Wednesday, December 22, 2010

விருந்து + சுஷி + உவ்வே

டிசம்பர் மாதம் வந்துவிட்டதை உணர வைக்கும் விசயங்களுள் குளிரிற்கும், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வருட இறுதி விருந்திற்கும்  தனி இடம். அதுவும் குளிர்கால கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன அமீரகம் என்றால் சொல்லவா வேண்டும். இது போன்ற விருந்துகளில் நடக்கும் ஆட்டங்கள் படு சுவாரஸ்யமானது. அலுவலகத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கும் உயரதிகாரிகள் எல்லாம் மெய் மறந்து (??) போடும் ஆட்டத்தைப் பார்ப்பதில் ஒரு தனி இன்பம். ஐரோப்பிய அன்பர்கள் பொதுவாகவே பார்ட்டி ஆட்டங்களில் சிறப்பாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது. விசாரித்துப் பார்த்தால் அவர்களுள் பெரும்பாலானோர் நடன வகுப்புக்குச் சென்றிருப்பது தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை மனதில் வந்தாலும், ஜோதியில் ஐக்கியமாகி நாமும் சில "சைலன்ட் டான்ஸைப்" போட்டுவிடுவது வழமை. சென்னையின் நினைவு வரும் தருணங்களுள் இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளும் ஒன்று. "ஊத்திகினு படுத்துக்கவா படுத்துக்கினு ஊத்திக்கவா"னு ரெண்டு குத்துப் போடலாம் என்றால் முடியாது. குத்து குத்து தான்.


விருந்துகளில் வழமையாகப் பல வகை உணவுகளும் பஃப்பே முறையில் வைக்கப்படும். பன்னாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் வாய்ப்பும், சுவைத்து முகம் சுளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கடந்த வாரம் நடந்த விருந்தில் ஏற்பட்டது. இந்த முறை ஜப்பானிய விருந்தகம் ஒன்றில் விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதையும் ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருந்தேன். ஜப்பானிய விருந்தகம் என்பதால் ஜப்பானிய ஸ்பெஷல் என்று அறியப்படும் "சுஷி"யைக் கொடுத்தார்கள். இது எப்படி இருக்கும் என்று எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நண்பனைக் கேட்டேன். "ஓ.. இட்ஸ் வெரி டேஸ்டி" என்று ஒரு "சுஷி"யை எடுத்து வாயில் வைத்து சப்புக் கொட்டினான். இதற்கு முன்பு ஒரு சில கொரிய உணவு வகைகளைச் சாப்பிருக்கிறேன் என்ற தைரியத்தில் (ஜப்பான் கொரியாவிற்குப் பக்கமாம்) "சுஷி"யை எடுத்து வாயில் வைத்தேன். ஒரு சின்ன அளவில் மென்று உள்ளே தள்ள முயன்றேன். வயிற்றைக் குமட்டுவது போல இருந்தது. மீனைப் பச்சையாக சாப்பாட்டினுள் வைத்து இனிப்புக் கொலுக்கட்டை ஸ்டைலில் வைத்திருந்தார்கள்(உள்ளே மீன் வெளியே சாப்பாடு). என் முகத்தைப் பார்த்த மலையாள நண்பன் "கிஃகிஃகி"என்றான். அருகே ஏதாவது மென் காகிதம் இருக்கிறதா என்று தேடி பொட்டலம் கட்டி வைத்தேன். 

ஏதாவது விருந்திற்கு செல்வதென்றால் வயிறைக் காலியாக வைப்பது கல்லூரிக் காலப் பழக்கம். அதுவும் பஃப்பே என்றால் சொல்லவா வேண்டும். கெஞ்சிய வயிறைக் பழரசங்களையும் சிக்கன் பார்ப்பிக்யூவையும் சாப்பிட்டுத் தேற்றினேன். இந்தியர்கள் பொதுவாகவே மாட்டிறைச்சியைச் சாப்பிட மாட்டார்கள் என்பதைப் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பன்றி இறைச்சிக்கும் நாம் உவ்வே சொல்லி விடுவதால் பெரும்பாலான சமயங்களில் உதவுவது சிக்கனும் ஆட்டுக்கறியும் தான். 

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்வபவர்கள் முடிந்த அளவு அந்தந்த உணவு வகைகளைச் சுவைத்துப் பழக்கப்படுத்துக் கொள்வது நல்லது. அயல்நாடுகளுக்குச் சென்றவுடன் நமக்கு ஊர் நினைவைத் தூண்டும் விசயங்களில் இரண்டாம் இடத்தில் நிற்பது உணவு தான். முதல் இடத்தில்? 

சீனாவிற்குச் செல்லும் பொழுது "வறுத்த வாத்துக்கறி" உணவகங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பீஜிங்கில் "ரோஸ்டட் டக்" மிகவும் பிரபலம். பெரிய குழுவாக சென்றோம் என்றால் நம் முன்னே வறுத்த வாத்தை முண்டமாகக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். விருந்திற்குச் சென்றவர்கள் அவரவர்க்கு வேண்டும் பாகங்களை பிரித்துச் சாப்பிடலாம். வாத்தில் பாதங்களை வைத்து செய்யப்படும் உணவுக்குச் சப்புக்கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற ரோஸ்டட் டக் உணவகங்களில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அயல்நாடுகளில் இருந்து புதிதாக வந்திருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக சிப்பந்திப் பெண்கள் வாத்துக்கறியை எப்படி சாப்பிட வேண்டும் என்று பயிற்சியளிப்பார்கள். அதாவது வாத்தை சன்னமான துண்டாக எடுத்து இனிப்பு கூழில் துடைத்து சில பொடிமாஸ்களை வைத்து வெத்தலை சுருட்டுவதைப் போல சுருட்டிக் கொடுப்பார்கள். அப்புறம் வாத்துக்கறி உள்ளே செல்லாமல் இருக்குமா?

சீனாவில் உள்ள சில கொரிய உணவகங்களில் மயக்க மூட்டப்பட்ட நிலையில் தவளையைச் சாப்பிடுவதும் (அவர்கள்) வழக்கம். உயிருள்ள தவளையை மதுபானக் குவளையில் போட்டு, சிறுது நேரத்தில் தவளை மயக்கமடந்தவுடன் எடுத்து... அதற்கு மேல் நான் சொல்ல வில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கொடுமை எல்லாம் அனுபவிக்கத் தேவையில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு சிக்கன் இருக்கும். இல்லை என்றால் மற்றதை விட்டுவிட்டு சாண்ட்விச், பீஸா என்று ரொட்டிகளின் அண்ணன் தம்பிகளுள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விடலாம்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டு உணவு முறைகளிலும் நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீனர்கள் கழுதை, மாடு என்று எதைச் சாப்பிட்டாலும் கடைசியில் சூப்பைக் குடிப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் இறைச்சியை சாப்பிட்டாலும் அதிகளவு காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அரேபியர்களின் உணவுகளிலும் பல நல்ல விசயங்களைப் பார்க்கிறேன். அயல்நாட்டில் வாழும் பொழுது அவர்கள் உணவு முறையையும் அதில் உள்ள நல்ல விசயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் பயணங்களும் விருந்துகளுக்கும் உவ்வே சொல்லாமல் இருக்கலாம்.

4 comments:

துளசி கோபால் said...

உண்மைதான்.

மகளுக்கு சூஷி பிடிக்கும் என்பதால் வீட்டிலேயே செஞ்சு கொடுப்பேன். ஆனால் எண்ணெயில் உப்பும் மிளகும் போட்டு வறுத்த அரச இறால் ஃபில்லிங். கூடவே மெலிசா சீவின கேரட், பீன்ஸ், சைனீஸ் கேபேஜ் இலை எல்லாம் ஒரு வதக்கல் வதக்கி வச்சுருவேன். கலர்ஃபுல்லா இருக்கும்.

ரோஸ்டட் ஸீவீட் ராப்பர், ரைஸ் வினிகர், க்ளூட்டேனியஸ் அரிசி எல்லாம் சீனக்கடைகளில் தாராளமாக் கிடைக்குது.

செஞ்சு பாருங்களேன்.

கோவி.கண்ணன் said...

எல்லாம் நான்வெஜ்ஜாக இருக்கே...
சீன உணவு தான் எனக்கு தெரிந்து சிறப்பான உணவு,

ஈரோடு கதிர் said...

சர்க்கு அயிட்டமெல்லாம் ஒன்னுமே சொல்லல!!! :))

ஆச்சி ஸ்ரீதர் said...

என்னென்னவோ சொல்றீங்க, ஓகே,ஓகே.

தமிழகத்தில் கிலோ வெங்காயம் நூருபா?

அமீரகத்தில் எப்படி?

Related Posts with Thumbnails