Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Saturday, January 8, 2011

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்..

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் 
உப கடவுளர்களின் அணிவகுப்பாம்
ஊடக ஆராதனையில் ஏலமாம்
ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்!
ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம்
கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!!

பத்து கோடிக்கொரு கடவுள்
எட்டு கோடிக்கொரு கடவுள்
ஆறு கோடிக்கொரு கடவுள் 
கோடானுகோடி ஏழை பக்தர்களுக்காக!!

நாட்டின் முதன்மை மார்க்கம்
நாடாள்பவர் விரும்பும் மார்க்கம்
நாடாள் மன்றம் போல 
இம்மார்க்கத்திலும்
இல்லை வேறுபாலருக்கு இடஒதுக்கீடு!!

கடவுளர்கள் விரும்பும்,

குளிர்பானமே தீர்த்தமாக
இனிப்புகளே பிரசாதமாக
உணவுகளே அமுதமாக
ஆனார்கள்
பக்தர்கள் மாக்களாக!!

வான்பொய்த் தாலும் விசாரமில்லை
மண்மலடானாலும் மனக்கவலை யில்லை
சுயம்அழிந்தாலும் சிந்தையிற் கலக்கமில்லை
சஞ்சலம் தீர்க்க மார்க்கமுண்டு
களிப்பூட்டக் கடவுளர்களின் கிரிக்கெட்டுண்டு 

மாசியில் வருதே உலகக்கோப்பை
வைகாசியில் வருதே உள்ளூர்க்கோப்பை
உலகக்கோப்பையோ உள்ளூர்க்கோப்பையோ
கடவுளர்களின் தரிசனம் ஒன்றே போதும்!!

கடவுளர்க் கிடையில் ஆட்டம்
பக்தர்கள் மனதில் கொண்டாட்டம்
பண முதலைகளின் வெறியாட்டம்
ஆட்டமானதே சூதாட்டம் இகலாட்டம்
பக்தகோடிக்கு 
மிஞ்சியதே இளிச்சவாய்ப் பட்டம்.


Friday, March 19, 2010

பாவம்!! வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்கள்!!

சில சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டேன்...

"வெல்கம் டு XYZ பாங்க்!! டு கண்டினியூ இன் இங்கிலீஸ் ப்ரெஸ் 1, ஹிந்தி மேன் ஜாந்தாரி கேலியே தோ தபாய்"

"1"

"ப்ளீஸ் எண்டர் யுவர் சிக்ஸ் டிஜிட் போன் பாங்கிங் பின் ஃபாலோடு பை #"

"123456#"

"ப்ளீஸ் எண்டர் யுவர் பின்"

"****"

"இஃப் யு ஆர் எக்ஸிஸ்டிங் கஸ்டமர் ப்ரெஸ் 1"

"1"

"ஃபார் கிரெட் கார்டு சர்வீசஸ் ப்ரெஸ் 1, ஃபார் என்.ஆர்.ஐ. சர்வீசஸ் ப்ரெஸ் 2"

"2"

"யுவர் கரெண்ட் பாலண்ஸ் இஸ் ...... ஃபார் அதர் சர்வீஸஸ் ப்ரெஸ் 4, டு ஸ்பீக் டு போன் பேங்கர் ப்ரெஸ் 0"

"0"

ooooooooo


"வணக்கம் திரு செந்தில்வேலன்!! லாவண்யா பேசறேன்!, நீங்கள் போன் பேங்கிங் எண்ணைப் பயன்படுத்தியதமைக்கு நன்றி!!"

"சரீங்க."

"உங்க அம்மா பேரு சொல்லமுடியுமா?"

"பரமேஸ்வரி"

"உங்க ஈ.மெயில் ஐடி சொல்லுங்க"

"abcd@abcd.com"

"மிக்க நன்றி திரு செந்தில்வேலன். உங்கள் அக்கவுண்ட சரி பார்த்துவிட்டோம். உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது? அதுக்கு முன்னாடி நீங்க இப்ப எங்க இருந்து கூப்பிடறீங்க?"

"துபாய்ல இருந்து.."

"ஓகே. உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது?"

"எனக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டி-மேட் அக்கவுண்ட் திறப்பது பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கணும்ங்க"

"ஓகே. டி-மேட் அக்கவுண்ட் பத்தி தெரிஞ்சுக்க நீங்க இந்தியா வரும் பொழுது வங்கிக் கிளைக்குப் போகணும்"

"சரி.."

"மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எஸ்.ஐ.பி. பற்றி சொல்வதற்கு எங்க ஆபீஸர் உங்களக் கூப்பிடுவாரு. உங்க போன் நம்பர சொல்ல முடியுமா?"

"123456789.."

"ஓகே.. அவங்க உங்கள ஒன்னு அல்லது ரெண்டு நாள்ல கூப்பிடுவாங்க"

"சரிங்க."

"உங்களுக்கு நாங்க இன்சுயூரன்ஸ் பத்தி கொஞ்சம் சொல்ல விரும்பறோம்"

"சரிங்க"

"இந்தியால உங்க பெற்றோர் இருக்காங்களா?"

"ஆமாங்க"

"அவங்களுக்கு வயசு என்னங்க ஆகுது?"

"அம்மாக்கு 60.. அப்பாக்கு 70.."

"அவங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு இன்சுயூரன்ஸ் பாலிசி இருக்கு"

"??"

"இது ஆக்ஸ்டண்ட் இன்சுயூரன்ஸ்... அவங்களுக்கு வயசாயிடுச்சு இல்லீங்களா? ஏதாவது கால் முறிவு, கை முறிவு எல்லாம் ஏற்பட்டுச்சுன்னா எங்க பாலிஸி கவர் பண்ணிக்கும். அதே போல விபத்தோ அல்லது நடமாட முடியாமப் போயிட்டாங்கன்னாலும்... இது உதவும்.. "

"இது எவ்வளவு ப்ரீ..??"

"திரு செந்தில்வேலன் முதல்ல நான் (எல்லாத்தையும்) சொல்லிடறேன்"

"??"

"அவங்களுக்கு ஏதாவது சாலை விபத்து ஏற்பட்டுச்சுன்னாலும் இந்த பாலிசி கவனிச்சுக்கும்!! ரெண்டு பேருக்கும் சேர்த்து மொத்த கவரேஜ் 25 லட்சம்..இதுக்கு நீங்க மெடிகல் டெஸ்ட் எல்லாம் பண்ண வேண்டாம். இப்போ ஆக்டிவேட் பண்ணினா.. இப்போ இருந்தே பயனிற்கு வந்துவிடும்"

"ஓ.."

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது.."

"ஒரு நிமிசம்ங்க.. இந்த பாலிசி பற்றிய பிரவுசர (Brouchure) எனக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்ப முடியுமா?"

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது எல்லாம் உங்க கிரெடிட் கார்டு நம்பரக் கொடுத்தா போதும் அல்லது உங்க அக்கவுண்ட்ல இருந்து நாங்க ப்ரீமியத்துக்கு எடுத்துக்குவோம்.."

"லாவண்யா.. நீங்க இன்னும் ப்ரீமியம் எவ்வளவுனு சொல்லவே இல்லீங்க"

"8900 மட்டும் தாங்க வருஷத்துக்கு.."

"ஏங்க இதுல.. மற்ற நோய்களுக்கு எல்லாம் கவரேஜ் இல்லீங்களா?"

"இல்லீங்க. இது வெறும் ஆக்சிரெண்ட் கவரேஜ் மட்டும் தான்.. இத நீங்க ஆக்டிவேட் பண்ண செய்ய வேண்டியது.."

"ஏங்க.. மொதல்ல நான் இந்தப் பாலிசியப் பத்தி படிக்கணும்ங்க.."

"உங்க எண்ணம் எனக்கு புரியுது. ஆனா பாங்க் கைடுலைன்ஸ் படி நாங்க மெயில்லயோ, துபாய்க்கோ அனுப்ப முடியாது. இந்தப் பாலிசிய ஆக்டிவேட் பண்ணிட்டா நாங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம். வீட்டுல இருக்கறவங்கள FAX பண்ணச் சொல்லலாமே.."

"எனக்கு இப்பவே முடிவு பண்ண முடியாதுங்க..ரெண்டு நாள் கழிச்சு நானே கூப்பிடுறேன்.."

"உங்களுக்கு என்ன யோசனைனு சொல்லுங்களேன். நான் உதவறேன்..."

"இல்லீங்க.. இந்த டைப் இன்சுயூரன்ஸ் பற்றி நான் இன்னும் யோசிக்கலை"

"இந்த ப்ரோடக்ட் இல்லீன்னா.. கொஞ்சம் குறைந்த ப்ரீமியத்துக்கு ஒரு பாலிசி இருக்கு.."

"@#$@%#"

"வருஷத்துக்கு ப்ரீமியம் வெறும் 4500 ரூபாய் தான்.."

"நான் என்ன சொல்ல.."

"பெரியவங்களுக்கு இந்த டைப் இன்சுயூரன்ஸ் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். அவங்க ஏஜ்க்கு என்ன வேணாலும்.."

"எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க.."

"ஓகே திரு செந்தில்வேலன்!! உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?"

"ஆமாங்க"

"உங்க பேருல இருக்கா?"

"ஆமாங்க"

"நீங்க ஏன் ஹோம் இன்சுயூரன்ஸ் எடுக்கக் கூடாது?"

(இதுவேறயா?)

"சுனாமி, பூகம்பம், திருடு போன்ற எல்லாவற்றிற்கும் கவரேஜ் இருக்குங்க"

(ஆகா.. டிசைன் டிசைனா பீதியக் கிளம்பறாங்களே..)

"இல்லீங் மேடம். நான் அதப் பத்தியும் யோசிக்கவே இல்லை.."

"ஓகே திரு செந்தில்வேலன். உங்களுக்கு நான் வேற ஏதாவது உதவி...?"

(நான் எதுக்கு போன் பண்ணினேன்?)

"இல்லீங்க"

"உங்கள் கேள்விகளுக்கு நல்ல விதத்தில் பதில்கள் கிடைத்திருக்கும்னு நினைக்கறேன். எங்க வங்கிக்குக் கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி!!"

"நன்றிங்க"

போனை துண்டித்த பிறகு "கிர்ர்ர்"ரென்று இருந்தது. அரை மணி நேரம் பேசிய நமக்கே இப்படி என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாள் முழுதும் பேசும் வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்களின் நிலைமை எப்படி இருக்கும்?

மார்ச் மாதம் 20ம் தேதியாயிற்று.. அவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்!!
...

Tuesday, February 2, 2010

டொயோட்டாவின் டோட்டல் ரீகால் (Toyota - Total Recall)

டொயோட்டா நிறுவனமா இப்படி?

இது தான் வர்த்தகத்துறை, தொழிற்துறை, பங்குச் சந்தை, சாமான்ய மக்கள் என அனைவரும் கேட்கும் கேள்வி!!

தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதே நமக்கு டொயோட்டா நிறுவனத்தின் பெயரும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு தரக்கட்டுப்பாட்டில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது.

இன்று தொழிற்சாலைகளில் புழக்கத்தில் உள்ள 5S (Seiri - வகைப்படுத்து, Seiton- ஒழுங்குபடுத்து,Seiso- சுத்தப்படுத்து,Seiketsu - நிலைப்படுத்து, Shitsuke - கடைப்பிடி) கொள்கைகள், கழிவுகளை அகற்றும் 3M (Mudi - தேவையற்ற உற்பத்தி, Mura - தேவையற்ற நடமாட்டம்,Muri - தேவையற்ற காத்திருத்தல்) கொள்கைகள், Kaizen, டொயோட்டா மேலாண்மைக் கொள்கைகள் என அனைத்துமே ஜப்பானியர்களும், டொயோட்டா நிறுவனத்தினரும் ஆரம்பித்தவையே.

இது போன்ற தரக்கொள்கைகளைக் கடைப்பிடித்து தர நிர்ணயத்தில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கே டெமிங்க்ஸ் போன்ற உயரிய தர நிர்ணய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த டெமிங்க்ஸ் விருதை லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுவது நல்லது!!

இப்படி தரத்தில் முன்னோடியாக விளங்கிய டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் (Accelerator Pedal) முன் செலுத்தும் விசையின் கீழ் உள்ள கால்மிதியில் கோளாறு இருப்பதாக வெளியான அறிவிப்பு தான் "டொயோட்டா நிறுவனத்திலா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

"இந்தக் குறைபாடு உள்ள கார்களில் விசை அழுத்தும் பொழுது எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்தக் குறைபாடு உள்ளதாகக் கருதப்படும் பல இலட்சம் கார்களைத் திரும்பப் பெற்றுச் சீராக்கித் தருவதாகவும் கூறியுள்ளது டொயோட்டா நிறுவனம்". 

பொருளாதாரப் பின்னடைவால் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பொழுதும் டொயோட்டா நிறுவனம் பெருமளவில் பாதிப்படையவில்லை. மேலும் தற்பொழுது வாகன உற்பத்தியில் உலகின் முதன்மை நிலைக்கும் வந்துள்ளது. இந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கது. கரோலா, RAV4, மேட்ரிக்ஸ், ஏவலான், கேம்ரி, ஹைலாண்டர், துண்ட்ரா, செக்கோயா ஆகிய கார்களில் இந்தக் குறைபாடு உள்ளது.

இந்த அறிவிப்பைப் பற்றி யோசிக்கும் பொழுது பல எண்ணங்கள் எழுகின்றன..

o தர நிர்ணயத்திலும், மேலாண்மைக் கொள்கைகளாலும் தலை சிறந்து விளங்கும் நிறுவனமானாலும் சின்ன கவனக்குறைவோ, திட்டமிடுதலில் குறையோ இருந்தால் "ஆனைக்கும் அடி சறுக்கும்" நிலை தான் ஏற்படும். 

o ஐம்பது ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் முன்னோடி, உலகெங்கும் மக்களால் மதிக்கப்படும் நிறுவனங்களுள் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனம், உலகில் கார் விற்பனையில் நம்பர் 1 போன்ற பெருமைகள் இருந்து என்ன பயன்? 

o வாடிக்கையாளர்களே முதலாளிகள் என்பதை உணர்ந்து அனைத்து கார்களை பழுது பார்க்கவுள்ள டொயோட்டா நிறுவனத்தினர் பாராட்டிற்குரியவர்களே!! 

o "There is no room for Mistakes" என்பதைப் போல சின்ன தவறு செய்தாலும் நம்பிக்கையிழப்பு, நேரவிரயம், பணவிரயம் எல்லாம் ஏற்படும் என்பதே டொயோட்டா விசயத்தில் நாம் கற்க வேண்டிய பாடம்!!

oo

Related Posts with Thumbnails