Sunday, November 22, 2009

கூகுளை நினைக்கையிலே..


கூகுளை நினைக்காமலோ, கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாமலோ ஒரு நாளேனும் நம்மால் இருக்க முடியுமா? நாம் அன்றாடம் கண்டிப்பாக நினைக்கும் நபர்கள் / நினைக்கும் விசயங்களைப் பட்டியலிட்டால் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்களுக்கு அடுத்த இடத்தில் கூகுள் கண்டிப்பாக இருக்கும். சமகால நிறுவனங்களில், கூகுள் நிறுவனம் அளவிற்கு நம் வாழ்வில் எந்த ஒரு நிறுவனமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா?

காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக அலாரத்தை நிறுத்தியவுடன் நான் செய்யும் விசயம் என் செல்பேசியில் ஜி-மெயில் மின்னஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்பதே!! பிறகு நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களுடன் பேச்சாடுவது, குழுமங்களில் கும்மியடிப்பது, நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வது, வலைப்பதிவுகளைப் படிப்பது என்று எந்த செய்கையாக இருந்தாலும் நமக்கு உதவுவது கூகுளே!!

அலுவலக வேளையின் பொழுது ஏதாவது ஐயம் ஏற்பட்டாலும் உதவுவது கூகுளே!!

இன்றைய மாணவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. நொடிப்பொழுதில் நினைத்த விசயத்தை எல்லாம் பெறும் அளவிற்கு வசதிகள் என் மாணவப் பருவத்தில் இல்லையே என்று!! கல்லூரி நாட்களில் எந்தத் தலைப்பில் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூலங்களில் தேடிய நாட்களை நினைக்கும் பொழுது கூகுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மேலும் புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன்பும் கூட வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சலில் தான் அனுப்ப வேண்டும். 10 படங்களுக்கு மேல் அப்போதைய மின்னஞ்சலில் அனுப்பினால் மின்னஞ்சல் பெறுநர்க்குச் சென்றடையாது. ஆனால் இன்றோ, பிக்காசாவில் ஏற்றக்கூடிய படங்களுக்கு அளவே கிடையாது..

சில வருடங்களுக்கு முன்பும் கூட ஏதாவது கட்டுரைகளையோ, குறிப்புகளையோ படிக்க வேண்டுமென்றால் அந்த தளத்தில் சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இன்று கூகுள் ரீடரில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலான தகவல்கள் நம் முகப்புப் பக்கத்தில்!!

இடத்தைத் தேட காகித வரைபடங்களைத் தேடிய நமக்கு இணைய வரைபடங்களை வழங்யதுடன், அந்த இடத்திற்கு அருகில் என்னென்ன கடைகள், உணவகங்கள், சிறப்புமிக்க தலங்கள் உள்ளன என்றெல்லாம் தகவல்களைத் தருவதை நினைக்கும் பொழுது வியப்பே மிஞ்சுகிறது.

இது போதாதென்று இப்பொழுது கூகுள் அலை ( google wave) சேவையையும் துவக்கி மின்னஞ்சல், பேச்சாடல், புகைப்படங்கள் பகிர்தல், சிட்டாடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து புரட்சியைத் துவங்கியுள்ளனர் கூகுள் நிறுவனத்தார்.

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையைத் தற்பொழுது பல மொழிகளில் ஆரம்பித்துள்ளர். இன்னும் சில வருடங்களில் தமிழிலும் வந்துவிட்டால் நம் இணையப் பயன்பாட்டில் பெருமளவு மாறுதல்கள் ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.வருங்காலங்களில் பேச்சு மாற்று ( Voice Recognition cum Translation ) சேவையும் வந்துவிட்டால் தாய்மொழியைப் பயில்வது மட்டுமே போதுமானது என்ற நிலை வந்துவிடும். நடந்து வரும் மாற்றங்களைப் பார்க்கையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

தொழிற்சாலைப் புரட்சி, பசுமைப்புரட்சி, சமுதாயப் புரட்சி என்றெல்லாம் கேள்விப்படும் பொழுது "புரட்சி" என்ற வார்த்தையில் வலிமை புரியாமல் இருந்தது. ஆனால் இன்று கூகுள் செய்து வரும் தகவல் புரட்சியைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது புரட்சியின் அர்த்தம் புரிகிறது. பட்டங்களைக் கொடுப்பதில் வல்லவர்களான நாம் கூகுளிற்கும் ஏதாவதொரு பட்டம் கொடுத்தால் என்ன?

கூகுளைப் பற்றிய என் எண்ணங்களை பதிவேற்ற நினைக்கு இந்த வேளையிலும் உதவுவது கூகுளே!!

கூகுளிற்கு நன்றிகள்!!

*************************************************************************************

கடந்த ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாக நான் எழுதிய பதிவுகளைப் படித்தும் வாழ்த்தியும் ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள்!! அவர்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திய நிறையு எனக்கு ஏற்பட்டுள்ளது!!

மீண்டுமொரு முறை அனைவருக்கும் என் நன்றிகள்!!
..

Saturday, November 21, 2009

துபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..

இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்களுள், எத்தனை பேருக்கு தமிழைப் பயன்படுத்தத் தெரியும்?

மின்னஞ்சல் அனுப்புதல் (Email),பேச்சாடல் (Chats) , குழுவாடல் (Groups) போன்ற அன்றாட தேவைகளுக்குப் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆங்கிலத்தையே!! இதில் பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர்கள், பதிவர்கள் போன்றோரை விதிவிலக்கானர்வர்கள் எனலாம்!! தாய்மொழியில் பெற்றோருடனும், நண்பர்களுடனும் பேச்சாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! மேலும், குறைந்த அளவினர் மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தி வந்தால் இணையத் தமிழை எப்படி வளர்ப்பது? நமக்குத் தெரிந்தவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்தால் தானே நல்லது!!

அந்த நோக்கத்துடன் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், துபாய் நகரில், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நேற்று (20.11.09) மாலை 6மணி முதல் 9 மணி வரை நடந்தது. குறுகிய கால அவகாசத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், பயிலரங்கத்தில் 45 பேர் கலந்து கொண்டனர். 23, 22 என்று இரண்டு குழுவாகப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த இந்த பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.




பெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் (Unicode) வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அபுல்கலாம் ஆசாத் எடுத்துரைத்தார். இதில் இவர் ASCII அமைப்பைப் பற்றியும், எழுத்திருக் கட்டமைப் பற்றியும் தேர்ந்த கணினி வல்லனுரைப் போல விளக்கினார். இவர் கூறிய பல தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.



கணினிப் பயன்பாட்டில் தமிழின் வளர்ச்சி என்ற தலைப்பில் கணினியில் தமிழ் எவ்வாறு பரவலாக உபயோகிக்கப்படலாம் என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக விளக்கம் தந்தார் அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவர் ஆசிப் மீரான். ASCIIல் ஆரம்பித்து TSCII, TAB TAM, Unicode வரை நடந்தேறிய நிகழ்வுகளைக் கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது.


பிறகு, அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் வெளியிடப்பட்டது. இவற்றை அமைப்பின் நிறுவன உறுப்பினர் காமராஜன் வெளியிட அமைப்பின் பொருளாளர் நஜிமுதீன் பெற்றுக் கொண்டார்.



தமிழ் மென்பொருளை கணினியில் எவ்வாறு நிறுவுவது என்பதைப் பற்றிய விரிவான செயல்முறை விளக்கத்தை அமீரகத் தமிழ் மன்றத்தின் இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வழங்கினார். ஏற்பாடு செய்திருந்த மடிக்கணினிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுவதில் ஜெஸிலா, "குசும்பன்" சரவணன் ஆகிய இருவரும் உதவினர். "தமிழை உள்ளீடு செய்த பொழுது" பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.


வலைப்பூக்கள் குறித்த அறிமுகம், வலைப்பூவைத் துவங்குவது மற்றும் திரட்டிகளில் இணைப்பது குறித்த விளக்கத்தையும், செய்தியோடைகள் குறித்தும் அடியேன் எடுத்துரைத்தேன். இந்நிகழ்வின் பொழுது வலைப்பதிவுகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும், கருத்துரிமை பற்றியும் பல கேள்விகள் வந்தன.

ஃபயர்ஃபாக்ஸ் உலவி மூலமாகத் தமிழில் நேரடியாகத் தமிழில் எழுதுவது, எழுத்துரு மாற்றிகள் போன்ற பிற சேவைகளைக் குறித்து ஆசிப் மீரான் விளக்கவுரை வழங்கினார்.

கலந்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் கணினித் துறையைச் சாராதோர் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் பல நாளாக தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கான அறிமுகம் இன்றே கிடைத்தது" என்று குறிப்பிட்ட அன்பருக்கு வயது 70. புதிய விசயங்களைப் படிப்பதற்கு வயதொரு தடையில்லை தானே?


வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகள் என்றால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளின் முன்பே கழியும். கடந்த வெள்ளிக்கிழமை நல்ல வகையில் கழிந்தது நிறைவைத் தந்தது. இந்த முறை துபாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போல அபு-தாபியிலும் நடத்துமாறு வேண்டுகோள்கள் வந்திருப்பது நம் மக்களுக்கு இருக்கும் தமிழார்வத்தை வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்க படிவங்கள் வழங்கினோம். அதில், "நீங்க நல்லாயிருக்கனும்.. தமிழ் முன்னேற.." என்று ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தது எங்களை நெகிழச் செய்தது.

இதை விட வேறென்ன வேண்டும்?

Friday, November 20, 2009

சிவபாலன் ஓவியங்களும் தமிழக மண்வாசனையும்

"நீங்கள் ஓவியங்களை வரையும் பழக்கம் உள்ளவரா? கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது? கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது?" போன்ற கேள்விகளை என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுது எனக்கு வெகுவாக கிடைத்த பதில்கள் "இல்லை","பள்ளிக்கூடத்தில் வரைந்ததோடு சரி","ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை" போன்றவை!!

பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் விருப்பமான வகுப்பென்றால், அது ஓவிய வகுப்பே!! ஓவியப் பாடத்திற்கு மதிப்பெண்கள் இருக்காது. ஓவிய வகுப்பை நடத்த வரும் ஆசியரும் கண்டிப்பு இல்லாதவராக இருந்ததால் வகுப்பில் ஒரே சிரிப்பொலியாக இருக்கும். மேலும் ஒவ்வொருவம் வரைவதைப் பார்த்த கிண்டல் செய்வது என்று கலகலப்பாகச் செல்லும். அதுவே பெரிய வகுப்பிற்கு வந்து விட்டால் ஓவிய வகுப்புகள் குறைந்துவிடும். அத்துடன் நமக்கு ஓவியங்களுடன் கூடிய தொடர்பும்!!

நம்மில் பெரும்பாலானோர்க்கு ஓவியத்துடன் தொடர்பென்றால் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் இடம்பெறும் ஓவியங்கள் தான். ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது கூட பெரும்பாலானோர்க்கு தெரியாத நிலையே இருக்கிறது. நல்ல இசையை ரசிப்பவர்கள், நல்ல நூல்களை வாசிப்பவர்கள் கூட ஓவியங்களை ரசிப்பதோ பார்த்து லயிப்பதோ கிடையாது.

ஓவியங்கள் என்றாலே நமக்குப் புரியாத விசயங்கள் என்றோ மேல் தட்டு மக்களுக்கானவை என்றோ நாம் நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். நல்ல ஓவியங்களில் வெளிப்படும் கற்பனை வளமும் வடிவங்களும் நம்மை ஒரு தனித்த அனுபவ நிலைக்கு கூட்டிச் செல்லும் வலிமைப் படைத்தது. நம் மனத் திரையினை ( MIND SHARE) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும், அரசியல் நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு ஓவியங்கள் இடம்பெறாமல் போனது ஏனோ தெரியவில்லை.

நான் சென்னையில் இருக்கும் பொழுது கேலரிகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி நான் பார்த்து ரசித்த ஓவியங்களையும் ஓவியர்களையும் இடுகைகளில் அறிமுகம் செய்கிறேன். இந்த இடுகையில் ஓவியர் சிவபாலன்!! இளைய தலைமுறை ஓவியர்களுள் குறிப்பிடும்படியானவர்.

நீங்கள் யானையை ரசித்திருக்கிறீர்களா? கடலும் யானையும் குழந்தையின் சிரிப்பும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தராதவை!! யானைகளின் தோற்றம் தரும் பிரமிப்பு, பெரிய உருவம், சிறிய கண்கள், பெரிய காதுகள் என யானைகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோயில் ஊர்வலத்தில் செல்லும் யானை, சிறுவர்கள் சூழ தெருவில் நடந்து வரும் கோவில் யானை என ஓவியர் சிவபாலனின் ஓவியங்களில் யானைக்குத் தனி இடம் தான்!!

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி, நல்ல வெயில் வேளை, நிலமெங்கும் மரக்கிளையின் நிழல்கள், தூரத்தில் தெரியும் ஒரு ஆட்டுக்கூட்டம் என்று இவரது இயற்கைக் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தர வல்லது. நிழல்கள் இவரது ஓவியங்களில் உயிரோட்டத்துடன் இருப்பது சிறப்பு.


தோளில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் வயதானவர், குழந்தையுடன் தூரி விளையாடும் பெண்கள், மாட்டுச் சந்தை நிகழ்வுகள், சந்தைகளின் காய்கறிகளை விற்கும் பெண்கள், பசுவின் பாலைக் கரக்கும் கிராமத்துப் பெண் என்று இவரது ஓவியங்கள் யாவும் நமக்குத் தமிழக மண்ணுக்கே உரிய மண்வாசனையைத் தரவல்லது.

தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகிய ஜல்லிக்கட்டுக் காட்சிகளில், நுண் நிமிடங்களில் ( micro seconds) நாம் தவிர விடும் உக்கிரத்தையும், சேவல் சண்டைகளில் தெரிக்கும் றெக்கைகளையும் இவரது ஓவியங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் கவின் கலை (FINE ARTS) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.இவரிடம் பேசுகையில், "கோயில்களும், கிராமங்களும் சூழ்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் மண்வாசனை மிக்க ஓவியங்களை வரைவதாகவும், மிக வேகமான மாறுதல்களைச் சந்தித்து வரும் வேளையில், நம் தலைமுறையினர் பார்த்த கிராமங்களையும் கிராம நடப்புகளையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு தெரியப்படுத்த தன் ஓவியங்கள் உதவும்!!" என்றார்.

நீர் வண்ண ஓவியங்கள் (Water Color Paintings) என்னும் வகையையே இவரது ஓவியங்கள் சார்ந்தவை!! நீர் வண்ண ஓவியங்கள் நன்றாகப் பராமறிக்கப்படுகையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்!!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் மட்டுமே ஓவியங்களை வாங்கி வந்த வழக்கம் இன்று மத்திய தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களுக்கு இருக்கும் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) தான்!! பொதுவாகவே ஓவியத் துறையில் அடியெடுத்து வைக்கும் பொழுது குறைந்த விலையில் இருக்கும் ஓவியங்களின் விலை, பிரபலமாகும் பொழுது பல மடங்கு பெருகிவிடுகிறது.


"கவின்கலைப் பட்டம் படிக்கும் பலரும் பட்டப் படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று அனிமேஷன் போன்ற துறைகளுக்குச் செல்லும் போக்கு கவலையளிக்கிறது. இந்தத் துறையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தமிழகத்தைக் கலைத்துறையில் தனியிடத்திற்கு கொண்ட செல்ல முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாமலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தால் ஓவியத்துறையில் வெற்றி நிச்சயம்" என்று ஓவியர் சிவபாலன் கூறியது கவனிக்கத்தக்கது!!

உழைப்பில்லாமல் வரும் வெற்றி உவகையைத் தராது தானே!!

**

Thursday, November 19, 2009

துபாய்க் கடலில் ஒரு மாலைப்பொழுது..

இயற்கையின் வர்ணவித்தைக்கு முன்பு நாம் எங்கே இருக்கிறோம். இயற்கையின் எழிலிற்கு முன்பு நம் படைப்புகள் எங்கே நிற்கின்றன. மனிதர்களின் படைப்புகளான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் யாவிற்கும் ஒரே வடிவம் தான், ஒரே வர்ணம் தான். ஆனால் இயற்கைக்கு?

அலுவலக வேலைப்பழுவிலிருந்தும், கண்களின் அயர்ச்சியிலிருந்து விடுபடவும் தூரத்திலிருக்கும் பொருளைப் பார்ப்பது நல்லது என்பர். இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு மரத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்ப்பதுண்டு. துபாய்க்கு வந்த பிறகு, நான் பார்ப்பது கடலைத்தான். என் அலுவலக அறையிலிருந்து கடலைப் பார்ப்பது எனக்கு பிடித்தமான விசயம். கடலைக் காட்டிலும் தன் வண்ணத்தையும், வடிவத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும் விசயங்கள் இருக்க முடியுமா?

காலை ஏழு மணிக்குப் பார்க்கும் பொழுது நீல வண்ணத்தைக் கொண்டிருக்கும் கடல் மதியமாகிறது பொழுது ஊதா நிறத்தையும் கருநீல நிறத்தையும், பச்சை நிறத்தையும் எடுத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும். அதே சமயம் கடலில் பயணம் செய்யும் பொழுது கடல் எப்படி இருக்கும்?சீற்றத்துடன் இருக்குமா? அல்லது தூரத்தில் இருந்து பார்க்கும் அதே மகிழ்ச்சியைத் தருமா என்பது போல பல கேள்விகள் மனதுக்குள் எழும்!!

ஒரு நாள் கடலில் பயணம் சிறிது தூரமாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆவலைத் தீர்க்கும் வண்ணம் அமைந்தது தான் அலுவலக நண்பர்களுடன் இன்று சென்ற பாய்மரக் கப்பலில் கடல் உலா.அலுவலக ஊழியர்களின் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஆறு மாதத்திற்கோ மூன்று மாதத்திற்கோ ஒரு முறை நிர்வாகம் இது போல வெளியே அழைத்துச் செல்வதுண்டு. இந்த முறை கடல் பயணம்.

துபாய் மெரினாவில் உள்ள படத்துறையில் இருந்து கடலிற்குள் அழைத்துச் செல்லுதல், பிறகு கடலில் குளியல், சிறிய சிற்றுண்டி என்பது போல ஏற்பாடு செய்திருந்தனர். கடலில் குளியல் என்றதால் குளிப்பதற்குத் தகுந்த உடைகளையும் எடுத்திருந்தேன். பாய்மரக்கப்பல் 40 பேர் பயணிக்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது. எங்கள் குழுவில் 10 பேர் மட்டுமே இருந்ததால் பிற சுற்றுலாவாசிகளையும் ஏற்றிக் கொண்டனர். படகில் என்னையும், இன்னொருவரையும் தவிர்த்து பெரும்பாலானோர் ஐரோப்பியர்களே!!


கப்பல் கரையிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் பயணிக்கத் துவங்கியவுடன், உயரமாக இருந்த துபாய் மெரினாவிலுள்ள கட்டங்களின் உயரம் குறைய ஆரம்பித்தன. நியூயார்க் நகர மன்ஹாட்டன் பகுதிக்கு இணையாக துபாய் மெரினாவில் பல கட்டடங்கள் நிலத்திற்கும் வானிற்கும் நிற்கின்றன. இங்கே உள்ள கட்டங்களைக் கட்டத் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இலட்சக் கணக்கானோர் இரவும் பகலும் உழைக்கிறார்கள். 80 சதத்தினர் உழைப்பால் 20 சதத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். 20 சதவிதத்தில் துபாய் குடிமக்களும் ஐரோப்பியர்களுமே அடங்குவர்.

80 - 20 விதி எப்படி எல்லாம் உறுதி செய்யப்படுகிறது பாருங்கள்!!

துபாய் மெரினாவின் கட்டடகள் மறையத்துவங்கியவுடன் படகில் வந்த ஆண்களும் பெண்களும் நீச்சல் உடைக்கு மாறினார்கள். கவர்ச்சிக் கன்னிகளுக்கான உடை என்று தமிழ் சினிமா நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் டூ-பீஸைத் தான் பெரும்பாலான பெண்கள் அணிந்திருந்தார்கள். எவரிடமும் தவறான பார்வையோ உள் நோக்கமோ இல்லை!! அவர்களைப் பொருத்த வரையில் அது நீந்துவதற்கான ஒரு உடை. நம் சினிமாவினர் கோவாவையோ, நீச்சல் குளத்தையோ காட்டுப் பொழுது கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் நீச்சல் உடையணிந்த பெண்களைக் காட்டுவது எவ்வளவு அருவருப்பான செயல்!!

மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பியவுடன் நண்பர்களுடன் அரட்டை, அனுபவப் பகிரல் என பயணம் குதூகலமானது. அலைகளில் மெதுவாகப் போன படகு ஆடம்பர விடுதியான அட்லாண்டிஸ் வழியாகச் சென்று ஏழு நட்சத்திர விடுதியான புர்ஸ்-அல்-அராபை நெருங்கிய பொழுது மணி மூன்றரை. பிறகு குளிக்க விருப்பமிருப்பவர்கள் குளிக்கலாம் என்று படகின் மேலாளர் கூறியவுடன் அனைவரும் கடலில் இறங்கினர். யாருமே லைஃப்-ஜாக்கட் எனப்படும் பாதுகாப்பு அங்கியை அணியவில்லை. ஆண்கள் பெண்கள் என அனைவரும் அருமையாக நீந்தி விளையாடினர். எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், கடலில் குளிக்கப் பயமாக இருந்ததால் நான் குளிக்கவில்லை.

நம் நாட்டில் நீச்சல் தெரிந்தோர் எத்தனை சதவிதத்தினர் இருப்பர். உயிரைப் பாதுகாக்கத் தேவையான பயிற்சியை நம் வாழ்வியல் முறை ஏன் பழக்கப்படுத்துவதில்லை? நீர் நிலைகள் இல்லை என்று பதில் கிடைக்கும். நீர் நிலைகள் அதிகம் இருக்கும் ஊரில் அனைவருக்கும் நீந்தத் தெரியுமா? அனைவருக்கும் நீச்சல் போன்றவை தெரிந்திருந்தால் தேக்கடியில் நேர்ந்ததைப் போல விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருக்குமே!! புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கை என்பது சரியான முறையா என்பன போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றின.

அனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகு சிக்கன் பார்பிக்யூ மற்றும் இன்னபிற உணவுகளுடன் சிற்றுண்டியைப் பரிமாறினர். சிற்றுண்டியை முடித்தவுடன் படகு திரும்பவும் கரையை நோக்கிக் கிளம்பியது.

மாலை ஐந்து மணியானவுடன் சூரியனும் கடலும் காட்டிய வித்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நீல நிறத்தில் இருந்த கடல் பரப்பு சூரியனின் ஒளிபட்டு வெண்ணிறமாகவும், கொஞ்ச நேரம் கழித்து இளஞ்சிவப்பு நிறத்தையும், ஊதா நிறத்தையும் காட்டி வித்தை செய்துகொண்டிருந்தது. கப்பல் மாலுமிகள் இது போல எத்தனை அருமையான காட்சிகளைக் கண்டிருப்பார்கள்? அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

நாம் இளம்வயதில் வரைய ஆரம்பிக்கும் பொழுது வரைய விரும்புவது மலைகளின் நடுவிலோ அல்லது கடலின் நடுவிலோ மறையும் சூரியனைத்தான். அது போன்றதொரு சூரிய அஸ்தமனத்தைக் கடலில் பார்த்த பொழுது இளவயது நினைவுகள் கிளம்ப ஆரம்பித்தன. சூரியன் கடலில் புதைந்துவிட படகும் கரையை நெருங்க ஆரம்பித்தது.


இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மறைந்த துபாய் மரினாவின் கட்டங்களில் உள்ள மின்விளக்குகள் மின்மினிப் பூச்சியைப் போல மின்ன ஆரம்பித்தது, கரையை நெருங்கும் பொழுது கட்டடங்களின் மின்னொளி பிரகாசமானது. கரையை அடைந்தவுடன் அலுவலக நண்பர் என்னிடம், "கடற்காற்று என்றாலும் எவ்வளவு சுத்தமானதாக இருந்தது? வாரத்திற்கொரு முறை இது போல வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"


"நீங்கள் மீனவராக மாறிவிடுங்கள்!! தினமும் இது போல கடற்காற்றை சுவாசிக்க முடியும்" என்றேன், அவர்கள் படும் அவதி நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்தவாரே!!
..
.

மழைக்கால நினைவுகள்!!

"அப்புறங் தம்பி... ஊருல மழை பெய்யுதுங்களா?"

எங்கள் ஊரில், அதிகமாகப் பழக்கமில்லாத இருவர் பேச்சைத் துவக்குவதற்கு மழை தான் பெரும்பாலும் உதவுகிறது. ஆங்கிலத்தில் ஐஸ்பிரேக்கர் என்றொரு வார்த்தையுண்டு. நீண்ட நேர அமைதியை உடைக்க பயன்படுத்தப்படும் சொல் அது. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் வானிலையே ஐஸ்பிரேக்கராக இருக்கிறது.

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

"கண்ணூ மழை பேயுது.. நனைஞ்சீன்னா சலிப்பிடிச்சுக்கும்"னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு. "நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, பனிக்கட்டி மழை பேய்ஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சிருச்சு"னு எங்க ஆத்தா சொன்னப்ப "என் தலைல விழுந்தா என்ன ஆகும்"னு யோசிப்பேன். அதனாலேயே மழை பெய்தால் நனைவதில் உள்ளூர ஒரு பயம்.

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் வெட்டுக்கிளி. எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க, வெளியில் சுற்றி வருவதில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதைப் பிடிங்கும் பொழுது ஒரு மண் வாசனை வரும் பாருங்கள்!! அடடா... எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் வெட்டுக்கிளிக்கும் ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. வெட்டுக்கிளியின் வாலைப் பிடித்து நண்பர்களிடம் விளையாட்டுக் காட்டுவது அலாதியானது.

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் வெட்டுக்கிளியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

எங்கள் ஊரான உடுமலையில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈறக்காற்று மட்டுமே வரும். விசுவிசுவென ஈரக்காற்று வீச நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்தில் உட்கார்ந்து கதையடித்த நாட்களே நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது.

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அடடா.. அது ஒரு அற்புதமான அனுபவம். ஆறின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

இதற்கு நிகரான அனுபவமென்றால் அது குற்றாலம் அருவிகளில் தான் கிடைக்கும். அதுவும் குற்றாலச் சாரல் காலமென்றால் ஊரே சாரலில் நனைவதைப் பார்க்க முடியும்!! எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது!! அது தான் இயற்கையின் வரம்!!

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் சென்னை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

கிண்டியில் உள்ள அண்ணா பல்கழகத்தில் தான் எனது பொறியியல் பட்டப்படிப்பு!! மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது இங்கே தான். இரவில் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுதிக்கு செல்லும் பொழுது வழியெங்கும் தவளைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், மான்களின் சத்தமும் என வேறு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்படும். காலையில் பார்த்தால் மைதானம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல புல் முளைத்துக்கிடக்கும்.

பசுமையான மைதானம், வழியெங்கும் உதிர்ந்த பூக்களும், மர இலைகளும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய கலாட்டாக்கள் என்று இன்று நினைத்தாலும் இன்னுமொரு முறை அங்கே படிக்கலாம் என்ற ஆசை எழுகிறது.

கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் வரை நகரவாசிகளின் மழைக்கால அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது, மழைக்காலத்தில் சென்னையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் பரவாயில்லை... வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் போன்ற தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல?

இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு சென்னையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் சர்வசாதாரணமாகிவிடுகிறது.பிறகு சாலையெங்கும் தண்ணிர், சாலையெங்கும் குழிகள் என்று கூறி என்ன பயன்?

மழையைப் பற்றி மகிழ்ச்சியுடன் விசாரிப்பதைப் பார்த்துப் பழகிய எனக்கு "நச நசன்னு மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியாக் கிடக்கு" என்று பெரு நகரங்களில் பேச்சைக் கேட்பது சோகத்தையே தருகிறது!!

....

Wednesday, November 18, 2009

நாம் நாகரிகமானவர்களா? நதிகளைக் கேளுங்கள்..

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் நாகரிகமானவராகக் (Civilised,Fashionable) காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சிகை அலங்காரம், ஓட்டும் ஊர்தி, உபயோகிக்கும் தமிழ் அல்லது தமிழிஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடிக்கடி நமக்குள் வரும் சர்ச்சைகளில் பல, எது நாகரிகம்? எவர் நாகரிமானவர்? என்பதைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கிறோம்!!

உதாரணமாக, காதலர்தினத்தைக் கொண்டாடுபவர் தான் நாகரிகமானவர்? அல்லது நாகரிகமில்லாதவர்? என்பது போல!!

சரி, நாகரிகம் என்றால் என்ன?

நாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்!!

இந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாக நாகரிகமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்? முதலில் எங்கே குடியிருந்தார்கள்? இது போன்ற கேள்விகளைக்கு விடை தேடினால், நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் தோராயமாக 4500 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், நம் முன்னோர்கள் அனைவரும் நதிகளின் படுகைகளிலேயே முதலில் வாழ ஆரம்பித்ததாகவும் தெரிகிறது!!

இதனாலேயே நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் தில்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹம்பி, பாட்னா என அனைத்தும் நதிக்கரையிலேயை உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டை எடுத்தால் சோழர்கள் காவிரிக்கரையிலும், பல்லவர்கள் பாலாற்றங்கரையிலும், பாண்டியர்கள் வைகையாற்றின் கரையிலும் ஆட்சி செய்தனர்!!

இதில், கங்கை, காவிரி போன்ற நதிகளைப் பாராட்டாத கவிகள் இல்லை எனலாம்!! தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது!! 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது!! காவிரியின் கொடையால் தான் தஞ்சை, குடந்தை போன்ற ஊர்கள் நெற்களஞ்சியங்களாக கூறப்பட்டது. மக்கள் நாகரிகமாக வாழ்ந்து வந்ததன் அடையாளம் தான் சோழர்களின் கட்டடக்கலையும், பிரமிப்பூட்டும் கோயில்களும்!!

இப்படி நமது பண்பாடு, நாகரிகம் போன்றவை மேம்படக் காரணமாக இருந்த நதிகளின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது!! ஒன்று நதிகள் சீரழிக்கப்படுகின்றன அல்லது நதிகளின் பெயரால் மோதல்கள் நடக்கின்றன!!

இன்று நாம் நாகரிகமாக கருதும் ஒவ்வொரு செயல்பாடும், தயாரிப்பும் நதிகளை சீரழிப்பதாகவே உள்ளது. எகனாமிஸ்ட் என்னும் வாராந்திரி, "கங்கையைப் பாருங்கள், இந்தியாவில் ஏன் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் நீர் சார்ந்த தொற்று நோயில் இறக்கிறார்கள் என்பது தெரியும்" என்று கூறுகிறது. புனிதத் தலமாகக் கருதப்படும் காசியில், "கங்கையில் குளிப்பது 120 மடங்கு தீங்கானது" என்னும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகமும் இதற்கு எந்த வித்திலும் சளைத்ததல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகர்களின் மனிதக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்த காவிரி நீர் தான் கருர், திருச்சி போன்ற நகரங்களின் குடிநீர். பெரும் நகரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கலாம், ஆனால் கொடுமுடி, முசிறி போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் என்ன செய்வார்கள்!! அவர்களும் மனிதர்கள் தானே!! நெசவுத்தொழிற் கழிவு, காகிதாலைக் கழிவு, தோல் தொழிற்சாலைக்கழிவு என அனைத்துமே கலப்பது ஏதாவது ஒரு நதியில் தான்!!


சென்னையில் கூவம் என்பது நதியின் பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம்!! கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான்!! நூறு ஆண்டுகளூக்கு முன்பு கூட கூவத்தில் குளிப்பதும், படகுச் சவாரியும் நடந்தது என்றால், இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை!!

கோவை நகரைக் கடந்து செல்லும் நொய்யல் நதியில் தான் அன்றாடம் துணிகளைத் துவைத்திருக்கிறோம் என்று என் தந்தை கூறுவதை இன்று என்னால் நம்ப முடிவதில்லை. எனது பாட்டன், முப்பாட்டன், அவர்களது முன்னோர் என அனைவரும் கோவை அருகே உள்ள சூலூரில் நொய்யல் நதிக்கரையில் கொடிக்கால்களை வளர்த்து, இன்ன பிற விவசாயம் செய்து வாழ்க்கையையே நடத்தியிருக்கிறார்கள். என் மூதாதையரை வளர்த்த நொய்யல் நதி இன்று சாக்கடையாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் கண்ணிர் வருகிறது.

இன்று, நதிகளின் பெயரால் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இல்லை என்பது இன்னோரு விஷயம். மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படும் நமது ஜனநாயகமும், அரசியலமைப்பும் நம்மை ஆள்பவர்களும் நதிகளால் வரும் மோதல்களை தடுக்கவோ அல்லது உடன்பாடு ஏற்படுத்தவோ முயலவில்லை!! ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை!! இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள்? யார் பண்பட்டவர்கள்?


நமது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவை குடும்ப அமைப்பு, உடுக்கும் உடை போன்றவற்றால் மட்டும் முடிந்து விடுவதில்லை! நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் தான் உள்ளது! நம்மை ஆள்வோரிடம் "நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்" என்பதைப் பற்றி என்றாவது கேட்டிருக்கிறோமா? கேட்டால் மட்டும் என்ன நடக்கப் போகிறது என்பது வேறு!!

நம்மால் முடிந்தால் நம் வீட்டுக் கழிவுகள், நம் தோட்டத்திற்குச் செல்லும் முறையில் திருப்பினாலே போதுமானது. கழிவுக்குழாய்கள் இல்லாத கிராமங்களில் சென்று பார்த்தால் இந்த முறை கடைப்பிடிக்கப் படுவதைக் காண முடியும்.


நாம் நாகரிகமானவர் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை "காட் மஸ்ட் பி கிரேசி" என்ற திரைப்படத்தைப் பாருங்கள்!! பிறகு பதில் கூறுங்கள்!!

யார் நாகரிகமானவர்கள்? பழங்குடிகளா? அல்லது நகரத்தாரா? என்று!!

இது ஒரு மீள் பதிவு - சில மாறுதல்களுடன்!!

நாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை..


காலை 10 மணிக்குப் பாட்டுப்போட்டி. பள்ளி ஆண்டு விழாவிற்காக குழுவாகப் பாடும் போட்டி இது( குரூப் சாங்)!! நாங்க பாடுனதக் கேட்டு கழுதை கூட தெறிச்சடிச்சு ஓடியிருக்கு.


எங்களுக்குப் பெரிதா சங்கீத ஞானமோ பயிற்சியோ இல்லையென்றாலும், இரண்டு வருடத்திற்கு முன்பு பெற்ற அவமானத்தைத் துடைக்கவே இந்த முறை கலந்து கொள்கிறோம். நாங்கள் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. பள்ளியே எங்களைப் பார்த்து சிரித்ததை நினைத்தால்...


********************

அன்று காலையில் தான் ஆண்டு விழாவினைப் பற்றியும், நடக்கவிருக்கும் போட்டிகளைப்பற்றியும் அறிவித்திருந்தார்கள். உணவு வேளை மணியடித்ததும் வழக்கமாக அமரும் வேப்பமர நிழலிற்கு ஓடினோம். கொஞ்சம் தாமதமானால் போதும் இடம் போய் விடும். அந்த வேப்பமரத்தைத் தாண்டித் தான் பலரும் செல்வார்கள் என்பதால் அந்த இடத்திற்கு அடிதடி. சிலுசிலுன்னு வேப்பமரக்காற்று அடிக்க அரட்டை ஆரம்பித்தது..

"வேலா.. ஆன்னுயல் டே போட்டிக்கு, பேர் கொடுக்கறதுக்கு இன்னிக்குத் தான் கடைசி நாள்" ஆரம்பித்தான் சரவணன்

"அதுக்கு என்னிப்போ.. நமக்குத் தான் ஒன்னும் வராதாச்சே" கெக்கெக்கே என்று சிரித்தான் மணி.

"டேய்.. ஒவ்வொரு வருஷமும் நம்ம கிளாஸ் பொண்ணுக தான் பாட்டுப் போட்டில ஜெயிக்கறாங்க. நாம ஜெயிக்காட்டிப் போகுது.. குறைஞ்சது கலந்துக்கலாமே. கிளாஸ் மிஸ்ஸு வேற இண்டர்வெல்ல இதப் பத்தி கேட்டுட்டாங்க" என்றான் சரவணன்.

சரவணன் எங்கள் வகுப்பின் லீடர். நன்றாகப் படிப்பான். பொறுப்பான மாணவன். எங்கள் வகுப்பாசிரியைக்கு அவரது வகுப்பிற்கு நிறைய பரிசுகள் வாங்க வேண்டுமென்ற ஆசையால் சரவணனிடம் கேட்டிருக்கிறார்.

"சரி.. நீ ரொம்ப ஆசைப்படற. எப்படா காம்படிஸன்?" என்றேன்

"நாளைக்கு.."

"கிழிஞ்சுது போ" மீண்டும் மணி "கெக்கெக்கே" என்றான்.

"டேய், ஒரு நாள் தான் இருக்கு! எப்படிடா? பொண்ணுங்க கலந்துக்கறாங்கன்னா அவங்க முன்னாடியே பிராக்டீஸ் பண்ணிருப்பாங்க.." என்றான் தாஸ்.

"சரி, நம்ம ஒன்னு பண்ணுவோம். இன்னிக்கு சாயங்காலம் தாஸ் வீட்டுல போயி பிராக்டீஸ் பண்ணலாம்" என்றான் சரவணன்.

"சரி எந்தப் பாட்டடா குரூப் ஸாங்கா பாடுறது?"

"இன்னும் நாலு பீரியட் இருக்கு.. உங்களுக்கு என்னென்ன பாட்டு தோணுதோ எழுதி வையிங்க.. சாயங்காலம் செலக்ட் பண்ணிடுவோம். நான் இப்போ போய் நம்ம பேரையும் கொடுத்துடறேன்" என்றான் சரவணன்

"இது ஒன்னும் நடக்கற மாதிரி தெரியல" என்றான் ரிச்சர்ட்.


*****

அன்று மாலை நான், சரவணன், தாஸ், மணி, அமிர்தராஜ், கமல்,பாபு, சிராஜ் என அனைவரும் தாஸ் வீட்டு மொட்டை மாடியில் ஆஜர். மொட்டை மாடிக்கு சென்றவுடன் பக்கத்து வீட்டில் டியூஸனுக்கு வரும் பெண்களைப் பார்ப்பதிலேயே அனைவரது கவனமும்..


"டேய்.. போதும்டா.. வந்த வேலையக் கவனிப்போம்" என்றான் தாஸ். வீட்டில் யாராவது புகார் செய்துவிட்டால் என்னாவதென்ற பயம் அவனுக்கு.

"இதுக்குத் தானடா வந்தோம்" என்று வம்பிழுத்தான் கமல்..

"சரி..என்ன பாட்டுடா பாடலாம்.. " என்றேன்.

"ரோஜால இருந்து 'தமிழா தமிழா' பாடலாம்" என்றான் தாஸ்

"மறுபடியும்ல இருந்து 'நலம் வாழ் பாடலாம்' " - கமல்

" தலைவர் படத்துல இருந்து ஒரு பாட்டு பாடலாம்" - பாபு.

" 'வந்தேண்டா பால்காரன்'னு குருப் சாங் பாட சொல்றீயா" - அமிர்.

" இங்க பாரு.. வண்டிச்சோலை சின்ராசு படத்துல இருந்து 'செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே' பாட்டுப் பாடுனா என்ன" என்றான் சரவணன்.

" நல்லத்தாண்டா இருக்கு"

"டேய்.. பொண்ணுகள நக்கல் பண்ற மாதிரி ஆயிடப்போகுதுடா" என்றான் தாஸ்

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.."

"சரி.. லீடர் சொல்லியாச்சு அப்பீல் ஏது.."
...



பிறகு கேசட்டில் இருந்து பாடலை எழுதி வைத்துப் பாடிப் பார்த்தோம். எங்கள் கரகரப்பான குரலிற்கு நன்றாக பொருந்தியது போலவும் உணர்ந்தோம். சில மணி நேரம் பயிற்சி செய்தோம். யார் யார் எங்கே நிற்பது என்பது வரை பலதையும் கூடி முடிவு செய்து விட்டு இரவு அவரவர் வீட்டிற்குச் சென்றோம். அந்த நேரத்தில் அந்தப் பாடல் நன்றாக பிரபலமாகியிருந்தது... பாடல் வரிகள்



செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

நெசவு செய்யும் திருநாட்டில்,

நீச்சல் உடையில் அலையிறியே..

கணவன் மட்டும் காணும் அழகை,

கடைகள் போட்டுக் காட்டுறியே.. (செந்தமிழ்நாட்டுத்..)

எலந்தைக காட்டில் பொறந்தவ தானே,

லண்டன் மாடல் நடையெதுக்கு?

காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது,

காத்துவாங்கும் உடையெதுக்கு?

உடம்புவேர்க்கும் உஷ்ணநாட்டில்,

உரசிப் பேசும் ஸ்டைலெதுக்கு?

டக்கர் குங்குமம் மணக்கும்நாட்டில்,

ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

நெசவு செய்யும் திருநாட்டில்,

நீச்சல் உடையில் அலையிறியே..

கற்பு என்பது பிற்போக்கு இல்ல,

கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்!

காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,

கனகபூக்கள் அணிஞ்சிக்கணும்!

பழமை வேறு, பழசு வேறு,

வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!

புரட்சியெங்கே, மலர்ச்சி எங்கே,

புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்! (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே.. (4 முறை)

*********

எங்களுக்கான போட்டி நேரம் காலை 11 மணி. கீழ் வகுப்புகளுக்கான போட்டிகளை முதலில் நடத்த ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் நாங்கள் தனியே மரத்தடியில் மீண்டும் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். போட்டி நடைபெற்றிருந்த இடத்திலிருந்து பாலா ஓடி வந்தான்...

"என்னடா.. போட்டி எப்படிடா நடக்குது?"

"எட்டாவது பசங்க பாடுனத பாதில நிறுத்தீட்டாங்கடா.." என்றான் பாலா.

"ஏனாம்"

" அவங்க பாடுன பாட்டுல கேர்ள்ஸ கிண்டல் பண்ற மாதிரி லைன்ஸ் இருந்ததாம்" என்றான்.

"கிழிஞ்சுது போ.." இஃகிஃகி என்றான் மணி

"நம்ம பாட்டையும் நிறுத்திடுவாங்களோ? இப்போ என்னடா பண்ண?"

"நாங்க பாடலன்னு இப்ப சொன்னா அசிங்கமா இருக்கும்"


கொஞ்ச நேரம் யோசித்த தாஸ்.. "நம்ம பாட்டுல ஒரு ரெண்டு வரிய சென்சார் பண்ணிடுவோம்"

"சென்சாரா.. ஹாஹாஹா" என்றான் பாலா..

"ஆமாண்டா.. இங்க பாரு 'கணவன் மட்டும்'ல இருந்து.. 'கடைகள் போட்டுக் காட்டுறியே' வரைக்கும் கட் பண்ணிடுவோம்"

"சரி.." என அனைவரும் பாட்டுப் போட்டி நடக்கும் இடத்திற்குக் கிளம்பினோம்.


**********

முதலில் எங்கள் வகுப்புப் பெண்கள் "யமுனை ஆற்றிலே.." பாடலைப் பாடினார்கள். எங்கள் வகுப்புப் பெண்களில் பலருக்கு நல்ல குரல்வளம். அழகாகப் பாடினார்கள்.

அடுத்து நாங்கள்.. முதல் முறையாக அனைவரும் பாடுவதற்காக மேடை ஏறினோம்.

"ரெடி ஸ்டார்ட்" என மணியடித்தார் நந்தினி மிஸ்.

"செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. நெசவு செய்யும் திருநாட்டில், நீச்சல் உடையில் அலையிறியே.." வரை நன்றாகச் சென்றது.


அடுத்த வரியை எங்களில் இருவர் துண்டிக்க, இருவர் பாட.. முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்த விட்டனர். அதற்குப் பிறகு நாங்கள் என்ன பாடினோம் என்று எங்களுக்கே தெரியாது. மிகுந்த அவமானமாகிப் போனது.


"உங்களுக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை" என்று நண்பர்கள், அண்ணன் மார்கள் அனைவருக்கும் ஒரே சிரிப்புத்தான்.

********************

பள்ளியே எங்களைப் பார்த்து சிரித்ததற்காகவே, இந்த முறை நன்றாகப் பாட வேண்டும் என்று சபதமிட்டிருக்கிறோம்(??). நல்ல பாடலையும் தேர்ந்தெடுத்து நான்கைந்து நாட்களாகப் பயிற்சியும் செய்திருந்தோம். எங்க அனைவருக்குமே கட்டை குரல் தான். இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த பாடலைத் தான் நாங்கள் நம்பியிருக்கிறோம்.


கொஞ்சம் குறைவாகக் கரகரப்புக் குரலை உடையவர்கள் பாடலையும், அதிக கரகரப்புடையவர்கள் "ஹம்மிங்" மட்டுமே செய்வதென முடிவு செய்திருந்தோம்.


இந்த முறையும் எங்கள் வகுப்புப் பெண்களையே முதலில் பாட அழைத்தார்கள். அவர்கள், தில்வால துல்ஹனியா லேஜாயேங்கேவில் இருந்து "கர் ஆஜா பர்தேசி" என்ற பாடலைப் பாடினார்கள். மிகவும் சிறப்பாகவே அமைந்தது. எங்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் என்ன பாடினார்கள் புரியவில்லை. ஆனால் பலரும் கைதட்டியதைப் பார்த்தால் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.


எங்கள் பெயரைக் கூறும் பொழுதே அனைவரும் சிரிப்பது கேட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் மேடை ஏறிப் பாடத் தயாரானோம். பாடுமாறு மணியடிக்க யாரையும் பார்க்காமல் "சிறைச்சாலை" படத்தின் பாடலைப் பாட ஆரம்பித்தோம்...



இது தாய் பிறந்த தேசம்

நம் தந்தை ஆண்ட தேசம்

இது நாம் வணங்கும் தேசம்

உயிர் நாடி இந்த தேசம்

மண் பெரிதா உயிர் பெரிதா

பதில் தரவா இப்போதே

வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம

(வந்தே மாதரம்…)


வீரத்தை குண்டுகள் துளைக்காது

வீரனை சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது

இழந்த உயிர்களோ கணக்கில்லை

இருமி சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரி நரம்பிலே கொடியேற்று

நிலத்தடியில் புதைந்திருக்கும்

பினங்களுக்கும் மனம் துடிக்கும்

(வந்தே மாதரம்) ….


தாயோ பத்து மாசம் தான்

அதிகம் சுமந்தது தேசம் தான்

உயிரும் உடலும் யார் தந்தார்

உணர்ந்து பார்த்தால் தேசம் தான்

இந்த புழுதிதான் உடலாச்சு

இந்த காற்று தான் உயிர் மூச்சு

இன்று இரண்டுமே பரிப்போச்சு

இன்னும் என்னடா வெரும் பேச்சு

கை விலங்கை உடைத்திடடா

எரிமலையே எழுந்திடடா

(வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்) ….

பாடலைப் பாட ஆரம்பித்தவுடன் எங்களுக்கு நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் மனத்திரையில் ஓட ஆரம்பித்தது. உணர்ச்சியுடன் பாட எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் கண்ணிர் துளிகள்!!


பாடலைப் பாடி முடித்த எங்களாலேயே நம்ப முடியவில்லை. அப்படி ஒரு கைத்தட்டல். பிறகு இன்னும் இரண்டு குழுவினர் கலந்து கொண்டனர்.நாங்கள் பாடியதை விடப் பலரும் நன்றாகப் பாடியிருந்ததால் நாங்கள் முதல் பரிசெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இந்த முறை கைத்தட்டல் கிடைத்ததே பெரிதாகத் தோன்றியது. போட்டியின் முடிவைக் கேட்ட எங்களுக்கு அதிர்ச்சி!! எங்களுக்கே முதல் பரிசு!!


"என்னடா நம்ம அவ்வளவு நல்லாவா பாடினோம்?" என்று சரவணன் கேட்க..


"எஸ்.பி.பி.யும் மனோவும் சேர்ந்து பாடீட்டாங்க..இவனுக வேற.... பாட்டு வரிகளப் பாருங்கடா.." என்று சிரித்தான் மணி.


மீண்டுமொரு முறை பாடல்வரிகளைப் படித்துப் பாருங்கள்.. இந்தப் பாடலை யார் பாடியிருந்தாலும் பரிசு வாங்கியிருப்பார்கள். இதை விட உணர்ச்சிகரமாக விடுதலைப் போராட்டத்தைப் பாடலாக்க முடியுமா?

நாங்க போட்டியில் வெற்றி பெற ( சூப்பர் சிங்கர்ஸ் ஆக ) உதவிய இளையராஜாவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும் நன்றிகள்!!

..

.

Tuesday, November 17, 2009

பிளாக்கர், ஃபேஸ்புக், டிவிட்டர் - பகிர்தலில் கவனம் தேவையா?



நீங்கள் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கிய பதவியில் வேலை பார்த்து வருகிறீர்கள். உங்கள் கீழ் பல அரிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. திடீரென்று, ஒரு நாள் காலையில் இணையதளத்தைப் பார்க்கும் பொழுது உங்கள் நிறுவனத்தின் புதிய ஆய்வைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.


பல செய்திகள் உண்மையானதாகவும், சில கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் இருக்கிறது. ஆய்வில் உள்ள பல விடயங்கள் வெளியாகியிருப்பதால் போட்டி நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபடலாம். இதனால் பாதிக்கப் போவது யார்?


யார் இது போல செய்திகளை வெளியிட்டிருப்பார்கள் என ஆராய்ந்து பார்த்ததில், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தனது வலைத்தளத்தில் இந்த ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பது தெரிகிறது. சில நூறு வாசகர்கள் தனது தளத்திற்கு வருவதற்காகவே இதைச் செய்துள்ளதாகவும் தெரிகிறது.


இந்தச் சூழலில் என்ன செய்வீர்கள்?

******

உங்கள் நண்பர் ஒருவர் பொருளாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். தான் பணியாற்றி வரும் துறை சார்ந்த விடயங்களைப் பற்றி சில சிட்டாடல்களை டிவிட்டர் தளத்திலும், ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிட்டு வருகிறார். அதனைப் பற்றி அவரிடம் விசாரித்தால் தான் செய்த பொருளாதார ஆய்வைப் பற்றியே கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்!


அவர் செய்த ஆய்வைப் பற்றி வெளியிட்டாலும், பொருளாதார ஆய்வைப் பற்றிய சின்னச் செய்தியானாலும், அது அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தச் செயல்பாடுகளைப் பாதிக்க வல்லது.


******

உங்கள் நிறுவனத்தில் நன்றாக வேலை பார்க்கும் ஒருவர் பதிவுகளையும், கட்டுரைகளையும் எழுதி வருவது தெரிய வருகிறது. என்ன எழுதுகிறார் என்று பார்த்தால், தொழிலிற்கு அப்பாட்பட்ட விடயங்களை எழுதி வருவது தெரிகிறது. ஆனால், இவர் பல கருத்துகளை அலுவலக நேரத்தில் வெளியிட்டிருப்பது தெரிய வருகிறது.

தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியை முடிப்பதில் எந்தக் குறையும் வைக்காதவரிடம் எப்படி இதை எடுத்துக் கூறுவது?

******

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் யாவும் இன்றைய சூழலில் பார்க்கக் கூடயவையே.

ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்பு நிறுவனங்கள் பெருகிக்கொண்டே வருவதும், இதில் பயணர் கணக்கை வைப்போர் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.


சென்ற ஆண்டு 2 மில்லியன் பயணர் எண்ணிக்கை கொண்ட டிவிட்டர் தளத்தில் இன்றைய பயணர்கள் எண்ணிக்கை 30 மில்லியன். சமூக வலையமைப்புச் சேவைகளில் கிடைக்கும் தொடர்புகளும், நட்புகளும், தகவல்களும் இந்த சேவைகளின் வளர்ச்சிக் காரணம் எனலாம்.

ஒரு கட்டுரையை தன் தளத்தில் வெளியிடும் பொழுது கிடைக்கும் வாசகர் பார்வையும், நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் புகழும் பலரையும் இது போல சமூக வலைத்தளங்களுக்கு இழுக்கின்றன. அதுவே யாரும் வெளியிடாத கருத்தாகவோ, ஆய்வைப் பற்றிய தகவல்களாகவோ இருந்தால் என்னாகும்?


மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணங்கள் இந்த வகையையே சாரும். சமூக வலையமைப்புச் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு நமக்கிருக்கும் பொறுப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமா?



சமூக வலையமைப்புச் சேவைகளைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்:


* நாம் யார்? என்ன செய்கிறோம்? சமூக வலையமைப்புகளில் நம் பங்கு என்ன என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்றுகிறோம், எந்தத் துறையைப் பற்றி எழுதப் போகிறோம் என்று முடிவெடுப்பது முக்கியம். நம் நிறுவனத்தின் பொருளைப் பற்றி நல்ல விடயங்களைப் பற்றி எழுத நினைத்தாலும், அந்த நிறுவன வெளித்தொடர்புத் துறையினர் (Public Relations ) வெளியிடுவது போல இருக்காது.



* காப்புரிமையைப் (IPR - Intellectual Property Rights) பற்றிப் புரிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ எழுதும் முன்பு அந்தத் தகவல்கள் எப்படிக் கிடைத்தது, எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பது முக்கியமான ஒன்று. வெளிவராத ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை வெளியிட நேர்ந்தால் அந்த நிறுவனம் நம்மை நீதிமன்றம் வரையிலும் கூட்டிச்செல்லலாம்.

* சர்ச்சையான, பரபரப்பான கருத்துகள் என்றுமே பிரபலமாகக் கூடியவை!! ஆனால் அந்தக் கருத்து நாம் வகிக்கும் பதவிக்கும் வேலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் சசி தரூர் "கால்நடைகள் வகுப்பை"ப் பற்றி டிவிட்டரில் சிட்டாடியதால் ஏற்பட்ட பரபரப்பு அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சில நாடுகளில் சமூக வலையமைப்புகள் தனிக்கைகளுக்கு உள்ளானவை என்பதும் எந்தந்த நாடுகள் அவை என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது.


* நாம் பார்க்கும் பணியைப் பற்றிய கருத்துகளை ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர் போன்ற தளங்களில் வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் நாம் வெளியிட்ட கருத்துகளை மறந்து விட்டாலும், எங்காவது ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது. "Job is boring" என்று வெளியிட்ட கருத்திற்காக ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் நடந்தேறியுள்ளது.


* தனிப்பட்ட விசயங்களைப் பற்றியோ, புகைப்படங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிடவது பாதுகாப்பிற்கு நல்லதல்ல. ஒருவரை, நண்பராக இணைப்பதற்கு முன்பு அவர் நன்றாகத் தெரிந்தவரா என்பதைச் சிந்திப்பதும் நல்லது.


* தொழில் நிறுவனங்களுக்கு, ஊழியர்கள் பணி நேரத்தில் சமூக வலையமைப்புகளில் பங்கு கொள்வது தலைவலியாகி வருகிறது. நம் நண்பர் வெளியிடும் கருத்திற்கோ கட்டுரைகளுக்கோ உடனடியாக மறுகருத்து அல்லது பின்னூட்டமளிக்க வேண்டுமென்ற கட்டாயம் உள்ளதா? அலுவலகத்தில் இது போன்ற சிட்டாடல்களையும், கருத்துகளையும் வெளியிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

* எல்லா வற்றிற்கும் மேலாக, நமக்கு எது முக்கியம் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும் நல்லது.


நான் படித்தவற்றையும், கேட்டவற்றையும் கட்டுரையாக பதிந்துள்ளேன். உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.

Monday, November 16, 2009

முப்பாட்டன் சொத்து..


நம் வீட்டுத் தோட்டத்தைத் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு புதையல் கிடைக்கிறது. ஒரு பெரிய மண்பானை. அதைத் தோண்டி எடுத்து உடைத்தால் "என் பேராண்டிகளுக்கு" என்று பொறிக்கப்பட்ட பாத்திரங்களும், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சின்ன சிலைகளும், வாழ்வியல் குறித்த பனையோலைகளும் கிடைக்கின்றன. நம் முப்பாட்டன் பேராண்டிகளுக்காக புதைத்து வைத்துள்ளார். அதைப்பார்க்கும் பொழுதே சில நூறாண்டுகள் பழமையானது என்று புரிகிறது.



நாம் என்ன செய்வோம்?


பழைய பாத்திரங்களையும், பனையோலைகளையும் வைத்து என்ன செய்வது என்று நினைப்போமா? அல்லது நம் பேராண்டிகளுக்காகவும் பேத்திகளுக்காகவும் அதை பாதுகாத்து வைப்போமா?
***********
ஷார்ஜா நகரின் மிகவும் பரபரப்பான ரோலா பகுதியைச் சுற்றி வரும் பொழுது, சிறிய கோட்டை ஒன்று கண்ணில் தென்படும். அந்தக் கோட்டையின் அருகில் சென்று பார்த்தால் "பாரம்பரியச் சின்னம் - அரசால் பாதுகாக்கப்படும் இடம்" என்று அறிவிப்புப் பலகையை வைக்கப்பட்டுள்ளது.








ஓமன் நாட்டில் முசுந்தம் என்றொரு சுற்றுலா நகரம் உள்ளது. அந்த ஊரிற்குச் செல்லும் வழி கரடு முரடான மலைகளையும், ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் காடுகளாகவும் இருக்கும். அந்தப் பொட்டல் காட்டில் ஒரு மண்ணால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. அந்தக் கோட்டையை நோக்கிச் சென்றால் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. "பூகா கோட்டை - ஓமன் நாட்டின் பாரம்பரியச் சின்னம்"


இதுவே, நம் நாட்டில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் ஒரு பழமையான கட்டிடமோ, கோட்டையோ இருந்தால் என்னாகும்?
அண்மையில் கும்பகோணம் நகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான சக்கரபாணி கோயிலிற்குச் சென்றிருந்தேன். கோயில் சுவரெங்கும் 6 இலக்க எண்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கே இருப்பவர்களிடம் இதைப்பற்றிக் கேட்ட பொழுது இவை யாவும் தேர்வு எண்கள் என்றும் தேர்விற்குச் செல்லும் முன்பு இவ்வாறு சுவரில் எழுதுவது வழக்கம் என்றும் கூறினர். என்ன கொடுமை பெருமாளே!!
இது தான் கோயில்களுக்குப் பெயர் போன ஊரில் ஒரு பழமையான கோயிலைப் பாதுகாக்கும் முறை!! பொன்னும் பொருளும் மட்டுமே நம் முப்பாட்டன் சொத்து அல்லவே!!


மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், புராதன சின்னங்கள், கோட்டைகள், மத வழிபாட்டுத் தளங்கள் போன்றவையும் நம் சொத்து தானே? இவை தானே நம் முகவரி? ஆனால் பொன்னிற்கும் பொருளிற்கும் தரும் மதிப்பை மொழிக்குத் தருகிறோமா?ஆஸ்கார் விருதைப் பெற்ற பொழுது ஏ.ஆர்.ரகுமான், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் கூறிய பொழுது நம் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது எதனால்?


அமீரகத்தில் ஒரு இந்திய மாணவர் புதிதாக 5ம் வகுப்பில் சேருகிறார் என்றாலும் அரபி மொழியை ஆரம்பத்திலிருந்து படித்தே தீர வேண்டும். ஆனால், நாமோ தமிழ் மொழியைப் பள்ளிப்பாடங்களில் எடுப்பதில் சுணக்கம் காட்டுவது எதனால்? 20 அல்லது 30 மதிப்பெண்களுக்காக பிரெஞ்சு மொழியை எடுப்பது எவ்வளவு இழிவானது!!


நம் மொழியின், நம் முன்னோரின் பாரம்பரியத்தை விடவா ஆங்கிலமும், பிரென்சும் பாரம்பரியம் மிக்கவை?


இன்று, மேலாண்மைத்துறையில் நாம் படிக்கும் பல கருத்துகளை நம் முப்பாட்டன் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டாரே!! நாம் படிக்கும் SWOT ( Strength Weakness Opportunity Threat ) Analysis தான் திருக்குறளில்


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிசெயல்



என்று வரும் குறளால் கூறப்பட்டுள்ளது. நம் முன்னோரின் வளமைக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?

நம் முப்பாட்டன் கரிகால சோழன் கல்லணையைக் கட்டியது 2200 ஆண்டுகளுக்கு முன்பு. அண்மையில் என் தந்தை துபாய் வந்திருந்த பொழுது உலகின் உயரமான கட்டிமான புர்ஜைக் காட்டி, "எப்படிப்பா இருக்குது?" என்றேன். அதற்கு அவர்.. "போடா.. உங்க பாட்டன் கட்டின தஞ்சை பெரிய கோயில விடவாடா இதெல்லாம்.." என்றார். உண்மைதானே?
இன்று பணம் இருக்கும் எந்த நாட்டினரும் உயரங்களைக் கட்டிடங்களால் தொடலாம். ஆனால் நம் முன்னோர்களின் சாதனைக்கு முன்பு இன்றைய சாதனைகள் யாவும் பெரியதல்லவே!!
***********
நம் முன்னோர்கள் நமக்களித்த சொத்துக்களை நாம் என்ன செய்வது?


புதிதாக சொத்துகளை உருவாக்க நம்மை ஆள்வோரிடம் மனமோ பணமோ இல்லாவிட்டாலும், நம்மிடமிருக்கும் சொத்துக்களையாவது பாதுகாத்து நம் பேராண்டிகளுக்குக் கொண்டு செல்லலாம். சொத்துக்களைப் பாதுகாக்கும் வேலையில் முதல் படி, நம் மொழியைப் படிப்பதும், படித்ததைப் பகிர்வதும், புதிதாகப் படைப்புகளை உருவாக்குவதும் தான்!!
நம் ஊரிற்கு அருகில் உள்ள புராதனச் சின்னங்கள் என்னென்ன, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிவதும் அதை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்வதும் தேவையான ஒன்று!! இது போன்ற சிற்சில விசயங்களைச் செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் சொத்துக்களை நம் பேரன் பேத்திகளுக்கும் கொண்டு செல்ல முடியும்.
நம் பேராண்டிகளும் பேத்திகளும் நம்மைப் பார்த்து பெருமை கொள்ளட்டும்!!
***********
உலகெங்கும் உள்ள சிறப்புமிக்க கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாத்து வரும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தொடங்கப்பட்டது நவம்பர் 16ம் தேதியில் தான். இன்றைய நாளில் நம் கலாச்சாரச் சின்னங்களைப் பற்றியும், முன்னோர்களின் சாதனைகளையும் நினைவு கூறுவது ஏற்புடையது தானே!!


************



Related Posts with Thumbnails