Tuesday, June 23, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 1

அண்மையில் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

மதிய உணவு வேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான்..அதற்கு உறவினரோ "சோறுன்னு சொல்லாதே! சாதம்னு சொல்லு..!" என்றார்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.

"சாதம்" என்பது தூய தமிழ்ச்சொல் கிடையாது என்பது தான் வியப்பிற்குக் காரணம்.

"சோறு" என்பதே தூய தமிழ்ச்சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?

ஆனால் நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக்குறைவான சொல்..

******
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச்சொல்?


துப்புரவு தான் தூய தமிழ்ச்சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவது துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.

******
ஆசிர்வாதம் - வாழ்த்து

வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே!! அந்த இடத்தில் "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே.. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)

வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
.
.
.
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ்(drive) பண்ணி என்று தமிழ் பேசுபவர்களுக்கு இந்த பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் பதிவுகளை எழுத விரும்புவோருக்கு இந்தத் தொடர் பயனளித்தால் மகிழ்ச்சியே...


இன்ன பிற "அனுபவ"ங்களைப் பற்றி நமது பயன்பாட்டில் தமிழ் - 2
என்ற பதிவில்

14 comments:

வெண்காட்டான் said...

ethili tamil for akathi. used in eelam. nalla pathivu.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடருங்கள் தல.., வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வெண்காட்டான் said...
ethili tamil for akathi. used in eelam. nalla pathivu.
//

வருகைக்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
தொடருங்கள் தல.., வாழ்த்துக்கள்
//

வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி!

jothi said...

நல்ல பதிவு,.. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் செந்தில்,.. இடைவேளையுடன் எழுந்து வந்துவிட்ட திரைப்படம் போல் உள்ளது.

கண்ணா.. said...

நல்ல பதிவு செந்தில்..

இதே போல வழக்குசொற்கள் சில

நடுசெண்டர்

ஷாப்கடை

பஸ் ஸ்டாப்

பஸ்

இது போன்றவற்றையும் அடுத்தடுத்த பதிவில் குறிப்பிடுங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
jothi said...
நல்ல பதிவு,.. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் செந்தில்,.. இடைவேளையுடன் எழுந்து வந்துவிட்ட திரைப்படம் போல் உள்ளது.

//

ஜோதி அவர்களே, தங்கள் கருத்துக்கு நன்றி!

இன்னும் நிறைய வரவுள்ளது.. அடுத்த பதிவில் இந்த குறையை நிவர்த்தி செய்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//

கண்ணா.. said...
நல்ல பதிவு செந்தில்..

இதே போல வழக்குசொற்கள் சில

நடுசெண்டர்

ஷாப்கடை

பஸ் ஸ்டாப்

பஸ்

இது போன்றவற்றையும் அடுத்தடுத்த பதிவில் குறிப்பிடுங்கள்
//

கண்டிப்பாக எழுதுகிறேன் கண்ணா,

முதலில் தமிழ் போல உள்ள சொற்கள், பிறகு பிறமொழிக் களப்பு, கடைசியாக தமிங்கலம். ஆதரவிற்கு நன்றி!

நாகா said...

ஹூம் திங்க் பண்ண வைத்த யூஸ்ஃபுல் பதிவு.. :-)

கலையரசன் said...

அருமையான சொன்னீங்க.. எனக்கே நீங்க சொல்லிதான் "ஆசீர்வாதம்" என்பது வடசொல் என்பது தெரியும்.

நன்றி நிறைய தமிழ்சொற்கள் தெரியப்படுத்தியமைக்கு..

அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.

(மேல சில வடசொற்கள் பயன்படுத்தியிருக்கிறேன் என்று திட்டாமல் இருந்தா சரி...)

வினோத் கெளதம் said...

செந்தில் ஊர்ல இருந்து வந்தாச்சா,,!!

நல்ல இடுகை..தொடர்ந்து எழுதுங்கள்..நாங்களும் தெரிந்து கொள்கிறோம்..

Rajes kannan said...

நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

மிகவும் சிறப்பான இடுகை,. முகவை இராம் சுட்டியைத் தந்தார்.

//சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச்சொல்?//

துப்புரவு பயன்பாட்டில் சீர்கெடுக்கப்பட்டு இருந்தாலும் தூய்மை' என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

//அசுத்தம் - துப்புரவின்மை//

தூய்மை இன்மை அல்லது தூய்மையற்ற என்று சொல்வது சிறப்பாக இருக்கும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...
மிகவும் சிறப்பான இடுகை,. முகவை இராம் சுட்டியைத் தந்தார்.

//சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச்சொல்?//

துப்புரவு பயன்பாட்டில் சீர்கெடுக்கப்பட்டு இருந்தாலும் தூய்மை' என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

//அசுத்தம் - துப்புரவின்மை//

தூய்மை இன்மை அல்லது தூய்மையற்ற என்று சொல்வது சிறப்பாக இருக்கும்
//


கோவி.கண்ணன் அவர்களே.. வருகைக்கு நன்றி.. தூய்மை என்ற சொல்லும் சரியாகவே இருக்கும்.

கண்டிப்பாக மற்ற பதிவுகளையும் படித்துப் பாருங்கள்

Related Posts with Thumbnails