Sunday, September 5, 2010

கேபிள் - சில எண்ணங்கள்!!

"Problem of plenty" என்ற ஆங்கிலச் சொலவடை நம் தொலைக்காட்சிச் சேனல்களுக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற முறை ஊரிற்குச் சென்ற பொழுது வீட்டில் காணக்கிடைத்த தமிழ்ச்சேனல்களின் எண்ணிக்கை 25 முதல் 30ஐத் தொடலாம். முப்பது சேனல்கள் கிடைப்பதாலேயே ஒரு வித பரபரப்பு மனதில் படற ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சேனலில் வரும் நிகழ்ச்சி அல்லது பாடல் சரியில்லை என்றால் அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்ததில் என்ன.. என்ன என்ன.. என்ற தேடிக்கொண்டே சென்று ஏதாவது ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.

இப்பொழுது ரிமோட் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டிகள் வருவதேயில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பார்க்க முடிந்த ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளும், கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளும் இன்று, ஒன்று, வீட்டு அட்டாலியில் இருக்கலாம் அல்லது மண்ணை மாசாக்கியிருக்கலாம். அப்படி ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டில் வைத்திருந்த பொழுது இப்பொழுது மாற்றிய அளவிற்கு மாற்ற முடியாது. தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே சென்று "படக் படக்"கென மாற்ற வேண்டியதிருக்கும். சாலிடெர் போன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் இருந்தது போல "பட்டன்' இல்லாததால், வட்ட வடிவில் திருப்ப வேண்டியதிருக்கும். நான் திருப்பியதில் எத்தனையோ முறை திருப்புலியை மாற்றியும் இருக்கிறோம். ரிமோட் இல்லாத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தது போல இப்பொழுது இல்லை. 

கல்லூரிக் காலத்தில், விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு ரிமோட் இருந்தாலும் நண்பர்களின் தொடர் பயன்பாட்டிற்குப் பிறகு பொத்தான்கள் அனைத்தும் தேய்ந்து போய் விடும். பிறகு பூட்டு போடப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் கதவை நீக்க கம்பியை வளைத்து சேனல்களை மாற்றிய காலமெல்லாம் உண்டு. அது போன்ற நேரத்தில் சுற்று முறையில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக அமர்த்தப்படுவதும் உண்டு. ரிமோட் இல்லாத நாட்களில் வீட்டில் நான் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக இருந்ததுண்டு. எத்தனை முறை தான் எழுந்து சென்று சேனல்களை மாற்றுவது என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால், அப்பொழுதும் அதிகபட்சமாக ஆறேழு தமிழ்த் தொலைக்காட்சிகள், சில விளையாட்டுச் சேனல்கள் இருந்ததுண்டு. இப்பொழுது அளவிற்கு இருந்ததில்லை. 

சேனல்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது தான் உண்மை. சேனல்களை வசதிகள் அல்லது வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்றைய வாய்ப்புகள், வசதிகள் எல்லாமே நம் பொறுமையைச் சோதிப்பவையாகவே இருக்கின்றன. +95 போட்டு தொலைதூர அழைப்புகள் பேசியதில் இருந்த சுவாரஸ்யம் இன்று ஏனோ அலேபேசிகளில் பேசும் பொழுது இருப்பதாகத் தெரிவதில்லை. அலைபேசிகள் நமக்கு வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாலாட்டும் நாயைப் போல வைக்க வேண்டிய பணிச்சூழல்!! விடுமுறை நாட்களின் பொழுதும் "அவசரம் என்றால் என் எண்ணில் குறுந்தகவல்கள் அனுப்புங்கள்" என்று போட வேண்டிய கட்டாயம். அலைபேசிகளைத் தான் நம்மால் எதுவும் செய்ய முடிவில்லை, இந்த தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையையாவது ஏதாவது செய்ய முடியுமா? 

தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்பு அமீரகத்தின் எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play என்ற சேவைக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் பெற ஆரம்பித்துள்ளேன். அதனால் நான் பெற்ற பயனைக் கூறும் முன்பு E-Life - Triple Play பற்றி சில பத்திகள்.

o

முந்தைய பத்தியில் "எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play" என்று குறிப்பிட்டிருந்தேன். அதென்ன Triple Play?


வீட்டில் தொலைப்பேசி, இணைய அகண்ட அலைவரிசை( ப்ராட்பேண்ட் ) வசதி மற்றும் கேபிள் வசதியை இணைக்கும் சேவை தான் Triple Play சேவை. வீட்டில் ஒரு ரிசீவரை வைத்துவிட்டால் போதுமானது. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும் நம் வசதிக்கேற்ப!! இது போன்று இணையம், தொலைபேசி, கேபிள் மூன்றையும் ஒரே நிறுவனமே வழங்கும் சேவை இந்தியாவில் வருவதற்கு நீண்ட நாட்களாகாது என்றே தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இன்று இருப்பது போல இணையத்திற்கு ஏர்டெல், கேபிளிற்கு சுமங்கலி, தொலைப்பேசிக்கு பி.எஸ்.என்.எல் என்ற நிலையெல்லாம் மாறி ஏதாவது ஒரு நிறுவனமே மூன்று சேவையையுமே வழங்கும் நிலை வந்துவிடும். 

இப்படி ஒரு சேவை வந்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

கேபிள், இணைய வசதி, தொலைப்பேசி என்று ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதச் சந்தா கட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தும் ஒரு குடையின் கீழ்!! மூன்றையும் ஒரு நிறுவனமே வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு எந்த சேவை அதிகபட்சமாகத் தேவைப்படுகிறதோ அதைத் தெரிவு செய்து பயன்பெறலாம். உதாரணம்.. ஒருவருக்கு இணையவசதியே முக்கியமாக இருக்கலாம். சிலருக்கு கேபிள் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். 

எப்பொழுது இது போன்ற சேவைகள் வரும்?
o

மேலே குறிப்பிட்ட E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள், 8MBPS என்ற அளவிற்கு அதிவேக இணைய வசதி மற்றும் தொலைப்பேசிச் சேவை. தொலைக்காட்சிச் சேனல்களைத் தேர்வு செய்ததில் தமிழில் சன் டிவி, ஆங்கிலத்தில் சர்வதேச செய்திச்சேனல்கள், ஃபாக்ஸ், எம்.பி.சி போன்ற திரைப்படங்கள் சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், என்.ஜி.சி என்று  சில சேனல்கள் மட்டும் என் கணக்கிற்கு வரும்படி தேர்ந்தெடுத்துள்ளேன். சேனல்கள் குறைந்தவுடன் ரிமோட்டில் விளையாடுவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி எண்ணிக்கையைக் குறைத்துப் பாருங்களேன். குறைந்தது சில சேனல்களைப் "பேரண்டல் லாக்" மூலம் முடக்கி வைத்துப்பாருங்களேன்!!

தொலைக்காட்சியை பார்க்கும் நேரமும் குறைய ஆரம்பித்துள்ளதால் நான் என்ன இழந்துள்ளேன்? 

ஒன்றுமில்லை!! வீட்டில் யானியும், ராஜாங்கமும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. "அப்பாடா" என்ற பெருமூச்சை ரிமோட்டிடம் இருந்து கேட்கமுடிகிறது.

9 comments:

vasu balaji said...

ம்கும். இங்கதான் பங்கு போட்டு வச்சிருக்கானுவளே. கேபிள்ள ஸ்போர்ட்ஸ் வராது, ஏர்டெல்ல வர ஸ்போர்ட்ஸ் சானல், டாடா ஸ்கைல வராது, இது ரெண்டுலயும் வராதது டிஷ் டிவில வரும். சில வீடுங்கள்ள 2 டிஷ், கூட ஒரு கேபிள். அடுத்த தலைமுறைக்கு கட்டை விரல் நீட்ட முடியுமான்னு சந்தேகம்தான்:). கண்ணு பரவால்ல. ரெண்டு கண்ணுக்கு லேசர் சிகிச்சை வெறும் 9999 மட்டுமே. ஒரு ஆளை சேர்த்து விட்டா 1000ரூ தள்ளுபடி ஸ்கீம்லாம் வந்திருச்சி:))

surivasu said...

இது போன்ற முதலாளித்துவ குப்பைகள் நம்மை சுற்றி ஏராளாமாக கொட்டப்பட்டு கொண்டிருகின்றன. நாம் தான் விழிப்புடனும், சுய கட்டுப்பாடுடனும் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள் செந்தில்....

ஆரூரன் விசுவநாதன் said...

நல்லதொரு அலசல்.....இந்த வசதி இந்தியாவில் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

பகிர்வுக்கு நன்றிங்க....

ப.கந்தசாமி said...

நீங்கள் சொல்வது மிச்சரி. Problem of Plenty நல்ல வார்த்தை. எதையும் அனுபவிக்க முடிவதில்லை.

இப்போது இங்கு கல்யாண வீடுகளில் பஃபெ முறையில் 40 டிஷ்கள் வைக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒவ்வொரு கவளம்தான் சாப்பிடமுடியும். சாப்பிட்ட திருப்தியே வருவதில்லை. ஏன் ஓரிரு டிஷகளை மட்டும் சாப்பிடலாமே என்றால், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஓரிரண்டு டிஷ்களை மட்டும் சாப்பிட்டால் ஏதோ ஒன்றை மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு வருகிறது. மொத்தத்தில் விரிந்து வீண்.

எங்கள் வீட்டி டி.வி.யில் சன்டி.வி. மட்டும்தான் பார்க்குறோம்?

sakthi said...

ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.


உண்மைதான் செந்தில்

வித்தியாசமான பார்வை உங்களுடையது

க.பாலாசி said...

நல்ல பகிர்வும், அலசலும். இன்னும் தொலைக்காட்சிக்குள் புகுந்து ஆராயவில்லை. இதுபோன்ற சேவைகள் கிடைக்கப்பெறின் நமக்கு நல்லதுதான்..

//கண்ணு பரவால்ல. ரெண்டு கண்ணுக்கு லேசர் சிகிச்சை வெறும் 9999 மட்டுமே. ஒரு ஆளை சேர்த்து விட்டா 1000ரூ தள்ளுபடி ஸ்கீம்லாம் வந்திருச்சி:)) //

:-)))

ஈரோடு கதிர் said...

முடிவு “நச்”

Chitra said...

ஒரு நாளில், இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தொலைக்காட்சி பார்ப்பது நல்லது அல்ல, என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.... ம்ம்ம்ம்.....

ஹுஸைனம்மா said...

//E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள்//

அப்படியா? நாம் விரும்பும் சேனல்கள் மட்டும் தெரியும்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமா? புது செய்தி.

தேவையில்லாத சேனல்கள் காரணமாக தொலைக்காட்சியை முழுதும் முடக்கி வைத்துள்ளேன்; இம்முறையில் முயற்சி செய்யலாம்போல!!

Related Posts with Thumbnails