Sunday, June 28, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 5

தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கை பெருகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே!

தமிழார்வமும், தம் கருத்துக்களை எளிதாக நண்பர்களுக்குப் பகிர உதவும் தொழில்நுட்பமும், பதிவுகள் பாராட்டப்படும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மேலும் அதிகமானோரைப் பதிவுலகத்திற்கு வரவழைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், நம்மால் ஐயமில்லாமல் எழுத முடிகிறதா?

"ல,ழ,ள", "ண,ந,ன", "ர,ற" போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதை எடுத்துக்கொள்வோம்.

300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? அல்லது முந்நூறு என்றா?

முன்னூறு - முன்னே வரும் நூறையும், முந்நூறு - மூன்று நூறையும் குறிப்பிடுகிறது.

அதே போல "முன்னாள் (முன் ஒரு நாள் ) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் "முந்நாள் (மூன்று நாள்) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதே!

********

பெரும்பாலானோர்க்கு எண்களைக் குறிப்பிடுவதில் ஐயம் வரத்தான் செய்கிறது.

எண்பது - 80
என்பது - என்று சொல்வது

எண்ணை - Number
எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ( வெண்ணெய் என்று குறிப்பிடுவது சரியா? )

********

இதர னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்...

அன்னாள் - அவள்
அந்நாள் - அந்த நாள்

இன்னார் - இத்தகையர் ( இன்னார் இனியார் என்று எழுதுவோமே)
இந்நார் - இந்த நார் ( இந்நார் இனியார் என்று எழுதினால் எப்படி இருக்கும்?)

********

தமிழக அரசியலில் "சுவரொட்டிகளுக்கு" ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. சுவரொட்டிகளில், நம் கண்ணில் படுவனவற்றுள் "இவண் - செயலாளர் " என்பனவும் ஒன்று. சில சமயம் தவறாக "இவன் - கொ.ப.செ" என்று அச்சிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இவன், இவண் என்ன வேறுபாடு?

இவன் - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம் ( மாற்றி எழுதினால் என்ன ஆகும்?)

ஈந்தாள் - கொடுத்தாள்
ஈன்றால் - பெற்றெடுத்தாள்

உண்ணல் - புசித்தல்
உன்னல் - நினைத்தல்

ஊன் - மாமிசம்
ஊண்- உணவு

கன்னி - குமரி
கண்ணி - கண்ணை உடையவள்

கான் - காடு
காண் - பார்

தின் - சாப்பிடு
திண் - வலிமை

தன் - தனது
தண் - குளிர்ச்சி

மனம் - உள்ளம்
மணம் - வாசனை

இது போன்ற னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி பள்ளிப்பருவத்திலேயே படித்திருந்தாலும், இன்னும் ஒரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே!
***********

"என்னடா ரெடி ஆயிட்டியா?" என்று கேட்பது பழகிப்போன ஒன்று. ரெடியை தமிழாக்கம் செய்யும்போது "தயார்" என்று எழுதுவது வழக்கம். ஆனால் "தயார்" தூய தமிழ்ச்சொல் கிடையாது.

தயார் என்பது "ஆயத்தம்" என்ற தமிழ்ச்சொல்லில் பிறமொழிச்சொல் தான்.
இங்கே தயாரிப்பு, தயாரித்தல், தயாரிப்பாளர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களா?

இதர அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான் தமிழ்ச்சொற்களும்

அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு

சொரிவதற்கும் சொறிவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பொரித்தல், பொறித்தல் - என்ன வேறுபாடு?

அடுத்த பதிவில்...

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

19 comments:

Dr.P.Kandaswamy said...

மிகவும் பயனுள்ள முயற்சி. உங்களுக்கு உள்ள அனைத்து சந்தேகங்களும் எனக்கும் ஏற்படுவது உண்டு. தொடரவும்.

jothi said...

நன்று,. தொடர்ந்து எழுதுங்கள்.

ச.செந்தில்வேலன் said...

//
Dr.P.Kandaswamy said...
மிகவும் பயனுள்ள முயற்சி. உங்களுக்கு உள்ள அனைத்து சந்தேகங்களும் எனக்கும் ஏற்படுவது உண்டு. தொடரவும்.
//

ஐயா, வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி. நமது ஐயங்களில் சிலவற்றை நீக்கவே இந்தத் தொடர்..

ச.செந்தில்வேலன் said...

நன்றி ஜோதி.. ஊக்குவிப்பிற்கு.. :)

sam said...

mmmmmmmmmm very good.keep it up.

அது ஒரு கனாக் காலம் said...

மிகவும் பயனுள்ள பதிவு

அது ஒரு கனாக் காலம் said...

இந்த மூணு சுழி ( இல்லை மூனு ????) ரொம்ப பிரச்சனை எனக்கு, என் அம்மா , நாலாவதோ ..அஞ்சாவதோ தான் படித்திருந்தார்கள், ஆனால் , தமிழில் நிறய தெரியும் நாலடியார், பழமொழி ....என்னை சரி பார்த்து, சரி பார்த்து...அப்பறம், ஒன்னும் பண்ண முடியாதுன்னு விட்டுடாங்க ...அது ஒரு கனா காலம்ங்க.

பழமைபேசி said...

ஆகா.... பல வேலைகளுக்கு இடையில இதைக் கவனிக்காமப் போயிட்டனே? அழகு!

ச.செந்தில்வேலன் said...

//
அது ஒரு கனாக் காலம் said...
மிகவும் பயனுள்ள பதிவு
//

வாங்க... வருகைக்கு நன்றி! மற்ற பதிவுகளையும் படிச்சுப்பாருங்க.

ச.செந்தில்வேலன் said...

//
பழமைபேசி said...
ஆகா.... பல வேலைகளுக்கு இடையில இதைக் கவனிக்காமப் போயிட்டனே? அழகு!
//

வாங்க.. வருகைக்கு நன்றி! மெதுவா மற்ற பதிவுகளையும் படிச்சுப் பாருங்க..

ச.செந்தில்வேலன் said...

//
அது ஒரு கனாக் காலம் said...
இந்த மூணு சுழி ( இல்லை மூனு ????) ரொம்ப பிரச்சனை எனக்கு, என் அம்மா , நாலாவதோ ..அஞ்சாவதோ தான் படித்திருந்தார்கள், ஆனால் , தமிழில் நிறய தெரியும் நாலடியார், பழமொழி ....என்னை சரி பார்த்து, சரி பார்த்து...அப்பறம், ஒன்னும் பண்ண முடியாதுன்னு விட்டுடாங்க ...அது ஒரு கனா காலம்ங்க.
//
ஆமாங்க.. இந்தக் குழப்பத்த தீர்க்கத்தான் இந்தத் தொடர்பதிவு

முகவை மைந்தன் said...

அருமை. இப்பத் தான் தமிழ் சொற்கள் தொடர்பா ஒரு இடுகை சேமிச்சுட்டு வந்தேன் (அறிவன் கிழமை வரும்). கலக்கல். உங்க பதிவைத் தொடரப் போறேங்கோ!

//ஈன்றால் - பெற்றெடுத்தாள்//
ஈன்றாள் தானே வரும்.

தின் என்பது உண்பதைக் குறிக்கும் திண்ணு முடி என்று கொச்சையாகச் சொன்னால்? ஒன்று, ஒண்ணு போன்றவையும் அவ்வாறே.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தான் குறிப்பில் கொள்கிறோம். நீங்கள் மேற்கு மொழிகளிலும் முனைந்திருக்கிறீர்கள். சிறப்பு. மேசை, டெச்க்(desk) க்கு பரிந்துரை ஏதாவது இருக்கிறதா?

கவனம் என்பதும் தமிழான்னு தெரியலை. இந்த இடத்தில் விழித்திருன்னு சொல்லலாம். கவனி அப்படிங்ற இடத்துல உற்று நோக்கு, நோக்குன்னும் சொல்லலாம். மற்ற இடுகைகளையும் பாக்குறேன்.

முகவை மைந்தன் அவர்களே.. வருகைக்கு நன்றி..

கண்டிப்பாக மற்ற பதிவுகளையும் படித்துப் பாருங்கள்

கோவி.கண்ணன் said...

பாக்கி - நிலுவை// மற்றும் மீதம், மீதி, மீந்து

கோவி.கண்ணன் said...

//கவனம் என்பதும் தமிழான்னு தெரியலை. //

இது போன்ற ஐயங்களில் அந்த சொல் வடமொழியில் பயன்படுத்தப் படுகிறதா என்று கவனிக்க வேண்டும்.

:) எனக்கும் சரியாக பிடிபடவில்லை

ச.செந்தில்வேலன் said...

//
கோவி.கண்ணன் said...
பாக்கி - நிலுவை// மற்றும் மீதம், மீதி, மீந்து
//

சிறப்பான விளக்கம்.. அது தான் தமிழின் சிறப்பு..

வினோத்கெளதம் said...

எப்பா எவ்வளவு வார்த்தைகள் ..
நீங்கள் கொடுத்து உள்ள விளக்கமமும் நன்று..

N.Ganeshan said...

மிகவும் பயனுள்ள பலதரப்பட்ட பதிவுகளைத் தருகிறீர்கள். மகிழ்ச்சி. இது போல் தொடர்ந்து மேலும் எழுதி சிறப்புற வாழ்த்துகின்றேன்.

என்.கணேசன்

கலையரசன் said...

அருமையான உதவி..
பின்னே, என்னை மாதிரி தமிழ்
தத்துகுத்துக்கு தமிழ் சொல்லி
கொடுப்பது உதவிதானே!

நன்றி செந்தில் தொடருங்கள்!!

Related Posts with Thumbnails