டொயோட்டா நிறுவனமா இப்படி?
இது தான் வர்த்தகத்துறை, தொழிற்துறை, பங்குச் சந்தை, சாமான்ய மக்கள் என அனைவரும் கேட்கும் கேள்வி!!
தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதே நமக்கு டொயோட்டா நிறுவனத்தின் பெயரும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு தரக்கட்டுப்பாட்டில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது.
இன்று தொழிற்சாலைகளில் புழக்கத்தில் உள்ள 5S (Seiri - வகைப்படுத்து, Seiton- ஒழுங்குபடுத்து,Seiso- சுத்தப்படுத்து,Seiketsu - நிலைப்படுத்து, Shitsuke - கடைப்பிடி) கொள்கைகள், கழிவுகளை அகற்றும் 3M (Mudi - தேவையற்ற உற்பத்தி, Mura - தேவையற்ற நடமாட்டம்,Muri - தேவையற்ற காத்திருத்தல்) கொள்கைகள், Kaizen, டொயோட்டா மேலாண்மைக் கொள்கைகள் என அனைத்துமே ஜப்பானியர்களும், டொயோட்டா நிறுவனத்தினரும் ஆரம்பித்தவையே.
இது போன்ற தரக்கொள்கைகளைக் கடைப்பிடித்து தர நிர்ணயத்தில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கே டெமிங்க்ஸ் போன்ற உயரிய தர நிர்ணய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த டெமிங்க்ஸ் விருதை லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுவது நல்லது!!
இப்படி தரத்தில் முன்னோடியாக விளங்கிய டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் (Accelerator Pedal) முன் செலுத்தும் விசையின் கீழ் உள்ள கால்மிதியில் கோளாறு இருப்பதாக வெளியான அறிவிப்பு தான் "டொயோட்டா நிறுவனத்திலா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
"இந்தக் குறைபாடு உள்ள கார்களில் விசை அழுத்தும் பொழுது எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்தக் குறைபாடு உள்ளதாகக் கருதப்படும் பல இலட்சம் கார்களைத் திரும்பப் பெற்றுச் சீராக்கித் தருவதாகவும் கூறியுள்ளது டொயோட்டா நிறுவனம்".
பொருளாதாரப் பின்னடைவால் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பொழுதும் டொயோட்டா நிறுவனம் பெருமளவில் பாதிப்படையவில்லை. மேலும் தற்பொழுது வாகன உற்பத்தியில் உலகின் முதன்மை நிலைக்கும் வந்துள்ளது. இந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கது. கரோலா, RAV4, மேட்ரிக்ஸ், ஏவலான், கேம்ரி, ஹைலாண்டர், துண்ட்ரா, செக்கோயா ஆகிய கார்களில் இந்தக் குறைபாடு உள்ளது.
இந்த அறிவிப்பைப் பற்றி யோசிக்கும் பொழுது பல எண்ணங்கள் எழுகின்றன..
o தர நிர்ணயத்திலும், மேலாண்மைக் கொள்கைகளாலும் தலை சிறந்து விளங்கும் நிறுவனமானாலும் சின்ன கவனக்குறைவோ, திட்டமிடுதலில் குறையோ இருந்தால் "ஆனைக்கும் அடி சறுக்கும்" நிலை தான் ஏற்படும்.
o ஐம்பது ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் முன்னோடி, உலகெங்கும் மக்களால் மதிக்கப்படும் நிறுவனங்களுள் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனம், உலகில் கார் விற்பனையில் நம்பர் 1 போன்ற பெருமைகள் இருந்து என்ன பயன்?
o வாடிக்கையாளர்களே முதலாளிகள் என்பதை உணர்ந்து அனைத்து கார்களை பழுது பார்க்கவுள்ள டொயோட்டா நிறுவனத்தினர் பாராட்டிற்குரியவர்களே!!
o "There is no room for Mistakes" என்பதைப் போல சின்ன தவறு செய்தாலும் நம்பிக்கையிழப்பு, நேரவிரயம், பணவிரயம் எல்லாம் ஏற்படும் என்பதே டொயோட்டா விசயத்தில் நாம் கற்க வேண்டிய பாடம்!!
oo


