Friday, August 6, 2010

நம் திருமண முறை சரியானது தானா?



"செந்தில்... உங்க நாட்டுல கல்யாணத்த ஏற்பாடு பண்ண அமைப்புகள் இருக்கா?"

தேநீர் இடை வேளையின் பொழுது என்னைக் கேட்டார் மைக்கேல். மைக்கேல் என்னுடன் பணியாற்றி வருபவர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் தான் ஹங்கேரியில் இருந்து அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தவர். இது நாள் வரை இந்தியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெறவில்லை. இந்தியாவைப் பற்றியும் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார். 

அலுவலகத்தில் இருந்த பெரும்பாலானோர் ஏதோ ஒரு கூட்டத்திற்குச் சென்று விட எங்களுக்கு அருகில் இருந்த இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், தொலைவில் தெரிந்த கப்பல்களையும் பார்த்த படியே காப்புசினோவைக் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்தக் கேள்வி. இந்தியாவைப் பற்றிய கேள்வி என்றவுடன் கேரளத்தைச் சேர்ந்த ப்ரியாவும் சேர்ந்து கொண்டார். 

"என்னங்க மைக்கேல்.. திடீர்னு இந்தக் கேள்வி?" என்றேன்.

"இல்லை.. நேத்து மோஹித் இந்தியாவுல இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு வந்தார். அவர் கிட்ட பேசும் பொழுது தெரிஞ்சுக்கிட்டேன்"

"ஓ.. அதுவா விசயம்?"

"ஆமா.. அவரோட மனைவியத் திருமணத் தகவல் மையம் மூலமாத் தான் பார்த்தாராம்"

"ஆமாங்க.. இது இந்தியால வழக்கமான விசயம் தான். ஏன் என்னோட திருமணம் கூட வீட்ல ஏற்பாடு செஞ்சது தான்." என்றேன்.

"என்னோடது கூட வீட்ல பார்த்த திருமணம் தான்" என்றார் ப்ரியா.

"ஓ.. எப்படி? உங்க பார்ட்னர் எப்படிப்பட்டவர்னு தெரியாமா..." என்று தயங்கினார் மைக்கேல்.

"அது அப்படித்தாங்க. காலங்காலமா இப்படித் தான் நடந்துட்டு வருது. எங்க தாத்தா, அப்பா காலத்து வரைக்கும் சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால் தெரியாத ஆளக் கட்டுறதுங்கற விசயம் எல்லாம் இல்லை. இப்ப எங்க தலைமுறைல தான் இந்தத் திருமணத் தகவல் மையங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றேன்.

"ஓஹ்.. எப்படித் தேர்ந்தெடுப்பாங்க"

"உங்கள் சிஸ்டமக் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கிட்டுமா? உங்களுக்கு சில திருமணத் தகவல் வெப்சைட்களக் காட்டறேன்" 

பிறகு பாரத்மாட்ரிமோனி வலைத்தளத்தைத் திறந்து அதில் உள்ள விசயங்களை எல்லாம் காட்டினேன். ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன். அதில் ஒரு Profileஐப் பார்த்தவர்

"என்னது நோ ஸ்மோக்கர், நோ ட்ரிங்கர் என்றெல்லாம் இருக்கிறது?" என்றார்.

"ஆமாம்.. அது அந்தப் பெண்ணின் கணவராக வரவேண்டியவர் பூர்த்தி செய்ய வேண்டிய விசயங்கள். இன்னும் இந்தப் படிப்பு தான் வேண்டும். இந்த வேலையில் தான் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் போடுவார்கள்.. இது ஒரு தனி இண்டஸ்ட்ரி" என்றேன்.

"ம்ம்.. வெரி இண்ட்ரஸ்டிங்"

"முதல்ல பிரோஃபைல் மேட்ச் ஆன பிறகு, இரு குடும்பங்களும் பேசி, சந்தித்து, திருப்தியாக இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்"

"ம்ம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம்"

"உங்கள் நாட்டில் எல்லாம் எப்படி? இது போன்ற பழக்கங்கள் இருக்கா?" என்று கேட்டார் ப்ரியா.

"ஹாஹா.. இல்ல.. எங்க நாட்டுல எல்லாம் லவ் மேரேஜ் மட்டும் தான். அவங்கவங்களே பார்த்துக்குவாங்க"

"ஒரு வேளை, பெண்ணைத் தேடிப்பிடிக்கும் அளவிற்கு திறமையோ, வாய்ப்போ இல்லையென்றால்?" 

"ம்ம்.. அப்படி இருக்கறவங்க கம்மி தான். அவங்க பெரும்பாலும் கல்யாணம் செஞ்சிக்காமத் தான் இருந்துடறாங்க" 

"கல்யாணம் செஞ்சிக்காம இருந்திடக்கூடாதுன்னு தான் இந்தியால பெரியவங்களே அலையன்ஸ் பார்த்திடறாங்க" 

"ம்ம்.. திருமணத்திற்கு முன்பு பேசுக்கொள்வீர்களா? பார்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்குமா?" 

"ஹிஹி.. முன்பெல்லாம் ரொம்பக் கம்மியா இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவர நான் ஒரு தடவை தான் பார்த்தேன். 15 வருசத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அவரு வாரத்துக்கு ரெண்டு நாள் பூத்ல இருந்து கூப்பிடுவாரு. அதோட சரி"

"இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் டைம் இருக்கு. என் எங்கேஜ்மெண்டிற்கும் கல்யாணத்துக்கும் இடையில் நான்கு மாத இடைவெளி இருந்தது. பல முறை பார்த்திருக்கிறோம். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம்" என்றேன்.

"ஆனாலும் எப்படி? நாலு மாசம் போன்ல பேசறத வச்சு மனைவியா வரப்போறவரப் புரிஞ்சுக்க முடியுமா? நாங்க நாலு வருசமா பார்த்துப் பேசிப் பழகுனதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவுக்கு வந்தோம்" என்றார். 

"இந்தக் கேள்வி எங்களுக்கும் இருக்கத்தாங்க செய்யுது. ஆனா என்ன.. பெரும்பாலும் பிரச்சனை ஏதும் வர்றது இல்ல" என்றேன்..

"அப்படி எல்லாம் சொல்லாத செந்தில். காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"

"எங்க ஊர்ல எல்லா விசயங்களுமே குடும்ப உறவுகளோட இணைந்தே பார்க்கப் படும். அதனாலேயே பிரச்சனைகள் வந்தாலும், உறவினர்கள் தீர்த்துவிட்டுருவாங்க. பெருசா பிணைப்பு இல்லாதவங்க டைவர்ஸ் வரைக்கும் போறதும் உண்டு. டைவர்ஸ் வரைக்கும் போறதுல லைவ் மேரேஜ் பண்றவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க?" என்றேன்.

"யா...யா..  லவ் மேரேஜ் செய்யறவங்களும் டைவர்ஸ் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. இப்பல்லாம், கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது. என்னோட ஹங்கேரி கொல்லீக்ஸ் நிறையப் பேரு இந்த மாதிரி இருக்காங்க.."

"லிவிங்க்-டு-கெதர்.. ஸ்லோவா.. இந்தியால பிக்-அப் ஆயிட்டு இருக்கு.. ஆனா நாட்-டு-த லெவல் ஆஃப் ஈரோப்.."என்று ப்ரியா சொல்ல கூட்டத்திற்குச் சென்ற அலுவலக நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர். அவரவர் இருக்கைகளுக்கு வர ஆரம்பிக்க எங்கள் பேச்சு துண்டிக்க ஆரம்பித்தது. ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு

"ம்ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு மாதிரி பழக்கங்கள். எனக்கு இந்தியாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆர்வம். இன்னிக்கு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மாட்ரிமோனி சைட்ட என் மனைவி கிட்ட காட்டணும்" என்றார் மைக்கேல்.

"ஹாஹா.. அதக் காட்டப் போய் நெட்ல பொண்ணப் பாக்கிறியானு கேட்கப் போறாங்க.. டேக் கேர்"

"குட் பாயிண்ட் ப்ரியா. எனிவே.. தாங்க்ஸ் பட்டீஸ்.."

"இட்ஸ்.. ஓகே.. மைக்"

"சியா"

ஒவ்வொரு நாட்டினர்க்கும், மொழியினர்க்கும், மதத்தினர்க்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள். அவரவர்க்கு அந்தந்த பழக்கவழக்கங்கள் மீது அதிக பற்று, அதிக ஈடுபாடு இருக்கத்தான் செய்கிறது.  பிற நாட்டினரிடம் பேசும்பொழுது அவரவர் தரப்பு கருத்துகள் வெளியாவதுடன், அவர்களது பழக்கங்களுக்கான நியாயங்களும் புரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.

இந்தியாவில் பணியாற்றிய வரை மற்ற நாட்டினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே அமீரகத்திற்கு வந்த பிறகு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது, பல விசயங்களையும் யோசிக்க உதவுகிறது. 

"நம் திருமண முறை சரியானது தானா? என்ற கேள்வி உங்களுக்கு எப்பொழுதாவது வந்துள்ளதா?"

15 comments:

தமிழ் உதயம் said...

மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.///


தவறாக பார்த்தால் தவறாகவே படக்கூடும். சரியானவை என்று நினைத்து விட்டால் சரியாகவே தோன்றும். காலம் மாற மாற, எத்தனை உயர்வான விஷயங்களாக இருந்தாலும் அலுத்து போய் விடுகிறது. அதில் பண்பாடும் ஒன்று.

sakthi said...

கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது.

அந்த கொடுமை வேற

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் செந்தில்

நமது திருமண முறை ஏற்கெனவே பல மாற்றங்களுடன் இருந்தபோதிலும் இன்னும் கொஞ்சம் மாற்றம் தேவை தான்!!!

vasu balaji said...

/காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"/

காம்ப்ரமைஸ், விட்டுக் கொடுத்தல்லதான் இந்த ஏற்பாடு ஓடிட்டிருந்தது. இப்போ டென்ஷன், ஈகோ, சுயசார்பின்மைன்னு பல காரணங்கள். தலைஎழுத்து அப்புடின்னு ஏன் இருக்கணும்னு ஒரு ஆரோக்கியமான சிந்தனை எல்லாம் சேர டைவர்ஸ் அதிகமாயிட்டுதான் போகுது. நம்ம நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஜாதியும், பரம்பரைச் சொத்துமே மறைமுகமா இதுக்கு முக்கியக் காரணம். எந்த முறைன்னாலும் கம்பாடிபிளிடி இருந்தா அது வெற்றிகரம்.

geethappriyan said...

நண்பரே மிக நல்ல பதிவு
நம்ம இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கோம்.
நிச்சயம் நம்ம திருமணமுறை அருமையான ஒரு அமைப்பே.
தவிர,ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வித கலாச்சாரம்,பண்பாடுகள்,கோர்ட்ஷிப் என்னும் பெண்ணை தொடர்தல்,பின்னர் டேட் செய்தல்,சேர்ந்து வாழ்தல் ,பின்னர் புரிதலுக்கு பின்னர் பையனை பெண் வீட்டார் பார்த்தல்,பின்னர் பெண் பையன் வீட்டாரை பார்த்தல் என நம் நாட்டின் எல்லா நகரம்,கிராமம்,குக்கிராமத்துக்கும் ஒத்துவருமா இந்த முறை?ரொம்ப கஷ்டம்,ஆனால் நம் மக்கள் 20களில் இருக்கையில் நினைத்துப்பாருங்கள் நிச்சயம் கோர்ட்ஷிப் பெரிய இடம் வகிக்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்.....நல்ல பகிர்வு செந்தில்...

பிரபாகர் said...

ஆம் செந்தில், இது போன்ற கேள்விகள் சாதாரணமாய் வருகின்றன. முன்பு போல் இல்லை இப்போதைய நிலவரம். கிராமங்களில் கூட இப்போதெல்லாம் அவசரப்படுவதில்லை பெற்றவர்கள் தேர்வு செய்யும் விஷயத்தில். நாகரிகம் எனும் போர்வையில் நடக்கும் கூத்துக்களில் தான் அதிகமான பிரச்சினைகள்...

பிரபாகர்.

Katz said...

Nice

க.பாலாசி said...

மற்றுமொரு நல்ல அனுபவத்தொகுப்பு...

குடும்பங்கள்ல இருந்த பரஸ்பரம் விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை இன்றைய அளவில் மிகவும் குறைஞ்சிப்போயிட்டதாவே தோணுதுங்க. அவன் என்ன சொல்றது நாம என்ன கேட்குறதுங்கறத நிலை பெரும்பாலான குடும்பங்கள்ல. அதையும் தாண்டின மாமியார் மாமனார் பிரச்சனைகளும் பெண்களுக்கு. இருந்தாலும் இந்த திருமண பந்தத்துல எதோவொன்னு அவர்களை ஆயுள்வரை இழுத்துகிட்டு போகுது.

" சித் || sid " said...

நம் திருமண முறை சரியானது தானா?

பதில் : கேவலமனது

(it is a legal prostitution)
i found this post a very conservative one .
thx

அப்துல்மாலிக் said...

//ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன்//

குறிப்பா ஜாதி என்ற தீ யைப்பற்றி ஒன்னும் கேக்கலியா, அதுக்குள்ளேயும் எத்தனை குட்டி ஜாதி இருக்குனு சொன்னீங்களா?

உருப்படியான கான்வெர்சேசன் செந்தில்..

☀நான் ஆதவன்☀ said...

செந்தில்,

அம்மா,அப்பா,சொந்தகாரங்க, ஊர்க்காரன்ங்க,நண்பர்கள், தெரிஞ்சவன், ஜாதிக்காரன், புரோக்கர், மேட்ரிமோனியல் சைட்டுன்னு நூறுபேருக்கும்மேல தேடியும் இப்பெல்லாம் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது... இதுல நாமளே பொண்ணை தேடி லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிறனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ் இந்த ஜென்மத்துல நம்ம பயலுவலுக்கு கண்ணாலம் ஆன மாதிரி தான் :)

ஜோதிஜி said...

இந்த நிமிடம் வரைக்கும் போர்ச்சுக்கல் பெண்மணி என்னிடம் பேசத் தொடங்கும் போது கலாய்ப்பதே

நீங்கெல்லாம் சரியான மாபியா. ஒரே ஆளுக்கிட்ட சாகுற வரைக்கும் எப்படிடா குப்பை கொட்ட முடியும்?

சிரித்துக் கொண்டே பதில் சொல்ல மாட்டேன்.

அதற்கு அவர் வாழ்க்கையே பெரிய உதாரணம்

ஏழு முறை விவாகரத்து செய்து விட்டு 45 வயதில் ஆதரவற்று வயதான அம்மாவோடு வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

Rajkumar said...

நம்ம திருமண முறை மாறனும்னா... இங்க இருக்குற பெண்கள் மாறனும். அது இந்த ஜென்மத்துல முடியாதுனுதான் நினைக்கிறேன்.
என் கூட படிக்கிற பொண்ணுக்கு, என் நண்பன் நியு இயர் அன்னிக்கி வாழ்த்துகல் சொல்லி, கை குலுக்க கை நீட்டினான் ஆனா அந்த பொண்ணு வணக்கம் மட்டுமே சொல்லிச்சு.
சாதாரணமா இத பார்த்தா, நல்ல பொண்ணுனுதான் எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, அந்த பொண்ணு அதுக்கு சொன்ன காரணம் என் வர போற ஹுஸ்பண்ட் மட்டும்தான் என்ன தொடணும், வேற யாரும் நான் தொடமாட்டேனு...! எப்படியிருக்கு? படிச்ச பொண்ணுங்களே அடுத்தவருக்கு சாதாரணம கை கொடுக்க கூட தயங்கும் இவர்கள் எப்படி லவ் பண்ணுவாங்க?

இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன். ஒரு கிணத்துல இந்த பொண்ணு விழறமாதிரி தொங்கிகிட்டு இருக்கினு வைங்க... போய் கை கொடுத்து தூக்கினா கூட அவங்க கற்பு டேமேஜ் ஆயிடும் போல...

பொண்ணுங்க நல்லா படிச்சு, உலகத்துல எல்லாரும் எப்படி இருக்காங்கனு தெரிஞ்சிகிட்டு, அப்புறம் தனக்கு வேண்டியவன, தானே தேடிகிட்டாதான் இந்த கருமமெல்லாம் மாரும். இல்லென்னா ஒரு ரூபாய்க்கு ரெண்டு, ஒரு ரூபாய்க்கு ரெண்டுனு மேட்டர்மோனிகாரன் வித்துட்டு போய்டுவான்.

Unknown said...

/நம் திருமண முறை சரியானது தானா?/

எனக்கும் கூட இது பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. பல பேர் இதைப்பற்றி விவாதித்திருந்தாலும் கடைசாயில் முடிவு என்பதே இல்லாத விஷயமிது. எத்தனையோ வருஷ கலாச்சாரம் இது. எத்தனையோ மதங்கள் உள்ளே நுழைந்து அசைத்துப் பார்த்த பின்பும் தொடர்ந்து வரும் அதிசயமிது.

ஹுஸைனம்மா said...

முன்னோர்களின் பல வழிமுறைகள் நல்ல எண்ணங்களை முன்னிறுத்தியே ஏற்படுத்தப்பட்டவை; ஆனால், அவை தவறாகப் பிரயோகிக்கப்பட்டதினால்தான் இன்றைய தலைமுறைகள் அவற்றை வெறுப்பதன் காரணம் எனலாம்.

Related Posts with Thumbnails