Friday, June 26, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 3

இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் இருப்பது போல எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லையே என்று நமக்கு ஒரு ஐயம் (சந்தேகம் - வடசொல்) வருவதுண்டு.


எப்படி நீங்கள் pa,pha,ba,bha போன்ற உச்சரிப்புகளுக்கு ஒரே எழுத்து "ப"வை பயன்படுத்துகிறீங்கள்? என்ற கேள்வியை நம்மிடம் நண்பர்கள் கேட்பதுண்டு. நாமும் இந்தக் கேள்வியை ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதுண்டு.


உண்மையில், தூய தமிழ் சொற்களுக்கு இந்த pa,pha,ba,bha என்ற வேறுபாடு தேவைப்படுவதாகத் தோன்றவில்லை.
**********
அபூர்வம், அவகாசம், அவசரம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? எதுவுமே இல்லை.


அபூர்வம் - அருமை


அபூர்வம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் அருமை. ஆனால், மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தால் "அபூர்வம்" என்றும், நன்றாக இருந்தால் அருமை என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.


அவசரம் - விரைவு...


ஆபத்து (துன்பம்) இருக்கும் சூழலிற்கு "அவசரம்" என்ற சொல்லும் (வேகம்) துரிதம் என்ற பயன்பாட்டிற்கு "விரைவு" என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. விரைவுப்பேருந்துகளில் "அவசர கால வழி" (Emergency Exit ) என்று எழுதியிருப்பதைக் காணலாம். இன்று, இதை மாற்றி எழுதினால் நமக்குப் புரியாது என்பதும் இருக்கிறது!


*************


சிகிச்சை - மருத்துவமுறை


"சிகிச்சை" என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் தான் "மருத்துவ முறை" என்று தெரிந்த பிறகு "இந்த மருத்துவமணையில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என்ற விளம்பரத்தை நாம் எப்படி நோக்குவோம்?


*************


திருப்தி - உள நிறைவு, மன நிறைவு


"WORD POWER MADE EASY" என்ற ஆங்கில புத்தகத்தில் ஒவ்வொரு சொல்லும் எப்படி உருவானது என்று அழகாக விளக்கி இருப்பார் ஆசிரியர் நார்மன் லீவிஸ்.


எ.கா. : Calligraphy : Beautiful Writing - Calli - (beautiful), Graphy - (Writing) -
Telegraphy: Distance Writing - Tele - (distance), Graphy - (Writing )
Biography : Life writing - Bio - (Life), Graphy - ( Writing )


இது போல நமது பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பிரித்து உரைக்க சொன்னால் நம்மால் முடியுமா?


"திருப்தி" என்ற வடசொல்லை "உள நிறைவு" என்ற தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் போது மிக எளிதாக (சாதாரண) விளக்கமுடியுமே!!


**************


நமது பயன்பாட்டில் உள்ள பிற வடசொற்களும் அதற்கான தமிழ்ச்சொற்களும் கீழே....


வடசொல் - தமிழ்ச்சொல்
அபூர்வம் - அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி
இலக்கம் - எண்
உபத்திரவம் - வேதனை
ஐக்கியம் - ஒற்றுமை
கஷ்டம் - தொல்லை
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
குதூகலம் - எக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்
சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சிநேகம் - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம் - விடுதலை
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நன்னெறி
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பாரம் - சுமை
பாஷை - மொழி
பிரசாரம் - பரப்புவேலை
பூர்வம் - முந்திய
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள்
ருசி - சுவை
லாபம் - ஊதியம்
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாலிபர் - இளைஞர்
விஷயம் - பொருள், செய்தி
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்
வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
ஸ்தாபனம் - நிலையம்


இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!


வீட்டில் கொண்டாடப்படுவது பண்டிகையா? விழாவா?
பசும் பால், பசுப் பால் - இதன் வேறுபாடு என்ன?
வடசொல் மட்டுமல்ல போர்த்துகீசிய, அரபிய சொற்களும் நமது பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியுமா?

அடுத்த பதிவில்....

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தவறாமல் வாக்களிக்கவும்!

7 comments:

கலையரசன் said...

மேலும் சில தமிழ்சொற்கள்...! நன்றிகோ..
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வருகைக்கு நன்றி கலை..

geethappriyan said...

இந்த தமிழ் சொற்க்களை குறித்துக் கொண்டேன்,கண்டிப்பாக இனி முயன்று பார்க்கிறேன்.
நன்றி நண்பர் செந்தில் வேலன் தங்கள் வலைபூ பார்த்தேன்,பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் வைத்துளீர்கள்.தொடர்ந்து நட்புக்க்கரம் கொடுப்போம்.நீங்களும் துபாயா?இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
//

தங்கள் வலைபூ பார்த்தேன்,பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் வைத்துளீர்கள்.தொடர்ந்து நட்புக்க்கரம் கொடுப்போம்.நீங்களும் துபாயா?இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே?
//

கார்த்திகேயன், நானும் துபாய் தான். கண்டிப்பாக தொடர்பில் இருப்போம். வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

//அபூர்வம் - அருமை//

(மிக) அரிதான என்ற பொருள் வரும் என்றே நினைக்கிறேன்

கோவி.கண்ணன் said...

இரத்தம் - குருதி// மற்றும் உதிரம்
சக்தி - ஆற்றல் // மற்றும் திறன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...
//அபூர்வம் - அருமை//

(மிக) அரிதான என்ற பொருள் வரும் என்றே நினைக்கிறேன்
//

இப்படியும் சொல்லலாம்...

Related Posts with Thumbnails