Sunday, August 15, 2010

"காந்தி" திரைப்படமும் சிந்தனைகளும்!!


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!! இந்தப் பெயரைத் தெரியாதவர் இருக்க முடியுமா? உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகள்,இயக்கங்கள், தலைவர்கள், தனி நபர்கள் என இவரது கருத்துகளின் தாக்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. காந்தியடிகளின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தால் இந்திய விடுதலை வரலாற்றின் முக்கிய திருப்பங்களையும் தெரிந்து கொள்ளலாம். அப்படி அவரது வாழ்க்கையையும், இந்திய வரலாற்றையும் ஒரு சேரப் பார்க்க வேண்டுமா?

காந்தி - திரைப்படம் பாருங்கள்!!

காந்தி திரைப்படத்தைத் தான் தூர்தர்சன் காலத்தில் வருடா வருடம் ஒளிபரப்பியிருக்கிறார்களே!! இப்பொழுது என்ன புதிதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது?


சில படங்கள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு தாக்கத்தை, கவனிப்பை ஏற்படுத்தும். சிறுவயதில் தூர்தர்சன் காலத்தில் காந்தி ஜெயந்தி அன்று "காந்தி" திரைப்படத்தைப் போட்ட போதெல்லாம் காந்தியின் மீதுள்ள மதிப்பால் அரை மணி நேரம் பார்த்துவிட்டு "போர்" அடிக்கிறது என்று விளையாடச் சென்று விடுவேன். அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காந்தியாக நடித்தவரின் (பென் கிங்க்ஸ்லி) ஆளுமை, காந்தி திரைப்படத்தில் வரும் கருத்துகளை இப்பொழுது பார்க்கும் பொழுது இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டு நாம் எங்கே இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. 

படத்தின் கதையை, எடுத்த விதத்தை விமர்சனம் செய்வது இப்பதிவின் நோக்கமல்ல. இந்தப் பதிவில், படத்தில் என்னைக் கவர்ந்த முக்கிய காட்சிகளும், வசனங்களும் இன்றைய சூழலைப் பற்றிய ஆதங்கமுமே பதிவேற்றப்பட்டுள்ளது.

காந்தி தென்னாபிரிக்காவில் முதல் வகுப்பில் ரயில் பயணம் செய்து கொண்டிருப்பார். அவரை வெள்ளை அதிகாரிகள் வண்டியில் இருந்து இறங்கி மூன்றாம் வகுப்பிற்குச் செல்லக் கூறும் பொழுது, "இந்தியாவும் பிரிட்டனின் ஆட்சியில் தான் உள்ளது. நான் ஒரு வக்கீல். எனக்கு முதல் வகுப்பில் செல்ல எல்லா உரிமையும் உள்ளது" என்று கூறும் பொழுது கண்ணில் ஒரு ஒளி தெரியும் பாருங்கள்!! அவர் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததே இந்த "இனவெறிக்கு எதிரான இந்த ரயில் சம்பவத்தில்" தான். இந்த சம்பவம் நடந்தது 130 வருடத்திற்கு முன்பு. இன்றும் எத்தனை இடங்களில் சாதி வெறி, மத வெறி உள்ளது நம் நாட்டில்? அன்று காந்தியடிகள் கேட்டது வெள்ளியர்களிடம்.. இன்று??

சென்னையில் இருக்கும் பொழுது பேச்சாற்றல் சம்பந்தமாக ஒரு பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தேன். அந்தப் பயிற்சி வகுப்பில், "ஒரு மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும், கூட்டத்தின் கவனத்தை எப்படி ஈர்க்க வேண்டும்?" என்பதற்கு உதாரணமாகக் காட்டியது "காந்தி" படத்தில் வரும் காட்சியைத் தான். தென்னாபிரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் காட்சி. இந்தியர்கள் என்பதற்கு அடையாளமாக ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட "அடையாள அட்டைகளை" புறக்கணிக்குமாறு கூறுவதே உரையின் நோக்கம். அதில் வரும் வசனம்..

"அவர்கள் என்னைத் துன்புறுத்தலாம், எலும்புகளை உடைக்கலாம், என்னைக் கொல்லவும் செய்யலாம். ஆனால் என் மன உறுதியை அல்ல.."

இந்தியாவிற்கு காந்தியடிகள் வந்த பிறகு நேரு, ஜின்னாஹ் மற்றும் இதர தலைவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்வார். அதில் அவர் ஆற்றிய உரையில்..

"நீங்கள் சில நூறு வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தில்லியிலும், பம்பாயிலும் நாட்டு விடுதலை பற்றியும், மக்களின் எழுச்சி பற்றியும் பேசுகிறீர்கள். இதனால் என்ன பயன்? நீங்கள் பேச வேண்டியது 700000 கிராமங்களில், நாட்டுபுறங்களில் உள்ள சாமான்யர்களிடம் தான். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் எந்தப் பயனும் இல்லை.."

இந்த உரையை இன்று உள்ள அரசியல்வாதிகளிடம் கூறினாலும் சரியாகத் தான் இருக்கும். சாமான்யர்களுக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்காமல் தலைநகரங்களில் இருந்து கொண்டு திட்டம் தீட்டுவதை என்னவென்று சொல்ல?

காந்தி தனது அகிம்சை வழியைப் பற்றிக் கூறும் பொழுது ஜின்னாஹ் "நம் மக்கள் இப்பொழுது தான் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். பல இடங்களில் வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிடுகிறார்கள். இப்பொழுது நிறுத்து என்பது சரியாகுமா?" என்பார். அதற்கு காந்தி " கண்ணிற்குக் கண் என்பது என்றைக்குமே தீர்வு அல்ல" என்பார். என்னவொரு கருத்து?

காந்தியடிகளின் "ஒத்துழையாமைப் போராட்டம்" தீவிரம் அடைந்த நேரம். அம்ரிட்சர் அருகே ஜாலியன் வாலாஹ் பாகில் நான்கு பக்கமும் சுவர்களால் மறைக்கப்பட்ட மைதானத்தில் மக்கள் கூடியிருப்பர். அந்நேரம் ஜெனரல் டையர் என்ற படும்பாவி ஆயுதம் ஏந்திய ஆங்கிலேயப் படையை ஏவிவிட்டு சுட்டுத் தள்ளுமாறு ஆணையிடுவார். அந்தக் காட்சியை இன்று பார்த்தாலும் இரத்தம் கொதிக்கிறது. அந்தக் காட்சிக்குப் பிறகு ஆங்கிலேயே விசாரனைக் குழுவிடம் டையர் நடத்தும் உரையாடல்..

அரசாங்க வக்கீல்: ஜெனரல் டையர் நீங்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொன்னீர்களா?
டையர்: ஆம்
அரசாங்க வக்கீல்: 1516 பேர் இறந்துள்ளனர் தெரியுமா?
டையர்: ஆம். மொத்த இந்தியாவிற்கு இது ஒரு படிப்பினையாக இருக்குமென்றே அவ்வாறு செய்தேன்.
அரசாங்க வக்கீல்: அந்தக் கூட்டத்தில் குழந்தைகளும், பெண்களும் இருந்தார்கள் என்பது தெரியுமா?
டையர்: ஆம் தெரியும்.
அரசாங்க வக்கீல்: குழந்தைகளையும் பெண்களையும் சுட்டு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முடியும்?
டையர்: ??
அரசாங்க வக்கீல்: அடிபட்டவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
டையர்: அவர்கள் உதவிகேட்கும் பட்சத்தில் உதவுவேன்.
அரசாங்க வக்கீல்: குண்டால் அடிபட்ட குழந்தை உங்களிடம் என்ன உதவியைக் கேட்கும் ஜெனரல்?
டையர்:

இங்கே நடந்திருக்கும் உரையாடல் நம் முன்னோர் செய்துள்ள தியாகத்தின் அளவை விளக்கும். அது சுதந்திரப் போராட்டம். 

சுதந்திரம் வாங்கிய பிறகும் நம் நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் /நடந்த கொடுமைகளுக்கும், கொலைகளுக்கும் என்ன பதிலளிக்க முடியும்? நவீன கால ஜெனரல் டையர்களுக்கு எப்படி தண்டனை அளிப்பது?

சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிய நேரம் காந்தியிடம் சமாதானம் பேசும் எண்ணத்தில் ஆங்கிலேய உயரதிகாரி கேட்கிறார்..

"நாங்கள் நாட்டை விட்டுப் போவோம் என்று நினைக்க வேண்டாம்"
"இல்லை. நீங்கள் சென்றே தீர்வீர்கள். வெறும் ஒரு இலட்சம் பேர்.. 35 கோடி மக்களை ஆள்வதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது"

சுய ஆட்சிக்கு வித்திட இதை விட அருமையான மொழிகள் அமைய முடியுமா? 


"திரு.காந்தி, பிரிட்டிஷ் இல்லாமல் உங்களால் திறமையாக ஆட்சி செய்ய முடியாது"
"உங்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது, 'உலகில் எந்த மக்களுமே அந்நியர் ஆட்சி செய்வதை விரும்பமாட்டர். தங்கள் ஆட்சி மோசமானதாக இருந்தாலும்"

சுய உரிமையை, நாட்டு மக்களின் உரிமை அந்நியரிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை எவ்வளவு எளிமையாகக் கூறியுள்ளார் காந்தியடிகள். இன்று நாம் ஒவ்வொரு முடிவிற்கு ஏதாவதொரு அயல்நாட்டிடம் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தான் காந்தி எதிர்பார்த்த சுய உரிமையா?

நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப் போகும் தருணம். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடுகள் துண்டாகப் போவதை எண்ணி நாடெங்கும் கலவரம். ஒரு இந்து காந்தியிடம்..

"பாபு, நீங்கள் இதை செய்யக் கூடாது" என்கிறார்.
"ஏன்? ஏன் நான் ஜின்னாவை சந்திக்கக் கூடாது. நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், யூதன், சீக்கியன் எல்லாமே. நீங்கள் இப்படி கூச்சிலிடுவது உங்கள் சகோதரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதா? நான் எதிர்பார்க்கும் இந்தியா அதுவல்ல!!"

மதச்சார்பின்மை என்ற கொள்கையை நம் நாட்டிற்கு எவ்வளவு அரும்பாடு பட்டு வகுத்திருக்கிறார். நம் நாட்டில் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நடக்கும் கலவரங்களும், அரசியலும் ஒவ்வொரு இந்தியனும் வெட்கித்தலை குனிய வேண்டிய விசயம்.

*

"காந்தி" திரைப்படம் எடுத்தது 1982ல். இந்தியா சுதந்திரம் பெற்று 35 ஆண்டுகள் கழித்து நாட்டின் தந்தையைப் பற்றி வெளியான படம். திரைப்படம் என்றால் எடுத்த விதத்தில் கொஞ்சம் திரிபுகளும், வசனங்களை படத்திற்கு ஏற்றவாறும் இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தில் வந்துள்ள வசனங்கள் எவ்வளவு அருமையாக எழுதப்பட்டுள்ளன.

காந்தி திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்த்தால் நாம் இன்று இருக்கும் சூழலிற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும். சுதந்திரம், மதச்சார்பினை, சாதிகள் அற்ற சமுதாயம், பெண் விடுதலை என்பதெல்லாம் என்னவென்பதை சில நாடுகளைப் பார்க்கும் பொழுது தான் புரியும். காந்தி திரைப்படத்தை வரலாற்று ஆவனமாகவும் பார்க்கலாம், மேலாண்மை வழிகாட்டியாகவும் பார்க்கலாம்.

இப்படி ஒரு அருமையான படத்தைக் கொடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவிற்கு எத்தனை நன்றியைக் கூறினாலும் தகும்!!

"காந்தி"யை நீங்களும் ஒருமுறை பாருங்களேன்!!

நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!!

10 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் செந்தில்.....

எவ்வளவு முறை பார்த்தாலும் இந்தப் படம் ஏனோ சலிப்பதில்லை. எப்படி வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று சொன்னால் நடிகர் சிவாஜி கணேசனை நினைவுபடுத்துகிறதோ, அதுபோல் காந்தி என்று சொல்லும்போதே பென் கிங்ஸிலியை உருவம் நினைவிற்கு வந்து விடுகிறது.

படத்தொகுப்பு, படமாக்கிய விதம், வசனங்கள், ஒலி & ஒளி அனைத்தும் அழகாக ஒன்று சேர்ந்துள்ளது இப்பட்த்தின் சிறப்பு.

எதிர்கால சந்ததியினருக்கு காந்தியைப் பற்றி சொல்லக்கூடய ஒரு ஆவணமாகக் கூட இப்படம் தான் இருக்கும்.....

அன்புடன்
ஆரூரன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை அருமை .
மிக நல்ல பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

geethappriyan said...

நல்ல பிரம்மாண்டமான வரலாற்று ஆவண படத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு,ரிச்ச்ர்ட் அட்டன்போரோ இவர் பிறப்பால் இங்கிலாந்து நாட்டுக்காரராயிருந்தாலும் சிறந்த காந்தியவாதி என படித்துள்ளேன்,இவர் ஜுராசிக் பார்க் படத்தில் டாக்டராகவும் வருவார்.சத்யஜித்ரேயின் படத்தில் ஆர்வமாய் பங்குபெற்று நடித்துள்ளார். 85வயதிலும் நல்ல உழைப்பாளி.இவர் கலைவாழ்வுக்கு இந்த காந்திபடமே நல்ல எடுத்துக்காட்டு.என்னிடமும் காந்தி படம் உள்ளது.நான் அடிக்கடி பார்ப்பேன்.இந்த படத்த்தின் காந்தி பாத்திரத்தை பார்த்துவிட்டுதான் பென்கிங்ஸ்லிக்கு இஷ்தக் ஸ்டெர்ன் பாத்திரம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் வழங்கப்பெற்றது.எத்தனையோ பேர் காந்திவேடம் போட்டாலும் அதுபோல வராது.ரவிஷங்கரின் இசை அருமை.பதேர்பாஞ்சாலி போல உலகத்தரம்

அப்துல்மாலிக் said...

காந்திப்படத்தோடு இக்கால அரசியலை ஒப்பிட்டு எழுப்பபட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா

அருமையான தொகுப்பு

vasu balaji said...

எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் இது ஒன்று. பல முறை பார்த்தும் சலித்ததில்லை.

ஜோதிஜி said...

கையைக் கொடுங்கள் செந்தில்.

,,,,,,,,,,,,,,,

கைகுட்டையால் துடைத்துக்கொள்ளுங்கள்.

கொடுத்த முத்தத்தில் எச்சில் அதிகமாகி விட்டது.

rangarajan said...

உண்மையை ஒத்துக் கொள்கிறேன்.. நானும் காந்தி திரைப்படத்தை பல முறை பார்த்துள்ளேன்.. ஆனால் நீங்கள் சொன்ன விசயங்களில் பல எனக்கு தெரியமல் இருந்தது.. ஆனால் ஒன்று..ஆந்த திரைப்படம் , திரைப்படம் மாதிரி தெரியவில்லை..நேரில் திரு காந்தி அவர்களை பார்த்த மாதிரி இருந்தது.. காந்தி அடிகளின் படுகொலை கொடுத்த அதிர்ச்சியை என்னால் தங்கலை மாதிரி அழகாக விவரிக்க முடியவில்லை..அற்புதமான திரைப்படம்..

Umapathy said...

காந்தி படம் பார்த்த பிறகு ஒரு அழுத்தத்துடன் இருக்கிறேன்
இன்னும் பார்த்து கொண்டி தான் இருக்கிறேன்
அனைவரும் அறிய வேண்டிய இந்திய சுதந்திர தின செய்தி

GoodJob said...

இன்று இநதியாவில் நடக்கும் அரசியல் அயோக்கியத்தனம் அனைத்திற்கும் முன்னோடிதான் இந்த "மோகன் தாஸ் கரப்சன் காந்தி" ...அனால் நீங்க வருசா வருசம் படம் பாருங்க

HariV is not a aruvujeevi said...

சப்தபதி யை பென் கிங்க்ஸ்லி நடித்து காட்டும் விதம் (என்னை பொறுத்தவரை ) முத்தாய்ப்பை வந்த ஒன்று. உப்பு சத்யாக்ரகம் , காந்திக்காக ரயில்வே நிலையத்தில் நிற்கும் மக்கள் கடல், ஹரிஜன் ஒருவரின் கடைசி சந்திப்பு, ரோஹேன் சேத் அவர்கள்ளின் நடிப்பு , முதல் இந்திய ஆஸ்கார் விருது (உடை அலங்காரம் ) என்று எத்தனை எந்தனை விஷையங்கள் இந்த படத்தில். கொஞ்சும் உண்மைகளை சேர்த்து இருக்கலாம் (நேதாஜி, ராஜாஜி, போன்றவர்கள் பற்றி ) எங்கள் கிராமது பள்ளியில் இருந்து இந்த திரை படத்துக்கு சென்ற நினைவுகள் பற்றி ஒரு ப்ளாக் எழுதும் அளவு உள்ளது.

Related Posts with Thumbnails