Wednesday, January 20, 2010

அதிகாலை ஓட்டம்..

"செந்தில்வேலன்.. வாட் ஹேப்பண்ட் டு யூ? எக்ஸாம் எழுதாம முழிக்கிற?"


"மிஸ்.. எல்லாமே மறந்து போன மாதிரி இருக்கு!"

"கண்டிப்பா ஒரு செண்டம் இருக்குனு உன்னையத் தான் சொல்லீட்டு இருக்கேன்.. இப்படிப் பேப்பரக் காலியா வச்சிட்டு இருக்கே"

"ஆமாங்.. மிஸ்.. எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. மாடர்ன் அல்ஜீப்ரா கூட மறந்த மாதிரி இருக்கு.."

"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு.. அட்லீஸ்ட் ஒன் மார்க், டூ மார்க்காவது எழுது.."

"சரீங் மிஸ்... "


பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்...

எல்லாரும் நன்றாகப் பரீட்சை எழுதுகிறார்கள். 'எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி ஆனது. நான் பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? நான் பொறியியல் கல்லூரியில் சேர முடியாதா?' என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, "லாஸ்ட் டென் மினிட்ஸ்" என்ற சத்தம் கேட்கிறது.

சில கேள்விகள் தெரிந்த மாதிரி இருக்கிறது. கட கட வென எழுதுகிறேன்.. 60 மார்க் வந்துவிடும்.. இன்னொரு பத்து மார்க் வரும்படி எழுதிட வேண்டும்.. "கால்குலஸ் கொஞ்சம் ஈஸியாச்சே.." என்று வேகமாக எழுதும் பொழுதே.. மணியடிக்கிறது....

செல்போனில் வைத்த அலார மணியடிக்கிறது.. மணி காலை ஐந்தாகிவிட்டது.

'எப்படி கனவின் "கிளைமாக்ஸ்" வரும்பொழுது எல்லாம் தூக்கம் தெளிந்து விடுகிறது? மீண்டும் ஒரு கால் மணி நேரம் தூங்கினால் தேர்வு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள முடியுமா? '

'சே.. எப்பொழுதும் இதே கனவு ஏன் வருகிறது? நான் தேர்வுகளில் தோல்வியுற்றதும் இல்லையே' என்ற எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன..

"இன்று ஏதாவது அலுவலகச் சந்திப்புகள் உள்ளவனவா? இல்லையென்றால் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கலாமே!!" அலைபேசியின் நாட்குறிப்பில் பார்க்கிறேன். நான்கு சந்திப்புகள் உள்ளன.

குளிர்காலத்தில் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்வது போன்ற கடினமான விசயம் வேறொன்றுமில்லை. காலை ஆறரை மணிக்குப் பேருந்தைப் பிடித்தால் தான் சரியான நேரத்திற்கு சென்றடைய முடியும். கொஞ்சம் தாமதமாகக் கிளம்பினால் அவ்வளவு தான் அன்றைய பொழுது சாலைப் போக்குவரத்து நெருக்கலிலேயே கழிந்துவிடும்.

பள்ளி நாட்களில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றதெல்லாம் இப்படித் தூக்கத்தை விட்டு ஓடுவதற்குத் தானா?

கனவில் வருவது போலத் தேர்வில் தோல்வியுற்றிருந்தால் இப்படி ஓட வேண்டியத் தேவையிருக்காதோ?

வீட்டின் வெளியே வந்து லிஃப்டின் உள்ளே செல்கிறேன். பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன் அவன் தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். இடது கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.

"என்னாச்சுங்க பையனுக்கு?"

"கீழ விழுந்துட்டாங்க.."

"ரெண்டு மூனு நாள் லீவு போடலாம் தானே?"என்றேன்.

"எக்ஸாம் இருக்கு அங்கிள்.."என்றான் அந்தச் சிறுவன்.

"என்ன எக்ஸாம்?"

"மேக்ஸ் அங்கிள்.."என்றான் ஆர்வமாக. சுளீரென்று இருந்தது.

"ஆல் த பெஸ்ட் தம்பி" என்று சொல்லச் சொல்ல "தாங்க்ஸ் அங்கிள்"என்று பேருந்தைப் பிடிக்க "ஓடினார்கள்" சிறுவனும் அவன் தந்தையும்!!

..
Related Posts with Thumbnails