Saturday, July 24, 2010

தீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + சின்மயி.

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசமுடியுமா? நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் உண்மையிலேயே அறிவிப்பூர்வமான கேள்விகளைக் கேட்க முடியுமா?

உங்களிடமும் என்னிடம் சில ஆட்டுக்குட்டிகள் இருக்கின்றன.  நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் உங்களிடமும் ஒரே எண்ணிக்கையில் ஆட்டுக்குட்டிகள் இருக்கும். அதுவே நான் உங்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் இருப்பதை விட உங்களிடம் இரு மடங்கு அதிகமாக ஆட்டுக்குட்டிகள் இருக்கும். ஆரம்பத்தில் நம் இருவரிடமும் எத்தனை ஆட்டுக்குட்டிகள் இருக்கும்? (விடையைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)



இந்தக் கேள்வியைக் கேட்கப்பட்டது தீபம் தொலைக்காட்சியில் சதுரங்கம் என்ற நிகழ்ச்சியில்!!  "உலகத்தமிழர்களுக்கான தமிழ்த்தொலைக்காட்சி" என்ற அறிவிப்புடன் துவங்கும் தீபம் தொலைக்காட்சியில் தான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நேரலையாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி, பிரான்சு, சுவிஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பதிலளிக்கிறார்கள். அளிக்கப்படும் பதிலையும், அதிர்ஷ்டத்தையும் பொறுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் தமிழைக் கேட்கவே நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் "தமிழ்" தொலைக்காட்சியினர் இந்நிகழ்ச்சியைப் பார்த்தாவது தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம். தூய தமிழில் நிகழ்ச்சியை நடத்தினால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று.

இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நன்றாகவே வடிவமைப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியின் மறு ஒளிபரப்பாகவே உள்ளது. ஆனால் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. 

*



திரும்பிய பக்கமெல்லாம் மூக்கைச் சிந்தும் நாடகங்களும், நாடகத்தன்மை மிகுந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வந்துகொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் பல நல்ல நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள் ஜெயா தொலைக்காட்சியினர். இதில் ராகமாலிகா, எஸ்.பி.பி. வழங்கும் என்னோடு பாட்டுப்பாடுங்கள், ஹரியுடன் நான், மனதோடு மனோ போன்ற இசையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடவேண்டியவை. பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி நன்றாக ரசிக்கும் படியாக இருக்கின்றன இந்நிகழ்ச்சிகள்.



பாடகர் மனோ நடத்தும் "மனதோடு மனோ" நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இதர இசைக்கலைஞர்களுடன் இனிய இசை சார்ந்த பேட்டியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கலைஞர்கள் வந்த வழி, அவர்களுடைய அனுபவங்களை சில பாடல்களுடன் தொகுத்து வழங்குவது அழகு. மனோவின் அனுபவங்களும் இசையறிவும் பங்கேற்கும் இசைக்கலைஞர்களின் பாடல்களுடன் இணைவது அருமையான சங்கமமாக அமைந்துவிடுகிறது. வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதுகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இசை ஆர்வலர்கள் தவற விடக்கூடாது.

*

நேற்றைய "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் பின்னனிப்பாடகி சின்மயி இடம்பெற்றார். சின்மயியின் ஆரம்பகால வாழ்க்கை, இசைத்துறைக்கு எப்படி வந்தார் என்றெல்லாம் இனிமையான பேட்டியாக அமைந்தது. அதில் அவர் எப்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாட ஆரம்பித்தது பற்றியெல்லாம் கூறி பல பாடல்களைப் பாடியும் காட்டினார். 



கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடல் தான் சின்மயியின் முதல் பாடல். புதிய பாடகி ஒருவருக்கு இப்படி ஒரு பாடல் அறிமுகப்பாடலாக அமைவது அரிய ஒன்று. அதன் பின் இவர் பாடியிருக்கும் பாடல்களுள் பெரும்பாலானவை ஹிட் ரகங்களே. பாடல்களைப் பாடுபவருக்கு மொழி தெரிவதன் எவ்வளவு தேவையோ அதே அளவு தேவையானது பாடலின் உணர்வை வெளிப்படுத்துவது. இவரது பாடல்களுள் அப்பாடலில் வெளியாக வேண்டிய உணர்வு இருப்பது கவனிக்கத்தக்கது.

"பூ" படத்தில் "ஆவாரம்பூ அந்நாளில் இருந்து" என்று துவங்கும் பாடல் அப்படிப்பட்ட ஒன்று. பாடல்கள் வெற்றிப்படங்களிலோ பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெறுவதன் தேவை இது போன்ற பாடல்கள் பிரபலமடையாமல் போவதில் இருந்து புரிகிறது. பூ படத்தின் நாயகியின் காதல், ஏக்கம், விரக்தி, எதிர்பார்ப்பு இப்படி பல உணர்ச்சிகளையும் ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் பாடலில்.

"பொக்கிஷம்" படத்தில் இடம்பெற்றிருந்த "நிலா நீ வானம் காற்று" பாடலில் வரும் "அன்புள்ள மன்னா" என்று துவங்கும் வரிகளை இதை விட அழகாகப் பாடியிருக்கமுடியுமா என்று தெரியவில்லை.  "குரு" படத்தில் வந்திருந்த "மய்யா மய்யா" பாடல் ஏதோ அரபிப்பாடலோ என்று யோசிக்கும் வகையில் சிறப்பாகப் பாடியிருப்பார். இசையை முறையாகப் பயின்ற இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரன்சு, ஜெர்மன், மராத்தி என்று பல மொழிகள் தெரியுமாம்.

இளம் தலைமுறை பின்னனிப் பாடகிகளுள் சின்மயியிற்குத் தனி இடம் அமைந்து வருவது பெரும்பாலான பாடல்கள் கவனிக்கப்படுவதே சான்று. மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துவோம்.

இவரது வலைப்பூவின் சுட்டி இங்கே.

**

14 comments:

பிரபாகர் said...

முதலில் விடை : 3, 5.

பிரபாகர்...

vasu balaji said...

பிரபாகர் said...

/முதலில் விடை : 3, 5.

பிரபாகர்...//

என்னாத்த சொல்லுறது:)

விடை போச்சேதான்:))

Chitra said...

நல்ல இசை நிகழ்ச்சிகளை வரவேற்று, தொகுத்து தந்து இருக்கும் அருமையான பதிவு. :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ பிரபாகர்,

விடை சரியல்ல ;)

@@ பாலாண்ணே,

வடை இன்னும் இருக்குதுங்க :)

@@ சித்ரா,

நன்றிங்க.

செ.சரவணக்குமார் said...

தீபம் தொலைக்காட்சியின் நல்ல நிகழ்ச்சிகள், ஜெயா டி.வியின் அருமையான இசை நிகழ்ச்சிகள் என்று நல்ல பகிர்வு செந்தில்.

பாடகி சின்மயி பற்றியும் அழகாக எழுதியுள்ளீர்கள். அவரது வலைப்பூவின் சுட்டிக்கு மிக்க நன்றி.

Aba said...

விடை 7,5

Aba said...

@பிரபாகர்,

//முதலில் விடை : 3, 5//

இல்லையே சார், அப்படியென்றா அவர் உங்களிடம் ஒரு ஆட்டைக் கொடுத்தால் அவருகிட்டே ரெண்டும் உங்ககிட்டே ஆறும் இருக்குமே!!

அமைதி அப்பா said...

விடை 2,4.
ரொம்ப சிந்திக்க வச்சிட்டீங்க...
நல்ல பகிர்வு. தீபம் டிவி அறிமுகத்திற்கு
நன்றி.

Aba said...

அமைதி சார்,

//விடை 2,4//

இல்லையே.. அப்பிடின்னா நீங்க அவருக்கு ஒன்னு குடுத்தா உங்ககிட்டே ஒண்ணும் அவருகிட்டே ஐந்தும் இருக்குமே??

5,7 தான் சரியான விடைன்னு நெனைக்கறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ கரிகாலன்,

உங்கள் விடையே சரி. வாழ்த்துகள்.

@@ அமைதி அப்பா,

முயற்சிக்கு வாழ்த்துகள்.

@@ செ.சரவணக்குமார்,

நன்றிங்க நண்பா.

Aba said...

//@@ கரிகாலன்,

உங்கள் விடையே சரி. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி. அதென்ன கரிகாலன்? "கணித மேதை கரிகாலன்"னு அடைமொழி வச்சு கூப்பிடலாம்லே!!

ஈரோடு கதிர் said...

||இந்நிகழ்ச்சியைப் பார்த்தாவது தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம்||

நம்ம ஊரு டிவி மட்டும் இல்லீங்க

பாக்கிறவங்களும் நிறைய திருந்த வேண்டியிருக்கு

பனித்துளி சங்கர் said...

எனக்கு ஆட்டுக் குட்டி கதைக்கான விடை தெரியவில்லை .
பாடகி சின்மயி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே

பனித்துளி சங்கர் said...

எனக்கு ஆட்டுக் குட்டி கதைக்கான விடை தெரியவில்லை .
பாடகி சின்மயி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே

Related Posts with Thumbnails