Wednesday, June 24, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".

சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற.. உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவர்க்கு பட்டறிவு அதிகம்" என்பது தான்.

"பட்டறிவு" என்ற தமிழ்ச்சொல்லின் வடசொல்லே "அனுபவம்".

நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளிற்குப் பயன்படுத்துகிறோம்.

வட இந்தியப் பெயர்களில் "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச்சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.

குறிப்பு: "ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!

*********

வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்கமுடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.

காரியம் - செயல்

காரியம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் செயல்.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.

இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?

***********

இலட்சணம் - அழகு

உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணிற்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணிற்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனிற்கு அழகு!!" என்று எழுதலாம்.
***********
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

இன்று, பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.

அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே..

வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்)பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!

**********

பொறியியற் கல்லூரி மாணவர்கள், வெளிநாடுகளில் மேற்படிப்பிற்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும் அதன் அர்த்தங்களையும் மணப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?

அபூர்வம், அவசரம், அவகாசம்,அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? அடுத்த பதிவில் http://senthilinpakkangal.blogspot.com/2009/06/3.html

உங்களுக்கு இந்தப்பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

17 comments:

வினோத் கெளதம் said...

செந்தில் தொடரட்டும் உங்கள் சேவை..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வினோத்கெளதம் said...
செந்தில் தொடரட்டும் உங்கள் சேவை..
//

வினோத், வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி!

கண்ணா.. said...

நிறைய விஷயம் ஆராய்ச்சி பண்ணிருங்கீங்க போல..

ஆனால் சிவமதம் எனும் வழக்கு நான் கேள்வி பட்டதில்லை...

சைவமதம் எனும் பதம் கேள்வி பட்டிருக்கிறேன்...

ஆனால் சைவமதம், சிவநெறி இரண்டும் ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகள் என்றாலும் கூட இரண்டும் தமிழ் சொற்கள் என்றுதான் நினைக்கிறேன்..

நன்றி செந்தில்....இது போல எண்ணங்களை என்க்குள் ஏற்படுத்தியதற்கு

நாகா said...

மிக்க நன்று. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!

jothi said...

நாமும் மற்ற மொழி கலப்பின்றி எழுத, பேச முயற்சிக்க வேண்டும். அதுதான் முக்கியம். நல்ல பதிவு செந்தில் தொடரட்டும் உங்கள் சேவை,.

கலையரசன் said...

நன்றி.. இன்னம்பிற வார்த்தைகளை அறிமுகப்படுத்தியமைக்கு!!

பாலராஜன்கீதா said...

பாராட்டுகள், வாழ்த்துகள் செந்தில்

Anonymous said...

மஹாகவி பாரதி “சொல் வேண்டும். மந்திரம் போன்ற சொல் வேண்டும்” என்றான். குறுகத் தரித்த குறள் ஒரு சிமிழிக்குள் அடைக்கப்பட்ட அறநூல். இறந்தான் என்பதை இறந்துபட்டான் என்று எழுதுவது ஒரு ரூபாய் செலவழிக்க வேண்டிய இடத்தில் ஒன்பது ரூபாய் செலவழிப்பது போல. அதையே மீளாத் துயிலில் ஆழ்ந்தான் என்று சொல்லும்போது இலக்கிய நயம் ஒளிவிடுகிறது.
தமிழின் சாபம் ஒருசொல் போதுமானதாக இருக்கும்போது ஒன்பது சொல்லில் தொடர்கதையாகச் சொல்லுவதும் எதுகை மோனைக்காக பொருளற்ற சொற்களையும் உயிரே இல்லாத சொற்களைப் பயன்படுத்துவதும் தான்.
சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற கலையை எப்பொழுது தமிழ் ஆர்வலர்கள் கற்றுப் பயன்படுத்துகிறார்களோ அன்றுதான் சாபவிமோசனம் கிட்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கண்ணா.. said...
நிறைய விஷயம் ஆராய்ச்சி பண்ணிருங்கீங்க போல..

ஆனால் சிவமதம் எனும் வழக்கு நான் கேள்வி பட்டதில்லை...

சைவமதம் எனும் பதம் கேள்வி பட்டிருக்கிறேன்...

ஆனால் சைவமதம், சிவநெறி இரண்டும் ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகள் என்றாலும் கூட இரண்டும் தமிழ் சொற்கள் என்றுதான் நினைக்கிறேன்..

நன்றி செந்தில்....இது போல எண்ணங்களை என்க்குள் ஏற்படுத்தியதற்கு
//

கண்ணா, தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நாகா said...
மிக்க நன்று. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
//

நாகா, நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//jothi said...
நாமும் மற்ற மொழி கலப்பின்றி எழுத, பேச முயற்சிக்க வேண்டும். அதுதான் முக்கியம். நல்ல பதிவு செந்தில் தொடரட்டும் உங்கள் சேவை
//

ஜோதி, நாம என்ன கலப்பு செய்கிறோம் என்று தெரிந்தாலே நல்லது தானே!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கலையரசன் said...
நன்றி.. இன்னம்பிற வார்த்தைகளை அறிமுகப்படுத்தியமைக்கு!!
//

கலை, உங்க ஆதரவிற்கு எனது நன்றிகள்!

//பாலராஜன்கீதா said...
பாராட்டுகள், வாழ்த்துகள் செந்தில்
//

வருகைக்கு நன்றி பாலராஜன்கீதா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
Anonymous said...
மஹாகவி பாரதி “சொல் வேண்டும். மந்திரம் போன்ற சொல் வேண்டும்”
....
//

நல்ல கருத்து..

தமிழ் said...

இதில் பல தமிழ்ச்சொற்கள் தான்.

இன்னும் சிலவற்றுக்கு காலம் தான் விடை அளிக்க வேண்டும்

கோவி.கண்ணன் said...

சிறப்பான இடுகை.

//அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்//

பூசை என்றும் சொல்லலாம், பூவினால் செய்யப்படுவது பூசை, அதை வடவர் மொழியில் பூஜை என்று திரித்துச் சொல்லுகிறார்கள்.

சாயும் காலம் மருவி சாயங்காலம் ஆகி அதை ஸாயங்காலம் என்று எழுதுகிறார்கள் நமக்கு வடசொல் போல் தெரிகிறது. இவை போல் நிறைய சொற்கள் மருவி இருப்பதால் நமக்கு வடசொல் போல் தோற்றம் தருவது உண்டு.

அப்பும் இழிதலும் என்ற சொல்லின் மருவலே வடசொல்லான அபிஷேகம் என்று இராமகி ஐயா மிக சிறப்பாக நிறுவினார். அப்பு என்றால் தூய தமிழில் நீர் என்றே பொருள், இழிதல் என்றால் இறக்குதல், நீரை மேலிருந்து ஊற்ற அது வழிவதே அப்பு இழிதல் > அபிஷேகம் ஆனது.

அது போல் துருத்தம் எனப்பது ஆற்று நீர் முகப்பின் தமிழ் சொல் திரிந்து வடமொழியில் தீர்த்த(ம்) எனச் சொல்லப்படுகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...
சிறப்பான இடுகை.

//அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்//

பூசை என்றும் சொல்லலாம், பூவினால் செய்யப்படுவது பூசை, அதை வடவர் மொழியில் பூஜை என்று திரித்துச் சொல்லுகிறார்கள்.

சாயும் காலம் மருவி சாயங்காலம் ஆகி அதை ஸாயங்காலம் என்று எழுதுகிறார்கள் நமக்கு வடசொல் போல் தெரிகிறது. இவை போல் நிறைய சொற்கள் மருவி இருப்பதால் நமக்கு வடசொல் போல் தோற்றம் தருவது உண்டு.

அப்பும் இழிதலும் என்ற சொல்லின் மருவலே வடசொல்லான அபிஷேகம் என்று இராமகி ஐயா மிக சிறப்பாக நிறுவினார். அப்பு என்றால் தூய தமிழில் நீர் என்றே பொருள், இழிதல் என்றால் இறக்குதல், நீரை மேலிருந்து ஊற்ற அது வழிவதே அப்பு இழிதல் > அபிஷேகம் ஆனது.

அது போல் துருத்தம் எனப்பது ஆற்று நீர் முகப்பின் தமிழ் சொல் திரிந்து வடமொழியில் தீர்த்த(ம்) எனச் சொல்லப்படுகிறது
//

உங்கள் விளக்கம் மிக அருமை.. நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

அவசியமாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு....என் பக்கத்தில் உங்கள் இணைப்பை கொடுத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள் செந்தில்

Related Posts with Thumbnails