Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Sunday, May 30, 2010

அமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை!!

"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.

"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.

வெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது "வெயில் அதிகமா இருக்கப்பா" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

என் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம். 

அமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்கின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.





பேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பேருந்தில் அரை மணி நேரம்  தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள். 

ம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே?

தட்பவெப்பம் அதிகரிப்பதனாலே!! 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, "நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று!!". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!



o

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், "கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில்லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.



கோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((

o

உலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம்.  இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்??

o

Monday, May 3, 2010

புலிகளை எப்படி காப்பாற்றுவது?

"புலிகளைக் காப்பாற்றுவோம்! இந்தியாவில் இன்னும் 1411 (??) புலிகளே உள்ளன!!" தோனியைப் போன்ற விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் வரை பரவலாக இதே பேச்சு தான்!!



ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1411(-1) தான் உள்ளதாம். திடீரென்று விழித்துக் கொண்டதைப் போல இப்பொழுது எங்கும் புலிகளைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள். இப்பொழுதாவது செய்திகள் வருகின்றன என்பது நல்ல விசயம்.

உண்மையிலேயே விழித்துள்ளோமா? அல்லது விழிப்பது போல ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றனவா?

என்.டி.டி.வி. போன்ற செய்திச் சேனல்களைப் பார்த்தால் புலிகளைக் காப்பாற்றும் திட்டம் என்கிறார்கள். கிரிக்கெட் வீரர் தோனி கேமராவின் முன்பு "புலிகளைக் காப்பாற்றுங்கள்!!" என்கிறார்.

இவர்/கள் யாரிடம் சொல்கிறார்/கள்?

கிரிக்கெட் ரசிகர்களிடமா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சாமான்ய மக்களிடமா?

சாமான்ய மக்களுக்கும் புலிகளைக் காப்பாற்றுவதற்கும் என்ன தொடர்பு?

என் ஊரான உடுமலைப்பேட்டை இருப்பது இந்திரா காந்தி புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகில். நான் எத்தனையோ முறை வால்பாறைக்கும், டாப் ஸ்லிப்பிற்கும், மூணாரிற்கும் இச்சரணாலயத்தின் வழியாகச் சென்றிருக்கிறேன். நான் ஒருமுறை கூட புலிகளைப் பார்த்ததில்லை. நான் புலிகளைப் பார்த்ததெல்லாம் வண்டலூரிலும், மற்ற வனவிலங்குகள் (காப்பகம்??) கண்காட்சியகங்களில் தான்!!



வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகளும், சில சமயங்களில் புலிகளும் வந்துள்ளதாக என் நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை கூட ஏதோ தடம் மாறி வந்தவையே!! இது போன்ற தருணங்களில் தான் சாமான்ய மக்களால் புலிகளின் உயிரிற்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இதை மனித-விலங்குகள் ( Human-Animals conflict ) தொடர்பால் ஏற்படும் சண்டைகள் என்பர்!! இது போன்ற சண்டைகளைத் தவிர்க்க சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்?

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறிடத்திற்கு புலம்பெயர வேண்டுமா? தேயிலைத் தோட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன? சாமான்ய மக்களின் கட்டுப்பாட்டிலா?

தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் என்றால், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் வேறு மாதிரியான பிரச்சனைகள்!!

இங்கே புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்கள் எல்லாம் கணிம வளம் நிறைந்த பகுதிகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளும் தான். பன்னா புலிகள் சரணாலயத்தில் புலிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் பன்னாவில் உள்ள கணிம வளங்கள் தான். "மத்தியப் பிரதேசப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை வேறிடத்திற்கு குடியமர்த்தும் வேலை நடைபெறுகிறது" என்ற செய்தியைப் பார்த்தேன். இவர்களை காட்டை விட்டு வெளியேற்றுவது புலிகளைக் காக்கவா அல்லது ...??

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்தும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. சரணாலயங்களின் அருகில் குடில்கள், விடுதிகள் என கட்டுமானப் பணிகளைக் குறைக்க இந்த முடிவு உதவும் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் வராமல் போவது சமூக விரோதிகளுக்கு இன்னும் எளிதாகக் கூடுமே என்ற அச்சமும் வருகிறது.



ஆப்பிரிக்க நாடுகளில் அனுமதிப்பதைப் போல ( Eco Tourism ) இயற்கை சார்- சுற்றுலாவை அனுமதித்தால் நல்லது. இது போன்ற சுற்றுலாவை அனுமதித்தால் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சுற்றுப்புறத்தின் மீது கவனமும் அதிகரிக்கும். மேலும், வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.

இன்று புலிகள் என்றால் இன்னும் சில வருடங்களில் யானைகள்!! "யானைகளைக் காப்பாற்றுங்கள்" என்று சில வருடங்கள் கழித்து மற்றொரு கிரிக்கெட் வீரர் கூறுவதையும் பார்க்க வேண்டியதிருக்கும்.

o

தோனி அண்ணே, நீங்க.. "புலிகளைக் காப்பாற்றுங்கள்" என்று சொல்வது FANஓட ஸ்பெல்லிங் கேட்கற மாதிரி தாங்க இருக்கு!!

ஆங்கிலச் செய்திச் சேனல்கள் "புலிகளைக் காப்பாற்றுவதை" ஏதோ கடமைக்குச் செய்யாமல், தொடர்ந்து புலிகளின் நிலையைப் பற்றி சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

o

Tuesday, April 13, 2010

கதறும் பூந்தமல்லி சாலை!!

சென்னையின் சாலைகளுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால்.. இந்நேரம் மாண்டிருக்கும். ஆம் நாம் நடத்தும் சீரழிப்பைத் தாங்க முடியாமல்!

சென்னையுடன் என் உறவு 1997 முதல் தான். ஆனால் இந்த 13 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்??

1997ல் கல்லூரிக் கல்விக்காகச் சென்னை வந்ததிலிருந்து, நான் பார்த்து வரும் மாநகரச் சாலைகளுள், மாற்றங்கள் நிகழ்ந்ததென்றால் அது சில மேம்பாலங்களும், பல ஒருவழிப்பாதைகளும் தான். சென்னையில் நான் அதிகம் பயன்படுத்திய சாலைகளுள் கோட்டூர்புரத்தை ராஜ்பவனுடன் இணைக்கும் காந்திமண்டபம் சாலையும், சர்தார் பட்டேல் சாலை மற்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் தான்!! அந்த சாலைகளின் அன்றைய மற்றும் இன்றைய நிலையை நினைக்கும் பொழுது...

கோட்டூர்புரம் சாலை!!

முன்பு, அடையாறு ஆற்றிலிருந்து சர்தார் படேல் சாலை வரை (சில இடங்கள் தவிர்த்து ) சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் காணப்படும். சாலைகளில் வாகனங்கள் வருவதே அரிதாக இருக்கும். ஏன் சில சமயம், கார்கள் சாலையோரத்தில் ஒதுங்கி (??) நிற்பதையும் பல முறை பார்த்திருக்கிறோம். அப்படி இருந்த சாலை இன்று "மொட்டையடிக்கப் பட்டுள்ளது" சோகத்தின் உச்சம்.



சர்தார் படேல் சாலை!!

சைதாப்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி வரும் பொழுது தட்பவெப்பத்தில் சில டிகிரிகள் குறைவதை உணர முடியும். சின்னமலை சந்திப்பில் இருந்து ராஜ்பவன் நோக்கி வரும்பொழுது இருந்த அடர்ந்த மரங்கள் இன்று எங்கே?? ஒருவழிப் பாதையாக மாறியதில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அதே போல அடையாரை நோக்கிச் செல்லும் பொழுது சி.எல்.ஆர்.ஐ.(CLRI), காந்தி நகர் பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை!!

அண்ணாபல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அடையாரில் இருந்து கல்லூரிக்கு நடந்தே வருவது எங்களுக்கு வாடிக்கையான ஒன்று. சாலையோரமெங்கும் மரங்கள், எங்கும் நிழல்!! ஆனால் இன்று??

பூந்தமல்லி சாலை!!

சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்று பூந்தமல்லி சாலை. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தரமான சாலைகளுள் ஒன்று. சென்னை நகரின் மக்கள் தொகை சில லட்சங்களாக இருந்த சமயம் போட்ட சாலையை, மாநகரின் மக்கள் தொகை ஒரு கோடியைத் தொடும் பொழுதும் பயன்படுத்தி வருகிறோம். 

பத்து பேர் நிற்க வேண்டிய இடத்தில் 15 பேர் நிற்கலாம். 100 பேர் நின்றால் என்னாகும்?? 

அது தான் நடக்கிறது இன்று சென்னை சாலைகளில். குறிப்பாக பூந்தமல்லை சாலையில்!! தென்சென்னைப் பகுதிகளில் இருந்து வட சென்னைப் பகுதிகளுக்குச் செல்ல பூந்தமல்லி சாலையைக் கடந்தே தீர வேண்டும். மேலும் சென்னை சென்ரல், சென்னை எழுப்பூர் ரயில்நிலையம், கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி சாலையெங்கும் முக்கிய இடங்கள்!! சென்னையில் வாழும் பெரும்பாலானோர் கடக்கும் சாலையென்பதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் தான்!!

நாங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தான் துபாய் வரும் வரை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் தான் குடியிருந்தோம். என் அலுவலகம் இருந்ததோ பூந்தமல்லியைத் தாண்டி. காலையில், ஈகா திரையரங்கில் இருந்து 4 கி.மி. தொலைவில் இருந்த கோயம்பேடு செல்வதற்குக் குறைந்தது 10 நிமிடம் ஆகும். அதுவே மாலையென்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும். வாரக்கடைசியில் கீழ்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்தி நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கிறது.  ஒன்றரை வருடத்திற்கு முன்பே அவ்வளவு நெரிசல் என்றால்... இன்று??

ஏற்கனவே விழிபிதுங்கி நின்ற பூந்திமல்லி சாலை குருடாகியிருக்கிறதாம். காரணம் அம்பா மால்!!


நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர் போன்ற பகுதிகளை அண்ணா நகர், வில்லிவாக்கத்துடன் இணைக்கும் நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலையில் சந்திக்குமிடத்தில் அழகிய கூவத்தின் கரையில் அமைந்துள்ளது இந்த மால்!! நெரிசல் நிறைந்த சாலையில், இந்த மால் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அம்பா மாலின் திரையரங்கங்களின் காட்சி முடியும் நேரமானால் சொல்லவே வேண்டாம்!! இந்த இடத்தில் இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மவராசரை நினைத்தால்....ம்ம்ம்.. நல்லாயிருக்கட்டும்!!


"அட.. என்னடா இவன்.. புதுசா, சூப்பரா மால் கட்டி விட்டுருக்காங்க!! அத விட்டுட்டு சாலை, நெரிசல்னு புலம்பீட்டிருக்கான்" என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஏதாவது மாற்று வழியில் செல்லலாம். மாநகரப் பேருந்தே கதி என்று இருப்பவர்கள் நிலை என்னவாகும்??

சென்னை சென்ரலில் இருந்து கோயம்பேடு செல்ல முன்பு 45 நிமிடம் ஆகியிருந்தால் இனிமேல், ஒன்றரை மணி நேரமாகும். பேருந்திகளில் செல்வோர் அவதிக்குள்ளாவது எதனால்?? நம்மைப் போன்றோர் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்க!!

Saturday, March 27, 2010

விளக்கை அணைக்க ஆசையா?

ஒரு கிளுகிளுப்பான விசயத்தைப் பற்றிய பதிவோ என்று உள்ளே நுழைந்திருந்தால், "மன்னிக்கவும்!! இது கிளுகிளுப்பை விட முக்கியமான விசயத்தைப் பற்றிய பதிவு!!"

திங்கட்கிழமை அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதே பெரும்பாலானோரின் எண்ணம் "அடுத்த வெள்ளிக்கிழமை/ சனிக்கிழமை எப்பொழுது வரும்!!" என்பதைப் பற்றித் தான் இருக்கிறது. இதை "Monday Morning Blues" என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்!! வார விடுமுறை எடுத்த ஓய்வு, கிடைத்த புத்துணர்ச்சியால், அடுத்த ஓய்வு நாள் எப்பொழுது வரும் என்பதைப் பற்றி யோசிக்க வைக்கிறது!!

மனிதர்கள், விலங்கினங்கள், பறவைகள், மரம், செடிகொடிகள் இன்னபிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுத்து நம்மைப் புதுப்பிக்கின்றன. ஆனால், நம்மை எல்லாம் தாங்கும் "பூமித்தாய்" என்றாவது ஓய்வெடுத்துள்ளாளா?


பூமி தோன்றிய காலத்திலிருந்து அயராது சுழன்று கொண்டே இருக்கிறாளே!! பூமித்தாயின் சுழற்சியால் தான் நமக்கும் பகல், இரவு, கால நிலை மாற்றம், அதனால் வரும் மழை, உணவு, வாழ்வாதாரம் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது!!

திடீரென்று பூமித்தாய் தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்னவாகும்? 

இரவாக இருக்குமிடங்கள் எல்லாம் இரவாகவே இருந்துவிடும். பகலாக இருக்குமிடங்கள் எல்லாமே பகலாகவே இருந்துவிடும். இன்றும் ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது போன்ற காலநிலை வருடத்தில் நான்கைந்து மாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நாட்டு மக்களில் பலர் மன உளைச்சலிற்கும், போதிய உறக்கமின்றியும் இருந்து அவதிப்படுகின்றனர்.  அது போன்ற காலநிலை எல்லாம் இல்லாத ஒரு இடத்தில் பிறந்ததிற்காகவே நாம் மகிழ்ச்சியடைவேண்டும்!!  பூமித்தாய்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்!!

ஆனால் நாமோ "பூமித்தாயின் வளங்களை அழித்தும், இரவையே பகலாக்கும் அளவிற்கு ஒளிமாசை ஏற்படுத்தியும்" நமது நன்றிக்கடனை செலுத்தி வருகிறோம்!! 

பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? ஒளிமாசை எப்படி குறைப்பது, பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? மக்களிடம் விழிப்புணர்ச்சியை எப்படி ஏற்படுத்துவது?

இதற்காக உலக இயற்கை நிதியம் (World Wide Fund - Nature) ஆண்டு தோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமைகளில் புவி மணி(Earth Hour)யைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர்.

அது என்ன புவி மணி?

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளில், வணிக நிறுவனங்களிலும் உள்ள உள்ள விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் அணைத்துவிடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வு!! இது இன்று 27ம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அனுசரிக்க ஏற்பாடாகியுள்ளது.



உலக நாடுகள் பலவும் புவிமணியைக் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளன. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா, சிட்னி நகரின் ஓபேரா, எகிப்து பிரமிட்கள் என உலகப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்படும்!! 

இவர்களுடன் சேர்ந்து நாம் என்ன செய்ய முடியும்?

வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு இருந்து பார்த்தால் என்ன? அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் நிறுத்திவிட்டு ஒரு மணி நட்சத்திரங்கள் எங்கெங்கே இருக்கிறதென குழந்தைகளுக்குக் காட்டலாம்!!

"என்னப்பா செந்திலு, சன் டிவில டீலா நோ டீலா பார்க்கணும், ஐ.பி.எல் மாட்ச் பார்க்கணும்.. நீ வேற.." என்று நினைப்பவர்களுக்கு "பூமித்தாயின் சார்பில் ஒரு நன்றியை உதிர்க்கிறேன் :)" 

விளக்கை அணைக்க ஆசைப்படுகிற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!!

இந்தச் செய்தி மற்றவர்களையும் சென்றடைய "தமிழிஷ்/ தமிழ்மணத்தில்" ஓட்டளிக்க வேண்டுகிறேன்.

..

Tuesday, February 23, 2010

நட்சத்திரங்களின் உறக்கமும் மார்பகப் புற்றுநோயும்!!

நீங்கள் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது எப்பொழுது?

அது தான் தினமும் சின்னத்திரையில் ரஜினி, கமல் முதல் விதவிதமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோமே, பிறகு எதற்காக விண்மீன்கள் என்று கேட்கத் தோன்றும். சென்னையில் இருந்து பொழுதும் சரி, இங்கே துபாயிலும் சரி, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று வெளியே வந்தால் தெரிவதெல்லாம் ஒளிக்கதிர்கள் தான். 

பெருநகரங்களின் பிரதான சாலைகள் எங்கும் ஒளியை உமிழ்ந்து சீரிப்பாயும் வாகனங்கள், பளபளக்கும் கடைகள், அலங்கார விளக்குகள் என்று எங்கும் ஒளி வெள்ளம். வாகனங்கள் முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை உமிழும் ஒளிக்கேட்ப மரியாதை!! ஒளிவெள்ளத்தில் மிதந்து வீட்டிற்குள் வந்தால் மீண்டும் ஒளிவெள்ளம். 

உலகெங்கும் உள்ள பெருநகரங்களின் பெருமையை அறியப்படுவதும் அந்தந்த நகரத்தின் கட்டடங்களின் ஒளிவெள்ளத்தைப் பொருத்தே!! சிட்னியின் ஓபேரா மாளிகை, நியூயார்க்கின் மன்ஹாட்டன், மும்பையின் கடற்கரை சாலை (மரைன் ட்ரைவ்), துபாய் ஷேக் ஷையத் சாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். விண்ணிலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் கீழிறக்கிவிட்டது போன்ற உணர்வை பெருநகரங்களில் உலாவரும் பொழுது உணர முடிகிறது!! ஆனால் நம்மால் விண்மீன்களைப் பார்க்க முடிகிறதா?

நண்பா..
விண்மீன்களைப் பார்த்தது எப்பொழு தென்றாய்?

விண்மீனைத் தூதனுப்பியது முன்னோர் காலம்
விண்மீன்களைத் துணைக்கழைத்தது மன்னர் காலம்
விண்மீனைக் காட்டிச் சோறூட்டியது பாலர் காலம்
விண்மீன்களை மறந்தது நண்பா நம்காலம். 

வீட்டின் முற்றத்தில் படுத்துக் கொண்டு விண்மீன்களை ரசித்த நாட்கள் மீண்டும் வருமா? 

இரவில் திசையைக் காட்டும் துருவ நட்சத்திரங்கள், மாதத்தைக் காட்டும் நட்சத்திரக் கூட்டங்கள், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், பார்த்துப் பார்த்து ரசித்த வெள்ளி, புதன், செவ்வாய் எல்லாம் மறந்தது எதனால்? அல்லது மறைந்தது எதனால்?

எல்லாம் ஒளிமாசு தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? காற்று, நீர், நிலம் எல்லாம் மாசடைந்திருப்பது தெரியும். அதென்ன ஒளி மாசு?வெளியில் அளவிற்கு அதிகமான ஒளி வெள்ளம் ஊடுருவியிருப்பது தான் ஒளிமாசு (Light Pollution).

நண்பா.. 
ஒளிமாசைப் பற்றித் தெரியுமா என்றேன்?

நெற்பயிரை யழிக்கும் நீர்மாசை யறிவேன்
நுரையீரலை யழிக்கும் காற்றுமாசை யறிவேன்
மண்ணுயிரை மலடாக்கும் நிலமாசை யறிவேன்
மானுடத்தைக் கருவறுக்கும் மனமாசையு மறிவேன்
அதென்ன ஒளிமாசு என்றாய்!!

நம் நாட்டில் பெரிதாக விவாதிக்கப்படாத ஒன்று தான் ஒளிமாசு. ஒளிமாசு என்று சாதாரணமாகக் கூறினாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. "இரவு நேரத்தில் உடலில் சுரக்கும் மெலடனின் (Melatonin) என்ற ஹார்மோனின் அளவு ஒளிமாசால் குறைகிறது" என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மெலடனின் அளவு குறைந்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால், ஒளிமாசு அதிகமாக இருக்கும் வளர்ந்த நாடுகளிலுள்ள பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

டென்மார்க்கில், இரவு வேளையில் பணியாற்றிய 40 பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வந்துள்ளதென்று இந்த செய்தி குறிப்பிடுகிறது. இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த டானிஷ் அரசாங்கம் படிப்படியாக ஒளிமாசையும், இரவு நேர வேலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

"இரவு வேளையில் பணியாற்றினால் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது" என்பது நம் நகரங்களுள் பரவி வரும் கால்செண்டர் நிறுவனங்களுக்குத் தெரியுமா?

ஒளிமாசின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

* இருண்ட அறையில் குறைந்தது 6-8 மணி நேரத்திற்கு தூங்க வேண்டும்.

* வீடுகளில் அதிகப்படியான ஒளியைக் குறைக்க வேண்டும்.

* இது தனி மனிதனிடம் இல்லாவிட்டாலும் நம் அரசாங்கம், சமூகத்தின் கையில் இருக்கிறது. நகரமெங்கும் பரவியுள்ள ஒளி வெள்ளத்தைக் குறைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே. இரவின் ஒளிவெள்ளத்தால் குழம்பிப் போகும் பறவைகள், விலங்கினங்கள் இன்னபிற உயிரனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு கணக்கிலடங்காதவை!!


நமக்கு மட்டுமல்ல பறவைகள், விலங்கினகள் எல்லாம் எதிர்பார்ப்பது இரவில் நட்சத்திரங்கள் உறங்காமல் இருப்பதையே!! 

o

Wednesday, January 13, 2010

இயற்கைக்கு நன்றி கூறும் நாள்!!


அழகிய மலைகள் சூழ்ந்த ஒரு பசுமையான கிராமத்தில் ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தனர். அந்தக் குடும்பத்திற்கென்று வயலும் சிறிய தோட்டமும் இருந்தது. அக்குடும்பத்தலைவரும் அவரின் மனைவியும் பெரும்பாலான நேரம் வயல்களின் வேலை செய்வதும், வீட்டிற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதுமாக இருந்தனர். அவர்களுக்கு மயில்சாமி என்ற பெயரில் பால்வாடி செல்லும் வயதில் ஒரு மகனும் இருந்தான். அவனுடன் விளையாடச் சிறுவர்கள் யாரும் இல்லாததால், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி விளையாடுவது என்று தனியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

தோட்டத்தில் பல மரங்கள் இருந்தாலும், மயில்சாமிக்கு மாமரத்தின் மீது ஆசை. மாமரத்தின்  வளைந்து நெளிந்து செல்லும் கிளைகள், மாமரத்தில் கூடும் பறவைகள் என்று மாமரத்தைப் பார்ப்பதில் அத்தனை சுகம் அவனுக்கு. பால்வாடிக்கு சென்று வீடு திரும்பிய பிறகு கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமரத்தின் அருகில் செல்வதும், மரத்தைத் தொட்டுப் பார்த்தும் வந்தான். இதைப் பல நாட்களாகப் பார்த்து வந்த மாமரம்..

"தம்பி.. என்னையே சுத்திச் சுத்தி வர்றியே.. என்னோட விளையாட ஆசை இல்லியா?" என்றது.

"ஹேய்.. நீ பேசக் கூட செய்வியா? உன் கூட எப்படி விளையாடறது" என்றான்.

"என் மேல ஏறி விளையாடு. நிறைய இடத்துல நான் சுவையான மாம்பழங்கள ஒளிச்சு வச்சிருக்கேன். கண்டு பிடிச்சீன்னா மாம்பழம் உனக்குத்தான்" என்றது.


மிகவும் குஷியான மயில்சாமி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மரத்தில் ஏறுவதும், மரத்தின் கிளைகளில் ஆடி மகிழ்வதும், மாமரம் ஒளித்து வைத்திருந்த பழங்களைப் பறித்து சாப்பிடுவதும், களைப்படையும் பொழுது வேரில் சாய்ந்து தூங்குவதும் என்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தான். மயில்சாமி வந்து விளையாடும் பொழுதெல்லாம் மாமரமும் மகிழ்ச்சியால் கிளைகளை அசைத்து விளையாடும். மயில்சாமி விளையாட, மாமரமும் ஆட அந்தத் தோட்டமே அழகாகக் காட்சியளித்தது.

சில வருடங்கள் கழித்து, சிறுவன் தொலைவில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். விடுமுறை நாட்களில் தன் நண்பர்களையும் அழைத்து வந்து "மரக்குரங்கு" விளையாட்டை விளையாடி மகிழ்ந்தான். மயில்சாமி பதின்ம வயதை அடைந்த பிறகு மாமரத்திற்குச் சென்று விளையாடுவதை தவிர்த்து விட்டு பள்ளி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவன், ஒரு நாள் மாலையில் மாமரம் அருகே சோகமாக உட்கார்ந்திருந்த பொழுது,

"தம்பி, இப்பெல்லாம் என் கிட்ட வர்றதே இல்லியே. என் மேல ஏதாவது கோபமா?" என்று மரம் கேட்க

"போ.. நான் என்ன சின்னப் பையனா உன் கிட்ட வந்து விளையாட!! நானே கிரிக்கெட் விளையாட மட்டை இல்லையேனு இருக்கேன்" என்றான்.

"அதுக்கா இப்படி சோகமா இருக்க? கிழபுறமா இருக்கற என்னோட கிளைய முறிச்சு மட்டை சென்சுக்கோ" என்றது.

"நல்ல யோசனை கொடுத்த.." என்று மகிழ்ச்சியாக ஒரு கிளையை ஒடித்துச் சென்றான்.

பள்ளிப் படிப்பை முடித்திருந்த சமயம் நண்பர்களெல்லாம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். மயில்சாமியும் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றான். பல மாதங்களாக வேலை தேடியும், சரியான வேலை கிடைக்காததால் சோர்வடைந்து மாமரம் அருகே வந்தான். அவன் சோர்வடைந்திருப்பதைப் பார்த்த மாமரம்,

"தம்பி. ஏம்பா சோகமா இருக்க? பல நாளா ஆளையே பார்க்க முடியலையே!!" என்றது.

"உன் கிட்ட தான் சொல்லனும் என் சோகத்தை!! பல நாளா வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கல" என்றான்.

"அவ்வளவு தானா!! என் கிட்ட இருக்கற மாம்பழங்களப் பறிச்சு விற்கலாம்ல. நல்லா வித்துச்சுன்னா பக்கத்துக் காட்டுல கிடைக்கற பழங்களையும் விற்கலாமே" என்றது.

"ஹா.. அருமையான யோசனை" என்று உற்சாகமடைந்த மயில்சாமி அருகில் இருந்த நகரத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.

நன்றாக தொழில் நடந்து கொண்டிருக்க, அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். தனக்கெனத் தனியாக வீடு கட்ட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டிற்குத் தேவையான பொருட்களையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்த மயில்சாமி மரவேலைப்பாட்டிற்கு என்ன செய்வது சிந்திக்க ஆரம்பித்தான். வழக்கம் போல யோசித்த படியே தோட்டத்திற்குச் சென்ற மயில்சாமி மாமரத்திடம்..

"நான் வீடு கட்ட ஆரம்பித்திருக்கேன். மரவேலை செய்ய மரம் தேவைப்படுது. எனக்குத் தான் நீ நல்ல யோசனை தருவியே. இதுக்கும் ஒரு நல்ல யோசனை சொல்லு" என்றான்.

"அதுக்கென்ன, எவ்வளவு மரம் வேணுமோ, என்னைய வெட்டிக்கோ!! ஆனா, பக்கத்துலயே புதுசா மாமரத்த நட்டு வச்சிரு" என்றது.

நெகிழ்ந்து போன மயில்சாமி, தனக்குத் தேவையான அளவு மரத்தை வெட்ட ஆரம்பித்தவன், "தான் புதிதாக மரம் நடுப்போவதை எண்ணி" மரத்தை முழுவதுமாக வெட்டி வீட்டிற்குப் பயன்படுத்தினான். ஆனால், புதிதாக மரம் நட மறந்து விட்டான்.

பல வருடங்களாக தொழில் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது என்று வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிச் சுழல ஆரம்பித்தான். நன்றாகச் சென்று கொண்டிருந்த வியாபாரத்தின் திடீரென்று சுணக்கம் ஏற்பட வேதனையடைய ஆரம்பித்தவன் சிறு வயது நினைவில் மாமரமிருந்த இடத்திற்குச் சென்றான். மாமரம் இருந்த இடத்தில் இப்பொழுது வெட்டப்பட்ட தண்டு மட்டுமே இருந்தது.

"தன்னுடன் பயணித்த இந்த மாமரம் தனக்காக எவ்வளவு செய்துள்ளது" என்று நினைத்தவாரே மரத்தண்டைத் தடவ ஆரம்பித்த மயில்சாமிக்கு ஒரு அசரீரி கேட்டது.


"மயில்சாமி!! புதுசா மாமரத்த நட்டு வளர்த்திருந்தா உனக்கு நல்லா உதவியிருக்குமேப்பா!! இப்ப கஷ்டப்படறியே!! மாமரம் இல்லாட்டி என்ன, என்னோட மரத்தண்டு இருக்கே. அப்படியே அதுல தலை வச்சுப் படுத்தீன்னா நல்லாத் தூக்கம் வரும். கொஞ்சம் ஓய்வெடுப்பா!!" என்றது.

"சிறு வயதில் எனக்கு விளையாட இடம் கொடுத்து, வியாபாரம் செய்ய பழங்கள் கொடுத்து, வீடு கட்ட மரம் கொடுத்து என்று இந்த மாமரம் செய்யாத உதவியே கிடையாதே!! நான் மரத்தை வெட்டிய பொழுதும் மரம் எனக்கு நல்லது செய்யுதே" என்று நினைத்துக் கண்ணிர் விட ஆரம்பித்தான்...

இயற்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களுக்கு அளவே கிடையாது எனலாம். வானம்,காற்று, வெயில், மழை, நிலம், மரங்கள் என இயற்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

இந்த மாமரத்தின் இடத்தில் நம் பெற்றோரை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும், இயற்கையை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும். நம்மை பெற்று வளர்த்தோரும் சரி, நம்மை வளர்க்க உதவும் இயற்கையும் சரி, நமக்கு என்றுமே நன்மையே புரிகிறது. நாம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா?

இயற்கையைப் பற்றிச் சிந்திப்பதற்கும், நம்மை வளர்த்தோர்க்கும் நன்றி சொல்ல இயற்கையை வணங்கும் தமிழர் திருநாளை விட நல்ல நாள் அமையுமா?

..

Sunday, December 13, 2009

கல்லாபுரம் - அந்த நாள் வருமா?

மாலை நேரம். சூரியன் மறைந்து சில நிமிடங்களே ஆகியிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகிலிருக்கும் கிராமம். ஊரிற்கே பச்சை நிறச் சாயம் அடித்திருப்பதைப் போல பசுமை சூழ்ந்திருந்தது. சிறிதும் பெரிதுமாக தென்னை மரங்கள், மாமரங்கள், வேப்பமரங்கள் என எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்தியதைப் போல பசுமை!!

நவம்பர் மாதம் என்பதால் முன்பனி சூழ ஆரம்பித்திருந்தது. பனிக் காலத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் புகையும் கூட அவ்வளவு அழகு!! அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் கூட அவ்வளவு இனிமை.

இப்படி ஒரு மாலைப்பொழுதில், உங்கள் உறவினர்களுடன் ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆற்றின் நீர் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. தூரத்தில் தெரியும் அணையின் நிழல் ஆற்றில் தெளிவாகத் தெரியும் அளவிற்கு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது! அங்கிருக்கும் மரங்களின் கூடுகளில் அடையச் செல்லும் பறவைகள் சத்தம் என ஏதோ வேறு உலகிற்கு வந்து விட்ட உணர்வு!!

இது போல ஒரு காட்சியைத் தினமும் பார்த்து வருபவருக்கு மன உளைச்சல் ஏற்படுமா?

ஆம்!! இது போல ஒரு காட்சியைப் பார்த்தது உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் தான்!! உடுமலை அருகே இருக்கும் என் ஊரான மடத்துக்குளத்தில் இருந்து இருந்து சரியாக 25 நிமிடப் பயண நேரத்தில் இருக்கும் ஒரு ஊர். நான் பல முறை அமராவதி அணைக்குக் கல்லாபுரம் வழியாகச் சென்றிருந்தாலும், இந்த முறை மிகவும் கவனிக்கச் செய்தது.


வழக்கமாக என் வீட்டிற்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் ஓரிரு மணி பயண நேரத்தில் இருக்கும் கொடைக்கானலிற்கோ, மூணாறிற்கோ, வால்பாறைக்கோ கூட்டிச் செல்வதுண்டு. இந்த முறை ஒரு மாறுதலாக கொமரலிங்கம், பெருமாள்புதூர், எலையமுத்தூர், கல்லாபுரம் என அழகிய கிராமங்கள் வழியாக அமராவதி அணையை நோக்கிக் கூட்டிச் சென்றேன்.

போகும் வழியில் பசுமையான வயல்வெளிகள், வயல்களில் மேய்ந்து வரும் மயில்கள், தூரத்தில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள், மலைகளின் நடுவே மறையும் சூரியன் என நாங்கள் பார்த்த காட்சி வேறெங்கும் கிடைக்காது!!







அப்படி அமராவதி அணைக்குப் போகும் வழியில் வரும் கிராமம் தான் கல்லாபுரம்.
அமராவதி அணையில் இருந்து வரும் தண்ணிரை முதலில் பயன்படுத்துவது இந்த ஊர் மக்கள் தான்!! இவர்கள் குடிக்கும் தண்ணிரில் குளோரினோ, வேறு எந்த வேதியப் பொருட்களோ கலப்பதில்லை!! தண்ணீரில் இருந்த தூய்மை, காற்றின் இருந்த ஈரப்பதம், தூரத்தில் கேட்ட கோயில் மணியோசை, பறவைகளின் இறைச்சல் என அந்தப் பாலத்தின் இயற்கைக் காட்சியைப் பார்த்த எங்களுக்கு அமராவதி அணைக்குச் செல்ல மனமில்லாமல் போனது!!



அப்படியே கல்லாபுரம் கிராமத்திற்குள் செல்லும் பொழுது ஒரு பெட்டிக்கடையில் குழந்தைகள் அழகாக பலூன்களை ஊதி விளையாடிக் கொண்டிருந்தனர். எங்கள் காரைப் பார்த்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்."இந்தக் குழந்தைகளுக்குத் தெரியுமா அவர்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்" என்று நினைத்துக் கொண்டேன்.

"மாப்ளே, இந்த ஊருல இடமெல்லாம் என்ன விலைக்குப் போகுது" என் மைத்துனர் என்னிடம் கேட்டார்.

"ஒரு ஏக்கர் தோப்பு 10 இலட்சம் வரையில் போகிறது" என்றேன்.

"பேசாம மெட்ராஸ் வீட்ட விற்றுவிட்டு இங்கே வந்திடலாமா?"என்றார்.

"மாமா, ஒவ்வொரு முறையும் ஊரிற்கு வரும்பொழுது வேலையை விட்டு வந்து விடலாமான்னு நினைச்சுட்டே தான் இருக்கிறேன். ஆனா அந்த நாள் எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை!!" என்றேன்.

அழகான, பசுமையான ஊரைச் சேர்ந்த எனக்கு, பொருளாதாரம், வேலை என பல காரணங்களுக்காக கட்டிடக் காடுகளில் பணி புரிய நேர்ந்தாலும், எப்பொழுது ஊரிற்குச் செல்வோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. கல்லாபுரம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? ஊரிற்குத் திரும்பும் அந்த நாள் எப்பொழுது வரும்?

***************************************************

பக்ரீத்தை முன்னிட்டு அலுவலகத்தில் விடுமுறை ஒரு வார காலத்திற்கு கொடுத்திருந்தனர். "ஹே.. லீவு விட்டாச்சு"னு துபாயில் இருந்து ஊரிற்குப் போன பொழுது பார்த்த காட்சி தான் இந்த இடுகை!!

**

Thursday, November 19, 2009

மழைக்கால நினைவுகள்!!

"அப்புறங் தம்பி... ஊருல மழை பெய்யுதுங்களா?"

எங்கள் ஊரில், அதிகமாகப் பழக்கமில்லாத இருவர் பேச்சைத் துவக்குவதற்கு மழை தான் பெரும்பாலும் உதவுகிறது. ஆங்கிலத்தில் ஐஸ்பிரேக்கர் என்றொரு வார்த்தையுண்டு. நீண்ட நேர அமைதியை உடைக்க பயன்படுத்தப்படும் சொல் அது. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் வானிலையே ஐஸ்பிரேக்கராக இருக்கிறது.

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

"கண்ணூ மழை பேயுது.. நனைஞ்சீன்னா சலிப்பிடிச்சுக்கும்"னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு. "நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, பனிக்கட்டி மழை பேய்ஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சிருச்சு"னு எங்க ஆத்தா சொன்னப்ப "என் தலைல விழுந்தா என்ன ஆகும்"னு யோசிப்பேன். அதனாலேயே மழை பெய்தால் நனைவதில் உள்ளூர ஒரு பயம்.

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் வெட்டுக்கிளி. எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க, வெளியில் சுற்றி வருவதில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதைப் பிடிங்கும் பொழுது ஒரு மண் வாசனை வரும் பாருங்கள்!! அடடா... எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் வெட்டுக்கிளிக்கும் ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. வெட்டுக்கிளியின் வாலைப் பிடித்து நண்பர்களிடம் விளையாட்டுக் காட்டுவது அலாதியானது.

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் வெட்டுக்கிளியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

எங்கள் ஊரான உடுமலையில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈறக்காற்று மட்டுமே வரும். விசுவிசுவென ஈரக்காற்று வீச நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்தில் உட்கார்ந்து கதையடித்த நாட்களே நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது.

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அடடா.. அது ஒரு அற்புதமான அனுபவம். ஆறின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

இதற்கு நிகரான அனுபவமென்றால் அது குற்றாலம் அருவிகளில் தான் கிடைக்கும். அதுவும் குற்றாலச் சாரல் காலமென்றால் ஊரே சாரலில் நனைவதைப் பார்க்க முடியும்!! எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது!! அது தான் இயற்கையின் வரம்!!

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் சென்னை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

கிண்டியில் உள்ள அண்ணா பல்கழகத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்பு!! மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது இங்கே தான். இரவில் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுதிக்கு செல்லும் பொழுது வழியெங்கும் தவளைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், மான்களின் சத்தமும் என வேறு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்படும். காலையில் பார்த்தால் மைதானம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் முளைத்துக்கிடக்கும்.

பசுமையான மைதானம், வழியெங்கும் உதிர்ந்த பூக்களும், மர இலைகளும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய கலாட்டாக்கள் என்று இன்று நினைத்தாலும் இன்னுமொரு முறை அங்கே படிக்கலாம் என்ற ஆசை எழுகிறது.

கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் வரை நகரவாசிகளின் மழைக்கால அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது, மழைக்காலத்தில் சென்னையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் பரவாயில்லை... வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல?

இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு சென்னையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் சர்வசாதாரணமாகிவிடுகிறது.பிறகு சாலையெங்கும் தண்ணிர், சாலையெங்கும் குழிகள் என்று கூறி என்ன பயன்?

மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!

....

Wednesday, November 18, 2009

நாம் நாகரிகமானவர்களா? நதிகளைக் கேளுங்கள்..

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் நாகரிகமானவராகக் (Civilised,Fashionable) காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சிகை அலங்காரம், ஓட்டும் ஊர்தி, உபயோகிக்கும் தமிழ் அல்லது தமிழிஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடிக்கடி நமக்குள் வரும் சர்ச்சைகளில் பல, எது நாகரிகம்? எவர் நாகரிமானவர்? என்பதைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கிறோம்!!

உதாரணமாக, காதலர்தினத்தைக் கொண்டாடுபவர் தான் நாகரிகமானவர்? அல்லது நாகரிகமில்லாதவர்? என்பது போல!!

சரி, நாகரிகம் என்றால் என்ன?

நாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்!!

இந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாக நாகரிகமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்? முதலில் எங்கே குடியிருந்தார்கள்? இது போன்ற கேள்விகளைக்கு விடை தேடினால், நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் தோராயமாக 4500 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், நம் முன்னோர்கள் அனைவரும் நதிகளின் படுகைகளிலேயே முதலில் வாழ ஆரம்பித்ததாகவும் தெரிகிறது!!

இதனாலேயே நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் தில்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹம்பி, பாட்னா என அனைத்தும் நதிக்கரையிலேயை உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டை எடுத்தால் சோழர்கள் காவிரிக்கரையிலும், பல்லவர்கள் பாலாற்றங்கரையிலும், பாண்டியர்கள் வைகையாற்றின் கரையிலும் ஆட்சி செய்தனர்!!

இதில், கங்கை, காவிரி போன்ற நதிகளைப் பாராட்டாத கவிகள் இல்லை எனலாம்!! தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது!! 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது!! காவிரியின் கொடையால் தான் தஞ்சை, குடந்தை போன்ற ஊர்கள் நெற்களஞ்சியங்களாக கூறப்பட்டது. மக்கள் நாகரிகமாக வாழ்ந்து வந்ததன் அடையாளம் தான் சோழர்களின் கட்டடக்கலையும், பிரமிப்பூட்டும் கோயில்களும்!!

இப்படி நமது பண்பாடு, நாகரிகம் போன்றவை மேம்படக் காரணமாக இருந்த நதிகளின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது!! ஒன்று நதிகள் சீரழிக்கப்படுகின்றன அல்லது நதிகளின் பெயரால் மோதல்கள் நடக்கின்றன!!

இன்று நாம் நாகரிகமாக கருதும் ஒவ்வொரு செயல்பாடும், தயாரிப்பும் நதிகளை சீரழிப்பதாகவே உள்ளது. எகனாமிஸ்ட் என்னும் வாராந்திரி, "கங்கையைப் பாருங்கள், இந்தியாவில் ஏன் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் நீர் சார்ந்த தொற்று நோயில் இறக்கிறார்கள் என்பது தெரியும்" என்று கூறுகிறது. புனிதத் தலமாகக் கருதப்படும் காசியில், "கங்கையில் குளிப்பது 120 மடங்கு தீங்கானது" என்னும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகமும் இதற்கு எந்த வித்திலும் சளைத்ததல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகர்களின் மனிதக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்த காவிரி நீர் தான் கருர், திருச்சி போன்ற நகரங்களின் குடிநீர். பெரும் நகரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கலாம், ஆனால் கொடுமுடி, முசிறி போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் என்ன செய்வார்கள்!! அவர்களும் மனிதர்கள் தானே!! நெசவுத்தொழிற் கழிவு, காகிதாலைக் கழிவு, தோல் தொழிற்சாலைக்கழிவு என அனைத்துமே கலப்பது ஏதாவது ஒரு நதியில் தான்!!


சென்னையில் கூவம் என்பது நதியின் பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம்!! கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான்!! நூறு ஆண்டுகளூக்கு முன்பு கூட கூவத்தில் குளிப்பதும், படகுச் சவாரியும் நடந்தது என்றால், இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை!!

கோவை நகரைக் கடந்து செல்லும் நொய்யல் நதியில் தான் அன்றாடம் துணிகளைத் துவைத்திருக்கிறோம் என்று என் தந்தை கூறுவதை இன்று என்னால் நம்ப முடிவதில்லை. எனது பாட்டன், முப்பாட்டன், அவர்களது முன்னோர் என அனைவரும் கோவை அருகே உள்ள சூலூரில் நொய்யல் நதிக்கரையில் கொடிக்கால்களை வளர்த்து, இன்ன பிற விவசாயம் செய்து வாழ்க்கையையே நடத்தியிருக்கிறார்கள். என் மூதாதையரை வளர்த்த நொய்யல் நதி இன்று சாக்கடையாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் கண்ணிர் வருகிறது.

இன்று, நதிகளின் பெயரால் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இல்லை என்பது இன்னோரு விஷயம். மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படும் நமது ஜனநாயகமும், அரசியலமைப்பும் நம்மை ஆள்பவர்களும் நதிகளால் வரும் மோதல்களை தடுக்கவோ அல்லது உடன்பாடு ஏற்படுத்தவோ முயலவில்லை!! ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை!! இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள்? யார் பண்பட்டவர்கள்?


நமது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவை குடும்ப அமைப்பு, உடுக்கும் உடை போன்றவற்றால் மட்டும் முடிந்து விடுவதில்லை! நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் தான் உள்ளது! நம்மை ஆள்வோரிடம் "நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்" என்பதைப் பற்றி என்றாவது கேட்டிருக்கிறோமா? கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது என்பது வேறு!!

நம்மால் முடிந்தால் நம் வீட்டுக் கழிவுகள், நம் தோட்டத்திற்குச் செல்லும் முறையில் திருப்பினாலே போதுமானது. கழிவுக்குழாய்கள் இல்லாத கிராமங்களில் சென்று பார்த்தால் இந்த முறை கடைப்பிடிக்கப் படுவதைக் காண முடியும்.


நாம் நாகரிகமானவர் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை "காட் மஸ்ட் பி கிரேசி" என்ற திரைப்படத்தைப் பாருங்கள்!! பிறகு பதில் கூறுங்கள்!!

யார் நாகரிகமானவர்கள்? பழங்குடிகளா? அல்லது நகரத்தாரா? என்று!!

இது ஒரு மீள் பதிவு - சில மாறுதல்களுடன்!!

Tuesday, September 1, 2009

முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

எல்லாருக்கும் வணக்கமுங்க!!

எங்க இனத்துக்காக ஒரு கடுதாசி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேங்க.

முந்தாநேத்து மசினகுடி காட்டுக்குள்ள மேய்ஞ்சுட்டு இருக்கறப்ப மேதாவி நண்பன் சொன்னது திக்குனு இருந்ததுங்க. ஊர்ப்பக்கம் எங்க இனத்தைப் பத்தி நெறயாத் தப்பான சேதி வருதுன்னு சொன்னானுங்க அந்தக் குரங்கு நண்பன்.

என்ன தான் சொல்லுங்க மேதாவிக சொன்னா சரியாத் தாங்க இருக்கும்?

எங்களுக்கு, உங்கள மாதிரி ஆறறிவு இல்லாததால எங்க தரப்பு நியாயத்தக் கேக்கணும்னு உங்களுக்கு தோணாது இல்லீங்களா! அதுக்குத் தாங்க இந்த கடுதாசி.

ஐயா, ரெண்டு வாரமா எங்க சாதிசனம் தேயிலைக் காட்டுக்குள்ள வந்துட்டோம்னு ரொம்ப குறைப்பட்டுக்கறீகளாம். ஆனா அதெல்லாமே எங்க வூடு தான்னு சொன்னா யாராவது கேக்கவா போறாங்க?

ஐயா உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்களா?

இன்னிக்கு தேயிலைத் தோட்டமா இருக்கற காடுக எல்லாமே ஒரு காலத்துல எங்க வூடா இருந்துச்சுங்க. நாங்க இலை தழை தேடீட்டு கூடலூர்க் காட்டுல இருந்து அப்படியே தர்மபுரிக் காடு வரைக்கும் போயிட்டு வந்து பாத்தா எங்க காடெல்லாம் தேயிலைக்காடா மாறீடுதுங்க. சரி, பாவம் உங்களுக்கு சோறு போடறதே அந்த தேயிலைத் தோட்டம் தானன்னு நாங்களும் உங்க இடத்துக்கு வர்றதில்லைங்க.


எங்க பசியாறனும்னா, ஒரு நாளுக்கு தோராயமா 250 கிலோக்கு திங்கனும்ங்க. இலை தழை, மூங்கில் குச்சி, மரப்பட்டை எல்லாந்தானுங்க எங்களுக்கு சோறு! அப்ப எங்க கூட்டத்தோட நாங்க வாழனும்னா எங்களுக்கு எத்தாப் பெரிய காடு வேணும்னு நீங்களே சொல்லுங்க! அந்தக் காட்டுல மேஞ்சு ஒரு மாசமாச்சு அங்க போலாம்னு போனா ஒன்னு காட்டை எல்லாம் எரிச்சிடறாங்க, இல்லீன்னா கம்பி வேலி போட்டுடறாங்க. அப்புறம் நாங்க என்னங்க பண்ணுவோம்?
இப்படித் தாங்க பசி அதிகமாகி நாங்க தேயிலைத் தோட்டத்துக்குள்ள வந்துட்டோம். ஆனா உங்க பொழப்புல மண்ணப் போடனும்னு நாங்க கொஞ்சங் கூட நெனச்சது இல்லீங்க!

இப்படித்தாங்க இலைதழை தேடீட்டு, எங்க சித்தப்பனூட்டுத் தம்பி குடும்பத்தோட வழிதெரியாம வந்துட்டானுங்க வாளையார்க் காட்டுப்பக்கம். ஏதோ ரயில் தண்டவாளமாம், அதுல போய் மாட்டிக்கிட்டாங்களாம் அவன் சம்சாரமும் குழந்தையும். சொல்லவே நாக்கு தழுதழுக்குதுங்க, அவன் சம்சாரம் மாசமா வேற இருந்துச்சாம். அவன் அழுத அழுகை இருக்கே.. காடே அலறீருச்சுங்க. இப்படி இந்த ரயில் தண்டவாளத்துல அடிபட்டு மட்டும் எங்க சனத்துல இருந்து 8 பேர் இறந்துட்டாங்கங்க.

இது இப்படீன்னா, எங்களப் பாக்கறதுக்காக வர்ற பயலுக பண்றத சொல்லமுடியலங்க. இவனுக குடிக்கற பாட்டிலு, திண்ணு போடற பிளாஸ்டிக்னு அட்டகாசம் தாங்க முடியலங்க. எங்களுக்கு தான் உங்கள மாதிரி ஆறறிவு இல்லீங்களே! இலைதழையோட நீங்க கொழுப்பெடுத்துப் போட்ட பிளாஸ்டிக்க முழுங்கீட்டோம்னா அவ்ளோ தாங்க! உங்களுக்கெல்லாம் காப்பீடு கீப்பீடெல்லாம் இருக்கு, எங்களுக்கு என்னங்க இருக்கு?
எங்க காட்டுப்பக்கம் வந்த வானம்பாடி ஒன்னு கிட்ட இந்தக் கதையெல்லாஞ் சொன்னனுங்க. அந்த வானம்பாடி சொல்றபடி பாத்தா இது ஏதோ நம்மூர்ல மட்டுமில்லியாமாங்க. ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகனு எல்லாப் பக்கமும் எங்களக் கொல்றதுலயே குறிக்கோளா இருக்காங்களாம். நூறு வருசத்துல எங்க சாதிசனத்துல 10 லட்சம் பேரக் கொன்னு சாய்ச்சுட்டீங்களாம்.

இப்படியே போச்சுன்னா, நீங்க எங்கள ஊட்டி போகும்போதோ, முதுமலைக் காட்டுலயோ, உடுமலை வழியா மூணார் போகும் போதோ, ஆனைமலைக் காட்டுலயோ, வால்பாறையிலோ எல்லாம் பாக்க முடியாதுங்க. ஏதோ கிண்டிப்பூங்கா, வண்டலூர்னு ஊருக்கு ஒன்னாத் தாங்க பாக்கனும்.

என்னாதாஞ் சொல்லுங்க அது அது இருக்க வேண்டிய இடத்துல இருந்தாத் தாங்க நல்லது.

உங்கள மாதிரி எங்களுக்கும் புள்ள குட்டியோட வூட்டுல வாழத்தாங்க ஆசையா இருக்கும்?

ஏதோ என் மனசுல பட்டத எல்லாம் இந்தக் கடுதாசில கொட்டீட்டேங்க.

என்னடா இந்த யானை சொல்றத எல்லாம் கேக்கணுமான்னு நினைச்சீங்கன்னா, உங்களப் பத்தி எனக்கு சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க. நீங்க புள்ள குட்டியோட நல்லா இருங்க.

ஐயோ பாவம்டா இந்த யானைகனு நினைச்சீங்கன்னா இந்தக் கடுதாசிய உங்க நண்பர்களுக்கெல்லாம் அனுப்புங்க! நீங்க மவராசரா இருப்பீங்க!

நீங்க என்ன நெனச்சாலும் உங்கள வரவேற்க நாங்க காட்டுல காத்துட்டே இருப்பமுங்க. மறக்காம எங்களப் பாக்க வாங்க.

முகவரி தெரியுந்தானுங்க?

வர்றனுங்க,

முதுமலைக் காட்டுல இருந்து,
யானைமுகன்.
**

Tuesday, August 11, 2009

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

2030ம் ஆண்டு - "மின்சக்தியை வழங்கி நாட்டின் வறுமையை ஒழித்த ஞாயிறைப் போற்றி வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தின் முதல் நாளை சூரியசக்தித் திருநாளாகக் கொண்டாடவோம்" என்று அரசு ஆணையிட்டால் எப்படி இருக்கும்?

ஏப்பா இருக்கற பண்டிகைகள் போதாதா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் உலகெங்கும் நடந்து வரும் மாற்றங்களைக் கவனிக்கையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

மின்சக்தி இல்லாமல் நம்மால் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடிகிறதா? அப்படி மின்சக்தி உற்பத்திக்காக இப்பொழுது நாம் பயன்படுத்தும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்வை தீர்ந்து விட்டால் என்ன செய்வோம்?

"நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்கள் யாவும் இந்த நூற்றாண்டிற்குள் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்று என்ன என்று பார்க்க வேளையில், காற்றாற்றல், சூரிய சக்தி, உயிரெரிபொருள், நீர்மின்சாரம், கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளைக் கூறலாம்.

இதில், சூரியசக்தியை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய அரபு நாட்டின் அரசு, அபுதாபியை அடுத்து உருவாக்கி வரும் மஸ்தார் என்னும் நகரின் மொத்த மின்சக்தி தேவையையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்வது என்று திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் என்ற நகரத்தின் மின்சக்தித் தேவையைச் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நம் மத்திய அரசும் "2020ம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவிற்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய முதலீடு செய்யும்" என்று அறிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியை மின்சக்தி உற்பத்தியின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமுடையது. உழவுத்தொழில், மருத்துவம், கல்வி, தொழில்துறை என எந்தத் துறையானாலும் மின்சக்தியின் பங்கு இன்றியமையாதது. ஆக மின்சக்தியின் வளர்ச்சி வறுமையை ஒழிக்க வல்லது!

இரவில் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

கருநீல வண்ணத்தில் வெவ்வேறு நாடுகளும், கண்டங்களும் அழகாக காட்சியளிக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் படங்களைப் பார்க்கும் போது ஒளிவெள்ளமாகவும், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இருட்டாகவும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சி போல ஒளியும் காட்சியளிக்கும்.

இந்தியாவின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் ஓரளவு ஒளியும், இருண்டும் காட்சியளிக்கும்.

"அட, எவ்வளவு அழகா இருக்குது பாரேன்" என்று நாமும் ரசித்துவிட்டு செல்வதுண்டு!

ஆனால், எப்போதாவது இந்த இருளை வறுமையோடு ஒப்பிட்டதுண்டா? நம் நாட்டில் இன்னமும் 30 சதவிதத்தினர்க்கு மின்சக்தி கிடைக்காத வறுமை நிலையைத் தான் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இருள் காட்டுகின்றன. இப்படி நாட்டின் வறுமையைப் போக்க இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதே!

இப்படி சூரியசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு முயல்வது இந்தத் துறை சார்ந்த தொழில்துறையை வளர்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்!

இங்கே, தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே!

இது போல, நம் நாட்டில் சூரியசக்தியின் உற்பத்தியைப் பெருக்கும் பொழுது நம் நாடும் இத்துறையில் முன்னனியில் வருவதுடன் இலட்சக் கணக்கானோர்க்கு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது!

சூரியசக்தியை ஏதோ அரசு மட்டும் தான் நிறுவ வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நம் வீடுகளில், அலுவலகங்களில், குடியிருப்புகளில் கூட நிறுவலாம். 20000 ரூபாய் செலவளித்து நம் வீட்டின் கூரையில் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் கருவியை நிறுவி விட்டால் போதும். வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, நான்கைந்து குழல் விளக்குகள், காத்தாடிகள் போன்றவற்றை இயக்கலாம். ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.

இது தொடர்பான விளம்பரங்களைச் சில மாதங்களுக்கு முன்பே கோவை ரெயின்போ பண்பலையில் கேட்டிருக்கிறேன்!

இப்படி நாமே நமக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டால் மின்வெட்டில் விடுபடுவதுடன், நாட்டின் முன்னேற்றத்திலும் பங்குபெற முடியுமே! ஆகவே..

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

உங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும்! இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷ்லயும் வாக்களியுங்கள். பலரும் படிக்கட்டும்.
.

Thursday, August 6, 2009

கானல் நீர் - அறிந்ததும் அறியாததும்!

உங்களுக்குக் காப்பி குடிக்கப் பிடிக்குமா? உங்களிடம் ஒரு கேள்வி!

நீங்கள் குடிக்கும் காப்பியில் எத்தனை லிட்டர் தண்ணீர் உள்ளது தெரியுமா?

ஒரு தேக்கரண்டி காப்பியைத் தயாரிக்க 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்!

எப்படி?

காப்பிச் செடியைப் பயிரிடுவதில் இருந்து, நமக்கு வீட்டில் குடிக்கும் பக்குவத்தில் வந்து சேரும் வரை செலவாகும் தண்ணீர் தான் மேலே குறிப்பிட்ட 150 லிட்டர். இதை ஆங்கிலத்தில் VIRTUAL WATER ( கானல் நீர் ) என்னும் சொல்லால் குறிப்பிடலாம்.

ஒரு பொருளைப் தயாரிப்பதில் உற்பத்தியாகும் எரிவாயுவைக் கார்பன் கால்தடம் (CARBON FOOTPRINT) என்பதைப் போல, செலவாகும் நீரின் அளவை நீர்க் கால்தடம் ( WATER FOOTPRINT) என்று கூறுகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் சில பொருள்களின் நீர்க் கால்தடம் கீழே...
* ஒரு காரைத் தயாரிக்க தோராயமாக 150000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம்.
* ஒரு கிலோ மாட்டுக்கறியைத் தயாரிக்க 15000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்.
* ஒரு கிலோ அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க தோராயமாக 1000 முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.

கடந்த வருடத்தில், முன்னனி ஏற்றுமதி நாடுகளின் பட்டியலைப் பார்த்தேன். இந்தியாவின் இடம் மிகவும் கவலைக்குறியாதாகவே உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நம்மை விடச் சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிராசில், கனடா போன்ற நம்மை விடப் பெரிய நாடுகளும் ஏற்றுமதில் முன்னனியில் உள்ளன.

இதில் நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நாடுகள், தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பெரும்பாலும் இறக்குமதியே செய்கின்றன.

அதிகமாக நீர் தேவைப்படும் உணவுப்பொருள்கள், ஆடை உற்பத்தி மற்றும் இதர பொருள்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து குறைந்த செலவில் (மதிப்பில்) இறக்குமதி செய்துவிட்டு மூளையை மட்டும் மூலதனமாக வைத்துத் தயாரிக்கும் சேவைகளை அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்வதை நாம் அறிவோமா?

இந்தியாவில் நாமோ ஒரு இடத்தில் காப்பி, தேயிலை, பருத்தி உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் இதர தாணிய வகைகள் என உற்பத்தி செய்ய அதிகளவு தண்ணீரை செலவழித்து விட்டு, இன்னொரு இடத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் உள்ளோம்!


மேலே உள்ள படத்தில் பச்சை வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்தடம் குறைவாக உள்ளதையும் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்த்தடம் அதிகமாக உள்ளதையும் காணலாம். பச்சையில் உள்ள நாடுகளில் இருந்து தான் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளுக்கு உணவு தாணியங்கள் ஏற்றுமதியாகிறதாம்! குறைந்த விலைக்கு!!

கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து நாம் வாங்குவதப் போல நம் நாட்டில் அதிகமான நீரைச் செலவழித்துத் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்றால் எப்படி இருக்கும்?

இப்படி ஒரு காலம் வருமா என்றால் அதற்கான அறிகுறிகள் லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பொருளும் நுகர்வோரின் கைகளில் வந்து சேரும் வரை செலவாகும் நீரின் ( நீர்க் கால்தடம் ) அளவை விற்பனை அட்டையில் அச்சிட வேண்டும் என்று ஐரோப்பாவில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி இப்படி அச்சிடுவதால் என்ன பயன்?

நுகர்வோரான நமக்கு ஏற்படவிருக்கும் விழிப்புணர்ச்சி தான் மிகப்பெரிய பயன். நாம் அன்றாடம் குடிக்கும் காப்பியைத் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றால் குடிக்கும் நமக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! நாம் பயன்படுத்தும் பொருள்களையும், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் தெரிய ஆரம்பிக்கும்.



இன்று பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் புட்டியில் அடைத்த குடிநீரின் விலை 1 லிட்டர் 12 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்க எப்படி உள்ளது? ஆனால் ஐரோப்பாவில் தயாராகும் ஏவியன் நிறுவனத்தின் குடிநீரின் விலையோ 1 லிட்டர் 150 ரூபாய்! இதிலிருந்தே தெரிகிறதே அவர்கள் தெளிவாக உள்ளார்கள் என்று!

இதே போல ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்க ஆரம்பிக்கும் போது நீரின் அருமையும், வளரும் நாடுகளுக்கு நேர்ந்து வரும் அநீதி பற்றிய விழிப்புணர்வும் சிறுதுளிகளாகப் பரவ ஆரம்பிக்கும்!

சிறுதுளிகள் தானே பெருவெள்ளமாகிறது!
உங்கள் கருத்துகளைக் கீழே பகிருங்கள்!
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்

Monday, July 27, 2009

குப்பை மேடா நம் நாடு?

காலை எழுந்து உங்கள் வீட்டுக் கதவைத் திறக்கிறீர்கள். ஓர் அதிர்ச்சி! சந்தேகிக்கும் படியாக ஒரு அட்டைப்பெட்டி வீட்டின் முன்பு கிடக்கிறது. என்ன நினைப்பீர்கள்?

யார் அனுப்பி இருப்பார்கள்?

பேசும்படத்தில் கமல் அனுப்பும் அட்டைபெட்டி நினைவிற்கு வருகிறது! ஏதாவது சூனிய வேலையாக இருக்குமோ என்றும் பயப்படுகிறீர்கள். சரி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று திறக்கிறீர்கள்.

அருவருக்கத்தக்க வகையில் வீட்டுக் குப்பை அனைத்தும் அழகாக பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்ன செய்வீர்கள்? காவல் நிலையத்திற்கு செல்வீர்களா அல்லது "யார்டா போட்டது"னு கத்துவீர்களா?

இதுவே அந்த குடியிருப்புப் பகுதியின் பிரபலமானவர் தான் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ஓரிரு நாட்களுக்கு முன்பு பார்த்த செய்தியின் எடுத்துக்காட்டு தான் மேலே குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து பிராசிலிற்கு வந்திறங்கிய கப்பலை சோதனையிட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கப்பல் முழுவதும் இங்கிலாந்தின் கழிவுகள் அடைக்கப்பட்டிந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 1400 டன் அளவிற்கு கழிவுகள் வந்திறங்கியதாம். நம் வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் சேர்த்தால் கூட 200 கிலோவைத் தாண்டாது.
மருத்துவமனைக் கழிவுகள், பயன்படுத்திய ஆணுறைகள், மின்னனுப் பொருள்களின் கழிவுகள், இதர குப்பைகள் என அதில் இருந்தனவாம். இது அனைத்தும் மறுசுழற்சிக்காக என்ற பெயரில் அனுப்பப்பட்டவை. இப்போது பிராசில் நாடு இங்கிலாந்திடம் கண்டனத்தை தெரிவிள்ளதாம்.

இது பிராசிலில் மட்டும் நடப்பதாக எண்ண வேண்டாம்.

இது போல கழிவுகளைக் கொட்டுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும்(??) நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடமாம். அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் இருந்து மறு சுழற்சிக்காக என்ற பெயரில் ஆண்டுதோறும் பெருமளவில் மின்னனுக் கழிவுகள், இதர கழிவுகள் கொட்டப்படுகிறதாம்.

இது போன்ற மின்னனுக் கழிவுகளில் இருந்து பாகங்களை பிரிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது என சேரிப் பகுதியான தாரவி போன்ற இடங்களில் நடக்கிறதாம்.

சென்னைக்கு எப்படி பெருங்குடியோ அது போல வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

இதற்கு என்ன காரணம்?

நம் நாட்டின் சட்டங்களில் இருக்கு ஓட்டை என்று கூறினாலும், வளர்ந்த நாடுகளில் இருக்கும் மின்னனு இயந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு தான் மூலக்காரணம்.

புதிதாக அலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, கணினி என எந்த வகையாக பொருளாக இருந்தாலும் வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை. தற்பொழுது பயன்படுத்தும் பொருளை என்ன செய்வது? பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தான் இப்படி வளரும் நாடுகளை குப்பையாக்குகின்றன.

இந்தப் போக்கு இப்பொழுது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. நாம் குப்பையை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய முடியும்?

* பொருளை குப்பையில் போடுவதற்கு முன்பாக யாருக்காவது தேவையிருக்கிறதா என்று யோசிக்கலாம்.
* ஒலிப்பேழைகள் (CD ) என்றால் பக்கத்தில் இருக்கும் நூலத்திலோ அல்லது நண்பர்களுக்கோ கொடுக்கலாம்.
* மறுசுழற்சிக்கென்று வைத்திருக்கும் இடங்களில் பொருள்களை கொடுக்கலாம்.

சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்
Related Posts with Thumbnails