Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

Friday, February 18, 2011

கண்கள்!!

வன் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தன. கண்களின் எரிச்சலை லேசாக உடலும் உணரத் துவங்கியது. அலுவலகம் வந்ததில் இருந்து மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில் போராடிக் கொண்டிருந்தான். அவன் கணினித் திரையைத் திறக்கையில், அனுப்பியவர்களுக்கு மதியமாகியிருக்கும். இன்னும் நான்கு மணி நேர வேலை நாளே அவர்களுக்கு மீதமிருந்ததால் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும். கணினித் திரையும் மின்னஞ்சல்களும் தான் சோறு போடுகிற நிலை என்றான பிறகு மின்னஞ்சல்களுக்குப் பயந்தால் நன்றாகவா இருக்கும். பிறர் கண்கள் தன் பதிலை எதிர்பார்த்துக்கிடப்பதால் தன் கண்களின் எரிச்சல் அவனுக்குப் பழகிவிட்டது. ஏனோ இப்பொழுது அவனிடம் கண்கள் கெஞ்ச ஆரம்பித்தன. கண்களின் கெஞ்சல் காதுகளுக்குக் கேட்டதோ என்னவோ, அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அலுவலகம் எங்கும் ஏதோ பரபரப்பு படர்வதை காதுகள் உணர்த்துகின்றன. 

ணினித் திரையில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தான். அனைத்து கண்களும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தன. இப்படி அனைவரும் பார்க்க வேண்டுமென்றால் அலுவலக மேலாளர் ஏதாவது உரையாற்ற வேண்டும். ஆனால், இங்கே வேறு திசையை நோக்கியல்லவா கண்கள் பார்க்கின்றன. அனைவருக்கும் ஒரு சேர சன்னலைப் பார்க்கும் ஆர்வம் எப்படி வந்தது. வேறொன்றுமில்லை. அவர்களை நோக்கி நாலு ஜோடிக்கண்கள் வெளியிலிருந்து புன்னகை செய்தன. இருபத்தி ஆறாவது மாடியில் இருக்கும் இவர்களைக் கட்டடத்திற்கு வெளியிலிருந்து பார்ப்பது, இவர்களுக்கு வியப்பூட்டும் விசயம். உயிரற்ற தூண்களும், கண்ணாடிச் சன்னல்களுமே தங்களைப் பார்த்த திசையில் கண்கள்.

ண்ணாடியில் உள்ள அழுக்கை அகற்றும் உன்னத வேலையை அந்த நால்வரும் செய்வதை அத்தனை கண்களும் வேடிக்கை பார்த்தன. அதற்கு பதிலாக இதமான புன்னகையை உதிர்த்தார்கள். கட்டடத்தின் விளிம்பில் உள்ள பலமான கொக்கிகளில் இரும்புக் கயிற்றைக் கட்டிவிட்டு தானியங்கிக் கருவிகளின் உதவியால் ஒவ்வொரு மாடியின் சன்னல் கண்ணாடிகளையும் சுத்தம் செய்கின்றனர் இந்த வீரர்கள். உயரமான இடத்தில் இருந்து தொங்கிய படியே பணியாற்றத் தனி வீரம் வேண்டும் தானே. இவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் வேறு எவர்க்கும் கிடைக்காது. கட்டடத்தின் உயரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது பார்க்கும் காட்சிகள் கீழே இறங்குப் பொழுது மாறுவது ஒரு ஆச்சர்யமான விசயம். ராட்டனத்தில் ஏறிச் சுற்றுகையில், மேலெழும் பொழுது இதுவரை பார்த்திராத கூரைகள் எல்லாம் தெரிவதைப் போல. தொலைவில் தெரிந்த கடலை எள்ளலுடன் மறைக்கத் துவங்கும் சிறிய கட்டடங்கள், சிறு துளிகளாய்த் தெரிந்த மரங்கள் கிளைகளுடன் படர்ந்து நிற்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். வெளிக்காட்சிகள் மாறுவது ஒரு வித அனுபவம் என்றால் கண்ணாடிகளுக்கு அப்பால் தெரிவதோ வேறு விதமான அனுபவம். மேலிருந்து கீழே வரவர ஒவ்வொரு அலுவலகத்தின் அமைப்புகளையும், நடவடிக்கைகளையும் பார்ப்பது மாறுபட்ட அனுபவம் தான். அடுத்த வீட்டு சன்னலை எட்டிப் பார்க்கும் ஆவல் அதிலிருப்பதாகத் தோன்றியது.

வன், இருக்கையில் இருந்து எழுந்து சன்னலை நோக்கிச் சென்றான். அழுக்குப் படிந்து, தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்த கண்ணாடிகள் இப்பொழுது வெளியுலகை மட்டுமே காட்டின. சன்னலின் அருகே சென்றவன், சுவற்றில் கைகளை ஊன்றி அடிவானத்தை வெறித்துப் பார்த்தான். கணினித்திரைகளின் முன்பு பணியாற்றுபவர்கள் சரியான இடைவெளிகளில் தொலைவில் உள்ள பொருளைப் பார்ப்பது நல்லதாம். இவனுக்கு கடலை அதுவும் அடிவானத்தைப் பார்ப்பது உவகையான விசயம். அடிவானத்தைப் பார்த்தே காற்றில் உள்ள தூசியின் அளவையும் காலநிலையையும் உணர்ந்து கொள்வான். கடலின் அழகை ரசிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. கணினித்திரைக்கு அடுத்தபடியாக அவன் பார்ப்பது கடலைத் தான். அதிகாலையில் சலனமில்லாமல்  காட்சியளிக்கும் கடல் நேரமாக நிறம் மாறிக்கொண்டே இருக்கும். பச்சை, நீலம், கருநீலம், மாலையில் இளஞ்சிவப்பு, இரவில் கட்டட மின்விளக்குகளின் எதிரொளிகள் என்று கடலின் மாயவித்தை ஒரு அபூர்வம் தான். 

ன்று கடல் அமைதியாகவே இருந்தது. கண்ணிற்குக் குளுமையான தெளிந்த நீல நிறம். பாம் ஜூமைராவின் கட்டடங்கள். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல்கள். இவற்றிற்கு மாலை நேரம் வரை வேலை வருவதில்லை. கடல் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு செல்லும் கடல் பைக்குகள். அந்த பைக்குகளை இயக்குவதற்கு தனிப்பயிற்சி தேவை இருக்கும். பின்னே கடலையே கிழித்துக் கொண்டு செல்வதென்றால் சாதாரண விசயமா? இவன் அதிகபட்சம் ஆற்று நீரைக் குச்சிகளை வைத்து துழாவி விளையாடியிருக்கிறான். குச்சிகளை வைத்துத் துலாவும் பொழுது எழும் அலைகளைப் பார்க்க இவனுக்கு அலாதி இன்பம். தொலைவில் தெரிந்த கடலின் அலைகள் ஊர் நினைவு மீட்க ஆரம்பித்துவிட்டன. அப்படியே வலது திசையில் பார்க்க ஆரம்பித்தான். ரயில்ப்பூச்சியாக ஊறிச் சென்று கொண்டிருந்தது பிரதான நிலப்பரப்பையும் ஜூமைராவையும் இணைக்கும் மோனோரயில். இன்னும் சற்று தொலைவில் 'துபாய் உலகி'ற்காக கடலில் எழுப்பப்பட்ட மண் திட்டுகள். பணத்தைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள் என்று கிண்டல் செய்தாலும், கடலின் நடுவே நகரை உருவாக்குவது எவ்வளவு பெரிய கனவு. 

ருகாமையில் இருக்கும் சாலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பகல் வேளையிலும் எத்தனை கார்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு அவசரம். தன் கட்டடத்திற்கு அருகில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தைப் பார்வையிடத் தொடங்கினான். குறைந்தது 200 கார்கள் நிறுத்துமளவு உள்ள பயன்பாடற்ற நிலப்பரப்பு அது. முதலில் அந்த இடமே அமைதியாக எதுவுமே நடக்காதது போலத் தோன்றும். பிறகு உற்று நோக்கினால் ஒன்றிரண்டு கார்களாவது நிறுத்துமிடம் தேடி எறும்புகளாக ஊறிக்கொண்டிருக்கும். இருபத்தி ஆறாவது மாடியில் இருந்து பார்க்கும் பொழுது இவனுக்குக் காலியிடங்கள் தெளிவாகத் தெரியும். சிலவமயம, அந்த வழியில் போகாதே என்று கத்தத் தோன்றும். இருந்தாலும் அவர்கள் சுற்றிச் சுற்றி வருவதையும் கார்களைச் சந்துகளில் இயக்குவதைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.

ன் பார்வையை சில நூறடிகள் நகர்த்தினான். கட்டடங்களுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா மற்றும் குளம். குளத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களில் பார்ப்பவர்களுக்காக 'எப்பொழுதாவது' நடக்கவிருக்கும் விழாக்களுக்காக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் குளம். குளத்தின் கரையில் மனிதர்களைப் பார்ப்பதே அரிதான விசயம். படகோட்டியாக குளத்தினூடே பயனித்து குளத்தில் படிந்திருக்கும் பாசியை அகற்றும் வேலையாளைத் தவிர. நீர்த்தாரைகள் குளத்தின் நீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தன. என்றாவது ஒரு நாள் சிறிது நேரத்தை ஒதுக்கி பூங்காவையும், குளத்தையும் அருகில் சென்று ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அங்கே நின்று புகைப்படம் எடுத்தால் தான், தான் வேலை பார்க்கும் கட்டடம் தெளிவாகத் தெரியும் என்பது அவன் யூகம். அப்படி ஒரு நாள் அவன் பணியில் இருந்து விடுபடும் நாளாகத் தான் இருக்கும். 

வன் காதுகளில் "யானி"யின் இசை ஒலிக்க ஆரம்பித்தது. அது அவனிற்கு மிகவும் பழக்கப்பட்ட இசை. அவன் செல்பேசியின் ஒலி. செல்பேசியில் மின்னஞ்சல் வருகையைத் தெரிவிக்க வைத்திருக்கும் இசை. மின்னஞ்சலின் வருகையை இதமான இசையால் வரவேற்பது இவனுக்குப் பிடித்த விசயம். அவன் கண்களுக்குத் தன் முன் நிற்கும் கண்ணாடி தெரிய ஆரம்பித்தது.  பத்து நிமிடங்களாகப் பராக்குப் பார்த்ததில் கண்களில் எரிச்சல் குறைந்திருந்தது. மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தான். காலையில் இருந்து இவன் அனுப்பிய பதில்களுக்குச் சில சிரிப்பான்களுடன் நன்றி தெரிவித்தது அவ்வஞ்சல். கண்கள் புன்னகைக்க உடம்பை முறித்துப் பெருமூச்சு விட்டான், அன்றைய பொழுதின் அடுத்த வேலையை யோசித்தவாறு!!

Tuesday, January 11, 2011

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை - எண்ணங்கள்!!

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெகுவாக விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வேலை, படிப்பு, தொழில் போன்ற காரணங்களுக்காக அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் முதல் படியாக இந்த அறிவிப்பைக் காணலாம். இந்த அறிவிப்பு சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் இல்லை.

இந்தியாவில் படித்து விட்டு இங்கே தொழில் புரியாமல் அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு எதற்காக வாக்குரிமை? இங்கே நாட்டில் உள்ள நிலவரங்களைப் பற்றி உணராமல் வாக்களிப்பது எந்தளவிற்கு ஏற்புடையது? என்பது ஒரு வாதம்.

உண்மை தான்!! இந்தியாவில் தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை போன்ற துறைகளில் படித்துவிட்டு வேலை வேண்டி வெளிநாடு செல்பர்களுக்கு எதற்கு வாக்குரிமை என்னும் மரியாதை. அரசுப் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவனைப் படிக்க வைக்க அரசாங்கம் பெருமளவில் மானியம் வழங்குகிறது. இங்கே படித்துவிட்டு, நம் மூளையை அயல்நாட்டில் அடகு வைப்பது சரியானதா? இன்றைய மத்திய தர வர்க்கத்தினரின் கனவு என்றால் அயல்நாட்டு வாழ்க்கை, டாலர் சம்பளம், அயல்நாட்டு வாழ்வுரிமை போன்றவை தான். இப்படி இருக்க, இந்தியா மீதான தொடர்பைத் துண்டித்திருக்கும் இவர்களுக்கு எதற்கு வாக்குரிமை?

பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகள், திரும்பிய பக்கமெல்லாம் பளபளப்பு என்று அயல்நாட்டில் வாழ்க்கை நடத்துவோர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும், கடுமையான வெயில், 12 மணி நேர வேலை, வருடத்திற்கொரு முறை இந்தியப் பயணம் என்று வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அயல்நாட்டிற்குச் சென்றிருப்பது பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகளைப் பார்த்தோ, பளபளப்புகளைப் பார்த்தோ எல்லாம் இல்லை. போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் அயல்நாடு சென்றவர்களே அதிகம். இவர்கள் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருப்பது இந்தியாவில் எகிறி நிற்கும் வெங்காய விலை, விவசாய நிலங்களை மூழ்கடித்த மழை வெள்ளம் போன்ற செய்திகளே. இவர்களின் உடல் இருப்பது அயல்நாட்டில் என்றாலும், எண்ண ஓட்டங்கள் இந்தியாவைப் பற்றித் தான். இந்தியாவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் என்ன தவறு?

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணம் ஓரளவு இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. இப்படி நம் பொருளாதாரத்தில் பங்கேற்கும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரி என்ற வாதம் ஒரு பக்கம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டில் முதலீடு செய்வதால் மட்டுமே நாட்டின் மீது அக்கறை வந்துவிட்டது என்று அர்த்தமாகாது. அவர்கள் செய்வது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதே" என்ற வாதமும் உண்டு!! 

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கூடாது என்று கூறும் பொழுது எழும் அடுத்த கேள்வி. இந்தியாவில் வாழ்ந்து கொண்டே வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களை என்ன செய்வது? NRI - Non Resident Indians போலவே RNI - Resident Non Indians என்று வாக்குப் பதிவு செய்யாதவர்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் அக்கறையற்ற மனநிலையை விட அயல்நாட்டில் வாழ்பவர்கள் எந்த விதத்தில் சோடை போனார்கள் என்பதே அடுத்த வாதம்!!

நிற்க!!

*

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது என்றால்... அடுத்த கேள்வி. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமையை எப்படி சாத்தியப்படுத்துவது?

இந்திய மக்கள் வாக்குரிமையைச் செலுத்துவது என்றால் தேவையானது அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்காளரின் முகவரி முதலியவை.

எத்தனை காலமாக அயல்நாட்டில் வாழ்பவருக்கு இந்த சேவையை வழங்குவது?

பலர் தொழில் காரணமாக அடிக்கடி அயல்நாட்டிற்கு சென்று திரும்புவர். இவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். நிரந்தர வேலை காரணமாக சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.  மூன்று மாதம் ஆறு மாதம் என்று குறுகிய காலத்திற்கு அந்நிய நாட்டிற்கு செல்பவர்கள் இந்தக் கணக்கில் வருவது சந்தேகமே.

இவர்கள் அடையாள அட்டையாக இந்திய வாக்காள அடையாள அட்டையும், கடவுச்சீட்டு கேட்கப்படலாம். அயல்நாட்டில் வசிக்கும் பலரிற்கு இந்த அடையாள அட்டை இருக்குமா என்பது அடுத்த ஐயம். இவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை வழங்குவது? 

*

வாக்குப்பதிவை எங்கே செலுத்துவது?

அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களில் வாக்கைப் பதிவு செய்யலாம் என்று எளிதில் கூறிவிட முடியாது. அமீரகம் போன்ற சிறிய நாடு ஆனால் ஏராளமான இந்தியர்கள் வசிக்கும் இடங்களும் உண்டு. அமெரிக்கா போன்ற பெரிய ஆனால் பரவலாக வசிக்கும் நாடுகளும் உண்டு. இவர்களை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்று சொல்லிவிட்டால் அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். இது அடுத்த கேள்வி.

இப்படி ஒரே சமயத்தில் அனைத்து நாடுகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்றால் ஒன்று தொழில்நுட்ப உதவியை நாட வேண்டும். 

*

அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்க யோசிக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு வெளியூர்களில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கானோர் வாக்களிக்க என்ன வழி என்று யோசித்தால் நல்லது.

*

இப்படி பல விசயங்களையும் சிந்திக்கும் பொழுது அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்பது ஏதோ வெட்டிப்பேச்சோ என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

*


நேரமிருந்தால்.. இந்தக் காணொளியையும் பாருங்கள்.

*

Saturday, January 8, 2011

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்..

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் 
உப கடவுளர்களின் அணிவகுப்பாம்
ஊடக ஆராதனையில் ஏலமாம்
ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்!
ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம்
கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!!

பத்து கோடிக்கொரு கடவுள்
எட்டு கோடிக்கொரு கடவுள்
ஆறு கோடிக்கொரு கடவுள் 
கோடானுகோடி ஏழை பக்தர்களுக்காக!!

நாட்டின் முதன்மை மார்க்கம்
நாடாள்பவர் விரும்பும் மார்க்கம்
நாடாள் மன்றம் போல 
இம்மார்க்கத்திலும்
இல்லை வேறுபாலருக்கு இடஒதுக்கீடு!!

கடவுளர்கள் விரும்பும்,

குளிர்பானமே தீர்த்தமாக
இனிப்புகளே பிரசாதமாக
உணவுகளே அமுதமாக
ஆனார்கள்
பக்தர்கள் மாக்களாக!!

வான்பொய்த் தாலும் விசாரமில்லை
மண்மலடானாலும் மனக்கவலை யில்லை
சுயம்அழிந்தாலும் சிந்தையிற் கலக்கமில்லை
சஞ்சலம் தீர்க்க மார்க்கமுண்டு
களிப்பூட்டக் கடவுளர்களின் கிரிக்கெட்டுண்டு 

மாசியில் வருதே உலகக்கோப்பை
வைகாசியில் வருதே உள்ளூர்க்கோப்பை
உலகக்கோப்பையோ உள்ளூர்க்கோப்பையோ
கடவுளர்களின் தரிசனம் ஒன்றே போதும்!!

கடவுளர்க் கிடையில் ஆட்டம்
பக்தர்கள் மனதில் கொண்டாட்டம்
பண முதலைகளின் வெறியாட்டம்
ஆட்டமானதே சூதாட்டம் இகலாட்டம்
பக்தகோடிக்கு 
மிஞ்சியதே இளிச்சவாய்ப் பட்டம்.


Saturday, December 4, 2010

கணிதமேதை இராமானுஜன் நினைவகம் - ஒரு விசிட்!!

ந்தியாவிற்குச் சென்று திரும்பிய ஹேங்க்-ஓவர் இன்னும் தீரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நான்கைந்து நாட்களைக் கும்பகோணத்தில் கழித்தேன். மனைவியின் ஊர். ஏறத்தாழ ஒன்றரை வருடம் கழித்துச் சென்றதால் ஏகப்பட்ட உறவினர்களுடன் சந்திப்புகள், விசாரிப்புகள். அதனால் வழக்கமாகச் செல்லும் தாரசுரம், சுவாமிமலை,நாகேஸ்வரன் கோயில், கும்பேஸ்வரன் கோயில், இராமசாமி கோவில், சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில் போன்ற இடங்களுக்கெல்லாம் போக முடியவில்லை. 

திருமணம் ஆனதில் இருந்து ஏகப்பட்டமுறை கும்பகோணத்திற்கு வந்திருக்கிறேன், ஆனால் கணித மேதை இராமனுஜன் அவர்களின் வீட்டைப் பார்த்ததில்லை. இந்த முறை, அவரது வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். "இராமனுஜத்தின் வீடு எங்கிருக்கிறது?" என்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைக் கேட்டால், "அவர் நான் படிக்கிற டவுன் ஐ.ஸ்கூல்ல படிச்சாராம். அவரோட படம் எங்க ஸ்கூல்ல இருக்கு" என்றார்கள்.  பிறகு சிலரிடம் கேட்டு, மௌனமே பதிலாகக் கிடைத்தபிறகு விசாரித்தால் சாரங்கபாணி கோயிலிற்குச் செல்லும் வழியில் இருக்கிறது என்றார்கள். சாரங்கபாணி கோயில், கும்பகோணத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று!!


ஒரு பகல் வேளையில் கணித மேதை இராமனுஜன் நினைவகத்திற்குக் கிளம்பினேன். தீபாவளிப் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே இருந்ததால் ஏகப்பட்ட கூட்டம். சாரங்கபாணி கோவிலிற்குப் போகும் வழியில் ஏதாவது ஒரு நினைவகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றேன். என் கண்களின் அகப்படவில்லை. என் மனத்திரையில் நினைவகம் என்றால் ஓரளவு பெரிய வீடாக இருக்க வேண்டும் என்றிருந்தது. தேடிப்பார்த்துவிட்டு அருகில் கேட்டால் ஒரு சிறிய வீட்டைக் காட்டினார்கள். எனக்கு ஆச்சர்யம்!!

இந்த இடத்தில் தான் கணித மேதை இராமானுஜன் வாழ்ந்தாரா? 


அந்தத் தெருவில் இருந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிறிதும் தொடர்பற்ற அளவில் ஒரு ஓட்டு வீடு. அருகில் சென்று பார்த்தால் ஒரு பலகையில் "SRINIVASA RAMANUJAN INTERNATIONAL MONUMENT" என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால் மழைநீர் வடிந்த பழுப்பேறிய சுவர்கள், இருள் படர்ந்த அறைகள். உள்ளே சென்றவுடன் கணித மேதை இராமானுஜத்தின் சிலை. சுவரெங்கும் இராமானுஜம் கண்டுபடித்த கணித சூத்திரங்கள் கண்ணாடி சட்டங்களில் மாட்டப்பட்டிருந்தன. சிலவற்றைப் புகைப்படம் எடுக்கலாம் என்று முயன்றேன். நினைவகத்தின் காவலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க படங்கள் எடுக்க முடியவில்லை. பத்திற்கும் குறைவான சூத்திரங்களே மாட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள படங்கள், இராமானுஜன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். 


இராமானுஜத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தால் 10 அடி - 10 அடியில் ஒரு ஆசாரம் (Hall), 10 அடி * 10 அடியில் ஒரு படுக்கையறை. அதில் ஒரு இரும்புக் கட்டில். சிறிய அளவே உள்ள சமையலறை. வீட்டிற்குப் பின்னாடி சென்றால் ஒரு சின்ன கிணறு. அவரது வீட்டைப் பார்த்த பொழுது ஏதோ ஒரு பழைய வீட்டிற்குச் சென்ற நினைவே ஏற்பட்டது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி உள்வாங்கிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. என்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. 


இராமானுஜத்தின் வீட்டிற்கு வெளியே வந்தால் பரபரப்பான சாரங்கபாணி கோயில் தெரு. பரபரப்பான கடைத்தெரு. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்துசெல்லும் வழி என்பதை அந்தத் தெரு நன்றாக நினைவுபடுத்தியது. இராமானுஜன் நினைவகத்திற்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று வருகைப் பதிவேட்டைப் பார்த்தேன். அக்டோபர் மாதம் முழுவதும் வருகை புரிந்தோர் 53 பேர் மட்டும் தான். எங்களையும் சேர்த்து. வந்திருந்தவர்களுள் பலரது முகவரி பஞ்சாய், ஆந்திரா, தில்லி, கேரளா என்றெல்லாம் இருந்தது. சரி.. நம்ம ஊர்க்காரர்கள் சாரங்கபாணியைப் பார்ப்பதே போதுமென்று நினைத்திருப்பார்கள்.

சாரங்கபாணி! சாரங்கபாணி!!

இந்த நேரத்தில் கந்தசாமியாக மாறி, "இது போன்ற சமகால மேதை வாழ்ந்த இடத்தை மற்ற நாடுகளில் எப்படிப் பாதுகாக்கிறார்கள்" என்றெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை.

Tuesday, August 10, 2010

அமீரகத்தில் ரமலான் + சில எண்ணங்கள்!!

அமீரகம் ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகி வருகிறது. பல்பொருள் அங்காடிகள் எங்கும் கூட்டம். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவுப் பொருட்களை வாங்குவதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள் என வணிக நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் நடக்கும் ஏற்பாடுகளும், ரமலானை முன்னிட்டு அனுசரிக்கப்படும் கட்டுப்பாடுகளும், இன்னபிற எண்ணங்களும் தான் இப்பதிவின் நோக்கம்.



அதற்கு முன்பாக.. ரமலான் பற்றிய சிறிய விளக்கம். தெரியாத விசயங்களைத் தவறாகக் கொடுக்கக் கூடாது என்பதாலேயே விக்கிப்பீடியாவில் ரமலான் மாதத்தைப் பற்றி கொடுத்துள்ள குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். 

" ரமலான் என்பது இசுலாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் முஸ்லிம்களுக்கு நோன்பு மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்." நன்றி - விக்கிப்பீடியா.

அமீரகம் வருவதற்கு முன்பு ரமலான் என்பது இஸ்லாமிய அன்பர்கள் தொடர்புடைய மாதம் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். ஊரில் இருக்கும் பொழுது கூட இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் சென்று நோன்புக் கஞ்சியை வாங்கி வந்ததுண்டு. ஆனால், அதற்கு மேல்  ரமலான் மாதத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கவில்லை. அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தது மத்திய கிழக்கு நாடுகளின் பழக்கவழக்கங்களையும், அதில் முக்கியமான ரமலான் மாதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகியுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பொறுப்பு என்பதால், அமீரக அரசாங்கமும் நோன்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணம் சட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நோன்பு மேற்கொள்ளும் அன்பர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு வந்திராத வண்ணம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நோன்பு மேற்கொள்ளும் நேரமான சூரிய உதயத்தில் முதல் அஸ்தமனம் வரையில் பொது இடங்களில் எந்த உணவோ, தண்ணிர் முதற்கொண்டு எந்த விதமான நீராதரமோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சிறைதண்டனைக்கு உள்ளாவார்கள். வருடாவருடம் இந்த விதி தெரியாமலோ, தெரிந்தோ மீறி மாட்டிக்கொள்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவதைத் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பொது இடங்களில் உணவருந்தக் கூடாது என்பதால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. சரவணபவன் போன்ற உணவகங்கள் தேவையான உணவை வீட்டிற்கே கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இந்த சேவையை வழங்க தனி அனுமதி பெற வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் உணவகங்கள் அல்லது துரித உணவகங்கள் தட்டி வைத்து மறைவிடங்களைத் தற்காலிகமாக உருவாக்கி நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு உதவுகிறார்கள்.

நம் ஊரில் எப்படி தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் விற்பனை களைகட்டுகிறதோ, இங்கே ரமலான் மாதமும் விற்பனை களை கட்டியுள்ளது. ஆனால், இங்கே ஒரு வித்தியாசம், வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை, அதிக பயன் கிடைக்க வேண்டும் என்பதே அடிநாதமாகக் காண முடிகிறது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள்,மின்னனுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தும் சலுகை விலையில்!!

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் ரமலானை முன்னிட்டு தனி ஏற்பாடுகளைச் செய்வது கவனிக்கத்தக்கது. நோன்பு மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கின்றனர். நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் விடுப்பும் அளிப்பதுண்டு. ஆகவே ரமலான் மாதம் முழுவதும் மதியம் 2:30 முதல் சாலைகளில் வாகன நெருக்கடி ஆரம்பித்துவிடும். 



ரமலான் என்றால் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம் நோன்பு விருந்து. நோன்பை முடிக்கும் நேரத்தில் அலுவலக ஊழியர்களுக்கு (ஒரு நாள்) ரமலான் நோன்பு விருந்தை ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. பகல் நேரத்தில் இழக்கும் வருவாயை இது போன்ற விருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிகள் மீட்டு விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே செய்தித்தாள்கள் எங்கும் ரமலான் விருந்தைப் பற்றிய சலுகைகளைப் பார்க்க முடிகிறது. ரமலான் விருந்தில் அரேபிய உணவுகள் தனிச் சிறப்பு மிக்கது. 

இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர்.  இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.  நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது. 

ரமலான் மாதத்தில் எப்படி ஒரு நாடே ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் நடக்கிறது என்ற பிரமிப்பு வராமல் இல்லை. 

அதே சமயம் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..

*அமீரக மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் இந்தியர்கள். அதில் தோராயமாக நான்கு இலட்சம் பேர் இஸ்லாம் மதத்தைச் சாராத இந்தியர்கள். இந்த 4 இலட்சம் பேர் சக அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுது, நம் நாட்டில் ஏன் இது போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடிவதில்லை?

* பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?

* நம் ஊரிலும் வீட்டிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அவர்களை நாம் தூண்டாமலோ, கிண்டல் செய்யாமலோ இருந்திருக்கிறோமா?

இதெற்கெல்லாம் அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை என்று சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்ற எண்ணமே வருகிறது.

Friday, August 6, 2010

நம் திருமண முறை சரியானது தானா?



"செந்தில்... உங்க நாட்டுல கல்யாணத்த ஏற்பாடு பண்ண அமைப்புகள் இருக்கா?"

தேநீர் இடை வேளையின் பொழுது என்னைக் கேட்டார் மைக்கேல். மைக்கேல் என்னுடன் பணியாற்றி வருபவர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் தான் ஹங்கேரியில் இருந்து அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தவர். இது நாள் வரை இந்தியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெறவில்லை. இந்தியாவைப் பற்றியும் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார். 

அலுவலகத்தில் இருந்த பெரும்பாலானோர் ஏதோ ஒரு கூட்டத்திற்குச் சென்று விட எங்களுக்கு அருகில் இருந்த இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், தொலைவில் தெரிந்த கப்பல்களையும் பார்த்த படியே காப்புசினோவைக் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்தக் கேள்வி. இந்தியாவைப் பற்றிய கேள்வி என்றவுடன் கேரளத்தைச் சேர்ந்த ப்ரியாவும் சேர்ந்து கொண்டார். 

"என்னங்க மைக்கேல்.. திடீர்னு இந்தக் கேள்வி?" என்றேன்.

"இல்லை.. நேத்து மோஹித் இந்தியாவுல இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு வந்தார். அவர் கிட்ட பேசும் பொழுது தெரிஞ்சுக்கிட்டேன்"

"ஓ.. அதுவா விசயம்?"

"ஆமா.. அவரோட மனைவியத் திருமணத் தகவல் மையம் மூலமாத் தான் பார்த்தாராம்"

"ஆமாங்க.. இது இந்தியால வழக்கமான விசயம் தான். ஏன் என்னோட திருமணம் கூட வீட்ல ஏற்பாடு செஞ்சது தான்." என்றேன்.

"என்னோடது கூட வீட்ல பார்த்த திருமணம் தான்" என்றார் ப்ரியா.

"ஓ.. எப்படி? உங்க பார்ட்னர் எப்படிப்பட்டவர்னு தெரியாமா..." என்று தயங்கினார் மைக்கேல்.

"அது அப்படித்தாங்க. காலங்காலமா இப்படித் தான் நடந்துட்டு வருது. எங்க தாத்தா, அப்பா காலத்து வரைக்கும் சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால் தெரியாத ஆளக் கட்டுறதுங்கற விசயம் எல்லாம் இல்லை. இப்ப எங்க தலைமுறைல தான் இந்தத் திருமணத் தகவல் மையங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றேன்.

"ஓஹ்.. எப்படித் தேர்ந்தெடுப்பாங்க"

"உங்கள் சிஸ்டமக் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கிட்டுமா? உங்களுக்கு சில திருமணத் தகவல் வெப்சைட்களக் காட்டறேன்" 

பிறகு பாரத்மாட்ரிமோனி வலைத்தளத்தைத் திறந்து அதில் உள்ள விசயங்களை எல்லாம் காட்டினேன். ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன். அதில் ஒரு Profileஐப் பார்த்தவர்

"என்னது நோ ஸ்மோக்கர், நோ ட்ரிங்கர் என்றெல்லாம் இருக்கிறது?" என்றார்.

"ஆமாம்.. அது அந்தப் பெண்ணின் கணவராக வரவேண்டியவர் பூர்த்தி செய்ய வேண்டிய விசயங்கள். இன்னும் இந்தப் படிப்பு தான் வேண்டும். இந்த வேலையில் தான் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் போடுவார்கள்.. இது ஒரு தனி இண்டஸ்ட்ரி" என்றேன்.

"ம்ம்.. வெரி இண்ட்ரஸ்டிங்"

"முதல்ல பிரோஃபைல் மேட்ச் ஆன பிறகு, இரு குடும்பங்களும் பேசி, சந்தித்து, திருப்தியாக இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்"

"ம்ம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம்"

"உங்கள் நாட்டில் எல்லாம் எப்படி? இது போன்ற பழக்கங்கள் இருக்கா?" என்று கேட்டார் ப்ரியா.

"ஹாஹா.. இல்ல.. எங்க நாட்டுல எல்லாம் லவ் மேரேஜ் மட்டும் தான். அவங்கவங்களே பார்த்துக்குவாங்க"

"ஒரு வேளை, பெண்ணைத் தேடிப்பிடிக்கும் அளவிற்கு திறமையோ, வாய்ப்போ இல்லையென்றால்?" 

"ம்ம்.. அப்படி இருக்கறவங்க கம்மி தான். அவங்க பெரும்பாலும் கல்யாணம் செஞ்சிக்காமத் தான் இருந்துடறாங்க" 

"கல்யாணம் செஞ்சிக்காம இருந்திடக்கூடாதுன்னு தான் இந்தியால பெரியவங்களே அலையன்ஸ் பார்த்திடறாங்க" 

"ம்ம்.. திருமணத்திற்கு முன்பு பேசுக்கொள்வீர்களா? பார்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்குமா?" 

"ஹிஹி.. முன்பெல்லாம் ரொம்பக் கம்மியா இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவர நான் ஒரு தடவை தான் பார்த்தேன். 15 வருசத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அவரு வாரத்துக்கு ரெண்டு நாள் பூத்ல இருந்து கூப்பிடுவாரு. அதோட சரி"

"இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் டைம் இருக்கு. என் எங்கேஜ்மெண்டிற்கும் கல்யாணத்துக்கும் இடையில் நான்கு மாத இடைவெளி இருந்தது. பல முறை பார்த்திருக்கிறோம். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம்" என்றேன்.

"ஆனாலும் எப்படி? நாலு மாசம் போன்ல பேசறத வச்சு மனைவியா வரப்போறவரப் புரிஞ்சுக்க முடியுமா? நாங்க நாலு வருசமா பார்த்துப் பேசிப் பழகுனதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவுக்கு வந்தோம்" என்றார். 

"இந்தக் கேள்வி எங்களுக்கும் இருக்கத்தாங்க செய்யுது. ஆனா என்ன.. பெரும்பாலும் பிரச்சனை ஏதும் வர்றது இல்ல" என்றேன்..

"அப்படி எல்லாம் சொல்லாத செந்தில். காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"

"எங்க ஊர்ல எல்லா விசயங்களுமே குடும்ப உறவுகளோட இணைந்தே பார்க்கப் படும். அதனாலேயே பிரச்சனைகள் வந்தாலும், உறவினர்கள் தீர்த்துவிட்டுருவாங்க. பெருசா பிணைப்பு இல்லாதவங்க டைவர்ஸ் வரைக்கும் போறதும் உண்டு. டைவர்ஸ் வரைக்கும் போறதுல லைவ் மேரேஜ் பண்றவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க?" என்றேன்.

"யா...யா..  லவ் மேரேஜ் செய்யறவங்களும் டைவர்ஸ் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. இப்பல்லாம், கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது. என்னோட ஹங்கேரி கொல்லீக்ஸ் நிறையப் பேரு இந்த மாதிரி இருக்காங்க.."

"லிவிங்க்-டு-கெதர்.. ஸ்லோவா.. இந்தியால பிக்-அப் ஆயிட்டு இருக்கு.. ஆனா நாட்-டு-த லெவல் ஆஃப் ஈரோப்.."என்று ப்ரியா சொல்ல கூட்டத்திற்குச் சென்ற அலுவலக நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர். அவரவர் இருக்கைகளுக்கு வர ஆரம்பிக்க எங்கள் பேச்சு துண்டிக்க ஆரம்பித்தது. ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு

"ம்ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு மாதிரி பழக்கங்கள். எனக்கு இந்தியாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆர்வம். இன்னிக்கு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மாட்ரிமோனி சைட்ட என் மனைவி கிட்ட காட்டணும்" என்றார் மைக்கேல்.

"ஹாஹா.. அதக் காட்டப் போய் நெட்ல பொண்ணப் பாக்கிறியானு கேட்கப் போறாங்க.. டேக் கேர்"

"குட் பாயிண்ட் ப்ரியா. எனிவே.. தாங்க்ஸ் பட்டீஸ்.."

"இட்ஸ்.. ஓகே.. மைக்"

"சியா"

ஒவ்வொரு நாட்டினர்க்கும், மொழியினர்க்கும், மதத்தினர்க்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள். அவரவர்க்கு அந்தந்த பழக்கவழக்கங்கள் மீது அதிக பற்று, அதிக ஈடுபாடு இருக்கத்தான் செய்கிறது.  பிற நாட்டினரிடம் பேசும்பொழுது அவரவர் தரப்பு கருத்துகள் வெளியாவதுடன், அவர்களது பழக்கங்களுக்கான நியாயங்களும் புரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.

இந்தியாவில் பணியாற்றிய வரை மற்ற நாட்டினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே அமீரகத்திற்கு வந்த பிறகு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது, பல விசயங்களையும் யோசிக்க உதவுகிறது. 

"நம் திருமண முறை சரியானது தானா? என்ற கேள்வி உங்களுக்கு எப்பொழுதாவது வந்துள்ளதா?"

Tuesday, August 3, 2010

வந்தவழியும் குலதெய்வமும்!!

உங்கள் குலதெய்வக் கோயிலிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்? உங்கள் குலதெய்வக் கோயில் எத்தனை வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதென்று தெரியுமா? உங்கள் பங்காளிகள் எத்தனை பேரைத் தெரியும்?


இது போன்ற கேள்விகளை நண்பர்களிடம் கேட்கும் பொழுது பெரும்பாலானோர் "என்னடா தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்பது போன்ற பார்வையைத் தான் பதிலாகத் தருகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வளர்ந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் வாழ்நாளில் ஓரிரு முறை குலதெய்வக் கோயிலிற்கு சென்றிருப்பதே அரிது எனலாம். அதே சமயம் கிராமப்புறங்களில் வளர்ந்து வந்த நண்பர்களோ பலமுறை சென்றிருப்பதை அறிய முடிகிறது.




குலதெய்வத்திற்கும் நாம் வந்தவழிக்கும் பெரிய தொடர்பிருப்பதாலேயே குலதெய்வத்தைப் பற்றி ஒரு பதிவிடுகிறேன். நாம் எந்த நகரில் வாழ்ந்தாலும் பெரிய பதவிகளை வகித்தாலும் வந்த வழியை மறக்கக் கூடாது என்பதையே இந்தப் பதிவில் மையப் பொருள்.

நம் ஓட்டன் (பூட்டன் தந்தை), பூட்டன்(பாட்டன் தந்தை), பாட்டன் முதற்கொண்டு நம் முந்தைய தலைமுறையினர் வரை ஒரு இடத்தை, மண்ணை மிதித்திருப்போம் என்றால் அது குலதெய்வக் கோயிலைத் தவிர வேறு எதுவாக இருக்கும்? நம் குலதெய்வக் கோயில் அமைந்திருக்கும் இடம், பகுதியை வைத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் என்னென்ன தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள், எப்படிப் பட்ட பழக்கவழக்கத்தைக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ற வரலாறெல்லாம் அறிய முடிந்தால் நல்லது தானே?



எங்கள் முன்னோர்கள் கோவை அருகே சூலூரில், நொய்யல் ஆற்றங்கரையில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். பிறகு தாத்தாவின் தந்தையின் காலத்தில் பீடித் தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் தொழிலில் ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க முடியாமல் வேறு சில சிறு தொழில்களைச் செய்து வந்திருக்கின்றனர். பின்பு என் தாத்தாவின் காலத்தில் கோவையில் பஞ்சாலைகளில் பணியாற்றி வந்திருக்கின்றனர். பிறகு என் தந்தையின் வேலை காரணமாக உடுமலைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது என் முன்னோரின் வரலாறு. 

இரண்டு மூன்று தலைமுறையினர் வரை நொய்யல் நதியையே நம்பி விவசாயம் செய்து வந்திருந்த எங்கள் முன்னோர்கள், காலப்போக்கில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களால் வெவ்வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்து பின்பு இடமும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கோவையின் பழைய ஊர்களான வெள்ளலூர், சூலூர், பேரூர், சிங்கநல்லூர் போன்ற ஊர்கள் எல்லாம் நொய்யல் நதியின் கரையிலேயே அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது போலவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும். அதனைத் தேடிப் படிப்பது நாம் வந்தவழியைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையானது.

அனைவரும் வெவ்வேறு நாடுகளிலும் ஊர்களிலும் வாழ ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏன் குலதெய்வம் முன்னோர் என்றெல்லாம் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை.

நம் முன்னோரைப் பற்றி அறிய முற்படும் பொழுது அவர்களது வாழ்வியலில் உள்ள சிறப்புகள், முன்னோர் செய்த தவறுகள், அவர்கள் கண்ட வெற்றிகள் என்றெல்லாம் அறிய முடியும். நம் முன்னோரைப் பற்றி யோசிப்பதற்கு குலதெய்வக் கோயிலை விட சிறந்த இடம் இருக்க முடியுமா? நம் முன்னோரின் வாழ்வியல் முறை சிறப்பானதாக இல்லாவிட்டாலும் நாம் இன்று வந்திருக்கும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமே. நாம் நம் முன்னோரை விட நல்ல நிலைக்கு வந்திருந்தால் அவர்களுக்கு நன்றி கூறி, ஆசி பெறலாமே!!



இன்றும் எங்கள் குலதெய்வக் கோவிலிற்குச் செல்லும் பொழுது "இக்கோயில் 1700களில் கட்டப்பட்டது" என்ற வாக்கியத்தைப் படிக்கும் பொழுது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். ஆம், என் முன்னோர் முந்நூறு ஆண்டுகளாக அந்த இடத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது பெருமிதம் தானே?

"நான் நாத்திகன், இந்த குலதெய்வ வழிபாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறுபவராக இருந்தாலும் பரவாயில்லை!!  வருடத்திற்கு ஒரு முறை நம் முன்னோர் பல்லாண்டுகளாக கால் பதித்த இடத்தை தொட்டுப்பாருங்கள்!! 

நான் வசிப்பதில் அமெரிக்காவில், ஐரோப்பாவில், சென்னையில்.. அங்கே சென்று வர நேரமில்லை என்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது தாய்நாட்டிற்குச் செல்லும் பொழுதோ, குலதெய்வ விழா எடுக்கும் நாளன்றோ சென்று வாருங்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா? என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.

நம் அடுத்த சந்ததியினர்க்கு என்னென்ன விசயங்களைத் தரப்போகிறோம்?

நல்ல கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் வீடு நிலம் என சொத்துகள்!! 

அவர்கள் வந்த வழி என்ன என்பதைத் தர வேண்டாமா? அதைக் குலதெய்வக் கோவிலில் இருந்து துவங்கிப் பாருங்களேன்!! 

*

Saturday, July 3, 2010

விளையாட்டுகள் எழுப்பும் வினாக்கள்!!


கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் கால் இறுதிச் சுற்று நடைபெறும் நேரத்தில் எங்கும் கால்பந்தாட்டக் காய்ச்சல் தான். எங்கள் அலுவலகங்களில் அடிக்கடி வுவுஜூலாவின் ஒலியும் அதனையடுத்து சிரிப்பொலியும் கேட்கிறது. இந்த உலகக்கோப்பையால் அதிகம் பேசப்பட்ட விசயங்களில் வுவுஜூலாவும் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. 

நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஐரோப்பியர்கள் மற்றும் இதர நாட்டினர் கொடுக்கும் முக்கியத்துவமும் அவர்களது அணி மீதான பற்றும் வியக்க வைக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு இடையேயான போட்டியின் பொழுது பெரும்பாலானோர் அவர்களது நாட்டுக்கொடியையே அலுவலகத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நேரத்தில் கால் இறுதிச் சுற்றிற்குள் நுழைய முடியாத சில நாட்டு அணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை வருத்தத்திற்குரியது. கால் இறுதிக்குள் நுழையாமல் திரும்பிய பிரான்சு நாட்டு அணியினர் உள் நாட்டில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். பிரான்சு நாட்டு அதிபர், "ஏன் முதல் சுற்றைக் கடக்க முடியவில்லை என்பதை ஆய்வு செய்வோம்" என்று கூறியுள்ளார். 

நைஜீரியா நாட்டு அதிபரோ, அந்நாட்டு கால்பந்தாட்ட அணியை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்வதாக உத்தரவிட்டுள்ளார். இத்தனைக்கும் நைஜீரியா இடம்பெற்றது அர்ஜென்டைனா, தென் கொரியா, கிரீஸ் போன்ற பலமான அணிகள் உள்ள குழுவில். இந்த உலகக்கோப்பையில் ஆறு ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றிருப்பதே ஒரு சாதனையாகக் கருதிவரும் வேளையில் இப்படிப்பட்ட உத்தரவுகள் கால்பந்தாட்ட விளையாட்டிற்கே பின்னடைவை ஏற்படுத்தும்.

பன்னாடுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது சர்வதேசக் கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை இணைக்கவும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவே. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்விகளை விட முழுத்திறனுடன் பங்கேற்பதே முக்கியம். இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நாட்டு அதிபர்களே விளையாட்டுகளில் ஏற்பட்ட தோல்விகளுக்கு நடவடிக்கை எடுப்பது விளையாட்டுகளின் மீதும் நாட்டின் மீதும் மக்கள் வைத்துள்ள பற்றே காரணம்.

ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் மக்கள் தொகை சென்னை நகரை விடவும் குறைவு. அந்த நாடுகள் விளையாட்டுகளில் காட்டும் தீவிரம், வீரம் எல்லாம் பார்க்கும் பொழுது வெட்கமாகத்தான் இருக்கிறது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த என் நண்பர் என்னிடம், "இந்தியா ஏன் கால்பந்தாட்டம் விளையாடுவதில்லை?"என்றார். "எங்கள் நாட்டில் கிரிக்கெட்டிற்குத் தான் முக்கியத்துவம் அளிப்போம். மற்ற விளையாட்டுகள் இல்லை. இப்பொழுது பாருங்கள் நாங்கள் அனைவரும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டைத் தான் பார்த்து வருகிறோம்" என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

சரி கிரிக்கெட்டையாவது சரியாக விளையாடுகிறோமா? அணியின் வெற்றி தோல்விகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோமா?

உலகக்கோப்பையில் இரண்டாம் கட்டத்திற்கே தேர்வாகவில்லை என்றாலும் நாங்க இரண்டாம் தர அணியுடன் நடக்கும் விளையாட்டுகளில் வெற்றியடைவோம் என்று மார்தட்டிக் கொள்வோம். தோல்வியடைந்து வந்த அணியில் இருந்து சில புதிய வீரர்களைப் பலிகடாவாக்கி தோல்வியில் இருந்து மீண்டு விடுவோம்.

நாட்டுப்பற்றை விளையாட்டுகளில் காட்டாவிட்டாலும், விளையாட்டுகளை நடத்துவதிலாவது காட்டுவோமா என்றால் அதுவும் கேள்விக்குரியாகவே உள்ளது. காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. கிரிக்கெட் வெறியர்கள் நிரம்பிய நாட்டில், கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரத்தில் எந்த விளையாட்டுப்போட்டிகள் நடந்தாலும் கவ்னிப்பார் அற்றுப் போய்விடும். "இந்தப் போட்டிகளை நடத்தினால் காமன்வெல்த் போட்டிகளின் மீதான ஆர்வம் குறையும்" என்று காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் சுரேஷ் கல்மாடி நம்புகின்றார். 

இந்தியாவிலும் பெரிய அளவிலான போட்டிகளை நடத்த முடியும், இந்தியர்களும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் தான் என்று உலகிற்குக் காட்ட நினைக்கும் சூழலில் இது போன்ற தடையூறுகள் கண்டனத்திற்குரியது. சில ஆயிரம் கோடிகள் செலவில் நடத்தப்படும் நிகழ்வை சில நூறு கோடிகள் வருமானத்திற்காக விட்டுக்கொடுக்க நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை என்ன சொல்வது?

நாட்டைப் பற்றியே கவலை இல்லாதவர் கையில் இந்தியக் கிரிக்கெட் வாரியம். போதாக்குறைக்கு இப்பொழுது ஐ.சி.சி.யும் சேர்ந்துள்ளது. கொடுத்த வேலையையே ஒழுங்காச் செய்யாதவருக்கு சர்வதேசப் பதவி...ஹ்ம்ம்ம்.. உணவுப் பொருட்களின் விலைவாசியேற்றம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் அல்வாவை எத்தனை நாளைக்குத் தான் சுவைப்போம்?

கால்பந்தாட்டப் போட்டிகளில் நாம் பார்க்க நேர்வது விளையாட்டுப் போட்டிகளுடன் நாட்டுப்பற்றையும் தான். ஆனால், இந்தியாவில் நாம் பார்ப்பது தேசப்பற்றை விட தனிப்பட்ட வீரர்களின் சாகசமும் வியாபாரத்தையும் தான்.  இந்தியா மற்ற விளையாட்டுப் போட்டிகளில் எப்பொழுது மேலோங்கும்? விளையாட்டிலாவது தேசப்பற்று வர வாய்ப்பிருக்கிறதா? நம் நாட்டில் எதற்காக அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன?

Sunday, May 30, 2010

அமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை!!

"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.

"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.

வெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது "வெயில் அதிகமா இருக்கப்பா" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

என் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம். 

அமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்கின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.





பேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பேருந்தில் அரை மணி நேரம்  தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள். 

ம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே?

தட்பவெப்பம் அதிகரிப்பதனாலே!! 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, "நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று!!". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!



o

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், "கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில்லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.



கோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((

o

உலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம்.  இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்??

o

Saturday, May 22, 2010

பயமுறுத்தும் விமானப் பயணங்கள்..



நம் ஊர் செய்தித் தாள்களில் பார்க்கும் சாலை விபத்துகளைப் போலாகிவிட்டது விமான விபத்துகள்!! சென்ற வாரம் லிப்யாவில் நடந்த விமான விபத்தில் 100 பேருக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். சென்ற மாதம் போலாந்து நாட்டு விமான விபத்தில் போலாந்து அதிபர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எங்கோ நடக்கும் பொழுது சிறு அதிர்ச்சியுடன் கடந்து செல்லும் நமக்கு, நம் நாட்டில், நாம் தொடர்புள்ள நகரங்களில் விபத்து நடைபெற்றால் அதிர்ச்சியில் இருந்து மீள்வது கடினமாகிவிடுகிறது. இன்று மெங்களூரில் நடந்துள்ள விபத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.

காலையில் செய்தித் தொலைக்காட்சியைப் பார்த்ததில் இருந்து செய்தியைப் பார்ப்பதையே தவிர்த்து வருகிறேன். செய்தித் தொலைக்காட்சிகள் காட்டி வரும் காட்சிகள் விமானப் பயணத்தின் மீதே பயத்தை உண்டாக்குகின்றன. மீண்டும் மீண்டும் வெடித்துச் சிதறும் காட்சிகளும், எப்படி நடந்தது என்ற ஆய்வுகளும் என்று தொலைக்காட்சிகளுக்கு, சில நாட்களுக்குத் தீணி (??) தான். 

விமானத்தில் ஏறியவுடன் ஆபத்தான சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அவசர கால தரையிறக்கம் (லேண்டிங்) செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். சிலர் மட்டும் கவனமாகக் கவனிக்க, பலர் தூங்கிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைகள் யாவும் விமானியின் கட்டுப்பாட்டில் நேரும் சூழலிற்காகவே கூறப்படுகிறது.

ஆனால் கட்டுப்பாட்டில் இருந்து தவறும் விபத்துகளுக்கு என்ன செய்ய?

கால நிலை, ஓடு பாதையின் குறைவான நீளம், ஓடு பாதை அமைந்துள்ள இடம், விமானத்தைத் தரையிறக்கிய விதம், காற்றழுத்தம் என்று பலவற்றை விபத்திற்கான காரணங்களாகக் கூறுகிறார்கள். தாய்நாட்டில் உள்ள குடும்பத்தைப் பார்க்க வந்தவர்கள், சுற்றுலாவை முடித்து வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் என பயணிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியுமா?

விமானப் பயணங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அதற்கு ஈடுகட்டுமளவிற்கு வசதிகளையும் ஏற்படுத்துவது தேவையான ஒன்று. நம் நாட்டில், சில விமான நிலையங்கள் தவிர்த்து பெரும்பாலானவற்றுள் ஓடுதளம் சிறியதாகவோ, ஒரே ஒரு ஓடுதளத்தைக் கொண்டும் தான் இயங்கிவருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கூட, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுஃப்தான்ஸா போன்ற பெரிய ரக விமானங்கள் ஓடுதளங்களில் ஓடும் பொழுது விமானத்தின் இறெக்கைகள் அருகில் உள்ள சுவற்றில் முட்டிவிடுமோ என்ற பயமேற்படும். 

ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்கவோ, கூடுதல் ஓடுதளங்களை உருவாக்கவோ வேண்டுமென்றால் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடுகள் வந்துவிடுகின்றன. மெங்களூரில் கூட சிறிய ஓடுதளத்தை அமைத்திருப்பது இந்த விபத்திற்கு ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தின் திட்டமிடலில் உள்ள கோளாறால் இன்னும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள் நடக்க வேண்டும்?

விமானத்தில் பயணிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பயணத்திற்கு முன்பு பயணக் காப்பீடு எடுப்பது தான் பயணிகள் அனைவரும் செய்ய வேண்டியது. பயணிகளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் குறைந்தது குடும்பத்திற்குக் காப்பீட்டுப் பணமாவது கிடைக்கும். விமானப் பயணச்சீட்டில் ஒரு 2% - 5% பணத்தை காப்பீட்டில் செலவிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே!!


மெங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த அன்பர்களுக்கு அஞ்சலிகளும், அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்களும்!!

*

இந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எந்த அளவிற்குச் செய்திகள் நமக்குத் தேவை? எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம்? நாளை விமானப் பயணம் மேற்கொள்பவரின் குடும்பத்தினர் என்ன மாதிரியான மன உளைச்சலுக்கு உண்டாக வேண்டியதிருக்கும்? 

நண்பர்களே, தயவு செய்து இது போன்ற விபத்துகளைக் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் பார்க்காதீர்கள். 

*

Monday, May 17, 2010

எப்பொழுது திருந்தப் போகிறோம்?

முதலாவது காட்சி: கோவை உக்கடம் பேருந்து நிலையம்

விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் காணப்படும் காட்சி...

பொள்ளாச்சி மற்றும் பழநிக்குச் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நுழையும் இடத்திலேயே அடிதடி ஆரம்பித்துவிடும். தனியார், அரசுப் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளிலும் இடம் பிடிப்பதற்கு ஒரே சண்டை தான். இத்தனைக்கும் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பழநி, உடுமலை செல்லும் பேருந்துகளிலும் இதே நிலை தான். இதுவே பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விஷேச நாட்கள் என்றால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.

அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி அமர்ந்து, அடுத்த தளத்தில் (லேன்) பாலக்காடு, திருச்சூர் செல்லும் பயணிகளைப் பார்த்தால் நமக்கே தலைகுனிவாக இருக்கும். பேருந்து நெரிசல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பேருந்துகள் ஏறுவார்கள். வரிசையில் கடைசியில் நிற்பவரும் அதிகபட்சமாக 15 நிமிடத்தில் ஏறிவிடுவார்.

அங்கே அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதல்ல ஒழுங்குக்குக் காரணம். தமிழகத்தில் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கோவை - பொள்ளாச்சி, கோவை - திருப்பூர் போன்ற தடங்கள் முதலிடங்களில் வரும். நம்மால் ஒரு 15 நிமிடம் பொறுக்க முடியாதா? வாலிப முறுக்கில் இருப்பவர்கள் அடித்துப்பிடித்து இடம் பிடிக்க முடியும். வயதானவர்கள் என்ன செய்வார்கள்?

என் பெற்றோர், கோவையில் ஏதாவது வேலை என்றால் விசேஷ நாட்களில் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

20 அடி தொலைவில் நிற்கும் பயணிகளுக்கு இருக்கும் ஒழுங்கு நமக்கு ஏன் இல்லை? இது இன்று நேற்றல்ல, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே ஒழுங்கு தான்! அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? காட்டுமிராண்டிகள் என்று தானே நினைக்கக் கூடும்?

அடுத்த காட்சி : கோவை ரயில் நிலையம்




இரவில் 8 மணியில் முதல் 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றிருப்பவர்களுக்கு நான் விவரிக்கும் காட்சி நினைவிருக்கும்.

புதுடெல்லி செல்லும் கேரளா விரைவுவண்டி, நீலகிரி விரைவுவண்டி, சென்னை விரைவுவண்டி, நாகர்கோவில் விரைவுவண்டி, வெஸ்ட்கோஸ்ட் விரைவுவண்டி என குறைந்தது ஐந்து அல்லது ஆறு விரைவு வண்டிகள் 8 மணி முதல் 9 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. மொத்தம் 6 பிளாட்பாரங்கள் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலும் 1,2,3,4 தளங்கள் (பிளாட்பாரங்கள்) மட்டும் தான் பயன்படுத்தப்படும். இதில் ஓரிரு ரயில்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தால் இரண்டு தளங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த ஆறு வண்டிகளில் செல்லும் ஏறக்குறைய 3000 பயணிகள் இரண்டு தளங்களில் தான் நிற்க வேண்டியிருக்கும். இது போதாதென்று பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு விற்பனையாளர்களின் தள்ளு வண்டிகளையும் சேர்த்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம் தான். இப்படி 2000 - 3000 பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்கள் மாற்றப்பட்டால் என்னாகும் நிலை?

இது தான் ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடந்திருக்கிறது!!

13 ஆம் தளத்தில் வரவேண்டிய பிகார் செல்லும் ரயில் 12ம் தளத்துக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியில் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. நம்மைப் பொறுத்த வரை, நாடெங்கும் மக்கள் நெருக்கடியால் இறந்து போன நூற்றுக்கணக்கானோரில் மேலும் இரண்டு உயிர்கள் அதிகரித்திருக்கிறது. எங்கோ நடந்ததால் இது நமக்குச் செய்தி. இதுவே கோவை ரயில் நிலையத்திலோ, உக்கடம் பேருந்து நிலையத்திலோ நடந்தால் என்ன செய்வோம்? சில நிமிடம் முன்பு தன்னுடன் நின்றிருந்த சக பயணி நெருக்கியதால் இறக்க நேர்வது எவ்வளவு துயரமானது?

இது போன்ற உயிரிழப்புகளைப் பார்க்கும் பொழுது, நம் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பது ஏதோ அதிர்ஷ்டம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது!

இதற்கு என்ன காரணம்?

1. போதிய இட வசதியில்லாதது தான் முதல் காரணமாகக் கூற முடியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகியிருக்கின்றனவா என்றால், 'இல்லை' என்று தான் கூற வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வசதிகளைக் கொண்டு இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.

2. நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதிய பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படை பயிற்சி இல்லாததாலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் வருடத்துக்கு ஓரிரு முறை பாதுகாப்புப் பயிற்சி (Safety Drill) நடத்தப்படுகிறது. அது போல பயணிகளுக்கும் நடத்தினால் பயனளிக்கும்.

3. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னேற்பாடு ஒவ்வொரு அமைப்பினரும் திட்டமிடுவது மிகவும் தேவையான ஒன்று.

4. மக்கள் கூடும் இடும் (ASSEMBLY POINT): கோவை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாட்டுத்தாவனி போன்ற பிரதான பேருந்து நிலையங்கள் என எங்கேயும் அவசர கால மக்கள் கூடும் இடம் இருப்பதை நான் பார்த்ததே இல்லை. அசம்பாவிதம் நேர்கையில் எங்கே செல்வது என்று தெரியாததாலேயே விபத்துகள் நடக்கின்றன. Assembly Pointகளுக்கான இடத்தை ஒதுக்கி மக்களுக்கு தெரியப்படுத்தினால் சம்பவங்கள் நடக்கும் பொழுது உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

5. எல்லாவற்றிற்கும் மேலான தேவை ஒழுக்கம். "நாம் நெருக்கித் தள்ளும் மனிதரும் நம்மைப் போன்றவர் தான்" என்ற எண்ணம் வரவில்லை என்றால் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே முடியாது.

எப்போது திருந்தப் போகிறோம்?

*

Friday, May 7, 2010

சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்.

சாதி/ குலம் என்றால் என்ன? சாதி எப்பொழுதிருந்து  வழக்கத்தில் இருக்கிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் பல ஏடுகளில் தேடினேன். அதில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் (பக்கம் 161) உள்ள கருத்துகளைக் கீழே சேர்த்துள்ளேன்.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் "மக்கள் செய்துவந்த தொழிலிற்கு ஏற்பத்" தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமனக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு  பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்ப்பட்டு வந்தது.

மக்கள் செய்து வந்த தொழிலிற்கு ஏற்ப பல குலங்களாகப் பெயரிடப்பட்டு வாழ்ந்தது மேலே உள்ள பத்தியில் இருந்து விளங்குகிறது. ஆனால், அந்த காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், இது எப்பொழுது மாறியது? ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்பித்தது எப்பொழுது? ஒரு குலத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை வர ஆரம்பித்தது எப்பொழுது?

இந்நிலைக்குக் காரணம் இன்னார் தான் என்று விடையளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. சாதிகளின் இன்றிய நிலை என்ன? இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா? என்ற கேள்விகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.



உணவு, உடை, இருப்பிடம், காற்று, ஒளி, போல நம் இந்தியர்களின் வாழ்வில் ஒன்றாய்க் கலந்திருக்கும் விசயம் சாதி.

எப்படி சில சாதியினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்? சில சாதியினர் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு விடை கல்வி, வெளியுலகப் பட்டறிவு (Exposure), ஆள்வோரின் துணை போன்றவையை விடையாகக் கூற முடிகிறது. தொழிலின் அடிப்படையில் குலங்கள் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் வரக் காரணம், சிலரின் தொழில் வெளியுலக உறவைப் பலப்படுத்தும் வகையிலும், சிலரின் தொழில் குறுகிய வட்டத்தில் இருந்ததையும் புரிய முடிகிறது. அப்படி கல்வி, வெளியுலக அறிவு போன்றவை சில குலங்களை பலப்படுத்தியும், போதிய கல்வியறிவு இல்லாதது பல குலங்களைச் சமூக சூழ்நிலையில் தாழ்த்தவும் செய்தன. இதற்கு மேலாக ஆள்வோரின் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவையும் சேர்ந்து கொள்ள சாதிய வேறுபாடுகள் நம் சமூகத்தில் வேறூன்றி விட்டது.

சமூகத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் தாழ்ந்திருப்பதற்கும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட (என்று கூறப்படும்) குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வெளியுலக உறவு / அறிவு போன்றவையே காரணம்.

ஒரு குழந்தை அறிவாளியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை விட வளர்ந்த சூழ்நிலை, கல்வி, வெளியுல அறிவு போன்றவற்றைத் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி கல்வி, வெளியுலக அறிவு/உறவு போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தினர்க்கு உதவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு. 

o

பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது வகுப்பாசிரியர், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு வரை சாதி ஏதோ பெயரிற்குப் பின்னார் போட்டுக்கொள்ளும் விசயம் என்றே எண்ணியிருந்தேன். பிறகு 12 படித்து முடித்து பொறியியர் படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிய பொழுது தான் தெரிந்தது சாதிக்கு நம் கல்விமுறை கொடுக்கும் முக்கியத்துவத்தை. எத்தனையோ கேள்விப்படாத சாதிகள். பொறியியல் பட்டியலில் என்னுடைய வரிசை எண் - 1650. பி.சி. எண் - 847. அதாவது பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் எனக்கு 847வது இடம். 1500வது எண் உள்ள பொதுப் பிரிவில் வரும் மாணவரை விட எனக்கு அதிக முக்கியத்துவம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது  கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டதால், சாதியைக் குறிப்பிட வேண்டிய சூழல் பிறகு ஏற்படவில்லை.

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா? 

o

இட ஒதுக்கீடு எவ்வாறு வகுக்கப்படுகிறது?

சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் மூலமும் கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நிர்ணிக்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. தேவையேற்படும் பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முறையாக வைத்துள்ளனர்.

2011 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.

o

இந்தக் கோரிக்கைக்குத் தேவையென்றும்.. தேவையில்லை என்றும் கருத்துகள் வெளியாகின்றன.

கல்வித் துறை முதல் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது வரை இட ஒதுக்கீட்டிற்கு சாதியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையே என்பது ஒரு தர வாதம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.

சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதிக் கட்சிகளுக்கு வசதியாகி விடும். இன்று பி.சி., எம்.பிசி, எஸ்.சி. எஸ்.டி என்று உள்ள நிலை மாறி மேலும் பல உட்பிரிவுகள் வரக் காரணமாகிவிடும். ஏற்கனவே பிரிவினைவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், சாதிவாரியான மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதே அடுத்த தரப்பின் வாதம். 

o

தொழில்வாரியாக வகுக்கப்பட்ட சாதிகள், இன்று அரசியல் காரணியாகவும், வாக்கு வங்கியாகவும் மாறிவிட்டது வேதனையானது. அதற்கான காரணம் வெவ்வேறு சாதிகளிடையே இருந்த பொருளாதார சமூக வேறுபாடுகளே!! அந்த வேறுபாடுகளை இந்த இட ஒதுக்கீடுகள் அகற்ற உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?

பிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா? அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா?

சாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும். அதற்கான வழிவகைகள் எப்பொழுது ஏற்படும்? அப்படி பொருளாதார அடிப்படையையும் சேர்க்க ஆரம்பித்தால், சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்ற சூழலும் வர ஆரம்பிக்கும்.

அதுவே படிப்படியாக சாதிகள் இல்லாத சமூகம் வர உதவும்.

உங்கள் கருத்துகளைக் கீழே குறிப்பிடுங்கள்!!

Friday, April 30, 2010

லிவிங்க்-டு-கெதர், குஷ்பு, திருமணம் - ஒரு பார்வை!!

"திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் (லிவிங்க் டுகெதர்) என்ன தவறு இருக்கிறது?" என்று உச்ச நீதி மன்றம் குஷ்பு மீது தொடுத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

"படித்த எந்த ஆணும் தன் மனைவி கற்புடையவளாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டான். பெண்கள் திருமணத்திற்கு முன்பான உறவுகளில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்தது வழக்குகளுக்கும், குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டங்களுக்கும் காரணம்.

o

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? குஷ்புவின் கருத்து சரியானதா? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இந்த விசயம் தொடர்பாக பல எண்ணங்கள் மனதில் எழுகின்றன. அதைப் "பொதுப்புத்தி"யுடன் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்பது தீர்ப்பு. இங்கே கவனிக்க வேண்டிய விசயம்.. திருமண வயதை அடைந்தவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டையெல்லாம் கூறவில்லை இந்தத் தீர்ப்பு. ஒருவர் யாருடன் சேர்ந்து வாழ்வதும் அவரவரின் விருப்பம். ஆக..  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரிவதில்லை.

திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை மட்டும் பார்ப்போம். ( ஓர் ஆண் ஆணுடனோ, ஒரு பெண் பெண்ணுடனோ சேர்ந்துவாழ்வது இங்கே விவாதிக்கவில்லை.)

o

"எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது, எனக்கும் இந்த ஆணைப் பிடித்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம்" என்பது மாநகரங்களில் இன்று பரவலாகி வருகிறது. "நானும் நீயும் ஒரு கூரையின் கீழ் வாழ திருமணம் என்ற "சடங்கு" தேவையா?" என்பதே இவர்களின் மனதில் எழும் கேள்வி. அவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் சேர்ந்து வாழத் திருமணம் தேவையில்லை தான்.  

இந்த முடிவை எடுப்பவர்கள் இருபதுகள், முப்பதுகளில் இருப்பவர்கள் தான் அதிகம். இவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?

முதலில் வாழ்விடம்..

தாங்கள் சேர்ந்துவாழ, ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, வெளியூரிற்குச் செல்லும் பொழுது விடுதியில் அறை எடுப்பது வரை சிக்கல் தான். தாங்கள் கணவன் மனைவி தான் என்று நிரூபித்தால் தான் இன்றும் ஹோட்டல்களில் அறை எடுக்க முடியும். கமலஹாசன் முன்பொரு பேட்டியில், "ஹோட்டலில் அறை எடுப்பதற்காகத் தான் திருமணம் செய்தேன்" கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஹோட்டல் நிர்வாகத்தினர் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலேயே இருக்கிறது நாட்டு நடப்பு!! சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி படைத்தவர்கள் இதில் அடங்க மாட்டர்.

அடுத்து குழந்தை..

சேர்ந்து வாழும் இருவர்.. தங்களுக்குக் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால் வருவது அடுத்த சிக்கல். கற்பமான தன்னவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்.. உறவுமுறையைக் கூற வேண்டிய இடத்தில் ஆரம்பிக்கிறது சிக்கல். சேர்ந்து வாழ்பவர் என்ற உறவுமுறையை நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் ஏற்கலாம். சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ.. சிக்கல் தான். ஆனால், பிறந்த குழந்தையை வளர்ப்பதில் எந்த குறையும் இன்றி கண்டிப்பாக வளர்க்க முடியும்.  திருமணமாகாத பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும் போது.. சேர்ந்து வாழும் பெற்றோரால் கண்டிப்பாக நன்றாகவே வளர்க்க முடியும். 

வெளிநாட்டு வாழ்க்கை.. விசா.

சேர்ந்து வாழும் இருவருள் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல நேர்ந்தால்.. தன்னைச் சார்ந்தவர் (Dependent) என்ற முறையில் "மனைவியையோ/ கணவரையோ" மட்டுமே அழைக்க முடியுமே தவிர.. சேர்ந்து வாழ்பவரை அல்ல. மேலும்.. துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில்.. நீங்கள் திருமணமாகத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். "One should not live with a person out of their marriage"

சேர்ந்துவாழ்பவர்களுக்கு ஏற்படும் சிக்கலை விவரித்த அதே நேரத்தில்.. தேவையற்ற சடங்குகள், கணவன் மனைவிக்கென்று சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், பிடிக்கவில்லை என்றால் எளிதில் பிரிந்து செல்ல முடிவது போன்றவையை நன்மையாகக் கூறலாம். சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் நண்பர்களும் எனக்கிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சேர்ந்து வாழ்ந்த இருவர் பிரிய நேர்ந்தால் என்ன நிலை ஏற்படும்? அந்த ஆண் அல்லது பெண் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வதை எப்படி அனுகுவது? இங்கே தான் வருகிறது குஷ்புவின் கருத்து!!

சேர்ந்து வாழ்ந்த ஆணோ பெண்ணோ பெற்றோரின் நிர்பந்தத்தால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டால், அவர்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப் படுவர்? விவாகரத்து ஆனவர் என்பதைப் போல சேர்ந்து வாழ்ந்தவர் என்றா? 

நண்பர்கள் மத்தியில் திருமணம், தான் திருமணம் செய்யப் போகும் பெண் பற்றியெல்லாம் பேச்சு வரும்பொழுது, "மாப்ளே, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தாப் போதும்டா" என்றோ, "நான் எந்த பெண்ணுடனும் தொடர்பில்லாம இருக்கேன், என் மனைவியும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருப்பதில் என்ன தவறிருக்கிறது" என்றோ தான் பேச்சு அடிபடும். 

ஆக குஷ்பு கூறியது போல "படித்த ஆண் மகன் எவரும் தன் மனைவியாக வருபவர் கற்புடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டார்" என்ற கருத்தை ஏற்க முடிவதில்லை. திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தவர்கள் சில சதவிதத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும், பெருவாரியான மக்கள் இப்படித்தான் என்பது ஏற்புடையதில்லை.

இந்த நபர் இன்னாருடன் சேர்ந்துவாழ்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால் எத்தனை சதவிதத்தினர் திருமணத்திற்கோ சேர்ந்து வாழவோ ஏற்றுக் கொள்வர்?

-பிடிக்காத நபருடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே சரி என்று கூறும் வேளையில் வாழ்க்கையின் அடுத்த நிலை என்ன என்பதை யோசிப்பது மிகவும் தேவையான ஒன்று. வாழ்க்கையின் அடுத்த நிலையில், திருமணம் பற்றி யோசிக்க நேர்ந்தால் தன்னைப் பற்றிக் கூறிவிடுவதே ஏற்புடையது.

o

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, (இந்திப் படங்களில் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்து) லிவிங்க்-டு-கெதர் உறவுமுறை மீது ஆர்வம், ஏதோ நவீனத்துவ சிந்தனையாளன் என்ற எண்ணம் போன்றவையால் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் முன்பு வாழ்வின் அடுத்த நிலை பற்றி சிந்திப்பது நல்லது. "இன்றைய பொழுதை இனிமையாக்கு, நாளையை நாளை பார்க்கலாம்" என்பதெல்லாம் சரிதான். ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!!

o

Friday, April 16, 2010

ஹெலன் கெல்லர் மற்றும் ப்ளாக் - இருளில் ஒளி!!



ஹெலன் கெல்லரைப் பற்றிய பாடத்தை பள்ளி நாட்களில் படித்ததுண்டு.  பிறந்த சில மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் இருளில் மூழ்கியிருந்த ஹெலர் கெல்லரிற்கு ஒளி கிடைத்தது ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரின் உதவியால்!!

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று, பிறகு பட்டமும் பெற்றது வரலாறு. 

o

ஹெலன் கெல்லரின் வாழ்க்கையின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படம் தான் ப்ளாக் (BLACK).


சஞ்சை லீலா பன்சாலியின் இயக்கத்தில் கண்பார்வை தெரியாத பெண் 'மிச்செல்'லாக ராணி முகர்ஜி, ஆசிரியர் தேப்ராஜ் சஹாயாக அமிதாப் பச்சனும் அருமையாக நடிக்க, ரவி.கே.சந்திரன் வரைந்த ஒளி ஓவியம்!!

மிச்செல், கண் பார்வை, காது கேட்கும் - வாய் பேசும் திறன் இல்லாததை அறியும் தந்தையால் உதாசீனப்படுத்தப்படுகிறார். ஒலி, ஒளி எதையுமே உணரவோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ முடியாத மிச்செல் முரட்டுத்தனமாக நடக்கிறார், ஆசிரியர் சஹாயைச் சந்திக்கும் வரை!! அதன் பிறகு சஹாயின் பயிற்சியில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், படிக்கவும் கற்கிறார் என்பது தான் ப்ளாக் படத்தின் சுருக்கம்!!

மிச்செல் போல மாற்றுத்திறன் கொண்டவர்கள் எப்படி படிப்பார்கள்? அவர்கள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? என்றெல்லாம் சில ஆசிரமங்களுக்குச் சென்ற போது யோசித்ததுண்டு. ஆனால், மிச்செல் போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களின் பிரச்சனைகளைத் துல்லியமாக ஆய்கிறது இந்தப் படம்!!

"இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கண்தெரியாத, காதுகேட்காத குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம்" என்று பேசப்படும் ஒரு இடத்தில் சஹாய் கேட்கிறார், "அங்கு எதற்கு? கூடையும் பாயும் முடையக் கற்றுக் கொள்ளவா? அங்கு பட்டதாரியாகும் அவளின் கனவை நனவாக்க முடியுமா"?என்று. சஹாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ப்ளாக் படத்தில் மிச்செலின் பெற்றோர் வசதி படைத்தவர்கள். ஆனால், நம் சமூகத்தில் இது போன்ற திறன் உள்ளவர்களின் பெற்றோர்??

இந்தப் படத்தில் மிச்செலின் கல்லூரியில் பி.ஏ. படிப்பிற்குத் தேவையான பாடங்களை பிரெயில் முறையில் தயார் செய்து தருவார் ஆசிரியர். மிச்செலும் தன் பாடங்களைப் பேசவும் படக்கவும் தெரிந்த மாணவர்களுடன் படிப்பார். கல்லூரியில் விரைவுரையாளர் பாடம் எடுக்கும் பொழுது சஹாய் அருகில் அமர்ந்து மிச்செலிற்கு விளக்குவார். நம் சமூகத்தில்??

பல வருடங்கள் அதே கல்லூரியில் படித்துவிட்டுப் பட்டம் வாங்குமிடத்தில், மிச்செலுடன் நமக்கும் பெரிமிதம் வந்துவிடுகிறது படம் பார்க்கையில். பல வருடங்களாக மிச்செலுடனேயே பயணிக்கும் சஹாய்க்கு அல்ஜெய்மெர் நோய் தாக்குகிறது. ஆரம்பத்தில் தன்னைக் கட்டியது போல சங்கிலியால் சஹாயையும் கட்டியிருப்பதை உணரும் மிச்செல் கதறும் இடத்தில் நம் மனமும் கசிகிறது. தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருக்கும் சஹாயிடம் "தான் பட்டம் பெற்றதைத்" தன் மொழியிலேயே காட்டுவது அழகு!!


கடைசியில் சஹாயை அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மழையில் நனையவிடும் இடத்தில் புல்லரிப்பை உணர முடியும்!!

o

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் - ப்ளாக் (BLACK),  மாற்றுத் திறன் உள்ளவர்களைப் புரிந்துகொள்ளவும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது என்பதை உணரவும்!!. இதோ ஹெலன் கெல்லரின் வார்த்தைகள்..


They took away what should have been my eyes
But I remembered Milton's Paradise

They took away what should have been my ears,
Beethoven came and wiped away my tears

They took away what should have been my tongue,
But I had talked with God when I was young

He would not let them take away my soul -
Possessing that, I still possess the whole.

-Helen Keller

o

Related Posts with Thumbnails