Friday, February 12, 2010

தாலாட்டும் சுகிசிவமும்...

நீங்க கடைசியா உங்க வீடுகள்ல தாலாட்டுக் கேட்டது எப்பொழுது?

இந்தக் கேள்வியைக் கேட்டது "இந்த நாள் இனிய நாள்" என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள். { துபாய் நேரம் காலை 5:30 மணிக்கு (இந்திய நேரம் காலை 7 மணி) இந்நிகழ்ச்சி வருவதால் பார்க்கத் தவறுவதில்லை}

நான் கடைசியாகத் தாலாட்டுப் பாடலைக் கேட்டது எங்க ஆத்தா(பாட்டி) என் தங்கைகளுக்குப் பாடிய பொழுது தான். 

"ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ! உல்ல்ல்லாய்யீ...."

என்று பாடும் பொழுது நானும் பின்னாடியே பாடிய நினைவு!! 

சுகிசிவம் அவர்கள் நேற்றைய (11.02.10) நிகழ்ச்சியில் தாலாட்டைப் பற்றிய செய்திகளை அழகாக வழங்கினார்.

தாலாட்டு என்ற பாடல் வகை தமிழ் கலாச்சாரத்தில் ஒரு வகை. குழந்தைகளைத் தூங்க வைக்க பாடும் பாடல் என்பது இதைப் படிக்கும் தலைமுறையினர் வரை அனைவரும் அறிந்த விசயம் தான!! "தால்" என்பது "நா"வைக் குறிக்கும் ஒரு சொல்!! நாவை ஆட்டிப் பாடப்படுவதால் தாலாட்டு எனப்படுகிறது. 

தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. அது மட்டுமல்லாமல், "தன் தாயில் குரலில் கேட்கும் பொழுது குழந்தைகளுக்கு மன அமைதியும் பயமும் நீக்கப்படுகிறது" என்ற செய்தி வியப்பளித்தது. தாலாட்டைப் பாட பெரிய அளவிலான இசையறிவெல்லாம் தேவைகிடையாது. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களை வைத்தே பாடக்கூடியது என்பதற்கு இந்தத் தாலாட்டுப் பாடல்களே சான்று..

சங்குல பால் வார்த்தா சமத்து குறையுமுன்னு
இரும்புல பால் வார்த்தா எழுத்து குறையுமுன்னு
வெள்ளியில பால் வார்த்தா பாசம் குறையுமுன்னு
கையில பால் வார்த்தேன் கண்ணே நீ தூங்கு!!

O

ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! – உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு.....

O

பழங்காலத்தில் ஆழ்வார்கள் கண்ணன், இராமன் போன்ற கடவுளர்களுக்குப் தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளனர். கடவுளர்க்கு மட்டும் தான் பாட வேண்டுமா?

குழந்தைகளும் கடவுள் தானே!!

இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னன் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக ஒரு செய்தியை கூறினார் சுகிசிவம். 

மன்னன் சேதுபதியின் மாளிகைக்கு அருகே குடியிருந்த ஒரு பெண் தன் குழந்தைக்கு தாலாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். அவர் தாலாட்டுப் பாடும் பொழுது மன்னரும் அதைக் கேட்பதை வழக்கமாக்கியிருந்தார். இந்தத் தாய் தன் குழந்தையின் தொட்டிலை ஆட்டும் தொலைவிற்குத் தகுந்த வாரு ராகத்தையும் அமைத்திருக்கிறார். அந்த ராகத்திற்கு ஏற்றவாறு மன்னரும் தன் கையை அசைத்து மகிழ்ந்திருக்கிறார். அப்பொழுது அவரது கையில் இருந்த வைர மோதிரத்தில் பட்ட சூரிய ஒளி இந்தப் பெண்ணின் வீட்டின் கதவில் விழுந்து, தன் தாலாட்டிற்கேற்ப ஆடியிருக்கிறது.

இதைப் பார்த்த அந்தத் தாய்..

"மன்னவரின் மோதிர ஒளி
வீட்டு வாசலிலே வந்து விழ
அந்த மோதிரம் வேணுமுன்னு
அழுகிறாயோ? கண்ணே நீ தூங்கு.."

என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்ட மன்னன் அந்த மோதிரத்தை குழந்தைக்குப் பரிசளித்தாராம்.

O

இப்படி நம் பாரம்பரியத்தில், நம் வாழ்வியல் முறையில் ஒன்று கலந்த தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலைமை என்ன? இதே கேள்வி என் குடும்பத்தில் என்ன நிலை என்பதை என் அப்பாவிடம் கேட்டபொழுது..

"அப்பா, ஆத்தாவுக்கு அப்புறம் யாருக்கங்ப்பா தாலாட்டு பாடத்தெரியும்?"

"அட..."

"என்னங்கப்பா கஷ்டமான கேள்வியக் கேட்டுட்டனா?"

"ஆமாம்பா.. உங்க பெரியத்தைக்கு மட்டும் தெரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

"உங்க பேரப்பசங்களுக்கெல்லாம் எப்படித் தாலாட்டுப் பாடறது?"


"அது பாடறவங்களக் கேட்டாத்தானே பாட முடியும். ஏதாவது தாலாட்டுப் பாடல் புக் கிடைக்குதான்னு கோவை போகும் போது விஜயால பாக்கறேன். அப்புறம் பெரியத்தையப் பாக்கற பொழுது எப்படி பாடறதுன்னு மருமகளுக்கு சொல்லச் சொல்றேன்" என்றார்.

O

ஐந்து சகோதரிகளுடன் பிறந்த என் தந்தையின் பதிலிலேயே தாலாட்டுப் பாடல்களை நாம் எப்படித் தவற விட்டுள்ளோம் என்பது புரிகிறது.தொலைக்காட்சிகளில் வரும் குத்துப்பாடல்களுக்குத் தங்கள் குழந்தைகள் ஆடுகிறது என்பதைப் பெருமையாகக் கருதுவது சரியா? தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு மன அமைதியுடன் தூங்கிய குழந்தைகள் இன்று "ஹிட்" நம்பர்களைக் கேட்டு மன அமைதியை இழந்து விடுகின்றனர் என்பதே சுடும் உண்மை!!

O

12 comments:

ஆர்வா said...

பழைய நினைவுகளை தூண்டிவிட்டுட்டீங்க

ஈரோடு கதிர் said...

அருமையான இடுகைங்க செந்தில்

இதே சுறுசுறுப்புல....
தங்கச்சிக்கு சீக்கிரமா தாலாட்டு பாட்டுப் பாட கத்துக்கொடுத்துருங்க...
இல்லைனா... நீங்கதான் பாட வேண்டியிருக்கும்

vignaani said...

அருமையான வரிகள்; கருத்துக்கள்.

க.பாலாசி said...

அருமைங்க...அருமைங்க... இப்போது நாம் இழந்திருக்கும் சொர்க்கங்களில் இதுவும் ஒன்று... மற்றதெல்லாம் வளர்ந்து இழந்தவை...இவைகள் பிறந்தபோதே இழந்தவை...அவ்வளவே....

நல்ல இடுகை....

கோபிநாத் said...

நல்ல பதிவு தல ;))

நேரம் கிடைக்கும் போது இங்கையும் போயி பாருங்கள்

தாலாட்டு
http://thalatu.blogspot.com

பழமைபேசி said...

//இதே சுறுசுறுப்புல....
தங்கச்சிக்கு சீக்கிரமா தாலாட்டு பாட்டுப் பாட கத்துக்கொடுத்துருங்க...
இல்லைனா... நீங்கதான் பாட வேண்டியிருக்கும்//

மறுகூவு கூவிக்கிறனுங்கோ!

Menaga Sathia said...

அருமையான இடுகை!!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. தமிழில் தாலாட்டுப் பாடல்கள் பள்ளியில் படித்ததோடு சரி. இந்த "அத்தை அடிச்சாரோ" மட்டும் கொஞ்சமா ஞாபகமிருக்கதுனால பிள்ளைங்களுக்குப் பாடுவதுண்டு. ஆமா, என் பிள்ளைகளுக்கு நான் தாலாட்டுப் பாடித்தான் தூங்க வைப்பேன். இன்றும் சின்னவன் அப்படித்தான். அதில் "லா இலாஹா இல்லல்லாஹ்" வும் மற்ற அரபிமொழிப் பாடல்களும் நிறைய வரும் என்றாலும், தமிழ் கொஞ்சமே கொஞ்சம்தான். தெரிந்திருந்தால் பாடியிருப்பேன். :‍-(

Chitra said...

தொலைக்காட்சிகளில் வரும் குத்துப்பாடல்களுக்குத் தங்கள் குழந்தைகள் ஆடுகிறது என்பதைப் பெருமையாகக் கருதுவது சரியா? தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு மன அமைதியுடன் தூங்கிய குழந்தைகள் இன்று "ஹிட்" நம்பர்களைக் கேட்டு மன அமைதியை இழந்து விடுகின்றனர் என்பதே சுடும் உண்மை!!


..........சரியாக சொல்ல வந்த மேட்டர் அய் சொல்லிட்டீங்க. ........... சின்ன பிள்ளைங்க அர்த்தம் தெரியாமலே, " மம்மி டாடி வீட்டுல இல்லைன்னு" சாதரணமாக பாடிக்கிட்டு போகுதுங்க.

Hussain Muthalif said...

நல்ல பதிவு நண்பரே,

பழைய நினைவுகளை தூண்டுகிறது.

சின்ன வயசுல எங்க பெரிய அக்கா இன்னோரு அக்கா குழந்தைக்கு பாடிய தாலாட்டு தான் கடைசியா கேட்டது.

அப்புறமா, "மூன்றாம் பிறை" ல "கண்ணே கலைமானே" கம்மியான சத்தத்துல walkman-la கேட்டுட்டு பலநாள் இரவு அப்படியே தூங்கிபோயிருக்கேன்.

இந்த ரெண்டையுமே வர தலைமுறை இழந்து விட்டதுன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.

தாராபுரத்தான் said...

நம் கண் எதிரில் காணாமல் போகப் போவதை நாம் எப்படி தடுக்க போகிறோம்.யோசிக்க சொல்லுது செந்தில்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ கவிதை காதலன், நன்றி.

@ கதிர். சொல்லியாச்சுங்க வீட்டுக்காரம்மா கிட்ட :))

@ விஞ்ஞானி, நன்றி.

@ க.பாலாசி, நன்றி

@ கோபிநாத, நன்றி. சுட்டிக்கு தான் நண்பா :)

@ பழமைபேசி, நன்றிங்கணா. இன்னொரு தடவை சொல்லியாச்சு.

@ திருமதி.மேகசத்யா, நன்றி.

@ ஹூசைனம்மா, நன்றி. பரவாயில்லைங்க, நீங்க ஏதாவது ஒரு தாலாட்டப் பாடறீங்க. சினிமாப்பாட்டுக்கு இது தேவலையே.

@ சித்ரா, ஆமாங்க சின்னக் குழந்தைக சினிமாப் பாட்டப் பாடற அந்தக்கொடுமை தான் தாங்க முடியல. நன்றி.

@ ஹுசைன், ஆமாங்க. நாம் மறந்த விசயத்தில் தாலாட்டும் ஒன்று. நன்றி.

@ தாராபுரத்தான், நன்றிங்க ஐயா.

Related Posts with Thumbnails