ்ரீ மகாதேவன்
சௌம்யா
பிளாசி
காஷ்
அப்துல் கனி
காஜாமொய்தீன்
சாபுமொய்தீன்
டி.எம்.கிருஷ்ணா
நரேஷ் ஐயர்
ஸ்ரீனிவாஸ்
குனசேகரன்
ஷ்ருதிஹாசன்
சின்னப்பொன்னு
சுசீலாராமன்

*

2 comments:

Chitra said...

பல விசயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள் மத்திய வர்க்கத்தினரை மட்டுமே காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் இவரைப் பாட வைக்கவில்லை, ஏன் இவரை நடமாட வைத்துள்ளனர் என்ற கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் பாடலையும் பாடலின் பொருளையும் கேட்கும் பொழுது மகிழ்ச்சி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.


.... :-)

ஜோதிஜி said...

செந்தில் குழந்தைகள் இந்த பாடலை விரும்பி கேட்கும் போது நானும் கேட்டு இருக்கின்றேன்.

உண்மையிலேயே உங்கள் வரிகளை படித்த பிறகு தான் எனக்கே என்ன வார்த்தைகள் அது என்று புரிகிறது(?)

சித்ரா சொல்லியிருப்பதும் ஒரு வகையில் உண்மை தான்.

Related Posts with Thumbnails