Friday, February 19, 2010

அமெரிக்க வாழ்க்கைமுறை நல்லதா?

வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதுகளில் ஷார்ஜாவிலிருக்கும் புஹைராஹ் கார்னிஷ் பூங்காவிற்குச் செல்வதுண்டு. என் நெருங்கிய நண்பரும் அவரது குடும்பத்துடன் வருவார். அனைவரும் மாலை நேரத்தில் அங்கே சென்று கதையடித்துக் கொண்டிருப்போம். நண்பரின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, எங்கள் மனைவிமாரும் அவர்களின் கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் உலக அரசியல், வளைகுடாஅரசியல், சொந்த ஊர் நிகழ்வுகள் என்று அளாவளாவ ஆரம்பித்துவிடுவோம். இது போன்ற ஒரு அளாவளாவுதலின் போது அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்..

"என் அத்தை மகன் அமெரிக்காவில் 10 வருடங்களா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கே சிட்டிசன்ஷிப் வாங்கிவிட்டார்" என்றேன்.

"ஏன் அவருக்கு இந்தியா திரும்பி வருவதில் விருப்பமில்லையா?" என்றார்.

"இந்தியாவிற்கு வருவதென்பதுஅவரது விருப்பம் மட்டுமல்லவே. அவரது மனைவியின் விருப்பம், மகனின் படிப்பு போன்றவற்றையும் சார்ந்தே உள்ளது"

"ம்ம்..."

"அவங்களுக்கு அமெரிக்க வாழ்க்கையின் வசதிகள் பழகிப்போயிடுச்சு போல.." என்றேன்.

"என்ன அமெரிக்க வாழ்க்கை? ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு அமெரிக்கா. இன்னிக்கு 6,7 அமெரிக்க உருவாகிடுச்சு"

"என்னங்க சொல்றீங்க ஆறேழு அமெரிக்காவா?"

"ஆமா.. முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னாடி தான் அமெரிக்கா மற்றும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வசதிகளும் கிடைத்தன. ஆனால் இன்று அமெரிக்கா போல பல பிரதிகள் அதே 20 கோடி மக்கள் தொகையில் உலகம் முழுவதும் வந்துவிட்டன!! மேற்கு ஐரோப்பா நாடுகள், கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஸ்யா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் இந்தியாவின் உயர்தர மற்றும் உயர் மத்திய வகுப்பு மக்கள், தென்கிழக்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் எல்லாம் கூட்டிப் பார்த்தால் ஆறேழு அமெரிக்கா வந்து விடாதா?" என்றார்.

"நீங்க சொல்றது சரி தான். அமெரிக்கால இருக்கற எல்லா வசதிகளையும் இந்தியால இருக்கற உயர்தர மற்றும் உயர் மத்திய வர்க்கத்தினர் அனுபவிக்கிறார்களே!! என்ன உள்கட்டமை தான் இல்ல" என்றேன் சிரித்தவாரே.

"ஆமா, முன்னாடியெல்லாம் ஊருக்கு ஒன்னோ ரெண்டோ காரைப் பார்ப்பதே பெரிய விசயமா இருக்கும். இன்று பரவலாக வீடுகளில் கார்கள் நிற்கின்றன. அதுவும் அஞ்சு லட்சம், ஏழு லட்ச ரூபாய் கார்கள் தான்!! நம்மளோட செலவழிக்கும் விதமும் மாறிடுச்சு!! எல்லாத்தையும் தேவைக்கு அதிகமா வாங்க ஆரம்பிச்சிட்டோம். இதுவும் அமெரிக்கால மட்டுமே இருந்த வாழ்வியல் முறை தான்!!"

"நமக்கு அதிகமா செலவு செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்னு நினைப்பு என்ன செய்ய?" 

"ஆமா.. அதோட விளைவு தான் இன்னிக்கு எங்க பார்த்தாலும் வரலாறு காணாத பனி, வெயில், புயல், வெள்ளம்னு செய்திகள்ல கேட்டுட்டே இருக்கிறோம்" என்று நண்பர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது நண்பரின் மகளும் மகனும் சார்ஜா கார்னிஷ் படகுத்துறை அருகே செயல்பட்டுவரும் குழந்தைகள் (பொம்மைக்) காரை ஓட்ட வேண்டுமென்றார்கள். 

"என்னம்மா நீயும் தம்பியும் ஒரே கார் எடுத்துக்கறீங்களா?" என்று நண்பர் கேட்க..

"தனித் தனிக் கார் தான் வேணும்" என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள்.  அங்கிருந்த படகுத்துறை பணியாளிடம் இரண்டு கார்களுக்கு வாடகையைக் கொடுத்துவிட்டு...

"இங்க ஆரம்பிக்குது அமெரிக்கா வாழ்க்கை முறை. இங்கே துபாய்லயே பாருங்க... தங்கள் வீட்டில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று கார்களை வைத்திருப்பதைப் போலவே தான் குழந்தைகளும் கேட்கிறார்கள்!! இப்படி ஒவ்வொரு விசயத்துலயும் இதே நிலைமை தான்!!" என்றார்.

"நீங்க சொல்றது சரி தான். என்னுடன் பணிபுரியும் ஐரோப்பிய நண்பர்கள் பலரது வீடுகளிலும் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள். என்ன நம்ம மக்கள் கரோலா வைத்திருந்தால் அவர்கள் பி.எம்.டபிள்யூவும், லம்போர்கினியும் வைத்திருக்கிறார்கள்"

"கார்ல மட்டுமா, பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள், பெரிய குளிரூட்டும் சாதனம் என்று வீட்டுற்குத் தேவையான பொருட்களில் ஆரம்பித்து உணவுப் பொருட்கள் வரை அனைத்திலும் மேலை நாடுகளையே பின் தொடர ஆரம்பித்திருக்கிறோம்"

"ம்ம்.. சமீபத்துல ஒரு கட்டுரையைப் படித்தேன். 'உலக மக்கள் தொகைல 5% சதவிதமே இருக்கற அமெரிக்க மக்கள் உலக உற்பத்தியின் 20 சதவிதத்தை உட்கொள்கிறார்கள்' என்று. நீங்க சொல்ற மாதிரி ஆறேழு அமெரிக்கா உருவானா ரெண்டு பூமி வேணும் போல இருக்கே" என்றேன்.

"ஆமாம்.. நாம அமெரிக்க வாழ்க்கை முறையை நோக்கிச் செய்யற ஒவ்வொரு விசயமுமே நம்ம பூமியைச் சுருக்குவதாவே இருக்கு!!" என்று சில நிமிடங்கள் கார்னிஷின் அக்கரையில் தெரிந்த கட்டடங்களையும் குளிர்காலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 

அந்நேரத்தில் என் நினைவோட்டம் சில வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கை முறை எப்படி இருந்தது. இப்பொழுது என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்றெல்லாம் ஓட ஆரம்பித்தது.

ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடைக்கு நடந்த சென்ற நான் இன்று காரையே நாடி நிற்கிறேன். முகம் மற்றும் கைகளைத் துடைக்கக் கைக்குட்டைகளைப் பயன்படுத்திப் பழகிய நான் இன்று மென்-காகிதங்களுக்கு மாறியுள்ளேன். சில வருடங்கள் கடைக்குப் பையை எடுத்துச் சென்ற நாங்கள் இன்று பிளாஸ்டிக் காகிதங்களையே பயன்படுத்துகிறோம். அன்றைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய நாங்கள் இன்று அதிகமாகப் பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளேன். இதெல்லாம் யோசிக்கும் பொழுது நானே அமெரிக்க வாழ்க்கைக்கு மாறி வருவதை உணர முடிகிறது.

நான் மெதுவாக கரையருகே சென்று நீரில் நீந்திக்கொண்டிருந்த பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் கரையருகே வந்த ஒரு பறவை நீரில் தன் அலகால் துளாவிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறது என்று கூர்ந்து பார்த்தால் தண்ணீரில் படிந்திருந்த செடிகளில் "கோகோ கோலா அலுமினியக் கேன்" மிதந்து கொண்டிருந்தது.

நம்மைப் போல பறவைகளும் அமெரிக்க வாழ்க்கையை விரும்புகிறதோ?

o

பொறுப்பி: ஆடம்பரமாக வாழ்க்கைமுறையையே (American Dream) அமெரிக்க வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவில் உள்ள எளியவர்களை இங்கே கணக்கில் கொள்ளவில்லை.

இப்பதிவு அமீரகத் தமிழ் மன்ற பத்தாம் ஆண்டு விழா மலரிற்காக எழுதப்பட்டது

o

31 comments:

பிரபாகர் said...

மென் காகிதங்கள் - டிஷ்யூவிற்கு அழகான தமிழில்.... ஆஹா...

செந்தில், இந்த நாகரீக முன்னேற்றம்தான் பல இயற்கை அழிவுகளுக்கும் கலாச்சார சீர்கேடுகளுக்கும் பிரதானமாய் இருக்கின்றன...

நல்லதோர் இடுகை உங்களிடமிருந்து!

பிரபாகர்.

vasu balaji said...

முற்றிலும் சரி செந்தில். இங்கு இன்னும் கொடுமை என்னவெனில் கார் வைத்திருந்தாலும் மைலாப்பூரில் கார் வைத்திருப்பவனுக்கும் அம்பத்தூரில் கார் வைத்திருப்பவனுக்குள்ளுமே பேதம்:)

Thamiz Priyan said...

நல்ல இடுகை! எனக்கு ரொம்ப பிடித்த இடங்களில் ஷார்ஜா புஹைரா கார்னிச்சும் ஒன்று.

சிதம்பரம் said...

நல்ல பயனுள்ள கட்டுரை செந்தில்

ஈரோடு கதிர் said...

நல்ல அலசல் செந்தில்

//தண்ணீரில் படிந்திருந்த செடிகளில் "கோகோ கோலா அலுமினியக் கேன்" மிதந்து கொண்டிருந்தது.
//

மனதை ஏதோ செய்யும் வரிகள்

விக்னேஷ்வரி said...

மிகச் சரியான பார்வை. நல்ல அலசல்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ பிரபாகர்,

நன்றி நண்பரே.

அன்புடன் நான் said...

கட்டுரை மிக அழகு.... உங்க எண்ணவோட்டம்... நெகிழ்வாய் இருகிறது.
பாராட்டுக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதோர் இடுகை

sultangulam@blogspot.com said...

உபயோகமற்றவற்றை பேசாமல் உருப்படியாக நல்ல செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும், நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்படவும் நல்ல நண்பர்கள் அவசியம்.

உங்கள் கதையடிப்புகள் நீடு வாழட்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ வானம்பாடிகள்.

பாலாண்ணே, ஆமாங்க நீங்க சொல்றது சரி தான்.

@@ தமிழ்பிரியன்

ஆமாங்க. புஹைராஹ் அருமையான பூங்கா தான்.

@@ சிதம்பரம்

நன்றி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

Unknown said...

அமெரிக்க கனவு காணுவது ஒரு பக்கம்... நம் மக்கள் எப்போதுழுதும் உறக்கம் நீங்கா நிலையிலேயே இருப்பது இன்னும் வருத்தத்துக்குரியது. நேற்று திருப்பூர் பேருந்து நிலையத்தில் கண்ட காட்சி - தரை முழுதும் குப்பைத்தீவுகள்... நடுவே அவ்வப்போது அத்தீவுகளின் மேல் துப்பும் மக்கள்... இத்தகைய காட்சி தமிழகத்தில், இந்தியாவில் எங்கும் என்றும் காணக்கூடிய காட்சி என்றாலும் இந்த அலட்சியம் மிக கொடுமை.

முக்கியமாக இந்த அலட்சியம் நம் வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது வேதனையிலும் வேதனை. "உன்னை போல் ஒருவன்" கமல் "மறதி நம் தேசிய வியாதி" என்று சொல்வது போல... இந்த அலட்சியமும் நம் தேசிய வியாதி தான் போலும். மருந்து எடுத்துக்க வேற மறந்துட்டோம்.

முச்சந்திக்கு முச்சந்தி கோவில்கள்!!! குப்பைத்தொட்டிகளுக்கும், கழிவறைகளுக்கும் தேவையான இடமில்லாது போனதில் ஆச்சரியம் இல்லை.

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன் மிகவும் அவசியமான பதிவு.ஆடம்பர பொருட்கள் வாங்குவதை படிப்படியாக குறைத்து வருகிறேன்.ஊர் கூடி தேர் இழுத்தால் நலம்.

செ.சரவணக்குமார் said...

நல்ல விரிவான அலசல் செந்தில்.

அமர பாரதி said...

பொதுவாக நீங்கள் சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் எல்லாவற்றிஅயும் ஆடம்பரம் என்று சொல்ல முடியாது.

கணவன் மற்றும் மனைவி எதிரெதிர் திசைகளில் அலுவலத்துக்கு செல்பவர்களாயிருந்தால் இரண்டு கார் தவிர்க்க முடியாதது.

டீ.வி போன்ற விஷயங்கள் சவுகர்யத்துக்காக உள்ளவை. இவைகள் அனைத்தும் மேல் தட்டு மக்களுக்கும் நடிகர்களுக்கும் பெரிய தொழிலதிபர்களுக்கும் இந்தியாவில் எப்போதும் கிடைத்துக் கொண்டிருப்பவைதான். தகவல் தொழில் நுட்பம் இந்த வசதிகளை நிறைய மத்திய தர மக்களுக்கு தந்திருக்கிறது. அவ்வளவே.

Chitra said...

ஆடம்பரமாக வாழ்க்கைமுறையையே (American Dream) அமெரிக்க வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவில் உள்ள எளியவர்களை இங்கே கணக்கில் கொள்ளவில்லை.

.............ஆடம்பர வாழ்க்கைதான் அமெரிக்க கனவு என்பது இந்திய மனப்பான்மை - கருத்து. அமெரிக்காவின் வாழ்க்கை முறை, என்பது அதையும் தாண்டி உள்ளது என்பதை கண்கூடாக காண்கிறேன். இங்கே உள்ள எத்தனயோ நல்ல விஷயங்களை எடுத்து கொள்ளும் பக்குவம் வருவதற்கு முன்னே, ஆடம்பரங்கள் இந்தியாவுக்குள் புகுத்தியது வியாபாரிகளின் லாப கண்ணோட்டமே. ..............

நீங்கள் எழுதிய விதம் அருமை.

KaruppuSwamy Thangaraj said...

சிறப்பான பதிவு. குறிப்பாக இந்த வாழ்க்கை முறையை பொய்யாக சாடாமல், தானும் இந்த வாழ்க்கை முறைக்கு மாறி விட்டேன் என்று உண்மையை உரைப்பது. ஒரு சமூகமாக வாழும்போது இது போன்ற நாகரிகப் பரவல் தவிர்க்க முடியாததாகிறது.

துளசி கோபால் said...

அருமையான இடுகை.

அமெரிக்கர்போல வாழணுமுன்னு நினைக்கும் நம்ம நாட்டு மக்கள், அவுங்க கடைப்பிடிக்கும் சுத்தம் சுகாதாரம் விஷயங்களை வசதியா மறந்துடறோம்.

எங்கியாவது நடந்து போகலாமுன்னா நடைபாதை எங்கே இருக்கு? அதைச் சொல்லுங்க முதலில்.

அங்கெல்லாம் குடிசைபோடு ஆக்ரமிப்பு. நடைபாதை வியாபாரிகள். மிச்சம் இருக்கும் இடத்தை பப்ளிக் டாய்லெட்டா ஆக்கி வச்சுருக்காங்க.

அதென்ன நாய் ஜென்மங்களோ? போற போக்கில் நின்னு போயிட்டுப்போறது:(

தெருவில் இறங்கித்தான் நடக்கணும். அதுலேயும் அழுக்கு, கழிவு, குப்பை & எச்சில்.

நல்ல மெயின்ரோடுலே ட்ராஃபிக் சிக்னலில் நிக்கும் மக்கள் கொஞ்சம்கூட கூசல் இல்லாமல் ஹெல்மெட்டைக் கொஞ்சம் உயர்த்தி, துப்புதுங்க. பஸ் ட்ரைவர் பின்னாலே முன்னாலே வண்டி இருக்கா என்னன்னு கூடப் பார்க்காம துப்பறார்.

இங்கே இந்தியர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளோ எச்சில் சுரப்பி ஊறுது?


எனக்கு மட்டும் பவர் இருந்தால்.............

' உன்னை விட்டுவச்சுருக்க மாட்டாங்க. இந்நேரம் மேலே போயிருப்பே'ன்றார் எங்க இவர்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ கதிர்,

நன்றி.

@@ விக்னேஷ்வரி,

நன்றி.

@@ சி. கருணாகரசு,

நன்றி.

@@ T.V.ராதாகிருஷ்ணன்,

நன்றி.

@@ சுல்தான்,

கண்டிப்பாக இதைப் போன்ற கதையடிப்புகள் தொடரும் ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ SK

உண்மைதான் நண்பா. முச்சந்திகளில் உள்ள கோவில்கள் எண்ணிக்கை அளவிற்கு கழிப்பிடங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே!! யார் நினைக்கிறார்கள். நம் புலம்பல்கள் மட்டுமே இதற்கு விடை :(

@@ வெற்றி-[க்]-கதிரவன்

நன்றி நண்பா.

@@ கார்த்திகேயன்,

உங்கள் முயற்சி வாழ்த்திற்குரியது. தொடருங்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ செ.சரவணக்குமார்,

நன்றி.

@@ அமரபாரதி,

//பொதுவாக நீங்கள் சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் எல்லாவற்றிஅயும் ஆடம்பரம் என்று சொல்ல முடியாது.//

உண்மை!!

//கணவன் மற்றும் மனைவி எதிரெதிர் திசைகளில் அலுவலத்துக்கு செல்பவர்களாயிருந்தால் இரண்டு கார் தவிர்க்க முடியாதது.//

"Car pooling" வசதிகள் உலகெங்கும் வர ஆரம்பித்துவிட்டன நண்பரே. நான்கு கார்கள் வைத்திருக்கும் நண்பர்களும் எனக்குண்டு.

//டீ.வி போன்ற விஷயங்கள் சவுகர்யத்துக்காக உள்ளவை. இவைகள் அனைத்தும் மேல் தட்டு மக்களுக்கும் நடிகர்களுக்கும் பெரிய தொழிலதிபர்களுக்கும் இந்தியாவில் எப்போதும் கிடைத்துக் கொண்டிருப்பவைதான். தகவல் தொழில் நுட்பம் இந்த வசதிகளை நிறைய மத்திய தர மக்களுக்கு தந்திருக்கிறது. அவ்வளவே.
//

இதையே தான் நான் ஆடம்பரம் என்கிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு FLAT screen TVயை வாங்கிய நாம் இன்று LCDக்கு மாறி வருகிறோம். தொழில்நுட்பம் வளர்வது நம் வசதிக்கென்றாலும் நமக்குத் தேவைதானா என்பது நம் கையிலேயே உள்ளது. உலகெங்கும் வீணாக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் எங்கே கொட்டப்படுகிறது தெரியுமா?

இதைப் படியுங்கள்

http://senthilinpakkangal.blogspot.com/2009/07/blog-post_26.html

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ சித்ரா,

உண்மைதான். அமெரிக்காவில் உள்ள தூய்மை, பொறுப்புணர்வு மற்றும் இதர நல்ல விசயங்கள் நம் நாட்டில் இல்லை தான். இக்கட்டுரையில் நான் குறிப்பிடுவது ஆடம்பரப் போக்கை மட்டுமே.

உலக மக்கள் தொகைல 5% சதவிதமே இருக்கற அமெரிக்க மக்கள் உலக உற்பத்தியின் 20 சதவிதத்தை உட்கொள்வது சரியா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ swamytk,

நன்றி நண்பரே.

@@ துளசி கோபால்,

அருமையான கருத்துகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

வெளிநாட்டில் கால் வைத்தவுடன், நம் கண்ணிற்கு அகப்படுவது சுத்தம் தான். ம்ம்.. என்று மாறுமோ இந்தப் போக்கு?

உங்கள் 'அவர்' சொல்வது சரி தான் :)

வடுவூர் குமார் said...

ஷார்ஜா கார்னிஸ் ந‌ன்றாக‌ இருக்கு,துபாயில் இருந்த‌ போது போய் பார்க்க‌வில்லையே என்று இருக்கிற‌து.

அப்துல்மாலிக் said...

ஓய்வு நேரத்தில் நடந்தி டிஸ்கசன் கூட பயனுள்ளதாக ஆக்கிருக்கீங்க. இது மாதிரி இடங்களுக்கு செல்லும்போது நிறை தோணும் மனநிலை ரிலாக்ஸா இருக்குபோது.

நல்ல பகிர்வு

ஜோதிஜி said...

நல்ல விசயங்களை சிந்தனைகளை படித்த திருப்தி துளசி சொன்ன எதார்த்த நிகழ்வுகளையும் அப்பட்டமாக படித்து முடித்த போது வருத்தமாகத் தான் இருந்து தொலைக்கின்றது?

உங்களுக்கு வாழ்த்துகள் தேவையில்லை. உங்கள் அக்கறை என்பது இயல்பானது. ஒவ்வொரு இடுகையிலும் அதைத்தான் பார்க்கின்றேன்.

ஹுஸைனம்மா said...

//இங்கே இந்தியர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளோ எச்சில் சுரப்பி ஊறுது? //

இந்தியர்களுக்கு இன, மான உணர்வு அதிகமாக ஊற்றெடுக்கும் என்பதால் இருக்குமோ? ;-)))

இந்தியாவில் மட்டுமல்ல; இங்கு அபுதாபியிலும் என் வீட்டுப் பக்கத்தில் கட்டுமானப் பணிகள் நடக்க ஆரம்பித்ததிலிருந்து, உடையைச் சற்று தூக்கிப்பிடித்துக் கொண்டுநடக்க வேண்டிய அளவுக்கு எச்சில் வெள்ளம்!!

எவ்வளவு ஆடம்பரமாகவும் இருந்துத் தொலைக்கட்டும், அதோடு சுத்தமாகவும் இருக்கக் கூடாதா? :-(

தாராபுரத்தான் said...

உண்மை செந்தில்.

பனித்துளி சங்கர் said...

வணக்கம் நண்பரே !
அருமையான பதிவு .
நானும் அமீரகத்தில்தான் இருக்கிறேன் .உங்களின் வளை அறிமுகம் கிடைத்தத்தில் மிகவும் மகிழ்ச்சி.

தமிழ் உதயம் said...

எந்த வாழ்க்கை முறையாக இருந்தாலும் பழகி விட்டால் மீள்வது சிரமம். அமெரிக்காவாகட்டும் அல்லது வேறு மேற்குலக நாடாகட்டும். புலம் பெயர்ந்து வேறு தேசத்து குடியுரிமை பெறுவது, இப்போதைக்கு பெருமையாக இருக்கலாம். நமது மூன்றாவது தலைமுறைக்கு, அப்போது என்ன மாதிரியான வாழ்க்கை சூழல் கிடைக்கும் என்று யாருக்கு தெரியும். தேயிலை தோட்டங்களுக்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த இழி நிலையை நாம் அறிந்தது தானே. மண்ணின் மைந்தர்களுக்கும், வந்தேரிகளுக்கும் கால காலமாக போட்டி, பொறாமை, பூசல் வெடிக்க தானே செய்கிறது. நாகரிகம் மனிதனை பூரணமாக மாற்றி விட்டதா என்ன.

Related Posts with Thumbnails