"செந்தில்... உங்க நாட்டுல கல்யாணத்த ஏற்பாடு பண்ண அமைப்புகள் இருக்கா?"
தேநீர் இடை வேளையின் பொழுது என்னைக் கேட்டார் மைக்கேல். மைக்கேல் என்னுடன் பணியாற்றி வருபவர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் தான் ஹங்கேரியில் இருந்து அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தவர். இது நாள் வரை இந்தியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெறவில்லை. இந்தியாவைப் பற்றியும் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
அலுவலகத்தில் இருந்த பெரும்பாலானோர் ஏதோ ஒரு கூட்டத்திற்குச் சென்று விட எங்களுக்கு அருகில் இருந்த இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், தொலைவில் தெரிந்த கப்பல்களையும் பார்த்த படியே காப்புசினோவைக் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்தக் கேள்வி. இந்தியாவைப் பற்றிய கேள்வி என்றவுடன் கேரளத்தைச் சேர்ந்த ப்ரியாவும் சேர்ந்து கொண்டார்.
"என்னங்க மைக்கேல்.. திடீர்னு இந்தக் கேள்வி?" என்றேன்.
"இல்லை.. நேத்து மோஹித் இந்தியாவுல இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு வந்தார். அவர் கிட்ட பேசும் பொழுது தெரிஞ்சுக்கிட்டேன்"
"ஓ.. அதுவா விசயம்?"
"ஆமா.. அவரோட மனைவியத் திருமணத் தகவல் மையம் மூலமாத் தான் பார்த்தாராம்"
"ஆமாங்க.. இது இந்தியால வழக்கமான விசயம் தான். ஏன் என்னோட திருமணம் கூட வீட்ல ஏற்பாடு செஞ்சது தான்." என்றேன்.
"என்னோடது கூட வீட்ல பார்த்த திருமணம் தான்" என்றார் ப்ரியா.
"ஓ.. எப்படி? உங்க பார்ட்னர் எப்படிப்பட்டவர்னு தெரியாமா..." என்று தயங்கினார் மைக்கேல்.
"அது அப்படித்தாங்க. காலங்காலமா இப்படித் தான் நடந்துட்டு வருது. எங்க தாத்தா, அப்பா காலத்து வரைக்கும் சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால் தெரியாத ஆளக் கட்டுறதுங்கற விசயம் எல்லாம் இல்லை. இப்ப எங்க தலைமுறைல தான் இந்தத் திருமணத் தகவல் மையங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றேன்.
"ஓஹ்.. எப்படித் தேர்ந்தெடுப்பாங்க"
"உங்கள் சிஸ்டமக் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கிட்டுமா? உங்களுக்கு சில திருமணத் தகவல் வெப்சைட்களக் காட்டறேன்"
பிறகு பாரத்மாட்ரிமோனி வலைத்தளத்தைத் திறந்து அதில் உள்ள விசயங்களை எல்லாம் காட்டினேன். ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன். அதில் ஒரு Profileஐப் பார்த்தவர்
"என்னது நோ ஸ்மோக்கர், நோ ட்ரிங்கர் என்றெல்லாம் இருக்கிறது?" என்றார்.
"ஆமாம்.. அது அந்தப் பெண்ணின் கணவராக வரவேண்டியவர் பூர்த்தி செய்ய வேண்டிய விசயங்கள். இன்னும் இந்தப் படிப்பு தான் வேண்டும். இந்த வேலையில் தான் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் போடுவார்கள்.. இது ஒரு தனி இண்டஸ்ட்ரி" என்றேன்.
"ம்ம்.. வெரி இண்ட்ரஸ்டிங்"
"முதல்ல பிரோஃபைல் மேட்ச் ஆன பிறகு, இரு குடும்பங்களும் பேசி, சந்தித்து, திருப்தியாக இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்"
"ம்ம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம்"
"உங்கள் நாட்டில் எல்லாம் எப்படி? இது போன்ற பழக்கங்கள் இருக்கா?" என்று கேட்டார் ப்ரியா.
"ஹாஹா.. இல்ல.. எங்க நாட்டுல எல்லாம் லவ் மேரேஜ் மட்டும் தான். அவங்கவங்களே பார்த்துக்குவாங்க"
"ஒரு வேளை, பெண்ணைத் தேடிப்பிடிக்கும் அளவிற்கு திறமையோ, வாய்ப்போ இல்லையென்றால்?"
"ம்ம்.. அப்படி இருக்கறவங்க கம்மி தான். அவங்க பெரும்பாலும் கல்யாணம் செஞ்சிக்காமத் தான் இருந்துடறாங்க"
"கல்யாணம் செஞ்சிக்காம இருந்திடக்கூடாதுன்னு தான் இந்தியால பெரியவங்களே அலையன்ஸ் பார்த்திடறாங்க"
"ம்ம்.. திருமணத்திற்கு முன்பு பேசுக்கொள்வீர்களா? பார்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்குமா?"
"ஹிஹி.. முன்பெல்லாம் ரொம்பக் கம்மியா இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவர நான் ஒரு தடவை தான் பார்த்தேன். 15 வருசத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அவரு வாரத்துக்கு ரெண்டு நாள் பூத்ல இருந்து கூப்பிடுவாரு. அதோட சரி"
"இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் டைம் இருக்கு. என் எங்கேஜ்மெண்டிற்கும் கல்யாணத்துக்கும் இடையில் நான்கு மாத இடைவெளி இருந்தது. பல முறை பார்த்திருக்கிறோம். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம்" என்றேன்.
"ஆனாலும் எப்படி? நாலு மாசம் போன்ல பேசறத வச்சு மனைவியா வரப்போறவரப் புரிஞ்சுக்க முடியுமா? நாங்க நாலு வருசமா பார்த்துப் பேசிப் பழகுனதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவுக்கு வந்தோம்" என்றார்.
"இந்தக் கேள்வி எங்களுக்கும் இருக்கத்தாங்க செய்யுது. ஆனா என்ன.. பெரும்பாலும் பிரச்சனை ஏதும் வர்றது இல்ல" என்றேன்..
"அப்படி எல்லாம் சொல்லாத செந்தில். காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"
"எங்க ஊர்ல எல்லா விசயங்களுமே குடும்ப உறவுகளோட இணைந்தே பார்க்கப் படும். அதனாலேயே பிரச்சனைகள் வந்தாலும், உறவினர்கள் தீர்த்துவிட்டுருவாங்க. பெருசா பிணைப்பு இல்லாதவங்க டைவர்ஸ் வரைக்கும் போறதும் உண்டு. டைவர்ஸ் வரைக்கும் போறதுல லைவ் மேரேஜ் பண்றவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க?" என்றேன்.
"யா...யா.. லவ் மேரேஜ் செய்யறவங்களும் டைவர்ஸ் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. இப்பல்லாம், கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது. என்னோட ஹங்கேரி கொல்லீக்ஸ் நிறையப் பேரு இந்த மாதிரி இருக்காங்க.."
"லிவிங்க்-டு-கெதர்.. ஸ்லோவா.. இந்தியால பிக்-அப் ஆயிட்டு இருக்கு.. ஆனா நாட்-டு-த லெவல் ஆஃப் ஈரோப்.."என்று ப்ரியா சொல்ல கூட்டத்திற்குச் சென்ற அலுவலக நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர். அவரவர் இருக்கைகளுக்கு வர ஆரம்பிக்க எங்கள் பேச்சு துண்டிக்க ஆரம்பித்தது. ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு
"ம்ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு மாதிரி பழக்கங்கள். எனக்கு இந்தியாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆர்வம். இன்னிக்கு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மாட்ரிமோனி சைட்ட என் மனைவி கிட்ட காட்டணும்" என்றார் மைக்கேல்.
"ஹாஹா.. அதக் காட்டப் போய் நெட்ல பொண்ணப் பாக்கிறியானு கேட்கப் போறாங்க.. டேக் கேர்"
"குட் பாயிண்ட் ப்ரியா. எனிவே.. தாங்க்ஸ் பட்டீஸ்.."
"இட்ஸ்.. ஓகே.. மைக்"
"சியா"
ஒவ்வொரு நாட்டினர்க்கும், மொழியினர்க்கும், மதத்தினர்க்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள். அவரவர்க்கு அந்தந்த பழக்கவழக்கங்கள் மீது அதிக பற்று, அதிக ஈடுபாடு இருக்கத்தான் செய்கிறது. பிற நாட்டினரிடம் பேசும்பொழுது அவரவர் தரப்பு கருத்துகள் வெளியாவதுடன், அவர்களது பழக்கங்களுக்கான நியாயங்களும் புரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.
இந்தியாவில் பணியாற்றிய வரை மற்ற நாட்டினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே அமீரகத்திற்கு வந்த பிறகு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது, பல விசயங்களையும் யோசிக்க உதவுகிறது.
"நம் திருமண முறை சரியானது தானா? என்ற கேள்வி உங்களுக்கு எப்பொழுதாவது வந்துள்ளதா?"


