Saturday, March 12, 2011

சின்ன சின்ன நடை நடந்து...

இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின் காட்சியைமைப்புகளும் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால், கடந்த ஓரிரு மாதமாக இணையத்தில் இருந்து பழைய பாடல்கள் பலவற்றைத் தரவிறக்கம் செய்து வருகிறேன், அப்பாவின் விருப்பத்திற்கிணங்க.

முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு தான் கேட்டு ரசித்த பாடல்களை எல்லாம் நினைவுபடுத்தி இணையத்தில் தேடிப்பார்க்கச் சொல்கிறார். நானும் பல தளங்களைத் தேடி அப்பாவின் விருப்பப்பாடல்களை எடுத்துத் தருகிறேன். Cooltoad.com தளம் பல பழைய பாடல்களை எல்லாம் அளித்துவருகிறது. இணையத்தில் கிடைத்த பாடல்களை அவரது செல்பேசியில் சேமித்து வருகிறேன். செல்பேசிகள் டேப்ரெக்காடர்களுக்கு அஞ்சலி பாடிப் பல வருடங்களாகின்றன. 

செல்பேசிகள் வாங்கும் பொழுது ஒரு விசயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செல்பேசிகளின் உள்ள ஹெட்செட் மாட்டும் வசதியை பார்த்துக்கொள்ள வேண்டும். ஹெட்செட் மாட்டும் துழாயின் அளவு 3.5mm  ஆக இருந்தால் வெளியே ஸ்பீக்கரில் சேர்த்துவிடலாம். இன்னொரு விசயம் எத்தனை ஜிபி(GB) மெமரிகார்டை செல்பேசியுடன் இணைக்கமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 3000 ரூபாய் மதிப்புள்ள செல்பேசியில் கூட 16 ஜிபி வரை மெமரிகார்டை இணைத்துக்கொள்ளலாம். பிறகென்ன நூற்றுக்கணக்கான பாடல்கள் உங்கள் கைக்குள்...

*
பழைய பாடல்கள் பலவற்றைத் தேடிப்பிடித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது 'காவேரியின் கணவன்' படத்தில் வந்த இந்த பாடல் தான். பி.சுசீலாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்... கண்கள் சொருகுவது நிச்சயம்!!


சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


*

கீழே உள்ள சுட்டிகளில் இந்தப்பாடலைக் கேட்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.



Friday, February 18, 2011

கண்கள்!!

வன் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தன. கண்களின் எரிச்சலை லேசாக உடலும் உணரத் துவங்கியது. அலுவலகம் வந்ததில் இருந்து மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில் போராடிக் கொண்டிருந்தான். அவன் கணினித் திரையைத் திறக்கையில், அனுப்பியவர்களுக்கு மதியமாகியிருக்கும். இன்னும் நான்கு மணி நேர வேலை நாளே அவர்களுக்கு மீதமிருந்ததால் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும். கணினித் திரையும் மின்னஞ்சல்களும் தான் சோறு போடுகிற நிலை என்றான பிறகு மின்னஞ்சல்களுக்குப் பயந்தால் நன்றாகவா இருக்கும். பிறர் கண்கள் தன் பதிலை எதிர்பார்த்துக்கிடப்பதால் தன் கண்களின் எரிச்சல் அவனுக்குப் பழகிவிட்டது. ஏனோ இப்பொழுது அவனிடம் கண்கள் கெஞ்ச ஆரம்பித்தன. கண்களின் கெஞ்சல் காதுகளுக்குக் கேட்டதோ என்னவோ, அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அலுவலகம் எங்கும் ஏதோ பரபரப்பு படர்வதை காதுகள் உணர்த்துகின்றன. 

ணினித் திரையில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தான். அனைத்து கண்களும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தன. இப்படி அனைவரும் பார்க்க வேண்டுமென்றால் அலுவலக மேலாளர் ஏதாவது உரையாற்ற வேண்டும். ஆனால், இங்கே வேறு திசையை நோக்கியல்லவா கண்கள் பார்க்கின்றன. அனைவருக்கும் ஒரு சேர சன்னலைப் பார்க்கும் ஆர்வம் எப்படி வந்தது. வேறொன்றுமில்லை. அவர்களை நோக்கி நாலு ஜோடிக்கண்கள் வெளியிலிருந்து புன்னகை செய்தன. இருபத்தி ஆறாவது மாடியில் இருக்கும் இவர்களைக் கட்டடத்திற்கு வெளியிலிருந்து பார்ப்பது, இவர்களுக்கு வியப்பூட்டும் விசயம். உயிரற்ற தூண்களும், கண்ணாடிச் சன்னல்களுமே தங்களைப் பார்த்த திசையில் கண்கள்.

ண்ணாடியில் உள்ள அழுக்கை அகற்றும் உன்னத வேலையை அந்த நால்வரும் செய்வதை அத்தனை கண்களும் வேடிக்கை பார்த்தன. அதற்கு பதிலாக இதமான புன்னகையை உதிர்த்தார்கள். கட்டடத்தின் விளிம்பில் உள்ள பலமான கொக்கிகளில் இரும்புக் கயிற்றைக் கட்டிவிட்டு தானியங்கிக் கருவிகளின் உதவியால் ஒவ்வொரு மாடியின் சன்னல் கண்ணாடிகளையும் சுத்தம் செய்கின்றனர் இந்த வீரர்கள். உயரமான இடத்தில் இருந்து தொங்கிய படியே பணியாற்றத் தனி வீரம் வேண்டும் தானே. இவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் வேறு எவர்க்கும் கிடைக்காது. கட்டடத்தின் உயரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது பார்க்கும் காட்சிகள் கீழே இறங்குப் பொழுது மாறுவது ஒரு ஆச்சர்யமான விசயம். ராட்டனத்தில் ஏறிச் சுற்றுகையில், மேலெழும் பொழுது இதுவரை பார்த்திராத கூரைகள் எல்லாம் தெரிவதைப் போல. தொலைவில் தெரிந்த கடலை எள்ளலுடன் மறைக்கத் துவங்கும் சிறிய கட்டடங்கள், சிறு துளிகளாய்த் தெரிந்த மரங்கள் கிளைகளுடன் படர்ந்து நிற்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். வெளிக்காட்சிகள் மாறுவது ஒரு வித அனுபவம் என்றால் கண்ணாடிகளுக்கு அப்பால் தெரிவதோ வேறு விதமான அனுபவம். மேலிருந்து கீழே வரவர ஒவ்வொரு அலுவலகத்தின் அமைப்புகளையும், நடவடிக்கைகளையும் பார்ப்பது மாறுபட்ட அனுபவம் தான். அடுத்த வீட்டு சன்னலை எட்டிப் பார்க்கும் ஆவல் அதிலிருப்பதாகத் தோன்றியது.

வன், இருக்கையில் இருந்து எழுந்து சன்னலை நோக்கிச் சென்றான். அழுக்குப் படிந்து, தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்த கண்ணாடிகள் இப்பொழுது வெளியுலகை மட்டுமே காட்டின. சன்னலின் அருகே சென்றவன், சுவற்றில் கைகளை ஊன்றி அடிவானத்தை வெறித்துப் பார்த்தான். கணினித்திரைகளின் முன்பு பணியாற்றுபவர்கள் சரியான இடைவெளிகளில் தொலைவில் உள்ள பொருளைப் பார்ப்பது நல்லதாம். இவனுக்கு கடலை அதுவும் அடிவானத்தைப் பார்ப்பது உவகையான விசயம். அடிவானத்தைப் பார்த்தே காற்றில் உள்ள தூசியின் அளவையும் காலநிலையையும் உணர்ந்து கொள்வான். கடலின் அழகை ரசிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. கணினித்திரைக்கு அடுத்தபடியாக அவன் பார்ப்பது கடலைத் தான். அதிகாலையில் சலனமில்லாமல்  காட்சியளிக்கும் கடல் நேரமாக நிறம் மாறிக்கொண்டே இருக்கும். பச்சை, நீலம், கருநீலம், மாலையில் இளஞ்சிவப்பு, இரவில் கட்டட மின்விளக்குகளின் எதிரொளிகள் என்று கடலின் மாயவித்தை ஒரு அபூர்வம் தான். 

ன்று கடல் அமைதியாகவே இருந்தது. கண்ணிற்குக் குளுமையான தெளிந்த நீல நிறம். பாம் ஜூமைராவின் கட்டடங்கள். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல்கள். இவற்றிற்கு மாலை நேரம் வரை வேலை வருவதில்லை. கடல் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு செல்லும் கடல் பைக்குகள். அந்த பைக்குகளை இயக்குவதற்கு தனிப்பயிற்சி தேவை இருக்கும். பின்னே கடலையே கிழித்துக் கொண்டு செல்வதென்றால் சாதாரண விசயமா? இவன் அதிகபட்சம் ஆற்று நீரைக் குச்சிகளை வைத்து துழாவி விளையாடியிருக்கிறான். குச்சிகளை வைத்துத் துலாவும் பொழுது எழும் அலைகளைப் பார்க்க இவனுக்கு அலாதி இன்பம். தொலைவில் தெரிந்த கடலின் அலைகள் ஊர் நினைவு மீட்க ஆரம்பித்துவிட்டன. அப்படியே வலது திசையில் பார்க்க ஆரம்பித்தான். ரயில்ப்பூச்சியாக ஊறிச் சென்று கொண்டிருந்தது பிரதான நிலப்பரப்பையும் ஜூமைராவையும் இணைக்கும் மோனோரயில். இன்னும் சற்று தொலைவில் 'துபாய் உலகி'ற்காக கடலில் எழுப்பப்பட்ட மண் திட்டுகள். பணத்தைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள் என்று கிண்டல் செய்தாலும், கடலின் நடுவே நகரை உருவாக்குவது எவ்வளவு பெரிய கனவு. 

ருகாமையில் இருக்கும் சாலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பகல் வேளையிலும் எத்தனை கார்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு அவசரம். தன் கட்டடத்திற்கு அருகில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தைப் பார்வையிடத் தொடங்கினான். குறைந்தது 200 கார்கள் நிறுத்துமளவு உள்ள பயன்பாடற்ற நிலப்பரப்பு அது. முதலில் அந்த இடமே அமைதியாக எதுவுமே நடக்காதது போலத் தோன்றும். பிறகு உற்று நோக்கினால் ஒன்றிரண்டு கார்களாவது நிறுத்துமிடம் தேடி எறும்புகளாக ஊறிக்கொண்டிருக்கும். இருபத்தி ஆறாவது மாடியில் இருந்து பார்க்கும் பொழுது இவனுக்குக் காலியிடங்கள் தெளிவாகத் தெரியும். சிலவமயம, அந்த வழியில் போகாதே என்று கத்தத் தோன்றும். இருந்தாலும் அவர்கள் சுற்றிச் சுற்றி வருவதையும் கார்களைச் சந்துகளில் இயக்குவதைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.

ன் பார்வையை சில நூறடிகள் நகர்த்தினான். கட்டடங்களுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா மற்றும் குளம். குளத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களில் பார்ப்பவர்களுக்காக 'எப்பொழுதாவது' நடக்கவிருக்கும் விழாக்களுக்காக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் குளம். குளத்தின் கரையில் மனிதர்களைப் பார்ப்பதே அரிதான விசயம். படகோட்டியாக குளத்தினூடே பயனித்து குளத்தில் படிந்திருக்கும் பாசியை அகற்றும் வேலையாளைத் தவிர. நீர்த்தாரைகள் குளத்தின் நீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தன. என்றாவது ஒரு நாள் சிறிது நேரத்தை ஒதுக்கி பூங்காவையும், குளத்தையும் அருகில் சென்று ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அங்கே நின்று புகைப்படம் எடுத்தால் தான், தான் வேலை பார்க்கும் கட்டடம் தெளிவாகத் தெரியும் என்பது அவன் யூகம். அப்படி ஒரு நாள் அவன் பணியில் இருந்து விடுபடும் நாளாகத் தான் இருக்கும். 

வன் காதுகளில் "யானி"யின் இசை ஒலிக்க ஆரம்பித்தது. அது அவனிற்கு மிகவும் பழக்கப்பட்ட இசை. அவன் செல்பேசியின் ஒலி. செல்பேசியில் மின்னஞ்சல் வருகையைத் தெரிவிக்க வைத்திருக்கும் இசை. மின்னஞ்சலின் வருகையை இதமான இசையால் வரவேற்பது இவனுக்குப் பிடித்த விசயம். அவன் கண்களுக்குத் தன் முன் நிற்கும் கண்ணாடி தெரிய ஆரம்பித்தது.  பத்து நிமிடங்களாகப் பராக்குப் பார்த்ததில் கண்களில் எரிச்சல் குறைந்திருந்தது. மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தான். காலையில் இருந்து இவன் அனுப்பிய பதில்களுக்குச் சில சிரிப்பான்களுடன் நன்றி தெரிவித்தது அவ்வஞ்சல். கண்கள் புன்னகைக்க உடம்பை முறித்துப் பெருமூச்சு விட்டான், அன்றைய பொழுதின் அடுத்த வேலையை யோசித்தவாறு!!

Monday, January 31, 2011

இணையம் தரும் நம்பிக்கை!!

"பெட்டிதட்டிகள்"!! இவர்களால் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? அயல்நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்தியவைப் பற்றி "உச்"சுக்கொட்ட என்ன உரிமை இருக்கிறது? குளுகுளு அறைகளில் வேலை நேரத்தில் சமுக வலையமைப்புத் தளங்களில் "பன்னாட்டுப் பேசி" என்ன பயன்? என்றெல்லாம் பேச்சு வந்தாலும் இணையம் பெரிய நம்பிக்கையை உண்டாக்குகிறது!!

"தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வலைப்பதிவுகளிலும், இணையதளங்களிலும் பதிவுகள்,பின்னூட்டங்கள், சிட்டாடல்கள், கோரிக்கை மனுவில் கையெழுத்திடல்கள் என்றெல்லாம் "பெட்டிதட்டிகள்" இயங்க ஆரம்பித்த பொழுது, "நம்மால் என்ன முடியும்?" என்ற எண்ணம் தோன்றியது உண்மையே!! "தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற கோரிக்கை மனுக்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்ற ஐயம் ஏற்பட்டாலும், இணையத்தில் இத்தனை ஆயிரம் பேர் தமிழக மீனவர்களின் சோகத்தில் பங்கேற்க ஆயத்தமாகியுள்ளார்கள் என்ற எண்ணம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 


என்ற தளத்தில் இதுவரை 4523 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். 7 கோடி மக்களில் 5 சதவிதத்தினர் இணைய வசதி உள்ளவர்கள் என்றாலும் 4523 என்ற எண்ணிக்கை ஒரு சதவிகிதம் தான். அதையே 7 கோடி மக்களுடன் ஒப்பிட்டால் மிக மிக சொற்ப சதவிகிதம் தான். ஆனால், இந்த சொற்ப சதவிதத்தினரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொருவரும் 10 பேரைக் கையெழுத்திட வைத்தால் கூட நல்ல விசயமாக இருக்கும். சமூக வலையமைப்புத் தளங்களில் சேர்கையில், உங்கள் நண்பர்களின் நண்பர்கள் மூலம் நீங்கள் 25000 பேருடன் தொடர்பில் உள்ளீர்கள் என்று ஒரு எண்ணிக்கையைக் காட்டும். அது தான் இணையத்தின் வீச்சு.

கையெழுத்திடுவோம்! நம் ஆதரவை மீனவ அன்பர்களுக்கு அளிப்போம்!! நீங்கள் செய்ய வேண்டியது, மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பெயரைக்குறிப்பிட்டு கையெழுத்திடுவது தான்!!

*

இதற்கு முன்பு பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு விசயத்தை / மனிதரை ஆதரித்தது என்றால் அது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தான். சரத்பாபு என்ற இளைஞர் தென்சென்னை தொகுதியில் நின்ற பொழுது பெரும்பாலானோர் அவரிற்கு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் வெற்றியடையாவிட்டாலும் ஏறக்குறைய 16000 வாக்குகளைப் பெற்றது இணையங்களில் இயங்கிவரும் பெட்டிதட்டிகளின் பிரச்சாரத்தாலும் தான்!!

அதை விட அதிக முனைப்புடன் ஒரு விசயத்தின் மீது ஆதரவை நல்க ஆரம்பித்திருப்பது "தமிழக மீனவர்கள்" விசயத்தில்!! டிவிட்டர்களில் #tnfisherman என்று இடம்பெறும் வகையில் சிட்டாடல்களைப் பதிய ஆரம்பித்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 - 10 டிவிட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் என்ன பயன்?

Trending Topics என்று எந்த விசயம் / தலைப்பு அதிகம் விவாதத்தில் உள்ளன என்று கணக்கெடுக்கப்படும் பொழுது #tnfisherman என்ற வார்த்தையும் வர ஆரம்பித்தால் அதிகமானோரின் கவனத்தை ஈர்க்க முடியும். உங்களுக்கும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டிவிட்டிக் கொண்டே இருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தைப் பார்வையிட்டால் டிவிட்டுகளைப் பார்க்கலாம்.


உங்களிடம் எதிர்பார்ப்பது கருத்துப்புரட்சி எல்லாம் இல்லை. #tnfisherman என்ற வார்த்தையுடன் கூடிய டிவிட்டுகளையே!! அதில் அரசியல், நையாண்டி, சாடல் இருக்க வேண்டும் என்பதல்லாம் இல்லை. எளிதாக I Support #tnfisherman என்றோ Please save #tnfisherman டிவிட்டினால் கூட போதும். தற்பொழுது வேண்டியது மீனவர்களுக்கு நம் ஆதரவு. கவன ஈர்ப்பு!!



இந்திய நேரம் 12 மணியளவில் இந்தியாவின் முதல் 5 சிட்டாடல்களில் #tnfishermanம் என்பதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் டிவிட்டுவோம். ஆதரவை நல்குவோம்.

*

என் பங்கிற்கு நான் டிவிட்டியவை..

ஹோஸ்னி முபாரக்கை விட அதிக நாட்கள் அரசியலில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர் - எகிப்து நாளிதழ் அதிர்ச்சி செய்தி!! #tnfisherman

எகிப்துல நடக்கறது வேதனையான விசயம்னாலும்.. இந்த மாதிரி பதவிஆசை வெறியர்களைத் துரத்துனா என்னனு தோனுது.. #tnfisherman

உங்களுக்குத் தொகுதிப் பங்கீட்டு விசயமே தலைய சுத்துது. இதுல எங்கிருந்து எங்கள கவனிக்கப் போறீங்க. #tnfisherman

சங்கீத மகாயுத்தம் நம்மைப் பசியாற்றும் பொழுது மீனவர் பசியை எங்கே நினைவு கொள்வது? #tnfisherman

எங்க பர்காதத்துக்கு யாராவது போனப்போடுங்கப்பா.. அவங்க வந்தா மூனு நாளுக்காவது தமிழக மீனவர்கள் விசயம் நாடு முழுவதும் தெரியும்ல #tnfisherman

ஏப்பா... நம்ம பா.ஜா.கவ ரதயாத்திரையா ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னா என்ன? அப்படியாவது இங்க ஒரு ஊரு இருக்கறது ஊடகங்களுக்கு தெரியும்ல#tnfisherman

ஏப்பா.. நம்ம சர்வதேச கடல் எல்லைல ஒரு நூறு கடலோரக் காவல் கப்பல விட எத்தன காசாகும்? # tnfisherman

*

"பெட்டிதட்டிகளால்" என்ன செய்து விட முடியும் என்பதற்கு பதிலாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் #tnfisherman ஆதரவாளர்கள். அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்கள் என்பதை பதிவர் நர்சிம்மின் இந்தப் பதிவில் பார்க்கவும். இந்தப் பதிவில் கூறியுள்ள விசயங்கள் சாத்தியப்பட்டால் கூட நல்ல பயனிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

*

Tuesday, January 11, 2011

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை - எண்ணங்கள்!!

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெகுவாக விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வேலை, படிப்பு, தொழில் போன்ற காரணங்களுக்காக அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் முதல் படியாக இந்த அறிவிப்பைக் காணலாம். இந்த அறிவிப்பு சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் இல்லை.

இந்தியாவில் படித்து விட்டு இங்கே தொழில் புரியாமல் அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு எதற்காக வாக்குரிமை? இங்கே நாட்டில் உள்ள நிலவரங்களைப் பற்றி உணராமல் வாக்களிப்பது எந்தளவிற்கு ஏற்புடையது? என்பது ஒரு வாதம்.

உண்மை தான்!! இந்தியாவில் தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை போன்ற துறைகளில் படித்துவிட்டு வேலை வேண்டி வெளிநாடு செல்பர்களுக்கு எதற்கு வாக்குரிமை என்னும் மரியாதை. அரசுப் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவனைப் படிக்க வைக்க அரசாங்கம் பெருமளவில் மானியம் வழங்குகிறது. இங்கே படித்துவிட்டு, நம் மூளையை அயல்நாட்டில் அடகு வைப்பது சரியானதா? இன்றைய மத்திய தர வர்க்கத்தினரின் கனவு என்றால் அயல்நாட்டு வாழ்க்கை, டாலர் சம்பளம், அயல்நாட்டு வாழ்வுரிமை போன்றவை தான். இப்படி இருக்க, இந்தியா மீதான தொடர்பைத் துண்டித்திருக்கும் இவர்களுக்கு எதற்கு வாக்குரிமை?

பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகள், திரும்பிய பக்கமெல்லாம் பளபளப்பு என்று அயல்நாட்டில் வாழ்க்கை நடத்துவோர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும், கடுமையான வெயில், 12 மணி நேர வேலை, வருடத்திற்கொரு முறை இந்தியப் பயணம் என்று வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அயல்நாட்டிற்குச் சென்றிருப்பது பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகளைப் பார்த்தோ, பளபளப்புகளைப் பார்த்தோ எல்லாம் இல்லை. போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் அயல்நாடு சென்றவர்களே அதிகம். இவர்கள் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருப்பது இந்தியாவில் எகிறி நிற்கும் வெங்காய விலை, விவசாய நிலங்களை மூழ்கடித்த மழை வெள்ளம் போன்ற செய்திகளே. இவர்களின் உடல் இருப்பது அயல்நாட்டில் என்றாலும், எண்ண ஓட்டங்கள் இந்தியாவைப் பற்றித் தான். இந்தியாவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் என்ன தவறு?

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணம் ஓரளவு இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. இப்படி நம் பொருளாதாரத்தில் பங்கேற்கும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரி என்ற வாதம் ஒரு பக்கம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டில் முதலீடு செய்வதால் மட்டுமே நாட்டின் மீது அக்கறை வந்துவிட்டது என்று அர்த்தமாகாது. அவர்கள் செய்வது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதே" என்ற வாதமும் உண்டு!! 

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கூடாது என்று கூறும் பொழுது எழும் அடுத்த கேள்வி. இந்தியாவில் வாழ்ந்து கொண்டே வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களை என்ன செய்வது? NRI - Non Resident Indians போலவே RNI - Resident Non Indians என்று வாக்குப் பதிவு செய்யாதவர்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் அக்கறையற்ற மனநிலையை விட அயல்நாட்டில் வாழ்பவர்கள் எந்த விதத்தில் சோடை போனார்கள் என்பதே அடுத்த வாதம்!!

நிற்க!!

*

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது என்றால்... அடுத்த கேள்வி. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமையை எப்படி சாத்தியப்படுத்துவது?

இந்திய மக்கள் வாக்குரிமையைச் செலுத்துவது என்றால் தேவையானது அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்காளரின் முகவரி முதலியவை.

எத்தனை காலமாக அயல்நாட்டில் வாழ்பவருக்கு இந்த சேவையை வழங்குவது?

பலர் தொழில் காரணமாக அடிக்கடி அயல்நாட்டிற்கு சென்று திரும்புவர். இவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். நிரந்தர வேலை காரணமாக சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.  மூன்று மாதம் ஆறு மாதம் என்று குறுகிய காலத்திற்கு அந்நிய நாட்டிற்கு செல்பவர்கள் இந்தக் கணக்கில் வருவது சந்தேகமே.

இவர்கள் அடையாள அட்டையாக இந்திய வாக்காள அடையாள அட்டையும், கடவுச்சீட்டு கேட்கப்படலாம். அயல்நாட்டில் வசிக்கும் பலரிற்கு இந்த அடையாள அட்டை இருக்குமா என்பது அடுத்த ஐயம். இவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை வழங்குவது? 

*

வாக்குப்பதிவை எங்கே செலுத்துவது?

அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களில் வாக்கைப் பதிவு செய்யலாம் என்று எளிதில் கூறிவிட முடியாது. அமீரகம் போன்ற சிறிய நாடு ஆனால் ஏராளமான இந்தியர்கள் வசிக்கும் இடங்களும் உண்டு. அமெரிக்கா போன்ற பெரிய ஆனால் பரவலாக வசிக்கும் நாடுகளும் உண்டு. இவர்களை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்று சொல்லிவிட்டால் அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். இது அடுத்த கேள்வி.

இப்படி ஒரே சமயத்தில் அனைத்து நாடுகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்றால் ஒன்று தொழில்நுட்ப உதவியை நாட வேண்டும். 

*

அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்க யோசிக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு வெளியூர்களில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கானோர் வாக்களிக்க என்ன வழி என்று யோசித்தால் நல்லது.

*

இப்படி பல விசயங்களையும் சிந்திக்கும் பொழுது அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்பது ஏதோ வெட்டிப்பேச்சோ என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

*


நேரமிருந்தால்.. இந்தக் காணொளியையும் பாருங்கள்.

*

Saturday, January 8, 2011

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்..

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் 
உப கடவுளர்களின் அணிவகுப்பாம்
ஊடக ஆராதனையில் ஏலமாம்
ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்!
ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம்
கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!!

பத்து கோடிக்கொரு கடவுள்
எட்டு கோடிக்கொரு கடவுள்
ஆறு கோடிக்கொரு கடவுள் 
கோடானுகோடி ஏழை பக்தர்களுக்காக!!

நாட்டின் முதன்மை மார்க்கம்
நாடாள்பவர் விரும்பும் மார்க்கம்
நாடாள் மன்றம் போல 
இம்மார்க்கத்திலும்
இல்லை வேறுபாலருக்கு இடஒதுக்கீடு!!

கடவுளர்கள் விரும்பும்,

குளிர்பானமே தீர்த்தமாக
இனிப்புகளே பிரசாதமாக
உணவுகளே அமுதமாக
ஆனார்கள்
பக்தர்கள் மாக்களாக!!

வான்பொய்த் தாலும் விசாரமில்லை
மண்மலடானாலும் மனக்கவலை யில்லை
சுயம்அழிந்தாலும் சிந்தையிற் கலக்கமில்லை
சஞ்சலம் தீர்க்க மார்க்கமுண்டு
களிப்பூட்டக் கடவுளர்களின் கிரிக்கெட்டுண்டு 

மாசியில் வருதே உலகக்கோப்பை
வைகாசியில் வருதே உள்ளூர்க்கோப்பை
உலகக்கோப்பையோ உள்ளூர்க்கோப்பையோ
கடவுளர்களின் தரிசனம் ஒன்றே போதும்!!

கடவுளர்க் கிடையில் ஆட்டம்
பக்தர்கள் மனதில் கொண்டாட்டம்
பண முதலைகளின் வெறியாட்டம்
ஆட்டமானதே சூதாட்டம் இகலாட்டம்
பக்தகோடிக்கு 
மிஞ்சியதே இளிச்சவாய்ப் பட்டம்.


Wednesday, January 5, 2011

கொலாஜ் - 05-01-11

நான் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் விசயங்களுள் சிறந்தவற்றை அன்பர்களுடன் பகிரும் ஊடகமாகவே என் பதிவுத் தளத்தைக் கருதி வருகிறேன். சில விசயங்கள் விரிவானதாக எழுதும் வகையிலும், பல விசயங்கள் துணுக்கு பாணியிலும் இருக்கும். இப்படி சின்னச் சின்ன விசயங்களை அளவின் காரணமாகப் பதிவாக எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இவற்றை "கொலாஜ் - Collage" என்ற பெயரில் தொகுத்து பதிவேற்றவுள்ளேன். 

கொலாஜ்

நான் எழுதும் பதிவுகளில் பெரும்பாலானவை இணையத்திலோ, புத்தகங்களிலோ படித்தவையாகவே உள்ளன. அவற்றைப் பதிவாக்கும் பொழுது ஒன்று வெட்டி ஒட்டுகிறேன், அல்லது பிரதியெடுக்கிறேன். இப்படிப் பல துணுக்குகளைப் வெட்டியோ, பிரதியோ எடுத்து எழுதும் பதிவிற்கு "கொலாஜ்" என்ற பெயரை வைக்கிறேன். "கொலாஜ்"ல் பெரும்பாலானவை சுட்ட செய்தியாக இருந்தாலும் அங்காங்கே அனுபவங்களாலும், கருத்துகளாலும் வண்ணமிட்டுத் தரவுள்ளேன். (இதற்கு முன்பு பாதசாரி என்ற பெயரில் எழுதி வந்த பதிவர் கொலாஜ்களைத் தந்துள்ளார் என்பது குறுஞ்செய்தி) 

2011 எப்படி இருக்கும் என்ற ஆருடங்களை ஏற்கனவே பல இடங்களில் படித்திருக்கிறோம். வணிகத்துறை, இணையத்துறை, தொழில்நுட்பத்துறைகளில் 2011ல் கவனிக்க வேண்டிய விசயங்களுள் சில..

எஃப்-வணிகம் (F-Commerce) 

ஈ-காமெர்ஸ், எம்-காமெர்ஸ் எல்லாம் நமக்குப் பழகிய கேள்விப்பட்ட விசயமாகிவிட்டது. அல்லது அசைபோட்ட விசயங்களாகிவிட்டன. இதோ இப்பொழுது எஃப்-காமெர்ஸ். எஃப்(F) - ஃபேஸ்புக் Facebook. இது வரையில் ஃபேஸ்புக் தளத்தை நண்பர்களுக்கு நம் நிலையைப் புதுப்பிக்கவும், தகவல்களைப் பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்துகிறோம். கூடவே சில வணிக நிறுவனங்களின் பக்கங்களை "லைக்"கவும் செய்கிறோம். "லைக்"கிக் கொண்டே இருந்தால் வணிக நிறுவனங்களுக்கு என்ன பயன்? அதற்கு விடையளிப்பதே எஃப்-வணிகம். ஃபேஸ்புக் தளத்தில் இருந்தே பொருட்களை வாங்கவும் விற்கவும் வழிவகைகளைக் கொண்டதாக எஃப்-வணிகம் அமையும்.

எம்-காமெர்ஸ் - என்பது தெரியாதவர்களுக்கு.. எம் - மொபைல்.  

காப்ட்சா விளம்பரம் ( CAPTCHA Advertising)

இணைய தளங்களிலேயே குடி கொண்டிருப்பவர்களுக்கு CAPTCHA தெரிந்திருக்கும். ஏதாவதொரு தளத்தில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் பொழுது நம்மை சோதிக்கும் வகையில் கோணல்மானலாக எழுத்தைப் படித்து எழுதச் சொல்லும். அதற்குப் பெயர் தான் CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart). கடவுச்சொல்லை உள்ளீடு செய்வது மனிதர் தானா என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம். சரி.. இதை வைத்து எப்படி விளம்பரம் செய்வது?

நாம் சில செய்தித் தளங்களுக்குச் செல்லும் பொழுது சில விளம்பரங்கள் வெளித் தோன்றும் (POP UP). நாமும் அவற்றை மூடிவிட்டு செய்தித்தளத்தைப் பார்வையிட சென்றுவிடுவோம். இப்படி நான் விளம்பரங்களைப் பார்வையிடாமல் போவதால் விளம்பரதாரரிற்கு என்ன இலாபம்? இதற்கு விடையளிப்பதே CAPTCHA விளம்பரங்களின் நோக்கம். நாம் அந்த விளம்பரங்களின் மீது உள்ள CAPTCHA வார்த்தையை உள்ளீடு செய்த பிறகு தளத்தை வாசிக்க முடியும்.

ம்ம்.. சில வருடங்களில் பதிவர்களின் தளங்களைப் பார்வையிடமும் CAPTCHA வருமோ?

அலுவலகத்தில் தூக்கம் - என் அலுவலகத்தில் "நம் அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் இல்லை?" என்ற கேள்வியுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கூறினார்கள். நான் கூறியது தூங்குவதற்கென தனி இடம் அல்லது அறை. அலுவலக வேளையில் எதற்குத் தூக்கம்? அலுவலகங்களில் வேலையின் நடுவே ஒரு அரை மணி நேரம் தூங்குவது அல்லது ஓய்வெடுப்பது நம் மூளையை உற்சாகப்படுத்துமாம். மதிய நேரம் நம்ம வீட்டில் சாப்பிட்ட பிறகு தூங்குவோமே அதோ போல.. ஆனால் 15 முதல் 30 நிமிடம் மட்டும் தூங்கினால் போதுமாம். அதற்கு மேல் தூங்கினால் விழித்த பிறகு கலக்கமாக இருக்கும். இதற்கு "Sleep Inertia" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். (படத்தில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஒரு அலுவலக அறை)

மங்களூர் விமான விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறியிருப்பது விமானத்தின் பைலட் தரையிறங்கும் பொழுது "Sleep inertia"வில் இருந்தாராம்.  

*

அமீரகத்தில் சமீபத்தில் விசாவிற்கான சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். முன்பெல்லாம் வேலை நிமித்தமான "Work Permit" விசாவை மூன்றாண்டுகளுக்குத் தருவார்கள். 2011ல் புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தான் தருவார்கள். இந்த மாற்றத்தினால் பணியாளர்களுக்குச் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒரே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது.  அதே நேரம் சரியாக பணியாற்றாத பணியாளர்களை நீக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும். இரண்டாடிற்கு ஒரு முறை புதிதாக விசாவைப் புதுப்பிப்பது நிறுவனங்களுக்கு பொருளாதார சுமையாகவும் கருதுகிறார்கள்.

பணியாளர்களைப் பொருத்த வரையில், இரண்டாண்டு முடிந்த பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது எளிதாகிறது.  முன்பைப் போல 6 மாத தடை ( BAN) இனி இல்லை. சுமூகமாக இரண்டாண்டை முடித்துவிட்டு வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு மாறுவதில் பிரச்சனையிருக்கப் போவதில்லை.

அமீரகத்தில் வேலைக்கான விசா இரண்டு வருடத்திற்குத் தான் என்பதைப் புதிதாக வர விரும்புபவர்கள் மனதில் கொள்வது நல்லது. அதோடு.. தரகரிடம் கொடுக்கும் பணமும்.. அதை இரண்டாண்டில் மீட்க முடியுமா என்பதும்!! தரகர்களிடம் பணம் கொடுத்து அமீரகம் வரும் எவருக்கும் இந்தப் பதிவைப் படிக்கும் வசதியிருக்காது. ஆகவே இதைப் படிப்பவர்கள் இச்செய்தியை தெரிந்தவர்களுக்குப் பகிருங்கள்.

*

இந்தக் கொலாஜைப் பற்றிய கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்!!

Monday, January 3, 2011

பீர் பிரசர் + புத்தாண்டு + அமீரக விழாக்கள்


புத்தாண்டின் முதல் தினத்தைக் கொண்டாடியே தீர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. புத்தாண்டின் முந்தைய இரவில் பெரிதாக வெளியே சுற்றாமல் வீட்டில் இருத்தல் ஏதோ செய்யக் கூடாத விசயமாகத் தெரிகிறது. ஏன் வெளியில் போகவில்லை என்பதிலும் பல விசாரிப்புகள். இல்லை... "எங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தேன்" போன்ற காரணங்கள் கேட்பவர்களுக்கு சரியாகத் தோன்றுவதில்லை. இதனால் வருவது தான் "பீர் குருப் பிரசர்". Peer.. Beer அல்ல!! பீர் குரூப் பிரசரும் கல்லூரி நாட்களின் ஏற்பட்டதுண்டு. அது பீரால் வந்த பீர் குரூப் பிரசர்.

அமீரகத்தில் புத்தாண்டைக் கோலாகாலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். புர்ஜ் கலிஃபாவில் வானவேடிக்கைகள் விண்ணைத் தொட்டிருக்கிறது. புர்ஜ் கலிஃபாவின் வானவேடிக்கைகளைப் பார்வையிட என் நண்பர் மாலை 6 மணிக்கே சென்றிருக்கிறார். நிற்கக் கூட இடமில்லாமல் கூட்டம் அலைமோதியதால் மெதுவாக வெளியே வந்து வேறொரு கட்டடத்திற்குச் சென்றிருக்கிறார். எல்லாம் 3 நிமிட வானவேடிக்கைக்காக!! என் நண்பர் கூறியது.. Its worth waiting for 5 hours!! நண்பர்கள் சில லண்டன் போன்ற பெரிய நகரங்களில் ஆறேழு மணி நேரம் காத்திருந்து வானவேடிக்கைகளைப் பார்த்திருக்கிறார்கள். 

*
சென்ற மாதம் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டும் இது போல நாடெங்கும் வானவேடிக்கை காட்டினார்கள். ஷார்ஜாவின் புஹைராஹ் கார்னிஷில் அந்த வாரம் முழுவதும் கொண்டாடினார்கள். அமீரக அன்பர்களும் தங்கள் கார்களில் I LUV UAE என்று காரெங்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். சிலர் முன்பக்கக் கண்ணாடியையும் மறைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். காரணம்.. சில விஷமிகள் கொண்டாட்டத்தின் பொழுது சில ஜெல்களை கண்ணாடியில் பீய்ச்சிவிடுவதால்!!

*

வியாழக்கிழமை ஆனால், இங்கே நான் எதிர்கொள்ளும் கேள்விகளுள் ஒன்று "Whats the plan for weekend?".  ஒரு திட்டமும் இல்லையென்றாலும் அங்கே போகிறேன், இதைச் செய்யவிருக்கிறேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. "சும்மா.." வீட்டில் உட்கார்ந்து குடும்பத்துடன் ஓய்வெடுப்பதோ, நல்ல புத்தகங்களைப் படிப்பதோ Coolஆன விசயங்களாகத் தெரிவதில்லை. ரெண்டு கழுதை வயசான நமக்கே இப்படி என்றால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நிலையை யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சக மாணவர்கள் மத்தியில் நிலவும் "பீர் குரூப் பிரசரிற்காகவே" ஏதாவது ஒரு மாலிற்குக் கூட்டிச் செல்ல வேண்டியதிருக்கும். என் பள்ளி நாட்களில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வு விடுமுறையின் பொழுது தான் எங்காவது சென்றிருக்கிறேன். அப்பொழுது மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சித்தப்பா வீடும், சூலூரில் இருக்கும் அத்தை வீடும் போதுமானதாக இருந்தது. இப்பொழுது சித்தப்பா, அத்தை (எல்லாம் இருந்தால் தானே?) வீட்டிற்குச் செல்வதெல்லாம் Boreஆன விசயம். அந்த இடத்தை ஹாங்காங்கும், சிங்கப்பூரும் பிடித்து வருகிறது.

*

அமீரகத்தில் உள்ள தமிழன்பர்கள் "Whats the plan for weekend?" என்ற கேள்வியை இனி வரும் 2-3 மூன்று மாதங்கள் நல்ல முறையில் பதிலளிக்கலாம். ஆம், அமீரகத்தில் உள்ள தமிழன்பர்களுக்கான அமைப்புகள் ஆண்டு விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண, ஆண்டு விழாக்கான நுழைவுச் சீட்டை அந்தந்த அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டுகளை அமைப்பின் "உறுப்பினர்களுக்கு மட்டும்" எனவும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்றும் கொடுக்கிறார்கள். 

சில விழாக்கள் மற்றும் நாள்.

Emirates Humour Club - அமீரக நகைச்சுவை மன்றம் - ஆண்டு விழா - 21.01.11


வானலை வளர்தமிழ் மன்ற விழா - 04.02.11

சுடர்வம்சம் விழா - 11.02.11

அமீரகத் தமிழ் மன்றம் - ஆண்டு விழா - 18.02.11

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக விழா - 24.02.11

மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், தொடர்புகொள்ள வேண்டிய நபர் போன்றவற்றை அந்தந்த அமைப்புகளின் தளங்களில் பார்த்துக் கொள்ளவும்.

இது போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அமீரகத்தில் இத்தனை தமிழ் பேசும் அன்பர்கள் உள்ளனரா என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

*

Sunday, December 26, 2010

2010ல் மொபைல் துறை - ரீகேப்


செல்பேசிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாரா? குளிக்காமல் கூட சென்று விடுவோம். பத்து பேர் ஒன்று கூடினால் அதில் நாலு பேர் செல்பேசியில் பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்துக் கொண்டோ தான் இருக்கிறோம். அதிகமாகப் பார்ப்பது செல்பேசியை, அதிகமாகக் காதலர்கள் முத்தமிட்டது செல்பேசித் திரையை, அதிகமாக புன்னகைப்பது செல்பேசியைப் பார்த்து. இப்படி இருக்கும் மொபைல் துறை 2010ல் எப்படி இருந்தது? 2010ல் அதிகமாக விவாதிக்கப்பட்ட விசயங்கள் எவை... ஒரு சின்ன ரீவைண்ட்.

ஆப்பிள் ஐ-பேட் & டேப்லட் (பட்டிகை கணினி)

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-பேட் பட்டிகைக் கணினி (டேப்லட்) செல்பேசிக்கும் மடிக்கணினிக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன்பே பல நிறுவனங்கள் பட்டிகைக் கணினிகளை கொண்டு வந்திருந்தாலும், ஆப்பிளின் வணிகத் திறமையாலும் ஐ-பேடின் செயல்பாடுகளாலும் தனி கவனம் பெருகிறது. ஐ-பேடின் வருகைக்குப் பிறகு அனைத்து கணினித் தயாரிப்பு நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்கள் பட்டிகையை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். பட்டிகைகளில் விளையாட்டுகள், இணைய மேய்ச்சல் (browsing), அழைப்புகள் என பல செயல்பாடுகளையும் இயக்க முடியும். இப்பொழுது அப்ளிகேஸன்ஸ் எனப்படும் பட்டிகைப் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்குவதில் "நான் முந்தி நீ முந்தி" என்று மென்பொருள் நிறுவனங்கள் இறங்கியுள்ளனர். ஐ-பேட்-ஐ வைக்கும் படியாக கால்ச்சராய்களையும் கோட்களையும் ஆடைவடிவமைப்பு நிறுவனங்கள் வடிவமைக்க ஆரம்பித்திருப்பதால் ஐ-பேட் 2010ன் பட்டியலில்.

ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு(OS)

சாம்சங் போன், மோட்டராலா போன் என்று கேட்ட நிலை மாறி "ஆண்ட்ராய்ட் போன் கொடுங்கள்" என்று வாடிக்கையாளர் கேட்கும் அளவிற்கு 2010 ஆண்ட்ராய்டின் வீச்சு வளர்ந்துள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல் இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் செல்பேசிகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. நுண்ணறிபேசிச் சந்தையில் கால் பங்கு ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு தான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வகை செல்பேசிகள் 5% தான் இருந்தன. இந்த வளர்ச்சிக்குக் காரணம் திறந்த மூலமாக (Open Source) இயக்க அமைப்பு இருப்பதே. எந்தவொரு செல்பேசி தயாரிப்பு நிறுவனமும் இந்த இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்சங் காலக்ஸி, HTC ஈவோ, மோட்டோரோலா ட்ராய்டு போன்ற செல்பேசிகள் எல்லாம் ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஷென்சன் - மீடியா டெக் கூட்டமைப்பு

கடந்த ஒரு வருடமாக செல்பேசிச் சந்தை ஆர்வலர்கள் புற்றீசல் போல செல்பேசி நிறுவனங்கள் கவனித்திருக்கலாம். கார்போன், மைக்ரோமாக்ஸ், வீடியோகான், லாவா, ஆலிவ், இண்டெக்ஸ், மாக்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் சந்தையில் இருப்பது மீடியாடெக்கால் சாத்தியமானது. சீனாவின் ஷென்சன் நகரில் உள்ள இந்நிறுவனம் செல்பேசி உருவாக்கத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் வாடிக்கையாளரின் (இங்கே கார்போன், மைக்ரோமேக்ஸ்) தேவைக்கு ஏற்ப வடிவமைக்கிறார்கள். பிறகு, ஷென்சன் நகரைச் சுற்றியுள்ள சீனச் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களின் செல்பேசிகள் தயாராகின்றன. இதனால் செல்பேசி நிறுவனத்தைத் துவங்க பெரும் முதலீடும், ஆராய்ச்சிக் கட்டமைப்பும் தேவையில்லாமல் போகிறது.

இது போன்ற சென்ஷன்-மீடியா டெக கூட்டமைப்பு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் 10-15% பங்கைப் பிடித்துள்ளதால் 2010ன் பட்டியலில் இடம்.

ஸ்மார்ட்போன்ஸ் (நுண்ணறிபேசி)

2000களின் ஆரம்பத்தில் செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தது 2006 முதல் மாற ஆரம்பித்தது. நோக்கியா நிறுவனம் வெளியிட்ட N95 என்ற செல்பேசி வந்ததில் இருந்து இணைய மேய்ச்சல், படம் பிடித்தல், விளையாட்டுகள், மின்னஞ்சல் என்று பல வேலைகளைச் செய்யும் நுண்ணறிபேசி என்ற நிலைக்கு மாறியது. நுண்ணறிபேசித் துறையை மேலும் சூடுபிடிக்க வைத்தது 2007ல் ஐ-போன் அறிமுகத்திற்கு பிறகு. பிறகு பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் சந்தைக்கு இறக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டி 2010ல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

கூகுள் சிட்டாடல் நிலையைப் (Status) பார்த்தால் From Mobile என்றும், ஃபேஸ்புக் நிலையைப் பார்த்தாலும் "From my i-phone or Nokia or Samsung Galaxy" என்று புதுப்பிப்பதைப் பார்க்க முடிகிறது. மடிக்கணியும், மேசைக் கணினியும் தேவையில்லை என்ற நிலைக்கு 2010ல் நுண்ணறிபேசிகள் கொண்டு வந்துள்ளன. டெல், ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட் போன்ற கணினி தயாரிப்பு நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நுண்ணறிபேசிகளுள் அதிகம் விவாதிக்கப்பட்டது ஐ-ஃபோன் தான் என்பதும், நோக்கியா நுண்ணறிபேசிகள் தான் அதிகமாக விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Applications (பயன்பாடுகள்) - ஆப்ஸ்டோர், நோக்கியா ஓவி

நுண்ணறிபேசிகளின் விற்பனையை ஊக்குவிப்பதில் அப்ளிக்கேஷன்ஸ் (பயன்பாடுகள்) பெரும் பங்கு வகிக்கின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் நிலை புதுப்பித்தல், செய்திகள், சிட்டாடல், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று இணைய மேய்ச்சல் சேவைகள் முதல் பஞ்சாங்கம், கல்வி, விவசாய மற்றும் வானிலைத் தகவல்கள் வரை அனைத்திற்கும் பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைச் செல்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். 

பயன்பாடுகள் விற்பனையில் ஆப்பிளின் ஆப்ஸ்டோர் முன்னனியிலும், நோக்கியா ஓவி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன. செல்பேசித் துறையில் இனி வருமானம் பயன்பாடுகளில் தான் என்பதைப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் இக்கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்கின்றனர். ஏர்செல் கூட அவர்கள் தளத்திற்கு விளம்பரம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

பயன்பாடுகளில் 2010ன் ஹிட்டு Angry Birds என்ற விளையாட்டு.

டூயல் சிம் போன்

இந்தியா போன்ற அதிக தொலைத்தொடர்புச் சேவை வழங்கிகள் உள்ள நாடுகளில் டூயல் சிம் செல்பேசிகள் பரவலாக விற்பனையானது. கார்போன், மைக்ரோமாக்ஸ், மாக்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களின் டூவல் சிம் செல்பேசிகள் ஹிட் ரகத்தைச் சார்ந்தவை. தற்பொழுது குறைந்த விலை செல்பேசிகளில் மட்டும் கிடைக்கும் இச்சேவை 2011ல் நுண்ணறிபேசிகளிலும் கிடைக்க ஆரம்பிக்கும்.

2ஜி /3ஜி//4ஜி

இந்தியாவில் இந்த வருடம், மொபைல் துறை சார்ந்த விவாதங்களில் 2ஜி-3ஜிக்கு அதிக பங்கு. உபயம் ராஜா-ராடியா. சட்டம் தன் வேலையைச் செய்வதால் இதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

ஐ-ஃபோன் 4ஜி வெளியானவுடன், அதில் ஏற்பட்ட கோளாறுகள் பரவலாகப் பேசப்பட்டன.

ப்ளாக்பெரி - மெஸஞ்சர்

ப்ளாக்பெரி நிறுவனத்தின் செல்பேசிகள் பேசப்பட்டதை விட அந்நிறுவனத்தில் மெஸஞ்சர் சேவை மிகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தனி தன்மையே (USP) இந்த மெஸஞ்சர் சேவை தான். ப்ளாக்பெரி செல்பேசியை வைத்திருப்பவர்கள் எவரும் இன்னொரு ப்ளாக்பெர்ரி வைத்திருக்கும் அன்பரை கட்டணமின்றி சிட்டாடல்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் நடக்கும் பரிமாற்றங்களை வேவு பார்க்க முடியாது என்ற விசயம் அதிக பரபரப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இந்தியா, சவுதி, அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் இச்சேவையை முடக்கப் போவதாகக் கூறின. பிறகு பல கட்டப்பேச்சு வார்த்தைக்குப் பிறகு தொடர்புப் பரிமாற்றங்களைப் பகிர்வது குறித்தான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நெகடிவ் பப்ளிசிட்டியால் ப்ளாக்பெரிக்கு அதிக விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலே விவாதிக்கப்பட்ட பெரும்பாலாவை அதிக விலை கொண்ட செல்பேசிகளைப் பற்றியதே. இவற்றை வாங்கியவர்கள், பயன்படுத்தியவர்கள் 30% தான். மீதமுள்ள 70 சதவிதத்தினர் பயன்படுத்துவது 1000-2000 ரூ விலையுள்ள அடிப்படை வசதி கொண்ட செல்பேசிகளைத் தான். இணைய வசதியை பயன்படுத்தாதவர்கள் இணையத்தைப் பயன்படுத்தப் போவது குறைந்தவிலை செல்பேசிகள் முலம் தான். அவற்றை 2011ல் பார்க்க முடியும்.

நுண்ணறிபேசிச் சந்தை சூடாகிக் கொண்டிருப்பது போட்டி நிறுவனங்கள் எழுப்பியுள்ள காப்புரிமை மீறல் வழக்குகளே சான்று. இப்போட்டு 2011ல் மேலும் வலுவடையும். பார்ப்போம்.


தொழில்நுட்பம் சார்ந்த இக்கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - ரைட் ஆன் புல்ஸ் ஐ!!

விடுமுறை சீசனின் இரண்டரை மணி நேரத்தை, எதைப் பற்றியும் கவலைப் படாமல், முகம் சுளிக்காமல், காதைப்பிளக்கும் சத்தமில்லாமல் செலவிட வேண்டுமா? மன்மதன் அம்பு தான் சரியான தேர்வு!! சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கலகலப்பான நகைச்சுவை கம் ரொமான்ஸ் படம் தான் மன்மதன் அம்பு.

நடிகை திரிஷாவைத் { நிஷா எ) அம்பு} தொழிலதிபர் மாதவன் (மதன்) காதலிக்கிறார். திரிஷாவின் சூட்டிங்கைப் பார்க்க நேரிடும் மாதவன் திரிஷாவைச் சந்தேகிக்கிறார். வெளிநாட்டிற்குச் செல்லும் திரிஷாவை வேவு பார்க்க கமலை {மேயர் மன்னாரை (மன்)} அனுப்புகிறார். கமல் வேவு பார்த்தாரா? மாதவனும் திரிஷாவும் இணைந்தனரா? என்பது தான் மன்-மதன்-அம்பு வின் கதை. 

அம்புவின் தோழியாக சங்கீதா நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வருகிறார்கள். களவாணி ஓவியா, ஸ்ரீமன், உஷா உதுப், மஞ்சு பிள்ளை, குஞ்சன் எல்லாம் சிறு கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள்.

படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மாதவனிற்குத் தான். ஸ்ரீமன் மற்றும் நண்பர்களுடன் பேசும் வசனங்கள் எல்லாம் சரவெடி. கிளைமாக்ஸில் மப்படித்துவிட்டு மாதவன் வாயைத் திறந்தாலே திரையரங்கம் அதிர்கிறது. கமல் திரிஷாவை வேவுபார்க்கும் ஆளாக வருகிறார். படம் முழுக்க அடக்கியே வாசித்திருந்தாலும் சில க்ளோசப் காட்சிகளும் வருகின்றன. தனக்கு ஏற்பட்ட சோகத்தை விளக்கும் வண்ணம் (வழக்கம் போல) கண்ணீர் சிந்துகிறார். இதே போல காட்சியைப் பல படங்களில் பார்த்தாயிற்று வாத்தியாரே!! ஒரு ஆறுதல் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் வருவது.

ஒரு நடிகையின் நிலையையும், மக்கள் பார்வையையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். "காரவேனில் ஏன் நடிகை மற்றும் நடிகரின் அறைக்கு இடையே கதவிருக்கிறது" என்று மாதவன் கேட்க "அது ஒரு கன்வீனியன்ஸ். ஜிப் இருக்கிறதென்றால் திறந்தே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என்ற பதில் சுளீரென்கிறது. கிசுகிசுவிற்கும் நடுப்பக்க மசாலாவிற்கும் முக்கியத்துவம் குறையும் வரை நடிகைகள் மீதான எண்ணம் குறையாது.

படத்தின் வசனங்களில் அக்மார்க் கமல் + கிரேஸி மோகன் டச். படம் முழுக்க சரவெடியாக நகைச்சுவை வருவது வசனம் எழுதியிருப்பது கமலா கிரேஸி மோகனா? என்று எண்ணத் தோன்றியது. அதே சமயம் கமலின் கருத்து கந்தசாமி என்ற சிங்கமும் வெளிவராமல் இல்லை. அதிபட்சமான வீரத்தின் அடையாளம் தான் அஹிம்சை, பெண்ணியக் கருத்துகள், நாத்திகம் என்றெல்லாம் கருத்துகளைத் தூவிவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குட்படும் படியான கருத்துகள் எதுவும் (கமல் கவிதை தவிர) இல்லை என்று தான் நினைக்கிறேன். எப்படியும் துப்பறிவாளர்கள் கமலின் நுண்ணரசியலையும்,  (விமர்சகர்கள் கருத்துப்படி) நாத்திகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு வாதியையும் கண்டுபிடிக்காமல் இருக்கமாட்டார்கள். பார்ப்போம். 


கமலிற்கும் திரிஷாவிற்கும் புரிதல் ஏற்படுவதற்குக் காரணியாக அமைந்(த்)திருப்பது "கமல் கவிதை" தான். முதலில் திரிஷா, தான் "கிண்டில்" நோட்பேடில் ஏற்றியிருக்கும் கவிதையைப் படிக்கிறார். தன் மனத்திரையில் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற வரிகள் அழகு. அதற்கு கமல் மொழியும் வரிகளும் கைதட்ட வைக்கும் ரகம். வரலட்சுமி விரதத்தையும், அரங்கநாதரையும், தொப்பைக் காடைகளைச் சுட்ட தொந்திகணபதியை இழுக்க இக்கவிதைக்குத் தமிழகத்தில் தடா. அமீரகத்தில் இல்லை!! படத்தில் இக்கவிதை வரிகளுக்குப் பல இடங்களில் கரகோசங்கள் எழுந்தன.


"நீல வானம்" பாடலை மிகவும் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் முழுவதுமே பின்னோக்கிச் செல்வது ரசிக்கத்தக்கது. அப்படிப் பின்னாடிப் போகும் பொழுது தாலியைப் பிரிப்பது, மோதிரத்தைக் கழட்டுவதாக வருவது எல்லாம் ரசனையான காட்சியமைப்பு. திருமண ஒப்பந்தத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையைக் கமல் காட்டுகிறாரா? (அப்பாடா நமக்கும் ஒரு விசயம் மாட்டியிருக்கு). 

கடந்த வாரம் முழுக்க துபாய் சர்வதேசத் திரைப்படவிழாவின் படங்களைப் பார்த்தேன். அந்த ஹெங்க் ஓவரோ தெரியவில்லை, படம் ஆரம்பிக்கும் பொழுதே "ஒய்யாலே ஒய்யாலே" என்று திரிஷாவும் சூர்யாவும் ஆட்டம் போட ஆரம்பித்த பொழுது சிரித்து விட்டேன். அதே போல கமலின் கண்களில் உலகம் வருவதாகக் காட்டி "ஒலக நாயகன்" என்று பெயர் போடும் பொழுது "இந்தக் கண்றாவிய எப்படா நிறுத்தப் போறீங்க" என்று தோன்றியது. 


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சில இடங்களில் இவர் படம் தானா என்பதைச் சந்தேகிக்கும் வகையில் இழுக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். மற்றபடி க்ரூஸ் லைனரை அளவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், லைட்டிங் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு அறிவில்லை எனக்கு. தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின். சத்தமே இல்லை. ஐ லைக் தட்.

படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத். இசைத்தட்டு வெளியான பொழுது எனக்கு பாடல்கள் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆன்டிரியா பாடியிருக்கும் "ஹூ இஸ் த ஹீரோ" தான் எனக்கு மிகவும் பாடலாக இருந்தது. ஏதோ ஆங்கிலப் பாடலைக் கேட்கும் உணர்வை ஏற்படுத்தியது இந்தப்பாடல். கமலின் அறிமுகப் பாடலாக அமைத்திருப்பது கலக்கல்!! "நீல வானம்" பாடல் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நினைவில் நிற்கும். தேவிஸ்ரீபிரசாத் பாடியிருக்கும் மன்மதன் அம்பு பாடல் படத்தில் பின்னனியில் தான் வருகிறது. படத்தின் தீம் மியூசிக்கும் நல்ல இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அலேக்ரா" ஸ்டைலில் ஒரு ஆட்டத்தைக் கப்பலில் போடுகிறார்கள். இவரது பாடல்களில் அப்படி ஒரு எனர்ஜி. கார் ஓட்டும் பொழுது இவர் பாடலைக் கேட்டு அதிகமாக மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். பின்னனி இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

இப்படம் எந்தப் படத்தின் காப்பி, இஞ்சிப்பிரேஜன் என்றெல்லாம் தெரியல. நன்றாக டைம்பாஸாகிறது. டைமிங் நகைச்சுவைக் காட்சிகள் புரியாதவர்களுக்கு கண்டிப்பாகப் படம் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்றும். என் அருகில் இருந்தவர் நான் சிரிப்பதைப் பார்த்து என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். இது பி.கே.எஸ்.ல இருந்து தொடருது.

மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பிகேஎஸ், பஞ்சதந்திரம் போன்ற படங்களை ரசித்தவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும். இதமான ரொமான்ஸ் படங்களை ரசிப்பவர்களுக்கும் படம் பிடிக்கும்.

மன்மதன் அம்பு - ஆன் த மார்க்!!

Wednesday, December 22, 2010

விருந்து + சுஷி + உவ்வே

டிசம்பர் மாதம் வந்துவிட்டதை உணர வைக்கும் விசயங்களுள் குளிரிற்கும், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வருட இறுதி விருந்திற்கும்  தனி இடம். அதுவும் குளிர்கால கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன அமீரகம் என்றால் சொல்லவா வேண்டும். இது போன்ற விருந்துகளில் நடக்கும் ஆட்டங்கள் படு சுவாரஸ்யமானது. அலுவலகத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கும் உயரதிகாரிகள் எல்லாம் மெய் மறந்து (??) போடும் ஆட்டத்தைப் பார்ப்பதில் ஒரு தனி இன்பம். ஐரோப்பிய அன்பர்கள் பொதுவாகவே பார்ட்டி ஆட்டங்களில் சிறப்பாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது. விசாரித்துப் பார்த்தால் அவர்களுள் பெரும்பாலானோர் நடன வகுப்புக்குச் சென்றிருப்பது தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை மனதில் வந்தாலும், ஜோதியில் ஐக்கியமாகி நாமும் சில "சைலன்ட் டான்ஸைப்" போட்டுவிடுவது வழமை. சென்னையின் நினைவு வரும் தருணங்களுள் இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளும் ஒன்று. "ஊத்திகினு படுத்துக்கவா படுத்துக்கினு ஊத்திக்கவா"னு ரெண்டு குத்துப் போடலாம் என்றால் முடியாது. குத்து குத்து தான்.


விருந்துகளில் வழமையாகப் பல வகை உணவுகளும் பஃப்பே முறையில் வைக்கப்படும். பன்னாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் வாய்ப்பும், சுவைத்து முகம் சுளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கடந்த வாரம் நடந்த விருந்தில் ஏற்பட்டது. இந்த முறை ஜப்பானிய விருந்தகம் ஒன்றில் விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதையும் ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருந்தேன். ஜப்பானிய விருந்தகம் என்பதால் ஜப்பானிய ஸ்பெஷல் என்று அறியப்படும் "சுஷி"யைக் கொடுத்தார்கள். இது எப்படி இருக்கும் என்று எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நண்பனைக் கேட்டேன். "ஓ.. இட்ஸ் வெரி டேஸ்டி" என்று ஒரு "சுஷி"யை எடுத்து வாயில் வைத்து சப்புக் கொட்டினான். இதற்கு முன்பு ஒரு சில கொரிய உணவு வகைகளைச் சாப்பிருக்கிறேன் என்ற தைரியத்தில் (ஜப்பான் கொரியாவிற்குப் பக்கமாம்) "சுஷி"யை எடுத்து வாயில் வைத்தேன். ஒரு சின்ன அளவில் மென்று உள்ளே தள்ள முயன்றேன். வயிற்றைக் குமட்டுவது போல இருந்தது. மீனைப் பச்சையாக சாப்பாட்டினுள் வைத்து இனிப்புக் கொலுக்கட்டை ஸ்டைலில் வைத்திருந்தார்கள்(உள்ளே மீன் வெளியே சாப்பாடு). என் முகத்தைப் பார்த்த மலையாள நண்பன் "கிஃகிஃகி"என்றான். அருகே ஏதாவது மென் காகிதம் இருக்கிறதா என்று தேடி பொட்டலம் கட்டி வைத்தேன். 

ஏதாவது விருந்திற்கு செல்வதென்றால் வயிறைக் காலியாக வைப்பது கல்லூரிக் காலப் பழக்கம். அதுவும் பஃப்பே என்றால் சொல்லவா வேண்டும். கெஞ்சிய வயிறைக் பழரசங்களையும் சிக்கன் பார்ப்பிக்யூவையும் சாப்பிட்டுத் தேற்றினேன். இந்தியர்கள் பொதுவாகவே மாட்டிறைச்சியைச் சாப்பிட மாட்டார்கள் என்பதைப் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பன்றி இறைச்சிக்கும் நாம் உவ்வே சொல்லி விடுவதால் பெரும்பாலான சமயங்களில் உதவுவது சிக்கனும் ஆட்டுக்கறியும் தான். 

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்வபவர்கள் முடிந்த அளவு அந்தந்த உணவு வகைகளைச் சுவைத்துப் பழக்கப்படுத்துக் கொள்வது நல்லது. அயல்நாடுகளுக்குச் சென்றவுடன் நமக்கு ஊர் நினைவைத் தூண்டும் விசயங்களில் இரண்டாம் இடத்தில் நிற்பது உணவு தான். முதல் இடத்தில்? 

சீனாவிற்குச் செல்லும் பொழுது "வறுத்த வாத்துக்கறி" உணவகங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பீஜிங்கில் "ரோஸ்டட் டக்" மிகவும் பிரபலம். பெரிய குழுவாக சென்றோம் என்றால் நம் முன்னே வறுத்த வாத்தை முண்டமாகக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். விருந்திற்குச் சென்றவர்கள் அவரவர்க்கு வேண்டும் பாகங்களை பிரித்துச் சாப்பிடலாம். வாத்தில் பாதங்களை வைத்து செய்யப்படும் உணவுக்குச் சப்புக்கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற ரோஸ்டட் டக் உணவகங்களில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அயல்நாடுகளில் இருந்து புதிதாக வந்திருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக சிப்பந்திப் பெண்கள் வாத்துக்கறியை எப்படி சாப்பிட வேண்டும் என்று பயிற்சியளிப்பார்கள். அதாவது வாத்தை சன்னமான துண்டாக எடுத்து இனிப்பு கூழில் துடைத்து சில பொடிமாஸ்களை வைத்து வெத்தலை சுருட்டுவதைப் போல சுருட்டிக் கொடுப்பார்கள். அப்புறம் வாத்துக்கறி உள்ளே செல்லாமல் இருக்குமா?

சீனாவில் உள்ள சில கொரிய உணவகங்களில் மயக்க மூட்டப்பட்ட நிலையில் தவளையைச் சாப்பிடுவதும் (அவர்கள்) வழக்கம். உயிருள்ள தவளையை மதுபானக் குவளையில் போட்டு, சிறுது நேரத்தில் தவளை மயக்கமடந்தவுடன் எடுத்து... அதற்கு மேல் நான் சொல்ல வில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கொடுமை எல்லாம் அனுபவிக்கத் தேவையில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு சிக்கன் இருக்கும். இல்லை என்றால் மற்றதை விட்டுவிட்டு சாண்ட்விச், பீஸா என்று ரொட்டிகளின் அண்ணன் தம்பிகளுள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விடலாம்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டு உணவு முறைகளிலும் நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீனர்கள் கழுதை, மாடு என்று எதைச் சாப்பிட்டாலும் கடைசியில் சூப்பைக் குடிப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் இறைச்சியை சாப்பிட்டாலும் அதிகளவு காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அரேபியர்களின் உணவுகளிலும் பல நல்ல விசயங்களைப் பார்க்கிறேன். அயல்நாட்டில் வாழும் பொழுது அவர்கள் உணவு முறையையும் அதில் உள்ள நல்ல விசயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் பயணங்களும் விருந்துகளுக்கும் உவ்வே சொல்லாமல் இருக்கலாம்.

Saturday, December 18, 2010

துபாய் சர்வதேச திரைப்பட விழா - இன்ஷால்லாஹ் ஃபுட்பால் (காஷ்மீரி) (2010)

காஷ்மீரின் கதையை ஒன்றரை மணி நேரத்தில் எப்படி சொல்வது? குண்டுவெடிப்பும், துப்பாக்கிச்சூடும், சமீப காலமாக கல்லெறிதலும் தான் காஷ்மீரின் அடையாளமாக உள்ள நிலையில், காஷ்மீரின் கதையை கால்பந்தின் வாயிலாகச் சொல்கிறது இன்ஷால்லாஹ் ஃபுட்பால். 


கால்பந்தாட்டில் மிகுந்த ஈடுபாடும் திறமையும் உள்ள இளைஞன் பாஷா என்றழைக்கப்படும் பஷாரத். சர்வதேச கால்பந்தாட்ட வாரியத்தின் அங்கிகாரம் பெற்ற பயிற்சியாளர் அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த மார்கஸ். இவர் காஷ்மீரில் இஸாட் (ISAT) என்ற கால்பந்தாட்டப் பயிற்சி அமைப்பை நடத்தி வருகிறார். இவரது மனைவி ப்ரிசிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்கஸின் பயிற்சியில் சிறந்து விளங்கிய இரண்டு வீரர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள சில அணிகளில் விளையாட வாய்ப்பைப் பெற்று ஸ்பெயின் சென்றிருந்தனர். பாஷாவின் திறமையைப் பார்த்த ப்ரிசிலா பிரேசிலில் உள்ள ஒரு அணியில் விளையாட வாய்ப்பைப் ஏற்படுத்திக்கொடுக்கிறார். பிரேசில் செல்ல விரும்பும் பாஷாவிற்குத் தடை வந்தது கடவுச்சீட்டு ரூபத்தில்.

பாஷாவின் தந்தை பஷிர் ஹிஷ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் பயங்கரவாதி என்பது தான் பாஷாவிற்குக் கடவுச்சீட்டு கிடைக்காததற்கான காரணம். தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு பாஷா என்ன செய்வார்? பஷிர் ஏன் பயங்கரவாதியானார், பயங்கரவாதத்தைக் கைவிட்டு வெகுசன வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும் பாஷாவிற்குக் கடவுச்சீட்டை ஏன் தர மறுக்கிறார்கள் என்பவற்றை சம்பந்தப்பட்டவகளைப் பேசவிட்டே ஆவணப்படமாக (Documentary film) இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார்.

தான் ஏன் ஹிஷ்புல் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்தேன். பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு நடந்த விசயங்கள் எல்லாம் பஷிரின் மூலமே பதிவு செய்யப்பட்டுருக்கிறது. "அதிகாலை நான்கு மணிக்கு என்னை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற பொழுது, நான் உயிருடன் இருக்கப் போவது ஓரிரு மணி நேரம் தான் என்று நினைத்தேன்" என்று பஷிர் கூறியது, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய முன்னாள் பயங்கரவாதிகளின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது. "உன்னை வீட்டில் பிடிக்காமல் வெளியில் பிடித்திருந்தால், நீ என்னிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பாய் என்று தோன்றவில்லை" என்று இராணுவ அதிகாரி தன்னிடம் கூறியதும் பஷிரின் பேச்சில் தெரியவருகிறது.

"நான் பிறக்காத பொழுது என் தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு நான் என்ன செய்வேன்?" என்ற பாஷாவின் கேள்வி, ஒரு தலைமுறையினரின் கேள்வியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பாஷாவும் ரிப்போர்ட்டராக மாறி காஷ்மீரின் பல்வேறு தரப்பினரைப் பேட்டி எடுக்கிறார். அதில் ஒரு இளைஞர், "எனக்கு அப்பொழுது 3 வயதிருக்கும். என் தந்தையை அழைத்துச் சென்று வழியிலேயே கொன்று விட்டனர். இத்தனைக்கும் என் தந்தை பயங்கரவாதி அல்ல. அவரது தொழில் விரோதி இராணுவத்தினரின் உதவியுடன் கொன்றிருக்கிறார்கள். கொன்ற இராணுவ அதிகாரி ஒரு பயங்கரவாதியைக் கொன்றதாகப் பதவி உயர்வு வாங்கியிருப்பார்" என்று கூறும் பொழுது வேறொரு கோணம் தெரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடம் ஒரு வித அவநம்பிக்கை குடிகொண்டிருப்பது பேட்டிகளில் தெரியவருகிறது. 1990களில் நடந்த கலவரங்களில் ஹிந்துப் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து துரத்தபட்டதும், இன்னும் சிலர் பட்ட வேதனைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. அதே சமயம், சில ஹிந்துப் பண்டிட்கள் இஸ்லாமியருடன் ஒற்றுமையாக வாழ்வதையும் பதிவு செய்திருக்கின்றனர். 


கால்பந்தாட்டத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நம்பிக்கையை மார்கஸ் வெளிப்படுத்துகிறார். மார்கஸின் கால்பந்தாட்டப் பயிற்சிப் பள்ளியைப் பற்றியும், பாஷாவின் நிலையைப் பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் செய்தி வருகிறது. இச்செய்தியை வைத்துக்கொண்டு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாஹ்வையும் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கின்றனர். ஒமர் அப்துல்லாஹ் "பாஷாவைப் போல நூறு பேர், ஏன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கலாம். இந்த நிலை தொடராமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று வாக்களிக்கிறார். அதன் பிறகு பாஷாவின் நிலை என்ன ஆனது?

காஷ்மீர் - ஐரோப்பிய நாடுகளுக்குப் போட்டி கொடுக்கக் கூடிய அளவிற்கு பனிபடர்ந்த மலைகளையும், அழகிய நில அமைப்பையும் கொண்ட மாநிலம். ஆனால், எங்கு திரும்பினாலும் இராணுவத்தினர். 20 பேருக்கு ஒரு இராணுவ வீரர் இருக்கும் நிலை என்றைக்கு மாறும் என்று எண்ணம் வருகிறது, காஷ்மீரைப் படத்தில் பார்க்கும் பொழுது. "RESPECT ALL SUSPECT ALL" என்று ஒரு இராணுவப் பலகையில் எழுதியிருக்கும் வார்த்தை தான் இன்றைய காஷ்மீரின் நிலையைப் பிரதிபலிக்கும் விசயம்.

இன்ஷால்லாஹ் ஃபுட்பால் காஷ்மீரைத் தொடர்ந்துவரும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!


*

துபாய் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கொரியா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலாந்து, அரபு நாடுகள், பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். நானும் 4  படங்களையும் 8 ஆவணப் படங்களையும் பார்த்தேன். அதில் பாலஸ்தீனம் பற்றிய படங்களும் அடங்கும். அவை அடுத்த பதிவில்..

*

Monday, December 13, 2010

எப்பொழுது நாட்டிற்குக் கிளம்பப் போகிறாய்?


வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் அடிக்கும் சந்திக்கும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்தக் காற்றிற்கு ஏங்குபவர்கள் தான் அதிகம். நான் இந்தக் கேள்வியைச் சந்திக்கும் பொழுது "நான்கைந்து வருடம். என்னை வேறொரு இடத்திற்கு மாற்றாமலோ இந்தியாவிற்கு அனுப்பாமலோ இருக்கும் வரை" என்று தான் கூறியிருக்கிறேன். அதற்கு "நானும் இதையே தான் இருபத்தைந்து வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்பார்கள்.

இதோ வந்துவிடுகிறேன் என்று வெளிநாட்டிற்குக் கிளம்புபவர்கள் ஏன் அவ்வளவு சீக்கிரம் தாய்நாட்டிற்குத் திரும்பாமல் இருக்கிறார்கள்?

அலுவலகத்தில் இருந்து அனுப்புகிறார்கள், கூடிய விரைவில் பணம் பார்க்கலாம், திரையில் மட்டுமே பார்த்து வந்த வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்துப் பார்க்க ஆசை போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை. வறுமை, வேலையின்மை, கடன் போன்ற  காரணங்களுக்காக வளைகுடா, கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் அன்பர்களை இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் சந்திக்கும் நிலையைப் பற்றி வேறொரு கட்டுரையில்..

நாட்டிற்குத் திரும்பும் ஆசையுடன் வரும் அன்பர்களுள் பலர் தேடுவது அவர்கள் விட்டுச் சென்ற நாட்டை, நகரத்தை. ஆனால் அவர்களை வரவேற்கும் முதல் விசயம் எகிறி நிற்கும் செலவுகள். வீட்டு வாடகையில் ஆரம்பித்து, வாகனச் செலவு, உணவகங்களில் விலைப்பட்டியல், ஓட்டுனர் வாடகை என கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லும் விசயங்கள் ஏராளம்.

கடந்த இரண்டாண்டில் ஆறு முறை இந்தியா வந்தாலும், சென்னை சென்றது இந்த நவம்பரில் மட்டும் தான். சென்னையில் ஒரு வாரம் தங்கியதில் எனக்கு முதலில் சுட்டது எகிறி நிற்கும் வீட்டு வாடகை. 8000 ரூபாய் வாடகையில் கிடைத்த 2BHK ப்ளாட்கள் இப்பொழுது 12000 ரூபாயில். கார் பார்க்கிங் வசதியிருந்தால் மேலும் 2000 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளலாம். சென்னையிலேயே பல வருடங்கள் இருந்த எனக்கு சப்பைத் தண்ணிர் ஒரு அதிர்ச்சியான விசயமல்ல. [ என் மகனின் பள்ளிப்படிப்பிற்கு இந்தியா வந்துவிடவேண்டும் என்பது தான் என் ஆசை. அப்படி வரவேண்டும் என்றால் எந்தப் பாக்கத்தில், பேட்டையில் தங்குவது, அடுக்குமாடி வீடுகள் என்ன விலைக்கு விற்கின்றன, வாடகைக்குக் கிடைக்கின்றன என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்பதும் தான் இந்த விஜயத்தின் குறிக்கோள்களில் ஒன்று ]

முன்பு வாடகை வீட்டில் இருந்தது போல மீண்டும் இருந்துவிட்டுப் போக வேண்டியது தானே என்று, சென்னையைப் பற்றித் தெரிந்தவர்கள் எவரும் கூறமாட்டார்கள். வெளிநாடுகளில் வாடகை வீட்டு வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். வெளிநாட்டில் பிக்கல் புடுங்கல் இல்லாமல் வாழ்ந்தவர்களுக்கு, சென்னையில் வீட்டு உரிமையாளரின் புடுங்கலே போதும் அதிர்ச்சியை ஏற்படுத்த. வாடகை வீட்டிலேயே வாழலாம் என்றால் கிடைக்கப் போகும் / எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு ஏற்ப நல்ல வீடு கிடைக்க வேண்டுமே. வெளிநாட்டில் வாடகை வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை சென்னையில் பெற வேண்டும் என்றால் குறைந்தது 15000 முதல் 20000 வரை வாடகை கொடுக்க வேண்டியதிருக்கும். இது 2010ல். இந்த அளவு வாடகை கொடுக்க வேண்டும் என்றால் 50000 மேல் சம்பளம் வாங்கியாக வேண்டும். 

இங்கே ஒரு உண்மை என்னவென்றால், அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த அளவிற்குச் சம்பளத்துடன் வேலை கிடைக்குமா என்பதே!! இன்னொரு உண்மை, வெளிநாட்டை விட இந்தியாவில் வேலை அதிகம். சம்பளமும் குறைவு வேலையும் அதிகம் என்றால் யார் எளிதில் வரத் தயாராவார்கள்?

அடுத்து.. உணவகங்கள், போக்குவரத்து போன்றவை. சென்னை தி.நகரில் உள்ள ஒரு பவனில் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸின் விலை 30/- இங்கே அமீரகத்தில், அதே பவனின் கிளை உணவகத்தில் 3 திர்ஹாம் (36 ரூபாய்). பெரும்பாலான பொருட்கள் அனைத்தும் இது போன்றே விலையில். போக்குவரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஆட்டோவில் கேட்கப்படும் கட்டணம் ஏறக்குறைய அமீரகத்தில் டாக்ஸியில் கொடுக்கும் வாடகைக்கு இணையாக உள்ளது. போரூரில் இருந்து தி.நகரிற்கு 300 ரூபாய் கேட்கப்பட்டது. இதே தொலைவை இங்கே அமீரகத்தில் 30 திர்ஹாமிற்குள் முடித்துவிடலாம். [ இந்த ஒப்பீடுகள் சென்னை போன்ற நகரிற்குக் குடிபெயர்வதற்கு முன்பு கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இந்த ஊர் ஒசத்தி என்று கூறுவதற்காக அல்ல ]. சென்னையில் வாழும் ஆட்டோ ஓட்டுனர்களும் வாழ்க்கை நடத்தத் தானே வேண்டும். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மட்டும் தனிப்பதிவாக்கலாம்.

சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்களுள் பலர் (நான் உட்பட) சொல்லும் முக்கியமான காரணம் நல்ல கல்வி, குழந்தைகளுக்குக் கிடைக்கும் எக்ஸ்போஸர். இலட்சத்தைத் தொடவிருக்கும் நன்கொடை, அதிகமான கட்டணம் என்ற ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் சென்னைக்கு ஜெ போடும் முதல் காரணம் இது தான். அட நாங்கெல்லாம் வளரலியா, படிக்கலியா என்றால் அடுத்த காரணம் வேலைவாய்ப்பு. சொந்தக்காலில் நிற்பது, ஊரில் உள்ள நிறுவனங்களில் வேலை போன்ற விசயங்கள் எல்லாம் இருந்தாலும் சென்னை நோக்கி வரவழைக்கும் விசயத்தில் இரண்டாம் இடத்தில் வேலைவாய்ப்பு. நல்ல படிப்பு, அனுபவம் உள்ளவர்கள், திறமையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தயார் செய்து வைத்திருந்தால் அயல்நாட்டிற்கு இணையான சம்பளம் கிடைக்கும்.

ஆனால்??

வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ நேரில் சென்று நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். இத்தனை கஷ்டப்பட்டு சென்னைக்குச் செல்ல வேண்டுமா என்றால்.. தேவையில்லை.

வெளிநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போதிய வசதிகள் நம் ஊர்களில் கிடைக்க ஆரம்பித்து பல வருடங்களாகின்றன. தமிழகத்தின் ஏராளமான சாலைகள் நான்கு வழிப்பாதைகளாக மாறிவருகின்றன. சும்மா சொல்லக்கூடாது. நம் ஊரில் மேம்பட்ட சாலைகளில் பயனிக்கும் அனுபவம் வெளிநாடுகளில் கிடைக்காது. அழகாக மலையையும் தோப்புயும் வயல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே பயணிப்பது ஒரு தனி அனுபவம் தான். அது வேறொரு பதிவில்.. (அப்பா.. எத்தனை பதிவு எழுத வேண்டியிருக்கிறது..). பல நல்ல தொழிற்சாலைகள் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம். சென்னையில் 60 ஆயிரம் சம்பளமும், பொள்ளாச்சியில் 30 ஆயிரம் சம்பளமும், துபாயில் ஒரு இலட்ச ரூபாய் (8000 திர்ஹாம்) சம்பளமும் ஒன்று தான்!!

ஊரிற்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் நல்லது. நம் ஊர் அப்படியே இருக்கிறது என்று நினைத்திருப்பவர்களுக்கு.. சாரிங்க.

Saturday, December 4, 2010

கணிதமேதை இராமானுஜன் நினைவகம் - ஒரு விசிட்!!

ந்தியாவிற்குச் சென்று திரும்பிய ஹேங்க்-ஓவர் இன்னும் தீரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நான்கைந்து நாட்களைக் கும்பகோணத்தில் கழித்தேன். மனைவியின் ஊர். ஏறத்தாழ ஒன்றரை வருடம் கழித்துச் சென்றதால் ஏகப்பட்ட உறவினர்களுடன் சந்திப்புகள், விசாரிப்புகள். அதனால் வழக்கமாகச் செல்லும் தாரசுரம், சுவாமிமலை,நாகேஸ்வரன் கோயில், கும்பேஸ்வரன் கோயில், இராமசாமி கோவில், சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில் போன்ற இடங்களுக்கெல்லாம் போக முடியவில்லை. 

திருமணம் ஆனதில் இருந்து ஏகப்பட்டமுறை கும்பகோணத்திற்கு வந்திருக்கிறேன், ஆனால் கணித மேதை இராமனுஜன் அவர்களின் வீட்டைப் பார்த்ததில்லை. இந்த முறை, அவரது வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். "இராமனுஜத்தின் வீடு எங்கிருக்கிறது?" என்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைக் கேட்டால், "அவர் நான் படிக்கிற டவுன் ஐ.ஸ்கூல்ல படிச்சாராம். அவரோட படம் எங்க ஸ்கூல்ல இருக்கு" என்றார்கள்.  பிறகு சிலரிடம் கேட்டு, மௌனமே பதிலாகக் கிடைத்தபிறகு விசாரித்தால் சாரங்கபாணி கோயிலிற்குச் செல்லும் வழியில் இருக்கிறது என்றார்கள். சாரங்கபாணி கோயில், கும்பகோணத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று!!


ஒரு பகல் வேளையில் கணித மேதை இராமனுஜன் நினைவகத்திற்குக் கிளம்பினேன். தீபாவளிப் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே இருந்ததால் ஏகப்பட்ட கூட்டம். சாரங்கபாணி கோவிலிற்குப் போகும் வழியில் ஏதாவது ஒரு நினைவகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றேன். என் கண்களின் அகப்படவில்லை. என் மனத்திரையில் நினைவகம் என்றால் ஓரளவு பெரிய வீடாக இருக்க வேண்டும் என்றிருந்தது. தேடிப்பார்த்துவிட்டு அருகில் கேட்டால் ஒரு சிறிய வீட்டைக் காட்டினார்கள். எனக்கு ஆச்சர்யம்!!

இந்த இடத்தில் தான் கணித மேதை இராமானுஜன் வாழ்ந்தாரா? 


அந்தத் தெருவில் இருந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிறிதும் தொடர்பற்ற அளவில் ஒரு ஓட்டு வீடு. அருகில் சென்று பார்த்தால் ஒரு பலகையில் "SRINIVASA RAMANUJAN INTERNATIONAL MONUMENT" என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால் மழைநீர் வடிந்த பழுப்பேறிய சுவர்கள், இருள் படர்ந்த அறைகள். உள்ளே சென்றவுடன் கணித மேதை இராமானுஜத்தின் சிலை. சுவரெங்கும் இராமானுஜம் கண்டுபடித்த கணித சூத்திரங்கள் கண்ணாடி சட்டங்களில் மாட்டப்பட்டிருந்தன. சிலவற்றைப் புகைப்படம் எடுக்கலாம் என்று முயன்றேன். நினைவகத்தின் காவலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க படங்கள் எடுக்க முடியவில்லை. பத்திற்கும் குறைவான சூத்திரங்களே மாட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள படங்கள், இராமானுஜன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். 


இராமானுஜத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தால் 10 அடி - 10 அடியில் ஒரு ஆசாரம் (Hall), 10 அடி * 10 அடியில் ஒரு படுக்கையறை. அதில் ஒரு இரும்புக் கட்டில். சிறிய அளவே உள்ள சமையலறை. வீட்டிற்குப் பின்னாடி சென்றால் ஒரு சின்ன கிணறு. அவரது வீட்டைப் பார்த்த பொழுது ஏதோ ஒரு பழைய வீட்டிற்குச் சென்ற நினைவே ஏற்பட்டது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி உள்வாங்கிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. என்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. 


இராமானுஜத்தின் வீட்டிற்கு வெளியே வந்தால் பரபரப்பான சாரங்கபாணி கோயில் தெரு. பரபரப்பான கடைத்தெரு. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்துசெல்லும் வழி என்பதை அந்தத் தெரு நன்றாக நினைவுபடுத்தியது. இராமானுஜன் நினைவகத்திற்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று வருகைப் பதிவேட்டைப் பார்த்தேன். அக்டோபர் மாதம் முழுவதும் வருகை புரிந்தோர் 53 பேர் மட்டும் தான். எங்களையும் சேர்த்து. வந்திருந்தவர்களுள் பலரது முகவரி பஞ்சாய், ஆந்திரா, தில்லி, கேரளா என்றெல்லாம் இருந்தது. சரி.. நம்ம ஊர்க்காரர்கள் சாரங்கபாணியைப் பார்ப்பதே போதுமென்று நினைத்திருப்பார்கள்.

சாரங்கபாணி! சாரங்கபாணி!!

இந்த நேரத்தில் கந்தசாமியாக மாறி, "இது போன்ற சமகால மேதை வாழ்ந்த இடத்தை மற்ற நாடுகளில் எப்படிப் பாதுகாக்கிறார்கள்" என்றெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை.

Related Posts with Thumbnails