Thursday, November 19, 2009

மழைக்கால நினைவுகள்!!

"அப்புறங் தம்பி... ஊருல மழை பெய்யுதுங்களா?"

எங்கள் ஊரில், அதிகமாகப் பழக்கமில்லாத இருவர் பேச்சைத் துவக்குவதற்கு மழை தான் பெரும்பாலும் உதவுகிறது. ஆங்கிலத்தில் ஐஸ்பிரேக்கர் என்றொரு வார்த்தையுண்டு. நீண்ட நேர அமைதியை உடைக்க பயன்படுத்தப்படும் சொல் அது. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் வானிலையே ஐஸ்பிரேக்கராக இருக்கிறது.

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

"கண்ணூ மழை பேயுது.. நனைஞ்சீன்னா சலிப்பிடிச்சுக்கும்"னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு. "நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, பனிக்கட்டி மழை பேய்ஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சிருச்சு"னு எங்க ஆத்தா சொன்னப்ப "என் தலைல விழுந்தா என்ன ஆகும்"னு யோசிப்பேன். அதனாலேயே மழை பெய்தால் நனைவதில் உள்ளூர ஒரு பயம்.

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் வெட்டுக்கிளி. எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க, வெளியில் சுற்றி வருவதில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதைப் பிடிங்கும் பொழுது ஒரு மண் வாசனை வரும் பாருங்கள்!! அடடா... எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் வெட்டுக்கிளிக்கும் ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. வெட்டுக்கிளியின் வாலைப் பிடித்து நண்பர்களிடம் விளையாட்டுக் காட்டுவது அலாதியானது.

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் வெட்டுக்கிளியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

எங்கள் ஊரான உடுமலையில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈறக்காற்று மட்டுமே வரும். விசுவிசுவென ஈரக்காற்று வீச நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்தில் உட்கார்ந்து கதையடித்த நாட்களே நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது.

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அடடா.. அது ஒரு அற்புதமான அனுபவம். ஆறின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

இதற்கு நிகரான அனுபவமென்றால் அது குற்றாலம் அருவிகளில் தான் கிடைக்கும். அதுவும் குற்றாலச் சாரல் காலமென்றால் ஊரே சாரலில் நனைவதைப் பார்க்க முடியும்!! எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது!! அது தான் இயற்கையின் வரம்!!

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் சென்னை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

கிண்டியில் உள்ள அண்ணா பல்கழகத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்பு!! மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது இங்கே தான். இரவில் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுதிக்கு செல்லும் பொழுது வழியெங்கும் தவளைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், மான்களின் சத்தமும் என வேறு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்படும். காலையில் பார்த்தால் மைதானம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் முளைத்துக்கிடக்கும்.

பசுமையான மைதானம், வழியெங்கும் உதிர்ந்த பூக்களும், மர இலைகளும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய கலாட்டாக்கள் என்று இன்று நினைத்தாலும் இன்னுமொரு முறை அங்கே படிக்கலாம் என்ற ஆசை எழுகிறது.

கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் வரை நகரவாசிகளின் மழைக்கால அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது, மழைக்காலத்தில் சென்னையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் பரவாயில்லை... வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல?

இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு சென்னையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் சர்வசாதாரணமாகிவிடுகிறது.பிறகு சாலையெங்கும் தண்ணிர், சாலையெங்கும் குழிகள் என்று கூறி என்ன பயன்?

மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!

....

25 comments:

சென்ஷி said...

//மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!//

கலக்கலா முடிச்சிருக்கீங்க செந்தில்... :) ரொம்ப பிடிச்சிருக்குது

அது ஒரு கனாக் காலம் said...

:-) Super...

☀நான் ஆதவன்☀ said...

//"நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு"//

:( இப்ப வரைக்கும் இத மட்டும் தான் கேட்டுருக்கேன் செந்தில்

குசும்பன் said...

மழை கிராமங்களில் அனுபவம், நகரங்களில் அவஸ்தை!

கீழை ராஸா said...

மழைக்கால மனம் மறந்த நினைவுகளை, உங்கள் வரிகள் மனதிற்குள் மண் வாசனையுடன் மீண்டும் அசை போட உதவியது...அருமை

சந்தனமுல்லை said...

அருமையாக இருக்கிறது!

எம்.எம்.அப்துல்லா said...

இந்த வருடம் தமிழ்மண விருதுகளுக்கு நான் பரிந்துரைக்கப் போகும் முதல் இடுகை இதுதான்.

:)

கோபிநாத் said...

\மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!\\

அவனவனுக்கு அவன் கஷ்டம்...இந்த பெரு நகர வசதிகளை பத்தி குறையோடு சொல்லமால் இருக்க முடியாது போல! ;)))))

க.பாலாசி said...

மழைதரும் அனுபவத்தில்தான் எத்தனை இனிமைகள்.....

பிரபாகர் said...

அருமை. முதலிலேயே படித்தாற்போல் இருக்கிறதே? விகடனில் வந்ததா செந்தில்?

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

மழைக்கு முன் ஈசல் பறப்பதை நீங்க பார்த்ததில்லையா?

மழை நேரத்தில் ஆற்றில் குளிப்பது ஒரு சுகம் தான். சென்னை போன்ற நகரங்களில் (நரகங்களில்) அந்த அனுபவம் கிடைக்காதுங்க.

மிக அழகான இடுகை. வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

அழகான இடுகை செந்தில்

நாங்கள் பனிக்கட்டி மழையை கல்லுமாறி மழை என்போம்....

மழை பெய்யும் போது வாய்க்காலில் குளித்த அருமையான அனுபவம் உண்டு...

இடுகையை மிகவும் ரசித்தேன்

அன்புடன் அருணா said...

ஆஹா...மழைப் பதிவு!பூங்கொத்து!

வினோத்கெளதம் said...

மழையை ரொம்பவே மிஸ் பன்னுரோங்க..சென்னை போன்ற ஊர்களில் மழை பெய்தப்பின் சாலையில் பயணிப்பது கொடுமையிலும் கொடுமை..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்
இதை முன்பே விகடனில் மாருதியின் ஓவியத்தோடு படித்தேன். பின்னூட்டியுள்ளேன்.நல்ல தேர்ந்த எழுத்து நடை,நம்ம கோபியை கூல் செய்வது போல ஒரு நகர வாழ்வு பதிவு போடுங்க நண்பரே.ஓட்டுக்கள் போட்டாச்சு

பட்டிக்காட்டான்.. said...

இன்றுகூட அப்பாவிடம் போனில் மழையை பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தேன்.. :-)

//.. மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!! ..//

ஊர்ல மழை பேஞ்சா இருக்குற சந்தோசம், நகரத்துல எனக்கே இல்லைங்க, அப்புறம் எப்படி இங்கயே இருக்குறவங்களுக்கு பிடிக்கும்..? :-(

//.. மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காலான், ..//

காலான்..? காளான்..?

மழை நின்ன உடனே ஒரு சுத்து காட்டுக்கு போய் காளான் புடுங்கிட்டு வர்ற சுகமே தனிதான்..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சென்ஷி. உங்க பாராட்டிற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.

வாங்க சுந்தர் சார். நன்றி.

வாங்க ஆதவன். அது தாங்க பெருநகரங்களில் இருக்கற பிரச்சனை :(

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க குசும்பன். நன்றி.

வாங்க கீழை ராஸா. நன்றி.

வாங்க சந்தனமுல்லை. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க எம்.எம்.அப்துல்லா... உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

வாங்க கோபி. உண்மை தாங்க.. நகரவாசிகளின் குறையை நானும் அனுபவித்தவன் தான். ஆனால் அந்த மழை இல்லையென்றால் என்னாகும் ? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பாசாசி. நன்றி.

வாங்க பிரபாகர். நன்றி.

வாங்க இராகவன் அண்ணே. அதை விட்டுவிட்டேன். நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கதிர். வாய்க்கால் அனுபவமும் இனிமையானது தான். நன்றி.

வாங்க அருணா.. பூங்கொத்திற்கு நன்றி.

வாங்க வினோத். கருத்திற்கு நன்றி.

வாங்க கார்த்திகேயன். கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பட்டிக்காட்டான். மழையைப் பற்றி விசாரிப்பதில் நமக்கென்றுமே மகிழ்ச்சி தான். நீங்க சுட்டிக்காட்டிய தவறைத் திருத்தி விட்டேன். நன்றி.

மாதேவி said...

பதிவில் ஆரம்பத்திலிருந்தே அழகாக மழையில் நனைந்து ரசித்துக் குளித்து வந்தோம்.

"ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" அனுபவிக்கும்போது கஷ்டமானதுதான்.

Sangkavi said...

கிராமத்தில் மழையில் நனைந்து காவிரியில் குளிக்கும் சுகமே தனி...............

உங்கள் இடுக்கையை படித்து மிகவும் ரசித்தேன்..........

Nanum enn Kadavulum... said...

Thanks for sharing.

Related Posts with Thumbnails