Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, January 31, 2011

இணையம் தரும் நம்பிக்கை!!

"பெட்டிதட்டிகள்"!! இவர்களால் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? அயல்நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்தியவைப் பற்றி "உச்"சுக்கொட்ட என்ன உரிமை இருக்கிறது? குளுகுளு அறைகளில் வேலை நேரத்தில் சமுக வலையமைப்புத் தளங்களில் "பன்னாட்டுப் பேசி" என்ன பயன்? என்றெல்லாம் பேச்சு வந்தாலும் இணையம் பெரிய நம்பிக்கையை உண்டாக்குகிறது!!

"தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வலைப்பதிவுகளிலும், இணையதளங்களிலும் பதிவுகள்,பின்னூட்டங்கள், சிட்டாடல்கள், கோரிக்கை மனுவில் கையெழுத்திடல்கள் என்றெல்லாம் "பெட்டிதட்டிகள்" இயங்க ஆரம்பித்த பொழுது, "நம்மால் என்ன முடியும்?" என்ற எண்ணம் தோன்றியது உண்மையே!! "தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற கோரிக்கை மனுக்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்ற ஐயம் ஏற்பட்டாலும், இணையத்தில் இத்தனை ஆயிரம் பேர் தமிழக மீனவர்களின் சோகத்தில் பங்கேற்க ஆயத்தமாகியுள்ளார்கள் என்ற எண்ணம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 


என்ற தளத்தில் இதுவரை 4523 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். 7 கோடி மக்களில் 5 சதவிதத்தினர் இணைய வசதி உள்ளவர்கள் என்றாலும் 4523 என்ற எண்ணிக்கை ஒரு சதவிகிதம் தான். அதையே 7 கோடி மக்களுடன் ஒப்பிட்டால் மிக மிக சொற்ப சதவிகிதம் தான். ஆனால், இந்த சொற்ப சதவிதத்தினரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொருவரும் 10 பேரைக் கையெழுத்திட வைத்தால் கூட நல்ல விசயமாக இருக்கும். சமூக வலையமைப்புத் தளங்களில் சேர்கையில், உங்கள் நண்பர்களின் நண்பர்கள் மூலம் நீங்கள் 25000 பேருடன் தொடர்பில் உள்ளீர்கள் என்று ஒரு எண்ணிக்கையைக் காட்டும். அது தான் இணையத்தின் வீச்சு.

கையெழுத்திடுவோம்! நம் ஆதரவை மீனவ அன்பர்களுக்கு அளிப்போம்!! நீங்கள் செய்ய வேண்டியது, மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பெயரைக்குறிப்பிட்டு கையெழுத்திடுவது தான்!!

*

இதற்கு முன்பு பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு விசயத்தை / மனிதரை ஆதரித்தது என்றால் அது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தான். சரத்பாபு என்ற இளைஞர் தென்சென்னை தொகுதியில் நின்ற பொழுது பெரும்பாலானோர் அவரிற்கு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் வெற்றியடையாவிட்டாலும் ஏறக்குறைய 16000 வாக்குகளைப் பெற்றது இணையங்களில் இயங்கிவரும் பெட்டிதட்டிகளின் பிரச்சாரத்தாலும் தான்!!

அதை விட அதிக முனைப்புடன் ஒரு விசயத்தின் மீது ஆதரவை நல்க ஆரம்பித்திருப்பது "தமிழக மீனவர்கள்" விசயத்தில்!! டிவிட்டர்களில் #tnfisherman என்று இடம்பெறும் வகையில் சிட்டாடல்களைப் பதிய ஆரம்பித்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 - 10 டிவிட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் என்ன பயன்?

Trending Topics என்று எந்த விசயம் / தலைப்பு அதிகம் விவாதத்தில் உள்ளன என்று கணக்கெடுக்கப்படும் பொழுது #tnfisherman என்ற வார்த்தையும் வர ஆரம்பித்தால் அதிகமானோரின் கவனத்தை ஈர்க்க முடியும். உங்களுக்கும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டிவிட்டிக் கொண்டே இருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தைப் பார்வையிட்டால் டிவிட்டுகளைப் பார்க்கலாம்.


உங்களிடம் எதிர்பார்ப்பது கருத்துப்புரட்சி எல்லாம் இல்லை. #tnfisherman என்ற வார்த்தையுடன் கூடிய டிவிட்டுகளையே!! அதில் அரசியல், நையாண்டி, சாடல் இருக்க வேண்டும் என்பதல்லாம் இல்லை. எளிதாக I Support #tnfisherman என்றோ Please save #tnfisherman டிவிட்டினால் கூட போதும். தற்பொழுது வேண்டியது மீனவர்களுக்கு நம் ஆதரவு. கவன ஈர்ப்பு!!



இந்திய நேரம் 12 மணியளவில் இந்தியாவின் முதல் 5 சிட்டாடல்களில் #tnfishermanம் என்பதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் டிவிட்டுவோம். ஆதரவை நல்குவோம்.

*

என் பங்கிற்கு நான் டிவிட்டியவை..

ஹோஸ்னி முபாரக்கை விட அதிக நாட்கள் அரசியலில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர் - எகிப்து நாளிதழ் அதிர்ச்சி செய்தி!! #tnfisherman

எகிப்துல நடக்கறது வேதனையான விசயம்னாலும்.. இந்த மாதிரி பதவிஆசை வெறியர்களைத் துரத்துனா என்னனு தோனுது.. #tnfisherman

உங்களுக்குத் தொகுதிப் பங்கீட்டு விசயமே தலைய சுத்துது. இதுல எங்கிருந்து எங்கள கவனிக்கப் போறீங்க. #tnfisherman

சங்கீத மகாயுத்தம் நம்மைப் பசியாற்றும் பொழுது மீனவர் பசியை எங்கே நினைவு கொள்வது? #tnfisherman

எங்க பர்காதத்துக்கு யாராவது போனப்போடுங்கப்பா.. அவங்க வந்தா மூனு நாளுக்காவது தமிழக மீனவர்கள் விசயம் நாடு முழுவதும் தெரியும்ல #tnfisherman

ஏப்பா... நம்ம பா.ஜா.கவ ரதயாத்திரையா ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னா என்ன? அப்படியாவது இங்க ஒரு ஊரு இருக்கறது ஊடகங்களுக்கு தெரியும்ல#tnfisherman

ஏப்பா.. நம்ம சர்வதேச கடல் எல்லைல ஒரு நூறு கடலோரக் காவல் கப்பல விட எத்தன காசாகும்? # tnfisherman

*

"பெட்டிதட்டிகளால்" என்ன செய்து விட முடியும் என்பதற்கு பதிலாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் #tnfisherman ஆதரவாளர்கள். அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்கள் என்பதை பதிவர் நர்சிம்மின் இந்தப் பதிவில் பார்க்கவும். இந்தப் பதிவில் கூறியுள்ள விசயங்கள் சாத்தியப்பட்டால் கூட நல்ல பயனிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

*

Sunday, September 5, 2010

கேபிள் - சில எண்ணங்கள்!!

"Problem of plenty" என்ற ஆங்கிலச் சொலவடை நம் தொலைக்காட்சிச் சேனல்களுக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற முறை ஊரிற்குச் சென்ற பொழுது வீட்டில் காணக்கிடைத்த தமிழ்ச்சேனல்களின் எண்ணிக்கை 25 முதல் 30ஐத் தொடலாம். முப்பது சேனல்கள் கிடைப்பதாலேயே ஒரு வித பரபரப்பு மனதில் படற ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சேனலில் வரும் நிகழ்ச்சி அல்லது பாடல் சரியில்லை என்றால் அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்ததில் என்ன.. என்ன என்ன.. என்ற தேடிக்கொண்டே சென்று ஏதாவது ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.

இப்பொழுது ரிமோட் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டிகள் வருவதேயில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பார்க்க முடிந்த ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளும், கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளும் இன்று, ஒன்று, வீட்டு அட்டாலியில் இருக்கலாம் அல்லது மண்ணை மாசாக்கியிருக்கலாம். அப்படி ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டில் வைத்திருந்த பொழுது இப்பொழுது மாற்றிய அளவிற்கு மாற்ற முடியாது. தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே சென்று "படக் படக்"கென மாற்ற வேண்டியதிருக்கும். சாலிடெர் போன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் இருந்தது போல "பட்டன்' இல்லாததால், வட்ட வடிவில் திருப்ப வேண்டியதிருக்கும். நான் திருப்பியதில் எத்தனையோ முறை திருப்புலியை மாற்றியும் இருக்கிறோம். ரிமோட் இல்லாத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தது போல இப்பொழுது இல்லை. 

கல்லூரிக் காலத்தில், விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு ரிமோட் இருந்தாலும் நண்பர்களின் தொடர் பயன்பாட்டிற்குப் பிறகு பொத்தான்கள் அனைத்தும் தேய்ந்து போய் விடும். பிறகு பூட்டு போடப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் கதவை நீக்க கம்பியை வளைத்து சேனல்களை மாற்றிய காலமெல்லாம் உண்டு. அது போன்ற நேரத்தில் சுற்று முறையில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக அமர்த்தப்படுவதும் உண்டு. ரிமோட் இல்லாத நாட்களில் வீட்டில் நான் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக இருந்ததுண்டு. எத்தனை முறை தான் எழுந்து சென்று சேனல்களை மாற்றுவது என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால், அப்பொழுதும் அதிகபட்சமாக ஆறேழு தமிழ்த் தொலைக்காட்சிகள், சில விளையாட்டுச் சேனல்கள் இருந்ததுண்டு. இப்பொழுது அளவிற்கு இருந்ததில்லை. 

சேனல்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது தான் உண்மை. சேனல்களை வசதிகள் அல்லது வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்றைய வாய்ப்புகள், வசதிகள் எல்லாமே நம் பொறுமையைச் சோதிப்பவையாகவே இருக்கின்றன. +95 போட்டு தொலைதூர அழைப்புகள் பேசியதில் இருந்த சுவாரஸ்யம் இன்று ஏனோ அலேபேசிகளில் பேசும் பொழுது இருப்பதாகத் தெரிவதில்லை. அலைபேசிகள் நமக்கு வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாலாட்டும் நாயைப் போல வைக்க வேண்டிய பணிச்சூழல்!! விடுமுறை நாட்களின் பொழுதும் "அவசரம் என்றால் என் எண்ணில் குறுந்தகவல்கள் அனுப்புங்கள்" என்று போட வேண்டிய கட்டாயம். அலைபேசிகளைத் தான் நம்மால் எதுவும் செய்ய முடிவில்லை, இந்த தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையையாவது ஏதாவது செய்ய முடியுமா? 

தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்பு அமீரகத்தின் எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play என்ற சேவைக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் பெற ஆரம்பித்துள்ளேன். அதனால் நான் பெற்ற பயனைக் கூறும் முன்பு E-Life - Triple Play பற்றி சில பத்திகள்.

o

முந்தைய பத்தியில் "எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play" என்று குறிப்பிட்டிருந்தேன். அதென்ன Triple Play?


வீட்டில் தொலைப்பேசி, இணைய அகண்ட அலைவரிசை( ப்ராட்பேண்ட் ) வசதி மற்றும் கேபிள் வசதியை இணைக்கும் சேவை தான் Triple Play சேவை. வீட்டில் ஒரு ரிசீவரை வைத்துவிட்டால் போதுமானது. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும் நம் வசதிக்கேற்ப!! இது போன்று இணையம், தொலைபேசி, கேபிள் மூன்றையும் ஒரே நிறுவனமே வழங்கும் சேவை இந்தியாவில் வருவதற்கு நீண்ட நாட்களாகாது என்றே தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இன்று இருப்பது போல இணையத்திற்கு ஏர்டெல், கேபிளிற்கு சுமங்கலி, தொலைப்பேசிக்கு பி.எஸ்.என்.எல் என்ற நிலையெல்லாம் மாறி ஏதாவது ஒரு நிறுவனமே மூன்று சேவையையுமே வழங்கும் நிலை வந்துவிடும். 

இப்படி ஒரு சேவை வந்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

கேபிள், இணைய வசதி, தொலைப்பேசி என்று ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதச் சந்தா கட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தும் ஒரு குடையின் கீழ்!! மூன்றையும் ஒரு நிறுவனமே வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு எந்த சேவை அதிகபட்சமாகத் தேவைப்படுகிறதோ அதைத் தெரிவு செய்து பயன்பெறலாம். உதாரணம்.. ஒருவருக்கு இணையவசதியே முக்கியமாக இருக்கலாம். சிலருக்கு கேபிள் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். 

எப்பொழுது இது போன்ற சேவைகள் வரும்?
o

மேலே குறிப்பிட்ட E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள், 8MBPS என்ற அளவிற்கு அதிவேக இணைய வசதி மற்றும் தொலைப்பேசிச் சேவை. தொலைக்காட்சிச் சேனல்களைத் தேர்வு செய்ததில் தமிழில் சன் டிவி, ஆங்கிலத்தில் சர்வதேச செய்திச்சேனல்கள், ஃபாக்ஸ், எம்.பி.சி போன்ற திரைப்படங்கள் சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், என்.ஜி.சி என்று  சில சேனல்கள் மட்டும் என் கணக்கிற்கு வரும்படி தேர்ந்தெடுத்துள்ளேன். சேனல்கள் குறைந்தவுடன் ரிமோட்டில் விளையாடுவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி எண்ணிக்கையைக் குறைத்துப் பாருங்களேன். குறைந்தது சில சேனல்களைப் "பேரண்டல் லாக்" மூலம் முடக்கி வைத்துப்பாருங்களேன்!!

தொலைக்காட்சியை பார்க்கும் நேரமும் குறைய ஆரம்பித்துள்ளதால் நான் என்ன இழந்துள்ளேன்? 

ஒன்றுமில்லை!! வீட்டில் யானியும், ராஜாங்கமும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. "அப்பாடா" என்ற பெருமூச்சை ரிமோட்டிடம் இருந்து கேட்கமுடிகிறது.

Friday, August 20, 2010

ஹலோ.. சாரிங்க.. ராங் நம்பர்!!

நீங்கள் புதிதாக ஒரு அலைபேசியை வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு அலைபேசி எண்ணும் தேவைப்படுகிறது. அந்தக் அலைபேசிக் கடைக்கு அருகிலேயே இருக்கும் பிரபல தொலைத்தொடர் நிறுவனத்தாரின் சேவை மையத்திற்குச் செல்கிறீர்கள். சில படிவங்களையும், அடையாளச் சான்றையும் கொடுத்த பிறகு சிம்கார்டை வாங்கி, அலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள். 

உங்கள் அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பிக்கின்றன. "நான் யாரிடம் இந்த எண்ணைக் கொடுக்கவில்லையே. என்னை யார் அழைப்பது?". வந்த அழைப்பை எடுக்கிறீர்கள். ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது உங்களுக்கு...


"டேய்.. ராசூ.. மணி பேசறேண்டா.." என்று ஆரம்பிக்கிறார்.
"ஹலோ உங்களுக்கு யாருங்க வேணும்"
"விஜயராஜ் இல்லீங்களா?"
"இல்லீங்க இப்ப தான் நான் இந்த நம்பர..." என்பதற்குள் துண்டித்துவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வெளிநாட்டு அழைப்பில் இருந்து வருகிறது.

"ஹலோ... விஜயராஜ் இருக்காருங்களா?"
"யாருங்க?"
"விஜயராஜ் நம்பர் தானுங்க?"
"யாருங்க? விஜய ராஜா? உங்களுக்கு யாருங்க வேணும்?"
"இல்லீங்க.. இந்த நம்பரத் தான் கொடுத்திருந்தாரு.. "
"நீங்க யாரு?"
"சாரிங்க... நான் தவறுதலா உங்களுக்குக் கூப்பிட்டுவிட்டேன்"
"நீங்க கோயமுத்தூருங்களா? நான் சிவகாசில இருக்கேன்.. நீங்க எங்கிருந்து பேசறீங்க?"
"நான் வெளிநாட்டுல இருந்து கூப்பிடறேன்.. சரி வச்சிடுங்க!1"

"இல்லீங்க நீங்க எந்த ஊருல இருந்து கூப்பிடறீங்க?"

"ஐயா.. நான் தெரியாம இந்த நம்பருக்குக் கூப்பிட்டிட்டேன்.. மன்னிச்சுடுங்க"

"இல்லீங்க தம்பி.. நீங்க.."

"டொங்க்"

புதிதாக ஒரு தொடர்பு எண்ணை வாங்கி "மேலே கூறியுள்ளதைப் போல" அழைப்புகள் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

*

மேலே குறிப்பிட்டுள்ள பேச்சுவார்த்தை கற்பனையல்ல!! அதில் வெளிநாட்டிலிருந்து பேசியது அடியேன் தான். இந்த விசயம் அன்றாடம் நடக்க ஆரம்பித்திருக்கும் ஒன்றே. 

ஒரே எண்ணிற்குத் தொடர்ச்சியாக "ஒரே நபரின்" பெயரை கேட்டு அழைப்புகள் வருவதில் இருந்தே புரிவது, "விஜயராஜ்" என்ற வாடிக்கையாளர் பயன்படுத்தியிருந்த எண் வேறொருவருக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது. சில மாதங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்து விட்டாலோ, இணைப்பைத் துண்டித்து விட்டாலோ, அந்த எண்  வேறொருவருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப் பயன்படுத்திய எண்ணை மற்ற வாடிக்கையாளருக்குக் கொடுக்கலாமா? 

"அலைபேசிகள் பெருமளவு பெருகிவரும் இன்றைய சூழலில், ஒரு எண் முடங்கிப் போவதற்கு பதிலாக வேறொருவருக்குத் தருவது சரியே" என்ற வாதம் வரலாம். ஆனால், இந்த எண் பயன்படுத்தப்பட்ட எண் என்பது புதிதாக வாங்குபவருக்குத் தெரியாமல் போனால் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல "தவறான அழைப்புகள்" வந்தால் என்ன செய்வது?

விஜயராஜ் ஒரு சாமான்யராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. அதுவே பிரச்சனைக்குரிய நபர் பயன்படுத்திய எண் நம் கைக்கு வந்தால் என்ன ஆவது? தொலைபேசி எண்களை தவறான வழிகளுக்குப் பயன்படுத்துவது பெருகிவரும் காலத்தில், இது போன்ற அழைப்புகள் புதிதாக எண்ணை வாங்குபவருக்குத் தேவையில்லாத தலைவலி தான்!!

இதற்கு ஏதாவது சட்டங்கள் உள்ளனவா? அன்பர்களுக்கு விடை தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்!!

*

அடுத்து விஜயராஜின் இடத்திற்கு வருவோம்..

ஏதோ ஒரு காரணத்திற்காகப் பழைய எண்ணைத் துண்டித்தவர் தன் நண்பர்களுக்கெல்லாம் புதிய எண்ணைத் தெரிவித்திருக்கலாம். அப்படி புதிய எண்ணைத் தெரிவிக்காமல் போனதால் தான் இத்தனை குழப்பம்.

நாம் இதைச் செய்கிறோமா?

இன்று சந்தையில் கிடைக்கும் அலைபேசிகள் பலவற்றுள் இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக் கொள்ளும் வசதி வரும் அளவிற்கு ஒரே நபர் இரண்டு தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது எளிதாகப் பார்க்க முடிகிறது. அலுவலகங்களில் தரப்படும் எண், சொந்த பயன்பாட்டிற்கு என ஒரு எண் என்று இரண்டு எண்கள் வைத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது பழைய எண்ணை அப்படியே கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஒரு தொலைத்தொடர்பு சேவையை விட அடுத்த சேவை நன்றாக இருந்தால் எண்ணை முடக்கிவிட்டு அடுத்த எண்ணிற்கு மாறுவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி நாம் எண்களை மாற்றும் பொழுது, நாம் நம் நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்.. "ஹலோ... யாருங்க... உங்களுக்கு எந்த நம்பருங்க வேணும்?" என்பதைத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

*

Tuesday, August 10, 2010

அமீரகத்தில் ரமலான் + சில எண்ணங்கள்!!

அமீரகம் ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகி வருகிறது. பல்பொருள் அங்காடிகள் எங்கும் கூட்டம். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவுப் பொருட்களை வாங்குவதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள் என வணிக நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் நடக்கும் ஏற்பாடுகளும், ரமலானை முன்னிட்டு அனுசரிக்கப்படும் கட்டுப்பாடுகளும், இன்னபிற எண்ணங்களும் தான் இப்பதிவின் நோக்கம்.



அதற்கு முன்பாக.. ரமலான் பற்றிய சிறிய விளக்கம். தெரியாத விசயங்களைத் தவறாகக் கொடுக்கக் கூடாது என்பதாலேயே விக்கிப்பீடியாவில் ரமலான் மாதத்தைப் பற்றி கொடுத்துள்ள குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். 

" ரமலான் என்பது இசுலாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் முஸ்லிம்களுக்கு நோன்பு மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்." நன்றி - விக்கிப்பீடியா.

அமீரகம் வருவதற்கு முன்பு ரமலான் என்பது இஸ்லாமிய அன்பர்கள் தொடர்புடைய மாதம் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். ஊரில் இருக்கும் பொழுது கூட இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் சென்று நோன்புக் கஞ்சியை வாங்கி வந்ததுண்டு. ஆனால், அதற்கு மேல்  ரமலான் மாதத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கவில்லை. அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தது மத்திய கிழக்கு நாடுகளின் பழக்கவழக்கங்களையும், அதில் முக்கியமான ரமலான் மாதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகியுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பொறுப்பு என்பதால், அமீரக அரசாங்கமும் நோன்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணம் சட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நோன்பு மேற்கொள்ளும் அன்பர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு வந்திராத வண்ணம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நோன்பு மேற்கொள்ளும் நேரமான சூரிய உதயத்தில் முதல் அஸ்தமனம் வரையில் பொது இடங்களில் எந்த உணவோ, தண்ணிர் முதற்கொண்டு எந்த விதமான நீராதரமோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சிறைதண்டனைக்கு உள்ளாவார்கள். வருடாவருடம் இந்த விதி தெரியாமலோ, தெரிந்தோ மீறி மாட்டிக்கொள்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவதைத் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பொது இடங்களில் உணவருந்தக் கூடாது என்பதால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. சரவணபவன் போன்ற உணவகங்கள் தேவையான உணவை வீட்டிற்கே கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இந்த சேவையை வழங்க தனி அனுமதி பெற வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் உணவகங்கள் அல்லது துரித உணவகங்கள் தட்டி வைத்து மறைவிடங்களைத் தற்காலிகமாக உருவாக்கி நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு உதவுகிறார்கள்.

நம் ஊரில் எப்படி தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் விற்பனை களைகட்டுகிறதோ, இங்கே ரமலான் மாதமும் விற்பனை களை கட்டியுள்ளது. ஆனால், இங்கே ஒரு வித்தியாசம், வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை, அதிக பயன் கிடைக்க வேண்டும் என்பதே அடிநாதமாகக் காண முடிகிறது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள்,மின்னனுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தும் சலுகை விலையில்!!

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் ரமலானை முன்னிட்டு தனி ஏற்பாடுகளைச் செய்வது கவனிக்கத்தக்கது. நோன்பு மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கின்றனர். நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் விடுப்பும் அளிப்பதுண்டு. ஆகவே ரமலான் மாதம் முழுவதும் மதியம் 2:30 முதல் சாலைகளில் வாகன நெருக்கடி ஆரம்பித்துவிடும். 



ரமலான் என்றால் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம் நோன்பு விருந்து. நோன்பை முடிக்கும் நேரத்தில் அலுவலக ஊழியர்களுக்கு (ஒரு நாள்) ரமலான் நோன்பு விருந்தை ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. பகல் நேரத்தில் இழக்கும் வருவாயை இது போன்ற விருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிகள் மீட்டு விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே செய்தித்தாள்கள் எங்கும் ரமலான் விருந்தைப் பற்றிய சலுகைகளைப் பார்க்க முடிகிறது. ரமலான் விருந்தில் அரேபிய உணவுகள் தனிச் சிறப்பு மிக்கது. 

இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர்.  இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.  நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது. 

ரமலான் மாதத்தில் எப்படி ஒரு நாடே ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் நடக்கிறது என்ற பிரமிப்பு வராமல் இல்லை. 

அதே சமயம் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..

*அமீரக மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் இந்தியர்கள். அதில் தோராயமாக நான்கு இலட்சம் பேர் இஸ்லாம் மதத்தைச் சாராத இந்தியர்கள். இந்த 4 இலட்சம் பேர் சக அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுது, நம் நாட்டில் ஏன் இது போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடிவதில்லை?

* பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?

* நம் ஊரிலும் வீட்டிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அவர்களை நாம் தூண்டாமலோ, கிண்டல் செய்யாமலோ இருந்திருக்கிறோமா?

இதெற்கெல்லாம் அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை என்று சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்ற எண்ணமே வருகிறது.

Friday, August 6, 2010

நம் திருமண முறை சரியானது தானா?



"செந்தில்... உங்க நாட்டுல கல்யாணத்த ஏற்பாடு பண்ண அமைப்புகள் இருக்கா?"

தேநீர் இடை வேளையின் பொழுது என்னைக் கேட்டார் மைக்கேல். மைக்கேல் என்னுடன் பணியாற்றி வருபவர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் தான் ஹங்கேரியில் இருந்து அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தவர். இது நாள் வரை இந்தியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெறவில்லை. இந்தியாவைப் பற்றியும் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார். 

அலுவலகத்தில் இருந்த பெரும்பாலானோர் ஏதோ ஒரு கூட்டத்திற்குச் சென்று விட எங்களுக்கு அருகில் இருந்த இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், தொலைவில் தெரிந்த கப்பல்களையும் பார்த்த படியே காப்புசினோவைக் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்தக் கேள்வி. இந்தியாவைப் பற்றிய கேள்வி என்றவுடன் கேரளத்தைச் சேர்ந்த ப்ரியாவும் சேர்ந்து கொண்டார். 

"என்னங்க மைக்கேல்.. திடீர்னு இந்தக் கேள்வி?" என்றேன்.

"இல்லை.. நேத்து மோஹித் இந்தியாவுல இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு வந்தார். அவர் கிட்ட பேசும் பொழுது தெரிஞ்சுக்கிட்டேன்"

"ஓ.. அதுவா விசயம்?"

"ஆமா.. அவரோட மனைவியத் திருமணத் தகவல் மையம் மூலமாத் தான் பார்த்தாராம்"

"ஆமாங்க.. இது இந்தியால வழக்கமான விசயம் தான். ஏன் என்னோட திருமணம் கூட வீட்ல ஏற்பாடு செஞ்சது தான்." என்றேன்.

"என்னோடது கூட வீட்ல பார்த்த திருமணம் தான்" என்றார் ப்ரியா.

"ஓ.. எப்படி? உங்க பார்ட்னர் எப்படிப்பட்டவர்னு தெரியாமா..." என்று தயங்கினார் மைக்கேல்.

"அது அப்படித்தாங்க. காலங்காலமா இப்படித் தான் நடந்துட்டு வருது. எங்க தாத்தா, அப்பா காலத்து வரைக்கும் சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால் தெரியாத ஆளக் கட்டுறதுங்கற விசயம் எல்லாம் இல்லை. இப்ப எங்க தலைமுறைல தான் இந்தத் திருமணத் தகவல் மையங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றேன்.

"ஓஹ்.. எப்படித் தேர்ந்தெடுப்பாங்க"

"உங்கள் சிஸ்டமக் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கிட்டுமா? உங்களுக்கு சில திருமணத் தகவல் வெப்சைட்களக் காட்டறேன்" 

பிறகு பாரத்மாட்ரிமோனி வலைத்தளத்தைத் திறந்து அதில் உள்ள விசயங்களை எல்லாம் காட்டினேன். ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன். அதில் ஒரு Profileஐப் பார்த்தவர்

"என்னது நோ ஸ்மோக்கர், நோ ட்ரிங்கர் என்றெல்லாம் இருக்கிறது?" என்றார்.

"ஆமாம்.. அது அந்தப் பெண்ணின் கணவராக வரவேண்டியவர் பூர்த்தி செய்ய வேண்டிய விசயங்கள். இன்னும் இந்தப் படிப்பு தான் வேண்டும். இந்த வேலையில் தான் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் போடுவார்கள்.. இது ஒரு தனி இண்டஸ்ட்ரி" என்றேன்.

"ம்ம்.. வெரி இண்ட்ரஸ்டிங்"

"முதல்ல பிரோஃபைல் மேட்ச் ஆன பிறகு, இரு குடும்பங்களும் பேசி, சந்தித்து, திருப்தியாக இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்"

"ம்ம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம்"

"உங்கள் நாட்டில் எல்லாம் எப்படி? இது போன்ற பழக்கங்கள் இருக்கா?" என்று கேட்டார் ப்ரியா.

"ஹாஹா.. இல்ல.. எங்க நாட்டுல எல்லாம் லவ் மேரேஜ் மட்டும் தான். அவங்கவங்களே பார்த்துக்குவாங்க"

"ஒரு வேளை, பெண்ணைத் தேடிப்பிடிக்கும் அளவிற்கு திறமையோ, வாய்ப்போ இல்லையென்றால்?" 

"ம்ம்.. அப்படி இருக்கறவங்க கம்மி தான். அவங்க பெரும்பாலும் கல்யாணம் செஞ்சிக்காமத் தான் இருந்துடறாங்க" 

"கல்யாணம் செஞ்சிக்காம இருந்திடக்கூடாதுன்னு தான் இந்தியால பெரியவங்களே அலையன்ஸ் பார்த்திடறாங்க" 

"ம்ம்.. திருமணத்திற்கு முன்பு பேசுக்கொள்வீர்களா? பார்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்குமா?" 

"ஹிஹி.. முன்பெல்லாம் ரொம்பக் கம்மியா இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவர நான் ஒரு தடவை தான் பார்த்தேன். 15 வருசத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அவரு வாரத்துக்கு ரெண்டு நாள் பூத்ல இருந்து கூப்பிடுவாரு. அதோட சரி"

"இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் டைம் இருக்கு. என் எங்கேஜ்மெண்டிற்கும் கல்யாணத்துக்கும் இடையில் நான்கு மாத இடைவெளி இருந்தது. பல முறை பார்த்திருக்கிறோம். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம்" என்றேன்.

"ஆனாலும் எப்படி? நாலு மாசம் போன்ல பேசறத வச்சு மனைவியா வரப்போறவரப் புரிஞ்சுக்க முடியுமா? நாங்க நாலு வருசமா பார்த்துப் பேசிப் பழகுனதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவுக்கு வந்தோம்" என்றார். 

"இந்தக் கேள்வி எங்களுக்கும் இருக்கத்தாங்க செய்யுது. ஆனா என்ன.. பெரும்பாலும் பிரச்சனை ஏதும் வர்றது இல்ல" என்றேன்..

"அப்படி எல்லாம் சொல்லாத செந்தில். காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"

"எங்க ஊர்ல எல்லா விசயங்களுமே குடும்ப உறவுகளோட இணைந்தே பார்க்கப் படும். அதனாலேயே பிரச்சனைகள் வந்தாலும், உறவினர்கள் தீர்த்துவிட்டுருவாங்க. பெருசா பிணைப்பு இல்லாதவங்க டைவர்ஸ் வரைக்கும் போறதும் உண்டு. டைவர்ஸ் வரைக்கும் போறதுல லைவ் மேரேஜ் பண்றவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க?" என்றேன்.

"யா...யா..  லவ் மேரேஜ் செய்யறவங்களும் டைவர்ஸ் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. இப்பல்லாம், கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது. என்னோட ஹங்கேரி கொல்லீக்ஸ் நிறையப் பேரு இந்த மாதிரி இருக்காங்க.."

"லிவிங்க்-டு-கெதர்.. ஸ்லோவா.. இந்தியால பிக்-அப் ஆயிட்டு இருக்கு.. ஆனா நாட்-டு-த லெவல் ஆஃப் ஈரோப்.."என்று ப்ரியா சொல்ல கூட்டத்திற்குச் சென்ற அலுவலக நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர். அவரவர் இருக்கைகளுக்கு வர ஆரம்பிக்க எங்கள் பேச்சு துண்டிக்க ஆரம்பித்தது. ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு

"ம்ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு மாதிரி பழக்கங்கள். எனக்கு இந்தியாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆர்வம். இன்னிக்கு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மாட்ரிமோனி சைட்ட என் மனைவி கிட்ட காட்டணும்" என்றார் மைக்கேல்.

"ஹாஹா.. அதக் காட்டப் போய் நெட்ல பொண்ணப் பாக்கிறியானு கேட்கப் போறாங்க.. டேக் கேர்"

"குட் பாயிண்ட் ப்ரியா. எனிவே.. தாங்க்ஸ் பட்டீஸ்.."

"இட்ஸ்.. ஓகே.. மைக்"

"சியா"

ஒவ்வொரு நாட்டினர்க்கும், மொழியினர்க்கும், மதத்தினர்க்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள். அவரவர்க்கு அந்தந்த பழக்கவழக்கங்கள் மீது அதிக பற்று, அதிக ஈடுபாடு இருக்கத்தான் செய்கிறது.  பிற நாட்டினரிடம் பேசும்பொழுது அவரவர் தரப்பு கருத்துகள் வெளியாவதுடன், அவர்களது பழக்கங்களுக்கான நியாயங்களும் புரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.

இந்தியாவில் பணியாற்றிய வரை மற்ற நாட்டினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே அமீரகத்திற்கு வந்த பிறகு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது, பல விசயங்களையும் யோசிக்க உதவுகிறது. 

"நம் திருமண முறை சரியானது தானா? என்ற கேள்வி உங்களுக்கு எப்பொழுதாவது வந்துள்ளதா?"

Tuesday, August 3, 2010

வந்தவழியும் குலதெய்வமும்!!

உங்கள் குலதெய்வக் கோயிலிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்? உங்கள் குலதெய்வக் கோயில் எத்தனை வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதென்று தெரியுமா? உங்கள் பங்காளிகள் எத்தனை பேரைத் தெரியும்?


இது போன்ற கேள்விகளை நண்பர்களிடம் கேட்கும் பொழுது பெரும்பாலானோர் "என்னடா தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்பது போன்ற பார்வையைத் தான் பதிலாகத் தருகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வளர்ந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் வாழ்நாளில் ஓரிரு முறை குலதெய்வக் கோயிலிற்கு சென்றிருப்பதே அரிது எனலாம். அதே சமயம் கிராமப்புறங்களில் வளர்ந்து வந்த நண்பர்களோ பலமுறை சென்றிருப்பதை அறிய முடிகிறது.




குலதெய்வத்திற்கும் நாம் வந்தவழிக்கும் பெரிய தொடர்பிருப்பதாலேயே குலதெய்வத்தைப் பற்றி ஒரு பதிவிடுகிறேன். நாம் எந்த நகரில் வாழ்ந்தாலும் பெரிய பதவிகளை வகித்தாலும் வந்த வழியை மறக்கக் கூடாது என்பதையே இந்தப் பதிவில் மையப் பொருள்.

நம் ஓட்டன் (பூட்டன் தந்தை), பூட்டன்(பாட்டன் தந்தை), பாட்டன் முதற்கொண்டு நம் முந்தைய தலைமுறையினர் வரை ஒரு இடத்தை, மண்ணை மிதித்திருப்போம் என்றால் அது குலதெய்வக் கோயிலைத் தவிர வேறு எதுவாக இருக்கும்? நம் குலதெய்வக் கோயில் அமைந்திருக்கும் இடம், பகுதியை வைத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் என்னென்ன தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள், எப்படிப் பட்ட பழக்கவழக்கத்தைக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ற வரலாறெல்லாம் அறிய முடிந்தால் நல்லது தானே?



எங்கள் முன்னோர்கள் கோவை அருகே சூலூரில், நொய்யல் ஆற்றங்கரையில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். பிறகு தாத்தாவின் தந்தையின் காலத்தில் பீடித் தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் தொழிலில் ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க முடியாமல் வேறு சில சிறு தொழில்களைச் செய்து வந்திருக்கின்றனர். பின்பு என் தாத்தாவின் காலத்தில் கோவையில் பஞ்சாலைகளில் பணியாற்றி வந்திருக்கின்றனர். பிறகு என் தந்தையின் வேலை காரணமாக உடுமலைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது என் முன்னோரின் வரலாறு. 

இரண்டு மூன்று தலைமுறையினர் வரை நொய்யல் நதியையே நம்பி விவசாயம் செய்து வந்திருந்த எங்கள் முன்னோர்கள், காலப்போக்கில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களால் வெவ்வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்து பின்பு இடமும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கோவையின் பழைய ஊர்களான வெள்ளலூர், சூலூர், பேரூர், சிங்கநல்லூர் போன்ற ஊர்கள் எல்லாம் நொய்யல் நதியின் கரையிலேயே அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது போலவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும். அதனைத் தேடிப் படிப்பது நாம் வந்தவழியைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையானது.

அனைவரும் வெவ்வேறு நாடுகளிலும் ஊர்களிலும் வாழ ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏன் குலதெய்வம் முன்னோர் என்றெல்லாம் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை.

நம் முன்னோரைப் பற்றி அறிய முற்படும் பொழுது அவர்களது வாழ்வியலில் உள்ள சிறப்புகள், முன்னோர் செய்த தவறுகள், அவர்கள் கண்ட வெற்றிகள் என்றெல்லாம் அறிய முடியும். நம் முன்னோரைப் பற்றி யோசிப்பதற்கு குலதெய்வக் கோயிலை விட சிறந்த இடம் இருக்க முடியுமா? நம் முன்னோரின் வாழ்வியல் முறை சிறப்பானதாக இல்லாவிட்டாலும் நாம் இன்று வந்திருக்கும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமே. நாம் நம் முன்னோரை விட நல்ல நிலைக்கு வந்திருந்தால் அவர்களுக்கு நன்றி கூறி, ஆசி பெறலாமே!!



இன்றும் எங்கள் குலதெய்வக் கோவிலிற்குச் செல்லும் பொழுது "இக்கோயில் 1700களில் கட்டப்பட்டது" என்ற வாக்கியத்தைப் படிக்கும் பொழுது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். ஆம், என் முன்னோர் முந்நூறு ஆண்டுகளாக அந்த இடத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது பெருமிதம் தானே?

"நான் நாத்திகன், இந்த குலதெய்வ வழிபாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறுபவராக இருந்தாலும் பரவாயில்லை!!  வருடத்திற்கு ஒரு முறை நம் முன்னோர் பல்லாண்டுகளாக கால் பதித்த இடத்தை தொட்டுப்பாருங்கள்!! 

நான் வசிப்பதில் அமெரிக்காவில், ஐரோப்பாவில், சென்னையில்.. அங்கே சென்று வர நேரமில்லை என்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது தாய்நாட்டிற்குச் செல்லும் பொழுதோ, குலதெய்வ விழா எடுக்கும் நாளன்றோ சென்று வாருங்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா? என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.

நம் அடுத்த சந்ததியினர்க்கு என்னென்ன விசயங்களைத் தரப்போகிறோம்?

நல்ல கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் வீடு நிலம் என சொத்துகள்!! 

அவர்கள் வந்த வழி என்ன என்பதைத் தர வேண்டாமா? அதைக் குலதெய்வக் கோவிலில் இருந்து துவங்கிப் பாருங்களேன்!! 

*

Friday, July 23, 2010

போலியாயணம்..



நாம் திரும்பும் பக்கமெல்லாம் போலிகளைப் பற்றிய செய்திகள்.. போலிகள் பிடிபட்டதைப் பற்றிய விசயங்கள் என்று போலிகளுக்கு நடுவே தான் நம் வாழ்க்கையே செல்கிறது. நான் எங்கெங்கெல்லாம் போலிப் பொருட்களை, சேவைகளை எதிர்கொண்டிருக்கிறேன், எப்படி எல்லாம் நாம் போலிகளைப் பார்க்கிறோம்? இதைத் தான் இந்தப் பதிவில் தொகுத்துள்ளேன்.

எனக்குப் போலி அறிமுகமானது போலி என்றே தெரியாத வயதில். . நியூட்ரின் மிட்டாயில் ஆரம்பித்தது என் அனுபவம். சில கடைகளில் 15 பைசாவிற்குக் கிடைத்த நியூட் ரின் மிட்டாய், ஒரு சில கடைகளில் 10 பைசாவிற்குக் கிடைத்தது என்று வாங்கிப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். அப்பொழுதெல்லாம் இந்த காலாவதி விசயம் எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தார்கள். 

பிறகு சில வருடங்கள் கழித்து பேனாவில் எழுதும் பருவத்தில், ரெனால்ட்ஸ் 045 பால்பாயிண்ட் பேனாவில் 045விற்குப் பதிலாக 040 என்று எழுதி வந்தது தான் எனக்குத் தெரிந்த முதல் போலிப் பொருள். 045 என்றால் ரீஃபில்லின் முனை கூர்மையாகவும் போலியின் முனை சற்று மொன்னையாகவும் இருக்கும். "ஹே.. ரெனால்ட்ஸ் மாதிரியே வுட்டிருக்கானுகடா.. இது ஒரு ரூபா கம்மி" என்ற அளவில் தான் விவரம் தெரிந்திருந்தது. அதுவே ஹீரோ பேனாவில் எழுதும் பருவம் வந்த பொழுது வாங்கினால் ஹீரோ பேனா தான், மற்ற மாதிரிக்கள் எல்லாம் வேண்டாம்.. "எல்லாம் சுத்த வீண்" என்று புரிய ஆரம்பித்தது. 

பள்ளிக்காலத்தில் அதிகம் போலிகளைச் சந்திக்க நேர்ந்தது பாட்டுக் கேசட்டுகளில் தான். 30 ரூபாய் கொடுத்து கம்பெனி கேசட் வாங்கக் காசில்லாமல் 12 ரூபாய் கொடுத்து பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளை வாங்கி, சில நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு பாடமல் போனதும் உண்டு. விக்கி கார்க் பந்து, POWER கிரிக்கெட் மட்டை என விளையாட்டுப் பொருட்களிலும் போலிகள் சரி விதத்தில் கலந்திருந்தன.

*


போலிப் பொருட்களை நாம் பயன்படுத்துவதைப் போலிகள் என்று தெரியாமலேயே ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்தும் ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்து உணர்ந்து வாங்குவது என்று சில வகைகளில் பிரிக்கலாம்.

ஒரு முறை DURACELL வாங்குவதற்குப் பதிலாக DURABATT என்ற போலியை வாங்கிய அனுபவம் தான் தெரியாமலேயே வாங்கி ஏமாந்து நினைவில் நிற்கும் அனுபவம். இப்படி ஏமாற்றுபவர்கள் நமது நினைவாற்றலுடன் விளையாடுபவர்கள்.DURACELL என்பதை நினைவில் வைத்திருப்பவர்களை சில நிமிடங்களை DURABATT தான் அசல் என்று நம்ப வைத்துவிடுவது ஒரு வகை. இன்று சீனாவில் இருந்து போலிப் பொருட்கள் வருபவை பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவையே.



பர்மா பஜார் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் எலக்ட்ரானிக் பொருட்களின் போலியை வெகுவாகப் பார்க்கலாம். NOKIA நிறுவனத்தின் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் NCKIA, NOXIA, NOKLA போன்ற பெயர்களைத் தாங்கிய பொருட்களை விற்பனை செய்வது, தயாரிப்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கே. விவரம் தெரியாதவர்கள் வாங்கிச் சென்று, பொருள் சரியில்லை என்றால் திட்டுவது அசல் நிறுவனத்தைத் தான்.

துணிவகைகளில் போலிகள் வந்திறங்குவது பெரும்பாலானோர் அறிந்ததே. VanHeusen என்ற இடத்தில் VanHensen என்ற பெயரில் ஆடையைப் பார்க்க நேரிடலாம். VanHensen அசல் இல்லை என்று தெரிந்தும் வாங்கிவிட்டு, இருமுறை துவைத்த பிறகு சாயம் போய்விட்டது குறைகூறுவதை என்ன வென்று சொல்ல? 

போலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போலிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. "இந்த வாடிக்கையாளர்கள் போலிகள் என்று தெரிந்தும் வாங்கிக் கொள்வார்கள்" என்ற எண்ணத்திலேயே தான் நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் ஒன்று போலியானவையாகவோ, அல்லது தரம் குறைந்தவையாகவோ இருந்துவிடுகின்றன.போலி டிவிடி, போலி எலக்ட்ரானிக் பொருட்கள், போலி மென்பொருட்கள் போன்ற நமக்குப் பொழுதுபோக்கிற்கு உதவும் பொருட்களையும், உடலிற்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களையும் நோகாமல் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். இதுவே, நம் உடல் ஆரோக்யத்திற்குத் தீங்கு விளைவித்தால் மட்டும் புலம்ப ஆரம்பிக்கிறோம்.

போலிகளில் நல்ல போலிகள், கெட்ட போலிகள் என்று பிரித்துப்பார்ப்பதில் தான் பிரச்சனையின் ஆரம்பகட்டம். போலிகள் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்காவிட்டால் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். 

போலிச் சான்றிதழ்கள், போலி குடும்ப அட்டைகள், போலி ஓட்டுனர் உரிமம் என்று அரசாங்கம் அளிக்கும் பொருட்களிலும் போலிகள். இப்படியே செல்வதால் தான் இன்று போலி காவல்நிலையம், போலி நீதிமன்றம், போலி நீதிபதி வரை வந்துள்ளது. நாம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளில் எது போலி, எது அசல் என்று தெரியாவிட்டால் எப்படி இருக்கும்? "இருக்கு... ஆனா இல்லை. இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு" என்று எஸ்.ஜே.சூரியா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நேரத்துல அரசைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லையா? "போலி நீதிமன்றம் வந்தது எப்படி" என்று தலையைச் சொறிபவர்களைப் பற்றிக் கூறி என்ன பயன்? நாளை போலி அரசாணை வந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை. நாம் நம்ம கையில் என்ன இருக்கிறது எனப்தை மட்டும் பார்ப்போம்.

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி!! முதல் படியில் காலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்?

*

"போலி" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.

Tuesday, May 11, 2010

உறுத்தல்கள்!!


திகாலைச் சிற்றுந்துப் பயணம்
அழகான சாலை சீரான வேகம்
இதமான வாகன அதிர்வில்..
இதமான குறுந்தூக்கம்
வாகன நிறுத்தத்தில்
விலகியது ஜன்னல் திரை
கதிரொளியில் கலைந்தது குறுந்தூக்கம்
அகம்சுளித்துப் புறம் பார்த்தான்
சாலையோரத்தில்
புல்வளர்க்கும் தன்னாட்டவரை!!

**

ரபரப்பான பேருந்து நிறுத்தம்
வாகனத்தை நோக்கித் தாயும் மகளும்
தொலைவில் தெரிகிறதொரு சிற்றுந்து
தவிக்கும் தாய் கலங்கும் மகள்
சட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்
விழிகள் அனைத்தும் வாகன திசையில்
இருவிழிகள் மட்டும் மாற்று திசையில்!!

**

ளபளக்கும் பல்பொருள் அங்காடி
உயிரற்ற சிரிப்புடன் சிப்பந்திகள்
புன்முறுவலால் பதிலளித்தான் பொய்யாக
இறுக்கத்துடன் தேடினான் வேண்டுபொருளை
தள்ளுவண்டியில் சிரித்தது உயிரோவியம்
அலைபேசியில் பார்த்துப் புன்னகைத்தான்
மழலை கொஞ்சும் மகனைப் பார்த்து!!

Friday, May 7, 2010

சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்.

சாதி/ குலம் என்றால் என்ன? சாதி எப்பொழுதிருந்து  வழக்கத்தில் இருக்கிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் பல ஏடுகளில் தேடினேன். அதில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் (பக்கம் 161) உள்ள கருத்துகளைக் கீழே சேர்த்துள்ளேன்.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் "மக்கள் செய்துவந்த தொழிலிற்கு ஏற்பத்" தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமனக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு  பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்ப்பட்டு வந்தது.

மக்கள் செய்து வந்த தொழிலிற்கு ஏற்ப பல குலங்களாகப் பெயரிடப்பட்டு வாழ்ந்தது மேலே உள்ள பத்தியில் இருந்து விளங்குகிறது. ஆனால், அந்த காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், இது எப்பொழுது மாறியது? ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்பித்தது எப்பொழுது? ஒரு குலத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை வர ஆரம்பித்தது எப்பொழுது?

இந்நிலைக்குக் காரணம் இன்னார் தான் என்று விடையளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. சாதிகளின் இன்றிய நிலை என்ன? இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா? என்ற கேள்விகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.



உணவு, உடை, இருப்பிடம், காற்று, ஒளி, போல நம் இந்தியர்களின் வாழ்வில் ஒன்றாய்க் கலந்திருக்கும் விசயம் சாதி.

எப்படி சில சாதியினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்? சில சாதியினர் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு விடை கல்வி, வெளியுலகப் பட்டறிவு (Exposure), ஆள்வோரின் துணை போன்றவையை விடையாகக் கூற முடிகிறது. தொழிலின் அடிப்படையில் குலங்கள் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் வரக் காரணம், சிலரின் தொழில் வெளியுலக உறவைப் பலப்படுத்தும் வகையிலும், சிலரின் தொழில் குறுகிய வட்டத்தில் இருந்ததையும் புரிய முடிகிறது. அப்படி கல்வி, வெளியுலக அறிவு போன்றவை சில குலங்களை பலப்படுத்தியும், போதிய கல்வியறிவு இல்லாதது பல குலங்களைச் சமூக சூழ்நிலையில் தாழ்த்தவும் செய்தன. இதற்கு மேலாக ஆள்வோரின் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவையும் சேர்ந்து கொள்ள சாதிய வேறுபாடுகள் நம் சமூகத்தில் வேறூன்றி விட்டது.

சமூகத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் தாழ்ந்திருப்பதற்கும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட (என்று கூறப்படும்) குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வெளியுலக உறவு / அறிவு போன்றவையே காரணம்.

ஒரு குழந்தை அறிவாளியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை விட வளர்ந்த சூழ்நிலை, கல்வி, வெளியுல அறிவு போன்றவற்றைத் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி கல்வி, வெளியுலக அறிவு/உறவு போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தினர்க்கு உதவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு. 

o

பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது வகுப்பாசிரியர், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு வரை சாதி ஏதோ பெயரிற்குப் பின்னார் போட்டுக்கொள்ளும் விசயம் என்றே எண்ணியிருந்தேன். பிறகு 12 படித்து முடித்து பொறியியர் படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிய பொழுது தான் தெரிந்தது சாதிக்கு நம் கல்விமுறை கொடுக்கும் முக்கியத்துவத்தை. எத்தனையோ கேள்விப்படாத சாதிகள். பொறியியல் பட்டியலில் என்னுடைய வரிசை எண் - 1650. பி.சி. எண் - 847. அதாவது பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் எனக்கு 847வது இடம். 1500வது எண் உள்ள பொதுப் பிரிவில் வரும் மாணவரை விட எனக்கு அதிக முக்கியத்துவம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது  கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டதால், சாதியைக் குறிப்பிட வேண்டிய சூழல் பிறகு ஏற்படவில்லை.

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா? 

o

இட ஒதுக்கீடு எவ்வாறு வகுக்கப்படுகிறது?

சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் மூலமும் கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நிர்ணிக்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. தேவையேற்படும் பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முறையாக வைத்துள்ளனர்.

2011 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.

o

இந்தக் கோரிக்கைக்குத் தேவையென்றும்.. தேவையில்லை என்றும் கருத்துகள் வெளியாகின்றன.

கல்வித் துறை முதல் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது வரை இட ஒதுக்கீட்டிற்கு சாதியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையே என்பது ஒரு தர வாதம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.

சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதிக் கட்சிகளுக்கு வசதியாகி விடும். இன்று பி.சி., எம்.பிசி, எஸ்.சி. எஸ்.டி என்று உள்ள நிலை மாறி மேலும் பல உட்பிரிவுகள் வரக் காரணமாகிவிடும். ஏற்கனவே பிரிவினைவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், சாதிவாரியான மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதே அடுத்த தரப்பின் வாதம். 

o

தொழில்வாரியாக வகுக்கப்பட்ட சாதிகள், இன்று அரசியல் காரணியாகவும், வாக்கு வங்கியாகவும் மாறிவிட்டது வேதனையானது. அதற்கான காரணம் வெவ்வேறு சாதிகளிடையே இருந்த பொருளாதார சமூக வேறுபாடுகளே!! அந்த வேறுபாடுகளை இந்த இட ஒதுக்கீடுகள் அகற்ற உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?

பிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா? அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா?

சாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும். அதற்கான வழிவகைகள் எப்பொழுது ஏற்படும்? அப்படி பொருளாதார அடிப்படையையும் சேர்க்க ஆரம்பித்தால், சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்ற சூழலும் வர ஆரம்பிக்கும்.

அதுவே படிப்படியாக சாதிகள் இல்லாத சமூகம் வர உதவும்.

உங்கள் கருத்துகளைக் கீழே குறிப்பிடுங்கள்!!

Friday, April 30, 2010

லிவிங்க்-டு-கெதர், குஷ்பு, திருமணம் - ஒரு பார்வை!!

"திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் (லிவிங்க் டுகெதர்) என்ன தவறு இருக்கிறது?" என்று உச்ச நீதி மன்றம் குஷ்பு மீது தொடுத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

"படித்த எந்த ஆணும் தன் மனைவி கற்புடையவளாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டான். பெண்கள் திருமணத்திற்கு முன்பான உறவுகளில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்தது வழக்குகளுக்கும், குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டங்களுக்கும் காரணம்.

o

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? குஷ்புவின் கருத்து சரியானதா? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இந்த விசயம் தொடர்பாக பல எண்ணங்கள் மனதில் எழுகின்றன. அதைப் "பொதுப்புத்தி"யுடன் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்பது தீர்ப்பு. இங்கே கவனிக்க வேண்டிய விசயம்.. திருமண வயதை அடைந்தவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டையெல்லாம் கூறவில்லை இந்தத் தீர்ப்பு. ஒருவர் யாருடன் சேர்ந்து வாழ்வதும் அவரவரின் விருப்பம். ஆக..  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரிவதில்லை.

திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை மட்டும் பார்ப்போம். ( ஓர் ஆண் ஆணுடனோ, ஒரு பெண் பெண்ணுடனோ சேர்ந்துவாழ்வது இங்கே விவாதிக்கவில்லை.)

o

"எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது, எனக்கும் இந்த ஆணைப் பிடித்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம்" என்பது மாநகரங்களில் இன்று பரவலாகி வருகிறது. "நானும் நீயும் ஒரு கூரையின் கீழ் வாழ திருமணம் என்ற "சடங்கு" தேவையா?" என்பதே இவர்களின் மனதில் எழும் கேள்வி. அவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் சேர்ந்து வாழத் திருமணம் தேவையில்லை தான்.  

இந்த முடிவை எடுப்பவர்கள் இருபதுகள், முப்பதுகளில் இருப்பவர்கள் தான் அதிகம். இவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?

முதலில் வாழ்விடம்..

தாங்கள் சேர்ந்துவாழ, ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, வெளியூரிற்குச் செல்லும் பொழுது விடுதியில் அறை எடுப்பது வரை சிக்கல் தான். தாங்கள் கணவன் மனைவி தான் என்று நிரூபித்தால் தான் இன்றும் ஹோட்டல்களில் அறை எடுக்க முடியும். கமலஹாசன் முன்பொரு பேட்டியில், "ஹோட்டலில் அறை எடுப்பதற்காகத் தான் திருமணம் செய்தேன்" கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஹோட்டல் நிர்வாகத்தினர் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலேயே இருக்கிறது நாட்டு நடப்பு!! சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி படைத்தவர்கள் இதில் அடங்க மாட்டர்.

அடுத்து குழந்தை..

சேர்ந்து வாழும் இருவர்.. தங்களுக்குக் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால் வருவது அடுத்த சிக்கல். கற்பமான தன்னவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்.. உறவுமுறையைக் கூற வேண்டிய இடத்தில் ஆரம்பிக்கிறது சிக்கல். சேர்ந்து வாழ்பவர் என்ற உறவுமுறையை நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் ஏற்கலாம். சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ.. சிக்கல் தான். ஆனால், பிறந்த குழந்தையை வளர்ப்பதில் எந்த குறையும் இன்றி கண்டிப்பாக வளர்க்க முடியும்.  திருமணமாகாத பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும் போது.. சேர்ந்து வாழும் பெற்றோரால் கண்டிப்பாக நன்றாகவே வளர்க்க முடியும். 

வெளிநாட்டு வாழ்க்கை.. விசா.

சேர்ந்து வாழும் இருவருள் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல நேர்ந்தால்.. தன்னைச் சார்ந்தவர் (Dependent) என்ற முறையில் "மனைவியையோ/ கணவரையோ" மட்டுமே அழைக்க முடியுமே தவிர.. சேர்ந்து வாழ்பவரை அல்ல. மேலும்.. துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில்.. நீங்கள் திருமணமாகத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். "One should not live with a person out of their marriage"

சேர்ந்துவாழ்பவர்களுக்கு ஏற்படும் சிக்கலை விவரித்த அதே நேரத்தில்.. தேவையற்ற சடங்குகள், கணவன் மனைவிக்கென்று சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், பிடிக்கவில்லை என்றால் எளிதில் பிரிந்து செல்ல முடிவது போன்றவையை நன்மையாகக் கூறலாம். சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் நண்பர்களும் எனக்கிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சேர்ந்து வாழ்ந்த இருவர் பிரிய நேர்ந்தால் என்ன நிலை ஏற்படும்? அந்த ஆண் அல்லது பெண் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வதை எப்படி அனுகுவது? இங்கே தான் வருகிறது குஷ்புவின் கருத்து!!

சேர்ந்து வாழ்ந்த ஆணோ பெண்ணோ பெற்றோரின் நிர்பந்தத்தால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டால், அவர்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப் படுவர்? விவாகரத்து ஆனவர் என்பதைப் போல சேர்ந்து வாழ்ந்தவர் என்றா? 

நண்பர்கள் மத்தியில் திருமணம், தான் திருமணம் செய்யப் போகும் பெண் பற்றியெல்லாம் பேச்சு வரும்பொழுது, "மாப்ளே, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தாப் போதும்டா" என்றோ, "நான் எந்த பெண்ணுடனும் தொடர்பில்லாம இருக்கேன், என் மனைவியும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருப்பதில் என்ன தவறிருக்கிறது" என்றோ தான் பேச்சு அடிபடும். 

ஆக குஷ்பு கூறியது போல "படித்த ஆண் மகன் எவரும் தன் மனைவியாக வருபவர் கற்புடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டார்" என்ற கருத்தை ஏற்க முடிவதில்லை. திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தவர்கள் சில சதவிதத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும், பெருவாரியான மக்கள் இப்படித்தான் என்பது ஏற்புடையதில்லை.

இந்த நபர் இன்னாருடன் சேர்ந்துவாழ்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால் எத்தனை சதவிதத்தினர் திருமணத்திற்கோ சேர்ந்து வாழவோ ஏற்றுக் கொள்வர்?

-பிடிக்காத நபருடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே சரி என்று கூறும் வேளையில் வாழ்க்கையின் அடுத்த நிலை என்ன என்பதை யோசிப்பது மிகவும் தேவையான ஒன்று. வாழ்க்கையின் அடுத்த நிலையில், திருமணம் பற்றி யோசிக்க நேர்ந்தால் தன்னைப் பற்றிக் கூறிவிடுவதே ஏற்புடையது.

o

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, (இந்திப் படங்களில் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்து) லிவிங்க்-டு-கெதர் உறவுமுறை மீது ஆர்வம், ஏதோ நவீனத்துவ சிந்தனையாளன் என்ற எண்ணம் போன்றவையால் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் முன்பு வாழ்வின் அடுத்த நிலை பற்றி சிந்திப்பது நல்லது. "இன்றைய பொழுதை இனிமையாக்கு, நாளையை நாளை பார்க்கலாம்" என்பதெல்லாம் சரிதான். ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!!

o

Wednesday, April 28, 2010

அமீரகத் தமிழ் மன்றம், ரோகினி மற்றும் துபாய் தூதரச் சேவைகள்..

கடந்த வெள்ளியன்று அமீரகத் தமிழ் மன்றத்தினர் "இனியொரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் மகளிர்க்கான சிறப்பு நிகழ்ச்சி அது. 

சுவையரசி - 2010 என்ற பெயரில் பெண்களுக்கான சமையல் போட்டி, சவாலே சமாளி, சிறந்த தாய் - மகள் என பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட போட்டிகளை மிகவும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தனர் மன்றத்தின் மகளிர் உறுப்பினர்கள்.



மருத்துவர் சுப்புலக்ஷ்மி பாலா அவர்களை அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணியாகத் தேர்வு செய்தனர். இவரை வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்தது சிறப்பு. சமூகத்திற்கு இவரது பங்களிப்பைப் பற்றிக் கீழே உள்ள படத்தில் காணலாம்.





மருத்துவர். முகம்மது பர்வீன் பானு, திருமதி சந்திரா ரவி, திருமதி சுஜாதா வேணுகோபால் ஆகியோர் இவ்வாக்கெடுப்பில் அறிவிக்கப்பட்ட மற்ற மூன்று பேர். அமீரகம் மற்றும் இந்தியாவில் சிறந்த சேவையாற்றி வரும் இம்மூவரும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். தாய் நாட்டில் இருந்து வெளியே வாழ்ந்தாலும் மக்களுக்குச் சேவை செய்து வரும் இவர்களை வாழ்த்துவதற்கு ஒரு வழியை ஏற்படுத்திய அமீரகத் தமிழ் மன்றத்தினருக்கு சிறப்பான வாழ்த்துகள்!!

இந்நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்று நிகழ்ச்சியைத் தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர்: நடிகை ரோகினி!!

"ஏன் நடிகைகளையே கூப்பிடறாங்க.. வேற ஆட்களே கிடைக்கலையா?" என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது நிகழ்ச்சியில் ரோகினி அவர்களைப் பற்றி அறிமுக உரையில்!!

எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றி விழிப்புணர்பு, பி.டி. கத்திரிக்காய், விவசாயம் போன்ற இயற்கை சார்ந்த விழிப்புணர்வு, பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றிய ஆவணப் படங்கள் என சமூகத்திற்கு இவரது பங்களிப்பு வியக்க வைக்கிறது. பாடலாசிரியர், குறும்பட இயக்குனர், விளம்பரப் பட இயக்குனர் என திரையுலகம் சார்ந்த மற்ற வேடங்கள் நமக்கு அறிமுகமாகாதவை!! நிகழ்ச்சியில் உரையாற்ற வந்தவர்.. எதுவுமே எழுதி வைக்காமல் தூய தமிழில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.



அவரது உரையில்.. இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றம் ஏன் தவிர்க்கப் பட வேண்டும் என்பதைப் பற்றி தன் கருத்தைத் தெரிவித்த பொழுது நாம் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. வேலை தேடி வெளிநாடுகளுக்கு வந்திருப்போர் விவசாயத்திற்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இடையிடையே பாரதியாரின் பாடல்களையும் சேர்த்துக் கொண்டவர், அவரது கவிதையுடன் முடித்துக் கொண்டார்.


அவரது கவிதையுடன் முடிக்கும் முன்பு..

"எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" என்ற அவரது வார்த்தையின் உண்மைக்காக அரங்கில் கரகோசம் எழுந்தன.

பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் அவர் எழுதிய "உனக்குள் நானே உருகும் இரவில் "என்று தொடங்கும் பாடலின் வரிகள்... இந்தச் சுட்டியில்...

டமிலில் பேசி வரும் நடிகைகளில் மத்தியில் ரோகினி அவர்கள் விண்மீனாகக் காட்சியளித்தார். ( ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இல்லாமலே சமூகத்திற்கு உதவிவரும் இவரைப் பார்த்தாலாவது... நம்ம... ஸ்டார்கள், தளபதிகள் திருந்துவார்களா? ஏண்டா செந்திலு.. நடக்கறதப் பத்தி பேசு..)

மகளிர்க்கான நிகழ்ச்சியொன்றை அழகாக நடத்தி முடித்த மன்றத்தின் மகளிர் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்!!

*****

சென்ற வாரம் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்றிருந்தேன். என் மகனின் கடவுச்சீட்டு தொடர்பான, என் ஒப்புதல் கடிதம் (Affidavit)  ஒன்றில் தூதரகத்தில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது.

ஒன்பது மணிக்குத் திறக்கும் தூதரகத்திற்கு 8:30க்குச் சென்றேன். சாஸ்திரி பவனில் பார்ப்பதை விட கூட்டம் அலைமோதியது. எனக்கு முன்பாக ஏறக்குறைய 250 பேர் இருந்தனர். அலுவலகத்தில் வேறு 12 மணிக்கு வந்து விடுவதாக கூறியிருந்தேன். திரும்பி சென்று விடலாமா இருந்து தான் பார்க்கலாமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே "வந்ததே வந்துட்ட.. பார்த்துட்டுப் போடா செந்திலு" (எவ்வளவோ பண்ணிட்டோம்.. ஸ்டைலில்) என்றது மன சாட்சி.

ஒன்பது மணிக்கு வாயில் திறந்தவுடன், பத்து நிமிடத்தில் நான் வாயிலிற்கு வந்துவிட்டேன். அங்கே இருந்த காவலர் சோதனை செய்துவிட்டு, மேலே உள்ள கலையரங்கத்திற்கு செல்லுமாறு கூறினார்.

மேலே சென்றால்.. எனக்கு முன் சென்ற 250 பேரும்.. கையில் டோக்கனுடன் அமர்ந்திருந்தனர். திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றிதழ்களைத் தூதரக அதிகாரியிடம் ஒப்புதல் கையொப்பம் வாங்கிய பிறகு தான் துபாய் அரசாங்க அமைப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும்.

என்ன வியப்பு!!

கடகடவென அனைவரும் அழைக்கப்பட்டு.. என் முறை வர ஒன்றரை மணி நேரம் தான்(!!) ஆகியிருந்தது. என் மகனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டிற்கான ஒப்புதல் விண்ணப்பத்தையும், இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கிறேன் என்பதற்கான ( இந்தக் கதை அடுத்த பதிவில்.. ) ஒரு சான்றிதழையும் சமர்ப்பித்தேன்.

"எப்பங்க கிடைக்கும்?" என்று கேட்டது தான் தாமதம்.. "ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார் (தமிழில்) சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு இரண்டு சான்றிதழ்களும் கிடைத்தன. நான் என்னைக் கிள்ளிக் பார்த்துக் கொண்டேன்.

துபாய் தூதரகத்தில், சான்றிதழ்கள், கடவுச்சீட்டு இன்னபிற சேவைகளையும் துரிதமாக வழங்குவது வி.எஃப்.எஸ் என்ற தனியார் அமைப்பினர். விசா சேவைகளில் முன்னோடிகள் இந்த நிறுவனத்தினர்.

தூதரகத்தில் இருந்து வெளியே வரும் பொழுது எனக்கு சாஸ்திரி பவன் நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!!

****

Tuesday, April 13, 2010

கதறும் பூந்தமல்லி சாலை!!

சென்னையின் சாலைகளுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால்.. இந்நேரம் மாண்டிருக்கும். ஆம் நாம் நடத்தும் சீரழிப்பைத் தாங்க முடியாமல்!

சென்னையுடன் என் உறவு 1997 முதல் தான். ஆனால் இந்த 13 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்??

1997ல் கல்லூரிக் கல்விக்காகச் சென்னை வந்ததிலிருந்து, நான் பார்த்து வரும் மாநகரச் சாலைகளுள், மாற்றங்கள் நிகழ்ந்ததென்றால் அது சில மேம்பாலங்களும், பல ஒருவழிப்பாதைகளும் தான். சென்னையில் நான் அதிகம் பயன்படுத்திய சாலைகளுள் கோட்டூர்புரத்தை ராஜ்பவனுடன் இணைக்கும் காந்திமண்டபம் சாலையும், சர்தார் பட்டேல் சாலை மற்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் தான்!! அந்த சாலைகளின் அன்றைய மற்றும் இன்றைய நிலையை நினைக்கும் பொழுது...

கோட்டூர்புரம் சாலை!!

முன்பு, அடையாறு ஆற்றிலிருந்து சர்தார் படேல் சாலை வரை (சில இடங்கள் தவிர்த்து ) சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் காணப்படும். சாலைகளில் வாகனங்கள் வருவதே அரிதாக இருக்கும். ஏன் சில சமயம், கார்கள் சாலையோரத்தில் ஒதுங்கி (??) நிற்பதையும் பல முறை பார்த்திருக்கிறோம். அப்படி இருந்த சாலை இன்று "மொட்டையடிக்கப் பட்டுள்ளது" சோகத்தின் உச்சம்.



சர்தார் படேல் சாலை!!

சைதாப்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி வரும் பொழுது தட்பவெப்பத்தில் சில டிகிரிகள் குறைவதை உணர முடியும். சின்னமலை சந்திப்பில் இருந்து ராஜ்பவன் நோக்கி வரும்பொழுது இருந்த அடர்ந்த மரங்கள் இன்று எங்கே?? ஒருவழிப் பாதையாக மாறியதில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அதே போல அடையாரை நோக்கிச் செல்லும் பொழுது சி.எல்.ஆர்.ஐ.(CLRI), காந்தி நகர் பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை!!

அண்ணாபல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அடையாரில் இருந்து கல்லூரிக்கு நடந்தே வருவது எங்களுக்கு வாடிக்கையான ஒன்று. சாலையோரமெங்கும் மரங்கள், எங்கும் நிழல்!! ஆனால் இன்று??

பூந்தமல்லி சாலை!!

சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்று பூந்தமல்லி சாலை. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தரமான சாலைகளுள் ஒன்று. சென்னை நகரின் மக்கள் தொகை சில லட்சங்களாக இருந்த சமயம் போட்ட சாலையை, மாநகரின் மக்கள் தொகை ஒரு கோடியைத் தொடும் பொழுதும் பயன்படுத்தி வருகிறோம். 

பத்து பேர் நிற்க வேண்டிய இடத்தில் 15 பேர் நிற்கலாம். 100 பேர் நின்றால் என்னாகும்?? 

அது தான் நடக்கிறது இன்று சென்னை சாலைகளில். குறிப்பாக பூந்தமல்லை சாலையில்!! தென்சென்னைப் பகுதிகளில் இருந்து வட சென்னைப் பகுதிகளுக்குச் செல்ல பூந்தமல்லி சாலையைக் கடந்தே தீர வேண்டும். மேலும் சென்னை சென்ரல், சென்னை எழுப்பூர் ரயில்நிலையம், கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி சாலையெங்கும் முக்கிய இடங்கள்!! சென்னையில் வாழும் பெரும்பாலானோர் கடக்கும் சாலையென்பதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் தான்!!

நாங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தான் துபாய் வரும் வரை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் தான் குடியிருந்தோம். என் அலுவலகம் இருந்ததோ பூந்தமல்லியைத் தாண்டி. காலையில், ஈகா திரையரங்கில் இருந்து 4 கி.மி. தொலைவில் இருந்த கோயம்பேடு செல்வதற்குக் குறைந்தது 10 நிமிடம் ஆகும். அதுவே மாலையென்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும். வாரக்கடைசியில் கீழ்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்தி நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கிறது.  ஒன்றரை வருடத்திற்கு முன்பே அவ்வளவு நெரிசல் என்றால்... இன்று??

ஏற்கனவே விழிபிதுங்கி நின்ற பூந்திமல்லி சாலை குருடாகியிருக்கிறதாம். காரணம் அம்பா மால்!!


நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர் போன்ற பகுதிகளை அண்ணா நகர், வில்லிவாக்கத்துடன் இணைக்கும் நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலையில் சந்திக்குமிடத்தில் அழகிய கூவத்தின் கரையில் அமைந்துள்ளது இந்த மால்!! நெரிசல் நிறைந்த சாலையில், இந்த மால் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அம்பா மாலின் திரையரங்கங்களின் காட்சி முடியும் நேரமானால் சொல்லவே வேண்டாம்!! இந்த இடத்தில் இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மவராசரை நினைத்தால்....ம்ம்ம்.. நல்லாயிருக்கட்டும்!!


"அட.. என்னடா இவன்.. புதுசா, சூப்பரா மால் கட்டி விட்டுருக்காங்க!! அத விட்டுட்டு சாலை, நெரிசல்னு புலம்பீட்டிருக்கான்" என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஏதாவது மாற்று வழியில் செல்லலாம். மாநகரப் பேருந்தே கதி என்று இருப்பவர்கள் நிலை என்னவாகும்??

சென்னை சென்ரலில் இருந்து கோயம்பேடு செல்ல முன்பு 45 நிமிடம் ஆகியிருந்தால் இனிமேல், ஒன்றரை மணி நேரமாகும். பேருந்திகளில் செல்வோர் அவதிக்குள்ளாவது எதனால்?? நம்மைப் போன்றோர் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்க!!

Friday, April 9, 2010

கண்ணு!! வீட்டுல ஏதாவது விசேஷம் உண்டா?

"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!!" என்னும் சொலவடை நம் ஊரில் மிகவும் பிரபலம். அதிலும் திருமணம் செய்வதில் சந்திக்கும் சிக்கல்கள், அனுபவங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துவதில் கூட கிடைக்காது. புதிதாக ஒரு குடும்பத்துடன் உறவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவது, நேரமின்மையால் சிலரை நேரில் அழைக்க முடியாமல் போவது, யாருக்கு முதன் மரியாதை செய்வது என்று எண்ணற்ற சிக்கல்கள்!! மேலும் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பழக்க வழக்கங்களால் வரும் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளும்! இங்கே பணத்தால் வரும் மன உளைச்சல் வேறு!!

இப்படி பல குழப்பங்கள், மன உளைச்சல்களைச் சந்தித்து திருமணம் முடிந்து "அப்பாடா.. !!" என்ற தம்பதியினர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த சில மாதங்களில் அடுத்த கேள்வி ஆரம்பித்துவிடும்

கண்ணு!! ஏதாவது விசேஷம் உண்டா?

"நம்ம இராமசாமி மவனுக்குப் போன வைகாசில தான் கல்யாணம் ஆச்சு! இந்த வருஷம் மாசில குழந்தை பிறந்திருச்சு"

"அந்தந்த நேரத்துல நடக்க வேண்டியது நடந்துறனுங் கண்ணு"

இன்னும் எத்தனையோ விதமான கேள்விகள், கோரிக்கைகள் திருமணமான சில மாதங்களிலேயே! முந்தைய தலைமுறையினர் தங்களது முதலாம் மண நாளில் குழந்தையுடன் இருந்தது தான் இந்தக் கேள்விகள், பேச்சுகளுக்குக் காரணம்!!

ஆனால், நம் தலைமுறையினரோ சில மாதங்கள், வருடங்கள் கழித்து குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று இருந்துவிடுகி(றோம்)றார்கள்!! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், இப்பொதுதே எதற்கு? நமக்கு என்ன வயதாகிவிட்டது? மேற்கத்திய நாடுகளில் நாற்பது வயதிகளிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே, நம் இருவரின் வேலையிலும் முன்னேற்றம் அடைந்த பிறகு பார்த்துக் கொள்ளலம் போன்ற எண்ணங்கள் தான் குழந்தைப்பேறை தள்ளிப்போடுவதற்கான காரணங்கள்!!

இவர்களுள் பெரும்பாலானோர் DINK  டபுல் இங்கம் நோ கிட்ஸ் என்ற நிலையில் அடங்குவர்!!


தம்பதியினர் இருவருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நேரமின்மை, பொறுப்பை ஏற்க பயம் போன்றவை DINK வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்போரின் குணாதிசயங்கள். முந்தைய தலைமுறையினர்க்கு அளவான சம்பளம், போதிய ஓய்வு எல்லாம் இருந்ததால் குழந்தைகளைப் பராமரிக்க முடிந்தது. ஆனால இன்றோ, அலுவலகத்தில் 10 முதல் 16 மணி நேரம் வரை செலவழிக்க நேர்வதால் தகுந்த நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது!!

DINK நிலைக்கு, மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கிய நம் வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. 30களில் திருமணம் செய்துகொள்வதும், நாற்பதுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் சாதாரணமான விசயம். குழந்தைகள் பதின்ம வயதைக் கடந்துவிட்டால், கண்டுக்க வேண்டியத் தேவையில்லாத சமூக நிலை மேற்கத்திய நாடுகளில்!! ஆனால் நமக்கோ, குழந்தைகளின் திருமணம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

o

திருமணமாகி சில வருங்களுக்கு DINK வாழ்வியல் முறையில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது தான் காத்திருக்கிறது அதிர்ச்சி!!

தம்பதியினருள் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே குழந்தை பெற்றுக் கொள்வதில் குறைபாடுகள் இருப்பது இன்று பரவலாகப் பார்க்க முடிகிறது. அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பது, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் பிரச்சனைகள் வருவது அதிகரிப்பதற்கு மகப்பேறு மருத்துவமனைகளில் காணப்படும் கூட்டமே சாட்சி!!

அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சியில் தோன்றி பயமுறுத்தும் போலி சித்த வைத்தியர்களும், பெற்றோர்கள், உறவினர்கள் கொடுத்த அறிவுரைகளும் நினைவிற்கு வருவது வேடிக்கையானது.

o

DINK வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்கும் முன்பு "தங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதா? குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியுடன் இருக்கிறோமா?" என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று!!



நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் ஒவ்வொரு விசயத்திற்கு ஒவ்வொரு அர்த்தம் இருந்திருக்கிறது. திருமண வாழ்வில் தம்பதியினர்க்குள் சில மனக்கசப்புகள், உறவில் விரிசல்கள் ஏற்பட்டாலும் அதை ஒட்டவைக்கும் பசையாக இருப்பது குழந்தைகளே என்பதை நம் முன்னோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இன்றைய வாழ்வியல் முறையில், முன்னோர் போல வாழ முடியாவிட்டாலும, அவர்களிடம் இருந்து சில படிப்பினைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லையே!! எல்லாவற்றிற்கும் மேலாக..

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"

என்பதை நம் முன்னோர்கள் அனுபவித்ததால் தான்.. நம்மிடம் கேட்கிறார்கள் "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று!!

ooo

Related Posts with Thumbnails