Thursday, August 5, 2010

களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!


இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை வருடங்களாகின்றன!! என்ன தான் 'கருத்து கந்தசாமி'ப் படங்களையும் உலகப் படங்களையும் பார்த்துச் சிலாகித்தாலும், திரும்பத் திரும்பப் பார்க்கத் தோன்றுவது என்னவோ நல்ல நகைச்சுவைப் படங்களையும், எதார்த்தமான கதாப்பாத்திரங்களைக் கொண்ட படங்களையும் தான்.

அந்த வரிசையில் நான் அதிகமாகப் பார்த்த படங்களுள் ஆண்பாவம், இன்று போய் நாளை வா, தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பஞ்சதந்திரம், கரகாட்டக்காரன், உன்னாலே உன்னாலே, மைடியர் மார்த்தாண்டன், வின்னர், பம்மல் கே சம்பந்தம், காதலிக்க நேரமில்லை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கே குறிப்பிட்ட பெரும்பாலான படங்களைப் பார்க்கும் இரண்டு மணி நேரம் எதைப் பற்றிய சிந்தனையையும் ஏற்படுத்தாமல் சிரிப்பு அல்லது பொழுதுபோக்கு என்று நகர்ந்துவிடும்.

அந்த வரிசையில் கண்டிப்பாக களவாணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராமங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் வார்த்தைக்கு வார்த்தை  வலிந்து திணிக்கப்படும் 'ங்க' போட்டு பேசப்படும் கொங்குமண்டல வட்டார வழக்கு அல்லது 'ய்ய்ங்ஙே' போட்டுப் பேசப்படும் மதுரை வட்டார வழக்கிற்கு மாறாக, இப்படத்தின் வசனங்களில் தஞ்சை மண்ணின் வாசம் வீசுவது இதமாக இருக்கிறது.  பேச்சு வழக்கில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பும் தஞ்சை மண்ணிலே என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. எங்கும் பச்சைப் பசேல் புல்வெளிகள், வாய்க்கால் வரப்பு, அப்பகுதிகளில் பார்க்க முடியும் கிராம வீடுகள், குளங்கள் என்று பசுமையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

+12ம் வகுப்பை முடிக்காத கதாநாயகன் (விமல்), துபாயில் இருந்து தந்தை அனுப்பும் பணத்தைத் தாயிடம் (சரண்யா) மிரட்டி, ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் களவாணித் தனம் தான் படத்தின் கதை. களவாணித் தனத்தின் இடையில் பள்ளிச் செல்லும் கதாநாயகியிடம் (ஓவியா) காதல், விமல் கும்பல் "பிள்ளையாரைத்" திருடியதால் ஏற்பட்ட ஊர்ப்பகை, ஒவ்வொரு காட்சியிலும் இழையோடும் நகைச்சுவை என்று சுவையாகப் படமெடுத்திருக்கிறார்கள்.

'காசு கொடுக்கிறியா.. இல்ல டிவிய உடைச்சிடும்மா' என்று ஆரம்பிக்கிறது அறிக்கியின் (விமல்) அறிமுகக் காட்சி. பிறகு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்  பேருந்தில், கடைசி சீட்டில் இருக்கும் பெண்ணைக் கண்ணடித்துச் செய்கை காட்டி, முன் சீட்டில் இருக்கும் பெண்ணிற்கும் சிக்னல் கொடுக்கும் காட்சி என்று கலக்கலான ஓப்பனிங்!! இயல்பான கிராமத்து வெட்டிப்பயலாகக் கன கச்சிதமாகப் பொருந்துகிறார் விமல். யமஹா RX100ஐ ஓட்டும் வாகு, நண்பர்களுடன் செய்யும் அடாவடித்தனம் என்று பள்ளிக்கால நண்பர்கள் சிலரை நினைவூட்டுகிறார்.

*

'என்னடா வண்டிய நிறுத்திட்ட' என்று மொபட்டை ஓட்டி வந்தவரிடம் கஞ்சா கருப்பு கேட்க..
'நீ செத்துட்டேனு தான் மாமா கார்ல சொல்லீட்டுப் போறானுக. அதத்தான் பார்க்கிறேன்'

'அடப்பாவிகளா.. போன தடவை பாலிடாலக் குடிச்சேன்னு அட்டுழியம் பண்ணுனானுக.. இந்தத் தடவை இப்படியா..' என்று கஞ்சா கருப்பு வரும் இடமெல்லாம் கண்ணில் நீர் வரும்படி சிரிப்பு வருகிறது. கஞ்சாக் கருப்புவிற்கு இந்தப் படம் ஒரு 'மைல்கல்'

*

"நான், அவன் ஏதோ கம்ப்யூட்டர் படிக்கிறான்னு லேப்டாப்பெல்லாம் வாங்கீட்டு வர்றேன்.. நீ அவன் வயல்ல பொறுப்பா மாடு மேய்க்கப் போறான்னு பெருமைப் படற?" என்று விமலின் தந்தை (இளவரசு) கேட்க..

'நீங்க வேணா பாருங்க.. இந்த ஆனி போய் ஆடி போய் ஆவணி வரட்டிம்,.. அவன் டாப்பா' வந்திருவான்னு ஜோசியர் சொல்லியிருக்கார் என கூறும் சரண்யா.. அப்படியே அப்பாவி அம்மா..

கதாநாயகி ஓவியா, வில்லனாக வருபவர், விமலின் நண்பர்கள் அன அனைவரும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

*

'சின்னச் சின்னத் தூரல் வந்து' என்று தொடங்கும் பாடல்.. ஹிட் வரிசையில்!! திரும்பத் திரும்ப ஒலி/ஒளிபரப்பினால் இந்தப் பாடலில் வரும் 'டம்ம டும்ம டமடம டும்மா டம்ம டும்ம டமடம டும்மா' என்று வரும் வரிகளைக் குழந்தைகள் திரும்பத் திரும்பப் பாடினால் வியப்பில்லை!! மற்ற பாடல்கள் பெரிதாகச் சொல்லும் படியாக இல்லாவிட்டாலும் கிராமத்து வாசமடிப்பது இதமாக இருக்கிறது.

*

பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜட், கத்தி குத்து, இரத்தம், பறந்து பறந்து போடும் சண்டை  எல்லாம் இல்லாமல்  இதமான கிராமத்துப் படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம்.

*

பள்ளிக்குச் செல்லும் பெண்ணை வெட்டிப் பயல் காதலிப்பதாக வரும் படத்தை ஆகா ஓஹோ வென்று விமர்சிப்பது சரியா? என்ற கேள்வி எழலாம். 'நம்ம ஊர்ல சினிமாவப் பார்த்துத் தான் எல்லாம் நடக்கனும்னா இந்நேரம் ஒரு ஊழல் அரசியல்வாதியும் சாலைல நடமாட முடியாது'. சினிமாவைச் சினிமாவாகப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தாலே யாரும் இது போன்ற படங்களால் கெட்டுப் போக மாட்டார்கள்.


ஆகவே.. இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ அருமையான படம் களவாணி. நகைச்சுவைப் படங்களைக் கலேக்ஷனில் சேர்க்க வேண்டும் என்பவர்கள் களவாணியைத் தவிர விடக்கூடாது.

 களவாணி - டம்ம டும்ம டமடம டும்மா!!

7 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முந்தைய இடுகையில் ஒரு சின்ன பிரச்சனை. மாற்றும் பொழுது இடுகை அழிந்துவிட்டது. முந்தைய இடுகையில் வெளியான பின்னூட்டங்கள்..

//அப்துல்மாலிக் has left a new comment on your post "களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!":

நானும் நேற்றுதான் பார்த்தேன், அப்படியே எங்க ஊரை யமகாவுலே ஒரு உலா வந்ததுபோன்று இருந்தது.

வாழ்த்துக்கள் சற்குணம்!!//

//பிரபாகர் has left a new comment on your post "களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!":

படத்த ரெண்டு தடவ பார்த்தேன் செந்தில்... அருமையான விமர்சமன், படம் போல...

பிரபாகர்... //

//|கீதப்ப்ரியன்|Geethappriyan| has left a new comment on your post "களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!":

நல்ல விமர்சனம் நண்பரே //

//Mahesh has left a new comment on your post "களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!":

பாத்துடணுமே....//

நன்றி நண்பர்களே!!

அத்திரி said...

good review

வானம்பாடிகள் said...

நல்ல விமரிசனம். :)

பழமைபேசி said...

படத்துக்கு போறதுக்கு இப்ப நேரம் காணாதுங்க தம்பி... இஃகி

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் இன்னும் பார்க்கவில்லை உங்கள் விமர்சனம் என்னை பார்க்கத் தூண்டுகிறது...

ரமி said...

என்ன? இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சா?

க.பாலாசி said...

ஆனாலும் எனக்கு படம் பாக்கும்போது கொஞ்சயிடங்கள்ல போரடிக்கவும் செஞ்சது... ரொம்ப நேரம் ஓடுறமாதிரியும் ஃபீலிங்..... ஆனா கிளைமாக்ஸ் வரையும் சிரிக்க வச்சிட்டாங்க....

Related Posts with Thumbnails