Wednesday, June 9, 2010

தீதும் நன்றும் - 10-06-02*










டபுள் டிப்: மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவா?

Recession - வேலைக்குச் செல்லும் வயதில் இருப்பவர்கள் பயப்படும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.  GDP எனப்படும் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறைந்தால் அதை பொருளாதாரப் பின்னடைவு (Recession) என்கின்றனர். நம் நாட்டின் மத்திய நிதியமைச்சர் இந்தியா இந்த ஆண்டு 7 முதல் 8 சதவிதம் வளர்ச்சியடையும் என்று கூறுவது நாட்டின் மொத்த உற்பத்தியைத் தான். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறையும் பொழுது அதைப் பொருளாதாரப் பின்னடைவு என்கிறோம். 

2008ல் அமெரிக்காவில் சப்-பிரைம் என்ற சந்தையில் ஆரம்பித்த பொருளாதாரப் பின்னடைவு, லெஹ்மன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி என்று பல பிரபல வங்கிகளையும் விழுங்கி, பல நாடுகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும் பொருளாதாரப் பின்னடைவைச் சீராக்க பொருளாதார உதவி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றால் ஓரளவு நிலைமை சீராவது போல் தோன்றினாலும், மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு வருவது போல் தோன்றுகிறது ஊடகங்களைப் பார்க்கும் பொழுது..

பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் மேல் மட்டத்தில் ஏற்படும் வேலையிழப்பை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் வேலையிழப்பையோ, பொருளாதாரப் பின்னடைவையோ வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில்லை.

2008ல் ஏற்பட்ட பின்னடைவால் இலட்சக் கணக்கானோர் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்ததே இன்னும் நினைவில் இருந்து அகலாத நிலையில், மேலும் ஒரு பின்னடைவை எப்படி சமாளிக்கப் போகிறோம்? 

சென்ற முறை அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஆரம்பித்த பின்னடைவு, இந்த முறை ஐரோப்பிய நாடுகளை மெதுவாக மையம் கொள்ள ஆரம்பிக்கிறது. ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மாற்றத்தால் அவர்கள் நாணயமான "ஈரோ" வின் மதிப்பு பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஆரம்பித்துள்ள கடன் (Debt Crisis) மற்றும் பற்றாக்குறை (Deficit) ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஹங்கேரி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த என் நண்பரிடம், "ஹங்கேரி நாடு ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ளது. ஏன் ஈரோ நாணயம் இன்னும் அங்கு பயனிற்கு வரவில்லை?" என்று கேட்டேன்.

"எங்கள் நாட்டின் பட்ஜட்டில் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது. Deficit (பற்றாக்குறை) இருக்கும் வரை எங்களை ஈரோ ஆட்டத்திற்குச் சேர்க்க மாட்டார்கள். இதுவே தான் மற்ற நாடுகளுக்கும். ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள முன்னேறிய நாடுகள் பல, பின் தங்கிய நாடுகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை. தங்கள் உழைப்பு, பணம் முழுக்க மற்ற நாடுகளிடம் பகிர்ந்தளிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை" என்றார்.

ம்ம்... ஒருங்கிணைந்த நாணயம், பொருளாதாரம், ஒன்றான வளர்ச்சி எல்லாம் செயல் முறைக்குக் கொண்டுவருவதில் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலேயே கடினம் என்றால்... ம்ம்ம்ம் என்ன சொல்ல?

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்... நீங்கள் சிரிக்கவில்லை என்றால் உங்கள் நரசிம்மராவின் ஒன்னுவிட்ட பெரியப்பா பேரன் என்று கூறிக்கொள்ளலாம்.













ஃபாக்ஸ்கான் மற்றும் சீனா தொழிலாளர்களின் சம்பள உயர்வு:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட்கள், மற்றும் இன்னபிற செல்போன் நிறுவனங்களின் பொருட்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் சீனா நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் தற்கொலைகள் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட்கள் வேலை, குறைந்த சம்பளம் மன அழுத்தம் போன்றவற்றால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சீன அரசும் தொழிலாளர்களின் குறைந்த அளவு சம்பளத்தை உயர்த்த அறிவித்துள்ளது.இதனால் பல சாதக பாதகங்கள் விவாதத்திற்கு வந்துள்ளன. 

ஊழியர்கள் சம்பளம் அதிகரித்தால் அங்கே உற்பத்தியாகும் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டியதிருக்கும். இதனால் அந்நாட்டுப் பொருட்களுக்கு இருக்கும் (குறைந்த விலையால்) உள்ள சாதகமான நிலை மாற ஆரம்பிக்கும். ஆனால், ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தால் அந்நாட்டிலேயே செலவு செய்யும் போக்கு அதிகரிக்கும். சீனப் பொருட்களின் விலை உயர்வு, சீன தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்றவை இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு மேலும் முதலீடு அதிகரிக்கும்.

முதலீடு அதிகரிப்பு எல்லாம் எந்த அளவிற்குச் சாமான்யரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று பார்க்க வேண்டும்!!

* 10-06-02 - 2010 - 6வது மாதம் - 2வது வாரம்.

12 comments:

vasu balaji said...

அப்ப இனிமே இந்தியால நிறைய ஏழு நட்சத்திர திரையரங்கு, வீட்டுக்கு வந்து கூட்டிப் போய் கொண்டு விட காரு எல்லாம் பெருகுங்களா:))

Sabarinathan Arthanari said...

இன்னொரு மந்த நிலையா ? கவனமாக இருக்க வேண்டிய தருணம்

geethappriyan said...

இதைப்படித்தேன்,
ஜீரணிக்க முடியலை,சம்பளம் 2 மாதத்துக்கு ஒரு முறை தான் வருகிறது,அப்போது?நினைத்தாலே கசக்கும்.
காசு சேர்த்துக்கொண்டு படிக்க போய்விட வேண்டும் போலிருக்கிறது.
======
மேலும் ஹங்கேரியில் வேலையில்லா திண்டாட்டம் நிதர்சன்ம்,என் அலுவலகத்திலிருந்து நீண்ட விடுமுறை அளித்து அனுப்பப்பட்ட ஆர்கிடெக்ட் அங்கே பாரில் டெண்டராய் உள்ளான்,ஐரோப்பியர்கள் எந்த வேலைக்கும் மாற்றிக்கொள்கின்றனர்.
=======
இந்தியாவுக்கு இதனால் அதிகம் பாதிப்பில்லை என்கின்றன்ர்.

Chitra said...

Very nice post.

The video was very funny. Thank you for sharing it with us. :-)

Prathap Kumar S. said...

பணியாளர்களின் சம்பளம் உயர்வதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும், அதனால் பொருட்களின் விலை உயரும் சரிதான். ஆனால் சீனாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளை விட அதிகம்
சீன பொருட்களின் தேவையும் மற்ற நாடுகளுக்கு அதிகம். எனவே அவர்களின் உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்காது மற்றும் அவர்கள் ஏற்றுமதி அதிகம் செய்வதால் அவர்களின் பொருளாதாரம் பின்னடைய வாய்ப்பே இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்...

ஏதோ கொஞ்சம் பொருளாதாரம் படித்த அடியேனின் கருத்து...

ஹுஸைனம்மா said...

ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவு வரும்னு பயங்காட்டிட்டே இருக்காங்க!! வெறும் மிரட்டலா மட்டும் இருக்கணும்னு ஆசை.

//"எங்கள் நாட்டின் பட்ஜட்டில் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது. Deficit (பற்றாக்குறை) இருக்கும் வரை எங்களை ஈரோ ஆட்டத்திற்குச் சேர்க்க மாட்டார்கள். இதுவே தான் மற்ற நாடுகளுக்கும். ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள முன்னேறிய நாடுகள் பல, பின் தங்கிய நாடுகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை//

இவ்ளோ கவனமா இருக்கிறவங்க, கிரீஸ் விஷயத்துல எப்படி கோட்டை விட்டாங்களோ?!!

Mahesh said...

அந்த வீடியோ அருமை !!!

3 வாரம் முன்னாடி நானும் இதைப் பத்திதான் எழுதினேன்....

ஈரோடு கதிர் said...

ஏற்கனவே கரடிகள் கொண்டாட ஆரம்பித்துவிட்டன சந்தைகளில்..

எதிர்பார்த்ததுதான்... ஆனால் கொஞ்சம் தாமதமாய் நகர்ந்து வருகிறது

jothi said...

நல்ல பதிவு செந்தில், துபாயில்ல பொருளாதாரம் எப்படி இருக்கு? அந்த பக்கம் எல்லாம் வரலாமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ வானம்பாடிகள்,

அப்படி சொல்ல முடியாதுங்க.. ஓரளவு முதலீடு வரும் வாய்ப்புள்ளது :)

@@ சபரி,

ஆமாங்க நண்பா, நன்றி

@@ கார்த்திகேயன்,

படிக்கும் பொழுது கலக்கமாகத்தான் உள்ளது. நம் கையில் எதுவும் இல்லையே. கவனிப்புடன் இருப்போம்.

நன்றிங்க

@@ சித்ரா,

ஆமாங்க. அந்த காணொளி சரியான லொள்ளு. நன்றிங்க.

@@ நாஞ்சில் பிரதாப்,

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் சீனாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்று நான் கூறவில்லையே.

சீனாவில் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் பொழுது பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அப்படி ஏற்றுமதிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஆகவே அந்தப் பொருட்களின் (Competitiveness) விலை மற்ற நாட்டுப் பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது விலை அதிகமாகக் காணப்படும். இதையே நான் குறிப்பிட்டேன்.

நம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் போன்ற தொழில்களில் உள்ளவர்களுக்கு நான் கூறுவது புரியும். இதே காரணத்தால் தான் ரூபாயின் மதிப்பு ஏறும் பொழுது திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மந்தமடைகிறது.

நன்றி பிரதாப்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ ஹூசைனம்மா,

//ஜூன், ஜூலையில ரெண்டாவ்து பின்னடைவு வரும்னு பயங்காட்டிட்டே இருக்காங்க!! வெறும் மிரட்டலா மட்டும் இருக்கணும்னு ஆசை.//

மிரட்டலாக இருக்கும் என்று விரும்புவோம்.

@@ மகேஷ்,

நன்றிங்க

@@ கதிர்,

ஆமாங்க. நன்றி

@@ ஜோதி,

இன்னும் பொருளாதாரம் மேம்பட்ட மாதிரி தெரியலீங்க நண்பரே. கொஞ்சம் பொறுமையாக மாறலாம் என்று நினைக்கிறேன்.

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

Related Posts with Thumbnails