Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Friday, July 30, 2010

செல்லமே - 2


ட்சத்திரங்கள் சிரிக்கும் 
நடுநிசி நேரம்
அமைதியை நாடும் மனம்
ஆழ்ந்த உறக்கத்தில்
முகத்தை வருடின
பிஞ்சு விரல்கள்.
இது கனவா? 
இல்லை நினைவா?
விழித்துப் பார்த்தான்.
அழகாய் சிரித்தன
இரு நட்சத்திரங்கள்!!

*

குறும்பாய் சிரிக்கும் டொனால்டு டக்கும்
குறுகுறுவெனப் பார்க்கும் மிக்கி மவுசும்
தரையில் ஊரும் ரயில் வண்டியும்
காற்றில் அசையும் திரைச் சீலையும்
உயிரற்ற பூனையும் குரங்கும்
உயிருள்ள தாகிறதே
கண்ணே,
நீ அவற்றுடன் பேசும் பொழுது!!

*


நீரிலிருந்து மேலெழும் மீன்கள்
காற்றில் குதிக்கும் மான்கள்
இலையில் வடியும் பனித்துளி
நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளியென
இயற்கை அதிசயங்களை
நிழற்பட மெடுக்க முடியும்.
படமாக்க முடியாதது
கண்ணே, உன்
சிணுங்கலாய் மாறும் சிரிப்பும்
சிரிப்பாய் மாறும் சிணுங்கலும் தான்!!

*



Friday, April 9, 2010

கண்ணு!! வீட்டுல ஏதாவது விசேஷம் உண்டா?

"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!!" என்னும் சொலவடை நம் ஊரில் மிகவும் பிரபலம். அதிலும் திருமணம் செய்வதில் சந்திக்கும் சிக்கல்கள், அனுபவங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துவதில் கூட கிடைக்காது. புதிதாக ஒரு குடும்பத்துடன் உறவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவது, நேரமின்மையால் சிலரை நேரில் அழைக்க முடியாமல் போவது, யாருக்கு முதன் மரியாதை செய்வது என்று எண்ணற்ற சிக்கல்கள்!! மேலும் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பழக்க வழக்கங்களால் வரும் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளும்! இங்கே பணத்தால் வரும் மன உளைச்சல் வேறு!!

இப்படி பல குழப்பங்கள், மன உளைச்சல்களைச் சந்தித்து திருமணம் முடிந்து "அப்பாடா.. !!" என்ற தம்பதியினர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த சில மாதங்களில் அடுத்த கேள்வி ஆரம்பித்துவிடும்

கண்ணு!! ஏதாவது விசேஷம் உண்டா?

"நம்ம இராமசாமி மவனுக்குப் போன வைகாசில தான் கல்யாணம் ஆச்சு! இந்த வருஷம் மாசில குழந்தை பிறந்திருச்சு"

"அந்தந்த நேரத்துல நடக்க வேண்டியது நடந்துறனுங் கண்ணு"

இன்னும் எத்தனையோ விதமான கேள்விகள், கோரிக்கைகள் திருமணமான சில மாதங்களிலேயே! முந்தைய தலைமுறையினர் தங்களது முதலாம் மண நாளில் குழந்தையுடன் இருந்தது தான் இந்தக் கேள்விகள், பேச்சுகளுக்குக் காரணம்!!

ஆனால், நம் தலைமுறையினரோ சில மாதங்கள், வருடங்கள் கழித்து குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று இருந்துவிடுகி(றோம்)றார்கள்!! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், இப்பொதுதே எதற்கு? நமக்கு என்ன வயதாகிவிட்டது? மேற்கத்திய நாடுகளில் நாற்பது வயதிகளிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே, நம் இருவரின் வேலையிலும் முன்னேற்றம் அடைந்த பிறகு பார்த்துக் கொள்ளலம் போன்ற எண்ணங்கள் தான் குழந்தைப்பேறை தள்ளிப்போடுவதற்கான காரணங்கள்!!

இவர்களுள் பெரும்பாலானோர் DINK  டபுல் இங்கம் நோ கிட்ஸ் என்ற நிலையில் அடங்குவர்!!


தம்பதியினர் இருவருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நேரமின்மை, பொறுப்பை ஏற்க பயம் போன்றவை DINK வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்போரின் குணாதிசயங்கள். முந்தைய தலைமுறையினர்க்கு அளவான சம்பளம், போதிய ஓய்வு எல்லாம் இருந்ததால் குழந்தைகளைப் பராமரிக்க முடிந்தது. ஆனால இன்றோ, அலுவலகத்தில் 10 முதல் 16 மணி நேரம் வரை செலவழிக்க நேர்வதால் தகுந்த நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது!!

DINK நிலைக்கு, மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கிய நம் வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. 30களில் திருமணம் செய்துகொள்வதும், நாற்பதுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் சாதாரணமான விசயம். குழந்தைகள் பதின்ம வயதைக் கடந்துவிட்டால், கண்டுக்க வேண்டியத் தேவையில்லாத சமூக நிலை மேற்கத்திய நாடுகளில்!! ஆனால் நமக்கோ, குழந்தைகளின் திருமணம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

o

திருமணமாகி சில வருங்களுக்கு DINK வாழ்வியல் முறையில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது தான் காத்திருக்கிறது அதிர்ச்சி!!

தம்பதியினருள் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே குழந்தை பெற்றுக் கொள்வதில் குறைபாடுகள் இருப்பது இன்று பரவலாகப் பார்க்க முடிகிறது. அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பது, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் பிரச்சனைகள் வருவது அதிகரிப்பதற்கு மகப்பேறு மருத்துவமனைகளில் காணப்படும் கூட்டமே சாட்சி!!

அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சியில் தோன்றி பயமுறுத்தும் போலி சித்த வைத்தியர்களும், பெற்றோர்கள், உறவினர்கள் கொடுத்த அறிவுரைகளும் நினைவிற்கு வருவது வேடிக்கையானது.

o

DINK வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்கும் முன்பு "தங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதா? குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியுடன் இருக்கிறோமா?" என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று!!



நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் ஒவ்வொரு விசயத்திற்கு ஒவ்வொரு அர்த்தம் இருந்திருக்கிறது. திருமண வாழ்வில் தம்பதியினர்க்குள் சில மனக்கசப்புகள், உறவில் விரிசல்கள் ஏற்பட்டாலும் அதை ஒட்டவைக்கும் பசையாக இருப்பது குழந்தைகளே என்பதை நம் முன்னோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இன்றைய வாழ்வியல் முறையில், முன்னோர் போல வாழ முடியாவிட்டாலும, அவர்களிடம் இருந்து சில படிப்பினைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லையே!! எல்லாவற்றிற்கும் மேலாக..

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"

என்பதை நம் முன்னோர்கள் அனுபவித்ததால் தான்.. நம்மிடம் கேட்கிறார்கள் "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று!!

ooo

Saturday, March 13, 2010

சோழனுக்குப் பெயர் சூட்டும் விழா..,

உன் விரல்களைப்போல சுருங்கிய
உன் உலகத்தை,
உள்ளங்கையில் குலுக்கி எடுத்து,
விசாலமாக்கி,
விரல்களுக்கு நடுவில்
விந்தைகளைச் சொருகி,
வாய்ப்புகளை வளர்ப்பால் மாற்றி,
வெற்றி பெற வைக்கும்
வித்தையைச் சொல்லித் தர
தாத்தா உண்டு.

விதவிதமாய் சமைத்துபோட
வகைவகையாய் வாங்கி போட
பூவான உன்னை ரோஜாவாக்கிட
பவுனாய் உன்னை பாதுகாத்திட
பாட்டி உண்டு.

மீசைக்கு நடுவில்
ஆசைத்தொட்டில் கட்டி
இசைத்தாலாட்டு பாட
மீசை தாத்தா உண்டு.

பார்வைகளில் நேசத்தையும்
வார்த்தைகளில் வாழ்க்கையும்
பாலுடன் பாசத்தையும் ஊட்ட
பாலா பாட்டி உண்டு.

பரணியை ஆள வந்த உன்னை
இளங்கோவின் மகன் -
இழுத்து விழ வைக்கும்போது,
மண் உரசிய உன் தோலை -
மனம் உரசி,
விழுந்ததால் வந்த புண்ணை -
விழுப்புண்ணாக்காமல் - ஆற்றி,
விந்தையாய் மறையச்செய்ய
ரிந்தியா உண்டு.

உச்சந்தலையில்
உச்சிவெயில் விழும்வரை காத்திருந்து
நிழலாகும் முகங்களை
காலத்தால் அழியாத
கல்வெட்டாக்க
சத்யமும் சிவனும் உண்டு



வட்டங்களில் உன்
வரம்புகளை வரையறுத்து,
பட்டங்கள் பெறுவதற்குத்
திட்டங்கள் தீட்டி,
எட்ட முடியாத உயரங்களை
எட்டி உதைக்கும் அளவிற்கு - முதுகில்
தட்டி தட்டி வளர்க்க,
புறம் நானூறை
புரிய வைக்க தந்தை உண்டு.

பார்த்து பார்த்து கட்டிவைத்த
பஞ்சுக் கோவிலில்
பிரார்த்தனைகள் பல புரிந்து
அகம் நானூறை
அறிய வைக்க அன்னை உண்டு.

எதிரிகளாய்
எங்கிருந்தோ வருபவர்களையும்
இயல்பான புன்னகையை
இலச்சினையாய் வைத்திருக்கும்
இலகுவான உன்னைப் பார்த்து
இயலாமையில்
போர்க்கொடியை தாழ்த்தி
புறமுதுகிட்டு ஓட
பூவுலகில் சாந்தி எப்போதும் உண்டு.

மெளனமாய் நீ இருக்கும்போது
குருவாக உன்
அருகில் வந்து
அடைத்துவைத்த உணர்வுகளை
உடைத்து வெளிஎடுத்து
நெற்றிக்கண்ணில் எரித்து புகைக்க
'சிலிண்டர்' சிவம் உண்டு.

பிறக்கும்போதே - இந்த சொந்தங்கள்
புடை சூழ பிறந்த
பேரரசனே!! - உனக்கு இன்று
பெயர் சூட்டும் விழா.


வாரங்களில் சோம வாரமாகவும்
பொருள்களில் பவுன் - ஆகவும்
இதயத்தில் இளங்கோ - வையும்
வீரத்தில் ஈஸ்வர் - யும்
ஹாஸ்யத்தில் ஹாசினி - யையும்
பாசத்தில் பரணி-யையும்

சிந்தனையில் சிவா-வையும்
சத்தியத்தில் காந்தி-யையும்
பண்பில் பாரதி-யையும்
எண்ணங்களில வேலன் - ஐயும்
எழுத்தில் கபிலர் - ஐயும்
ஏட்டில் சரஸ்வதி-யையும்
உனக்குள் வைத்து

அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்து
கோபங்களை எதிர்கொண்டு
உணர்வுகளோடு போர்புரிந்து
உள்ளங்களை வெற்றிகொள்ள
உலகத்தில் பிறந்தவனே!!!

பிறக்கும்போதே கிரீடமாய்
எங்களை சுமந்து பிறந்த
உனக்கு என்ன பெயர் சூட்ட?
.
.,
..,

நீ
பாசங்களை
வெற்றி கொள்ள பிறந்த
சிற்றரசன்.

கோ - அரசன் என்றால்
- சிற்றரசன்.

வெற்றி - தமிழ் என்றால்
'வின்' ஆங்கிலம்.

ஆக
உன் பெயர்
க-வின்
கவின்.

ஒவ்வொருவருவாக
இனி - உன்
காதுகளில் உரைப்போம்.
கவின்.,
கவின்..,
கவின்....,

எங்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை முன்னிட்டு என் சகலன், திரு.கபிலன் எழுதிய வாழ்த்துப்பாடல்!!


...

Monday, March 8, 2010

வார்த்தைகள் வரவில்லை.. மகிழ்ச்சியை விவரிக்க..



"என்னங்க.. நீங்க பையனப் பாத்தீங்களாங்க?"

"ஆமாம்பா..உள்ள கிளீன் பண்ண எடுத்துட்டுப் போயிருக்காங்க"

"நாம.. அம்மாப்பா... ஆயிட்டமாங்க..ஐயோ.. என்னால நம்பவே முடியலங்க"

"பையன் சத்தம் கேட்குது பாருடா.."
....
...
...

"ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.."

ooo

"அப்பா.. உங்களுக்குப் பேரன் பிறந்துட்டான்..."

"ஹாஹ்ஹா.. அம்மா.. உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கான்... "

"அப்பாடி.. பொண்ணு நல்லா இருக்காளாப்பா.."

"நல்லா இருக்காங் அத்தை... நல்லா இருக்கா!!"

ooo

சில மணி நேரங்கள் கழித்து..

"ஏய், பையன் பிறந்திருக்கான்டீ..!!"
....
"ஆமா.. நல்லா இருக்கான்.. மூன்றரை கிலோ..!!"
.....
"இல்ல.. சுகப்பிரசவம் தான்.. ஆமா நல்ல டாக்டர்டீ.. நல்லபடியா பிரசவம் பார்த்துட்டாங்க.. அவங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்!!"
....
"ஆமா.. சான்ஸே இல்ல.. இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறதுக்கு!!"
...
"பையன், சினுங்கறான்பா.. அப்புறம் பேசுறேன்"

ooo

"மாப்ள.. அப்பா ஆயிட்டேன்டா.."
...
"பையன்"
.....

"ஆமா.. இங்க உடுமலைல தான்"
.....
"ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.."
......
"யாரு மாதிரின்னு எல்லாம் தெரியலடா.. நல்லா இருக்கான்"
....
"ஆமான்டா... ரொம்ப நன்றி!!"

ooo

"டாக்டர்.. ரொம்ப நன்றிங்க... எங்க மருமகளுக்கு நல்ல படியா பிரசவம் பார்த்துட்டீங்க"

"நான் உங்களுக்குத் தாங்க நன்றி சொல்லனும். பனிக்குடம் உடைஞ்சு 36 மணி நேரம் வரைக்கும் பொறுமையா இருக்க யாரும் தயாரா இருக்கமாட்டங்க. நீங்க என்னைய நம்புனதுக்கு ரொம்ப நன்றி"

"ஆமாங்.. டாக்டர்.. எங்க ரிலேட்டிவ்ஸ் சைட்லயும் ரொம்ப ப்ரஸர் இருந்ததுங்க.. நீங்க ஸ்கேன் பண்ணி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணினதுல நாங்க கொஞ்சம் தைரியமா இருந்தோம்.."

"யேஸ்..ஹூ(WHO) கைடுலைன்ஸ் படி, 48 அவர்ஸ் வரைக்கும் வெயிட் பண்ணலாம.. பேபி நல்லா இருக்கறப்பா.."

"ஓ.."

"உங்க பையன.. நல்ல தைரியமான ஆளா வளர்த்திருக்கீங்க!! பிரசவ வார்டுல இவரு இருந்தது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தது. நல்ல திடமா நின்னாரு....சில சமயம் கூட நிக்கறேன்னு வர்றவங்க மயக்கம் போட்டு விழுந்திடறாங்க. அதனால தம்பி.. You should be Proud of Yourself.. All the best"

"தாங்க்ஸ் டாக்டர்.."

ooo

எங்கள் குழந்தை பிறந்து (25.02.10) 12 நாட்களாகிவிட்டன. ஆனால், என் மனைவி சிந்திய ஆனந்த கண்ணிரும், டாக்டர். நிர்மலா பாலகுமார் அவர்கள் முகத்தில் தெரிந்த கருணையும், முதன்முதலில் பார்த்த எங்கள் குழந்தையின் முகமும், எங்கள் குடுபத்தினர் அடைந்த மகிழ்ச்சியும் கண்களிலேயே நிற்கின்றன. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை!!

"இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறது அபூர்வம் தான்!!" என்பது தான் எங்கள் குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்களும், நண்பர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்!!

ooo

Related Posts with Thumbnails