Saturday, July 3, 2010

விளையாட்டுகள் எழுப்பும் வினாக்கள்!!


கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் கால் இறுதிச் சுற்று நடைபெறும் நேரத்தில் எங்கும் கால்பந்தாட்டக் காய்ச்சல் தான். எங்கள் அலுவலகங்களில் அடிக்கடி வுவுஜூலாவின் ஒலியும் அதனையடுத்து சிரிப்பொலியும் கேட்கிறது. இந்த உலகக்கோப்பையால் அதிகம் பேசப்பட்ட விசயங்களில் வுவுஜூலாவும் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. 

நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஐரோப்பியர்கள் மற்றும் இதர நாட்டினர் கொடுக்கும் முக்கியத்துவமும் அவர்களது அணி மீதான பற்றும் வியக்க வைக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு இடையேயான போட்டியின் பொழுது பெரும்பாலானோர் அவர்களது நாட்டுக்கொடியையே அலுவலகத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நேரத்தில் கால் இறுதிச் சுற்றிற்குள் நுழைய முடியாத சில நாட்டு அணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை வருத்தத்திற்குரியது. கால் இறுதிக்குள் நுழையாமல் திரும்பிய பிரான்சு நாட்டு அணியினர் உள் நாட்டில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். பிரான்சு நாட்டு அதிபர், "ஏன் முதல் சுற்றைக் கடக்க முடியவில்லை என்பதை ஆய்வு செய்வோம்" என்று கூறியுள்ளார். 

நைஜீரியா நாட்டு அதிபரோ, அந்நாட்டு கால்பந்தாட்ட அணியை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்வதாக உத்தரவிட்டுள்ளார். இத்தனைக்கும் நைஜீரியா இடம்பெற்றது அர்ஜென்டைனா, தென் கொரியா, கிரீஸ் போன்ற பலமான அணிகள் உள்ள குழுவில். இந்த உலகக்கோப்பையில் ஆறு ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றிருப்பதே ஒரு சாதனையாகக் கருதிவரும் வேளையில் இப்படிப்பட்ட உத்தரவுகள் கால்பந்தாட்ட விளையாட்டிற்கே பின்னடைவை ஏற்படுத்தும்.

பன்னாடுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது சர்வதேசக் கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை இணைக்கவும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவே. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்விகளை விட முழுத்திறனுடன் பங்கேற்பதே முக்கியம். இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நாட்டு அதிபர்களே விளையாட்டுகளில் ஏற்பட்ட தோல்விகளுக்கு நடவடிக்கை எடுப்பது விளையாட்டுகளின் மீதும் நாட்டின் மீதும் மக்கள் வைத்துள்ள பற்றே காரணம்.

ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் மக்கள் தொகை சென்னை நகரை விடவும் குறைவு. அந்த நாடுகள் விளையாட்டுகளில் காட்டும் தீவிரம், வீரம் எல்லாம் பார்க்கும் பொழுது வெட்கமாகத்தான் இருக்கிறது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த என் நண்பர் என்னிடம், "இந்தியா ஏன் கால்பந்தாட்டம் விளையாடுவதில்லை?"என்றார். "எங்கள் நாட்டில் கிரிக்கெட்டிற்குத் தான் முக்கியத்துவம் அளிப்போம். மற்ற விளையாட்டுகள் இல்லை. இப்பொழுது பாருங்கள் நாங்கள் அனைவரும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டைத் தான் பார்த்து வருகிறோம்" என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

சரி கிரிக்கெட்டையாவது சரியாக விளையாடுகிறோமா? அணியின் வெற்றி தோல்விகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோமா?

உலகக்கோப்பையில் இரண்டாம் கட்டத்திற்கே தேர்வாகவில்லை என்றாலும் நாங்க இரண்டாம் தர அணியுடன் நடக்கும் விளையாட்டுகளில் வெற்றியடைவோம் என்று மார்தட்டிக் கொள்வோம். தோல்வியடைந்து வந்த அணியில் இருந்து சில புதிய வீரர்களைப் பலிகடாவாக்கி தோல்வியில் இருந்து மீண்டு விடுவோம்.

நாட்டுப்பற்றை விளையாட்டுகளில் காட்டாவிட்டாலும், விளையாட்டுகளை நடத்துவதிலாவது காட்டுவோமா என்றால் அதுவும் கேள்விக்குரியாகவே உள்ளது. காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. கிரிக்கெட் வெறியர்கள் நிரம்பிய நாட்டில், கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரத்தில் எந்த விளையாட்டுப்போட்டிகள் நடந்தாலும் கவ்னிப்பார் அற்றுப் போய்விடும். "இந்தப் போட்டிகளை நடத்தினால் காமன்வெல்த் போட்டிகளின் மீதான ஆர்வம் குறையும்" என்று காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் சுரேஷ் கல்மாடி நம்புகின்றார். 

இந்தியாவிலும் பெரிய அளவிலான போட்டிகளை நடத்த முடியும், இந்தியர்களும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் தான் என்று உலகிற்குக் காட்ட நினைக்கும் சூழலில் இது போன்ற தடையூறுகள் கண்டனத்திற்குரியது. சில ஆயிரம் கோடிகள் செலவில் நடத்தப்படும் நிகழ்வை சில நூறு கோடிகள் வருமானத்திற்காக விட்டுக்கொடுக்க நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை என்ன சொல்வது?

நாட்டைப் பற்றியே கவலை இல்லாதவர் கையில் இந்தியக் கிரிக்கெட் வாரியம். போதாக்குறைக்கு இப்பொழுது ஐ.சி.சி.யும் சேர்ந்துள்ளது. கொடுத்த வேலையையே ஒழுங்காச் செய்யாதவருக்கு சர்வதேசப் பதவி...ஹ்ம்ம்ம்.. உணவுப் பொருட்களின் விலைவாசியேற்றம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் அல்வாவை எத்தனை நாளைக்குத் தான் சுவைப்போம்?

கால்பந்தாட்டப் போட்டிகளில் நாம் பார்க்க நேர்வது விளையாட்டுப் போட்டிகளுடன் நாட்டுப்பற்றையும் தான். ஆனால், இந்தியாவில் நாம் பார்ப்பது தேசப்பற்றை விட தனிப்பட்ட வீரர்களின் சாகசமும் வியாபாரத்தையும் தான்.  இந்தியா மற்ற விளையாட்டுப் போட்டிகளில் எப்பொழுது மேலோங்கும்? விளையாட்டிலாவது தேசப்பற்று வர வாய்ப்பிருக்கிறதா? நம் நாட்டில் எதற்காக அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன?

3 comments:

vasu balaji said...

விளையாட்டு அரசியல்தானுங்க. ஓட்டம், நீச்சல்ல கொஞ்சம் பரவால்லாம இருந்தோம். அதுலையும் இப்போது புகுந்துட்டுது. :(

ஈரோடு கதிர் said...

|| நாட்டைப் பற்றியே கவலை இல்லாதவர் கையில் இந்தியக் கிரிக்கெட் வாரியம். போதாக்குறைக்கு இப்பொழுது ஐ.சி.சி.யும் சேர்ந்துள்ளது.||

இன்னும் சம்பாதிக்கனும்ல


||கொடுத்த வேலையையே ஒழுங்காச் செய்யாதவருக்கு ||

ஒரு வேளை பணத்தையே திம்பாங்களோ


|| உணவுப் பொருட்களின் விலைவாசியேற்றம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் அல்வாவை எத்தனை நாளைக்குத் தான் சுவைப்போம்?||

சொரணை கெட்டவங்க தின்னாலும் திம்பாங்க

sakthi said...

சில ஆயிரம் கோடிகள் செலவில் நடத்தப்படும் நிகழ்வை சில நூறு கோடிகள் வருமானத்திற்காக விட்டுக்கொடுக்க நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை என்ன சொல்வது?

ஒன்றும் செய்ய இயலாது செந்தில்
நடக்கும் கேலிக்கூத்தினை வேடிக்கை பார்க்கலாம் அவ்வள்வே!!!

Related Posts with Thumbnails