Showing posts with label அமீரகம். Show all posts
Showing posts with label அமீரகம். Show all posts

Monday, January 3, 2011

பீர் பிரசர் + புத்தாண்டு + அமீரக விழாக்கள்


புத்தாண்டின் முதல் தினத்தைக் கொண்டாடியே தீர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. புத்தாண்டின் முந்தைய இரவில் பெரிதாக வெளியே சுற்றாமல் வீட்டில் இருத்தல் ஏதோ செய்யக் கூடாத விசயமாகத் தெரிகிறது. ஏன் வெளியில் போகவில்லை என்பதிலும் பல விசாரிப்புகள். இல்லை... "எங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தேன்" போன்ற காரணங்கள் கேட்பவர்களுக்கு சரியாகத் தோன்றுவதில்லை. இதனால் வருவது தான் "பீர் குருப் பிரசர்". Peer.. Beer அல்ல!! பீர் குரூப் பிரசரும் கல்லூரி நாட்களின் ஏற்பட்டதுண்டு. அது பீரால் வந்த பீர் குரூப் பிரசர்.

அமீரகத்தில் புத்தாண்டைக் கோலாகாலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். புர்ஜ் கலிஃபாவில் வானவேடிக்கைகள் விண்ணைத் தொட்டிருக்கிறது. புர்ஜ் கலிஃபாவின் வானவேடிக்கைகளைப் பார்வையிட என் நண்பர் மாலை 6 மணிக்கே சென்றிருக்கிறார். நிற்கக் கூட இடமில்லாமல் கூட்டம் அலைமோதியதால் மெதுவாக வெளியே வந்து வேறொரு கட்டடத்திற்குச் சென்றிருக்கிறார். எல்லாம் 3 நிமிட வானவேடிக்கைக்காக!! என் நண்பர் கூறியது.. Its worth waiting for 5 hours!! நண்பர்கள் சில லண்டன் போன்ற பெரிய நகரங்களில் ஆறேழு மணி நேரம் காத்திருந்து வானவேடிக்கைகளைப் பார்த்திருக்கிறார்கள். 

*
சென்ற மாதம் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டும் இது போல நாடெங்கும் வானவேடிக்கை காட்டினார்கள். ஷார்ஜாவின் புஹைராஹ் கார்னிஷில் அந்த வாரம் முழுவதும் கொண்டாடினார்கள். அமீரக அன்பர்களும் தங்கள் கார்களில் I LUV UAE என்று காரெங்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். சிலர் முன்பக்கக் கண்ணாடியையும் மறைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். காரணம்.. சில விஷமிகள் கொண்டாட்டத்தின் பொழுது சில ஜெல்களை கண்ணாடியில் பீய்ச்சிவிடுவதால்!!

*

வியாழக்கிழமை ஆனால், இங்கே நான் எதிர்கொள்ளும் கேள்விகளுள் ஒன்று "Whats the plan for weekend?".  ஒரு திட்டமும் இல்லையென்றாலும் அங்கே போகிறேன், இதைச் செய்யவிருக்கிறேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. "சும்மா.." வீட்டில் உட்கார்ந்து குடும்பத்துடன் ஓய்வெடுப்பதோ, நல்ல புத்தகங்களைப் படிப்பதோ Coolஆன விசயங்களாகத் தெரிவதில்லை. ரெண்டு கழுதை வயசான நமக்கே இப்படி என்றால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நிலையை யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சக மாணவர்கள் மத்தியில் நிலவும் "பீர் குரூப் பிரசரிற்காகவே" ஏதாவது ஒரு மாலிற்குக் கூட்டிச் செல்ல வேண்டியதிருக்கும். என் பள்ளி நாட்களில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வு விடுமுறையின் பொழுது தான் எங்காவது சென்றிருக்கிறேன். அப்பொழுது மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சித்தப்பா வீடும், சூலூரில் இருக்கும் அத்தை வீடும் போதுமானதாக இருந்தது. இப்பொழுது சித்தப்பா, அத்தை (எல்லாம் இருந்தால் தானே?) வீட்டிற்குச் செல்வதெல்லாம் Boreஆன விசயம். அந்த இடத்தை ஹாங்காங்கும், சிங்கப்பூரும் பிடித்து வருகிறது.

*

அமீரகத்தில் உள்ள தமிழன்பர்கள் "Whats the plan for weekend?" என்ற கேள்வியை இனி வரும் 2-3 மூன்று மாதங்கள் நல்ல முறையில் பதிலளிக்கலாம். ஆம், அமீரகத்தில் உள்ள தமிழன்பர்களுக்கான அமைப்புகள் ஆண்டு விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண, ஆண்டு விழாக்கான நுழைவுச் சீட்டை அந்தந்த அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டுகளை அமைப்பின் "உறுப்பினர்களுக்கு மட்டும்" எனவும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்றும் கொடுக்கிறார்கள். 

சில விழாக்கள் மற்றும் நாள்.

Emirates Humour Club - அமீரக நகைச்சுவை மன்றம் - ஆண்டு விழா - 21.01.11


வானலை வளர்தமிழ் மன்ற விழா - 04.02.11

சுடர்வம்சம் விழா - 11.02.11

அமீரகத் தமிழ் மன்றம் - ஆண்டு விழா - 18.02.11

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக விழா - 24.02.11

மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், தொடர்புகொள்ள வேண்டிய நபர் போன்றவற்றை அந்தந்த அமைப்புகளின் தளங்களில் பார்த்துக் கொள்ளவும்.

இது போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அமீரகத்தில் இத்தனை தமிழ் பேசும் அன்பர்கள் உள்ளனரா என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

*

Wednesday, December 22, 2010

விருந்து + சுஷி + உவ்வே

டிசம்பர் மாதம் வந்துவிட்டதை உணர வைக்கும் விசயங்களுள் குளிரிற்கும், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வருட இறுதி விருந்திற்கும்  தனி இடம். அதுவும் குளிர்கால கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன அமீரகம் என்றால் சொல்லவா வேண்டும். இது போன்ற விருந்துகளில் நடக்கும் ஆட்டங்கள் படு சுவாரஸ்யமானது. அலுவலகத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கும் உயரதிகாரிகள் எல்லாம் மெய் மறந்து (??) போடும் ஆட்டத்தைப் பார்ப்பதில் ஒரு தனி இன்பம். ஐரோப்பிய அன்பர்கள் பொதுவாகவே பார்ட்டி ஆட்டங்களில் சிறப்பாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது. விசாரித்துப் பார்த்தால் அவர்களுள் பெரும்பாலானோர் நடன வகுப்புக்குச் சென்றிருப்பது தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை மனதில் வந்தாலும், ஜோதியில் ஐக்கியமாகி நாமும் சில "சைலன்ட் டான்ஸைப்" போட்டுவிடுவது வழமை. சென்னையின் நினைவு வரும் தருணங்களுள் இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளும் ஒன்று. "ஊத்திகினு படுத்துக்கவா படுத்துக்கினு ஊத்திக்கவா"னு ரெண்டு குத்துப் போடலாம் என்றால் முடியாது. குத்து குத்து தான்.


விருந்துகளில் வழமையாகப் பல வகை உணவுகளும் பஃப்பே முறையில் வைக்கப்படும். பன்னாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் வாய்ப்பும், சுவைத்து முகம் சுளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கடந்த வாரம் நடந்த விருந்தில் ஏற்பட்டது. இந்த முறை ஜப்பானிய விருந்தகம் ஒன்றில் விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதையும் ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருந்தேன். ஜப்பானிய விருந்தகம் என்பதால் ஜப்பானிய ஸ்பெஷல் என்று அறியப்படும் "சுஷி"யைக் கொடுத்தார்கள். இது எப்படி இருக்கும் என்று எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நண்பனைக் கேட்டேன். "ஓ.. இட்ஸ் வெரி டேஸ்டி" என்று ஒரு "சுஷி"யை எடுத்து வாயில் வைத்து சப்புக் கொட்டினான். இதற்கு முன்பு ஒரு சில கொரிய உணவு வகைகளைச் சாப்பிருக்கிறேன் என்ற தைரியத்தில் (ஜப்பான் கொரியாவிற்குப் பக்கமாம்) "சுஷி"யை எடுத்து வாயில் வைத்தேன். ஒரு சின்ன அளவில் மென்று உள்ளே தள்ள முயன்றேன். வயிற்றைக் குமட்டுவது போல இருந்தது. மீனைப் பச்சையாக சாப்பாட்டினுள் வைத்து இனிப்புக் கொலுக்கட்டை ஸ்டைலில் வைத்திருந்தார்கள்(உள்ளே மீன் வெளியே சாப்பாடு). என் முகத்தைப் பார்த்த மலையாள நண்பன் "கிஃகிஃகி"என்றான். அருகே ஏதாவது மென் காகிதம் இருக்கிறதா என்று தேடி பொட்டலம் கட்டி வைத்தேன். 

ஏதாவது விருந்திற்கு செல்வதென்றால் வயிறைக் காலியாக வைப்பது கல்லூரிக் காலப் பழக்கம். அதுவும் பஃப்பே என்றால் சொல்லவா வேண்டும். கெஞ்சிய வயிறைக் பழரசங்களையும் சிக்கன் பார்ப்பிக்யூவையும் சாப்பிட்டுத் தேற்றினேன். இந்தியர்கள் பொதுவாகவே மாட்டிறைச்சியைச் சாப்பிட மாட்டார்கள் என்பதைப் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பன்றி இறைச்சிக்கும் நாம் உவ்வே சொல்லி விடுவதால் பெரும்பாலான சமயங்களில் உதவுவது சிக்கனும் ஆட்டுக்கறியும் தான். 

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்வபவர்கள் முடிந்த அளவு அந்தந்த உணவு வகைகளைச் சுவைத்துப் பழக்கப்படுத்துக் கொள்வது நல்லது. அயல்நாடுகளுக்குச் சென்றவுடன் நமக்கு ஊர் நினைவைத் தூண்டும் விசயங்களில் இரண்டாம் இடத்தில் நிற்பது உணவு தான். முதல் இடத்தில்? 

சீனாவிற்குச் செல்லும் பொழுது "வறுத்த வாத்துக்கறி" உணவகங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பீஜிங்கில் "ரோஸ்டட் டக்" மிகவும் பிரபலம். பெரிய குழுவாக சென்றோம் என்றால் நம் முன்னே வறுத்த வாத்தை முண்டமாகக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். விருந்திற்குச் சென்றவர்கள் அவரவர்க்கு வேண்டும் பாகங்களை பிரித்துச் சாப்பிடலாம். வாத்தில் பாதங்களை வைத்து செய்யப்படும் உணவுக்குச் சப்புக்கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற ரோஸ்டட் டக் உணவகங்களில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அயல்நாடுகளில் இருந்து புதிதாக வந்திருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக சிப்பந்திப் பெண்கள் வாத்துக்கறியை எப்படி சாப்பிட வேண்டும் என்று பயிற்சியளிப்பார்கள். அதாவது வாத்தை சன்னமான துண்டாக எடுத்து இனிப்பு கூழில் துடைத்து சில பொடிமாஸ்களை வைத்து வெத்தலை சுருட்டுவதைப் போல சுருட்டிக் கொடுப்பார்கள். அப்புறம் வாத்துக்கறி உள்ளே செல்லாமல் இருக்குமா?

சீனாவில் உள்ள சில கொரிய உணவகங்களில் மயக்க மூட்டப்பட்ட நிலையில் தவளையைச் சாப்பிடுவதும் (அவர்கள்) வழக்கம். உயிருள்ள தவளையை மதுபானக் குவளையில் போட்டு, சிறுது நேரத்தில் தவளை மயக்கமடந்தவுடன் எடுத்து... அதற்கு மேல் நான் சொல்ல வில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கொடுமை எல்லாம் அனுபவிக்கத் தேவையில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு சிக்கன் இருக்கும். இல்லை என்றால் மற்றதை விட்டுவிட்டு சாண்ட்விச், பீஸா என்று ரொட்டிகளின் அண்ணன் தம்பிகளுள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விடலாம்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டு உணவு முறைகளிலும் நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீனர்கள் கழுதை, மாடு என்று எதைச் சாப்பிட்டாலும் கடைசியில் சூப்பைக் குடிப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் இறைச்சியை சாப்பிட்டாலும் அதிகளவு காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அரேபியர்களின் உணவுகளிலும் பல நல்ல விசயங்களைப் பார்க்கிறேன். அயல்நாட்டில் வாழும் பொழுது அவர்கள் உணவு முறையையும் அதில் உள்ள நல்ல விசயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் பயணங்களும் விருந்துகளுக்கும் உவ்வே சொல்லாமல் இருக்கலாம்.

Monday, October 4, 2010

அமீரக நகைச்சுவை மன்றம் + சேட்டை அரங்கம்.

நகைச்சுவையை விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா?

அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதற்கான காரணம் நகைச்சுவை மீதிருக்கும் ஆர்வமே!! 'மதுரை முத்து அசத்தறாரப்பா, சிவ கார்த்திகேயன் கலக்கறாரப்பா' என்றெல்லாம் சொல்லும் பொழுது 'அவர்களைப் போலெல்லாம் மேடையேறிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முடியுமா என்ற பிரமிப்பும் இருக்கத்தான் செய்கிறது. நம்மில் பலரிற்கு மேடை ஏறுவதென்றால் ஏதோ பாகற்காயைச் சாப்பிடுவது போல..

இந்தப் பாகற்காயை எளிதாக 'சிரிக்கச் சிரிக்க' சாப்பிட வைப்பதே அமீரக நகைச்சுவை மன்றத்தின் வேலை.




"நாம் சிரிக்கும் பொழுது உலகமே நம்முடன் சிரிக்கும். நாம் அழும் பொழுது, தனியாகவே கண்ணிர் சிந்த வேண்டியதிருக்கும்" என்பதை நம்பும் அமீரக நகைச்சுவை மன்றத்தினர் (Emirates Humour Club), அனைவருக்கும் சிரிப்பு மருந்தைத் தருவதையும், சிரிப்பு மருத்தைத் தரக் கற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். அமீரக நகைச்சுவை மன்றம் துபாயில் அமைந்துள்ளது. மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் தமிழ் பேசும் அன்பர்களுக்காகவும், மூன்றாவது வார வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலம் பேசும் அன்பர்களுக்காகவும் நகைச்சுவைக் கூட்டம் கூடுகிறது. 


நகைச்சுவை மன்றக் கூட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் கருத்துகளை மேடையேறிக் கூறிவதைப் பார்க்க முடியும். சிரிப்பதற்காகவே கூடும் கூட்டமென்பதால் பாலியல், மதம் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு மட்டும் தடை. நகைச்சுவை மன்றக் கூட்டத்திற்கு வருவோர் செய்ய வேண்டியது, நல்ல நகைச்சுவைத் துணுக்குகளை எடுத்து வருவது தான். மேடையேற பயமிருந்தால் மேடையேறுபவரை உற்சாகப்படுத்த கரவொலிகளை எழுப்பினால் போதும். இக்கூட்டங்களுக்கு வருபவர்கள் நாளடைவில் பயமின்றி மேடையேறுவதையும் பார்க்க முடியும்.

அமீரகம் போன்ற அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்குத் தம்மக்களை ஒரு சேரப் பார்க்க நேர்வதே அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் விசயம். அதுவும் நகைச்சுவைக் கூட்டமென்றால் சொல்லவா வேண்டும்?

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமீரகத்தில் வாழ நேர்ந்தால் அவர்களுக்கு இம்மன்றத்தினை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்!! மாதத்திற்கொரு முறை பழக்கப்பட்ட முகங்களுடன் சிரித்து மாலைப் பொழுதைக் கழிப்பது அலாதியானது தானே!!




சேட்டை அரங்கம்..


அக்டோபர் 1ம் தேதி, சென்ற வெள்ளிக்கிழமையன்று நகைச்சுவை மன்றம், 'சேட்டை அரங்கம்' என்ற நகைச்சுவைப் பேச்சு மன்ற நிகழ்ச்சியை துபாய் அல்-கிசைஸில் உள்ள ஆப்பிள் இண்டர்நேசனல் பள்ளி அரங்கத்தில் நடத்தினர்.


1. கலகலப்பான குடும்ப வாழ்க்கைக்கு நகைச்சுவையே பிரதானம்
2. அமர்க்களமான அலுவலக வாழ்க்கைக்கு நகைச்சுவையே அச்சாணி
3. நகைச்சுவை என்பது பொழுதுபோக்கு மட்டுமே
என்ற தலைப்புகளில் மூன்று அணிகளாகப் பிரிந்து தங்கள் தரப்பு வாதங்களை வழங்கினர்.


ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்திற்கு வலு சேர்க்க நகைச்சுவையான நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும் விளக்கி வாதத்தை வைத்தது அரங்கத்தைச் சிரிப்பலைகளில் மூழ்கடித்தது. நடுவர் குணா அவர்கள் தனது  அனுபவக் குறிப்புகள் மற்றும் துணுக்குகளுடன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திச் சென்றார்.

ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் எந்திரன் படம் வெளியாகியிருந்தாலும் ஏறக்குறைய 150 பேர் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது சிறப்பு.


சேட்டை அரங்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுள் பலரிற்கு இதுவே 'முதல் மேடை' என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில், முதன்முறையாக மேடையேறிய நிறைவைப் பங்கேற்றவர்கள் முகத்திலும், நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்தத நிறைவைப் பார்வையாளர்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கிய அமீரக நகைச்சுவை மன்றத்தினர்க்குப் பாராட்டுகள்!!

**

அமீரக நகைச்சுவை மன்றத்தின் இணையதள முகவரி கீழே..

http://www.emirateshumourclub.net/

**

Thursday, September 9, 2010

வாடகை வீடு - அமீரகம், சென்னை - நடைமுறைகள் பற்றிய அலசல்!!

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறீர்களா? குடியிருக்கிறீர்களா? 

இது உங்களுக்கான பதிவு. சென்னையில் வாடகை வீட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அமீரகத்தில் கிடைத்திருக்கும் மாறுபட்ட அனுபவமும், அமீரகத்தில் இருப்பது போன்ற முறை நம் ஊர்களில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.

சென்னையைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதியிருக்கிறது எனக்கு?

உடுமலையைச் சேர்ந்த நான் படித்தது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில். படித்து முடித்த பிறகு சில வருடங்கள் பல ஊர்களில் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து மூன்று வருடம் வாடகை வீட்டில் வசித்தவன், குடித்தனம் நடத்தியவன். கல்லூரி விடுதியில் இருந்த பொழுது வாடகை வீட்டில் குடியிருக்காவிட்டாலும், அருகே இருந்து அவதானிக்கும் வாய்ப்பு பெற்றவன். பிறகு அனைவருக்கும் ஏற்பட்ட எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று வாடகை வீட்டில் குடியிருந்தவன் என்ற முறையில் வாடகை வீடுகளில் நடக்கும் விசயங்களை நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.

வாடகைக்கு வீடுகள் தேடுவதென்பது ஒரு தனி கலை என்றே கூறலாம். சுலேகா, ப்ரீ ஆட்ஸ் அல்லது ஹிந்து கிஸாசிபைட்ஸ் போன்ற ஊடகங்களில் தேடுவது தான் முதல் படி. ஞாயிற்றுக்கிழமை நாளிதழைப் பார்த்து நமக்கு தோதான வீடு உள்ளது என்று அறிந்தவுடன் தொடர்பு எண்ணிற்கு அழைத்தால் "நீங்கள் அழைத்த எண் பிஸியாக உள்ளது" என்று கேட்கும். விடாமுயற்சியாக எண்ணைத் தொடர்பு கொண்டால் "ஏற்கனவே நான்கைந்து பேர் பேசிவிட்டார்கள்" என்று கூறி தலை கிர்ரேன்று சுற்றுவது போன்ற வாடகையைக் கூறுவார்கள். சரி நேரில் சென்று பார்ப்போம் என்று பார்த்தால், ஒரு 10அடிக்கு 8அடி அளவுள்ள கூடம், 7அடிக்கு 8அடி படுக்கையறை, 6அடிக்கு 5அடி சமையலறை என்று ஒரு வீட்டைக்காட்டுவார்கள். அல்லது காட்டும் வீடு சாலையின் கீழே இருக்கும். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் மழைக்காலத்தில் வீட்டின் பாதி மூழ்கியிருக்கும் என்பது புரியும். நாளிதழில் வரும் பெரும்பாலான வீடுகள் இப்படியே என்பது நான்கைந்து நாட்கள் வீடுகளைப் பார்த்த பிறகு விளங்கும்.

கொஞ்சம் சுதாரித்து, நாளிதழ்களைத் தேடுவது பயனற்றது என்று புரிந்து ஏதாவது ஒரு தரகரையோ, தரகு நிறுவனத்தையோ அனுகுவது அடுத்த நிலை. "நீங்க எதிர்பார்க்கற வாடகையில், ஏரியாவில் வீடு கிடைப்பது கஷ்டம் தான். உங்களுக்காகப் பார்க்கிறோம்" என்ற தரகரின் பொன்மொழியைக் கேட்டுவிட்டு அவரது அழைப்பிற்குக் காத்திருக்க வேண்டும். ஓரிரு நாட்கள் கழித்து ஏதாவதொரு வீட்டைக் காட்டுகிறேன் என்று சொல்லி வேறொரு தரகரிடம் கூட்டிச் செல்வார். பிறகு நாம் எதிர்பார்த்ததை விட 20% அதிக வாடகைக்கு ஒரு வீட்டைக் காட்டுவார். நமக்கு வீடு தருவதற்கான விதிகளில் 10 மாத முன்பணம், ஒரு மாதம் தரகுக் கட்டணம் என்றெல்லாம் ஒத்துக்கொண்டு வீட்டை வாடகைக்கு எடுத்தால் அப்பாடா என்று இருக்கும்.

இங்கே தான் எனக்கு பல ஐயங்களையும் அமீரக அனுபவங்களையும் பகிர்வது முக்கியமாகப்படுகிறது.

வீட்டை ஒரு வாடகைக்கு எடுக்கிறோம். அந்த வாடகையை எப்படி உடன்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம்?

ஓரளவு நம்பிக்கையானவராகப் படும் வீட்டு உரிமையாளர் 20ரூ பத்திரத்தில் வீட்டு வாடகையில் ஆரம்பித்து எத்தனை பேர் குடியிருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் எழுதி இருவரும் கையெழுத்திட்டுக்கொள்கிறோம். இந்தப் பத்திரத்தை எந்த பதிவாளர் அலுவலகத்திலோ நகராட்சி அலுவலகத்திலோ பதிவு செய்வது கிடையாது. நாம் முன்பணம் செலுத்தியது, வாடகைக்கு ஒப்பந்தமிட்டது எல்லாமே இருவருக்கும் ஏதாவது ஒரு மூன்றாமவர்க்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. 

இப்படி இருக்க, வீட்டைக் காலி செய்யும் பொழுது நாம் செலுத்திய முன்பணத்தை இயல்பாகப் பெற முடிகிறதா? ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டு வாடகையை உயர்த்தினால் எங்கே உரிமைக்கென புகார் செய்வது? வாடகைக்குக் குடியிருப்போர்க்கான உரிமைகளை எப்படிப் பெறுவது?

நுகர்வோர் தொடர்பான இந்தக் கேள்விகளுக்கு விடையிருந்தால் அன்பர்கள் பின்னூட்டமிடுங்கள்!!


உள்நாட்டில் வாழ்பவர்களுக்கே வாடகைக்கு வீடு எடுப்பதில் இவ்வளவு சிக்கல்கள் / தலைவலிகள் இருக்கும் பொழுது இந்தியர்கள் அதிகமாக வாழும் அமீரகத்தில் வீடு எடுப்பது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது?  என்னென்ன வழிமுறைகள் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன?

அமீரகத்தில் வீடு தேடுவதென்பது பெரும்பாலும் இணையத்திலோ, நாளிதழ்களில் காணப்படும் வாடகைக்குள்ள வீடுகளைப் பற்றி தெரிந்து கொண்டும், அக்கம்பக்கத்திலும், வீட்டு காவலர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளப்படுகின்றன. பிறகு காலியாக உள்ள வீட்டைப்பார்த்துவிட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்று முடிவெடுக்கும் வரை இந்தியாவில் உள்ள வழிமுறை தான். பிறகு தான் உள்ளன வீட்டை வாடகைக்கு எடுப்பதில் உள்ள மாறுபாடுகள்.

வீட்டை வாடகைக்கு எடுக்கும் வருடாந்தரத் தொகையை நான்காகவோ ஆறாகவோ பிரித்து காசோலைகளைத் தரவேண்டும். வருடத்திற்கு நான்கு காசோலைகள் என்றால் 1,4,7,10ம் மாதத்தில் காசோலைகளில் பணமெடுக்கப்படும். ஆகவே அமீரகத்தில் முன்பணம் என்பது கிடையாது என்றோ.. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாடகைப் பணம் செலுத்தப்படுகிறது என்றோ எடுத்துக்கொள்ளலாம். நாம் கொடுத்த காசோலைகளின் எண்களைக் குறிப்பிட்டு வருடத்திற்கென ஒரு ரசீதைக் கொடுப்பது வழக்கம்.

இத்துடன் நாம் வீட்டை வாடகைக்கு எடுத்துவிட முடியாது.

நாம் பணம் செலுத்திய விவரத்திய எடுத்துக்கொண்டு வீட்டு வாடகை ஒப்பந்தந்தை (Rental Contract) எடுத்துச் சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் உரிமைத் ( Consumer Rights Cell) துறையில் ஒரு கட்டணத்தைக் கட்டி பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்வதன் மூலம் வீட்டை ஒரு வருடத்திற்கு முன்பே காலி செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் எளிதாக காசோலையைப் பெற இயலும். நாம் பதிவு செய்த பின் வீட்டின் உரிமையாளர் பெயர் வாடகைக்கு எடுப்பவர் பெயர் இரண்டும் குறிப்பிடப்பட்டு ஒரு படிவம் தரப்படும்.

நகராட்சியில் பதிவு செய்ததன் படிவத்தை எடுத்துச் சென்று தண்ணிர், மின்சாரம், எரிபொருள் வழங்கும் துறையில் சமர்ப்பித்தால் தான் நாம் எடுக்கும் வீட்டிற்கு மேலே குறிப்பிட்ட மின்சாரம், தண்ணிர், எரிபொருள் எல்லாம் விநியோகம் செய்யப்படும். நமக்கு வரும் மாதாந்தர ரசீதிலும் நம் பெயரும் வீட்டில் உரிமையாளரின் பெயரும் இடம் பெறும். நாம் வீட்டைக் காலி செய்யும் பொழுதும் முதலில் நகராட்சியில் விண்ணப்பித்து, பிறகு மின்சாரம், தண்ணிர் போன்ற சேவைகளைத் துண்டிக்க முடியும்.

அமீரகத்தில் எந்தத் தேவையாக இருந்தாலும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டினால் தான் பெற முடியும். தனியாக வாழ்பவர் தங்கள் குடும்பத்தை அழைப்பதாக இருந்தாலும், பெற்றோரை அழைப்பதாக இருந்தாலும், வீட்டு வேலை செய்ய ஆளைப் பணியமர்த்துவதற்கும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டியாக வேண்டும். வீட்டு உரிமையாளர் நம்மைக் காலி செய்ய நினைத்தாலும் போதிய கால அவகாசம் கொடுத்தாக வேண்டும். இது தான் நடைமுறை!!

*

அமீரகத்தில் உள்ள நடைமுறைகளை நம் ஊரில் உள்ள நடைமுறைகளோடு ஒப்பிடுவது சரியாகாது தான். ஆனால் வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்கு நம் ஊரில் எந்த விதமான உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிற்கு வரும் மின்னட்டைகள், தண்ணிர் கட்டணம் முதலியவையில் எல்லாம் வீட்டு உரிமையாளரின் பெயரே இடம்பெறும். நாம் அந்த வீட்டில் தான் குடியிருக்கிறோம், இத்தனை முன்பணம் கொடுத்தோம் என்பதற்கு எல்லாம் எந்த விதமான ஆதரமோ, சான்றிதழோ இருப்பதாகத் தெரியவில்லை.

சொந்த ஊரில் இருந்து பெருநகரங்களுக்கு இடம்பெயர்வது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் வாடகைக்கு வீடு எடுப்பவர்களின் நலனிற்கு ஏதாவது வழிமுறை செய்தால் நன்றாக இருக்குமே!! குறைந்தது நாம் ஒப்பந்தமிடும் வாடகை, முன்பணத்தையெல்லாம் குறிப்பிட்டு நகராட்சி அலுவலகங்கள் சான்றிதழ்களை வழங்கினால் இருவருக்கும் நல்ல ஆதாரமாக இருக்குமே!! அதை வைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டர், தொலைபேசிச் சேவை இணைப்பு போன்றவற்றைப் பெற வசதியாக இருக்குமே!! 

"இருக்கற வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே முடிவதில்லை. இதையும் எங்கே சேர்ப்பது" என்ற குரல் கேட்காமல் இல்லை. காலத்திற்கேற்ப மாறுதல்களைக் கொண்டு வந்தால் தானே நல்லது. சென்னை நகரம் தொழில்துறையில் முன்னேறுகிறது என்றெல்லாம் கூப்பாடு போடும் வேளையில், வெளியூர்களில் இருந்தெல்லாம் தொழில்துறையில் பணியாற்றவருபவர்களையும் கருத்தில் கொண்டால் தானே அனைவருக்கும் பலனளிக்கும்?

Sunday, September 5, 2010

கேபிள் - சில எண்ணங்கள்!!

"Problem of plenty" என்ற ஆங்கிலச் சொலவடை நம் தொலைக்காட்சிச் சேனல்களுக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற முறை ஊரிற்குச் சென்ற பொழுது வீட்டில் காணக்கிடைத்த தமிழ்ச்சேனல்களின் எண்ணிக்கை 25 முதல் 30ஐத் தொடலாம். முப்பது சேனல்கள் கிடைப்பதாலேயே ஒரு வித பரபரப்பு மனதில் படற ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சேனலில் வரும் நிகழ்ச்சி அல்லது பாடல் சரியில்லை என்றால் அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்ததில் என்ன.. என்ன என்ன.. என்ற தேடிக்கொண்டே சென்று ஏதாவது ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.

இப்பொழுது ரிமோட் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டிகள் வருவதேயில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பார்க்க முடிந்த ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளும், கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளும் இன்று, ஒன்று, வீட்டு அட்டாலியில் இருக்கலாம் அல்லது மண்ணை மாசாக்கியிருக்கலாம். அப்படி ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டில் வைத்திருந்த பொழுது இப்பொழுது மாற்றிய அளவிற்கு மாற்ற முடியாது. தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே சென்று "படக் படக்"கென மாற்ற வேண்டியதிருக்கும். சாலிடெர் போன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் இருந்தது போல "பட்டன்' இல்லாததால், வட்ட வடிவில் திருப்ப வேண்டியதிருக்கும். நான் திருப்பியதில் எத்தனையோ முறை திருப்புலியை மாற்றியும் இருக்கிறோம். ரிமோட் இல்லாத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தது போல இப்பொழுது இல்லை. 

கல்லூரிக் காலத்தில், விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு ரிமோட் இருந்தாலும் நண்பர்களின் தொடர் பயன்பாட்டிற்குப் பிறகு பொத்தான்கள் அனைத்தும் தேய்ந்து போய் விடும். பிறகு பூட்டு போடப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் கதவை நீக்க கம்பியை வளைத்து சேனல்களை மாற்றிய காலமெல்லாம் உண்டு. அது போன்ற நேரத்தில் சுற்று முறையில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக அமர்த்தப்படுவதும் உண்டு. ரிமோட் இல்லாத நாட்களில் வீட்டில் நான் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக இருந்ததுண்டு. எத்தனை முறை தான் எழுந்து சென்று சேனல்களை மாற்றுவது என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால், அப்பொழுதும் அதிகபட்சமாக ஆறேழு தமிழ்த் தொலைக்காட்சிகள், சில விளையாட்டுச் சேனல்கள் இருந்ததுண்டு. இப்பொழுது அளவிற்கு இருந்ததில்லை. 

சேனல்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது தான் உண்மை. சேனல்களை வசதிகள் அல்லது வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்றைய வாய்ப்புகள், வசதிகள் எல்லாமே நம் பொறுமையைச் சோதிப்பவையாகவே இருக்கின்றன. +95 போட்டு தொலைதூர அழைப்புகள் பேசியதில் இருந்த சுவாரஸ்யம் இன்று ஏனோ அலேபேசிகளில் பேசும் பொழுது இருப்பதாகத் தெரிவதில்லை. அலைபேசிகள் நமக்கு வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாலாட்டும் நாயைப் போல வைக்க வேண்டிய பணிச்சூழல்!! விடுமுறை நாட்களின் பொழுதும் "அவசரம் என்றால் என் எண்ணில் குறுந்தகவல்கள் அனுப்புங்கள்" என்று போட வேண்டிய கட்டாயம். அலைபேசிகளைத் தான் நம்மால் எதுவும் செய்ய முடிவில்லை, இந்த தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையையாவது ஏதாவது செய்ய முடியுமா? 

தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்பு அமீரகத்தின் எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play என்ற சேவைக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் பெற ஆரம்பித்துள்ளேன். அதனால் நான் பெற்ற பயனைக் கூறும் முன்பு E-Life - Triple Play பற்றி சில பத்திகள்.

o

முந்தைய பத்தியில் "எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play" என்று குறிப்பிட்டிருந்தேன். அதென்ன Triple Play?


வீட்டில் தொலைப்பேசி, இணைய அகண்ட அலைவரிசை( ப்ராட்பேண்ட் ) வசதி மற்றும் கேபிள் வசதியை இணைக்கும் சேவை தான் Triple Play சேவை. வீட்டில் ஒரு ரிசீவரை வைத்துவிட்டால் போதுமானது. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும் நம் வசதிக்கேற்ப!! இது போன்று இணையம், தொலைபேசி, கேபிள் மூன்றையும் ஒரே நிறுவனமே வழங்கும் சேவை இந்தியாவில் வருவதற்கு நீண்ட நாட்களாகாது என்றே தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இன்று இருப்பது போல இணையத்திற்கு ஏர்டெல், கேபிளிற்கு சுமங்கலி, தொலைப்பேசிக்கு பி.எஸ்.என்.எல் என்ற நிலையெல்லாம் மாறி ஏதாவது ஒரு நிறுவனமே மூன்று சேவையையுமே வழங்கும் நிலை வந்துவிடும். 

இப்படி ஒரு சேவை வந்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

கேபிள், இணைய வசதி, தொலைப்பேசி என்று ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதச் சந்தா கட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தும் ஒரு குடையின் கீழ்!! மூன்றையும் ஒரு நிறுவனமே வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு எந்த சேவை அதிகபட்சமாகத் தேவைப்படுகிறதோ அதைத் தெரிவு செய்து பயன்பெறலாம். உதாரணம்.. ஒருவருக்கு இணையவசதியே முக்கியமாக இருக்கலாம். சிலருக்கு கேபிள் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். 

எப்பொழுது இது போன்ற சேவைகள் வரும்?
o

மேலே குறிப்பிட்ட E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள், 8MBPS என்ற அளவிற்கு அதிவேக இணைய வசதி மற்றும் தொலைப்பேசிச் சேவை. தொலைக்காட்சிச் சேனல்களைத் தேர்வு செய்ததில் தமிழில் சன் டிவி, ஆங்கிலத்தில் சர்வதேச செய்திச்சேனல்கள், ஃபாக்ஸ், எம்.பி.சி போன்ற திரைப்படங்கள் சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், என்.ஜி.சி என்று  சில சேனல்கள் மட்டும் என் கணக்கிற்கு வரும்படி தேர்ந்தெடுத்துள்ளேன். சேனல்கள் குறைந்தவுடன் ரிமோட்டில் விளையாடுவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி எண்ணிக்கையைக் குறைத்துப் பாருங்களேன். குறைந்தது சில சேனல்களைப் "பேரண்டல் லாக்" மூலம் முடக்கி வைத்துப்பாருங்களேன்!!

தொலைக்காட்சியை பார்க்கும் நேரமும் குறைய ஆரம்பித்துள்ளதால் நான் என்ன இழந்துள்ளேன்? 

ஒன்றுமில்லை!! வீட்டில் யானியும், ராஜாங்கமும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. "அப்பாடா" என்ற பெருமூச்சை ரிமோட்டிடம் இருந்து கேட்கமுடிகிறது.

Tuesday, August 31, 2010

அமீரக வாகன ஓட்டுனர் உரிமம். - அனுபவப் பகிர்வு!!


அமீரகம் வந்தவுடன் "அலுவலக நண்பர்கள் எப்பொழுது ஓட்டுனர் உரிமம் எடுக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்புவார்கள்.

"இப்பொழுது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லை. அதனால் ஓரிரு வருடங்கள் கழித்து எடுக்கவேண்டும்" என்று பதிலளிப்பேன்.

"இப்பொழுதே ஆரம்பித்துவிடுங்கள்.. அப்பொழுது தான் சரியாக இருக்கும்" என்று நமட்டுச் சிரிப்புடன் கூறுவார்கள்.

*

அமீரகத்திற்கு வந்த பொழுது நாளிதழ்களின் வேலைவாய்ப்புச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, "விற்பனை தொடர்பான வேலைகளுக்கு ஓட்டுனர் உரிமம் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள்" என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

"நம் ஊரில் இரு சக்கர வாகனம் உள்ளதா என்று தான் கேட்பார்கள். இங்கே என்ன ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதென்ன அவ்வளவு கடினமான விசயமா?" என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்த எண்ணம் எல்லாம் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வரை தான்

*

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு நம்மை ஏதோ பாரபட்சமாக நடத்துவது போன்ற எண்ணம் எழும். மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் "அந்நாட்டு ஓட்டுனர் உரிமத்தைக்" காட்டி அமீரக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் நாட்டு ஓட்டு உரிமத்திற்கு (சர்வதேச உரிமமாக இருந்தாலும்) எள்ளளவும் மரியாதை கிடையாது. ஓரே ஒரு சலுகை மட்டும் உண்டு. நம் நாட்டு ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால், அமலில் உள்ள ஆண்டுகளைப் பொருத்து பயிற்சி வகுப்புகள் குறையலாம். அவ்வளவு தான். 

அப்படி பயிற்சி வகுப்புகளைக் குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள், "தொடர்ந்து வாகனம் ஓட்டுபவராக" இருந்தால் தேவலாம். ஆடிக்கொருக்கா.. அம்மாவாசைக்கு ஒருக்கா வண்டிய எடுத்தவங்க எல்லாம் எனக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கு.. பயிற்சி வகுப்புகளைக் குறையுங்கள் என்று கேட்டால்.. "வினை காத்திருக்கிறது" என்று அர்த்தம்.

*

ஓட்டுனர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பித்து வகுப்புகள் ஆரம்பித்த பிறகு, பயிற்சியாளர் நம்மை  வாகனம் ஓட்டுங்கள் என்பார். நாம் தான் நம்மூரில் வண்டியை ஓட்டியிருக்கிறோமே என்று ஸ்டீரிங்கைப் பிடித்தால்..பயிற்சியாளர் நம்மிடம்

"காசு கொடுத்து லைசன்ஸ் வாங்குனியா?" என்று நக்கலடிப்பார்.

நம்ம ஏதோ ஸ்டைலா ஸ்டீரிங் பிடிக்கறதா நினைச்சு வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு.. ஸ்டீரிங்கை எப்படிப் பிடிக்கிறது என்பதில் இருந்து ஆரம்பிப்பார்.

சாலையில் போறவர்களை "ஹாரன் அடித்து பயமுறுத்திப் பழகிய" நமக்கு "தேவையில்லாமல் ஹாரன் அடிக்காதே" என்பதே புதிதாக இருக்கும். அப்படியே இடப்பக்கம் எப்படித் திருப்புவது, வலப்பக்கம் எப்படித் திருப்புவது, லேன் மாற்றுவது, ரவுண்ட் டானாவில் திரும்புவது என்றெல்லாம் வகுப்புகளை எடுத்த பிறகு வாகனத்தைப் பார்க்கிங் செய்வது, சிக்னல் தேர்வு என்று சில தேர்வுகளில் தேறினால் கடைநிலைத் தேர்விற்கு தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.

*

காலையில் எட்டு மணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் தேர்வு நடக்கும். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் என்றால்.. "தேர்வில் சோதிக்க வேண்டிய விசயங்களான இடப்பக்கம், வலப்பக்கம், 90 டிகிரி பார்க்கிங், லேன் மாற்றம், ரவுண்டானா  என்று எல்லாவற்றையும் சோதிக்கும் வகையில் சாலைகள்" இருக்கும். நான் உடுமலையில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் எடுக்க, வண்டிய ஓட்டியது (நிஜமா.. நம்புங்கப்பா..) வாகனங்கள் ஓட்டம் அதிகம் இல்லாத உடுமலை - மூணாறு சாலையில்.. அதுவும் ஒரு 100 மீட்டர் அவ்வளவு தான். இங்கே??

எட்டு மணித் தேர்விற்கு காலை ஏழரை ( மணியே சொல்லிடுச்சு) மணிக்குப் தேர்வு மையத்திற்குச் சென்றால்.. பேய் அறைந்தது போல் ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். அவர்களிடம் மெதுவாக "எத்தனாவது  தேர்வு என்றால்?" "எட்டு முடிஞ்சிடுச்சு" என்று பெருமூச்சு விடுவார்கள். நாங்க எல்லாம் (சிங்கம்டா ) முதன் முறையே பாஸாகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்தால் "செந்தி லவெலன்" என்று கூப்பிடுவார்கள். நம் பெயரைத் தான் அழைக்கிறார்கள் என்று எழுந்தால் நம்முடன் இன்னும் மூன்று பேரை தேர்விற்கு அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

நம் முறை வந்த பிறகு வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து லெஃப்ட், ரைட்டு என்று ஓட்டும் பொழுது "நமக்கு ஏழறையாக" சில பிக் அப் லாரிகள் வந்து பயமுறுத்தி விடுவார்கள். நாம் வண்டியைத் திருப்பும் முன்பு கண்ணாடியைப் பார்க்கமலோ, சிக்னல் காட்டமலோ (நம் ஊர் பழக்கத்தில்) எடுத்துவிட்டால் தேர்வாளர் வாகனத்தை நிறுத்தி இறக்கிவிடுவார். பிறகு கஜினி முகம்மது மாதிரி படையெடுக்க வேண்டியது தான்.

"ஏம்பா.. என்னய அடிக்கிறேன்னு சொன்னீங்க.. இதோ வந்திட்டேன்" என்று அடுத்தடுத்து தேர்விற்குச் செல்ல ஆரம்பித்துவிடுவோம். இந்த முறை நன்றாக ஓட்டியுள்ளோம் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், நாம் கவனிக்காத தவறுகளால் தேர்வில் தோல்வியடைந்து, தவறுகளைச் சரி செய்யும் பொழுது நான்கைந்து தேர்வுகளையும் இந்திய மதிப்பில் ஒரு இலட்ச ரூபாயையும் செலவளித்திருப்போம். ( இந்தக் காசுக்கு நம்மூருல ஒரு பழைய மாருதி வாங்கியிருக்கலாம்னு சொல்றது கேக்குது.)

எல்லாம் முடிந்து தேர்வில் தேறிவிட்டோம் என்ற முடிவு தெரியும் பொழுது... " ஆத்தாஆஆஆஆஆ.. நான் பாஸாயிட்டேன்" என்று கத்த வேண்டும் போல் இருக்கும். ஆம்.. இரு தினங்களுக்கு முன்பு தான் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். ஐந்து முறை தோல்வியடைந்த பிறகு... பத்தாவது, பதினைந்தாவது முறை என்றெல்லாம் விடாமுயற்சியுடன் தேர்விற்குச் செல்பவர்கள் முன் என் ஆறாவது முறை பெரிய விசயமல்ல!!

*

பெரும்பாலான சாலைகளின் இரண்டு புறமும் நாலு முதல் ஆறு வழிப்பாதைகள். பல சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்கள் என்று, சில நொடி கவனம் சிதறினாலும் பெரிய சேதம் ஏற்பட்டுவிடும் என்பதே இவ்வளவு கடினமான தேர்வு முறைகளை வைத்திருக்கிறார்கள்.

"மூன்று வழிப்பாதைகளை நான்கு அல்லது ஐந்து வழிப்பாதைகளாக மாற்றிக் காட்டும் நம்மவர்களுக்கு இது போல கடினமான தேர்வுமுறைகள் வைத்தால் என்ன?" என்று நடைமுறையில் சாத்தியமில்லாத விசயங்களை சிலவமயம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

*

இந்தப் பக்கத்தில் இனி அவ்வப்பொழுது சாலை விதிகள்  பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கலாம்.. (ஹூக்கும்.. இது வேறயா..)

Friday, August 27, 2010

அமீரக இரவும் நிலவும்!!

அமீரகத்தில் ஒரு இரவு நேரம். மணி பத்தாகிறது. வீட்டின் பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் வாகனங்கள் பரப்பாய் சென்று கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எப்பொழுது தான் இரவு ஆரம்பிக்கும். இந்தியாவில் இருந்து அயல்நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் என் உடல் அமீரக வாழ்க்கை முறைக்கு பழகவில்லை. பொழுது சாய்ந்து சில மணி நேரத்தில் தூங்க வேண்டும் என்று பழக்கப்பட்டதாலோ என்னவோ உடலும் பொழுது சாய்ந்தவுடன் நித்திரையைத் தழுவ ஆரம்பித்துவிடுகிறது உடல். இரவு என்றாலே நினைவிற்கு வருவன அமைதியும், இனிமையான தென்றலும், விண்மீன்களும் தானே. அமீரக வாசிகளுக்கு இரவு என்பதை எவ்வாறு சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?


நூறு அடி தொலைவில் பரப்பான சாலையைப் பார்த்ததில் ஏற்பட்ட அயற்சியால் கண்கள் ஐநூறு அடி தொலைவிற்குச் செல்கின்றன. அமைதியான உள்ளிழுப்புக் கடலும், அதில் செல்லும் படகும் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. கண்கள் ஐநூறு அடிக்குச் சென்றவுடன் காதுகளும் அமைதியை உணர்கின்றன. தொலைவில் ஒரு பரப்பான சாலை தெரிகிறது. அங்கும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆனால் அவற்றின் சத்தமோ இரைச்சலோ கேட்கவில்லை. தொலைவில் செல்லும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது கண்களுக்கு!! அதே இரைச்சல், அதே வாகனங்கள் ஆனால் இருவேறு உணர்வு. அருகில் இருக்கும் விசயத்தை விட தொலைவில் இருக்கும் விசயம் எவ்வளவு அழகாகத் தெரிகின்றன. இதைத் தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிறார்களோ?

பால்கனியில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், அமீரக வெப்பத்தை மேலும் கூட்டுகிறது. ஐநூறு அடி தொலைவில் இருந்து கண்கள் 15 அடிக்கு மாறுகிறது. அருகில் இருக்கும் வீடுகளில் எவரும் வெளியே இல்லை. எல்லாக் கதவுகளும் மூடியே இருக்கின்றன. இவர்கள் எவருக்கும் வேடிக்கை பார்ப்பதே பிடிக்காதோ? 

இன்றெல்லாம் நாம் வேடிக்கை பார்ப்பதை மறந்துவிட்டோம் என்றே கூற வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்வோர், பாதசாரிகள், உணவகத்தில் சாப்பிடுபவர் என அனைவரும், கைகளில் உள்ள திரையையே வெறித்துப் பார்க்கப் பழகிவிட்டோம். செல்பேசித் திரை, கணினித் திரை, சின்னத்திரை என்று திரைகளைப் பார்க்கப் பழகி, வேடிக்கை பார்ப்பதைக் குறைத்துவிடுவதால் கற்பனைத்திறனிற்கும் திரை போட ஆரம்பித்துவிடுகிறோம். 

நீண்ட நேரம் வெளியில் நின்றதால் வியர்க்க ஆரம்பிக்கிறது. வெளியே வெப்பக்காற்றைக் கக்கும் குளிரூட்டி என்னை உள்ளே இழுக்கிறது. உள்ளே வந்தவுடன் வெப்பம் அந்நியமாகிறது. கதவை வேகமாக மூடுகிறேன். வாகனங்களின் இரைச்சல், குளிரூட்டியின் சத்தம் என்று எதுவுமே கேட்காததால் ஒரு அமைதியை உணர முடிகிறது. இதமாகக் குளிரூட்டியின் காற்று என்னை வருட மனது "ராஜாங்கத்தைக்" கேட்க விரும்புகிறது. இரவு நேரங்களில் கேட்பதற்காகவே வைத்திருக்கும் பாடல் வரிசையைக் காற்றில் தவழ விடுகிறேன்.

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

கண்கள் சொருகுகின்றன. அப்படியே பாடலுடன் மனதும் ஊரிற்குச் செல்கின்றது. அழகான இரவுப்பொழுது.. எங்கள் வீட்டுமாடியில் தென்றல் தழுவ நடக்க ஆரம்பிக்கின்றேன். மேகங்கள் இல்லாத தெளிவான வானம். அழகாக நிலா என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. வீட்டைச் சுற்றியிருக்கும் தென்னைமரக் கிளைகளின் நடுவே நிலா ஒளிந்து விளையாடுகிறது. சீரான வேகத்தில் காற்று வீச, மரக்கிளையும் சீராக சிரங்களையாட்ட, நிலவும் சீராகக் கண்ணடிக்கிறது. எத்தனை நாட்களாகின்றன நிலவை ரசித்து.. ஏனோ திடீரென்று நிலா மறைந்து விட்டது. கண்கள் விழிக்கின்றன.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடு நிலாச் சோறு
ஏன் பொன்னுமணித் தேரு
கூட வந்து சேரு
நான் சுட்டுங்கனிச் சாறு

நிலாச்சோறு... 

நிலாச்சோறு சாப்பிட்டு எத்தனை நாட்களாகின்றன. சிறுவயதில், மின்சாரம் இல்லாத நாட்களில், பௌர்னமி நாட்களிலெல்லாம் தெரு நண்பர்களுடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட நினைவு வருகிறது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலகாரங்களை எடுத்துச் சென்று கூட்டாக வைத்து கும்மியடித்து, பிறகு கைகளை நிலவிற்கு ஊட்டிவிட்டு நண்பர்களுக்கும் ஊட்டிவிட்டு.. அடடா நிலாச்சோறின் சுவை.. ஊருக்குச் சென்றால் வீட்டின் மாடிக்குச் சென்று குடும்பத்தாருடன் நிலாச்சோறு சாப்பிட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு நிலா ஒளி நிரம்பிய இரவுப் பொழுதில் "நண்பர்களுடன் சீட்டாடிய" நினைவு வருகிறது.

இரவையும் நிலவையும் எப்படி ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறதே. எனக்குக் கிடைத்த இரவு அனுபவங்கள், நிலா அனுபவங்கள் என் மகனிற்குக் கிடைக்குமா? பெரு நகரங்களில் வாழும் வரை இரவை ரசிக்கும் அனுபவம் கிடைப்பது கடினமே என்றாலும் எப்படியாவது இரவை ரசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பாடல் வரிசையில்.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..

நிலாவே வா 
செல்லாதே வா 

வீட்டின் உள்ளே தெரியாத நிலா.. மனத்திரையில் தெரிய ஆரம்பிக்கிறது.. மனதும் இரவை ரசிக்க ஆரம்பிக்கிறது.அமீரகத்தில் வீட்டினுள்ளே இருந்தாலும் நிலா.. அடடா.. என்ன அழகாகத் தெரிகிறது!!

Tuesday, August 10, 2010

அமீரகத்தில் ரமலான் + சில எண்ணங்கள்!!

அமீரகம் ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகி வருகிறது. பல்பொருள் அங்காடிகள் எங்கும் கூட்டம். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவுப் பொருட்களை வாங்குவதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள் என வணிக நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் நடக்கும் ஏற்பாடுகளும், ரமலானை முன்னிட்டு அனுசரிக்கப்படும் கட்டுப்பாடுகளும், இன்னபிற எண்ணங்களும் தான் இப்பதிவின் நோக்கம்.



அதற்கு முன்பாக.. ரமலான் பற்றிய சிறிய விளக்கம். தெரியாத விசயங்களைத் தவறாகக் கொடுக்கக் கூடாது என்பதாலேயே விக்கிப்பீடியாவில் ரமலான் மாதத்தைப் பற்றி கொடுத்துள்ள குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். 

" ரமலான் என்பது இசுலாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் முஸ்லிம்களுக்கு நோன்பு மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்." நன்றி - விக்கிப்பீடியா.

அமீரகம் வருவதற்கு முன்பு ரமலான் என்பது இஸ்லாமிய அன்பர்கள் தொடர்புடைய மாதம் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். ஊரில் இருக்கும் பொழுது கூட இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் சென்று நோன்புக் கஞ்சியை வாங்கி வந்ததுண்டு. ஆனால், அதற்கு மேல்  ரமலான் மாதத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கவில்லை. அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தது மத்திய கிழக்கு நாடுகளின் பழக்கவழக்கங்களையும், அதில் முக்கியமான ரமலான் மாதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகியுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பொறுப்பு என்பதால், அமீரக அரசாங்கமும் நோன்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணம் சட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நோன்பு மேற்கொள்ளும் அன்பர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு வந்திராத வண்ணம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நோன்பு மேற்கொள்ளும் நேரமான சூரிய உதயத்தில் முதல் அஸ்தமனம் வரையில் பொது இடங்களில் எந்த உணவோ, தண்ணிர் முதற்கொண்டு எந்த விதமான நீராதரமோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சிறைதண்டனைக்கு உள்ளாவார்கள். வருடாவருடம் இந்த விதி தெரியாமலோ, தெரிந்தோ மீறி மாட்டிக்கொள்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவதைத் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பொது இடங்களில் உணவருந்தக் கூடாது என்பதால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. சரவணபவன் போன்ற உணவகங்கள் தேவையான உணவை வீட்டிற்கே கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இந்த சேவையை வழங்க தனி அனுமதி பெற வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் உணவகங்கள் அல்லது துரித உணவகங்கள் தட்டி வைத்து மறைவிடங்களைத் தற்காலிகமாக உருவாக்கி நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு உதவுகிறார்கள்.

நம் ஊரில் எப்படி தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் விற்பனை களைகட்டுகிறதோ, இங்கே ரமலான் மாதமும் விற்பனை களை கட்டியுள்ளது. ஆனால், இங்கே ஒரு வித்தியாசம், வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை, அதிக பயன் கிடைக்க வேண்டும் என்பதே அடிநாதமாகக் காண முடிகிறது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள்,மின்னனுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தும் சலுகை விலையில்!!

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் ரமலானை முன்னிட்டு தனி ஏற்பாடுகளைச் செய்வது கவனிக்கத்தக்கது. நோன்பு மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கின்றனர். நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் விடுப்பும் அளிப்பதுண்டு. ஆகவே ரமலான் மாதம் முழுவதும் மதியம் 2:30 முதல் சாலைகளில் வாகன நெருக்கடி ஆரம்பித்துவிடும். 



ரமலான் என்றால் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம் நோன்பு விருந்து. நோன்பை முடிக்கும் நேரத்தில் அலுவலக ஊழியர்களுக்கு (ஒரு நாள்) ரமலான் நோன்பு விருந்தை ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. பகல் நேரத்தில் இழக்கும் வருவாயை இது போன்ற விருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிகள் மீட்டு விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே செய்தித்தாள்கள் எங்கும் ரமலான் விருந்தைப் பற்றிய சலுகைகளைப் பார்க்க முடிகிறது. ரமலான் விருந்தில் அரேபிய உணவுகள் தனிச் சிறப்பு மிக்கது. 

இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர்.  இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.  நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது. 

ரமலான் மாதத்தில் எப்படி ஒரு நாடே ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் நடக்கிறது என்ற பிரமிப்பு வராமல் இல்லை. 

அதே சமயம் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..

*அமீரக மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் இந்தியர்கள். அதில் தோராயமாக நான்கு இலட்சம் பேர் இஸ்லாம் மதத்தைச் சாராத இந்தியர்கள். இந்த 4 இலட்சம் பேர் சக அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுது, நம் நாட்டில் ஏன் இது போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடிவதில்லை?

* பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?

* நம் ஊரிலும் வீட்டிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அவர்களை நாம் தூண்டாமலோ, கிண்டல் செய்யாமலோ இருந்திருக்கிறோமா?

இதெற்கெல்லாம் அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை என்று சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்ற எண்ணமே வருகிறது.

Sunday, May 30, 2010

அமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை!!

"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.

"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.

வெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது "வெயில் அதிகமா இருக்கப்பா" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

என் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம். 

அமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்கின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.





பேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பேருந்தில் அரை மணி நேரம்  தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள். 

ம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே?

தட்பவெப்பம் அதிகரிப்பதனாலே!! 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, "நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று!!". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!



o

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், "கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில்லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.



கோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((

o

உலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம்.  இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்??

o

Friday, May 14, 2010

தமிழின் பலவீனம் தமிழின் தொன்மையே - பெரியார்தாசன்.

தமிழனிற்கு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடுமன்ற நிகழ்ச்சிகளின் மீது உள்ள ஆர்வத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. "பேச்சிற்கு மயங்குபவன்" என்று தமிழனைக் கூறினால் அது மிகையில்லை. தமக்கு ஒத்த சிந்தனையுடையவரா, மாற்றுக் கருத்துடையவரா என்றெல்லாம் கவலையில்லாமல் "என்ன தான் சொல்றாருன்னு கேட்பமே?" என்ற எண்ணம் நமக்கிருக்கத்தான் செய்கிறது. அதுவே சிறந்த சிந்தனையாளராக அறியப்பட்டால் அவரின் நிகழ்ச்சி மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.



அப்படி ஒரு நிகழ்ச்சியினைத் தான் அமீரகத் தமிழ் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார்தாசன் என்று அறியப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் பங்குபெற்ற "தமிழ் இலக்கியக் கூடல்" நிகழ்ச்சி நேற்று (13.05.2010) நடந்தது. கடந்த ஒரு வாரமாக அமீரகத்தில் இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சி முழுக்க "தமிழ் இலக்கியம்" சார்ந்ததாக அமைத்திருந்தனர்.

தமிழ் மொழியின் தொன்மை தமிழ் மொழிக்கு பலமா? பலவீனமா? என்ற கேள்வியுடன் தனது உரையைத் தொடங்கினார். 

"தமிழ் மொழி 5000 ஆண்டு பழமை கொண்டது, நம் இலக்கியங்கள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவையெல்லாம் தமிழிற்குப் பெருமை சேர்ப்பவையே, தமிழின் தொன்மையே தனித்தன்மை" என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, "நம் மொழியின் தொன்மையே நம் பலவீனம்" என்றார். தமிழ் மொழியின் தொன்மை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டோம். "5000 வருஷ மப்பு தான் இதற்குக் காரணம்" என்றார் அவரது பாணியில்.

உதாரணமாக நம் தமிழ்த்தாய் வாழ்த்தை மேற்கோள் காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளையும் கூறினார்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

மேலே இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில், எங்காவது தமிழர்களின் மொழிவளம், தமிழ் நாட்டின் வளம், தமிழ் மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தமிழர்களின் வாழ்வாதாரமான காவிரி, தமிழர்களின் பண்புகளைப் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். தமிழர்களின் பெருமையையே, தொன்மையையே பேசாத தமிழ்த்தாய் வாழ்த்தால் எப்படி மொழிப்பற்றை ஏற்படுத்த முடியும்? என்ற கேள்வி சரியாகவே தோன்றியது.

'மா தெலுகு தல்லிகி' என்ற தெலுகுத் தாய் வாழ்த்தினைப் பாடிக்காட்டி அதன் விளக்கத்தைக் கூறினார். "தெலுகு வாழ்த்தில் தெலுகுத் தாயை மலரிட்டு வணங்கி, கோதாவரியைப் புகழ்ந்து, கிருஷ்னா நதியைப் பாராட்டி, இலக்கியங்களைக் குறிப்பிட்டு, தியாகைய்யரின் தெலுகுக் கீர்த்தனைகளைப் புகழ்ந்து, தெலுகு மக்களின் பண்புகளின் பெருமை பேசுகிறது" என்றார். 

"4 வயது குழந்தை முதல் அனைவருக்கும் இந்தப் பாடல் மனப்பாடமாகத் தெரியும். அப்படி மனனம் செய்தவர்களுக்குக் கண்டிப்பாக அம்மொழியின் மீது பற்று வரத்தானே செய்யும்?" என்றார்.

நம்மில் எத்தனை பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொருளுடன் முழுமையாகத் தெரியும்?



தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் முதல் கம்பஇராமாயணம், தேவாரம், திருத்தொண்டர் புராணம் வரை இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடியும், எடுத்துக்காட்டியும், இவ்விலக்கியங்கள் தமிழர்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அவரது பாணியில் கேட்டார்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதன் கருத்துகளைக் கடைப்பிடிக்க முடிகிறதா? என்ற கேள்வியையும், நம் மனதில் சிந்தனையையும் எழுப்பினார்.

"தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் யாவும் இன்றைய காலகட்டத்திற்கு பயன்படாதவையாகவோ, பின்பற்ற முடியாதவையாகவோ தான் இருக்கிறது. இதனாலேயே தமிழின் தொன்மை நமக்குப் பலவீனம் என்று கூறுகிறேன்.தமிழிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால் புதுமையான படைப்புகளைப் தமிழார்வம் மிக்கவர்கள் படைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

o

திருக்குறள் போன்ற பின்பற்ற முடியாத இலக்கியத்தால் என்ன பயன் என்ற கேட்டபொழுது "கருக்"கென்றிருந்தது. திருக்குறளின் கருத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தாலும் பின்பற்றாமல் போவது யாருக்கு நட்டம்? திருக்குறள் போன்ற நீதிநெறி நூல்கள் உள்ள கருத்துகள் தான் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைக்கிறது என்பது என் கருத்து. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்", "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" போன்ற பாடல்களை மனதில் வைத்திருக்கும் எனக்கு இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை.

தமிழில் நீதிநெறி நூல்கள் போதவில்லையா? என்று அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "இருந்தா சொல்லுங்க பார்ர்போம்!!" என்றார். 

திருக்குறளை விட நன்மை போதிக்கும் நீதிநூல் என்று இவர் எதைக் கூறுகிறார்?

எந்தத் தலைப்பாக இருந்தாலும் இலாவகமாகப் பேசுவதில் வல்லவர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. இலக்கியங்களில் இருந்து எத்தனை பாடல்கள்? சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்ப இராமாயணம் என்று இலக்கியங்களின் பாடல்கள் சீராக வந்து விழுகிறது இவரது உரையில். இடையிடையே பெரியபுராணம், தேவாரம் போன்ற பாடல்களில் உள்ள சமயக் கருத்துகளைக் கிண்டல் செய்வதையும் இவர் தவறவில்லை. நாற்பது ஆண்டாகப் நாத்திகக் கருத்துகளைப் பரப்பியவர் இந்தப் பாடல்களை நினைவில் வைத்திருப்பது ஒன்றும் வியப்பில்லை.

சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயணம் போன்ற காப்பியங்களைச் சாடியதைக் கேட்டு, "தமிழ் இலக்கியங்களைப் படிக்கவே வேண்டாமா?" என்ற கேள்வியை ஒரு அன்பர் எழுப்பினார்.

"மொழியின் இலக்கியத்தைப் புறக்கணிப்பவர் தன் முகவரியை இழப்பவர்" என்று கூறினார். "நம் மொழியின் இலக்கியங்களைப் படியுங்கள்!. அதே சமயம், புதுமையான கருத்துகளைப் படையுங்கள்!!" அது தான் தமிழை பலமாக்கும் என்றார்.

o

பேராசியரின் உரையில் பல கருத்துகள் ஏற்புடையதாகவும் சில கருத்துகள் ஏற்புடையதற்றவையாகவும் இருந்தன.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சரியானவற்றை சிந்தித்து உணர்வதே சரி? 

"கட்டுரை, கவிதை என்று படைப்புகள் எவ்வகையானாலும் அதில் அன்பு இருக்கட்டும், உணர்வுகள் இருக்கட்டும், தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கட்டும், வாழ்வியல் இருக்கட்டும், தமிழ் மக்களின் பண்புகள், ஒழுக்கம் இருக்கட்டும், அறிவியல் இருக்கட்டும். அதுவே தமிழை பலப்படுத்தும். அதை உணர்த்துவதே இந்த உரையின் நோக்கம்!!" என்று தன் உரையின் முடிவில் கூறியது மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

o

நிகழ்ச்சியின் நிறைவின் பொழுது "பேராசிரியரின் மதமாற்றம்" பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விவரம் ஏற்கனவே யூ-டியூபில் உள்ளதால் இங்கே விவரிக்கவில்லை.

o

வழமையாக வியாழக்கிழமைகளின் மாலை நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு கழியும். நேற்றைய மாலைப்பொழுது அருமையான "இலக்கியக் கூடல்"ஆக அமைந்ததில் மகிழ்ச்சியே.

அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமீரகத் தமிழ் மன்றத்தினரிற்கும், இரண்டு மணி நேரம் உரையாற்றிய பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

o

Saturday, December 12, 2009

துபாய் - அரேபிய இரவும் இடுப்பாட்டமும்..


அமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இதை ஊரிலுள்ள நண்பர்களிடம் கூறினால், "என்னது பாலைவன தேசத்தின் குளிரடிக்குமா?" என்று கேட்கிறார்கள். சும்மா இல்லீங்க, நல்லாவே குளிரடிக்கும். நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 15 டிகிரி வரையிருக்கும் குளிரின் அளவு, பாலைவனப்பகுதிகளில் 5 டிகிரி அளவிற்கு கடும் குளிரடிக்கும்!!

அமீரகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவர்களுக்கு ஏற்ற மாதங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை எனலாம். துபாய் வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய விசயங்களில் அரேபிய இரவும் இடுப்பாட்டம் ஒன்று!!

டிசம்பர் மாதம் வந்து விட்டது என்பதை நினைவு கூறும் மற்றுமொரு விசயம், அலுவலகங்களில் ஏற்பாடு செய்யும் விருந்துகளும், குழுச் சுற்றுலாக்களும் தான்!! சில வாரங்களுக்கு முன் கடலில் ஒரு சிறு பயணம் சென்று விட்டதால், இந்த முறை "பாப் அல் ஷாம்ஸ்" என்ற இடத்தில் அரேபிய இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு சில முறை பாலைவனச் சவாரியையும், பெல்லி டான்ஸையும் (இடுப்பாட்டம்) பார்த்திருந்தாலும், அரேபிய இரவு விருந்திற்கு சென்றதில்லை.


பாப் அல் ஷாம்ஸ் கேளிக்கை விடுதி துபாய் நகர நடமாட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனங்களில் நடுவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தர வேண்டும் என்று புராதன அரேபியப் பொருட்கள், அரேபிய விளக்குகள், விரிப்புகள், மேஜைகள் என்று ஒவ்வொரு விசயத்தையும் கவனமாக அமைத்துள்ளார்கள்!!

பாப் அல் ஷாம்ஸ் விடுதிக்குள் வரும் பொழுதே ஏதோ பழங்கால இடத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. கட்டட அமைப்பு ஏதோ பழங்கால கோட்டை போல இருந்தது. நடந்து செல்லும் வழியெங்கும் இரானிய கம்பளங்களை விரிந்திருந்தனர். அரேபிய விருந்து நடக்கும் இடத்தின் நடுப்பகுதியில் ஒரு மேடையும், அதைச் சுற்றி மேஜைகளும் அமைக்கப்பட்டிருந்தது. குளிரிற்கு இதமாக அங்கங்கே விறகுகளை வைத்து நெருப்பையும் ஏற்றியிருந்தார்கள்.

நாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் "சீஷா" என்றழைக்கப்படும் அரேபிய பைப் சிகர் வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் மிண்ட், ஆப்பிள் என ஒவ்வொரு வகையை வாங்கி இழுக்க ஆரம்பித்தார்கள். நண்பர்களின் வற்புறுத்தலால் நானும் இழுத்துப் பார்த்தேன். பழக்கமில்லாததாலோ என்னவோ தொண்டையில் ஏதோ கரகரப்பு ஏற்பட்டு இருமல் வந்துவிட்டது!! சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது. என்னுடன் வந்திருந்த அலுவலக அன்பர்கள் பலர் சில மணி நேரத்திற்கு சீஷாவை இழுத்துக்கொண்டே இருந்தார்கள்!! அவர்கள் இந்த நேரத்தில் குறைந்தது 300 சிகரட்கள் அளவு இழுத்திருப்பார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது!!




உணவுகளை பஃப்பே ( Buffet ) முறையில் எடுக்க ஆரம்பித்த பொழுது எகிப்திய நடனம் ஆரம்பமானது. நீல நிற வண்ணத்தில் உடையை அணிந்து கொண்டு மேடையேறினார் நடனக் கலைஞர். மேடையேறியவுடன் இருந்த இடத்திலேயே கிறு கிறுவென சுழல ஆரம்பித்தவர் ஐந்து நிமிடங்களுக்கு நிற்காமல் ஆடியதைப் பார்த்த பொழுது பார்த்த எங்களுக்கு சுற்ற ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு தனது சாகசங்களை வெளிப்படுத்திய பொழுது எந்த நாட்டுக் கலையும் எதற்கும் குறைந்ததல்ல என்ற பேச்சு எழுந்தது. பிறகு ஒவ்வொரு மேஜை அருகிலும் வந்து எங்களையும் ஆடவைத்துச் சென்றார்.

விருந்தில் இருந்த உணவு வகைகளில் அசைவமே அதிகமாக இருந்தது. ஆட்டக்கறி, மாட்டுக்கறி, கோழி, மீன் வகைகளில் உணவுகள் இருந்தது. நான் தீயில் வாட்டிய கோழிகளையும், ஹமுர் வகை மீன் துண்டுகளையும், கோழி பிரியாணியையும் எடுத்துக்கொண்டேன். இது போல பஃப்பேக்கள் நடைபெறும் பொழுது சாப்பிடும் அளவை விட இரண்டு மடங்கு வீணடிப்பதையும் பார்க்கத்தான் முடிகிறது.

எகிப்திய நடனம் முடிந்தவுடன் அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடையின் பின்புறம் அமைந்துள்ள பாலைவன மணலில் குடுக்கை விளக்கைப் பிடித்தவாரே ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். பிறகு குதிரையில் போர்வீரர்கள் போன்ற உடையணிந்து இரு அணியாகப் பிரிந்து சண்டையிடுகிறார்கள். இரவு நேரம், மங்கலான வெளிச்சம், நல்ல குளிர்க்காற்று, குதிரைச் சண்டை, ஒட்டகங்கள் என அரேபிய இரவு அருமையான அனுபவம் தான்!!


பிறகு, சிறிய அறிமுகத்துடன் இடுப்பாட்டக் கலைஞர் ( Belly dancer ) மேடையேறினார். அதிரும் அரேபிய இசைக்கு சிரித்தவாரே இடையை நளினமாக அசைக்க ஆரம்பித்தார். பளபளக்கும் உடை, துள்ளளால இசை, அதைவிடத் துள்ளும் இடுப்பு, மாறாத புன்னகை என ஒவ்வொரு ஆட்டம் முடியும் பொழுதும் கரகோசம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தன. பிறகு ஒவ்வொரு குழுவின் இருக்கைக்கு அருகே வந்து எங்களையும் உடன் ஆடவைத்துச் சென்றார். நம் திரைப்படங்களில் பல ரகசியாக்களின் ஆட்டத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு இந்த இடுப்பாட்டக் கலைஞரின் ஆட்டம் விரசமாகத் தெரியவில்லை.

ஆட்டம் நடக்கும் பொழுது பாப் அல் ஷாம்ஸ் விடுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எங்களையும் புகைப்படங்களை எடுத்தார். அவை இலவசமாகத் தருவார் என்று நினைத்திருந்தால், ஒரு புகைப்படம் 120 திர்ஹாம் என்றார். "போடா... இந்தப் பணத்திற்கு எங்கூருல எத்தனை படம் புடிக்கலாம் தெரியுமா" என்று சொல்லிவிட்டதால் நான் இருக்கும் புகைப்படங்கள் இல்லை!! அருமையான இரவின் நினைவு மனதில் இருக்குப் பொழுது புகைப்படம் எதற்கு?

அரேபிய இரவு விருந்து முடிந்த கிளம்பும் பொழுது நடுநிசியாகி இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்த பொழுது மழை தூர ஆரம்பித்தது!! ஆமாங்க அமீரகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் காரணம் என்று நண்பர் கூறினார்.

"பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்...."

Related Posts with Thumbnails