Wednesday, February 17, 2010

ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் ரெட்டைச் சதமும்(200)..

ஷார்ஜா!! 

ஏப்ரல் 18,1986 : இந்தியா - பாகிஸ்தான்

ஷார்ஜா கிரிக்கெட் இறுதி ஆட்டம். பாகிஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

"முழு ஆட்டமும் ஒரு பந்தில் நான்கு ரன்கள் என்று சுருங்கிவிட்டது. கடைசி பந்தை எப்படி வீசுவது என்பதைப் பற்றி இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் எனக்குள் திட்டமிட்டுக் கொண்டேன். எப்படியும் சேடன் ஷர்மா யார்க்கர் பந்தைத் தான் வீசப்போகிறார். நான் 110 ரன்கள் எடுத்திருந்தேன். இரண்டரை மணி நேரமாக மைதானத்தில் இருந்ததால் பந்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. கிரீஸிற்கு வெளியே வந்து விளையாடுவது என்று திட்டமிட்டுருந்தேன். ஃபீல்டர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கடைசிப் பந்தை எதிர்கொள்வதற்கு முன் கொஞ்சம் பிராத்தனையும் செய்துகொண்டேன்.

பாவம் சேடன் ஷர்மா!! யார்க்கராக வீச முயற்சி செய்ய, கையில் இருந்து பந்து நழுவியதோ அல்லது நான் முன்னால் வந்ததாலோ, ஃபுல் டாசாக வந்தது. அலேக்காக லெக் சைடில் அடித்தேன். சிக்ஸராக மாறியது. மற்றவை வரலாறு!!"


இது ஜாவத் மியாண்டாட் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்!!

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டிக்கென்று தனி இடம் தான். பரபரப்பான போட்டி என்றால் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகள் தான் என்ற நிலை மாறி இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்று மாறியது இந்தப் போட்டிக்குப் பிறகு தான்.

கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றுமே ஷார்ஜாவிற்குத் தனி இடம் தான். வருடத்திற்கு நான்கைந்து கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்ற காலத்தில் ஷார்ஜாவில் மட்டும் ஒன்றோ இரண்டோ போட்டிகள் நடைபெற்று விடும். அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டால் பரபரப்பிற்கு அளவே கிடையாது. ஜாவத் மியாண்டாட், இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆக்யூப் ஜாவத், சக்லைன் முஸ்டாக் போன்ற பிரபல பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி நினைக்கும் பொழுதே நமக்கு நினைவிற்கு வருவது ஷார்ஜா மைதானம் தான்.

ஏப்ரல் 22, 1998 : இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா இறுதியாட்டத்திற்குத் தேர்வாக 46 ஓவரில் 236 ரன்கள் அல்லது வெற்றி பெற 276 ரன்கள் எடுக்க வேண்டும். 50 ஓவரில் கடுமையாக விளையாடினாலே 250ஐத் தொடமாட்டோம். இதில் எங்கே 46 ஓவரில் 236 ரன்கள் எடுப்பது? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக!!

"இந்தியாவின் புயல் சச்சின் மைதானத்தில் விளையாடி வருகிறார். அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி விட சச்சின் மட்டும் புயலாக மாறி அடித்து ஆட.. நிஜமாகவே மண் புயல் மைதானத்தைச் சூழ்கிறது. இப்படியும் புயல் வருமா என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, பாலைப்புயல் கிரிக்கெட் புயலிற்கு வழிவிட.. இந்தியா இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது."


இறுதியாட்டத்திலும் கிரிக்கெட் புயலின் சதத்தால் இந்தியா ஆஸ்திரேலியா அணியை வென்றது.

இது வரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்கு இருந்த பரபரப்பு இந்தியா ஆஸ்திரேயா போட்டிகளுக்கு மாறியது இந்தப் போட்டியிலிருந்து தான். அது இன்று வரை தொடர்கிறது.

ஏதோ இந்தியாவிலேயே போட்டி நடப்பது போன்ற ஒரு சூழல், ஆடம்பரமான இருக்கைகள், திரைநட்சத்திரங்கள், கலக்கலான பார்வையார்கள் என ஷார்ஜா மைதானத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தனை பெருமைகள் கொண்ட மைதானத்தில் சில வருடங்களாக சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதில்லை. அவ்வப்பொழுது இரண்டாம் தர ஆட்டங்கள் மட்டும் நடைபெறுகின்றன. ஷார்ஜாவின் இடத்தை துபாயும், அபுதாபியும் பிடித்துக்கொண்டன. சென்ற வாரம் ஷார்ஜா மைதானம் அருகில் பயணம் செய்தேன். மைதானத்தின் கூறையைப் பார்த்த பொழுது கங்குலி விட்ட ராக்கெட்டுகள் தான் நினைவிற்கு வந்தன. 

எத்தனை ஆட்டங்கள், எத்தனை சர்ச்சைகள்?


1984ல் இருந்து ஒரு நாள் போட்டிகள் நடந்து வரும் ஷார்ஜா மைதானத்தில், இது வரை 199 போட்டிகள் நடந்துள்ளன. உலகில் வேறெந்த மைதானத்திலும் இத்தனை போட்டிகள் நடந்ததில்லை. வரும் 18ம் தேதியன்று ஷார்ஜா மைதானத்தில் 200வது போட்டி கனடா மற்றும் அஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. பரபரப்பிற்குப் பெயர் போன மைதானத்தில் சத்தமில்லாமல் 200வது போட்டி நடைபெறுவது வேதனையானது! எல்லாம் சூதாட்டம் செய்த வேலை!!

சர்வதேச அணிகளுக்கு இடையே போட்டிகள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஷார்ஜாவிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்யும். தாஜ்மஹால் என்றவுடன் காதல் நினைவிற்கு வருவதைப் போல ஷார்ஜா என்றவுடன் கிரிக்கெட் தான் நினைவிற்கு வரும்!!

வாழ்க ஷார்ஜா கிரிக்கெட் நினைவுகள்!!

13 comments:

பிரசன்னா கண்ணன் said...

டெஸ்ட் போட்டிகளுக்கு லார்ட்ஸ் என்றால், ஒரு நாள் போட்டிகளுக்கு ஷார்ஜா தான்.. நாம் மறந்து விட்ட ஒரு சிறப்புமிக்க மைதானத்தை மீண்டும் நினைவுப்படுத்தி விட்டீர்கள்..

Asiya Omar said...

செந்தில், ஹாஜியின் மூலம் உங்கள் பக்கத்தை பார்வையிட முடிந்தது.ஆமாம்,என் கணவரிடம் ஒரு நாள் கேட்டேன்,ஷார்ஜா ஸ்டேடியத்தை எப்ப கொண்டு காட்டப்போறீங்கன்னு,அவரும் அபுதாபியில் இருந்து கூட்டீட்டு வந்தார்,நானும் தாஜ்மஹால் கற்பனையில் தான் வந்தேன்,பார்த்தாச்சான்னார்,உம்னேன்,விளக்கம் தான் நீங்க சொல்லிட்டீங்களே தம்பி.

Chitra said...

சர்வதேச அணிகளுக்கு இடையே போட்டிகள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஷார்ஜாவிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்யும். தாஜ்மஹால் என்றவுடன் காதல் நினைவிற்கு வருவதைப் போல ஷார்ஜா என்றவுடன் கிரிக்கெட் தான் நினைவிற்கு வரும்!!


......... :-) Cricket Highlights!

பிரபாகர் said...

சரிதான் செந்தில், ஆனால் பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானோடு விளையாடிய அணிகள் தோற்கும் வண்ணமே இருந்தது என்பதும் உண்மை.

பிரபாகர்.

☀நான் ஆதவன்☀ said...

இப்பெல்லாம் கலை நிகழ்ச்சிகள் தான் அதிகம் நடைபெறுகிறது சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில்.

வரதராஜலு .பூ said...

1986 நான் பாத்தது இல்ல, ஆனா 1998 என்னால மறக்க முடியாத மேட்ச்.

சச்சின் ஒரு மேட்ச் மற்றும் சீரிஸ் வின்னராக ஜொலித்தார்.

நல்லா கொசுவத்தி சுத்திட்டிங்க

http://varadaradj.blogspot.com/2010/02/blog-post_11.html

சிம்ம‌பார‌தி said...

அருமையான பகிர்வு. நண்பரே.... அனைத்தையும் அப்படியே கண் முன் கொண்டு வருகிறது உங்களது இந்தப் பகிர்வு.

க.பாலாசி said...

ஷார்ஜா நினைவுகளை ரசித்தேன்...

பகிர்வு அருமை...

செ.சரவணக்குமார் said...

ஆம் செந்தில், கிரிக்கெட் வரலாற்றில் ஷார்ஜா மைதானத்துக்குத் தனி இடம் உண்டு. 1998 போட்டியை நினைவுபடுத்திவிட்டீர்கள் நண்பா. நல்ல பகிர்வுக்கு நன்றி.

அப்துல்மாலிக் said...

சூதாட்டத்தாலும், நடுவர்களின் பாரபட்சத்தாலும் இந்தியா போட்டியை விட்டு வெளியேறியது, அதை தொடர்ந்து முக்கிய ஸ்பான்சரான கொக்கோ கோலாவும் பின்வாங்கியது, அந்த நிகழ்வுதான் இன்று அதிகபட்சமாக கல்சுரல் புரோகிராம் மைதானமாக மாறிவிட்டதுக்கு காரணம்..

நானும் இங்கு வந்து ஒரு மேட்சாவது பார்த்துடலாம் என்ற ஆசை மலையேறிவிட்டது

நல்ல பகிர்வு செந்தில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ பிரசன்னா,

உண்மைதாங்க. ஒரு நாள் போட்டிகள் என்றால் ஷார்ஜாவை நினைக்காமல் இருக்கமுடியாது.

@ அசியா ஒமர்,

சரீங்க. நீங்க பார்த்த மாதிரியே தான் நானும் பார்த்தேங்க..

Unknown said...

உங்கள் பதிவைப் படிக்கும்போது புல்லரிப்பதைத் தவிர்க்க முடியவில்லை..

நல்ல நினைவு..

மற்றபடி கனடா-ஆஃப்கானிஸ்தானுக்கு இடையில் நடைபெறும் ஆட்டம் ஒரு நாள் போட்டியாக கணக்கில் கொள்ளப்படாது.. :(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ சித்ரா,

நன்றி.

@@ பிரபாகர்,

அது ஒரு நெருடலன விசயம் தான் பிரபாகர். நன்றி.

@@ ஆதவன்.

ஆமாங்க தலைவா. நன்றி.

@@ வரதராஜூலு,

நன்றி

@@ சிம்மபாரதி

நன்றி

@@ க.பாலாசி

நன்றி.

@@ செ.சரவணக்குமார்,

நன்றி.

@@ முகிலன்.

நன்றி நண்பரே.

Related Posts with Thumbnails