Friday, September 25, 2009

மொழிகளின் செல்வாக்கு!

உலகெங்கிலும் உள்ள மொழிகளுள் செல்வாக்கானவை எவை?

இந்தக் கேள்விக்கான விடையை இணைய தளங்களில் தேடிய பொழுது பல நல்ல தகவல்கள் கிடைத்தன. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை.

சரி.. செல்வாக்கான மொழிகள் என்று எப்படி வரிசைப்படுத்துகிறார்கள்?

*முதன்மை மொழியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை.
*இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை.
*அலுவலக மொழியாக உள்ள நாடுகளின் மக்கள் தொகை.
*அந்த மொழியைப் பயன்படுத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தின் நிலை.
*வர்த்தகம், அறிவியல், வெளியுறவு போன்ற துறைகளில் மொழியின் பயன்பாடு.
*உலக அளவில் இலக்கியத்துறையில் அந்த மொழியின் நிலை.
*ஐ.நா போன்ற அமைப்பில் அம்மொழியின் நிலை போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு மொழிகளில் செல்வாக்கை கணக்கிடுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான அளவுகோல்களில் ஆங்கிலம் முன்னிலையில் உள்ளதால் ஆங்கிலம் உலகின் செல்வாக்கான மொழியாகிறது.
உலகெங்கிலும் பயன்பாட்டிலுள்ள மொழிகளுள் 10 செல்வாக்கான மொழிகள் என்ற பட்டியல் கீழே வருமாறு:
1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. ஸ்பேனிஷ்
4. ரஷ்ய மொழி
5. அரபி
6. சீன மொழி
7. ஜெருமன்
8. ஜப்பானிய மொழி
9. போர்த்துகீசிய மொழி
10. இந்தி.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ், ஜெருமன், போர்த்துகீஷ் போன்ற ஐரோப்பிய மொழிகள், ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றன. அரபி மொழி மத்தியகிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், ரஷ்ய மொழி முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன.


ஜப்பானிய மொழியை இந்தியை விடவும் குறைவானவர்களே பேசினாலும், அது இந்தியை விட செல்வாக்கான மொழியாக உள்ளதைக் காணலாம். அதற்குக் காரணம் வர்த்தகம், அறிவியல், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்துவதே காரணம். மேலும் இந்த மொழியைப் பயன்படுத்தும் ஜப்பானின் பொருளாதார மேன்மையும் மொழியின் செல்வாக்கிற்குக் காரணம் எனலாம். இதனாலேயே ஒரே ஒரு நாட்டில் பயன்பட்டாலும் நம் கல்லூரிகளிலும் ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுவதைக் காணலாம்.

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை சில வருடங்கள் வரை பயன்படுத்தாமல் இருந்த சீனர்களும், மேற்கத்திய தொழில்துறை வரவுகளாலும், அறிவியல் தொடர்புகளாலும் ஆங்கிலத்தைப் படிக்கவும் பேசவும் ஆரம்பித்துள்ளனர்.

கிரேக்க நாட்டில், ஒரு கொரிய வர்த்தக நிபுனர் பிரேசிலைச் சேர்த்தவருடன் பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்தையே பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. கிரேக்க நாட்டிலோ, கொரியாவிலோ, பிரேசிலிலோ ஆங்கிலம் அலுவல் மொழி கிடையாது. ஆங்கிலத்திற்குக் கிரேக்க மொழி அளவிற்கு வரலாற்றுச் சிறப்போ இலக்கியச் சிறப்போ கிடையாது. ஆனாலும் ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இவை யாவும் எதைச் சுட்டுகின்றன?

செல்வாக்கான மொழிகள் மேலும் செல்வாக்கடையும் என்பதையும், ஒரு மொழி செல்வாக்கான நிலையை அடைய வேண்டுமென்றால் இலக்கியச் சிறப்பு மட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையே சுட்டுகின்றன.

இதை அப்படியே நம் நாட்டில் பயன்பாட்டிலுள்ள மொழிகளைப் பார்த்தால் ஆங்கிலமும், இந்தியும் மிகவும் செல்வாக்கான மொழிகள் எனலாம். பெரும்பாலான மாநிலங்களில் பேச்சு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இவ்விரு மொழிகளும் இருப்பது நாம் அறிந்ததே!!

2007ல் நடந்த எட்டாவது உலக இந்தி மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களில் இந்தியை சர்வதேச மொழியாகவும், ஐ.நா.வின் அலுவல் மொழியாகவும் அறிவித்தல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களிலும் இந்தித்துறையைத் துவங்குதல், வெளிநாடு வாழ் இந்தியர்களில் பிரதான மொழியாக இந்தியைப் பயன்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியைப் பயன்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

இந்திய மொழியொன்று ஐ.நா.சபையில் பயன்படுத்தப்படுவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளும் நிகழ்வே. அதே சமயம், அவரவர் தாய்மொழிக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காவிட்டால் நன்றாகவா இருக்கும்?

பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் (தமிழில்) பதிலளிக்கக்கூடாது என்று கூறியது வருந்தத்தக்கது.

192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல?

தமிழ் போன்ற மொழிகள் செல்வாக்கை இழக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!

அதுவே செல்வாக்கான மொழியாக தமிழையும் வளர்க்க உதவும்!


உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள். இந்தப் பதிவு பிடித்திருந்தால் ஓட்டுக்களைப் போட மறக்காதீர்கள்.

..

31 comments:

Anonymous said...

mika chirappaaka enna solla vendumo athai solli ulleergal.

muthalil nam makkal tamil mozhiyai tham anraada mozhiyaaga payanbaduththattum

ஈரோடு கதிர் said...

செந்தில்......

மிக நுணுக்கமான ஆய்வு முயற்சி...

எதிர்பாராத தளங்களில் உங்கள் இடுகை தொடர்ந்து வருவது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

//பொருளாதார மேன்மையும் மொழியின் செல்வாக்கிற்குக் காரணம் எனலாம்//

இது மட்டும் சரியாக விளங்கவில்லை

RaaKu saamy said...

Thiru Senthil,

Miha miha arumai

kandippaaha nadaimuraip padutha muyaluvom.

Nallathambi

Ashok D said...

மொழியிலேயே ஒன்னு சேரமாட்டாங்க.. உதா: இலக்கியவாதிகள். தனிதனியா group சேர்ந்து குழப்பம் விளைவிப்பார்கள். இதுல பலதுறை எங்கு ஒன்னு சேர்ரது. எல்லாம் தமிழ் நண்டு கதைதான். anyway we hope in future.

U taking things as a SUBJECTS r really gr8. hats off u

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர் - ஈரோடு said...


////பொருளாதார மேன்மையும் மொழியின் செல்வாக்கிற்குக் காரணம் எனலாம்//

இது மட்டும் சரியாக விளங்கவில்லை//

ஒரு மொழியைப் பேசும் நாட்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால், பல நாட்டினரும்
அந்நாட்டைத் தேடிவருவார்கள். அப்பொழுது அந்த நாட்டு மொழியைக் கற்க வேண்டும்.

ஆங்கில மொழியைப் பேசும் அமெரிக்காவின் பொருளாதார நிலை நன்றாக இருப்பதாலேயே பெரும்பாலானோர் அங்கே செல்கின்றனர். அங்கே செல்ல ஆங்கிலம் தேவை தானே?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அனானி அன்பரே, நன்றி.

//கதிர் - ஈரோடு said...
செந்தில்......

மிக நுணுக்கமான ஆய்வு முயற்சி...

எதிர்பாராத தளங்களில் உங்கள் இடுகை தொடர்ந்து வருவது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

//

நன்றி கதிர்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நல்லதம்பி. நன்றி!

வாங்க அசோக். நன்றி!

vasu balaji said...

அருமையான ஆய்வும் தகவலும். வலுவான கருத்துக்கள். அரசின் ஆதரவும், ஈடுபாடும் மட்டுமே இதைச் சாதிக்க இயலும்.

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா மிகவும் கவனமா சிந்தித்து ஆராய்ந்து பார்த்து எழுதியிருக்கிறீர்கள், அரசு கண்டு கொள்ளுமா?

கிளியனூர் இஸ்மத் said...

//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!//

தன் குழுந்தை ஆங்கிலமீடியத்தில் படிப்பதையும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுவதையும் பெருமையாகக் கருதும் பெற்றோர்களுக்கு மத்தியில் நாளைய சமுதாயத் தமிழர்களுக்கு தமிழ்பேசவேத் தெரியாமல்போய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறேன்....என் குழந்தைகளை கட்டாயம் தமிழ்படிக்க வைத்திருக்கிறேன்...

செந்தில்...நீங்கள் தந்த தகவல் அருமை....வாழ்த்துக்கள்...

சென்ஷி said...

மற்றுமொரு மிகச்சிறந்த பதிவு செந்தில்!

இராகவன் நைஜிரியா said...

//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இது நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
யாரும் சொல்லாத ஒன்றை சொல்லத்தோன்றியதே?அதற்காக ஒரு சபாஷ், நம் இந்திய மொழியும் 10ல் ஒன்றாக இருப்பது பெருமை அளிக்கிறது.
ஹிந்திகாரர்கள் ஹிந்தியை வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாம் இனியாவது நம் பிள்ளைகளுக்கு தமிழை அவசியப்பாடமாக ஆவது தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிரைய பிள்ளைகள் ஃப்ரென்சை எடுக்கிறார்கள்.
விட்டால் பிள்ளைகள் இது என்ன எழுத்து என கேட்பர்?அல்லு இல்லை,என் மகளுக்கு பள்ளியில் தமிழ் போதிக்கின்றனராம்,ஹிந்தியும் உள்ளதாம்.

நாமும் எல்லா ஈமெயில்கள்,
எஸ் எம் எஸ்,சாட்டிங்குகளுக்கு தமிழை உபயோகிக்க வேண்டியது தான். நல்ல விழிப்புணர்வு பதிவு போட்டீர்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே. உண்மை. அரசின் ஆதரவு தமிழுக்கு மிகவும் தேவை. நன்றி!

வாங்க வசந்த். நன்றி!

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சென்ஷி. நன்றி!

வாங்க இராகவன் அண்ணே. நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

ஆகா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன். நன்றி!

வாங்க ஆதவன். நன்றி!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல? //

-:))))

nalla pathivu

Unknown said...

அற்புதமான பகிர்வுங்க..

க.பாலாசி said...

//தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும்.//

உண்மைதான் இதைபோன்றதொரு முயற்சிகளில் ஈடுபட்டாலே நமது மொழியின் செல்வாக்கை மேன்மையடைய செய்யமுடியும் என்பதை உணரமுடிகிறது.

நல்ல சிந்தனைப் பகிர்வு அன்பரே...

vanathy said...

நல்ல பதிவு ,நல்ல ஆய்வு நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.அத்துடன் ஒரு மொழி செல்வாக்கு பெறுவதற்கு அரசியல் அதிகாரமும் முக்கியம் ,பொருளாதார அரசியல் ராணுவ வலிமை எந்த இனக்குழுமத்தின் கையில் இருக்கிறதோ அந்த மொழி பேசுபவர்கள் , தங்கள் மொழியின் செல்வாக்கை உயர்த்தவும் பாதுக்காக்கவும் எல்லாவிதமான ஏற்பாடு செய்கிறார்கள். நீங்கள் கூறிய பத்து மொழிகளில் இந்தியும் வந்தது தற்செயலாக இல்லை ,அதற்குப் பின்னால் பெரிய செயல் திட்டங்களும் பணச்செலவும் உள்ளன .இந்தியாவின் மற்ற மொழிகள் இந்தியை விட செழுமையிலோ வளத்திலோ குறைந்தவை இல்லை ,ஆனால் அந்த மொழிகளுக்கு இந்திக்கு இருக்கும் அதிகாரம் அங்கீகாரம் இல்லை நீங்களே சொல்கிறீர்கள் மாநாடு வைத்து இந்தி மொழியை எப்படி ப்ரோமொடே பண்ணலாம் என்று பேசுகிறார்கள் என்று.
ஐநா சபையில் இலங்கை ஜனாதிபதி சிங்களத்தில் பேசக்கொடியதாக இருக்கிறது ஆனால் இந்திய மக்களவையில் இந்தியரான ஒரு தமிழர் தனது தாய் மொழியில் பேச முடியாமல் இருக்கிறது ,வருந்தத்தக்க விஷயம்.
ஐரோப்பிய மொழிகள் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதற்கு அவர்களின் முன்னைய காலனித்துவ ஆட்சிகள் முக்கிய காரணம்.
ஆங்கிலேயர்கள் உலகை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் ஆங்கிலமும் பிரிட்டனில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகவும் ஸ்பானிஷ் மொழி ஸ்பெயினில் மட்டும் நாலு கோடி மக்களால் மட்டும் பேசப்படும் ஒரு மொழியாகவும் இருந்திருக்கும்.
இந்த காலனித்துவ நாடுகள் தங்கள் மொழியின் செல்வாக்கை மட்டுமல்ல மற்றும் எத்தனையோ மொழிகளின் செல்வாக்கையும் தலைவிதியையும் மாற்றி விட்டுத்தான் போயிருக்கிறார்கள்
அந்தக்காலங்களில் அரசர்கள் தமது சாம்ராஜ்ஜியங்களை நிறுவ போர் செய்து ரத்தம் சிந்தி உயிர்களை இழந்து தியாகம் செய்து தான் அவற்றை அடைந்தார்கள் ஆனால் வெள்ளையர்கள் இந்தியாவையும் இலங்கையையும் விட்டுப்போனபோது சிங்களவர்களும் இந்திக்காரர்களும் ஒரு கஷ்டமும் படாமல் மற்றைய இனங்களின் மீது ஆதிக்கம் செலுத்த வசதியாக முழுநாட்டையும் அவர்களுக்கு கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்.அதனால்தால்;வரலாற்றில் ஒரு போதுமே ஹிந்தி பேசும் மன்னர்களின் ஆட்சியில் இருக்காத தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ் நாட்டையும் இன்று தங்கள் மொழியைப் பேசினால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சிங்களவரின் கையில் அரசயல் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்த காரணத்தினால்தான் இன்று அங்கு தமிழ் பேசும் மக்களை அதிகாரம் செய்ய மட்டுமல்லாது அழிக்கவும் கூடியாதாக உள்ளது.
மிகவும் குறைந்த தொகையில் பேசப்படும் நோர்வீஜிய மொழி சுவீடிஷ் மொழிகளுக்கு இருக்கும் செல்வாக்கும் பாதுகாப்பும் பெருந்தொகையான கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழிகளான தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மொழிகள் அரசியல் செல்வாக்கு இல்லாத தமக்கென்று சொந்த நாடு இல்லாத இனங்களால் பேசப்படுவதுதான்.

-வானதி

பிரபாகர் said...

மொழியை வளர்க்கிறோம் என வாய்வழியே மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் இனியாவது திருந்துவார்களா?

மிகவும் நல்ல பதிவு செந்தில்...

உண்மையில் மிகவும் உபயோகமான தகவல்களை அழகாய் பகிர்ந்துகொள்கிறீர்கள்...

பிரபாகர்.

Unknown said...

அருமையான பதிவு செந்தில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஞானப்பித்தன். நன்றி!

வாங்க பட்டிக்காட்டான். நன்றி!

வாங்க பாலாஜி. நன்றி!

சிம்ம‌பார‌தி said...

\\பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் (தமிழில்) பதிலளிக்கக்கூடாது என்று கூறியது வருந்தத்தக்கது.

192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல? \\

அருமையான பதிவு.... நம் மக்களும் அரசாங்கமும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

கலையரசன் said...

நல்ல பதிவு செந்தில்! இந்தியாவில் பேசும் மொழிகளில்.. நாம் 5வது இடத்தில்தான் இருக்கிறோம்! ஆகக் குறைந்தது 2வது இடத்திலாவது வரவேண்டும். பின்பு, நீங்கள் கூறியது போல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றிலும் பரவலாக தமிழை பயன்படுத்தவேண்டும்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வானதி.

நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. நமக்கு ஆட்சியில் அதிக அதிகாரமிருந்தால் தான் நம் மொழிக்கு உரிய இடத்தைத் தர முடியும்.

நமது இன்றைய நிலைக்கு ஆங்கிலேயர்களே காரணம். என்ன செய்ய?

விரிவான கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பிரபாகர். கருத்திற்கு நன்றி!

வாங்க பிரதீப். கருத்திற்கு நன்றி!

வாங்க சிம்மபாரதி. கருத்திற்கு நன்றி!

வாங்க கலையரசன். கருத்திற்கு நன்றி!

Deepa said...

ஆய்வுக் குறிப்புகளுடன் கூடிய அருமையான பதிவு.
இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்.

Jazeela said...

//192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல?// வருந்தக்கூடிய விஷயம். மாற்றம் வருவது குறித்து யார் கவலைப்படுவது :-(

Hussain Muthalif said...

migavum arumaiyana pathivu......

Arasu than pangu aatrukiratho illaiyo.....Thamil pesum makkal matrangalai endha endha vagaiyil sirithu sirithaga yerpadhuththalaam yenpathai patriyum sinthikka vendum.....

Related Posts with Thumbnails