தமிழனிற்கு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடுமன்ற நிகழ்ச்சிகளின் மீது உள்ள ஆர்வத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. "பேச்சிற்கு மயங்குபவன்" என்று தமிழனைக் கூறினால் அது மிகையில்லை. தமக்கு ஒத்த சிந்தனையுடையவரா, மாற்றுக் கருத்துடையவரா என்றெல்லாம் கவலையில்லாமல் "என்ன தான் சொல்றாருன்னு கேட்பமே?" என்ற எண்ணம் நமக்கிருக்கத்தான் செய்கிறது. அதுவே சிறந்த சிந்தனையாளராக அறியப்பட்டால் அவரின் நிகழ்ச்சி மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.
அப்படி ஒரு நிகழ்ச்சியினைத் தான் அமீரகத் தமிழ் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார்தாசன் என்று அறியப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் பங்குபெற்ற "தமிழ் இலக்கியக் கூடல்" நிகழ்ச்சி நேற்று (13.05.2010) நடந்தது. கடந்த ஒரு வாரமாக அமீரகத்தில் இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சி முழுக்க "தமிழ் இலக்கியம்" சார்ந்ததாக அமைத்திருந்தனர்.
தமிழ் மொழியின் தொன்மை தமிழ் மொழிக்கு பலமா? பலவீனமா? என்ற கேள்வியுடன் தனது உரையைத் தொடங்கினார்.
"தமிழ் மொழி 5000 ஆண்டு பழமை கொண்டது, நம் இலக்கியங்கள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவையெல்லாம் தமிழிற்குப் பெருமை சேர்ப்பவையே, தமிழின் தொன்மையே தனித்தன்மை" என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, "நம் மொழியின் தொன்மையே நம் பலவீனம்" என்றார். தமிழ் மொழியின் தொன்மை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டோம். "5000 வருஷ மப்பு தான் இதற்குக் காரணம்" என்றார் அவரது பாணியில்.
உதாரணமாக நம் தமிழ்த்தாய் வாழ்த்தை மேற்கோள் காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளையும் கூறினார்.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்
பொருள் :
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
மேலே இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில், எங்காவது தமிழர்களின் மொழிவளம், தமிழ் நாட்டின் வளம், தமிழ் மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தமிழர்களின் வாழ்வாதாரமான காவிரி, தமிழர்களின் பண்புகளைப் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். தமிழர்களின் பெருமையையே, தொன்மையையே பேசாத தமிழ்த்தாய் வாழ்த்தால் எப்படி மொழிப்பற்றை ஏற்படுத்த முடியும்? என்ற கேள்வி சரியாகவே தோன்றியது.
'மா தெலுகு தல்லிகி' என்ற தெலுகுத் தாய் வாழ்த்தினைப் பாடிக்காட்டி அதன் விளக்கத்தைக் கூறினார். "தெலுகு வாழ்த்தில் தெலுகுத் தாயை மலரிட்டு வணங்கி, கோதாவரியைப் புகழ்ந்து, கிருஷ்னா நதியைப் பாராட்டி, இலக்கியங்களைக் குறிப்பிட்டு, தியாகைய்யரின் தெலுகுக் கீர்த்தனைகளைப் புகழ்ந்து, தெலுகு மக்களின் பண்புகளின் பெருமை பேசுகிறது" என்றார்.
"4 வயது குழந்தை முதல் அனைவருக்கும் இந்தப் பாடல் மனப்பாடமாகத் தெரியும். அப்படி மனனம் செய்தவர்களுக்குக் கண்டிப்பாக அம்மொழியின் மீது பற்று வரத்தானே செய்யும்?" என்றார்.
நம்மில் எத்தனை பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொருளுடன் முழுமையாகத் தெரியும்?
தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் முதல் கம்பஇராமாயணம், தேவாரம், திருத்தொண்டர் புராணம் வரை இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடியும், எடுத்துக்காட்டியும், இவ்விலக்கியங்கள் தமிழர்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அவரது பாணியில் கேட்டார்.
திருக்குறள் உலகப் பொதுமறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதன் கருத்துகளைக் கடைப்பிடிக்க முடிகிறதா? என்ற கேள்வியையும், நம் மனதில் சிந்தனையையும் எழுப்பினார்.
"தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் யாவும் இன்றைய காலகட்டத்திற்கு பயன்படாதவையாகவோ, பின்பற்ற முடியாதவையாகவோ தான் இருக்கிறது. இதனாலேயே தமிழின் தொன்மை நமக்குப் பலவீனம் என்று கூறுகிறேன்.தமிழிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால் புதுமையான படைப்புகளைப் தமிழார்வம் மிக்கவர்கள் படைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
o
திருக்குறள் போன்ற பின்பற்ற முடியாத இலக்கியத்தால் என்ன பயன் என்ற கேட்டபொழுது "கருக்"கென்றிருந்தது. திருக்குறளின் கருத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தாலும் பின்பற்றாமல் போவது யாருக்கு நட்டம்? திருக்குறள் போன்ற நீதிநெறி நூல்கள் உள்ள கருத்துகள் தான் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைக்கிறது என்பது என் கருத்து. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்", "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" போன்ற பாடல்களை மனதில் வைத்திருக்கும் எனக்கு இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை.
தமிழில் நீதிநெறி நூல்கள் போதவில்லையா? என்று அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "இருந்தா சொல்லுங்க பார்ர்போம்!!" என்றார்.
திருக்குறளை விட நன்மை போதிக்கும் நீதிநூல் என்று இவர் எதைக் கூறுகிறார்?
எந்தத் தலைப்பாக இருந்தாலும் இலாவகமாகப் பேசுவதில் வல்லவர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. இலக்கியங்களில் இருந்து எத்தனை பாடல்கள்? சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்ப இராமாயணம் என்று இலக்கியங்களின் பாடல்கள் சீராக வந்து விழுகிறது இவரது உரையில். இடையிடையே பெரியபுராணம், தேவாரம் போன்ற பாடல்களில் உள்ள சமயக் கருத்துகளைக் கிண்டல் செய்வதையும் இவர் தவறவில்லை. நாற்பது ஆண்டாகப் நாத்திகக் கருத்துகளைப் பரப்பியவர் இந்தப் பாடல்களை நினைவில் வைத்திருப்பது ஒன்றும் வியப்பில்லை.
சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயணம் போன்ற காப்பியங்களைச் சாடியதைக் கேட்டு, "தமிழ் இலக்கியங்களைப் படிக்கவே வேண்டாமா?" என்ற கேள்வியை ஒரு அன்பர் எழுப்பினார்.
"மொழியின் இலக்கியத்தைப் புறக்கணிப்பவர் தன் முகவரியை இழப்பவர்" என்று கூறினார். "நம் மொழியின் இலக்கியங்களைப் படியுங்கள்!. அதே சமயம், புதுமையான கருத்துகளைப் படையுங்கள்!!" அது தான் தமிழை பலமாக்கும் என்றார்.
o
பேராசியரின் உரையில் பல கருத்துகள் ஏற்புடையதாகவும் சில கருத்துகள் ஏற்புடையதற்றவையாகவும் இருந்தன.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சரியானவற்றை சிந்தித்து உணர்வதே சரி?
"கட்டுரை, கவிதை என்று படைப்புகள் எவ்வகையானாலும் அதில் அன்பு இருக்கட்டும், உணர்வுகள் இருக்கட்டும், தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கட்டும், வாழ்வியல் இருக்கட்டும், தமிழ் மக்களின் பண்புகள், ஒழுக்கம் இருக்கட்டும், அறிவியல் இருக்கட்டும். அதுவே தமிழை பலப்படுத்தும். அதை உணர்த்துவதே இந்த உரையின் நோக்கம்!!" என்று தன் உரையின் முடிவில் கூறியது மிகவும் ஏற்புடையதாக இருந்தது.
o
நிகழ்ச்சியின் நிறைவின் பொழுது "பேராசிரியரின் மதமாற்றம்" பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விவரம் ஏற்கனவே யூ-டியூபில் உள்ளதால் இங்கே விவரிக்கவில்லை.
o
வழமையாக வியாழக்கிழமைகளின் மாலை நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு கழியும். நேற்றைய மாலைப்பொழுது அருமையான "இலக்கியக் கூடல்"ஆக அமைந்ததில் மகிழ்ச்சியே.
அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமீரகத் தமிழ் மன்றத்தினரிற்கும், இரண்டு மணி நேரம் உரையாற்றிய பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!
o