Friday, November 13, 2009

தலைக்குனிவு


நான்கு மணியாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இந்த அலுவலக கலந்தாய்வுக் கூட்டம் நடக்கும் என்று தெரியவில்லை. நிர்வாகத்தின் சென்ற காலாண்டு பற்றிய செயல்பாடுகள், இந்தக் காலாண்டில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை, மற்றும் அடுத்த காலாண்டில் செய்ய வேண்டியவை குறித்த விவாதம் என்பதால்கூட்டத்தின் நடுவில் நழுவ முடியாது.


"ஏன் தான் வாரக்கடைசியில் இது போன்ற கூட்டத்தை நடத்துகிறார்களோ? கூட்டம் 4:20 மணிக்கு முன்பு முடிந்தவிட்டால் 4:30 மணி வண்டியைப் பிடித்துவிடலாம். இல்லையென்றால் 5 மணி வண்டி தான். துபாயில் இருந்து ஷார்ஜாவிற்குச் செல்பவர்களுக்குத் தான் தெரியும் போக்குவரத்து நெரிசலைப் பற்றி. அரை மணி நேரம் தாமதமானல் பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகரித்துவிடும்" என்று மனதில் எண்ண ஓட்டங்கள்.


சே.. முக்கியமான கலாந்தாய்விலிருக்கும் பொழுது ஏன் இது போல எண்ணங்கள் வருகின்றன? கவனத்தை மீண்டும் கூட்டத்தில் செலுத்தினேன். பல கருத்துகளையும் விவாதித்து கூட்டம் முடிகையில் மணி 4:25 ஆகியிருந்தது.


வண்டியைப் பிடிக்க முடியுமா? உடனடியாக லிஃப்ட் கிடைத்துவிட்டால் கீழே சென்று விடலாம். நான் இருப்பதோ 26வது மாடியில்!! வேகமாக என் இடத்திற்குச் சென்று மடிக்கணினியையும் சோற்றுப் பையையும் எடுத்துக்கொண்டு லிஃப்ட் அருகே சென்றேன்.


நொடிப்பொழுதில் லிஃப்டை தவற விட்டேன்.. இப்பொழுது தான் லிஃப்ட் 27வது மாடியில் இருந்து கீழே செல்கிறது. மற்ற லிஃப்ட்கள்? "அடக்கடவுளே, ஆறு லிஃப்ட்களும் கீழே செல்கின்றனவே".

மணி நாலரை ஆகிவிட்டதே!! பேருந்தைத் தவற விட்டுவிட்டால்? திரும்ப இருக்கைக்கே சென்று விடலாமா? பேருந்து வந்திருக்குமா? நேற்று ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் பேருந்து ஓட்டுனரைத் திட்டிவிட்டேனே!! "இன்று பேருந்து தாமதமாக வந்தால் நன்றாக இருக்குமே!!" என்ற எண்ணம் வந்த பொழுது நேற்றையே செய்கைக்காக வெட்கப்பட்டேன். லிஃப்ட் அருகே அலைபேசியும் வேலை செய்யாது. வேலை செய்தாலாவது சக பயணியை அழைத்து கொஞ்சம் நிற்கச் சொல்லலாம்.


அடடா... ஆறாவது லிஃப்ட் மேலே வருகிறது. 6, 7,8,10,12... 20. 20வது மாடியில் எவ்வளவு நேரம் நிற்கிறது. எத்தனை பேர் இறங்குகிறார்களோ? வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் எதற்காக இத்தனை பேர் மேலே வருகிறார்கள்? 21, 22, 23, 24,25, 26.


அப்பாடா.. லிஃப்ட் வந்துவிட்டது!!. வேகமாக லிஃப்டின் உள்ளே சென்று G - பொத்தானை அழுத்தினேன். யாரும் ஏறாமல் இருந்தால் லிஃப்ட் கோவை எக்ஸ்பிரஸ் மாதிரி சீக்கிரம் சென்றுவிடும். பேருந்தைப் பிடித்துவிடலாம். 25ல் நிற்கிறது. இருவர் ஏறினர். ஐந்தாவது மாடியை அழுத்தினார்கள். அங்கே தான் புகைப்பிடிக்கும் அறை உள்ளது. எங்கள் அலுவலகக் கட்டடத்தில் அதிகமானோர் செல்வது புகைப்பிடிக்கும் மாடிக்கும் தொழுகை அறையுள்ள ஆறாவது மாடிக்கும் தான். 20ல் இருவர், 16ல் ஒருவர் என ஏறிக்கொள்ள லிஃப்ட் கீழே சென்றது. ஆறு, ஐந்து என நின்று விட்டு கீழே சேருகையில் மணி 4:35!!கட்டடத்தை விட்டு வெளியே வந்தால், பேருந்தில் என்னுடன் வரும் சக பயணி நின்றிருந்தார். அப்பொழுது பேருந்து இன்னும் வரவில்லையா?நான் பேருந்து நிறுத்துமிடத்தை அடையும் பொழுது பேருந்து வந்தது.


வண்டியின் உள்ளே ஏறினேன்.. பேருந்து ஓட்டுனர்.. "சாரி சாப், ஆஜ் பி லேட் ஹோகயா, பகூத் டிராப் ஹே உதர்" என்றார்.


"நோ பிராப்ளம் பாய்" என்றேன் தலையைக் குனிந்தவனாக!!


..

13 comments:

க.பாலாசி said...

படிக்கும்போதே ஒருவித படபடப்பு எனக்கும் ஏற்பட்டது. பேருந்தை பிடிப்போமா இல்லை மாட்டோமா என்று. எனக்கும் இதுபோன்ற தலைகுனிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் வேறுவகையில். புனைவோ கதையோ....நல்ல இடுகை....

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு செந்தில். டென்ஷன் கூடுச்சி அப்புறம் ரிலீஃப்=))

என் பக்கம் said...

good post sendil

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல அனுபவம் அதையும் சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்கண்ணா..

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க

ராம் said...

இந்த பதிவ படிக்றப்ப எனக்கும் பீபி எகிரிடிச்சி... நல்ல பதிவு !

Please remove the word verification.

தியாவின் பேனா said...

நல்லாயிருக்கு.

வினோத்கெளதம் said...

நல்லா இருக்குங்க செந்தில் :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,

சூப்பரான விவரிப்பு, காட்சிகள் மனதில் ஓடின, யூத்ஃபுல் விகடனில் வந்த மழைக்காலம் கட்டுரையும் படித்தேன் அதுவும் நல்ல வர்ணனைகளை கொண்டிருந்தது, நல்ல பதிவு. ஓட்டுக்கள் போட்டாச்சு.

பிரபாகர் said...

சித்திரை மாசம்,

ஆகா, தாமத்தை வைத்து என்னமாய் ஒரு இடுகை... எல்லோருக்கும் நிகழும் நிகழ்வு, உங்களுக்கும். அதை சொல்லிய விதம்! மிக அருமை செந்தில்.

பிரபாகர்.

சிதம்பரம் said...

திரில்லர் படம் பார்தத மாதிரி இருந்ததுங்க செந்தில்...

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நன்றி பிரபாகர், உண்மை தான் பலமுறை அனைவருக்கும் இது போல் நடப்பதுண்டு.

நன்றி பாலாசி..

நன்றி பாலாண்ணே

நன்றி பிரதீப்

நன்றி அசோக்

நன்றி ராம். நான் word verification வைப்பதில்லையே!!

நன்றி கார்த்திகேயன்.

நன்றி வசந்த்..

நன்றி வினோத்..

நன்ற் சிதம்பரம்

நன்றி தமிழ்ஞ்நெஞ்சம்.

Related Posts with Thumbnails