Sunday, December 26, 2010

2010ல் மொபைல் துறை - ரீகேப்


செல்பேசிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாரா? குளிக்காமல் கூட சென்று விடுவோம். பத்து பேர் ஒன்று கூடினால் அதில் நாலு பேர் செல்பேசியில் பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்துக் கொண்டோ தான் இருக்கிறோம். அதிகமாகப் பார்ப்பது செல்பேசியை, அதிகமாகக் காதலர்கள் முத்தமிட்டது செல்பேசித் திரையை, அதிகமாக புன்னகைப்பது செல்பேசியைப் பார்த்து. இப்படி இருக்கும் மொபைல் துறை 2010ல் எப்படி இருந்தது? 2010ல் அதிகமாக விவாதிக்கப்பட்ட விசயங்கள் எவை... ஒரு சின்ன ரீவைண்ட்.

ஆப்பிள் ஐ-பேட் & டேப்லட் (பட்டிகை கணினி)

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-பேட் பட்டிகைக் கணினி (டேப்லட்) செல்பேசிக்கும் மடிக்கணினிக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன்பே பல நிறுவனங்கள் பட்டிகைக் கணினிகளை கொண்டு வந்திருந்தாலும், ஆப்பிளின் வணிகத் திறமையாலும் ஐ-பேடின் செயல்பாடுகளாலும் தனி கவனம் பெருகிறது. ஐ-பேடின் வருகைக்குப் பிறகு அனைத்து கணினித் தயாரிப்பு நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்கள் பட்டிகையை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். பட்டிகைகளில் விளையாட்டுகள், இணைய மேய்ச்சல் (browsing), அழைப்புகள் என பல செயல்பாடுகளையும் இயக்க முடியும். இப்பொழுது அப்ளிகேஸன்ஸ் எனப்படும் பட்டிகைப் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்குவதில் "நான் முந்தி நீ முந்தி" என்று மென்பொருள் நிறுவனங்கள் இறங்கியுள்ளனர். ஐ-பேட்-ஐ வைக்கும் படியாக கால்ச்சராய்களையும் கோட்களையும் ஆடைவடிவமைப்பு நிறுவனங்கள் வடிவமைக்க ஆரம்பித்திருப்பதால் ஐ-பேட் 2010ன் பட்டியலில்.

ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு(OS)

சாம்சங் போன், மோட்டராலா போன் என்று கேட்ட நிலை மாறி "ஆண்ட்ராய்ட் போன் கொடுங்கள்" என்று வாடிக்கையாளர் கேட்கும் அளவிற்கு 2010 ஆண்ட்ராய்டின் வீச்சு வளர்ந்துள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல் இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் செல்பேசிகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. நுண்ணறிபேசிச் சந்தையில் கால் பங்கு ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு தான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வகை செல்பேசிகள் 5% தான் இருந்தன. இந்த வளர்ச்சிக்குக் காரணம் திறந்த மூலமாக (Open Source) இயக்க அமைப்பு இருப்பதே. எந்தவொரு செல்பேசி தயாரிப்பு நிறுவனமும் இந்த இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்சங் காலக்ஸி, HTC ஈவோ, மோட்டோரோலா ட்ராய்டு போன்ற செல்பேசிகள் எல்லாம் ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஷென்சன் - மீடியா டெக் கூட்டமைப்பு

கடந்த ஒரு வருடமாக செல்பேசிச் சந்தை ஆர்வலர்கள் புற்றீசல் போல செல்பேசி நிறுவனங்கள் கவனித்திருக்கலாம். கார்போன், மைக்ரோமாக்ஸ், வீடியோகான், லாவா, ஆலிவ், இண்டெக்ஸ், மாக்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் சந்தையில் இருப்பது மீடியாடெக்கால் சாத்தியமானது. சீனாவின் ஷென்சன் நகரில் உள்ள இந்நிறுவனம் செல்பேசி உருவாக்கத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் வாடிக்கையாளரின் (இங்கே கார்போன், மைக்ரோமேக்ஸ்) தேவைக்கு ஏற்ப வடிவமைக்கிறார்கள். பிறகு, ஷென்சன் நகரைச் சுற்றியுள்ள சீனச் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களின் செல்பேசிகள் தயாராகின்றன. இதனால் செல்பேசி நிறுவனத்தைத் துவங்க பெரும் முதலீடும், ஆராய்ச்சிக் கட்டமைப்பும் தேவையில்லாமல் போகிறது.

இது போன்ற சென்ஷன்-மீடியா டெக கூட்டமைப்பு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் 10-15% பங்கைப் பிடித்துள்ளதால் 2010ன் பட்டியலில் இடம்.

ஸ்மார்ட்போன்ஸ் (நுண்ணறிபேசி)

2000களின் ஆரம்பத்தில் செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தது 2006 முதல் மாற ஆரம்பித்தது. நோக்கியா நிறுவனம் வெளியிட்ட N95 என்ற செல்பேசி வந்ததில் இருந்து இணைய மேய்ச்சல், படம் பிடித்தல், விளையாட்டுகள், மின்னஞ்சல் என்று பல வேலைகளைச் செய்யும் நுண்ணறிபேசி என்ற நிலைக்கு மாறியது. நுண்ணறிபேசித் துறையை மேலும் சூடுபிடிக்க வைத்தது 2007ல் ஐ-போன் அறிமுகத்திற்கு பிறகு. பிறகு பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் சந்தைக்கு இறக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டி 2010ல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

கூகுள் சிட்டாடல் நிலையைப் (Status) பார்த்தால் From Mobile என்றும், ஃபேஸ்புக் நிலையைப் பார்த்தாலும் "From my i-phone or Nokia or Samsung Galaxy" என்று புதுப்பிப்பதைப் பார்க்க முடிகிறது. மடிக்கணியும், மேசைக் கணினியும் தேவையில்லை என்ற நிலைக்கு 2010ல் நுண்ணறிபேசிகள் கொண்டு வந்துள்ளன. டெல், ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட் போன்ற கணினி தயாரிப்பு நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நுண்ணறிபேசிகளுள் அதிகம் விவாதிக்கப்பட்டது ஐ-ஃபோன் தான் என்பதும், நோக்கியா நுண்ணறிபேசிகள் தான் அதிகமாக விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Applications (பயன்பாடுகள்) - ஆப்ஸ்டோர், நோக்கியா ஓவி

நுண்ணறிபேசிகளின் விற்பனையை ஊக்குவிப்பதில் அப்ளிக்கேஷன்ஸ் (பயன்பாடுகள்) பெரும் பங்கு வகிக்கின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் நிலை புதுப்பித்தல், செய்திகள், சிட்டாடல், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று இணைய மேய்ச்சல் சேவைகள் முதல் பஞ்சாங்கம், கல்வி, விவசாய மற்றும் வானிலைத் தகவல்கள் வரை அனைத்திற்கும் பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைச் செல்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். 

பயன்பாடுகள் விற்பனையில் ஆப்பிளின் ஆப்ஸ்டோர் முன்னனியிலும், நோக்கியா ஓவி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன. செல்பேசித் துறையில் இனி வருமானம் பயன்பாடுகளில் தான் என்பதைப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் இக்கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்கின்றனர். ஏர்செல் கூட அவர்கள் தளத்திற்கு விளம்பரம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

பயன்பாடுகளில் 2010ன் ஹிட்டு Angry Birds என்ற விளையாட்டு.

டூயல் சிம் போன்

இந்தியா போன்ற அதிக தொலைத்தொடர்புச் சேவை வழங்கிகள் உள்ள நாடுகளில் டூயல் சிம் செல்பேசிகள் பரவலாக விற்பனையானது. கார்போன், மைக்ரோமாக்ஸ், மாக்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களின் டூவல் சிம் செல்பேசிகள் ஹிட் ரகத்தைச் சார்ந்தவை. தற்பொழுது குறைந்த விலை செல்பேசிகளில் மட்டும் கிடைக்கும் இச்சேவை 2011ல் நுண்ணறிபேசிகளிலும் கிடைக்க ஆரம்பிக்கும்.

2ஜி /3ஜி//4ஜி

இந்தியாவில் இந்த வருடம், மொபைல் துறை சார்ந்த விவாதங்களில் 2ஜி-3ஜிக்கு அதிக பங்கு. உபயம் ராஜா-ராடியா. சட்டம் தன் வேலையைச் செய்வதால் இதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

ஐ-ஃபோன் 4ஜி வெளியானவுடன், அதில் ஏற்பட்ட கோளாறுகள் பரவலாகப் பேசப்பட்டன.

ப்ளாக்பெரி - மெஸஞ்சர்

ப்ளாக்பெரி நிறுவனத்தின் செல்பேசிகள் பேசப்பட்டதை விட அந்நிறுவனத்தில் மெஸஞ்சர் சேவை மிகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தனி தன்மையே (USP) இந்த மெஸஞ்சர் சேவை தான். ப்ளாக்பெரி செல்பேசியை வைத்திருப்பவர்கள் எவரும் இன்னொரு ப்ளாக்பெர்ரி வைத்திருக்கும் அன்பரை கட்டணமின்றி சிட்டாடல்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் நடக்கும் பரிமாற்றங்களை வேவு பார்க்க முடியாது என்ற விசயம் அதிக பரபரப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இந்தியா, சவுதி, அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் இச்சேவையை முடக்கப் போவதாகக் கூறின. பிறகு பல கட்டப்பேச்சு வார்த்தைக்குப் பிறகு தொடர்புப் பரிமாற்றங்களைப் பகிர்வது குறித்தான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நெகடிவ் பப்ளிசிட்டியால் ப்ளாக்பெரிக்கு அதிக விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலே விவாதிக்கப்பட்ட பெரும்பாலாவை அதிக விலை கொண்ட செல்பேசிகளைப் பற்றியதே. இவற்றை வாங்கியவர்கள், பயன்படுத்தியவர்கள் 30% தான். மீதமுள்ள 70 சதவிதத்தினர் பயன்படுத்துவது 1000-2000 ரூ விலையுள்ள அடிப்படை வசதி கொண்ட செல்பேசிகளைத் தான். இணைய வசதியை பயன்படுத்தாதவர்கள் இணையத்தைப் பயன்படுத்தப் போவது குறைந்தவிலை செல்பேசிகள் முலம் தான். அவற்றை 2011ல் பார்க்க முடியும்.

நுண்ணறிபேசிச் சந்தை சூடாகிக் கொண்டிருப்பது போட்டி நிறுவனங்கள் எழுப்பியுள்ள காப்புரிமை மீறல் வழக்குகளே சான்று. இப்போட்டு 2011ல் மேலும் வலுவடையும். பார்ப்போம்.


தொழில்நுட்பம் சார்ந்த இக்கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்

2 comments:

vasu balaji said...

விரிவான அலசல். விண்டோஸ் மொபைல் குறித்தும் சொல்லி இருக்கலாம். இன்னொரு புறம் சீன டூப்ளிகேட் ஐஃபோன்களும், விண்டோஸ் ஃபோன்களும் சந்தையில் சக்கைப் போடு போடுகின்றன.

ஜோதிஜி said...

செந்தில் ஏற்கனவே ராஜ நடராஜனும் இது போன்ற ஒரு பதிவை போட்டுருந்தார். இவற்றை பார்க்க படிக்க கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கு.

எத்தனை நவீனங்கள் வந்தாலும் இங்குள்ள தொலைத் தொடர்பு துறையின் உள்கட்டமைப்பு சரியில்லை என்றால் எங்களைப் போன்றவர்கள் உங்கள் கட்டுரைகளை படித்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியது தான்.

வாங்கிய வண்டி பென்ஸ்
ஓடிக் கொண்டுருக்கும் சாலை ஒத்தயடி பாதை.

கற்பனை செய்து பாருங்கள்.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பல ஆயிரம் மைல்கள் நம் பிஎஸ்என்எல் கடந்து போக வேண்டும். பல நல்ல அதிகாரிகளால்மட்டுமே இந்த நிறுவனம் பிழைத்து இருக்கிறது. நான் கண்ட அனுபவ உண்மை இது.

அப்புறம் வானம்பாடிகள் சொன்ன சீனப் பொருட்கள் அதன் ஜொலிஜொலிப்பை பார்த்து வியந்து நின்றேன். இரண்டாவது நாள் பல்லை காட்டிவிட்டது.

Related Posts with Thumbnails