Wednesday, July 14, 2010

சிவமணியின் மஹாலீலா - இசை விமர்சனம்


அட.. இந்த இசையை இத்தனை நாளாய் எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று சில சமயம் தோன்றும். இசை வெளியீடு பற்றிய செய்தியோ, அறிமுகமோ கிடைக்காமல் நல்ல இசையைத் தவற விடுவது சில சமயம் நடப்பதுண்டு. அப்படி கவனிக்காமல் விட்ட இசை வெளியீட்டில் சிவமணியின் மஹாலீலா ஒன்று!! 

உலக இசை என்றால் நமக்கு நினைவிற்கு வருவன யானி, எனிக்மா போன்ற இசைக் கலைஞர்களின் இசைக்கோப்புகளே!! அந்த இசைக்கோப்புகளில் வெளிநாட்டு வாத்தியங்களின் பங்கே அதிகமாக இருக்கும். இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு நல்ல உலக இசைக்கோப்பை ரசிக்க வேண்டுமா? இதோ மஹாலீலா...

மஹாலீலா ஆல்பத்தை இசைச் சங்கமம் (Fusion) என்ற பாணியில் இசையமைத்துள்ளனர். சிவமணியின் இசைக்கோப்பு என்பதால் அவரது வாத்திய இசை தான் மேலோங்கி இருக்கும் நம்பினால் அது தவறு. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ஜாகிர் உசேன் (தபேலா), விக்கு விநாயக்ராம் (கடம்), செல்வகணேஷ் (கஞ்சிரா), நிலாத்ரி குமார் (சிதார்), நவீன் (புல்லாங்குழல்), பார்த்தசாரதி (வீணை), ஜானெட் ஹாரிஸ் (சாக்ஸ்போன்) போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் ஹரிஹரன், உஸ்தாத் லியாகத் அலிகான், பிளாஸி போன்ற பாடகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் அருமையான சங்கமம்.

என் வாழ்க்கைப் பயணம் என்ற கருத்தில் இசையமைத்திருக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகிறது. குழந்தையின் பிறப்பு, தாய் மண், இசைக்கலைஞர்களுக்கான அர்ப்பணிப்பு, சிவ சிவ, பேஸின் பிரிட்ஜ் என்று பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகின்றது.

இன்ஃபினிட்டி (Infinity)- ஆரிராரோ..

ஓஷோவின் ஒலிக்கோப்பில் இருந்து துவங்கும் இந்தப் பாடலை எவரும் தவற விடக்கூடாது. "ஒரு குழந்தை கருவில் உருவானதில் இருந்து 9 மாதங்கள் சுவாசிப்பதில்லை. தாய் தான் சுவாசிக்கிறார். அந்த சுவாசிப்பில் கேட்கும் ஓசை தான் குழந்தை கேட்கும் இசை" என்ற ஓஷோவின் வார்த்தைகளுடன் ஆரம்பித்து.. ஆரிராரோ.. ஆராரிரோ பாடல் மனதை இதமாக்குகின்றது. 

இந்தப் பாடலின் இடையில் பண்டாரம் செல்வம் என்பவர் தாயின் அருமை பெருமைகளை விளக்கும் வண்ணம் பாடியிருக்கும் வரிகள் கேட்பவர்கள் உருகுவது உறுதி.

*
நிலவில் ஒரு நடனம் - (Dance on the Moon)

சர்வமங்களே மாங்கல்யே என்று ஆரம்பித்து பின்பு வரும் வாத்திய இசையாவும் எந்த ஒரு டிஸ்கோவிலும் ஒலிக்க விடலாம். அவ்வளவு அடி.. 

*

அப்பாஜி..

அனைத்து வாத்தியக் கலைஞர்களுக்கும் அர்ப்பணிப்பு என்று கூறித்துவங்கும் இந்தப் பாடலில் சிவமணியும் ஜாகிர் உசேனும் அமைத்திருக்கும் இசையுடன் நவீனின் புல்லாங்குழல் சேரும் பொழுது ஒரு மாறுபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. புல்லாங்குழல் இசையை இந்த அளவிற்கு அழகாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கேட்டிருக்கிறேன்.

*

சந்துஸ்தி

மஹாலீலா ஆல்பத்தில் சிவமணிக்கென்று ஒரு தனிப்பாடல் இது தான். ஏ.ஆர்.ரஹ்மானின் மேடை இசைக்கச்சேரிகளில் சிவமணிக்கென்று சில நிமிடங்கள் தரப்படும். அரங்கத்தையே அதிர வைத்துவிடுவார். அதை கேட்காதவர்கள் அல்லது மீண்டும் கேட்க விரும்புபவர்கள் கேட்க வேண்டிய பாடல். 

*

தாய்மண்

நவீனின் புல்லாங்குழல், பார்த்தசாரதியின் வீணை, விக்கு விநாயக்ராமின் கடத்துடன் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சங்கமம் அட்டகாசம். இந்த இசையைக் கேட்கும் பொழுது மண் வாசனையை உணரமுடிகிறது. இந்த இசையை எந்த ஒரு திரைப்படத்தின் மகிழ்ச்சியான காட்சிக்குப் போடலாம்.

*

பேஸின் பிரிட்ஜ்

சென்னை சென்ரல் ரயில் நிலைய அறிவிப்புடன் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை சிவமணியின் ட்ரம்முடன் சேர்ந்து வருவது அருமையான ஜூகல்பந்தி. இறுதியில் வரும் அடி... மின்சாரக்கனவு ஊல்ல்லால்லா.. அடியை நினைவுபடுத்துகிறது.

*

இது மட்டும் இல்லாமல் சங்கர் மஹாதேவன், ஹரிஹரன் பாடும் பாடல்களும் இந்த இசைக்கோப்பில் உள்ளன.  

நமக்குப் பெரும்பாலும் இசை என்று அறிமுகப்படுத்தப்படுவது / பட்டிருப்பது திரைப்படங்களில் வரும் இசையே. இசை என்று ஒரு படத்தில் வரும் ஐந்து பாடல்களை ரசித்துவிட்டு சென்றுவிடுவோம். இசைக்கு மொழி தேவையில்லை என்பதை இசை வாத்தியங்கள் சேர்ந்து சங்கமிக்கும் பொழுது உணர முடியும். மஹாலீலாவைக் கேட்கும் பொழுது அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இசைப்பிரியர்கள் கேட்க வேண்டிய இசைக்கோப்பு!!

தரமான இசையை ஹம்மா.காம்ல் இலவசமாகக் கேட்கலாம்!!

11 comments:

Unknown said...

நான் சிவமணியின் ரசிகன்.. இவரின் Drums on Fire ல் ஒரு இசைகோப்பு A Drop in the Bucket கேட்டுப் பாருங்க பின்னியிருப்பார்..

vasu balaji said...

மிக்க நன்றி. பேஸின் ப்ரிட்ஜ் அருகில் இருக்கும் மூலக்கொத்தளம் மயானத்தில் ஒலிக்கும் பறைதான் தன் இசைக்கு ஆரம்பம் என்று சிவமணி சொல்லுவார். நன்றி பகிர்வுக்கு.

பழமைபேசி said...

நன்றிங்க செந்தில்!

பிரபாகர் said...

படித்த உடன் கேட்க தூண்டுகிறது உங்களின் எழுத்து. அருமை செந்தில்.

பிரபாகர்.

Prathap Kumar S. said...

பகிர்வுக்கு நன்றி செந்தில்...

நிகழ்காலத்தில்... said...

பகிர்வை கண்டவுடன் இசைக்கோப்பை கேட்கத்தூண்டுகிறது செந்தில்..

Krubhakaran said...

Infinity ல் பண்டரம் செல்வம் பாடுவது பட்டினத்தார் பாடல், பொதுவாக மரணம் நேர்ந்த வீடுகளில் இறுதி சடங்குகள் செய்கையில் பாடுவது, பட்டினத்து அடிகள் தன் தாயாருக்கு இறுதி சடங்கு செய்யும் போது பாடியது. Infinity உன்மையிலேயே Infinity loop ல் கேட்க்க கூடிய பாடல்.

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்

ஈரோடு கதிர் said...

நல்ல அறிமுகம் செந்தில்

தந்தை கடமையாற்றலிலும் நல்லதொரு பகிர்வு

கார்த்திகைப் பாண்டியன் said...

அறிமுகத்துக்கு நன்றி நண்பா

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Related Posts with Thumbnails