Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Saturday, March 12, 2011

சின்ன சின்ன நடை நடந்து...

இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின் காட்சியைமைப்புகளும் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால், கடந்த ஓரிரு மாதமாக இணையத்தில் இருந்து பழைய பாடல்கள் பலவற்றைத் தரவிறக்கம் செய்து வருகிறேன், அப்பாவின் விருப்பத்திற்கிணங்க.

முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு தான் கேட்டு ரசித்த பாடல்களை எல்லாம் நினைவுபடுத்தி இணையத்தில் தேடிப்பார்க்கச் சொல்கிறார். நானும் பல தளங்களைத் தேடி அப்பாவின் விருப்பப்பாடல்களை எடுத்துத் தருகிறேன். Cooltoad.com தளம் பல பழைய பாடல்களை எல்லாம் அளித்துவருகிறது. இணையத்தில் கிடைத்த பாடல்களை அவரது செல்பேசியில் சேமித்து வருகிறேன். செல்பேசிகள் டேப்ரெக்காடர்களுக்கு அஞ்சலி பாடிப் பல வருடங்களாகின்றன. 

செல்பேசிகள் வாங்கும் பொழுது ஒரு விசயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செல்பேசிகளின் உள்ள ஹெட்செட் மாட்டும் வசதியை பார்த்துக்கொள்ள வேண்டும். ஹெட்செட் மாட்டும் துழாயின் அளவு 3.5mm  ஆக இருந்தால் வெளியே ஸ்பீக்கரில் சேர்த்துவிடலாம். இன்னொரு விசயம் எத்தனை ஜிபி(GB) மெமரிகார்டை செல்பேசியுடன் இணைக்கமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 3000 ரூபாய் மதிப்புள்ள செல்பேசியில் கூட 16 ஜிபி வரை மெமரிகார்டை இணைத்துக்கொள்ளலாம். பிறகென்ன நூற்றுக்கணக்கான பாடல்கள் உங்கள் கைக்குள்...

*
பழைய பாடல்கள் பலவற்றைத் தேடிப்பிடித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது 'காவேரியின் கணவன்' படத்தில் வந்த இந்த பாடல் தான். பி.சுசீலாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்... கண்கள் சொருகுவது நிச்சயம்!!


சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


*

கீழே உள்ள சுட்டிகளில் இந்தப்பாடலைக் கேட்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.



Sunday, September 12, 2010

போறாளே பொன்னுத்தாயி... - சுவர்ணலதா நினைவஞ்சலி !!

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்

என்று ஆரம்பித்த சுவர்ணலதாவின் திரையிசை வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமாக முடிவிற்கு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். என்னுடைய இசைத்தொகுப்பில் சுவர்ணலதாவின் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் தான். எத்தனை விதமான பாடல்கள்? பாடல்களில் உணர்ச்சிகளை, வேறுபாடுகளை வெளிப்படுத்தியதில் எஸ்.ஜானகிக்கு அடுத்த படியான இடத்தில் இவரை வைப்பேன். 

மாலையில் யாரோ மனதோடு பேச..
மார்கழி வாடை மெதுவாக வீச..

என்ற வரிகளைக் கண்ணை மூடிக் கேட்கும் பொழுது அப்படியே மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வு வருவதை மறுக்கவே முடியாது. பாடல் வரிகளில் உள்ள தனிமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடலிது. தூக்கம் வராத பொழுதுகளில் இப்பாடல் தாலாட்டாக இருந்திருக்கிறது.

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்று "வள்ளி" படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்திய உணர்வுகளை வேறெந்த பாடலிலும் பெற முடியாது. 

"மாசிமாசம் ஆளான பொன்னு
மாமன் உனக்குத் தானே"

என்ற லேட் நைட் ரகப் பாடலை வெகுநேர்த்தியாகப் பாடியிருப்பார். பாடலிற்குத் தேவையான உணர்வைக் கொண்டுவருவதில் ஜானகிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று கூறியதும் இது போன்ற பாடல்களை நேர்த்தியாகப் பாடியதால் தான்!!

இளையராஜாவின் இசையில் அறிமுகம் ஆனாலும் அவர் அளவிற்கு ரகுமானாலும் பயன்படுத்தப்பட்ட "ராஜா காலத்துப் பாடகி"யென்றால் சுவர்ணலதாவாகத்தான் இருப்பார். ரகுமானின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே ஒவ்வொரு படத்திலும் ஒன்றோ இரண்டோ பாடல்களைப் பாடிவந்தவர்.

இன்றைய இளம்தலைமுறைப் பாடகிகள் மெல்லிசை, உற்சாகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வேகமான பாடல்கள் என்று ஏதாவதொரு வகையான பாடல்களை மட்டுமே பாடுவதைக் கேட்க முடியும். (சின்மயி இதில் விதிவிலக்கு). ஆனால் குத்துப்பாடல்கள், வேகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபாஸ்ட் நம்பர்ஸ் என எல்லா வகையான பாடல்களிலும் பிரகாசித்தவரென்றால் ஜானகிக்கு அடுத்தபடியாக இவரைத் தான் எண்ண முடிகிறது. இவரை ஆல்ரவுண்டர் என்றால் மிகையில்லை.

"முக்காலா முக்காபுலா " - காதலன்
"உசிலம்பட்டி பெண்குட்டி" - ஜெண்டில்மேன்
"அக்கடான்னு நாங்க எடை போட்டா" - இந்தியன்
"குச்சி குச்சி ராக்கம்மா.. " - பம்பாய்
"மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே" - Mr. ரோமியோ
"உளுந்து விதைக்கையிலே" - முதல்வன்
" ஒரு பொய்யாவது சொல் கண்ணே" - ஜோடி
"பூங்காற்றிலே " - உயிரே.
"குளிருது குளிருது" - தாஜ்மஹால்
"எவனோ ஒருவன்" -அலைபாயுதே

என்று ஒவ்வொரு வருடத்திலும் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முனுமுனுக்க வைத்தவர்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாடலில் சுவர்ணலதாவின் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் உச்சத்திற்குச் சென்று வருவது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ரகுமான், ஒரே படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களைப் பாட வைத்ததும் இவரை மட்டும் தான் என்று நினைக்கிறேன். ரட்சகன் படத்தில் "மெர்க்குரிப்பூக்கள்" என்ற பெப்பி பாடலைப் பாட வைத்து, "லக்கி லக்கி" என்ற மாறுபட்ட பாடலையும் பாட வைத்தார். இன்று ஓரிரு பாடல்கள் ஹிட் கொடுத்த பாடகிகள் எல்லாம் "ஆஹா ஓஹோ.." என்று பரபரப்பாக வலம்வரும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் பாடிய "சுவர்ணலதா"வை உரிய இடத்தில் வைத்திருக்கத் தவறிவிட்டார்களோ(டோமோ)? என்று தோன்றுகிறது. இவரது புகைப்படத்தை கூகுளில் தேடினாலும் ஓரிரு படங்களே கிடைத்தன.

இவரைப் பற்றிய கட்டுரை எழுதலாம் (இவர் இல்லை என்ற பிறகு) என்று பார்த்தால், நான் கவனிக்கத் தவறிய எத்தனையோ பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளது தெரிகிறது.

"ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மூஞ்சி காண்காம
உசுரே அல்லாடுதே

மறுநா வரும்வரைக்கும்
பசித்தூக்கம் கொள்ளாமல்
மனசு அல்லாடுதே"

என்று "அந்திமந்தாரை"யில் வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்!! பாடலிற்கு இசையே தேவையில்லை என்னும் அளவிற்கு இவரது ஆளுமை இப்பாடலில் தெரியும்.

இளையராஜா, ரகுமான் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடியவருக்கு மகுடம் சூட்டியது கருத்தம்மாவில் வந்த போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலில். இந்தப் பாடலிற்காக தேசியவிருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. சுவர்ணலதாவைப் பற்றி கட்டுரை எழுத நினைப்பவர்கள் "போறாளே பொன்னுத்தாயி" என்ற வரிகளைக் குறிப்பிடாமல் இருக்கப்போவதில்லை. கருத்தம்மாவில் இப்பாடல் மகிழ்ச்சி, சோகம் என்று இரண்டு முறை வரும். அதில் சோகமான பின்னனியில் வரும் வரைகளைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத் தோன்றுகிறது. 

"போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

இன்று சுவர்ணலதா மறைந்துவிட்டாலும், "மாலையில் யாரோ மனதோடு பேச"வும் "மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்" என் அலைபேசியிலும் இசைக்கோப்பிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனுடன் சுவர்ணலதாவின் நினைவும்!! 

RIP Swarnalatha!!

Friday, August 13, 2010

ஏ.ஆர்.ஆர் இசை (Brand Analysis) + எந்திரன் பாடல்கள்!!

எந்திரன் படப் பாடல்கள் வெளியானவுடன் என் நண்பர்களிடம் இருந்து எனக்கொரு நோய் தொற்றிக் கொண்டது. எந்திரனைப் பற்றிக் கருத்துச் சொல்லும் ESUS - Enthiran Status Update Syndrome என்ற நோய். 

"எந்திரன் பாடல்கள் என்னைப் பெரிதாகச் ஈர்க்கவில்லை" என்பது தான் பாடல்களை நான்கைந்து முறை கேட்ட பிறகு முகநூலில் (Facebook) நான் எழுதியது. "பாடல்கள் புது விதமாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்டுப்பார் பிடிக்கும்" என்ற வகையில் பல கருத்துகள் வர ஆரம்பித்தன. 

எத்தனை இசையமைப்பாளர்களின் பாடல்களை நமக்கு முதல்முறை பிடிக்காவிட்டாலும் "மீண்டும் மீண்டும் கேட்டால் பிடித்துவிடும்" என்று நினைத்துக் கேட்கிறோம்? அந்த இடத்தைப் பிடித்திருப்பது ரகுமானின் பாடல்கள் மட்டுமே. ரகுமான் மீது உருவாகியிருக்கும் இந்த நம்பிக்கை தான் அவரது இசையின் பலம். இந்த இடம் எளிதில் கிடைத்ததல்ல. ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேல், திருடா திருடா என்று ஆரம்பம் முதல் ஒவ்வொரு படத்திலும் புதுமையான இசையை அமைத்ததாலேயே கிடைத்துள்ளது. இந்தியிலும் ரங்கீலாவில் ஆரம்பித்து தில்ஸே, தால் என்று கிரங்கவைக்கும் இசையை அமைத்தாலேயே அவருக்கென்று தனி இடம் உருவாகியுள்ளது.

ரகுமானை ஒரு BRAND (வகைக்குறி) என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்திய அளவில் இவரிற்கு இருக்கும் BRAND LOYALTY  இசைத்துறையில் வேறு எவருக்கும் இல்லை எனலாம். எந்திரன் பாடல்கள் வெளியான மறுநாளே அமீரகத்தில் உள்ள மலையாளப் பண்பலைகளில் ஒலிபரப்பாகியது, இந்தி பண்பலைகளில் எந்திரன் இசையைப் பற்றிப் பேசப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் "ஐ-டியூன்" தளத்தில் எந்திரன் பாடல்கள் தர வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வந்துள்ளது எல்லாம் ரசிகர்களின் விசுவாசத்தால் தான். ( ஐ-ட்யூன் தளம் ஆப்பிள் நிறுவனத்தின் பாடல்கள் தரவிறக்கத் தளம்). ரகுமான் என்ற வகைக்குறியின்(BRAND'S USP) அடையாளம் என்றால் புதுமை, நேர்மை, கட்டுடைத்தல், கடின உழைப்பு போன்றவை.

ஒவ்வொரு படத்தின் பாடல்களிலும் ஏதாவது ஒரு விசயம் புதுமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையே ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்க்கத் தூண்டுகிறது. முதல் முறை கேட்கும் பொழுது இதுவரை நமக்குப் பழக்கப்படாத இசைக் கலவையாக இருந்தால் நமக்குப் புரியவில்லையே என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது. பிறகு "அந்த இசையில் ஏதாவது புதிதாக இருக்க வேண்டுமே, ஏன் நமக்குப் புரியவில்லை என்ற எண்ணம்" மனதில் எழ ஆரம்பிக்கிறது. சரி மீண்டும் கேட்டால் என்ன? "ஆஹா.. இந்தப் பாடல் முதலில் எனக்குப் பிடிக்கவில்லையே.. இப்பொழுது பிடிக்கிறதே.. மீண்டும் கேட்டுப் பார்ப்போம் ஏதாவது இருக்கிறதா என்று". இது தான் ரகுமான் பாடல்களின் வெற்றிக்குக் காரணம். இந்த இடம் ஒரு சில வகைக்குறிகளுக்கே கிடைத்துள்ளது.

தொழில்நுட்பத்துறையில் இந்த அளவிற்கு ரசிகர்கள் மரியாதையைப் பெற்றிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். (இங்கே ஆப்பிளைக் குறிப்பிடுவது BRAND என்ற பார்வையில் மட்டுமே). ஆப்பிள் நிறுவனம் எந்தப் பொருளை வெளியிட்டாலும் அந்தப் பொருளின் மீது அப்படி ஒரு படையெடுப்பு நடக்கிறது. ஐ-போடில் ஆரம்பித்தது ஐ-ஃபோன், ஐ-பேட் வரை இந்தப் படையெடுப்பு தொடர்கிறது. சில பொருட்களில் உள்ள பயன்பாடுகள் பல வருடங்களுக்கு முன்பே மற்ற நிறுவனப் பொருட்களில் வந்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் மீது உள்ள நம்பிக்கையால் அதன் பொருட்கள் முதலிடம் பெறுகின்றன. 

ரகுமானின் இசை, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் என இரண்டையும் "வெளியானவுடன்" எந்தத் தரப்பினர் ரசிக்கிறார்கள்?

நன்றாகப் படித்த, ஊடகங்களுக்கு அறிமுகமான ரசிகர்களால் தான் இரண்டு பொருட்களுமே "வெளியானவுடன்" அதிகம் ரசிக்கப்படுகின்றன. அவர்களே இந்தப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றனர். இணையங்கள், ஊடகங்கள் எங்கும் கருத்துத் தெரிவிப்பதும் இணைய வசதி, ஊடங்கங்களில் கருத்தைப் பதிவு செய்யும் வசதியுள்ளவர்களே. இந்தத் தரப்பினர் ஃபேஸ்புக், ப்ளாக்கர், மற்ற ஊடகங்களில் பரவலாகக் கருத்துத் தெரிவிக்கையில் உலகமே இவர்களின் பொருட்களைப் பேசுவதைப் போல ஒரு எண்ணம் உருவாகிறது. "எல்லாரும் இதைப் பத்தியே பேசறாங்களே.. நாம பேசலீன்னா நம்மள ஆட்டைக்கு சேத்துக்க மாட்டாங்களோ" என்ற உந்துதலால் அனைவரும் கருத்து சொல்லும் நிலை ஏற்படுகிறது. இதுவே வாய் வார்த்தையில் (WOM) மேலும் பலம் கொடுக்கிறது.

ஒரு பொருளை சந்தையில் வெளியிடுவதில் பல நிலைகள் உள்ளன. முதல் நிலை விசுவாசிகள், புதுமை விரும்பிகள் படையெடுக்கும் நிலை. இவர்களைப் பூர்த்தி செய்துவிட்டால் அந்தப் பொருள் அடுத்தடுத்த நிலைகளில் வெகுசனத்திடம் வெற்றியை உறுதி செய்கின்றது. ரகுமானின் இசை முதல் நிலையை பெரும்பாலான சமயங்களில் எளிதே கடந்துவிடுகின்றது. 

*

"எந்திரன்" படப்பாடல்களிலும் முதல் நிலையை எளிதே கடந்துள்ளது என்றே கூறலாம். SLMன் (ஸ்லம் டாக் மில்லியனர்) வெற்றி, ஆஸ்கர் போன்றவை உலகெங்கும் உள்ள தமிழர் அல்லாத ரசிகர்களிடத்தும் எந்திரன் இசையைக் கொண்டு செல்ல உதவியுள்ளது. எந்திரன் படமும் ஒரு ரோபோவைப் பற்றியது என்பதால் பரவலாக ஹார்ட் ராக், ஃபுயூசன், டெக்னோ, ரெக்கே என்று மேற்கத்திய பாணியில் இசையை வெளியிட்டுள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களாக நான் கேட்டதில் எந்திரன் பாடல்களின் தரவரிசையும் சிறிய விமர்சனமும்..

1 - காதல் அனுக்கள் - ஸ்ரேயா கோசல், விஜய் பிரகாஷ் :

படத்தின் ஒரே மெலடி. மிக மிதமாக ஆரம்பித்து அப்படியே துள்ளிச் செல்கிறது இசை. "ஹோ பேபி ஹொ பேபி.. " என்ற வரிகள் பாடலின் ஹை லைட். வழக்கப் போல் ஸ்ரேயா கோசலின் குரலில் அப்படி ஒரு மென்மை.

2. இரும்பிலே ஒரு இதயம் - ஏ.ஆர்.ஆர்., காஸ்'என்.கிரிஸ்

பின்னிப் பெடலெடுத்திருக்கும் பாடல். கார்களில் இந்தப் பாடலைக் கேட்டு விடாதீர்கள். உங்கள் வேகம் உங்கள் கையில் இருக்காது. அப்படி ஒரு வேகம். காஸ்'என்.கிரிஸ்ன் வரிகளும் பாடிய விதமும் கலக்கல் ரகம். சில வருடங்களுக்கு டிஸ்கோக்களில் அதிகம் ஒலிக்கும் பாடலாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது "அ..ஆ" படத்தில் வரும் "மரம் கொத்தியே.." பாடல் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

3. கிளிமஞ்சாரோ - ஜாவத் அலி, சின்மயி

முதல் முறை கேட்கும் பொழுதும் ஒன்ற முடிந்த பாடல். சின்மயியின் குரல் தானா அல்லது இசைத்தட்டில் பிழையாக எழுதிவிட்டார்களா என்று ஐயம் வரும் அளவிற்கு கலக்கலாகப் பாடியுள்ளார்.

4. புதிய மனிதா - எஸ்.பி.பி, ரகுமான், கதிஜா ரகுமான்

Ultimate Title Song!! எந்திரன் என்ற படப் பெயரை விளக்கும் வகையில் வரிகள். எஸ்.பி.பி.யின் குரல் ஒரே வரிக்குள் இரண்டு நிலைகளில் வருவது ரசிக்கும் படியாக உள்ளது.

5. பூம் பூம் டா - பலர் 

யோகி.பி ஸ்டைலில் ஒரு ராப் பாடல். நன்றாகவே வந்துள்ளது.

6. சிட்டி டான்ஸ் - பலர்

ட்ரம்ஸ், கிளாசிக்கல் என்று ஆரம்பித்து பாலேவில் பயனித்து டெக்னோவில் முடியும் தரமான ஃபுயூசன் இசை.

"அரிமா அரிமா" எனக்கு இது வரை சுமார் ரகமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் கேட்டால் பிடிக்க ஆரம்பிக்கலாம். இது வரை கேட்டதில் எந்திரன் படப் பாடல்களுக்கு 3.75 / 5 என்ற அளவில் மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

எந்திரன் பாடல்களைக் கேட்டு விட்டு களவாணியில் வரும் "சின்னச் சின்னத் தூரல் வந்து" என்ற பாடலைக் கேட்டவுடன் அப்படி ஒரு புத்துணர்வை உணர முடிகிறது. ம்ம்.. என்ன தான் மேற்கத்திய இசையை கேட்டாலும் எனக்குள் இருக்கும் கிராமத்தானிற்கு எளிமையான "ராஜா" ஸ்டைல் பாடல்களே கேட்டவுடன் பிடிக்கின்றன. 

*

Wednesday, July 14, 2010

சிவமணியின் மஹாலீலா - இசை விமர்சனம்


அட.. இந்த இசையை இத்தனை நாளாய் எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று சில சமயம் தோன்றும். இசை வெளியீடு பற்றிய செய்தியோ, அறிமுகமோ கிடைக்காமல் நல்ல இசையைத் தவற விடுவது சில சமயம் நடப்பதுண்டு. அப்படி கவனிக்காமல் விட்ட இசை வெளியீட்டில் சிவமணியின் மஹாலீலா ஒன்று!! 

உலக இசை என்றால் நமக்கு நினைவிற்கு வருவன யானி, எனிக்மா போன்ற இசைக் கலைஞர்களின் இசைக்கோப்புகளே!! அந்த இசைக்கோப்புகளில் வெளிநாட்டு வாத்தியங்களின் பங்கே அதிகமாக இருக்கும். இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு நல்ல உலக இசைக்கோப்பை ரசிக்க வேண்டுமா? இதோ மஹாலீலா...

மஹாலீலா ஆல்பத்தை இசைச் சங்கமம் (Fusion) என்ற பாணியில் இசையமைத்துள்ளனர். சிவமணியின் இசைக்கோப்பு என்பதால் அவரது வாத்திய இசை தான் மேலோங்கி இருக்கும் நம்பினால் அது தவறு. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ஜாகிர் உசேன் (தபேலா), விக்கு விநாயக்ராம் (கடம்), செல்வகணேஷ் (கஞ்சிரா), நிலாத்ரி குமார் (சிதார்), நவீன் (புல்லாங்குழல்), பார்த்தசாரதி (வீணை), ஜானெட் ஹாரிஸ் (சாக்ஸ்போன்) போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் ஹரிஹரன், உஸ்தாத் லியாகத் அலிகான், பிளாஸி போன்ற பாடகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் அருமையான சங்கமம்.

என் வாழ்க்கைப் பயணம் என்ற கருத்தில் இசையமைத்திருக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகிறது. குழந்தையின் பிறப்பு, தாய் மண், இசைக்கலைஞர்களுக்கான அர்ப்பணிப்பு, சிவ சிவ, பேஸின் பிரிட்ஜ் என்று பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகின்றது.

இன்ஃபினிட்டி (Infinity)- ஆரிராரோ..

ஓஷோவின் ஒலிக்கோப்பில் இருந்து துவங்கும் இந்தப் பாடலை எவரும் தவற விடக்கூடாது. "ஒரு குழந்தை கருவில் உருவானதில் இருந்து 9 மாதங்கள் சுவாசிப்பதில்லை. தாய் தான் சுவாசிக்கிறார். அந்த சுவாசிப்பில் கேட்கும் ஓசை தான் குழந்தை கேட்கும் இசை" என்ற ஓஷோவின் வார்த்தைகளுடன் ஆரம்பித்து.. ஆரிராரோ.. ஆராரிரோ பாடல் மனதை இதமாக்குகின்றது. 

இந்தப் பாடலின் இடையில் பண்டாரம் செல்வம் என்பவர் தாயின் அருமை பெருமைகளை விளக்கும் வண்ணம் பாடியிருக்கும் வரிகள் கேட்பவர்கள் உருகுவது உறுதி.

*
நிலவில் ஒரு நடனம் - (Dance on the Moon)

சர்வமங்களே மாங்கல்யே என்று ஆரம்பித்து பின்பு வரும் வாத்திய இசையாவும் எந்த ஒரு டிஸ்கோவிலும் ஒலிக்க விடலாம். அவ்வளவு அடி.. 

*

அப்பாஜி..

அனைத்து வாத்தியக் கலைஞர்களுக்கும் அர்ப்பணிப்பு என்று கூறித்துவங்கும் இந்தப் பாடலில் சிவமணியும் ஜாகிர் உசேனும் அமைத்திருக்கும் இசையுடன் நவீனின் புல்லாங்குழல் சேரும் பொழுது ஒரு மாறுபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. புல்லாங்குழல் இசையை இந்த அளவிற்கு அழகாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கேட்டிருக்கிறேன்.

*

சந்துஸ்தி

மஹாலீலா ஆல்பத்தில் சிவமணிக்கென்று ஒரு தனிப்பாடல் இது தான். ஏ.ஆர்.ரஹ்மானின் மேடை இசைக்கச்சேரிகளில் சிவமணிக்கென்று சில நிமிடங்கள் தரப்படும். அரங்கத்தையே அதிர வைத்துவிடுவார். அதை கேட்காதவர்கள் அல்லது மீண்டும் கேட்க விரும்புபவர்கள் கேட்க வேண்டிய பாடல். 

*

தாய்மண்

நவீனின் புல்லாங்குழல், பார்த்தசாரதியின் வீணை, விக்கு விநாயக்ராமின் கடத்துடன் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சங்கமம் அட்டகாசம். இந்த இசையைக் கேட்கும் பொழுது மண் வாசனையை உணரமுடிகிறது. இந்த இசையை எந்த ஒரு திரைப்படத்தின் மகிழ்ச்சியான காட்சிக்குப் போடலாம்.

*

பேஸின் பிரிட்ஜ்

சென்னை சென்ரல் ரயில் நிலைய அறிவிப்புடன் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை சிவமணியின் ட்ரம்முடன் சேர்ந்து வருவது அருமையான ஜூகல்பந்தி. இறுதியில் வரும் அடி... மின்சாரக்கனவு ஊல்ல்லால்லா.. அடியை நினைவுபடுத்துகிறது.

*

இது மட்டும் இல்லாமல் சங்கர் மஹாதேவன், ஹரிஹரன் பாடும் பாடல்களும் இந்த இசைக்கோப்பில் உள்ளன.  

நமக்குப் பெரும்பாலும் இசை என்று அறிமுகப்படுத்தப்படுவது / பட்டிருப்பது திரைப்படங்களில் வரும் இசையே. இசை என்று ஒரு படத்தில் வரும் ஐந்து பாடல்களை ரசித்துவிட்டு சென்றுவிடுவோம். இசைக்கு மொழி தேவையில்லை என்பதை இசை வாத்தியங்கள் சேர்ந்து சங்கமிக்கும் பொழுது உணர முடியும். மஹாலீலாவைக் கேட்கும் பொழுது அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இசைப்பிரியர்கள் கேட்க வேண்டிய இசைக்கோப்பு!!

தரமான இசையை ஹம்மா.காம்ல் இலவசமாகக் கேட்கலாம்!!

Saturday, March 20, 2010

எனிக்மா - மர்மத்தின் உச்சகட்டம்!!

"இசைக்கு மொழியில்லை" என்று கூறுவதுண்டு.  குருவிகளின் சத்தம், கிளிகள் ஓசை, மைனாக்களின் கீச்சல்கள் என ஒவ்வொரு ஓசையையும் இசையாக நினைத்துப் பார்த்தால் "மொழியையும் ஒரு இசையாக அனுபவித்தால் என்ன"வென்று தோன்றும். அப்படி அனுபவித்துக் கேட்கும் பொழுது "இசையை ரசிக்க மொழி தேவையில்லை" என்ற விசயம் விளங்கும்.

வாத்திய இசையை "Instrumental Music" என்ற வடிவில் கேட்பது நமக்கு வழக்கப்பட்ட ஒன்றே. மிருதங்கம், நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், வயலின், மாண்டலின் முதல் சாக்ஸபோன் வரை நம்மவர்கள் வாசிப்பதை இசையாக மட்டுமே கேட்பது நமக்கு வழக்கமே!! இந்த இசைக் கருவிகளின் இசையைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சி, சோகம், பரிதவிப்பி என்று ஒவ்வொரு விதமான உணர்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை!!

ஆனால், ஒரே இசையில் பல விதமான உணர்வுகளை ஏற்படுத்த முடியுமா?


அது தான் "எனிக்மா"வின் தனிச்சிறப்பு!!

பயம், மர்மம், மகிழ்ச்சி, ஏக்கம், அழுகை, ஏதோ வேறு உலகத்தில் பயணக்கும் உணர்வு, சிறகுகள் முளைத்துப் பறப்பது போன்ற சிலிர்ப்பு, இசையில் வினோதத்தில் ஏற்படும் புல்லரிப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம் எனிக்மாவின் இசையைப் பற்றி!! 

எனிக்மாவின் இசைக்கோப்புகளில் மொழிகளை வெகுக் குறைவாகவே பயன்படுத்தியிருப்பார்கள். "எனிக்மா" இசைத் திட்டத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் கிரேது ரோமானியாவில் பிறந்தவர். இவருடன் இவரது துணைவியார், நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியது "எனிக்மா" இசைக்கோப்புகள்!! உலகெங்கும் உள்ள பிரதாமான இசைக்கருவிகள், இசைப் பயன்பாடுகள் அனைத்தையும் இணைந்த வடிவம் தான் "எனிக்மா" இசை.

"எனிக்மா"வின் இசையில் மறக்கமுடியாதது "சோகம் -Sadness" என்ற தலைப்பில் வெளிவந்த இசைக்கோப்பு தான். ஏதோ மந்திரம் ஓதுவது போன்ற பின்னனி இசையில் தடதடத்து ஆரம்பிக்கும் இசை, ஒரு வித சோக இழையோடி, பரவசம், இனிமை, மகிழ்ச்சி, ஏக்கம் என்ற பல தளங்களிலும் நம்மை பயணிக்க வைக்கும்!!


அதே போல அவர்களது இசையில் "Return to Innocence", "voyager", "Rescue Me - Invisible Love" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இவர்களின் பாடல்களுக்கான காணொளிகளும் அவர்களது இசையைப் போல மிகவும் வித்தயாசமானதே!! இந்த "Return to Innocence" என்ற (கீழே) காணொளியைப் பார்க்கும் பொழுது சிறுவயது நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியாது.


கடந்த 20 ஆண்டுகளில் கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் அல்லது கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டவர்கள் எவரும் "எனிக்மா"வின் இசையைக் கேட்காமல் இருந்திருக்கமாட்டார்கள். போட்டிகளின் நடுவே, போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் பொழுது என "தடதடக்கும்" இசை கேட்ட நினைவிருந்தால் அது "எனிக்மா"வாகத் தான் இருக்கும்.

இன்றளவும் கல்லூரிகளின், மாநரங்களில் நடைபெறும் ஆடைவடிவமைப்புப் போட்டிகள், பூனை நடைப்போட்டிகளின் பொழுது இதமாகத் தவிழவிடும் இசை "எனிக்மா" தான்!!

"எனிக்மா"வின் இசையைக் கேட்டு புது வித அனுபவத்திற்குச் செல்ல வாழ்த்துகள்!! எத்தனையோ (மொக்கை இசையைப்) கேட்டுட்டோம், இதைக் கேட்கவா மாட்டோம்!! எனிக்மாவைக் கேட்ட பிறகு "இந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள், அந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள்" என்று உங்களுக்குத் தோன்றினால் கம்பெனி பொறுப்பாகாது :)

எனிக்மாவின் இசையை அனுபவிக்க "ஹம்மா.காம்"ன் சுட்டி
..

Friday, February 12, 2010

தாலாட்டும் சுகிசிவமும்...

நீங்க கடைசியா உங்க வீடுகள்ல தாலாட்டுக் கேட்டது எப்பொழுது?

இந்தக் கேள்வியைக் கேட்டது "இந்த நாள் இனிய நாள்" என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள். { துபாய் நேரம் காலை 5:30 மணிக்கு (இந்திய நேரம் காலை 7 மணி) இந்நிகழ்ச்சி வருவதால் பார்க்கத் தவறுவதில்லை}

நான் கடைசியாகத் தாலாட்டுப் பாடலைக் கேட்டது எங்க ஆத்தா(பாட்டி) என் தங்கைகளுக்குப் பாடிய பொழுது தான். 

"ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ! உல்ல்ல்லாய்யீ...."

என்று பாடும் பொழுது நானும் பின்னாடியே பாடிய நினைவு!! 

சுகிசிவம் அவர்கள் நேற்றைய (11.02.10) நிகழ்ச்சியில் தாலாட்டைப் பற்றிய செய்திகளை அழகாக வழங்கினார்.

தாலாட்டு என்ற பாடல் வகை தமிழ் கலாச்சாரத்தில் ஒரு வகை. குழந்தைகளைத் தூங்க வைக்க பாடும் பாடல் என்பது இதைப் படிக்கும் தலைமுறையினர் வரை அனைவரும் அறிந்த விசயம் தான!! "தால்" என்பது "நா"வைக் குறிக்கும் ஒரு சொல்!! நாவை ஆட்டிப் பாடப்படுவதால் தாலாட்டு எனப்படுகிறது. 

தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. அது மட்டுமல்லாமல், "தன் தாயில் குரலில் கேட்கும் பொழுது குழந்தைகளுக்கு மன அமைதியும் பயமும் நீக்கப்படுகிறது" என்ற செய்தி வியப்பளித்தது. தாலாட்டைப் பாட பெரிய அளவிலான இசையறிவெல்லாம் தேவைகிடையாது. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களை வைத்தே பாடக்கூடியது என்பதற்கு இந்தத் தாலாட்டுப் பாடல்களே சான்று..

சங்குல பால் வார்த்தா சமத்து குறையுமுன்னு
இரும்புல பால் வார்த்தா எழுத்து குறையுமுன்னு
வெள்ளியில பால் வார்த்தா பாசம் குறையுமுன்னு
கையில பால் வார்த்தேன் கண்ணே நீ தூங்கு!!

O

ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! – உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு.....

O

பழங்காலத்தில் ஆழ்வார்கள் கண்ணன், இராமன் போன்ற கடவுளர்களுக்குப் தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளனர். கடவுளர்க்கு மட்டும் தான் பாட வேண்டுமா?

குழந்தைகளும் கடவுள் தானே!!

இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னன் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக ஒரு செய்தியை கூறினார் சுகிசிவம். 

மன்னன் சேதுபதியின் மாளிகைக்கு அருகே குடியிருந்த ஒரு பெண் தன் குழந்தைக்கு தாலாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். அவர் தாலாட்டுப் பாடும் பொழுது மன்னரும் அதைக் கேட்பதை வழக்கமாக்கியிருந்தார். இந்தத் தாய் தன் குழந்தையின் தொட்டிலை ஆட்டும் தொலைவிற்குத் தகுந்த வாரு ராகத்தையும் அமைத்திருக்கிறார். அந்த ராகத்திற்கு ஏற்றவாறு மன்னரும் தன் கையை அசைத்து மகிழ்ந்திருக்கிறார். அப்பொழுது அவரது கையில் இருந்த வைர மோதிரத்தில் பட்ட சூரிய ஒளி இந்தப் பெண்ணின் வீட்டின் கதவில் விழுந்து, தன் தாலாட்டிற்கேற்ப ஆடியிருக்கிறது.

இதைப் பார்த்த அந்தத் தாய்..

"மன்னவரின் மோதிர ஒளி
வீட்டு வாசலிலே வந்து விழ
அந்த மோதிரம் வேணுமுன்னு
அழுகிறாயோ? கண்ணே நீ தூங்கு.."

என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்ட மன்னன் அந்த மோதிரத்தை குழந்தைக்குப் பரிசளித்தாராம்.

O

இப்படி நம் பாரம்பரியத்தில், நம் வாழ்வியல் முறையில் ஒன்று கலந்த தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலைமை என்ன? இதே கேள்வி என் குடும்பத்தில் என்ன நிலை என்பதை என் அப்பாவிடம் கேட்டபொழுது..

"அப்பா, ஆத்தாவுக்கு அப்புறம் யாருக்கங்ப்பா தாலாட்டு பாடத்தெரியும்?"

"அட..."

"என்னங்கப்பா கஷ்டமான கேள்வியக் கேட்டுட்டனா?"

"ஆமாம்பா.. உங்க பெரியத்தைக்கு மட்டும் தெரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

"உங்க பேரப்பசங்களுக்கெல்லாம் எப்படித் தாலாட்டுப் பாடறது?"


"அது பாடறவங்களக் கேட்டாத்தானே பாட முடியும். ஏதாவது தாலாட்டுப் பாடல் புக் கிடைக்குதான்னு கோவை போகும் போது விஜயால பாக்கறேன். அப்புறம் பெரியத்தையப் பாக்கற பொழுது எப்படி பாடறதுன்னு மருமகளுக்கு சொல்லச் சொல்றேன்" என்றார்.

O

ஐந்து சகோதரிகளுடன் பிறந்த என் தந்தையின் பதிலிலேயே தாலாட்டுப் பாடல்களை நாம் எப்படித் தவற விட்டுள்ளோம் என்பது புரிகிறது.தொலைக்காட்சிகளில் வரும் குத்துப்பாடல்களுக்குத் தங்கள் குழந்தைகள் ஆடுகிறது என்பதைப் பெருமையாகக் கருதுவது சரியா? தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு மன அமைதியுடன் தூங்கிய குழந்தைகள் இன்று "ஹிட்" நம்பர்களைக் கேட்டு மன அமைதியை இழந்து விடுகின்றனர் என்பதே சுடும் உண்மை!!

O

Friday, January 15, 2010

நிலா நீ வானம் காற்று..


இசைக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? அதுவும் அழகான வரிகளுடன், இதமான இசை அமைந்தால் சொல்லவா வேண்டும்.  இசை மற்றும் பாடல் வரிகளுடன் நீங்கள் மிகவும் நேசிப்பவரை நினைத்துப் பார்க்கும் பொழுது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே..


ஓரிரு நாட்களாக நான் அதிகமாகக் கேட்கும் பாடல், ஏன் அண்மையில் ஒரு பாடலைப் பல முறை கேட்டதென்றால் அது இதுவாகத் தான் இருக்கும்!! பொக்கிஷம் படத்தில் வரும் "நிலா நீ வானம் காற்று.." என்ற பாடல்..

சபேஷமுரளியின் இதமான இசை யுகபாரதியின் வரிகளைச் சிதைக்காமல் இருப்பது இந்தப் பாடலிற்கு அழகூட்டியுள்ளது. விஜய் யேசுதாஸும் சின்மயியும் வரிகளுக்கு உயிர் கொடுத்த விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அதில் சின்மயியின் குரலில் கீழே வரும் வரிகள் இருக்கிறதே.. அடடா..

தன் கணவனையோ, காதலனையோ நினைத்து இது விட அழகாகப் பாட முடியுமா?

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட..


முதலில் மன்னா, கணவா என்று வரும் வரிகள், அன்புள்ள ஒளியே, அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே என்று செல்வது ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. பிறகு செல்லமாக படவா, திருடா, கிறுக்கா என்று வரும் வார்த்தைகளுக்காகவே யுகபாரதிக்கு ஒரு ராயல் சல்யூட்!!





ஹம்மா.காம் (Hummaa.com) இணையதளத்திற்கு என் நன்றிகள்!! என்னைப் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் களேபரங்களில் இருந்து காப்பாற்றியதற்காக!!

..
Related Posts with Thumbnails