விடுமுறை சீசனின் இரண்டரை மணி நேரத்தை, எதைப் பற்றியும் கவலைப் படாமல், முகம் சுளிக்காமல், காதைப்பிளக்கும் சத்தமில்லாமல் செலவிட வேண்டுமா? மன்மதன் அம்பு தான் சரியான தேர்வு!! சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கலகலப்பான நகைச்சுவை கம் ரொமான்ஸ் படம் தான் மன்மதன் அம்பு.
நடிகை திரிஷாவைத் { நிஷா எ) அம்பு} தொழிலதிபர் மாதவன் (மதன்) காதலிக்கிறார். திரிஷாவின் சூட்டிங்கைப் பார்க்க நேரிடும் மாதவன் திரிஷாவைச் சந்தேகிக்கிறார். வெளிநாட்டிற்குச் செல்லும் திரிஷாவை வேவு பார்க்க கமலை {மேயர் மன்னாரை (மன்)} அனுப்புகிறார். கமல் வேவு பார்த்தாரா? மாதவனும் திரிஷாவும் இணைந்தனரா? என்பது தான் மன்-மதன்-அம்பு வின் கதை.
அம்புவின் தோழியாக சங்கீதா நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வருகிறார்கள். களவாணி ஓவியா, ஸ்ரீமன், உஷா உதுப், மஞ்சு பிள்ளை, குஞ்சன் எல்லாம் சிறு கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள்.
படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மாதவனிற்குத் தான். ஸ்ரீமன் மற்றும் நண்பர்களுடன் பேசும் வசனங்கள் எல்லாம் சரவெடி. கிளைமாக்ஸில் மப்படித்துவிட்டு மாதவன் வாயைத் திறந்தாலே திரையரங்கம் அதிர்கிறது. கமல் திரிஷாவை வேவுபார்க்கும் ஆளாக வருகிறார். படம் முழுக்க அடக்கியே வாசித்திருந்தாலும் சில க்ளோசப் காட்சிகளும் வருகின்றன. தனக்கு ஏற்பட்ட சோகத்தை விளக்கும் வண்ணம் (வழக்கம் போல) கண்ணீர் சிந்துகிறார். இதே போல காட்சியைப் பல படங்களில் பார்த்தாயிற்று வாத்தியாரே!! ஒரு ஆறுதல் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் வருவது.
ஒரு நடிகையின் நிலையையும், மக்கள் பார்வையையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். "காரவேனில் ஏன் நடிகை மற்றும் நடிகரின் அறைக்கு இடையே கதவிருக்கிறது" என்று மாதவன் கேட்க "அது ஒரு கன்வீனியன்ஸ். ஜிப் இருக்கிறதென்றால் திறந்தே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என்ற பதில் சுளீரென்கிறது. கிசுகிசுவிற்கும் நடுப்பக்க மசாலாவிற்கும் முக்கியத்துவம் குறையும் வரை நடிகைகள் மீதான எண்ணம் குறையாது.
படத்தின் வசனங்களில் அக்மார்க் கமல் + கிரேஸி மோகன் டச். படம் முழுக்க சரவெடியாக நகைச்சுவை வருவது வசனம் எழுதியிருப்பது கமலா கிரேஸி மோகனா? என்று எண்ணத் தோன்றியது. அதே சமயம் கமலின் கருத்து கந்தசாமி என்ற சிங்கமும் வெளிவராமல் இல்லை. அதிபட்சமான வீரத்தின் அடையாளம் தான் அஹிம்சை, பெண்ணியக் கருத்துகள், நாத்திகம் என்றெல்லாம் கருத்துகளைத் தூவிவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குட்படும் படியான கருத்துகள் எதுவும் (கமல் கவிதை தவிர) இல்லை என்று தான் நினைக்கிறேன். எப்படியும் துப்பறிவாளர்கள் கமலின் நுண்ணரசியலையும், (விமர்சகர்கள் கருத்துப்படி) நாத்திகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு வாதியையும் கண்டுபிடிக்காமல் இருக்கமாட்டார்கள். பார்ப்போம்.
கமலிற்கும் திரிஷாவிற்கும் புரிதல் ஏற்படுவதற்குக் காரணியாக அமைந்(த்)திருப்பது "கமல் கவிதை" தான். முதலில் திரிஷா, தான் "கிண்டில்" நோட்பேடில் ஏற்றியிருக்கும் கவிதையைப் படிக்கிறார். தன் மனத்திரையில் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற வரிகள் அழகு. அதற்கு கமல் மொழியும் வரிகளும் கைதட்ட வைக்கும் ரகம். வரலட்சுமி விரதத்தையும், அரங்கநாதரையும், தொப்பைக் காடைகளைச் சுட்ட தொந்திகணபதியை இழுக்க இக்கவிதைக்குத் தமிழகத்தில் தடா. அமீரகத்தில் இல்லை!! படத்தில் இக்கவிதை வரிகளுக்குப் பல இடங்களில் கரகோசங்கள் எழுந்தன.
"நீல வானம்" பாடலை மிகவும் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் முழுவதுமே பின்னோக்கிச் செல்வது ரசிக்கத்தக்கது. அப்படிப் பின்னாடிப் போகும் பொழுது தாலியைப் பிரிப்பது, மோதிரத்தைக் கழட்டுவதாக வருவது எல்லாம் ரசனையான காட்சியமைப்பு. திருமண ஒப்பந்தத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையைக் கமல் காட்டுகிறாரா? (அப்பாடா நமக்கும் ஒரு விசயம் மாட்டியிருக்கு).
கடந்த வாரம் முழுக்க துபாய் சர்வதேசத் திரைப்படவிழாவின் படங்களைப் பார்த்தேன். அந்த ஹெங்க் ஓவரோ தெரியவில்லை, படம் ஆரம்பிக்கும் பொழுதே "ஒய்யாலே ஒய்யாலே" என்று திரிஷாவும் சூர்யாவும் ஆட்டம் போட ஆரம்பித்த பொழுது சிரித்து விட்டேன். அதே போல கமலின் கண்களில் உலகம் வருவதாகக் காட்டி "ஒலக நாயகன்" என்று பெயர் போடும் பொழுது "இந்தக் கண்றாவிய எப்படா நிறுத்தப் போறீங்க" என்று தோன்றியது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சில இடங்களில் இவர் படம் தானா என்பதைச் சந்தேகிக்கும் வகையில் இழுக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். மற்றபடி க்ரூஸ் லைனரை அளவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், லைட்டிங் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு அறிவில்லை எனக்கு. தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின். சத்தமே இல்லை. ஐ லைக் தட்.
படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத். இசைத்தட்டு வெளியான பொழுது எனக்கு பாடல்கள் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆன்டிரியா பாடியிருக்கும் "ஹூ இஸ் த ஹீரோ" தான் எனக்கு மிகவும் பாடலாக இருந்தது. ஏதோ ஆங்கிலப் பாடலைக் கேட்கும் உணர்வை ஏற்படுத்தியது இந்தப்பாடல். கமலின் அறிமுகப் பாடலாக அமைத்திருப்பது கலக்கல்!! "நீல வானம்" பாடல் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நினைவில் நிற்கும். தேவிஸ்ரீபிரசாத் பாடியிருக்கும் மன்மதன் அம்பு பாடல் படத்தில் பின்னனியில் தான் வருகிறது. படத்தின் தீம் மியூசிக்கும் நல்ல இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அலேக்ரா" ஸ்டைலில் ஒரு ஆட்டத்தைக் கப்பலில் போடுகிறார்கள். இவரது பாடல்களில் அப்படி ஒரு எனர்ஜி. கார் ஓட்டும் பொழுது இவர் பாடலைக் கேட்டு அதிகமாக மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். பின்னனி இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இப்படம் எந்தப் படத்தின் காப்பி, இஞ்சிப்பிரேஜன் என்றெல்லாம் தெரியல. நன்றாக டைம்பாஸாகிறது. டைமிங் நகைச்சுவைக் காட்சிகள் புரியாதவர்களுக்கு கண்டிப்பாகப் படம் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்றும். என் அருகில் இருந்தவர் நான் சிரிப்பதைப் பார்த்து என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். இது பி.கே.எஸ்.ல இருந்து தொடருது.
மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பிகேஎஸ், பஞ்சதந்திரம் போன்ற படங்களை ரசித்தவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும். இதமான ரொமான்ஸ் படங்களை ரசிப்பவர்களுக்கும் படம் பிடிக்கும்.
மன்மதன் அம்பு - ஆன் த மார்க்!!
10 comments:
அட! உங்க நடையும் வித்தியாசமா ஒரு குசும்ப்பா தூள்:)
Present.... இருங்க படிச்சிட்டு வரேன்...
கைதேர்ந்த வகையில் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்...
உங்கள் விமர்சனம்தான் என் விமர்சனமும்
என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..
1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.
கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.
கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...
பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...
அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...
மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...
haha...சூப்பர் ரிவ்யு....நேத்து போவதா இருந்த பிளான்...கொஞ்சம் உடம்பு சரியில்லை போகலை...
நெக்ஸ்ட் வீக் டார்கெட் பண்ணிருக்கேன்.
VJ...
பேரரசுகளும், தளபதிகளும் தமிழ்ரசிகர்களின் ரசிப்புத்ன்மையை மழுங்கடித்துவைத்திருக்கிறார்கள் நண்பரே.... மாற்றுப்படங்களை ரசிக்கும் அளவுக்கு தமிழ்ரசிகன் இன்னும் தயாராகவில்லை...அதற்கு முயற்சி செய்யும் கமல்போன்றவர்களையும் காப்பி அடிப்பவர், அந்த வாதி, இந்தவாதி என ஏதாவது குற்றம்சுமத்துகிறார்கள் என்ன செய்ய....?
விடுங்க பிரதாப் பின்னூட்டத்தையே காப்பி பேஸ்ட் செய்பவர் விஜே.. அவருக்கு போய் இவ்வளவு மெனக்கெடல் வேண்டுமா?
நல்ல விமர்சனம் செந்தில்...
மன் மதன் அம்புபூஊ....
கதை அப்படித்தானே
செந்தில் எந்த கமல் படமும் எடுத்தவுடன் ரஜினி படம் போல டாப் கியரில் போனதாக சரித்திரமில்லை. விதிவிலக்குகளைத் தவிர்த்து. இந்த படத்தில் விமர்சனத்தை ஆளாளுக்கு கொத்துக்கறி போட்ட போதே நினைத்துக் கொண்டேன்.
உங்களின் தொடக்க வரிகள் மகிழ்ச்சியைத் தந்தது.
Post a Comment