Tuesday, September 8, 2009

எது முக்கியம்?


நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

காலையில் எழுகிறோம், அலுவலகத்திற்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச் செய்கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு தூங்கச்செல்கிறோம்.

நம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.

நமக்காக நாம் என்ன செய்கிறோம்?

எனக்கு அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டிற்கு வேண்டியதெல்லாம் வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

சரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

உங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா? உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா? உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?


முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம்.

அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.
2. முக்கியமானவை, அவசரமற்றவை
3. முக்கியமற்றவை, அவசரமானவை
4. முக்கியமற்றவை, அவசரமற்றவை.

* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம் மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க இயலாது.

* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.

* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், சுவரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமானவையில் சேர்க்கலாம்.

* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால் நமக்கோ நமது முன்னேற்றத்திற்கோ எந்த வகையிலும் பயனில்லை.

இந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்?


பெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.

எப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம்? நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது மேலதிகாரியின் தவறா?

நம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பழு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா?

குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில் பதவி உயர்விற்குத் தயாராகலாம். குடும்பத்திற்கு தேவையானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

இப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன? நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா?


இன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.


ஆனால் இதனால் என்ன பயன்?


நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும் அது நாம் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

இதுவே பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்திற்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பதிவுலகம், சமூக வலையமைப்புகள் போன்றவை எல்லாம் முக்கியமற்றவை அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எழுத்துலகில் அடியெடுக்க நினைக்கும் சிலருக்கு மட்டுமே பதிவுலகம் பெருமளவில் உதவும்!!
உடனுக்குடன் பின்னூட்டமிட வேண்டும், தினமும் பதிவெழுத வேண்டும் என்பதைத் தவிர்த்து விட்டு நேரமிருக்கும் பொழுது பின்னூட்டமிடலாம், பதிவெழுதலாம் தானே!!

முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.

எது முக்கியம்? முடிவெடுங்கள் நண்பர்களே!

** இந்தக் கட்டுரை STEPHEN R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது!

**

20 comments:

கிளியனூர் இஸ்மத் said...

செந்தில்...! அண்ணாச்சிக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்க......அவர் ஆரம்பிச்சாரு நீங்க முடிச்சிட்டிங்க..........

கிரி said...

நல்ல பதிவு செந்தில்

ஈரோடு கதிர் said...

நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளில் அதிகம் பயன்படுத்திய ஒன்று

எளிய தமிழில் அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்

பாராட்டுகள் செந்தில்

க.பாலாசி said...

//பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்திற்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.//

யோசித்து பார்க்கவேண்டிய விசயம்...ஆயினும் வலையுலகம் என்பது பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி சில நல்ல விசயங்களையும் கற்றுத்தருகிறது. அது நமது சுய முன்னேற்றத்திற்கும் பயன்படும் விசயங்கள்தான். முதலில் சுயமுன்னேற்றம் என்பது பொருளீட்டுவதை மட்டுமே மையமாக கொண்டது இல்லை. சுயமுன்னேற்றம் என்பது நற்பண்புகளையும், தனிமனித ஒழுக்கங்களையும் உள்ளடக்கியது. அது நமது இணையத்தில், பதிவுலகத்தில் நிறைய கிடைக்கிறது. எல்லோருமே இதை ஒரு வேலையாக செய்வதில்லை. வெகுசிலரே இதே வேலையாக இருக்கிறார்கள். பலர் தங்களது அலுவலகப்பணிகளிக்கிடையேதான் இதைபோன்றதொரு தேடலில் இருக்கிறார்கள்.

//உடனுக்குடன் பின்னூட்டமிட வேண்டும், தினமும் பதிவெழுத வேண்டும் என்பதைத் தவிர்த்து விட்டு நேரமிருக்கும் பொழுது பின்னூட்டமிடலாம், பதிவெழுதலாம் தானே!!//

இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்...ஏற்றுக்கொள்கிறேன்...

//முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.//

சரிதான்....

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு அன்பரே...

ப்ரியமுடன் வசந்த் said...

//உடனுக்குடன் பின்னூட்டமிட வேண்டும், தினமும் பதிவெழுத வேண்டும் என்பதைத் தவிர்த்து விட்டு நேரமிருக்கும் பொழுது பின்னூட்டமிடலாம், பதிவெழுதலாம் தானே!!//

சரிதான்....

ப்ரியமுடன் வசந்த் said...

//இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.//

கரெக்ட்டு......

நல்ல சிந்தனைகள் அண்ணா......

vasu balaji said...

நல்ல கருத்துக்கள்தான். நன்றி.

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்
மிகவும் அவசியமான பதிவு.
எனக்கும் இதெ சிந்தனை இருக்கிறது.
உண்மயிலேயே பதிவுலகம் ஒரு வசிய மருந்து தான்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

கோபிநாத் said...

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு தல ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//கிளியனூர் இஸ்மத் said...
செந்தில்...! அண்ணாச்சிக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்க......அவர் ஆரம்பிச்சாரு நீங்க முடிச்சிட்டிங்க..........
//

வாங்க இஸ்மத் அண்ணே. நம்ம குழுமத்துல இந்தத் தலைப்புல நல்ல விவாதம் செய்ததில் மகிழ்ச்சியே.

வாங்க கிரி. நன்றி

//கதிர் - ஈரோடு said...
நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளில் அதிகம் பயன்படுத்திய ஒன்று

எளிய தமிழில் அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்
//

வாங்க கதிர். ஆமாங்க இந்த விடயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவையே!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

க.பாலாஜி said...

//
யோசித்து பார்க்கவேண்டிய விசயம்...ஆயினும் வலையுலகம் என்பது பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி சில நல்ல விசயங்களையும் கற்றுத்தருகிறது. அது நமது சுய முன்னேற்றத்திற்கும் பயன்படும் விசயங்கள்தான். //

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நம் சுய முன்னேற்றத்திற்கு எந்த அளவு உதவுகிறது என்பது நாம் என்ன துறையைச் சார்ந்தவர் என்பதைப் பொருத்தே என்று நினைக்கிறேன்.

//முதலில் சுயமுன்னேற்றம் என்பது பொருளீட்டுவதை மட்டுமே மையமாக கொண்டது இல்லை. சுயமுன்னேற்றம் என்பது நற்பண்புகளையும், தனிமனித ஒழுக்கங்களையும் உள்ளடக்கியது. //

கண்டிப்பாக சுயமுன்னேற்றம் பொருளீட்டுவதை மட்டும் குறிப்பதல்ல.

//அது நமது இணையத்தில், பதிவுலகத்தில் நிறைய கிடைக்கிறது. எல்லோருமே இதை ஒரு வேலையாக செய்வதில்லை. வெகுசிலரே இதே வேலையாக இருக்கிறார்கள். பலர் தங்களது அலுவலகப்பணிகளிக்கிடையேதான் இதைபோன்றதொரு தேடலில் இருக்கிறார்கள்.//

இணையம் நமக்கு பெருமளவு உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். மின்னாடல், குழுமத்தில் கும்மியடித்தல் போன்றவற்றால் என்ன பயன் என்று தெரியவில்லை.

அலுவலகப் பணிகளுக்கிடையே பதிவுகளைப் புரட்டுவது சரிதானா?

வாங்க பாலாஜி. பல நல்ல கருத்துகளைத் தெரிவித்தமைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வசந்த். நன்றி.

வாங்க வானம்பாடிகள் ஐயா. நன்றி.

வாங்க கார்த்திகேயன். நன்றி.

வாங்க கோபி. நன்றி

சிதம்பரம் said...

நல்ல பயனுள்ள பதிவு செந்தில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சிதம்பரம்! நன்றி

ஜெட்லி... said...

//நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும் அது நாம் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

//


உண்மை தான் ஜி.....

பழமைபேசி said...

இதே கட்டுரை வலையில் வேறொரு இடத்தில், வேறு பாங்கில் இருக்கிறதே தம்பி?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜெட்லி, நன்றி!

வாங்க பழமையண்ணே! சில வெட்டுகள் நடந்துள்ளதை அறிவேன்.

நிலாமதி said...

வாழ்கையை நன்கு அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள் நன்றி பாராட்டுக்கள்.

Jazeela said...

படம் போட்டு பாடம் எடுத்துட்டீங்க. வாழ்க்கை பாடத்தை சொன்னேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நிலாமதி. நன்றி

வாங்க ஜெஸிலா. நன்றி

Related Posts with Thumbnails