Friday, August 14, 2009

வெளிநாட்டுப் பயணமா? - எச்சரிக்கை

"மிஸ்டர், போதிய கோப்புகள் இல்லாததால் உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது" என்று கூறினால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் உங்களிடம் சரியான விசாவுடன் கூடிய கடவுச்சீட்டு, பயணச்சீட்டு, அழைப்பிதழ், தங்குமிடம் என அனைத்தும் இருக்கிறது! என்ன செய்வீர்கள்?

சென்ற வருடம் ஜூன் மாதத்தில் வேலை விடயமாக ரோமானியாவிற்கு செல்லுமாறு கூறினார்கள். ஏற்கனவே இந்த நாட்டிற்குச் சென்றிருந்தாலும், இந்த முறை ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஜூன் மாதம் என்பதால் வசந்த காலம் ஆரம்பித்திருக்கும். சூரிய ஒளியும் இரவு 9 மணி வரையில் இருக்கும். பல இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம் என்பதால் எனக்கு ஒரே மகிழ்ச்சி! ( அப்போ வேலை பார்க்க போகலியானு நீங்க நினைக்கறது புரியுது)


ரோமானியாவில் நான் செல்ல வேண்டிய க்ளூச் என்னும் ஊரிற்குச் செல்ல பல வழிகள் இருந்தும் நான் துபாய், பிராங்க்பர்ட் வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். துபாய் வழியாக திரும்பும் போது அங்கு 8 மணி நேரத்திற்கு அதிகமாக இடைவெளி இருக்கும்படி பதிவு செய்து கொண்டால் துபாயைச் சுற்றிப் பார்க்க விசா கிடைக்கும் என்பதால் துபாய் வழியைத் தேர்வு செய்தேன். ( நம்ம வடிவேலு தான் துபாயப் பத்தி நிறையா சொல்லியிருக்காரே!)




ஆக, எனது பயண வழி சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய்- சென்னை என இருந்தது. சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட்; ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய்- சென்னை மார்க்கம் ஒரு விமானத்திலும், ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்கம் ரோமானியா நாட்டைச் சேர்ந்த வேறொரு விமானத்திலும் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தனர்.


சென்னையில் எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வரையிலான விமான நுழைவுச்சீட்டு மட்டுமே கொடுத்தனர். ரோமானியா செல்ல வேண்டிய நுழைவுச்சீட்டை ஃப்ராங்க்ஃபர்டில் தான் வாங்க வேண்டும்.



சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கு கிளம்பிய விமானம் 6:30 மணியளவில் துபாயை அடைந்தது. வழக்கமாகவே துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருக்கும். அதுவும் ஐரோப்பா செல்லும் விமானங்கள் என்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்கான அடுத்த விமானம் 8 மணிக்கு என்பதால், கொஞ்சம் விரைவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு நான் ஏற வேண்டிய இடத்திற்கு 7 மணிக்கே சென்று விட்டேன்.


அங்கே கதவைத் ( கேட் ) திறந்தனர். முதலில் வயதானவர்கள் வரிசையில் நின்றனர், பிறகு நான். எனது முறை வந்தது, அங்கே நின்றிருந்த பரிசோதகரிடம் எனது கடவுச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டைக் கொடுத்தேன். அவர்


"உங்களிடம் சரியான விசா இல்லியே" என்றார்.
"சரியான விசா இருக்கிறதே! எனக்கு ரோமானியா செல்வதற்கான விசா உள்ளதே! அதுவும் மல்டிபுல் என்ரி" என்றேன்.
"இல்லை நீங்கள் செல்வது ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக. ஆகவே உங்களுக்கு ஜெர்மனி நாட்டிற்கான செங்கன் (SCHNEGEN) விசா தேவைப்படுமே" என்றார்.

"நான் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரோமானியா விமானம் ஏறும் வரையில் மட்டுமே இருக்கப் போகிறேன். விமான நிலையத்தக் கடக்கும் பயணிகளுக்கு ( TRANSIT PASSENGER) விசா தேவையில்லேயே.. இங்கே நான் துபாய் விமான நிலையத்தில் உள்ளேன். ஆனால் என்னிடம் இந்த நாட்டிற்கான விசா இல்லையே" என்றேன்.
"உங்களுக்கு ரோமானியாவில் இருந்து வந்த அழைப்பிதழைக் காட்டுங்கள்" என்றார்.


நான் எனக்கு வந்திருந்த அழைப்பிதழ், தங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட விடுதியின் பதிவுச்சீட்டு, எனது அலுவலக அடையாள அட்டை அனைத்தையும் காண்பித்தேன். அனைத்தையும் பார்த்தவர்...


"நீங்கள் அங்கே ஓரமாக நில்லுங்கள்! பிற பயணிகளைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்" என்று சென்று விட்டார்.


நான் ஓரமாக நின்று கொண்டிருக்க விமானப் பயணிகள் அனைவரும் என்னை ஏற இறங்க பார்த்து விட்டுச் சென்றனர். இடையில் நான் சென்னையில் உள்ள எங்கள் அலுவலக பயண ஒருகிணைப்பாளரைத் தொடர்பு கொண்டால், "உங்கள் விசா செல்லும்" என்றார்.

விமானத்தில் ஏறுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.என்னிடம் பேசிய பரிசோதகர் மீண்டும் வராததால் வேறொரு பரிசோதகரிடம் சென்றேன். அவர் முதலாமவரிடம் கைப்பேசியில் பேசிவிட்டு

" நீங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். நீங்கள் ஏற்கனவே பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர், முன்பு செங்கன் (SCHNEGEN) விசாவும் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திற்குச் செல்ல விசா தேவை என்று தெரியாது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மீறி உங்களை அனுமதித்தால் உங்களுக்குத் தான் பிரச்சனை.." என்றார்..

"எனக்குத் தெரிந்த வரை கடக்கும் பயணிகளுக்கு விசா தேவையில்லை. விமானம் புறப்படும் நேரமாகிறது, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்" என்றேன்.

"உங்களுக்கு இவர் உதவுவார்" என்று இன்னொருவரைக் கைகாட்டி விட்டு சென்று விட்டார். நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப என்னை துபாய் விமான நிலையத்தின் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே, எனது கடவுச்சீட்டை வாங்கிவிட்டு ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். ஓரிரு மணி நேரம் ஆகியும் எவரையும் காணவில்லை. கையில் கடவுச்சீட்டும் இல்லை. இயற்கை அழைப்பிற்குக் கூட செல்ல முடியாத நிலை.

சில மணி நேரம் கழித்து, ஒரு அலுவலர் வந்தார்.

"உங்களுக்கு இன்று இரவு வியன்னா (ஆஸ்டிரியா) வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

"ஆஸ்டிரியாவும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள நாடு. வியன்னா விமான நிலையத்திற்குச் செல்ல செங்கன் (SCHNEGEN) விசா வேண்டாமா?" என்றேன்.

"வியன்னா வழியாகச் செல்ல தேவையில்லை" என்று மழுப்பியவர், "உங்களுக்கு இன்றிரவு விமான நேரம் வரைத் தங்க மில்லேனியம் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். துபாய் விசாவும் தரவுள்ளோம்" என்றார்.

துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது இது தானா என்று நினைத்துவிட்டு, துபாயை அங்கிருந்த நண்பர்களுடன் சுற்றிப் பார்த்தேன்.

எனக்கு வியன்னா வழியாக பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, துபாய் - வியன்னா- புகாரஸ்ட் - க்ளூச் என்றிருந்தது. பிறகு துபாயிலிருந்து கிளம்பிய நான், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் க்ளூச் நகரைச் சென்றடைந்தேன். கையில் போதுமான அளவு ஈரோ நோட்டுகள் வைத்திருந்ததால் இடைப்பட்ட வேளையில் சாப்பாட்டிற்குக் கவலையில்லாமல் போனது. ஆனால் எனது கைப்பையில் மடிக்கணினியைத் தவிர வேறொன்றும் கொண்டு வரவில்லை! பயணம் தாமதமானதால் துபாயில் ஒரு சட்டையை வாங்கிக் கொண்டேன்.

எனது பயணம் தாமதமாகிறது என்பதை ரோமானியா நண்பர்களிடம் கூறியிருந்ததால் நான் பார்க்க வேண்டிய வேலையையும் தள்ளிப் போட்டிருந்தனர். இந்தப் பிரச்சனை ஆகியிருந்ததால், எங்கள் அலுவலக பயண ஒருங்கிணைப்பாளர் திரும்பி வரும்போதும் வியன்னா வழியாகப் பயணச்சீட்டைப் பதிவு செய்து கொடுத்தார்.

சென்னைக்கு வந்த பிறகு துபாய் விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

எனது அடுத்த ரோமானியா பயணத்தின் எகானமி வகுப்பு பயணச்சீட்டுகளை முதல் வகுப்பிலும் உயர் வகுப்பிலும் வருமாறு ஏற்பாடு செய்தனர். ஆக, என்னை விமானத்தில் ஏற விடாமல் தடத்தது அவர்கள் தவறு தான்! அதற்கான காரணம் இருக்கைகள் அளவிற்கு மீறிப் பதிவு செய்ததாகவோ ( Over Booking ) கவனக்குறைவோ இருக்கலாம்.

எனது மன உளைச்சலுக்கு அவர்கள் கொடுத்த இழப்பீடு முதல் வகுப்புப் பயணச்சீட்டு! ஆனால் வீணான ஒரு நாள்? தாமதமான பணி? எனக்காக் காத்திருந்தோரின் நேரம்?

இது போன்ற நிலைமை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என் பட்டறிவைப் பகிர்கிறேன்..

* நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

* முடிந்தால் அவர்களது வலைத்தளத்தில் இருந்தோ அல்லது அந்நாட்டுத் தொடர்பு மையத்திலிருந்தோ சட்ட திட்டத்தைப் பற்றி ஒரு நகலை எடுத்துக் கொள்வது நல்லது.

* கைப்பையில் குறைந்தது ஒரு நாளிற்குத் தேவையான உடைகள் வைத்திருப்பது நல்லது.

* ஓரிரு நாட்கள் பயணம் தாமதமானாலும் செல்விற்குத் தேவையான பணம் வைத்திருப்பது நல்லது.

* ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்திருக்கவும்.

* உங்கள் அலைபேசி எண்ணிலிருந்து வெளிநாடுகளில் இருந்தும் பேசுவதற்கு ஏதுவாக ரோமிங் வசதியை துவக்கி வைக்கவும்.

* நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பதவி வகித்தாலும், நீங்கள் வளரும் (ஏழை ) நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மனதில் கொள்ளவும். எந்த ஐரோப்பிய விமான நிலையமானாலும் நமக்கு சிறப்பு பாதுகாப்பு சோதனை தான். ஆகவே நம்மை மட்டும் தனியாக சோதனையிடுகிறார்கள் என்று பயப்பட வேண்டாம்.

* நீங்கள் எத்தனை முறை அந்த நாட்டிற்கு சென்றிருந்தாலும், உங்கள் அழைப்பிதழ், அழைத்தவர் தொடர்பு எண் போன்றவற்றை வைத்திருக்கவும்.

* நீங்கள் செல்லும் நாட்டின் விமான நிலையத்தில், குடியேறல் சுங்க சோதனை செய்த பின்னரே உங்கள் பெட்டிகளை எடுக்க முடியும். ஆகவே, உங்கள் கோப்புகள் அனைத்தையும் உங்கள் கைப்பையில் (ஹாண்ட் பாக்காஜ்) வைக்கவும். சுங்க சோதனையின் போது கேட்டால் கொடுக்க வேண்டியிருக்கும்.

* நீங்கள் செல்லும் நாட்டில் என்னென்ன மருத்துவ சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்து எடுத்து வைத்திருப்பது இன்றியமையாதது.

* முக்கியமான இந்த சட்டத்தை நினைவில் கொள்வது முக்கியம் - உங்களிடம் விசா உள்ளது என்பதற்காக உங்களை அந்த நாட்டில் அனுமதிப்பார்கள் என்று எண்ண வேண்டாம். சுங்க சோதனையாளருக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பொருத்தே அந்த நாட்டில் அனுமதிப்பதும்.

இப்படி வெளிநாட்டிற்குப் போக வேண்டுமா? என்றால், இன்றைய சூழ்நிலையில் அயல் நாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாதது. நல்ல முன்னேற்பாடும் நல்ல நேரமும் இருந்தால் பயணம் இனிதாக இருக்கும்.

உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழிஷ்லயும் தமிழ்மணத்திலும் வாக்களியுங்கள். உங்கள் அனுபவங்களையும் கீழே பதியுங்கள்.

46 comments:

சென்ஷி said...

அவசியமான பதிவு செந்தில்.. நன்றி பகிர்விற்கு!

Boston Bala said...

நன்றி!

நாகா said...

நீங்கள் பட்ட கஷ்டம், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது :)

☀நான் ஆதவன்☀ said...

உங்களிடம் இருந்து மற்றுமொரு அவசியமான பதிவு செந்தில். இதுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றதில்லை. இனி கவனம் கொள்கிறேன்.

தமிலிஷ்ல பதிவு செய்யலையா? தமிழ்மணத்தில ஓட்டு போட்டாச்சு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சென்ஷி.. நன்றி!

வாங்க பாலா. முதல்முறையா வந்திருக்கீங்க நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
நாகா said...
நீங்கள் பட்ட கஷ்டம், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது :)
//

ஆமாம் நாகா.. எனக்கு இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் உள்ளது :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஆதவன். நன்றி. தமிழிஷில் காலையில் இணைக்கிறேன்.

துபாய் ராஜா said...

நானும் இதுபோல பலமுறை அனுபவப்பட்டுள்ளேன். அடிக்கடி வேலை விஷயமாக பல நாடுகளுக்கு செல்வதை 'குருவி'யாக இருப்பார்களோ என்ற கண்ணோட்டத்திலும் விமான நிலைய அதிகாரிகள் பார்ப்பார்கள்.

Unknown said...

well said, update your experience in english, have to pass some foreigners too..
நன்றி..

பினாத்தல் சுரேஷ் said...

உபயோகமான விஷயங்கள். நன்றி :-)

நட்புடன் ஜமால் said...

பட்ட கஷ்ட்டத்தை எழுத்து வடிவமாக்கியுள்ளது நன்றாக இருக்கின்றது.

அவசரத்துல இதெல்லாம் எங்கே ஞாபகம் வருப்போகுது போங்கோ ...

அது ஒரு கனாக் காலம் said...

வித்யாசமான அனுபவங்கள் ... முக்கியமாக நல்ல ஆலோசனைகள்...மறுபடியும் ஒரு நல்ல பதிவு.

சென்ஷி said...

இரண்டிலும் ஓட்டுக்களை பதிவு செய்தாகி விட்டது செந்தில் :)

Prathap Kumar S. said...

நல்ல பதிவு.

உங்களை பிடிச்சவுடனே "இந்தா பிடிச்சுக்க லஞ்சம்"னு சொல்லி ஏதாச்சம் கொடுத்துருக்கலாமுல்ல நம்ம வடிவேலு மாதிரி.. உங்களுக்கு விவரம் பத்தாது

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க துபாய் ராஜா. நீங்கள் சொல்வது ஓரளவு சரி. அதற்குத்தானே அழைப்பிதழ், அடையாள அட்டை எல்லாம் காண்பிப்பது!

வாங்க ஆகாய மனிதன். கண்டிப்பாக எழுதுகிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பினாத்தலாரே.. நன்றி!

//நட்புடன் ஜமால் said...
பட்ட கஷ்ட்டத்தை எழுத்து வடிவமாக்கியுள்ளது நன்றாக இருக்கின்றது.

அவசரத்துல இதெல்லாம் எங்கே ஞாபகம் வருப்போகுது போங்கோ ...//


வாங்க ஜமால்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சுந்தர் சார். மிக்க நன்றி

தங்கள் ஆதரவிற்கு நன்றி சென்ஷி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
விமர்சகன் said...
நல்ல பதிவு.

உங்களை பிடிச்சவுடனே "இந்தா பிடிச்சுக்க லஞ்சம்"னு சொல்லி ஏதாச்சம் கொடுத்துருக்கலாமுல்ல நம்ம வடிவேலு மாதிரி.. உங்களுக்கு விவரம் பத்தாது
//

வாங்க விமர்சகன்.. நீங்க சொல்றதுக்குப் பேரு சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதோ?
:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பின்னூட்டம் இடுவதில் சிக்கல் இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள்.. எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. முயற்சி செய்து பார்க்கவும்.. நன்றி.

Unknown said...

அருமையான தகவல் செந்தில்

நன்றி

துளசி கோபால் said...

நல்ல பதிவு செந்தில்.

கூடவே கொண்டுபோகும் கேபின் பேகில் நாலைஞ்சு உடைகளை வச்சுக்கறது என் வழக்கம். பெரிய பொட்டிக் காணாமப்போகும் சான்ஸ் நிறைய இருக்கே.

ட்ரான்ஸிட் லவுஞ்சுலே இருக்கவும் விஸா வேணுமுன்னு சொல்றதை இப்பத்தான் முதல்முறையாக் கேள்விப்படறேன். இனிக் கவனமாத்தான் பயணிக்கணும் போல

கோபிநாத் said...

நல்ல பதிவு தல ;)

Anonymous said...

எங்கண்ணா வேல பாக்கிறீய எனக்கு ஒரு வேல போட்டுக் குடுங்க சார் ஒங்க பர்சனல் அசிஸ்டெண்டா...?

ஆர்வா said...

மிக நல்ல உபயோகமான பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

சேம் பிளட். இதே எமிரேட்ஸ் விமான நிறுவனம் இதே மாதிரி எனக்கு ஹாலந்த் போகும்போது துபாயில் நிறுத்தி அல்வா குடுத்தது.

Mahesh said...

3 மாசம் முன்னால நண்பர் ஒருத்தர் ஸ்விஸ்தான் schengen-ல சேந்துருச்சேன்னு லக்சம்பர்க் போக, வழில பேசல் தாண்டின உடனே ட்ரெய்ன்ல செக் பண்ணி இறக்கி விட்டு... ஒரு ராத்திரி ஸ்டேஷன்ல உக்காத்தி (லாடம் கட்டல...) வெச்சு மறு நாள் 'அரசு விருந்தினர்' மாதிரி கார்ல கூட்டி வந்து பத்திரமா ஸ்விஸ் பார்டர்ல இறக்கி விட்டுட்டுப் போனாங்க.

geethappriyan said...

லேனா தமிழ்வாணன் போல அருமையான பயணக்கட்டுரை.
உபயோகமான டிப்சுகள். ஐரோப்பிய பணயணம் குறித்து ஒரு பதிவு போட்டு அதகளப் படுத்தவும்.
பணம் இல்லாத நிலைமையில் கைகொடுப்பது கடன் அட்டைகள்.
அவற்றை ஒருவர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
எனக்கு அதுபோல நிறைய கை கொடுத்துள்ளது.
ஆஸ்த்ரேலியா செல்பவர்கள் துளசி,விதை பொருட்கள்.வறுக்காத உணவு பொருட்கள் ,பாதாம்,முந்திரி கொண்டு செல்லக் கூடாதாம்.
1000டாலருக்கு அதிகமாக பரிசுப் பொருளும் கொண்டு செல்லக் கூடாதாம்.
நம்ம நண்பர் சொன்னது.

இராகவன் நைஜிரியா said...

எமிரேட்ஸ் சர்வீஸ் வர வர கழுதை மாதிரி ஆகிட்டு இருக்கு. வீல் சேர் அசிஸ்டெண்ஸ் போட்டது காணம போகுது, வெஜிடேரியன் ரிக்வெஸ்ட் காணாம போகுது, சீட் நம்பர் ரிசர்வ் செஞ்சது காணம போகுது. சர்வீஸ் மட்டமா ஆயிட்டு இருக்கு. Etihad சர்வீசை கூடுதலாக்கினால் இவங்க காணமபோயிடுவாங்கன்னு நினைக்கின்றேன்.

Jazeela said...

நல்ல பதிவு செந்தில்.

//எனது மன உளைச்சலுக்கு அவர்கள் கொடுத்த இழப்பீடு முதல் வகுப்புப் பயணச்சீட்டு! // அதுமட்டுமா //மில்லேனியம் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். துபாய் விசாவும் தரவுள்ளோம்// இதுவும் கிடைத்ததே. ஏதோ நீங்க ஒருநாள் தாமதமாக போக வேண்டும் என்று இருந்திருக்கிறது. எல்லா விஷயத்திலும் ஏதாவது ஒரு நன்மை ஒளிந்தே இருக்கும்.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

sakthi said...

உபயோகமிக்க பதிவு

முஹம்மது said...

அற்புதமாக எழுதியுள்ளீர்கள். அப்படியே தயவு செய்து சென்னையில் இருந்து துபாய் செல்லும் போது விமாண நிலையத்தில் என்னென்ன மேற்க்கொள்ள வேண்டுமென்பதையும் சொல்லவும். என் போன்று புதிதாக அயல் நாட்டு பயணம் செய்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

thevaiyaana thagaval. nandri

***

etthana varudatthukku munnaadi nadanthathu ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றி பிரதீப்

வாங்க துளசி கோபால்! நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கோபி.. நன்றி

வாங்க கவிதை காதலன்! நன்றி

//
எம்.எம்.அப்துல்லா said...
சேம் பிளட். இதே எமிரேட்ஸ் விமான நிறுவனம் இதே மாதிரி எனக்கு ஹாலந்த் போகும்போது துபாயில் நிறுத்தி அல்வா குடுத்தது
//

வாங்க எம்.எம். அப்துல்லா, சேம் பிளட்டா?

கரவைக்குரல் said...

உண்மையில் உங்கள் அனுபவத்தினூடாக பகிர்ந்த பதிவு மற்றோர்களுக்கும் சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

என்ன தான் பெரிய பதவி, செல்வந்தனாக இருந்தாலும் எங்கிருந்து செல்கின்றோம் என்பது அவரவர்களுக்கு நினைவிலிருக்கவேண்டும், உண்மைதான்.ம்ம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன்! நீங்க சொன்ன ஆயிரம் டாலர் எல்லாம் நான் சொல்ல மறந்துட்டேன். நன்றி

வாங்க இராகவன் அண்ணா, நீங்க சொல்றது சரி தாங்க. ஆனா நீங்க கேட்ட சிறப்பு வசதிகள் வரலங்கறது மோசமான ஒன்னு தான்.

மாயாவி said...

உங்களுக்கு சென்னை விமானநிலையத்தில் நடக்கும் இன்னொரு கூத்து தெரியுமா? வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் (குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்கள்) இந்தியாவில் எந்த விமானநிலையத்தில் வந்து இறங்குகிறார்களோ அதே விமானநிலையத்தில் இருந்துதான் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறலாம்.

உதாரணம்: திருச்சியில் விமானநிலையத்தில் வந்திறங்கினால் சென்னை விமானநிலையத்தினூடாக இந்தியாவை விட்டு வெளியேற முடியாது. திருச்சியிலிருந்தே வெளியேற வேண்டும். கனேடிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் எனது உறவினர், நண்பர்களுக்கு இப்படி நடந்ததால் நான் சென்னையில் இறங்கி சென்னையிலிருந்தே வெளியேறினேன். எனது நண்பர் மும்பாயில் இறங்கி சென்னை மூலமாக வெளியேற முயன்றபோது மும்பை விமான நிலையம் மூலமாக வெளியேறும்படி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர் புதிதாக ஒரு டிக்கட் வாங்கி நான்கு நாட்கள் கழித்து வந்தார்.

ஏன் என்று காரணம் கேட்டால் யாரும் சரியாக பதில் தருகிறார்கள் இல்லை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜெஸிலா, நீங்க சொல்றது சரி தான். துன்பத்திலும் ஒரு இன்பம்ங்கற மாதிரி எனக்கு துபாய் விசா கிடைச்சது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சக்தி. நன்றி

வாங்க முகம்மது! கண்டிப்பா எழுதறேங்க..

ஜியா said...

அமெரிக்க விசா நீட்சியில் இருந்தால், சில ஐரோப்பிய நாடுகளில் (இங்குலாந்து, ஃப்ரான்ஸ்) ட்ரான்ஸிட் விசா எடுக்க வேண்டி இருக்கும். ஆனா, ஃப்ரான்க்ஃபர்ட்ல அந்த பிரச்சனைகளெல்லாம் இல்ல.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பித்தன். நன்றி!

வாங்க கரவைக்குரல் தினேஷ்! வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

வாங்க மாயாவி! நம்ம ஊர்ல நடக்கறது வித்தியாசமானதா இருக்கும் போல?

Anonymous said...

Hi,

That was a wonderful lesson for us from your experience!!!


Thanks for sharing.

Althaf.

Sundari said...

எல்லா விஷயம் தெரிஞ்சு போறவங்களுக்கே இவ்வளவு சிரமம்ன்னா..முதல் தடவையா போறவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க...ஆங்கில அறிவு இல்லைனா இன்னுமே கஷ்டம்தான்..

shahul said...

நல்ல அனுபவக்கட்டுரை நண்பரே..

இதைப்படிக்கும் பொழுது எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறது. அழைப்பிதழை கைபேக்கில் வைத்துக்கொள்வது நல்லது.
நானும் ஒரு மணிநேரம் ஜெர்மன் பிரங்க்போர்ட் ஏர்போர்ட்டில் உட்கார்ந்திருந்தேன், அழைப்பிதழ் கையில் இல்லாததால். கூட வந்த ஒரு நண்பரின் சிறு தவறால் அவ்வாறு நேர்ந்தது. விசா ஸ்டாம்ப் ஆகி இருந்தாலும் எல்லா பேப்பரையும் கையில் வைத்துக்கொள்வது நல்லது.

சதீஷ் said...

//முடிந்தால் அவர்களது வலைத்தளத்தில் இருந்தோ அல்லது அந்நாட்டுத் தொடர்பு மையத்திலிருந்தோ சட்ட திட்டத்தைப் பற்றி ஒரு நகலை எடுத்துக் கொள்வது நல்லது.//

(சட்ட திட்டத்தை) - இதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

Related Posts with Thumbnails