Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, January 5, 2011

கொலாஜ் - 05-01-11

நான் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் விசயங்களுள் சிறந்தவற்றை அன்பர்களுடன் பகிரும் ஊடகமாகவே என் பதிவுத் தளத்தைக் கருதி வருகிறேன். சில விசயங்கள் விரிவானதாக எழுதும் வகையிலும், பல விசயங்கள் துணுக்கு பாணியிலும் இருக்கும். இப்படி சின்னச் சின்ன விசயங்களை அளவின் காரணமாகப் பதிவாக எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இவற்றை "கொலாஜ் - Collage" என்ற பெயரில் தொகுத்து பதிவேற்றவுள்ளேன். 

கொலாஜ்

நான் எழுதும் பதிவுகளில் பெரும்பாலானவை இணையத்திலோ, புத்தகங்களிலோ படித்தவையாகவே உள்ளன. அவற்றைப் பதிவாக்கும் பொழுது ஒன்று வெட்டி ஒட்டுகிறேன், அல்லது பிரதியெடுக்கிறேன். இப்படிப் பல துணுக்குகளைப் வெட்டியோ, பிரதியோ எடுத்து எழுதும் பதிவிற்கு "கொலாஜ்" என்ற பெயரை வைக்கிறேன். "கொலாஜ்"ல் பெரும்பாலானவை சுட்ட செய்தியாக இருந்தாலும் அங்காங்கே அனுபவங்களாலும், கருத்துகளாலும் வண்ணமிட்டுத் தரவுள்ளேன். (இதற்கு முன்பு பாதசாரி என்ற பெயரில் எழுதி வந்த பதிவர் கொலாஜ்களைத் தந்துள்ளார் என்பது குறுஞ்செய்தி) 

2011 எப்படி இருக்கும் என்ற ஆருடங்களை ஏற்கனவே பல இடங்களில் படித்திருக்கிறோம். வணிகத்துறை, இணையத்துறை, தொழில்நுட்பத்துறைகளில் 2011ல் கவனிக்க வேண்டிய விசயங்களுள் சில..

எஃப்-வணிகம் (F-Commerce) 

ஈ-காமெர்ஸ், எம்-காமெர்ஸ் எல்லாம் நமக்குப் பழகிய கேள்விப்பட்ட விசயமாகிவிட்டது. அல்லது அசைபோட்ட விசயங்களாகிவிட்டன. இதோ இப்பொழுது எஃப்-காமெர்ஸ். எஃப்(F) - ஃபேஸ்புக் Facebook. இது வரையில் ஃபேஸ்புக் தளத்தை நண்பர்களுக்கு நம் நிலையைப் புதுப்பிக்கவும், தகவல்களைப் பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்துகிறோம். கூடவே சில வணிக நிறுவனங்களின் பக்கங்களை "லைக்"கவும் செய்கிறோம். "லைக்"கிக் கொண்டே இருந்தால் வணிக நிறுவனங்களுக்கு என்ன பயன்? அதற்கு விடையளிப்பதே எஃப்-வணிகம். ஃபேஸ்புக் தளத்தில் இருந்தே பொருட்களை வாங்கவும் விற்கவும் வழிவகைகளைக் கொண்டதாக எஃப்-வணிகம் அமையும்.

எம்-காமெர்ஸ் - என்பது தெரியாதவர்களுக்கு.. எம் - மொபைல்.  

காப்ட்சா விளம்பரம் ( CAPTCHA Advertising)

இணைய தளங்களிலேயே குடி கொண்டிருப்பவர்களுக்கு CAPTCHA தெரிந்திருக்கும். ஏதாவதொரு தளத்தில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் பொழுது நம்மை சோதிக்கும் வகையில் கோணல்மானலாக எழுத்தைப் படித்து எழுதச் சொல்லும். அதற்குப் பெயர் தான் CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart). கடவுச்சொல்லை உள்ளீடு செய்வது மனிதர் தானா என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம். சரி.. இதை வைத்து எப்படி விளம்பரம் செய்வது?

நாம் சில செய்தித் தளங்களுக்குச் செல்லும் பொழுது சில விளம்பரங்கள் வெளித் தோன்றும் (POP UP). நாமும் அவற்றை மூடிவிட்டு செய்தித்தளத்தைப் பார்வையிட சென்றுவிடுவோம். இப்படி நான் விளம்பரங்களைப் பார்வையிடாமல் போவதால் விளம்பரதாரரிற்கு என்ன இலாபம்? இதற்கு விடையளிப்பதே CAPTCHA விளம்பரங்களின் நோக்கம். நாம் அந்த விளம்பரங்களின் மீது உள்ள CAPTCHA வார்த்தையை உள்ளீடு செய்த பிறகு தளத்தை வாசிக்க முடியும்.

ம்ம்.. சில வருடங்களில் பதிவர்களின் தளங்களைப் பார்வையிடமும் CAPTCHA வருமோ?

அலுவலகத்தில் தூக்கம் - என் அலுவலகத்தில் "நம் அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் இல்லை?" என்ற கேள்வியுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கூறினார்கள். நான் கூறியது தூங்குவதற்கென தனி இடம் அல்லது அறை. அலுவலக வேளையில் எதற்குத் தூக்கம்? அலுவலகங்களில் வேலையின் நடுவே ஒரு அரை மணி நேரம் தூங்குவது அல்லது ஓய்வெடுப்பது நம் மூளையை உற்சாகப்படுத்துமாம். மதிய நேரம் நம்ம வீட்டில் சாப்பிட்ட பிறகு தூங்குவோமே அதோ போல.. ஆனால் 15 முதல் 30 நிமிடம் மட்டும் தூங்கினால் போதுமாம். அதற்கு மேல் தூங்கினால் விழித்த பிறகு கலக்கமாக இருக்கும். இதற்கு "Sleep Inertia" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். (படத்தில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஒரு அலுவலக அறை)

மங்களூர் விமான விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறியிருப்பது விமானத்தின் பைலட் தரையிறங்கும் பொழுது "Sleep inertia"வில் இருந்தாராம்.  

*

அமீரகத்தில் சமீபத்தில் விசாவிற்கான சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். முன்பெல்லாம் வேலை நிமித்தமான "Work Permit" விசாவை மூன்றாண்டுகளுக்குத் தருவார்கள். 2011ல் புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தான் தருவார்கள். இந்த மாற்றத்தினால் பணியாளர்களுக்குச் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒரே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது.  அதே நேரம் சரியாக பணியாற்றாத பணியாளர்களை நீக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும். இரண்டாடிற்கு ஒரு முறை புதிதாக விசாவைப் புதுப்பிப்பது நிறுவனங்களுக்கு பொருளாதார சுமையாகவும் கருதுகிறார்கள்.

பணியாளர்களைப் பொருத்த வரையில், இரண்டாண்டு முடிந்த பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது எளிதாகிறது.  முன்பைப் போல 6 மாத தடை ( BAN) இனி இல்லை. சுமூகமாக இரண்டாண்டை முடித்துவிட்டு வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு மாறுவதில் பிரச்சனையிருக்கப் போவதில்லை.

அமீரகத்தில் வேலைக்கான விசா இரண்டு வருடத்திற்குத் தான் என்பதைப் புதிதாக வர விரும்புபவர்கள் மனதில் கொள்வது நல்லது. அதோடு.. தரகரிடம் கொடுக்கும் பணமும்.. அதை இரண்டாண்டில் மீட்க முடியுமா என்பதும்!! தரகர்களிடம் பணம் கொடுத்து அமீரகம் வரும் எவருக்கும் இந்தப் பதிவைப் படிக்கும் வசதியிருக்காது. ஆகவே இதைப் படிப்பவர்கள் இச்செய்தியை தெரிந்தவர்களுக்குப் பகிருங்கள்.

*

இந்தக் கொலாஜைப் பற்றிய கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்!!

Sunday, December 26, 2010

2010ல் மொபைல் துறை - ரீகேப்


செல்பேசிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாரா? குளிக்காமல் கூட சென்று விடுவோம். பத்து பேர் ஒன்று கூடினால் அதில் நாலு பேர் செல்பேசியில் பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்துக் கொண்டோ தான் இருக்கிறோம். அதிகமாகப் பார்ப்பது செல்பேசியை, அதிகமாகக் காதலர்கள் முத்தமிட்டது செல்பேசித் திரையை, அதிகமாக புன்னகைப்பது செல்பேசியைப் பார்த்து. இப்படி இருக்கும் மொபைல் துறை 2010ல் எப்படி இருந்தது? 2010ல் அதிகமாக விவாதிக்கப்பட்ட விசயங்கள் எவை... ஒரு சின்ன ரீவைண்ட்.

ஆப்பிள் ஐ-பேட் & டேப்லட் (பட்டிகை கணினி)

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-பேட் பட்டிகைக் கணினி (டேப்லட்) செல்பேசிக்கும் மடிக்கணினிக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன்பே பல நிறுவனங்கள் பட்டிகைக் கணினிகளை கொண்டு வந்திருந்தாலும், ஆப்பிளின் வணிகத் திறமையாலும் ஐ-பேடின் செயல்பாடுகளாலும் தனி கவனம் பெருகிறது. ஐ-பேடின் வருகைக்குப் பிறகு அனைத்து கணினித் தயாரிப்பு நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்கள் பட்டிகையை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். பட்டிகைகளில் விளையாட்டுகள், இணைய மேய்ச்சல் (browsing), அழைப்புகள் என பல செயல்பாடுகளையும் இயக்க முடியும். இப்பொழுது அப்ளிகேஸன்ஸ் எனப்படும் பட்டிகைப் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்குவதில் "நான் முந்தி நீ முந்தி" என்று மென்பொருள் நிறுவனங்கள் இறங்கியுள்ளனர். ஐ-பேட்-ஐ வைக்கும் படியாக கால்ச்சராய்களையும் கோட்களையும் ஆடைவடிவமைப்பு நிறுவனங்கள் வடிவமைக்க ஆரம்பித்திருப்பதால் ஐ-பேட் 2010ன் பட்டியலில்.

ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு(OS)

சாம்சங் போன், மோட்டராலா போன் என்று கேட்ட நிலை மாறி "ஆண்ட்ராய்ட் போன் கொடுங்கள்" என்று வாடிக்கையாளர் கேட்கும் அளவிற்கு 2010 ஆண்ட்ராய்டின் வீச்சு வளர்ந்துள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல் இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் செல்பேசிகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. நுண்ணறிபேசிச் சந்தையில் கால் பங்கு ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு தான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வகை செல்பேசிகள் 5% தான் இருந்தன. இந்த வளர்ச்சிக்குக் காரணம் திறந்த மூலமாக (Open Source) இயக்க அமைப்பு இருப்பதே. எந்தவொரு செல்பேசி தயாரிப்பு நிறுவனமும் இந்த இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்சங் காலக்ஸி, HTC ஈவோ, மோட்டோரோலா ட்ராய்டு போன்ற செல்பேசிகள் எல்லாம் ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஷென்சன் - மீடியா டெக் கூட்டமைப்பு

கடந்த ஒரு வருடமாக செல்பேசிச் சந்தை ஆர்வலர்கள் புற்றீசல் போல செல்பேசி நிறுவனங்கள் கவனித்திருக்கலாம். கார்போன், மைக்ரோமாக்ஸ், வீடியோகான், லாவா, ஆலிவ், இண்டெக்ஸ், மாக்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் சந்தையில் இருப்பது மீடியாடெக்கால் சாத்தியமானது. சீனாவின் ஷென்சன் நகரில் உள்ள இந்நிறுவனம் செல்பேசி உருவாக்கத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் வாடிக்கையாளரின் (இங்கே கார்போன், மைக்ரோமேக்ஸ்) தேவைக்கு ஏற்ப வடிவமைக்கிறார்கள். பிறகு, ஷென்சன் நகரைச் சுற்றியுள்ள சீனச் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களின் செல்பேசிகள் தயாராகின்றன. இதனால் செல்பேசி நிறுவனத்தைத் துவங்க பெரும் முதலீடும், ஆராய்ச்சிக் கட்டமைப்பும் தேவையில்லாமல் போகிறது.

இது போன்ற சென்ஷன்-மீடியா டெக கூட்டமைப்பு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் 10-15% பங்கைப் பிடித்துள்ளதால் 2010ன் பட்டியலில் இடம்.

ஸ்மார்ட்போன்ஸ் (நுண்ணறிபேசி)

2000களின் ஆரம்பத்தில் செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தது 2006 முதல் மாற ஆரம்பித்தது. நோக்கியா நிறுவனம் வெளியிட்ட N95 என்ற செல்பேசி வந்ததில் இருந்து இணைய மேய்ச்சல், படம் பிடித்தல், விளையாட்டுகள், மின்னஞ்சல் என்று பல வேலைகளைச் செய்யும் நுண்ணறிபேசி என்ற நிலைக்கு மாறியது. நுண்ணறிபேசித் துறையை மேலும் சூடுபிடிக்க வைத்தது 2007ல் ஐ-போன் அறிமுகத்திற்கு பிறகு. பிறகு பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் சந்தைக்கு இறக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டி 2010ல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

கூகுள் சிட்டாடல் நிலையைப் (Status) பார்த்தால் From Mobile என்றும், ஃபேஸ்புக் நிலையைப் பார்த்தாலும் "From my i-phone or Nokia or Samsung Galaxy" என்று புதுப்பிப்பதைப் பார்க்க முடிகிறது. மடிக்கணியும், மேசைக் கணினியும் தேவையில்லை என்ற நிலைக்கு 2010ல் நுண்ணறிபேசிகள் கொண்டு வந்துள்ளன. டெல், ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட் போன்ற கணினி தயாரிப்பு நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நுண்ணறிபேசிகளுள் அதிகம் விவாதிக்கப்பட்டது ஐ-ஃபோன் தான் என்பதும், நோக்கியா நுண்ணறிபேசிகள் தான் அதிகமாக விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Applications (பயன்பாடுகள்) - ஆப்ஸ்டோர், நோக்கியா ஓவி

நுண்ணறிபேசிகளின் விற்பனையை ஊக்குவிப்பதில் அப்ளிக்கேஷன்ஸ் (பயன்பாடுகள்) பெரும் பங்கு வகிக்கின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் நிலை புதுப்பித்தல், செய்திகள், சிட்டாடல், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று இணைய மேய்ச்சல் சேவைகள் முதல் பஞ்சாங்கம், கல்வி, விவசாய மற்றும் வானிலைத் தகவல்கள் வரை அனைத்திற்கும் பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைச் செல்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். 

பயன்பாடுகள் விற்பனையில் ஆப்பிளின் ஆப்ஸ்டோர் முன்னனியிலும், நோக்கியா ஓவி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன. செல்பேசித் துறையில் இனி வருமானம் பயன்பாடுகளில் தான் என்பதைப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் இக்கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்கின்றனர். ஏர்செல் கூட அவர்கள் தளத்திற்கு விளம்பரம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

பயன்பாடுகளில் 2010ன் ஹிட்டு Angry Birds என்ற விளையாட்டு.

டூயல் சிம் போன்

இந்தியா போன்ற அதிக தொலைத்தொடர்புச் சேவை வழங்கிகள் உள்ள நாடுகளில் டூயல் சிம் செல்பேசிகள் பரவலாக விற்பனையானது. கார்போன், மைக்ரோமாக்ஸ், மாக்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களின் டூவல் சிம் செல்பேசிகள் ஹிட் ரகத்தைச் சார்ந்தவை. தற்பொழுது குறைந்த விலை செல்பேசிகளில் மட்டும் கிடைக்கும் இச்சேவை 2011ல் நுண்ணறிபேசிகளிலும் கிடைக்க ஆரம்பிக்கும்.

2ஜி /3ஜி//4ஜி

இந்தியாவில் இந்த வருடம், மொபைல் துறை சார்ந்த விவாதங்களில் 2ஜி-3ஜிக்கு அதிக பங்கு. உபயம் ராஜா-ராடியா. சட்டம் தன் வேலையைச் செய்வதால் இதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

ஐ-ஃபோன் 4ஜி வெளியானவுடன், அதில் ஏற்பட்ட கோளாறுகள் பரவலாகப் பேசப்பட்டன.

ப்ளாக்பெரி - மெஸஞ்சர்

ப்ளாக்பெரி நிறுவனத்தின் செல்பேசிகள் பேசப்பட்டதை விட அந்நிறுவனத்தில் மெஸஞ்சர் சேவை மிகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தனி தன்மையே (USP) இந்த மெஸஞ்சர் சேவை தான். ப்ளாக்பெரி செல்பேசியை வைத்திருப்பவர்கள் எவரும் இன்னொரு ப்ளாக்பெர்ரி வைத்திருக்கும் அன்பரை கட்டணமின்றி சிட்டாடல்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் நடக்கும் பரிமாற்றங்களை வேவு பார்க்க முடியாது என்ற விசயம் அதிக பரபரப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இந்தியா, சவுதி, அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் இச்சேவையை முடக்கப் போவதாகக் கூறின. பிறகு பல கட்டப்பேச்சு வார்த்தைக்குப் பிறகு தொடர்புப் பரிமாற்றங்களைப் பகிர்வது குறித்தான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நெகடிவ் பப்ளிசிட்டியால் ப்ளாக்பெரிக்கு அதிக விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலே விவாதிக்கப்பட்ட பெரும்பாலாவை அதிக விலை கொண்ட செல்பேசிகளைப் பற்றியதே. இவற்றை வாங்கியவர்கள், பயன்படுத்தியவர்கள் 30% தான். மீதமுள்ள 70 சதவிதத்தினர் பயன்படுத்துவது 1000-2000 ரூ விலையுள்ள அடிப்படை வசதி கொண்ட செல்பேசிகளைத் தான். இணைய வசதியை பயன்படுத்தாதவர்கள் இணையத்தைப் பயன்படுத்தப் போவது குறைந்தவிலை செல்பேசிகள் முலம் தான். அவற்றை 2011ல் பார்க்க முடியும்.

நுண்ணறிபேசிச் சந்தை சூடாகிக் கொண்டிருப்பது போட்டி நிறுவனங்கள் எழுப்பியுள்ள காப்புரிமை மீறல் வழக்குகளே சான்று. இப்போட்டு 2011ல் மேலும் வலுவடையும். பார்ப்போம்.


தொழில்நுட்பம் சார்ந்த இக்கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்

Sunday, September 5, 2010

கேபிள் - சில எண்ணங்கள்!!

"Problem of plenty" என்ற ஆங்கிலச் சொலவடை நம் தொலைக்காட்சிச் சேனல்களுக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற முறை ஊரிற்குச் சென்ற பொழுது வீட்டில் காணக்கிடைத்த தமிழ்ச்சேனல்களின் எண்ணிக்கை 25 முதல் 30ஐத் தொடலாம். முப்பது சேனல்கள் கிடைப்பதாலேயே ஒரு வித பரபரப்பு மனதில் படற ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சேனலில் வரும் நிகழ்ச்சி அல்லது பாடல் சரியில்லை என்றால் அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்ததில் என்ன.. என்ன என்ன.. என்ற தேடிக்கொண்டே சென்று ஏதாவது ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.

இப்பொழுது ரிமோட் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டிகள் வருவதேயில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பார்க்க முடிந்த ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளும், கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளும் இன்று, ஒன்று, வீட்டு அட்டாலியில் இருக்கலாம் அல்லது மண்ணை மாசாக்கியிருக்கலாம். அப்படி ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டில் வைத்திருந்த பொழுது இப்பொழுது மாற்றிய அளவிற்கு மாற்ற முடியாது. தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே சென்று "படக் படக்"கென மாற்ற வேண்டியதிருக்கும். சாலிடெர் போன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் இருந்தது போல "பட்டன்' இல்லாததால், வட்ட வடிவில் திருப்ப வேண்டியதிருக்கும். நான் திருப்பியதில் எத்தனையோ முறை திருப்புலியை மாற்றியும் இருக்கிறோம். ரிமோட் இல்லாத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தது போல இப்பொழுது இல்லை. 

கல்லூரிக் காலத்தில், விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு ரிமோட் இருந்தாலும் நண்பர்களின் தொடர் பயன்பாட்டிற்குப் பிறகு பொத்தான்கள் அனைத்தும் தேய்ந்து போய் விடும். பிறகு பூட்டு போடப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் கதவை நீக்க கம்பியை வளைத்து சேனல்களை மாற்றிய காலமெல்லாம் உண்டு. அது போன்ற நேரத்தில் சுற்று முறையில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக அமர்த்தப்படுவதும் உண்டு. ரிமோட் இல்லாத நாட்களில் வீட்டில் நான் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக இருந்ததுண்டு. எத்தனை முறை தான் எழுந்து சென்று சேனல்களை மாற்றுவது என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால், அப்பொழுதும் அதிகபட்சமாக ஆறேழு தமிழ்த் தொலைக்காட்சிகள், சில விளையாட்டுச் சேனல்கள் இருந்ததுண்டு. இப்பொழுது அளவிற்கு இருந்ததில்லை. 

சேனல்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது தான் உண்மை. சேனல்களை வசதிகள் அல்லது வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்றைய வாய்ப்புகள், வசதிகள் எல்லாமே நம் பொறுமையைச் சோதிப்பவையாகவே இருக்கின்றன. +95 போட்டு தொலைதூர அழைப்புகள் பேசியதில் இருந்த சுவாரஸ்யம் இன்று ஏனோ அலேபேசிகளில் பேசும் பொழுது இருப்பதாகத் தெரிவதில்லை. அலைபேசிகள் நமக்கு வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாலாட்டும் நாயைப் போல வைக்க வேண்டிய பணிச்சூழல்!! விடுமுறை நாட்களின் பொழுதும் "அவசரம் என்றால் என் எண்ணில் குறுந்தகவல்கள் அனுப்புங்கள்" என்று போட வேண்டிய கட்டாயம். அலைபேசிகளைத் தான் நம்மால் எதுவும் செய்ய முடிவில்லை, இந்த தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையையாவது ஏதாவது செய்ய முடியுமா? 

தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்பு அமீரகத்தின் எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play என்ற சேவைக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் பெற ஆரம்பித்துள்ளேன். அதனால் நான் பெற்ற பயனைக் கூறும் முன்பு E-Life - Triple Play பற்றி சில பத்திகள்.

o

முந்தைய பத்தியில் "எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play" என்று குறிப்பிட்டிருந்தேன். அதென்ன Triple Play?


வீட்டில் தொலைப்பேசி, இணைய அகண்ட அலைவரிசை( ப்ராட்பேண்ட் ) வசதி மற்றும் கேபிள் வசதியை இணைக்கும் சேவை தான் Triple Play சேவை. வீட்டில் ஒரு ரிசீவரை வைத்துவிட்டால் போதுமானது. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும் நம் வசதிக்கேற்ப!! இது போன்று இணையம், தொலைபேசி, கேபிள் மூன்றையும் ஒரே நிறுவனமே வழங்கும் சேவை இந்தியாவில் வருவதற்கு நீண்ட நாட்களாகாது என்றே தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இன்று இருப்பது போல இணையத்திற்கு ஏர்டெல், கேபிளிற்கு சுமங்கலி, தொலைப்பேசிக்கு பி.எஸ்.என்.எல் என்ற நிலையெல்லாம் மாறி ஏதாவது ஒரு நிறுவனமே மூன்று சேவையையுமே வழங்கும் நிலை வந்துவிடும். 

இப்படி ஒரு சேவை வந்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

கேபிள், இணைய வசதி, தொலைப்பேசி என்று ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதச் சந்தா கட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தும் ஒரு குடையின் கீழ்!! மூன்றையும் ஒரு நிறுவனமே வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு எந்த சேவை அதிகபட்சமாகத் தேவைப்படுகிறதோ அதைத் தெரிவு செய்து பயன்பெறலாம். உதாரணம்.. ஒருவருக்கு இணையவசதியே முக்கியமாக இருக்கலாம். சிலருக்கு கேபிள் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். 

எப்பொழுது இது போன்ற சேவைகள் வரும்?
o

மேலே குறிப்பிட்ட E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள், 8MBPS என்ற அளவிற்கு அதிவேக இணைய வசதி மற்றும் தொலைப்பேசிச் சேவை. தொலைக்காட்சிச் சேனல்களைத் தேர்வு செய்ததில் தமிழில் சன் டிவி, ஆங்கிலத்தில் சர்வதேச செய்திச்சேனல்கள், ஃபாக்ஸ், எம்.பி.சி போன்ற திரைப்படங்கள் சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், என்.ஜி.சி என்று  சில சேனல்கள் மட்டும் என் கணக்கிற்கு வரும்படி தேர்ந்தெடுத்துள்ளேன். சேனல்கள் குறைந்தவுடன் ரிமோட்டில் விளையாடுவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி எண்ணிக்கையைக் குறைத்துப் பாருங்களேன். குறைந்தது சில சேனல்களைப் "பேரண்டல் லாக்" மூலம் முடக்கி வைத்துப்பாருங்களேன்!!

தொலைக்காட்சியை பார்க்கும் நேரமும் குறைய ஆரம்பித்துள்ளதால் நான் என்ன இழந்துள்ளேன்? 

ஒன்றுமில்லை!! வீட்டில் யானியும், ராஜாங்கமும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. "அப்பாடா" என்ற பெருமூச்சை ரிமோட்டிடம் இருந்து கேட்கமுடிகிறது.

Friday, August 20, 2010

ஹலோ.. சாரிங்க.. ராங் நம்பர்!!

நீங்கள் புதிதாக ஒரு அலைபேசியை வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு அலைபேசி எண்ணும் தேவைப்படுகிறது. அந்தக் அலைபேசிக் கடைக்கு அருகிலேயே இருக்கும் பிரபல தொலைத்தொடர் நிறுவனத்தாரின் சேவை மையத்திற்குச் செல்கிறீர்கள். சில படிவங்களையும், அடையாளச் சான்றையும் கொடுத்த பிறகு சிம்கார்டை வாங்கி, அலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள். 

உங்கள் அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பிக்கின்றன. "நான் யாரிடம் இந்த எண்ணைக் கொடுக்கவில்லையே. என்னை யார் அழைப்பது?". வந்த அழைப்பை எடுக்கிறீர்கள். ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது உங்களுக்கு...


"டேய்.. ராசூ.. மணி பேசறேண்டா.." என்று ஆரம்பிக்கிறார்.
"ஹலோ உங்களுக்கு யாருங்க வேணும்"
"விஜயராஜ் இல்லீங்களா?"
"இல்லீங்க இப்ப தான் நான் இந்த நம்பர..." என்பதற்குள் துண்டித்துவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வெளிநாட்டு அழைப்பில் இருந்து வருகிறது.

"ஹலோ... விஜயராஜ் இருக்காருங்களா?"
"யாருங்க?"
"விஜயராஜ் நம்பர் தானுங்க?"
"யாருங்க? விஜய ராஜா? உங்களுக்கு யாருங்க வேணும்?"
"இல்லீங்க.. இந்த நம்பரத் தான் கொடுத்திருந்தாரு.. "
"நீங்க யாரு?"
"சாரிங்க... நான் தவறுதலா உங்களுக்குக் கூப்பிட்டுவிட்டேன்"
"நீங்க கோயமுத்தூருங்களா? நான் சிவகாசில இருக்கேன்.. நீங்க எங்கிருந்து பேசறீங்க?"
"நான் வெளிநாட்டுல இருந்து கூப்பிடறேன்.. சரி வச்சிடுங்க!1"

"இல்லீங்க நீங்க எந்த ஊருல இருந்து கூப்பிடறீங்க?"

"ஐயா.. நான் தெரியாம இந்த நம்பருக்குக் கூப்பிட்டிட்டேன்.. மன்னிச்சுடுங்க"

"இல்லீங்க தம்பி.. நீங்க.."

"டொங்க்"

புதிதாக ஒரு தொடர்பு எண்ணை வாங்கி "மேலே கூறியுள்ளதைப் போல" அழைப்புகள் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

*

மேலே குறிப்பிட்டுள்ள பேச்சுவார்த்தை கற்பனையல்ல!! அதில் வெளிநாட்டிலிருந்து பேசியது அடியேன் தான். இந்த விசயம் அன்றாடம் நடக்க ஆரம்பித்திருக்கும் ஒன்றே. 

ஒரே எண்ணிற்குத் தொடர்ச்சியாக "ஒரே நபரின்" பெயரை கேட்டு அழைப்புகள் வருவதில் இருந்தே புரிவது, "விஜயராஜ்" என்ற வாடிக்கையாளர் பயன்படுத்தியிருந்த எண் வேறொருவருக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது. சில மாதங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்து விட்டாலோ, இணைப்பைத் துண்டித்து விட்டாலோ, அந்த எண்  வேறொருவருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப் பயன்படுத்திய எண்ணை மற்ற வாடிக்கையாளருக்குக் கொடுக்கலாமா? 

"அலைபேசிகள் பெருமளவு பெருகிவரும் இன்றைய சூழலில், ஒரு எண் முடங்கிப் போவதற்கு பதிலாக வேறொருவருக்குத் தருவது சரியே" என்ற வாதம் வரலாம். ஆனால், இந்த எண் பயன்படுத்தப்பட்ட எண் என்பது புதிதாக வாங்குபவருக்குத் தெரியாமல் போனால் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல "தவறான அழைப்புகள்" வந்தால் என்ன செய்வது?

விஜயராஜ் ஒரு சாமான்யராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. அதுவே பிரச்சனைக்குரிய நபர் பயன்படுத்திய எண் நம் கைக்கு வந்தால் என்ன ஆவது? தொலைபேசி எண்களை தவறான வழிகளுக்குப் பயன்படுத்துவது பெருகிவரும் காலத்தில், இது போன்ற அழைப்புகள் புதிதாக எண்ணை வாங்குபவருக்குத் தேவையில்லாத தலைவலி தான்!!

இதற்கு ஏதாவது சட்டங்கள் உள்ளனவா? அன்பர்களுக்கு விடை தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்!!

*

அடுத்து விஜயராஜின் இடத்திற்கு வருவோம்..

ஏதோ ஒரு காரணத்திற்காகப் பழைய எண்ணைத் துண்டித்தவர் தன் நண்பர்களுக்கெல்லாம் புதிய எண்ணைத் தெரிவித்திருக்கலாம். அப்படி புதிய எண்ணைத் தெரிவிக்காமல் போனதால் தான் இத்தனை குழப்பம்.

நாம் இதைச் செய்கிறோமா?

இன்று சந்தையில் கிடைக்கும் அலைபேசிகள் பலவற்றுள் இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக் கொள்ளும் வசதி வரும் அளவிற்கு ஒரே நபர் இரண்டு தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது எளிதாகப் பார்க்க முடிகிறது. அலுவலகங்களில் தரப்படும் எண், சொந்த பயன்பாட்டிற்கு என ஒரு எண் என்று இரண்டு எண்கள் வைத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது பழைய எண்ணை அப்படியே கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஒரு தொலைத்தொடர்பு சேவையை விட அடுத்த சேவை நன்றாக இருந்தால் எண்ணை முடக்கிவிட்டு அடுத்த எண்ணிற்கு மாறுவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி நாம் எண்களை மாற்றும் பொழுது, நாம் நம் நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்.. "ஹலோ... யாருங்க... உங்களுக்கு எந்த நம்பருங்க வேணும்?" என்பதைத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

*

Friday, May 28, 2010

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?


சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...

எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..

நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..

என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.

*



ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:

நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:

திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக்  பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.




முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து "Most Sexiest Video Ever" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது?) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.


இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

*

Sunday, April 4, 2010

ஆப்பிள் "ஐ-பேட்"ம் - புலிகேசியும் மங்குனியும்!!




அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்த "ஐ-பேட்" அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்பதிவு செய்திருந்த 5 லட்சம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கும் ஏப்ரல் இரண்டாம் தேதி கிடைத்துள்ளது - செய்தி!!

இதைப் படித்த யோக்கியர்கள் கட்சித் தலைவர் புலிகேசி தன் கட்சிச் செயலாளர் மங்குனியை அழைக்கிறார்...

புலிகேசி: எங்கே சென்றீரைய்யா நீர்? எவ்வளவு நேரம் உன்னைத் தேடுவது?

மங்குனி: என்ன ஆச்சு தலைவரே? நீங்கள் ஆட்சி அமைப்பது போல கனவு ஏதாவது கண்டீரா?

புலிகேசி: ம்ம்ம்... என்னை "மன்னர் மன்னா"வென்று கூப்பிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன்.. உன்னை..

மங்குனி: (இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை) மன்னித்துவிடுங்கள் மன்னர் மன்னா?

புலிகேசி: இன்று செய்தித்தாளைப் பார்த்தாயா மங்குனி?

மங்குனி: என்ன மன்னா? நீங்கள் நடிகை சரசாவோடு ஜல்சா பண்ணியது வெளியாகிவிட்டதா?

புலிகேசி: சே.. சே... நல்ல விசயம் சொல்ல வந்தால் சரசா.. கிரசானுட்டு... இன்றைய செய்தித் தாளில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் என்னும் கருவியை வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்ததால் தான் கூப்பிட்டேன்..

மங்குனி: ஐ-பேட் என்றால் கிண்டில்(KINDLE)ற்குப் போட்டியாக வந்துள்ளதே அதுவா?

புலிகேசி: என்னய்யா? என்னப் பார்த்துக் கிண்டல் நக்கல் என்றெல்லாம் பேசுகிறாய்?

மங்குனி: இல்லை மன்னா.. ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி "ஐ.பேட்"டோ, அமேசான்(AMAZON) நிறுவனத்திற்கு கிண்டில். சரி.. நமக்கும் ஐ-பேட்டிற்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதிக்கும் நேர்மைக்கும் உள்ள சம்பந்தம் போல...??

புலிகேசி: ம்ம்ம்... உன்னை தலைகீழாகக் கட்டிவிட்டால் தான் சரியாக வருவாய்... கேளும்..

மங்குனி: ??

புலிகேசி: இந்த 'ஐ.பேட்'ஐ செய்தித்தாளாகவோ, புத்தகமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாமாம்..

மங்குனி: ஆ மன்னா புரிந்துவிட்டது. இந்த 'ஐ-பேட்'ஐ வைத்துப் படித்து நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்கிவிடலாம்!! அருமையான யோசனை!!

"பொளீர் பொளீர்"ரென மண்டையில் மங்குனியைக் குட்டிவிட்டு..புலிகேசி தொடர்ந்தார்..

புலிகேசி: சென்ற தேர்தலில் போது அ.ஆ.இ.ஈ.கட்சி... வீட்டுக்குவீடு செல்போன் கொடுக்கிறேன் என்று கூறி "ஆச்சி"யை.. சே.. "ஆட்சி"யைப் பிடித்தார்கள் அல்லவா? அது போல.. இந்த தேர்தலிற்கு நாம் ஒவ்வொரு மாணவருக்கும் "'ஐ-பேட்'ஐ வழங்கிறோம்" என்று அறிவிப்போம்!! எப்படி என் ராஜதந்திரம்?

மங்குனி: (இதுக்கொன்னும் குறைச்சலில்லை) உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?

புலிகேசி: கழிவறையில் அமர்ந்து கொண்டு தூங்கிய பொழுது.....

மங்குனி: (ஆரம்பிச்சிட்டார்யா..) அது சரி மன்னா.. இதனால் நமக்கென்ன பலன்?

புலிகேசி: சரியான மங்குனி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீரய்யா நீர்!! இப்பொழுதெல்லாம் மக்கள், என்ன இலவசமாகக் கொடுக்கிறோம்  எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பார்த்துத் தான் ஓட்டே போடுகிறார்கள்!! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!!

மங்குனி: அத்தனை "ஐ-பேட்"ஐ இலவசமாக எப்படி வழங்குவீர்கள்?

புலிகேசி: அதற்கும் யோசனை உள்ளது. மத்திய அரசு "பள்ளிக்கல்வியை அடிப்படை உரிமையாக்கும்" சட்டம் போட்டுள்ளது. இப்பொழுது எப்படி மாயாவதி பணம் இல்லை என்கிறாரோ, அதே போல நாமும் கூறி பணம் வாங்கிவிடுவோம். பிறகு ஆப்பிள் நிறுவனத் தலைவர் "ஸ்டீவ் ஜாப்ஸ்"ற்கு காஞ்சிபுரம் அருகில் தொழிற்சாலை அமைக்க 2000 ஏக்கர் இடத்தை 200 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டால் தீர்ந்தது. எப்படி என் திட்டம்?

மங்குனி: மன்னா? காஞ்சிபுரம் அருகே விவசாய நிலங்கள் உள்ளதே.. எப்படி?

புலிகேசி: இந்தப் புலிகேசிக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம். விவசாயம்.. மத்ததெல்லாம்.. அப்புறம் தான். 

மங்குனி: மன்னா.. இராஜதந்திரத்தில்.. அ.ஆ.இ.ஈ. கட்சியையே வென்றுவிடுவீர் போல??

புலிகேசி: மங்குனி.. தேர்தலிற்கு முன்பாக நான் ஸ்டீவைச் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்!!

மங்குனி: ஸ்டீவ் எங்கே.. நாம் எங்கே? இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. எதற்காக ஸ்டீவ்?

புலிகேசி: விசயம் இருக்குதுய்யா!! அந்த ஆள். 5 லட்சம் பேருக்கும் 'ஐ-பேட்'ஐ.. வீட்டிற்கே சென்றடையும் படி செய்திருக்கிறார். அது எப்படின்னு தெரிஞ்சுகிட்டா..

மங்குனி: புரிஞ்சிடுச்சு! தேர்தல்ல தோத்துட்டா அவர் கம்பெனி பொருட்களுக்கு விநியோகஸ்தர் ஆயிடலாம் தானே? நல்ல யோசனை!!

திரும்பவும்.. "பொளீர் பொளீர்"ரென மங்குனியின் மண்டையில் அடித்துவிட்டு..

புலிகேசி: தேர்தலின் போது.. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யும் பணத்தில் பாதியை கட்சிச் செயலாளர்களே சுருட்டிவிடுகிறார்களாம். இவரிடம் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டால்.. ஒற்றைச் சாளர முறையில் (Centralised Distribution System ) பணத்தைப் பட்டுவாடா செய்துவிடலாம்.. எப்படி?

மங்குனி: (ம்ம்ம்ம்... நமக்கிருந்த ஒரு வாய்ப்பும் போய்விடும் போலிருக்கே...)

புலிகேசி: நீ என்ன யோசிக்கிறாய் என்று புரிகிறது மங்குனி!! முதலில் ஸ்டீவ் ஜாப்ஸை என்னிடம் பேசச்சொல்..

........


ஸ்டீவ் ஜாப்ஸிடம்.. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற மங்குனிக்குக் கிடைத்த செய்தி.. திடுக்கிடச் செய்தது..

மங்குனி: மன்னா... தொலைக்காட்சியில் வரும் சூடான செய்தியைப் பார்த்தீர்களா?

புலிகேசி: நம்மிடம் ஸ்டீவ் பேசுப்போவது அதற்குள்ளே செய்தியாகிவிட்டதா?

"காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றி அ.ஆ.இ.ஈ கட்சித் தலைவர் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஆலோசனை"..

புலிகேசி:??????

o

Friday, April 2, 2010

நோக்கியா ஸ்போர்ட்ஸ் டிராக்கருடன் ஒரு காலைப்பொழுது..

நீங்கள் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்பவரா? நீங்கள் எத்தனை தூரம் நடந்தீர்கள், எவ்வளவு சக்தியை எரித்தீர்கள் என்று தெரிய வேண்டுமா? எனது அனுபவத்தை மேலும் படியுங்கள்...



o
அமீரக மக்களுக்கு வெள்ளிக்கிழமை சற்று தாமதமாகத் தான் துவங்கும். வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலும் நண்பர்களுடன் உலாவுவது, துரித உணவுகளில் சாப்பிடுவது என வெளியில் சுற்றுவது அமீரக மக்களின் வாடிக்கை. அதனால், வெள்ளிக்கிழமை காலைப் பொழுதுகளில் சாலைகள், பூங்காக்கள், கடற்கரைகள் என எங்கும் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும்!! அமைதியாக இருக்கும் காலைப்பொழுதுகளில் நடைப்பயிற்சியை மேற்கொள்வது எனக்கு வாடிக்கை!! வார நாட்களில் ஓரிரு நாட்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், வெள்ளி சனிகளில் தவறுவதில்லை!!

அமைதியான காலையில் எத்தனை விதமான மக்கள்! எவ்வளவு அழகான காட்சிகள்!!

ஈச்ச மரங்களின் நடுவே யோகாசப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அன்பர்கள், நடைப்பயிற்சி செய்யப் போனாலும் நெற்றியில் திருநீறு அல்லது பெண்களென்றால் குங்குமப் பொட்டு வைத்துச் செல்லும் நம்மவர்கள், நேற்றிரவு தூங்கவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு சோர்வுடன் காணப்படும் ஃபிலிப்பினோ ஜோடி. அதிகாலை ஏழு மணிக்கே KFC வறுத்த கோழியை நொறுக்கிக் கொண்டிருக்கும் அன்பர்கள், நடந்து கொண்டிருக்கும் பொழுது என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் பொழுதே என் பின்னாலிருந்து கடந்து செல்லும் ஐரோப்பியப் பெண் என பல தரப்பட்ட மக்கள்!!

இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பற்றியும், நாம் செல்லும் வழியைப் பற்றியும், பார்த்த விசயங்களைப் பற்றியும் நண்பர்களுக்குப் பகிர்ந்தால் நன்றாகத் தானே இருக்கும்!!

நாம் தினமும் மேற்கொள்ளும் பயிற்சியையும், பயிற்சியால் நாம் எரிக்கும் சக்தியையும், நாம் நடந்து சென்ற பாதையையும் வரைபடத்தில் காணும் வாய்ப்பை வழங்குவதே நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் (Nokia Sports Tracker ) செயலியின் வேலை!! 



நடை பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நம் செல்போனில் உள்ள GPSயைத் துவக்க வேண்டும். GPS வசதி செயல்பட ஆரம்பித்தவுடன் நாம் இருக்கும் இடத்தில் வரைபடம் தெரிய ஆரம்பிக்கும். பிறகு நாம் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பிக்க வேண்டியது தான். நாம் நடக்கும் அல்லது ஓடும் பாதையே தொடர்ந்து கொண்டே வரும் இந்த செயலி. இந்த வரைபடங்களில் உள்ள தூரத்தைக் கணக்கில் கொண்டு நாம் எவ்வளவு கிலோ மீட்டர் நடந்திருக்கிறோம், எவ்வளவு சக்தியை எரித்திருக்கிறோம் என்றெல்லாம் கணக்கை நமக்குத் தருகிறது.

அது மட்டும் தானா?

நீங்கள் நடக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையும், கேட்ட பாடல்களையும் இந்த செயலி சேமித்து வைக்கிறது. நடைப் பயிற்சியை முடித்த பிறகு நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் தளத்திற்கு தரவேற்றம் செய்யலாம்.

மேலும் வேறென்ன வசதியுள்ளது இந்த சேவையில்?

நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும் தான் நம் இதயத் துடிப்பைக் கவனிக்கத் தகுந்த நேரம். நம் இதயத் துடிப்பையும் இந்த செயலியின் மூலம் அளவிட முடியும். இதயத் துடிப்பு கச்சை(Heart Beat Belt) ஒன்றை நம் நெஞ்சில் கட்டிக்கொண்டு, புளுடூத் (Bluetooth) மூலம் செல்போனில் இணைத்தால் போது, நம் இதயத் துடிப்பும் சோதனையிடப்படும்!!

இன்று காலை நான் மேற்கொண்ட நடைப் பயிற்சியின் சுட்டி இங்கே... ஷார்ஜ புஹைராவில் இருக்கும் என் வீட்டில் இருந்து கிளம்பி புஹைரா கார்னிஷில் நடந்தேன். ஒரு மணி நேரத்தில் ஆறு கிலோமீட்டர் நடந்துள்ளேன். நான் கொடுத்த சுட்டியில் உள்ள காமிராவை அழுத்தினால் நான் எடுத்த படங்கள் தெரியும். 



இந்த சேவையை ஜி.பி.எஸ் வசதி கொண்ட அனைத்து நோக்கிய செல்போனிலும் மேலே கொடுத்துள்ள தளத்தில் இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இத்தனை காலமாக நடக்கும் பொழுது இதையெல்லாம் பயன்படுத்தியா வந்தோம்? உண்மை தான். இலவசமாக கிடைக்கும் சேவையைப் பயன்படுத்துவதில் தவறில்லையே. நடக்கச் சோம்பேறித்தனப்படும் அன்பர்களை இப்படியாவது ஊக்கப்படுத்தினால் நல்லது தானே?

குறிப்பு: படங்களைத் தரவேற்றும் பொழுது ஆப்பரேட்டர் கட்டணம் கட்டவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்க!!

Saturday, February 13, 2010

எங்கே செல்கிறது கூகுள் பஸ்?

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று.

ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

சரி எதற்காக இந்த கூகுள் பஸ்?

இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற  உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!!

இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது?

எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம்.

வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட்    (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த  விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!!

அது மட்டுமல்ல?

இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!!

இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. 

Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்?

கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!!

இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம்.

எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். 


ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.




என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?

Sunday, November 22, 2009

கூகுளை நினைக்கையிலே..


கூகுளை நினைக்காமலோ, கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாமலோ ஒரு நாளேனும் நம்மால் இருக்க முடியுமா? நாம் அன்றாடம் கண்டிப்பாக நினைக்கும் நபர்கள் / நினைக்கும் விசயங்களைப் பட்டியலிட்டால் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்களுக்கு அடுத்த இடத்தில் கூகுள் கண்டிப்பாக இருக்கும். சமகால நிறுவனங்களில், கூகுள் நிறுவனம் அளவிற்கு நம் வாழ்வில் எந்த ஒரு நிறுவனமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா?

காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக அலாரத்தை நிறுத்தியவுடன் நான் செய்யும் விசயம் என் செல்பேசியில் ஜி-மெயில் மின்னஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்பதே!! பிறகு நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களுடன் பேச்சாடுவது, குழுமங்களில் கும்மியடிப்பது, நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வது, வலைப்பதிவுகளைப் படிப்பது என்று எந்த செய்கையாக இருந்தாலும் நமக்கு உதவுவது கூகுளே!!

அலுவலக வேளையின் பொழுது ஏதாவது ஐயம் ஏற்பட்டாலும் உதவுவது கூகுளே!!

இன்றைய மாணவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. நொடிப்பொழுதில் நினைத்த விசயத்தை எல்லாம் பெறும் அளவிற்கு வசதிகள் என் மாணவப் பருவத்தில் இல்லையே என்று!! கல்லூரி நாட்களில் எந்தத் தலைப்பில் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூலங்களில் தேடிய நாட்களை நினைக்கும் பொழுது கூகுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மேலும் புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன்பும் கூட வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சலில் தான் அனுப்ப வேண்டும். 10 படங்களுக்கு மேல் அப்போதைய மின்னஞ்சலில் அனுப்பினால் மின்னஞ்சல் பெறுநர்க்குச் சென்றடையாது. ஆனால் இன்றோ, பிக்காசாவில் ஏற்றக்கூடிய படங்களுக்கு அளவே கிடையாது..

சில வருடங்களுக்கு முன்பும் கூட ஏதாவது கட்டுரைகளையோ, குறிப்புகளையோ படிக்க வேண்டுமென்றால் அந்த தளத்தில் சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இன்று கூகுள் ரீடரில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலான தகவல்கள் நம் முகப்புப் பக்கத்தில்!!

இடத்தைத் தேட காகித வரைபடங்களைத் தேடிய நமக்கு இணைய வரைபடங்களை வழங்யதுடன், அந்த இடத்திற்கு அருகில் என்னென்ன கடைகள், உணவகங்கள், சிறப்புமிக்க தலங்கள் உள்ளன என்றெல்லாம் தகவல்களைத் தருவதை நினைக்கும் பொழுது வியப்பே மிஞ்சுகிறது.

இது போதாதென்று இப்பொழுது கூகுள் அலை ( google wave) சேவையையும் துவக்கி மின்னஞ்சல், பேச்சாடல், புகைப்படங்கள் பகிர்தல், சிட்டாடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து புரட்சியைத் துவங்கியுள்ளனர் கூகுள் நிறுவனத்தார்.

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையைத் தற்பொழுது பல மொழிகளில் ஆரம்பித்துள்ளர். இன்னும் சில வருடங்களில் தமிழிலும் வந்துவிட்டால் நம் இணையப் பயன்பாட்டில் பெருமளவு மாறுதல்கள் ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.வருங்காலங்களில் பேச்சு மாற்று ( Voice Recognition cum Translation ) சேவையும் வந்துவிட்டால் தாய்மொழியைப் பயில்வது மட்டுமே போதுமானது என்ற நிலை வந்துவிடும். நடந்து வரும் மாற்றங்களைப் பார்க்கையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

தொழிற்சாலைப் புரட்சி, பசுமைப்புரட்சி, சமுதாயப் புரட்சி என்றெல்லாம் கேள்விப்படும் பொழுது "புரட்சி" என்ற வார்த்தையில் வலிமை புரியாமல் இருந்தது. ஆனால் இன்று கூகுள் செய்து வரும் தகவல் புரட்சியைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது புரட்சியின் அர்த்தம் புரிகிறது. பட்டங்களைக் கொடுப்பதில் வல்லவர்களான நாம் கூகுளிற்கும் ஏதாவதொரு பட்டம் கொடுத்தால் என்ன?

கூகுளைப் பற்றிய என் எண்ணங்களை பதிவேற்ற நினைக்கு இந்த வேளையிலும் உதவுவது கூகுளே!!

கூகுளிற்கு நன்றிகள்!!

*************************************************************************************

கடந்த ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாக நான் எழுதிய பதிவுகளைப் படித்தும் வாழ்த்தியும் ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள்!! அவர்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திய நிறையு எனக்கு ஏற்பட்டுள்ளது!!

மீண்டுமொரு முறை அனைவருக்கும் என் நன்றிகள்!!
..

Tuesday, November 17, 2009

பிளாக்கர், ஃபேஸ்புக், டிவிட்டர் - பகிர்தலில் கவனம் தேவையா?



நீங்கள் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கிய பதவியில் வேலை பார்த்து வருகிறீர்கள். உங்கள் கீழ் பல அரிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. திடீரென்று, ஒரு நாள் காலையில் இணையதளத்தைப் பார்க்கும் பொழுது உங்கள் நிறுவனத்தின் புதிய ஆய்வைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.


பல செய்திகள் உண்மையானதாகவும், சில கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் இருக்கிறது. ஆய்வில் உள்ள பல விடயங்கள் வெளியாகியிருப்பதால் போட்டி நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபடலாம். இதனால் பாதிக்கப் போவது யார்?


யார் இது போல செய்திகளை வெளியிட்டிருப்பார்கள் என ஆராய்ந்து பார்த்ததில், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தனது வலைத்தளத்தில் இந்த ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பது தெரிகிறது. சில நூறு வாசகர்கள் தனது தளத்திற்கு வருவதற்காகவே இதைச் செய்துள்ளதாகவும் தெரிகிறது.


இந்தச் சூழலில் என்ன செய்வீர்கள்?

******

உங்கள் நண்பர் ஒருவர் பொருளாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். தான் பணியாற்றி வரும் துறை சார்ந்த விடயங்களைப் பற்றி சில சிட்டாடல்களை டிவிட்டர் தளத்திலும், ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிட்டு வருகிறார். அதனைப் பற்றி அவரிடம் விசாரித்தால் தான் செய்த பொருளாதார ஆய்வைப் பற்றியே கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்!


அவர் செய்த ஆய்வைப் பற்றி வெளியிட்டாலும், பொருளாதார ஆய்வைப் பற்றிய சின்னச் செய்தியானாலும், அது அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தச் செயல்பாடுகளைப் பாதிக்க வல்லது.


******

உங்கள் நிறுவனத்தில் நன்றாக வேலை பார்க்கும் ஒருவர் பதிவுகளையும், கட்டுரைகளையும் எழுதி வருவது தெரிய வருகிறது. என்ன எழுதுகிறார் என்று பார்த்தால், தொழிலிற்கு அப்பாட்பட்ட விடயங்களை எழுதி வருவது தெரிகிறது. ஆனால், இவர் பல கருத்துகளை அலுவலக நேரத்தில் வெளியிட்டிருப்பது தெரிய வருகிறது.

தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியை முடிப்பதில் எந்தக் குறையும் வைக்காதவரிடம் எப்படி இதை எடுத்துக் கூறுவது?

******

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் யாவும் இன்றைய சூழலில் பார்க்கக் கூடயவையே.

ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்பு நிறுவனங்கள் பெருகிக்கொண்டே வருவதும், இதில் பயணர் கணக்கை வைப்போர் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.


சென்ற ஆண்டு 2 மில்லியன் பயணர் எண்ணிக்கை கொண்ட டிவிட்டர் தளத்தில் இன்றைய பயணர்கள் எண்ணிக்கை 30 மில்லியன். சமூக வலையமைப்புச் சேவைகளில் கிடைக்கும் தொடர்புகளும், நட்புகளும், தகவல்களும் இந்த சேவைகளின் வளர்ச்சிக் காரணம் எனலாம்.

ஒரு கட்டுரையை தன் தளத்தில் வெளியிடும் பொழுது கிடைக்கும் வாசகர் பார்வையும், நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் புகழும் பலரையும் இது போல சமூக வலைத்தளங்களுக்கு இழுக்கின்றன. அதுவே யாரும் வெளியிடாத கருத்தாகவோ, ஆய்வைப் பற்றிய தகவல்களாகவோ இருந்தால் என்னாகும்?


மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணங்கள் இந்த வகையையே சாரும். சமூக வலையமைப்புச் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு நமக்கிருக்கும் பொறுப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமா?



சமூக வலையமைப்புச் சேவைகளைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்:


* நாம் யார்? என்ன செய்கிறோம்? சமூக வலையமைப்புகளில் நம் பங்கு என்ன என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்றுகிறோம், எந்தத் துறையைப் பற்றி எழுதப் போகிறோம் என்று முடிவெடுப்பது முக்கியம். நம் நிறுவனத்தின் பொருளைப் பற்றி நல்ல விடயங்களைப் பற்றி எழுத நினைத்தாலும், அந்த நிறுவன வெளித்தொடர்புத் துறையினர் (Public Relations ) வெளியிடுவது போல இருக்காது.



* காப்புரிமையைப் (IPR - Intellectual Property Rights) பற்றிப் புரிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ எழுதும் முன்பு அந்தத் தகவல்கள் எப்படிக் கிடைத்தது, எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பது முக்கியமான ஒன்று. வெளிவராத ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை வெளியிட நேர்ந்தால் அந்த நிறுவனம் நம்மை நீதிமன்றம் வரையிலும் கூட்டிச்செல்லலாம்.

* சர்ச்சையான, பரபரப்பான கருத்துகள் என்றுமே பிரபலமாகக் கூடியவை!! ஆனால் அந்தக் கருத்து நாம் வகிக்கும் பதவிக்கும் வேலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் சசி தரூர் "கால்நடைகள் வகுப்பை"ப் பற்றி டிவிட்டரில் சிட்டாடியதால் ஏற்பட்ட பரபரப்பு அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சில நாடுகளில் சமூக வலையமைப்புகள் தனிக்கைகளுக்கு உள்ளானவை என்பதும் எந்தந்த நாடுகள் அவை என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது.


* நாம் பார்க்கும் பணியைப் பற்றிய கருத்துகளை ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர் போன்ற தளங்களில் வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் நாம் வெளியிட்ட கருத்துகளை மறந்து விட்டாலும், எங்காவது ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது. "Job is boring" என்று வெளியிட்ட கருத்திற்காக ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் நடந்தேறியுள்ளது.


* தனிப்பட்ட விசயங்களைப் பற்றியோ, புகைப்படங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிடவது பாதுகாப்பிற்கு நல்லதல்ல. ஒருவரை, நண்பராக இணைப்பதற்கு முன்பு அவர் நன்றாகத் தெரிந்தவரா என்பதைச் சிந்திப்பதும் நல்லது.


* தொழில் நிறுவனங்களுக்கு, ஊழியர்கள் பணி நேரத்தில் சமூக வலையமைப்புகளில் பங்கு கொள்வது தலைவலியாகி வருகிறது. நம் நண்பர் வெளியிடும் கருத்திற்கோ கட்டுரைகளுக்கோ உடனடியாக மறுகருத்து அல்லது பின்னூட்டமளிக்க வேண்டுமென்ற கட்டாயம் உள்ளதா? அலுவலகத்தில் இது போன்ற சிட்டாடல்களையும், கருத்துகளையும் வெளியிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

* எல்லா வற்றிற்கும் மேலாக, நமக்கு எது முக்கியம் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும் நல்லது.


நான் படித்தவற்றையும், கேட்டவற்றையும் கட்டுரையாக பதிந்துள்ளேன். உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.

Saturday, October 17, 2009

எல்லாம் பாஸ்வர்ட் மயம்.

நீங்கள் கடவுச்சொற்களை எப்படி தேர்தெடுக்கிறீர்கள்? எத்தனை கடவுச் சொற்களைப் (பாஸ்வர்ட்) பயன்படுத்துகிறீர்கள்? பத்து ? இருபது? ஐம்பது?

சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பனின் மின்னஞ்சல் முகவரியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவருக்கு விமானப் பயணச்சீட்டைப் பதிவு செய்யப் பணம் தேவைப்படுவதாகவும், என் கடனட்டை எண்ணையும் கடவுச்சொல்லையும் தருமாறும் கேட்டிருந்தார். அலைபேசியில் கேட்காமல் அவர் எதற்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. என் நண்பரை அழைத்து விசாரித்தால் தன் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டள்ளது என்றார்.

அவரது கடவுச்சொல்லைப் பற்றிக்கேட்டால் பொதுவான ஒன்றைத்
தேர்ந்தெடுத்ததாகக் கூறி வருத்தப்பட்டார். பிறகு நான் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி எனக்கு வந்ததைப் போல மின்னஞ்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்தேன்.

**

1998ல் ஹாட்மெயில் கணக்கைத் துவங்கியது தான், நான் இணையத்தில் பதித்த முதல் கடவுச்சொல். அதன் பிறகு மட்டும் எத்தனை கணக்குகள்? எத்தனை கடவுச்சொற்கள்?

* யாஹூ, லைக்கோஸ்மெயில், ரீடிஃப்மெயில், இந்தியாடைம்ஸ் மெயில் என்று ஜிமெயில் வரையில் மட்டும் ஆறேழு கடவுச்சொற்கள்.

* கடனட்டைகள், காசளிப்பு அட்டைகள் என நான்கைந்து கடவுச்சொற்கள். வங்கிகளின் இணைய சேவைக்கென நான்கைந்து பயணர் முகவரிகள் மற்றும் கடவுச்சொற்கள்.
* விகடன்.காம், எகனாமிக் டைம்ஸ் என்று இலவசமாகவும் கட்டணமுறையிலும் படிக்கும் இணைய பத்திரிக்கைகளின் கடவுச்சொற்கள்.
* அலுவலகத்தில் ஒவ்வொரு மென்பொருள் அமைப்பிற்கும் தனித்தனியாக கடவுச்சொற்கள். அதிலும் ஒவ்வொன்றையும் மூன்று மாதத்திற்கொரு மாற்றவும் வேண்டும், முன்பு வைத்ததாகவும் இருக்கக் கூடாது.

* இது போதாதென்று புதிதாக ஆர்குட், ஃபேஸ்புக், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்புச் சேவைகள், நௌக்ரி, டைம்ஸ்-ஜாப்ஸ் போன்ற வேலைவாய்ப்புத் தளங்கள், திருமணத்தகவல் தளங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காலை முதல் மாலை முதல் நாம் அதிகமாக நினைவுகொள்வது என்னவென்று பார்த்தால் அது கடவுச்சொற்களாகத் தான் இருக்கும். ஆனால், அந்த கடவுச்சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம்? போதுமான அளவு பாதுகாப்பான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?

பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் 123456, abcd1234, அல்லது பெயரையோ, மனைவியின் பெயரையோ தான் கடவுச்சொற்களாகத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படித் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் பாதுகாப்பானதா இருக்கிறதா?
நாம் பாதுகாப்பாக சேவைகளைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

* எல்லா சேவைகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
* rajini123, vijay123 போன்ற எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய கடவுச்சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. குறைந்தது &#*%@$ போன்ற எழுத்துக்கள் உள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது.

* சுயதகவல்களைக் கடவுச்சொற்களில் பயன்படுத்தக்கூடாது. எங்காவது நாம் நம் பெயரையோ, குடும்பத்தினரின் பெயர்களையோ கொடுக்க நேர்ந்தால் இது போன்ற கடவுச்சொற்கள் ஆபத்தானவை.
* ஐம்பது அல்லது அறுபது கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பது கடினமே. அப்படியிருக்க அந்த கடவுச்சொற்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் மிகவும் முக்கியமானது.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று நாம் இணையதள சேவையையோ, மின்னஞ்சல் சேவையையோ துவங்கும் பொழுது கடவுச்சொற்களை மறக்க நேர்கையில் வெளிக்கொணர சில கேள்விகளைக் கேட்பார்கள். உங்கள் சொந்த ஊர் எது? உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது? போன்ற கேள்விகளுக்கு சென்னை, கிரிக்கெட் என்று உண்மையாக பதிலளிக்காமல் எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

என் அனுபவத்தையும், நான் படித்ததையும் பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவு செய்யுங்கள்.

***

Thursday, October 1, 2009

கூகுள் மேப்மேக்கர் பற்றி தெரியுமா?


உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? எந்த அளவிற்குத் தெரியும்?

"ஏப்பா, எங்க ஊரப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது.

உங்கள் ஊரின் முக்கிய தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் வரைய உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. கூகுள் மேப்மேக்கரில்.
"கூகுள் மேப்ஸ் நமக்குத் தெரியும் தானே" என்று நினைக்காதீர்கள். விக்கிமேப்பியா, கூகுள் மேப்ஸின் முந்தைய வெளியீடுகளில் இல்லாத அளவிற்குத் துல்லியமாக நாம் நம் ஊர்களை வரைய முடியும்.

இதற்காக வடிவமைக்கப்பட்டதே கூகுள் மேப்மேக்கர் தளம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியே போதுமானது.


மாவட்ட தலைநகரங்களைத் தவிர்த்து சிறு நகரங்கள், கிராமங்களுக்கெல்லாம் நல்ல இணையதள வரைபடங்கள் உள்ளனவா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பக்கத்தில் உள்ள கூகுள் வரைபடத்தில் உடுமலைப்பேட்டையின் (என் ஊர்) பிரதான் நெடுஞ்சாலைகளைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. இப்பொழுது நான் எனது பள்ளியையும், வேறொரு அன்பர் ஊரில் உள்ள திரையரங்கையும் வரைபடத்தில் ஏற்றியுள்ளார். தெருக்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கோயில்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

எப்படி சரியாக இடத்தைக் குறிக்க முடியும்?


இந்த வரைபடத்தில் மீட்டர், கிலோமீட்டர் போன்ற அளவுகோல்கள் உள்ளன. உங்கள் தெரு பிரதான சாலையில் இருந்து 100 மீட்டர் என்பது உங்களுத் தெரியும் தானே!

சரி, தவறாகக் குறித்து விட்டால்?

அதற்கும் வழிவைத்திருக்கிறார்கள் கூகுள் மேப்மேக்கர் நிறுவனத்தார். நீங்கள் வரைந்த / குறித்த இடத்தை மற்றொருவரும் சான்றளித்தாலே (மாடரேஸன்) இறுதியாக்கப்படும். இப்படி பயணர்களிடம் ஒரு சேவையை விரிவாக்கிப்பெறுவதற்குப் பெயரே CROWD SOURCING என்பது. விக்கிப்பீடியாவும் இந்த முறையிலேயே செயல்படுகிறது.

இந்த மேப்மேக்கரை வடிவமைத்தது கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பணியாளர்களே.கீழே உள்ள காணொளியைப் பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.


என்ன தயாரா?

வாங்க கொட்டாம்பட்டி, பாப்பம்பட்டி, கோவில்பாளையம், குத்தாலம், சுங்குவார்சத்திரம், சூளகிரி, அம்மாபேட்டை, குளச்சல்னு நம்ம கிராமங்களையெல்லாம் வரைபடத்தில் ஏற்றுவோம்.
சென்னை போன்ற மாநகர அன்பர்கள் இது ஏதோ கிராமங்களுக்கு மட்டும் தான்னு நினைக்க வேண்டாம். உங்களுக்கு அறிமுகமான திரையரங்கங்கள், காபிக்கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், தெருக்கள், பல்பொருள் அங்காடிகள் அனைத்தையும் கூகுள் மேப்மேக்கரில் ஏற்றுங்கள்.
உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்.
..
Related Posts with Thumbnails