
"நீங்கள் ஓவியங்களை வரையும் பழக்கம் உள்ளவரா? கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது? கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது?" போன்ற கேள்விகளை என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுது எனக்கு வெகுவாக கிடைத்த பதில்கள் "இல்லை","பள்ளிக்கூடத்தில் வரைந்ததோடு சரி","ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை" போன்றவை!!
பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் விருப்பமான வகுப்பென்றால், அது ஓவிய வகுப்பே!! ஓவியப் பாடத்திற்கு மதிப்பெண்கள் இருக்காது. ஓவிய வகுப்பை நடத்த வரும் ஆசியரும் கண்டிப்பு இல்லாதவராக இருந்ததால் வகுப்பில் ஒரே சிரிப்பொலியாக இருக்கும். மேலும் ஒவ்வொருவம் வரைவதைப் பார்த்த கிண்டல் செய்வது என்று கலகலப்பாகச் செல்லும். அதுவே பெரிய வகுப்பிற்கு வந்து விட்டால் ஓவிய வகுப்புகள் குறைந்துவிடும். அத்துடன் நமக்கு ஓவியங்களுடன் கூடிய தொடர்பும்!!
நம்மில் பெரும்பாலானோர்க்கு ஓவியத்துடன் தொடர்பென்றால் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் இடம்பெறும் ஓவியங்கள் தான். ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது கூட பெரும்பாலானோர்க்கு தெரியாத நிலையே இருக்கிறது. நல்ல இசையை ரசிப்பவர்கள், நல்ல நூல்களை வாசிப்பவர்கள் கூட ஓவியங்களை ரசிப்பதோ பார்த்து லயிப்பதோ கிடையாது.
ஓவியங்கள் என்றாலே நமக்குப் புரியாத விசயங்கள் என்றோ மேல் தட்டு மக்களுக்கானவை என்றோ நாம் நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். நல்ல ஓவியங்களில் வெளிப்படும் கற்பனை வளமும் வடிவங்களும் நம்மை ஒரு தனித்த அனுபவ நிலைக்கு கூட்டிச் செல்லும் வலிமைப் படைத்தது. நம் மனத் திரையினை ( MIND SHARE) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும், அரசியல் நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு ஓவியங்கள் இடம்பெறாமல் போனது ஏனோ தெரியவில்லை.
நான் சென்னையில் இருக்கும் பொழுது கேலரிகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி நான் பார்த்து ரசித்த ஓவியங்களையும் ஓவியர்களையும் இடுகைகளில் அறிமுகம் செய்கிறேன். இந்த இடுகையில் ஓவியர் சிவபாலன்!! இளைய தலைமுறை ஓவியர்களுள் குறிப்பிடும்படியானவர்.
நீங்கள் யானையை ரசித்திருக்கிறீர்களா? கடலும் யானையும் குழந்தையின் சிரிப்பும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தராதவை!! யானைகளின் தோற்றம் தரும் பிரமிப்பு, பெரிய உருவம், சிறிய கண்கள், பெரிய காதுகள் என யானைகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோயில் ஊர்வலத்தில் செல்லும் யானை, சிறுவர்கள் சூழ தெருவில் நடந்து வரும் கோவில் யானை என ஓவியர் சிவபாலனின் ஓவியங்களில் யானைக்குத் தனி இடம் தான்!!
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி, நல்ல வெயில் வேளை, நிலமெங்கும் மரக்கிளையின் நிழல்கள், தூரத்தில் தெரியும் ஒரு ஆட்டுக்கூட்டம் என்று இவரது இயற்கைக் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தர வல்லது. நிழல்கள் இவரது ஓவியங்களில் உயிரோட்டத்துடன் இருப்பது சிறப்பு.
தோளில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் வயதானவர், குழந்தையுடன் தூரி விளையாடும் பெண்கள், மாட்டுச் சந்தை நிகழ்வுகள், சந்தைகளின் காய்கறிகளை விற்கும் பெண்கள், பசுவின் பாலைக் கரக்கும் கிராமத்துப் பெண் என்று இவரது ஓவியங்கள் யாவும் நமக்குத் தமிழக மண்ணுக்கே உரிய மண்வாசனையைத் தரவல்லது.
தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகிய ஜல்லிக்கட்டுக் காட்சிகளில், நுண் நிமிடங்களில் ( micro seconds) நாம் தவிர விடும் உக்கிரத்தையும், சேவல் சண்டைகளில் தெரிக்கும் றெக்கைகளையும் இவரது ஓவியங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் கவின் கலை (FINE ARTS) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.இவரிடம் பேசுகையில், "கோயில்களும், கிராமங்களும் சூழ்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் மண்வாசனை மிக்க ஓவியங்களை வரைவதாகவும், மிக வேகமான மாறுதல்களைச் சந்தித்து வரும் வேளையில், நம் தலைமுறையினர் பார்த்த கிராமங்களையும் கிராம நடப்புகளையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு தெரியப்படுத்த தன் ஓவியங்கள் உதவும்!!" என்றார்.
நீர் வண்ண ஓவியங்கள் (Water Color Paintings) என்னும் வகையையே இவரது ஓவியங்கள் சார்ந்தவை!! நீர் வண்ண ஓவியங்கள் நன்றாகப் பராமறிக்கப்படுகையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்!!
சில வருடங்களுக்கு முன்பு வரையில் பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் மட்டுமே ஓவியங்களை வாங்கி வந்த வழக்கம் இன்று மத்திய தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களுக்கு இருக்கும் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) தான்!! பொதுவாகவே ஓவியத் துறையில் அடியெடுத்து வைக்கும் பொழுது குறைந்த விலையில் இருக்கும் ஓவியங்களின் விலை, பிரபலமாகும் பொழுது பல மடங்கு பெருகிவிடுகிறது.
"கவின்கலைப் பட்டம் படிக்கும் பலரும் பட்டப் படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று அனிமேஷன் போன்ற துறைகளுக்குச் செல்லும் போக்கு கவலையளிக்கிறது. இந்தத் துறையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தமிழகத்தைக் கலைத்துறையில் தனியிடத்திற்கு கொண்ட செல்ல முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாமலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தால் ஓவியத்துறையில் வெற்றி நிச்சயம்" என்று ஓவியர் சிவபாலன் கூறியது கவனிக்கத்தக்கது!!
உழைப்பில்லாமல் வரும் வெற்றி உவகையைத் தராது தானே!!
**




