Tuesday, February 23, 2010

திகைக்க வைக்கும் திவனாகு!!

உலகின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்று. நாலாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் நகரம். வியக்கவைக்கும் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் நகரம் என சொல்லிக்கொண்டே போகலாம் "திவனாகு"வைப் பற்றி!!

திவனாகு!!



தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்த ஒரு வரலாற்றுத் தலம் தான் திவனாகு. பொலிவியாவின் தலைநகரம் 'லா பாஸி'ற்கு அருகிலும், உலகிலேயே உயரமான இடத்திலமைந்த (ஏரியான) டிடிகாகா ஏரிக்கு அருகிலும் அமைந்திருக்கிறது இந்நகரம். திவனாகு மக்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கா விட்டாலும், அவர்கள் நிர்மானித்த நகரமும், சூரையாடலிற்குப் பிறகு எஞ்சி நிற்கும் கட்டடங்களும் அவர்களின் சிறப்பை உலகிற்கு உரைக்கிறது.



அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண்பாண்டங்கள், எழில்மிகு சிற்பங்கள், தூண்கள், சிதைந்த பிரமிட்கள் என எஞ்சி நிற்கிறது திவனாகு. சில தூண்கள் 100 டன்கள் எடை கொண்டதாகவும், ஒன்றோடு ஒன்றாக சேர்த்து திடமாக நிற்கும் படியாகக் (ஆங்கில எழுத்து H வடிவத்திலான) கற்களை செதுக்கி கட்டடங்களை வடித்துள்ளார்கள். 10 மைல் தொலைவில் எந்த விதமான கல்குவாரிகள் இல்லாத போதும் எப்படி மிகப்பெரிய கற்களைச் சேர்த்திருப்பார்கள் என்பது வியப்பாகவே உள்ளது.


எகிப்து, மெக்சிகோ போன்ற இடங்களில் இருப்பதைப் போல பிரமிட்களும் திவனாகு நகரத்தின் 'அகாபானா' என்ற இடத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலத்தின் மாறுதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த நிலையில் உள்ளது.

விரகோகா - திவனாகு மக்களின் கடவுளான விரகோகாவை வழிபடுவதற்காக, நகரின் பிரதானமாக ஒரு வாயிலை எழுப்பியுள்ளார்கள்.  படைக்கும் கடவுளாக சூரியன் சந்திரன் என அகில உலகத்தையும் உருவாக்கியவர் என்று திவனாகு மக்களால் கருதப்பட்டிருகிறார், விரகோகா. சூரியனைத் தலைக்கவசமாகவும் கையில் ஆயுதங்களை ஏந்தியபடியான சிலைகளைப் பார்க்கும் பொழுது உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படி ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

தொல்லியல் ஆய்வாளர்கள், திவனாகு மக்கள் கி.பி.1000 வரை இந்நகரத்தில் வாழ்ந்து வந்ததாகக் கருதுகின்றனர். டிடிகாகா ஏரிக்கரையில் விவசாயம் செய்தும், நல்ல விளைச்சலால் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்ததாகவும் கருதுகின்றனர். கி.பி. 600 முதல் கி.பி.700 வரை இவர்களின் தாக்கம் இன்றைய பெரு, பொலிவியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது.காலநிலை மாற்றத்தால் சரியான மழை பெய்யாததாலும் நீராதரங்கள் பொய்த்துப்போனதாலும் திவனாகு மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இந்நகரம், 15ம் நூற்றாண்டில் இன்கா மன்னர்கள் கண்டுபிடிக்கும் வரை தொடர்பில்லாமல் இருந்திருக்கிறது. இன்கா அரசின் அழிவிற்குப் பிறகு 19ம் நூற்றாண்டில் பிற்பகுதி வரை மீண்டும் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

புதையல் தேடுபவர்களாலும், புதிதாக வீடுகளைக் கட்டுபவர்களாலும், ஸ்பானிஸ் படையெடுப்புகளாலும் சிதைக்கப்பட்ட இந்நகர்ம் இன்று பொலிவியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களின் வரலாறு எதுவும் இல்லாத பொலிவியா நாட்டு மக்கள் திவனாகு நகரையும் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடத்தையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுதும் "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றை எப்படிப் பாதுக்காக்கிறோம்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெயிலில் இருப்பவர்களுத்தானே தெரியும் நிழலின் அருமை?


இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்கள் கீழே..

http://www.archaeology.org/interactive/tiwanaku/
http://www.crystalinks.com/tiahuanaco.html
http://en.wikipedia.org/wiki/Tiwanaku

o

6 comments:

பிரபாகர் said...

//இந்நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுதும் "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றை எப்படிப் பாதுக்காக்கிறோம்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை//

படித்து முடித்த பின் எனக்கும் இதே எண்ணம்தான். வெளிநாட்டவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஏராள விஷயங்களில் புரதானங்க்களை பாதுகாப்பதும்தாம். அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் செந்தில்.

பிரபாகர்.

vasu balaji said...

amazing. thanks again

பழமைபேசி said...

நன்றி

Chitra said...

புதையல் தேடுபவர்களாலும், புதிதாக வீடுகளைக் கட்டுபவர்களாலும், ஸ்பானிஸ் படையெடுப்புகளாலும் சிதைக்கப்பட்ட இந்நகர்ம் இன்று பொலிவியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களின் வரலாறு எதுவும் இல்லாத பொலிவியா நாட்டு மக்கள் திவனாகு நகரையும் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடத்தையும் தேட ஆரம்பித்துள்ளனர்.


......... interesting information. thank you.

ஹுஸைனம்மா said...

அமெரிக்கா என்றால் யூ.எஸ். மட்டுமே என்று நினைத்துக் கொள்ளுமளவுக்கு தென் அமெரிக்கா குறித்த செய்திகளே அதிகம் வருவதில்லை. (ஃபுட்பால் - பிரேஸில், அர்ஜென்டைனா தவிர). அநேகமாகப் பொக்கிஷங்கள் எல்லாமே தென் அமெரிக்காவில்தான் புதைந்துள்ளன போல.

க.பாலாசி said...

வியப்பாக இருக்கிறது...தொடர்ந்து பகிருங்கள்... நன்றி....

Related Posts with Thumbnails