Friday, April 24, 2009

பள்ளிக்கூடங்களை மூடுவதால் வேலைவாய்ப்பா?

"ஜப்பானில், பல ஊர்களில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன" என்ற செய்தியைப் படித்தேன்.

நமது நாட்டில், பள்ளிக்கூடங்களில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில், கல்வி கற்போர் எண்ணிக்கை குறைகிறது என்ற காரணத்தால் பள்ளிகள் மூடப்படுவது வியப்பளிக்கிறது.அதே சமயம் இந்த செய்தியை, நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது.

பள்ளிகள் மூடுவது எப்படி நமக்கு வாய்ப்பாகும்?

அதற்கு முன்பு நமக்கு வரும் கேள்வி, வளர்ந்த நாடான ஜப்பானில் படிப்போர் எண்ணிக்கை ஏன் குறையவேண்டும் என்பது தான்.

அங்கே படிக்கும் வயதில் உள்ளோர் குறைவதற்கு, பிறப்பு விகிதம் குறைந்து வருவது தான் காரணம். சராசரியாக அங்கே ஒவ்வொரு பெண்ணும் ஒரு (1.2) குழந்தையைத் தான் பெற்றெடுக்கிறார்களாம். முன்பெல்லாம் தோராயமாக இரண்டு என்று அளவில் இருந்த நிலை இப்போது குறைந்து வருகிறதாம். அதனாலேயே படிப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

"பிறப்பு விகிதம் குறைவது நல்லது தானே, இருக்கும் வளங்களை குறைந்த அளவினர் பங்கிடுவது நாட்டுக்கு நல்லது தானே" என்பது நமது எண்ணமாக இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் பிறப்பு விகிதம் குறைவது நல்லதாகத் தெரிந்தாலும் வேலைக்கு செல்லும் வயதில் இருப்போர் எண்ணிக்கை குறைவது அந்த நாட்டுக்கு நல்லதல்ல.

எப்படி?

ஒரு உதாரணம்...

1975ம் வருடம், ஒரு குடியிருப்பில் 16 இளம் தம்பதியினர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அனைவருக்கும் சராசரியாக வயது 25. வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை 32ஆக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தை (8ஆண்,8 பெண்) என்று 16 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2000ம் வருடம், அதே குடியிருப்புக்குள்ளேயே 16 பேரும் மணமுடிக்கிறார்கள் என்று வைத்தால், குடியிருப்பில் வாழ்வோர் எண்ணிக்கை 48 ஆக இருக்கும். வேலைக்கு செல்லும் வயதில் இருப்போரும் 48 ஆக இருக்கும். மணமுடித்த 8 தம்பதினருக்கும் தலா ஒரு குழந்தை என்று 8 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2010ம் வருடம் பார்த்தால், குடியிருப்பில், 32 பேர் வேலையில் இருந்து ஓய்வடைந்து 16 பேர் மட்டும் தான் வேலைக்கு செல்வார்கள். ஆனால் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 56 பேர் இருப்பார்கள்.

முன்பு 16 பேர் படித்த பள்ளியில் இன்று 8 பேர் தான் படிப்பார்கள். இதனால் தான் பள்ளிகள் மூடப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள குடியிருப்புப்பகுதி உதாரணம் கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், இது தான் ஜப்பான், மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலை!!

ஜப்பான் மக்கள் தொகையின் சராசரி வயது 44 ஆக உள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி என்று பெரும்பாலான ஐரோப்பிய நாட்டு மக்கள் தொகையின் சராசரி வயதும் 40க்கு அதிகமாகவே உள்ளது. இது போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் 1.5 என்ற அளவில் இருப்பதைக் காண முடிகிறது. இதனால், வயதானோரின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.

இதனால் நம் இளைஞர்களுக்கு என்ன வாய்ப்பு?

வருடந்தோரும் ஓய்வடைவோரின் இடங்கள் காலியாவது நமக்கு வாய்ப்பு தானே!! காலியிடங்கள் மட்டும் இன்றி, அதிகமாக ஓய்வடைந்தொர் இருக்கும் நாட்டில் மருத்துவத் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் பெரும்பாலான சேவைத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது 25 தான் என்பதும் 30வயதுக்கு குறைவானோர் 60 கோடி பேர் இருக்கிறோம் என்பதும் தான் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைவது.


உலக நாடுகளில், மக்கள் தொகையின் போக்கு (Demographics) எவ்வாறு இருக்கிறது, சராசரி வயது, அந்நாட்டு மக்கள் எதற்கு செலவிடுகிறார்கள் போன்றவற்றுடன் அந்நாட்டு மொழி, கலாச்சாரம், எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் வரலாம் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் நம் இளைஞர்களால் அரசியல் மூலம் நாட்டையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியவில்லையென்றாலும், இது போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் வீட்டின் பொருளாதாரத்தையும், அந்நிய செலாவனியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியுமே!!

ஆக, ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடுவதாக வந்த செய்தி நமக்கு வாய்ப்பாகத் தானே தெரிகிறது?
இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.

2 comments:

Anonymous said...

Nice one dear

Nithi

ஜோதிஜி said...

உண்மை செந்தில். பலருக்கும் இந்த இலங்கை சமாச்சாரம் பரபரப்பு போல இருக்கிறது. கடைசியில் காமெடி போல ராஜபக்சே. உங்கள் கணக்கு போல் கல்வி அறிவு மட்டும் இருந்து இருந்தால் நாம் அத்தனை பேர்களும் இன்னும் எளிதாய் எத்தனை இடங்களுக்கு பயணித்து இருப்போம். நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். காரணம் படித்து முடித்தவுடன் உங்கள் தமிழ் ஆசிரியர் நினைவில் வருவார்?

Related Posts with Thumbnails