Saturday, June 5, 2010

அமீரகத்தில் கால்பந்தாட்ட உலகக்கோப்பை ஜூரம்!!




கடந்த சில மாதங்களாகவே அமீரகத்தில் உலகக்கோப்பைக்கான விளம்பரங்கள், தென் ஆப்பிரிக்கா சென்று வர பரிசுக்கூப்பன்கள் என்றெல்லாம் உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நகரங்களில் உள்ள வணிக அங்காடிகளில் உலகக்கோப்பைக்கான தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிட்டன.  கால்பந்தாட்டத்தின் முக்கிய ஸ்பான்சர்களின் விளம்பரப் பலகைகள் நகரின் பல இடங்களிலும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில வாரங்களாகவோ உலகக்கோப்பை ஜூரம் பெரும்பாலானோரைப் பற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. நகரங்களில் உள்ள உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உலகக்கோப்பையை பார்த்து ரசிக்க விஷேச ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். 20 பேர் கொண்ட குழு, 12 பேர் குழு என்றெல்லாம் முன்பதிவு செய்து கொண்டால் உணவு வேளையிலோ சீஷா புகைத்துக் கொண்டோ கால்பந்தாட்டங்களைப் பார்க்கலாம். ஐரோப்பிய மக்கள் அதிகமாக வசிக்கும் துபாய் மரினா போன்ற பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் விளையாடும் நாடுகளுக்கு ஏற்ப உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுமாம்.

குடியிருப்புப் பகுதிகளில் சிறுவர்கள் கால்பந்தை உதைத்துக் கொண்டிருப்பது அதிகமாகப் பார்க்க முடிகிறது. கல்லி கிரிக்கெட் போல கல்லி ஃபுட்பாலும் அங்கங்கே பார்க்க முடிகிறது. அமீரகத்தில் அதிகமாக இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிப்பதால் கிரிக்கெட ஆர்வலர்கள் தான் அதிகம். ஆனால், அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் எங்கும் கால்பந்தாட்டம் தான் பிரபலம். சென்ற ஆண்டு எகிப்து அணி ஆப்பிரிக்கக் கோப்பையை வென்றதையடுத்து இரவு முழுவதும் கார்களில் ஊர்வலம் சென்றும் ஒலியெழுப்பியும் கொண்டாடினர். கோவா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் அலுவலகத்தில் கால்பந்தாட்டத்தைப் பற்றி விவாதிப்பதுண்டு.


ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முறையாக உலகக் கோப்பை நடப்பதும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆறு நாடுகள் பங்கேற்பதும் மத்திய கிழக்குப் பகுதிகளில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, அல்ஜீரியா, கானா, கேமரூன், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் சார்பில் விளையாடுகின்றன. பங்கேற்கும் 32 நாடுகளின் வெற்றி வாய்ப்புகளைப் பற்றியும் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டன செய்தித்தாள்கள். அவை.. 

( Odds - 2-1 என்றால் அதிக வாய்ப்பு என்றும். 4000-1 என்றால் குறைந்து வாய்ப்பென்று கொள்க)

1. அமெரிக்க - 80 -1
2. நியூசிலாந்து - 2000-1
3. வட கொரியா- 125-1
4. உருகுவே - 80-1
5. கிரேக்கம் - 150-1
6. இத்தாலி - 14-1
7. போர்ச்சுகல் - 22-1
8. ஸ்பெயின் - 4-1
9. பிரேசில் 4.5-1
10. ஜெர்மனி - 12-1
11. இங்கிலாந்து - 6-1
12. பிரான்ஸ் - 16-1
13. அர்ஜெண்டைனா - 6-1
14. ஜப்பான் - 250-1
15. ஸ்லோவாக்கியா - 250-1
16. கேமரூன் - 100-1
17. ஹாலாந்து - 10-1
18. தென் கொரியா - 200-1
19. டென்மார்க் - 125-1
20. மெக்சிகோ - 80-1
21. நைஜீரியா - 100-1
22. கானா - 80-1
23. பாரகுவே - 80-1
24. சுவிஸ் - 200-1
25. சிலி - 66-1
26.செர்பியா - 50-1
27. ஸ்லோவனியா - 250-1
28. அல்ஜேரியா-400-1
29. ஆஸ்திரேலியா - 125-1
30. ஹொண்டுரஸ் -750-1
31. ஐவரி கோஸ்ட் - 33-1
32. தென்ஆப்பிரிக்கா - 125-1

முதல் கட்டமாக 32 நாடுகளை எட்டு குழுவாகப் பிரித்து லீக் போட்டிகள் ஜூன் மாதம் 11ம் தேதி முதல் நடக்கவிருக்கின்றன. பிரேசில், வட கொரியா, ஐவரி கோஸ்ட், போர்சுகல் அணிகள் உள்ள குழு-G யை Group of Death என்று கூறுமளவிற்கு பலம் வாய்ந்த மூன்று அணிகள் உள்ளன. என்ன தான் வெற்றிவாய்ப்புகளுக்கான ஆருடங்கள் கூறப்பட்டாலும் திடீரென்று எதிர்பாராத வகையில் பலம் வாய்ந்த அணிகள் தோற்பதையும் கடந்த உலகக்கோப்பைகளில் பார்த்துள்ளோம்.

அலுவலக நண்பர்களுக்குள் இப்பொழுதே எந்த அணி வெற்றிபெறும் என்ற விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. என் ஃபேவரிட், அர்ஜெண்டைனா தான். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியாகக் கூறப்பட்டாலும் 1986க்குப் பிறகு கோப்பையை வெற்றிபெறவில்லை. மெஸ்ஸி, மிலிடோ, மராடனா போன்ற சிறப்பான வீரர்கள் இந்த முறை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!!

1986ல் மராடனா (சீனியர்) போட்ட கோலின் காணொளி கீழே..



1986ல் மராடனாவின் புகழ் பெற்ற Hand of God கோலின் காணொளி கீழே..




இதெல்லாம் எழுதுகிறாயே உனக்கும் கால்பந்தாட்டத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்..

அது வந்து பாருங்க.. எங்க ஸ்கூல்ல கேம்ஸ் அவர்ல கால்பந்தாட்டம் தான் விளையாடுவோம். எங்க மைதானம் கிழக்கு மேற்கு வாக்குல அமைஞ்சிருக்கும். எப்பவுமே காத்து நல்லா விசுவிசுனு வீசும். மேற்க இருந்து கோல் கீப்பர் ஒரு கிக் விட்டான்னா காத்து அடிக்கற வேகத்துக்கு அடுத்த கோல் போஸ்ட் வரைக்கும் போகும். நாங்க எல்லாம் பந்தத் துரத்தீட்டே போவோம். 

நாங்க மைதானத்துல கால்பந்து விளையாடினதுல பெரும்பங்கு காத்துக்குத் தான் போயிச் சேரும். கார்னர் கிக் வுட்டம்னா பந்து அப்படியே சுழன்று கோல் போஸ்டுக்குப் போகும். அப்படி ஒரு திறமை, அப்படி ஒரு காத்து!! அதெல்லாம் ஒரு காலம்.


சரி விடுங்க.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. மெஸ்ஸியா, ரூனியா, க்ளோஸா, காகாவா, கிரிஸ்டியானோ ரொனால்டோவா! யார் கலக்குகிறார்கள் என்று பார்ப்போம்!!

3 comments:

geethappriyan said...

இனி திருவிழாதான்
முதலாளிகள் வீட்டுக்கே போகாமல் ஆஃபீஸிலேயே டிவி பார்ப்பார்கள்,இப்போதே led டிவி போட்டாச்சு.நல்ல பதிவுங்க.

vasu balaji said...

பார்ப்போம்:)

அப்துல்மாலிக் said...

நம்ம நாடும் கலந்துக்கொள்ளாதா என்கிற ஆதங்கம் ஒவ்வொரு உலககோப்பையன்றும் தோன்றி மறையும்

Related Posts with Thumbnails