Tuesday, February 23, 2010

நட்சத்திரங்களின் உறக்கமும் மார்பகப் புற்றுநோயும்!!

நீங்கள் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது எப்பொழுது?

அது தான் தினமும் சின்னத்திரையில் ரஜினி, கமல் முதல் விதவிதமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோமே, பிறகு எதற்காக விண்மீன்கள் என்று கேட்கத் தோன்றும். சென்னையில் இருந்து பொழுதும் சரி, இங்கே துபாயிலும் சரி, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று வெளியே வந்தால் தெரிவதெல்லாம் ஒளிக்கதிர்கள் தான். 

பெருநகரங்களின் பிரதான சாலைகள் எங்கும் ஒளியை உமிழ்ந்து சீரிப்பாயும் வாகனங்கள், பளபளக்கும் கடைகள், அலங்கார விளக்குகள் என்று எங்கும் ஒளி வெள்ளம். வாகனங்கள் முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை உமிழும் ஒளிக்கேட்ப மரியாதை!! ஒளிவெள்ளத்தில் மிதந்து வீட்டிற்குள் வந்தால் மீண்டும் ஒளிவெள்ளம். 

உலகெங்கும் உள்ள பெருநகரங்களின் பெருமையை அறியப்படுவதும் அந்தந்த நகரத்தின் கட்டடங்களின் ஒளிவெள்ளத்தைப் பொருத்தே!! சிட்னியின் ஓபேரா மாளிகை, நியூயார்க்கின் மன்ஹாட்டன், மும்பையின் கடற்கரை சாலை (மரைன் ட்ரைவ்), துபாய் ஷேக் ஷையத் சாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். விண்ணிலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் கீழிறக்கிவிட்டது போன்ற உணர்வை பெருநகரங்களில் உலாவரும் பொழுது உணர முடிகிறது!! ஆனால் நம்மால் விண்மீன்களைப் பார்க்க முடிகிறதா?

நண்பா..
விண்மீன்களைப் பார்த்தது எப்பொழு தென்றாய்?

விண்மீனைத் தூதனுப்பியது முன்னோர் காலம்
விண்மீன்களைத் துணைக்கழைத்தது மன்னர் காலம்
விண்மீனைக் காட்டிச் சோறூட்டியது பாலர் காலம்
விண்மீன்களை மறந்தது நண்பா நம்காலம். 

வீட்டின் முற்றத்தில் படுத்துக் கொண்டு விண்மீன்களை ரசித்த நாட்கள் மீண்டும் வருமா? 

இரவில் திசையைக் காட்டும் துருவ நட்சத்திரங்கள், மாதத்தைக் காட்டும் நட்சத்திரக் கூட்டங்கள், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், பார்த்துப் பார்த்து ரசித்த வெள்ளி, புதன், செவ்வாய் எல்லாம் மறந்தது எதனால்? அல்லது மறைந்தது எதனால்?

எல்லாம் ஒளிமாசு தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? காற்று, நீர், நிலம் எல்லாம் மாசடைந்திருப்பது தெரியும். அதென்ன ஒளி மாசு?வெளியில் அளவிற்கு அதிகமான ஒளி வெள்ளம் ஊடுருவியிருப்பது தான் ஒளிமாசு (Light Pollution).

நண்பா.. 
ஒளிமாசைப் பற்றித் தெரியுமா என்றேன்?

நெற்பயிரை யழிக்கும் நீர்மாசை யறிவேன்
நுரையீரலை யழிக்கும் காற்றுமாசை யறிவேன்
மண்ணுயிரை மலடாக்கும் நிலமாசை யறிவேன்
மானுடத்தைக் கருவறுக்கும் மனமாசையு மறிவேன்
அதென்ன ஒளிமாசு என்றாய்!!

நம் நாட்டில் பெரிதாக விவாதிக்கப்படாத ஒன்று தான் ஒளிமாசு. ஒளிமாசு என்று சாதாரணமாகக் கூறினாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. "இரவு நேரத்தில் உடலில் சுரக்கும் மெலடனின் (Melatonin) என்ற ஹார்மோனின் அளவு ஒளிமாசால் குறைகிறது" என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மெலடனின் அளவு குறைந்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால், ஒளிமாசு அதிகமாக இருக்கும் வளர்ந்த நாடுகளிலுள்ள பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

டென்மார்க்கில், இரவு வேளையில் பணியாற்றிய 40 பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வந்துள்ளதென்று இந்த செய்தி குறிப்பிடுகிறது. இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த டானிஷ் அரசாங்கம் படிப்படியாக ஒளிமாசையும், இரவு நேர வேலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

"இரவு வேளையில் பணியாற்றினால் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது" என்பது நம் நகரங்களுள் பரவி வரும் கால்செண்டர் நிறுவனங்களுக்குத் தெரியுமா?

ஒளிமாசின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

* இருண்ட அறையில் குறைந்தது 6-8 மணி நேரத்திற்கு தூங்க வேண்டும்.

* வீடுகளில் அதிகப்படியான ஒளியைக் குறைக்க வேண்டும்.

* இது தனி மனிதனிடம் இல்லாவிட்டாலும் நம் அரசாங்கம், சமூகத்தின் கையில் இருக்கிறது. நகரமெங்கும் பரவியுள்ள ஒளி வெள்ளத்தைக் குறைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே. இரவின் ஒளிவெள்ளத்தால் குழம்பிப் போகும் பறவைகள், விலங்கினங்கள் இன்னபிற உயிரனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு கணக்கிலடங்காதவை!!


நமக்கு மட்டுமல்ல பறவைகள், விலங்கினகள் எல்லாம் எதிர்பார்ப்பது இரவில் நட்சத்திரங்கள் உறங்காமல் இருப்பதையே!! 

o

14 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vasu balaji said...

Classic post:). t y senthil

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் செந்தில்.
அவசியமான பதிவு

கண்ணா.. said...

//இருண்ட அறையில் குறைந்தது 6-8 மணி நேரத்திற்கு தூங்க வேண்டும்.


* வீடுகளில் அதிகப்படியான ஒளியைக் குறைக்க வேண்டும்.


* இது தனி மனிதனிடம் இல்லாவிட்டாலும் நம் அரசாங்கம், சமூகத்தின் கையில் இருக்கிறது. நகரமெங்கும் பரவியுள்ள ஒளி வெள்ளத்தைக் குறைக்க வேண்டும்.//

நல்ல எச்சரிக்கை..

அருமையான பதிவு செந்தில்..

:)

Chitra said...

நமக்கு மட்டுமல்ல பறவைகள், விலங்கினகள் எல்லாம் எதிர்பார்ப்பது இரவில் நட்சத்திரங்கள் உறங்காமல் இருப்பதையே!!

...........இன்றைய காலத்துக்கு அவசியமான பதிவு. அருமையா இருக்குங்க.

ஹுஸைனம்மா said...

எம்பையனும் டெலஸ்கோப்பை வாங்கி வச்சுட்டு, வானத்துல நட்சத்திரமே தெரிய மாட்டேங்குதுன்னு புலம்பிகிட்டிருந்தான். இதான் காரணமா? ;-))

புதிய தகவல். நன்றி செந்தில்.

சந்தனமுல்லை said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...ஆனா..பகல்லே கூட லைட் வெளிச்சத்துலே தானே இருக்காங்க!

ஈரோடு கதிர் said...

ஒளி மாசு பற்றிய தகவல் மிகப் பெரிய எச்சரிக்கை

நன்றி செந்தில்

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
ஒளி மாசு பற்றிய தகவல் மிகப் பெரிய எச்சரிக்கை
//

யார் மாப்பு, இதுக்கு செவிமடுத்து இயற்கைய ஒட்டி வாழப் போறாங்க? எல்லாமே செயற்கைய ஒட்டிதான்....

சொல்லவர்றது என்னன்னா,

நல்ல தகவல்; என்னோட ஆதங்கத்தை மேலும் கூட்டின நல்ல இடுகை....

வினோத் கெளதம் said...

அருமையான பகிர்தல்..
தெரியாத விஷயத்தை தெரிந்துக்கொண்டேன்..

பிரபாகர் said...

ஒளி மாசு சம்மந்தமாய் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? தகவல்களுக்கு நன்றி செந்தில்...

இயற்கையினின்று ரொம்பவும் விலகி செயற்கையாய் வாழ்வதற்கு நாம் கொடுக்கும் விலை....

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ சசிகுமார்,

நன்றிங்க. வருகைக்கும் கருத்திற்கும்.

@@ வானம்பாடிகள்,

நன்றிங்க பாலாண்ணே.

@@ ஆரூரன் விசுவநாதன்.

நன்றிங்க.

@@ கண்ணா,

நன்றிங்க

@@ சித்ரா

நன்றிங்க.

@@ ஹூசைனம்மா,

பாவம்ங்க உங்க பையன். ஊருக்குப் போகும் போது காட்டுங்க நட்சத்திரங்கள

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ சந்தனமுல்லை.

//நல்ல விழிப்புணர்வு பதிவு...ஆனா..பகல்லே கூட லைட் வெளிச்சத்துலே தானே இருக்காங்க!//

இரவில் வெளிச்சத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது உடல் உபாதைகள் அதிகரிக்கின்றன. அதனாலேயே ஒளிமாசு அபாயமானதும்..

@@ கதிர்,

நன்றிங்க.

@@ பழமைபேசி,

ஆமாங்க.. உங்களுக்கு வர்ற அதே கோபத்தோட வெளிப்பாடு தான் இந்த இடுகை. நன்றி.

@@ வினோத்கௌதம்

நன்றிங்க.

@@ பிரபாகர்,

ஆமாங்க, இயற்கைக்கு எதிரா என்ன செய்தாலும் தீங்கே வரும் என்பதற்கு இதுவும் ஒரு எ.கா.

Thekkikattan|தெகா said...

நல்ல விழிப்புணர்வேற்றுப் பதிவு, செந்தில்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு இது மாதிரி நானும் புலம்பிய பதிவு ஒன்று இங்கே... இரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்!

Related Posts with Thumbnails