Friday, November 20, 2009

சிவபாலன் ஓவியங்களும் தமிழக மண்வாசனையும்

"நீங்கள் ஓவியங்களை வரையும் பழக்கம் உள்ளவரா? கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது? கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது?" போன்ற கேள்விகளை என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுது எனக்கு வெகுவாக கிடைத்த பதில்கள் "இல்லை","பள்ளிக்கூடத்தில் வரைந்ததோடு சரி","ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை" போன்றவை!!

பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் விருப்பமான வகுப்பென்றால், அது ஓவிய வகுப்பே!! ஓவியப் பாடத்திற்கு மதிப்பெண்கள் இருக்காது. ஓவிய வகுப்பை நடத்த வரும் ஆசியரும் கண்டிப்பு இல்லாதவராக இருந்ததால் வகுப்பில் ஒரே சிரிப்பொலியாக இருக்கும். மேலும் ஒவ்வொருவம் வரைவதைப் பார்த்த கிண்டல் செய்வது என்று கலகலப்பாகச் செல்லும். அதுவே பெரிய வகுப்பிற்கு வந்து விட்டால் ஓவிய வகுப்புகள் குறைந்துவிடும். அத்துடன் நமக்கு ஓவியங்களுடன் கூடிய தொடர்பும்!!

நம்மில் பெரும்பாலானோர்க்கு ஓவியத்துடன் தொடர்பென்றால் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் இடம்பெறும் ஓவியங்கள் தான். ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது கூட பெரும்பாலானோர்க்கு தெரியாத நிலையே இருக்கிறது. நல்ல இசையை ரசிப்பவர்கள், நல்ல நூல்களை வாசிப்பவர்கள் கூட ஓவியங்களை ரசிப்பதோ பார்த்து லயிப்பதோ கிடையாது.

ஓவியங்கள் என்றாலே நமக்குப் புரியாத விசயங்கள் என்றோ மேல் தட்டு மக்களுக்கானவை என்றோ நாம் நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். நல்ல ஓவியங்களில் வெளிப்படும் கற்பனை வளமும் வடிவங்களும் நம்மை ஒரு தனித்த அனுபவ நிலைக்கு கூட்டிச் செல்லும் வலிமைப் படைத்தது. நம் மனத் திரையினை ( MIND SHARE) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும், அரசியல் நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு ஓவியங்கள் இடம்பெறாமல் போனது ஏனோ தெரியவில்லை.

நான் சென்னையில் இருக்கும் பொழுது கேலரிகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி நான் பார்த்து ரசித்த ஓவியங்களையும் ஓவியர்களையும் இடுகைகளில் அறிமுகம் செய்கிறேன். இந்த இடுகையில் ஓவியர் சிவபாலன்!! இளைய தலைமுறை ஓவியர்களுள் குறிப்பிடும்படியானவர்.

நீங்கள் யானையை ரசித்திருக்கிறீர்களா? கடலும் யானையும் குழந்தையின் சிரிப்பும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தராதவை!! யானைகளின் தோற்றம் தரும் பிரமிப்பு, பெரிய உருவம், சிறிய கண்கள், பெரிய காதுகள் என யானைகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோயில் ஊர்வலத்தில் செல்லும் யானை, சிறுவர்கள் சூழ தெருவில் நடந்து வரும் கோவில் யானை என ஓவியர் சிவபாலனின் ஓவியங்களில் யானைக்குத் தனி இடம் தான்!!

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி, நல்ல வெயில் வேளை, நிலமெங்கும் மரக்கிளையின் நிழல்கள், தூரத்தில் தெரியும் ஒரு ஆட்டுக்கூட்டம் என்று இவரது இயற்கைக் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தர வல்லது. நிழல்கள் இவரது ஓவியங்களில் உயிரோட்டத்துடன் இருப்பது சிறப்பு.


தோளில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் வயதானவர், குழந்தையுடன் தூரி விளையாடும் பெண்கள், மாட்டுச் சந்தை நிகழ்வுகள், சந்தைகளின் காய்கறிகளை விற்கும் பெண்கள், பசுவின் பாலைக் கரக்கும் கிராமத்துப் பெண் என்று இவரது ஓவியங்கள் யாவும் நமக்குத் தமிழக மண்ணுக்கே உரிய மண்வாசனையைத் தரவல்லது.

தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகிய ஜல்லிக்கட்டுக் காட்சிகளில், நுண் நிமிடங்களில் ( micro seconds) நாம் தவிர விடும் உக்கிரத்தையும், சேவல் சண்டைகளில் தெரிக்கும் றெக்கைகளையும் இவரது ஓவியங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் கவின் கலை (FINE ARTS) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.இவரிடம் பேசுகையில், "கோயில்களும், கிராமங்களும் சூழ்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் மண்வாசனை மிக்க ஓவியங்களை வரைவதாகவும், மிக வேகமான மாறுதல்களைச் சந்தித்து வரும் வேளையில், நம் தலைமுறையினர் பார்த்த கிராமங்களையும் கிராம நடப்புகளையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு தெரியப்படுத்த தன் ஓவியங்கள் உதவும்!!" என்றார்.

நீர் வண்ண ஓவியங்கள் (Water Color Paintings) என்னும் வகையையே இவரது ஓவியங்கள் சார்ந்தவை!! நீர் வண்ண ஓவியங்கள் நன்றாகப் பராமறிக்கப்படுகையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்!!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் மட்டுமே ஓவியங்களை வாங்கி வந்த வழக்கம் இன்று மத்திய தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களுக்கு இருக்கும் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) தான்!! பொதுவாகவே ஓவியத் துறையில் அடியெடுத்து வைக்கும் பொழுது குறைந்த விலையில் இருக்கும் ஓவியங்களின் விலை, பிரபலமாகும் பொழுது பல மடங்கு பெருகிவிடுகிறது.


"கவின்கலைப் பட்டம் படிக்கும் பலரும் பட்டப் படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று அனிமேஷன் போன்ற துறைகளுக்குச் செல்லும் போக்கு கவலையளிக்கிறது. இந்தத் துறையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தமிழகத்தைக் கலைத்துறையில் தனியிடத்திற்கு கொண்ட செல்ல முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாமலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தால் ஓவியத்துறையில் வெற்றி நிச்சயம்" என்று ஓவியர் சிவபாலன் கூறியது கவனிக்கத்தக்கது!!

உழைப்பில்லாமல் வரும் வெற்றி உவகையைத் தராது தானே!!

**

23 comments:

வினோத்கெளதம் said...

அருமையான ஓவியங்கள்..ஏற்கனவே உங்க ப்ளாக்ல லிங்க் கொடுத்து இருந்திங்க்ல.
அதுவும் அந்த மரங்கள் அடர்ந்த காடுப்பதை ஓவியம் நம்மை அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறது..அட்டகாசம்..

சிதம்பரம் said...

ஒரு சிறந்த அறிமுகத்திற்கு நன்றி செந்தில்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நாந்தான் 100 வது ஃப்லோயரா ...

சதங்கா (Sathanga) said...

படங்களையும் மீறி ஒரு உணர்வு மேலிடுகிறது சிவபாலன் அவர்களின் கைவண்ணத்தில். பகிர்வுக்கு நன்றிங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமையான ஓவியங்களை நாங்கள் அறிய வெளியிட்டுள்ளீர்கள், இவரை நண்பராக பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர், அந்த ரிக்‌ஷா ஓவியமும், கோவில் வாசல் பூக்கடியில் பேரம் பேசி பூ வாங்கும் தம்பதி ஓவியமும் மிக அறிய காண்டெம்பரரி+டிடைல் வகை அதை மிகவும் ரசித்தேன். மாடர்ன் ஓவியம் தராத தாக்கத்தை இது ஏற்படுத்துகிறது, ஓவியருக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும். நான் கோட்டொவியம் வரைவேன்.
மிக நல்ல இடுகை. ஓட்டுக்கள் போட்டாச்சு

-/பெயரிலி. said...

நல்ல ஓவியங்களுக்கான இணைப்புக்கு நன்றி

Sabarinathan Arthanari said...

தமிழக கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்

நன்றி

ஊடகன் said...

சிவபாலனின் ஓவியங்கள் கலக்கல்(தமிழ் மண் வாசனையோடு )

தேவன் மாயம் said...

தத்ரூபமான ஓவியங்கள்!!

நாஞ்சில் பிரதாப் said...

ஓவியங்கள் மிக உயிரோட்டமாக இருக்கிறது செந்தில் அதுவும், தேரில் சாமி கொண்டுபோ
கும் படம் அப்படி ஒரு உயிரோட்டம்.

கவின் கலை பயின்றவர்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர ஒரே வழி அனிமேஷன்துறை மட்டுமே. அதுஅல்லாமல் அரசு அவர்களுக்கு நல்ல அங்கீகாரம் தந்தால் மட்டுமே ஓவியக்கலைய வளர்க்க முடியும்.

பழமைபேசி said...

அருமை... இந்த மாதிரிப் படங்கள் எங்க பிடிக்கிறதுங்க செந்தில்?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஓவியங்கள் பற்றிய உங்கள் கட்டுரைக்கு நன்றி. சேவற் சண்டையும், அடர்ந்த மரங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

கோபிநாத் said...

அழகான ஓவியங்கள் தல...பகிர்வுக்கு நன்றி ;;

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அன்பர்களின் பாராட்டுகள் அனைத்துமே ஓவியர் சிவபாலனிற்கே!!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க வினோத்கௌதம், நன்றி.

வாங்க சிதம்பரம், நன்றி.

வாங்க Starjan, நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சதங்கா, நன்றி.

வாங்க கார்த்திகேயன், நன்றி.

வாங்க பெயரிலி, நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சபரி, நன்றி.

வாங்க ஊடகம், நன்றி.

வாங்க தேவன்மாயம், நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க நாஞ்சில் பிரதாப். உங்க கருத்தையே தான் நானும் குறிப்பிட்டுள்ளேன். ஓவியர் ஆக வேண்டுமென்றால் கடும் உழைப்பு தேவைப்படுகிறது என்று. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பழமையண்ணே, அவரது தொடர்பு எண் அவரது (சுட்டி இந்தப் பதிவில் உள்ளது) தளத்தில் உள்ளன. படங்கள் சென்னையில் உள்ள கேலரிகள் கிடைக்கின்றன.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன், நன்றி.

வாங்க கோபிநாத், நன்றி.

மதுவதனன் மௌ. / cowboymathu said...

அறிமுகம் நலம்..

முதலாவது ஓவியம் நல்ல கருத்தொன்றை சொல்லவதாகப் படுகிறது.. நல்லாயிருக்கு.. மற்றவைகளும் கூட

ஜகதீஸ்வரன் said...

அற்புதம்.!!.

http://sagotharan.wordpress.com

கணநாதன் said...

பிகாசாவையும் மிக்கலேஞ்சலோயுமே பார்த்த கண்களுக்கு சிவபாலனின் ஓவியங்கள் தமிழ் மணம் காற்றில் மிதக்க நாசியுள் நுகர்ந்து இன்புற்றேன்.

நன்றி

Related Posts with Thumbnails