அமீரகம் ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகி வருகிறது. பல்பொருள் அங்காடிகள் எங்கும் கூட்டம். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவுப் பொருட்களை வாங்குவதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள் என வணிக நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் நடக்கும் ஏற்பாடுகளும், ரமலானை முன்னிட்டு அனுசரிக்கப்படும் கட்டுப்பாடுகளும், இன்னபிற எண்ணங்களும் தான் இப்பதிவின் நோக்கம்.
அதற்கு முன்பாக.. ரமலான் பற்றிய சிறிய விளக்கம். தெரியாத விசயங்களைத் தவறாகக் கொடுக்கக் கூடாது என்பதாலேயே விக்கிப்பீடியாவில் ரமலான் மாதத்தைப் பற்றி கொடுத்துள்ள குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.
" ரமலான் என்பது இசுலாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் முஸ்லிம்களுக்கு நோன்பு மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்." நன்றி - விக்கிப்பீடியா.
அமீரகம் வருவதற்கு முன்பு ரமலான் என்பது இஸ்லாமிய அன்பர்கள் தொடர்புடைய மாதம் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். ஊரில் இருக்கும் பொழுது கூட இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் சென்று நோன்புக் கஞ்சியை வாங்கி வந்ததுண்டு. ஆனால், அதற்கு மேல் ரமலான் மாதத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கவில்லை. அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தது மத்திய கிழக்கு நாடுகளின் பழக்கவழக்கங்களையும், அதில் முக்கியமான ரமலான் மாதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகியுள்ளது.
ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பொறுப்பு என்பதால், அமீரக அரசாங்கமும் நோன்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணம் சட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நோன்பு மேற்கொள்ளும் அன்பர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு வந்திராத வண்ணம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நோன்பு மேற்கொள்ளும் நேரமான சூரிய உதயத்தில் முதல் அஸ்தமனம் வரையில் பொது இடங்களில் எந்த உணவோ, தண்ணிர் முதற்கொண்டு எந்த விதமான நீராதரமோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சிறைதண்டனைக்கு உள்ளாவார்கள். வருடாவருடம் இந்த விதி தெரியாமலோ, தெரிந்தோ மீறி மாட்டிக்கொள்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவதைத் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.
பொது இடங்களில் உணவருந்தக் கூடாது என்பதால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. சரவணபவன் போன்ற உணவகங்கள் தேவையான உணவை வீட்டிற்கே கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இந்த சேவையை வழங்க தனி அனுமதி பெற வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் உணவகங்கள் அல்லது துரித உணவகங்கள் தட்டி வைத்து மறைவிடங்களைத் தற்காலிகமாக உருவாக்கி நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு உதவுகிறார்கள்.
நம் ஊரில் எப்படி தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் விற்பனை களைகட்டுகிறதோ, இங்கே ரமலான் மாதமும் விற்பனை களை கட்டியுள்ளது. ஆனால், இங்கே ஒரு வித்தியாசம், வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை, அதிக பயன் கிடைக்க வேண்டும் என்பதே அடிநாதமாகக் காண முடிகிறது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள்,மின்னனுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தும் சலுகை விலையில்!!
தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் ரமலானை முன்னிட்டு தனி ஏற்பாடுகளைச் செய்வது கவனிக்கத்தக்கது. நோன்பு மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கின்றனர். நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் விடுப்பும் அளிப்பதுண்டு. ஆகவே ரமலான் மாதம் முழுவதும் மதியம் 2:30 முதல் சாலைகளில் வாகன நெருக்கடி ஆரம்பித்துவிடும்.
ரமலான் என்றால் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம் நோன்பு விருந்து. நோன்பை முடிக்கும் நேரத்தில் அலுவலக ஊழியர்களுக்கு (ஒரு நாள்) ரமலான் நோன்பு விருந்தை ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. பகல் நேரத்தில் இழக்கும் வருவாயை இது போன்ற விருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிகள் மீட்டு விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே செய்தித்தாள்கள் எங்கும் ரமலான் விருந்தைப் பற்றிய சலுகைகளைப் பார்க்க முடிகிறது. ரமலான் விருந்தில் அரேபிய உணவுகள் தனிச் சிறப்பு மிக்கது.
இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர். இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது.
ரமலான் மாதத்தில் எப்படி ஒரு நாடே ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் நடக்கிறது என்ற பிரமிப்பு வராமல் இல்லை.
அதே சமயம் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..
*அமீரக மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் இந்தியர்கள். அதில் தோராயமாக நான்கு இலட்சம் பேர் இஸ்லாம் மதத்தைச் சாராத இந்தியர்கள். இந்த 4 இலட்சம் பேர் சக அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுது, நம் நாட்டில் ஏன் இது போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடிவதில்லை?
* பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?
* நம் ஊரிலும் வீட்டிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அவர்களை நாம் தூண்டாமலோ, கிண்டல் செய்யாமலோ இருந்திருக்கிறோமா?
இதெற்கெல்லாம் அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை என்று சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்ற எண்ணமே வருகிறது.
19 comments:
இல்லைங்க செந்தில். இவ்வளவு முரண்பாடு இருந்தாலும், இந்து பிண ஊர்வலமோ, சாமி ஊர்வலமோ மசூதியைக் கடக்கும்போது, வாத்தியங்களை நிறுத்திவிட்டு அமைதியாகக் கடப்பதும், அந்த வீதியில் உள்ள முஸ்லீம் அன்பர்கள் கடையை விட்டு, வெளியிறங்கி நிற்பதும், அதே போல் சந்தனக் கூடு ஊர்வலங்கள், இந்துக் கோவிலைக் கடக்கையில் வாத்திய ஒலியில்லாமல் கடப்பதும், இந்துக்கள் தொழுவதும் என அடிப்படை ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சுயக்கட்டுப்பாடு விஷயத்தில் நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. பாம்புக்கு ராஜா மூங்கில் தடி என்ற சொலவடைக்கேற்ப, தண்டனைக்குத்தான் பயப்படுகிறோம்.
இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர். இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது.
உண்மைதான்,அவரவர் மதத்தை,அதன் சடங்குகளை கட்டாயம் மதிக்க வேண்டும்.
அப்போதுதான் நமக்குள் ஒரு ஒற்றுமை வளரும்,உங்களோடு ஒன்றுபடுகிறேன்.
ஆணால் இங்கு மட்டும் ஏன் இப்படி?
இந்து ஆலயங்கல் மாட வீதிகளில் இசுலாமியர்களின் கறிக்கடைகள்?
இதில் இந்துக்கள் எனப்படுவோரின் கடைகளும் உண்டு என்பது வருத்தமே.
பசு இந்துக்களுக்கு தெய்வம் எனும்போது,புனித ரமலான் மாதத்தில்,அரபு தேசம் எங்கும் காண முடியாத,பசுக்களை நடுத்தெருவில், வெட்டி பங்கு போடுவது எதனால்?
இசுலாமிய நண்பர்களே யோசிக்க வேண்டும்.
மிகச் சரியான அலசல்.....
வாழ்த்துக்கள் செந்தில்
//பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?/
நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள்.
@@ பாலாண்ணே,
மத நல்லிணக்கத்தை நல்ல எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளீர்கள் நன்றி.
@@ ஆனந்தன்,
//இந்து ஆலயங்கல் மாட வீதிகளில் இசுலாமியர்களின் கறிக்கடைகள்?
இதில் இந்துக்கள் எனப்படுவோரின் கடைகளும் உண்டு என்பது வருத்தமே.//
நீங்கள் கூறியுள்ளது போல அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டிய விசயம் இது.
//பசு இந்துக்களுக்கு தெய்வம் எனும்போது,புனித ரமலான் மாதத்தில்,அரபு தேசம் எங்கும் காண முடியாத,பசுக்களை நடுத்தெருவில், வெட்டி பங்கு போடுவது எதனால்?
இசுலாமிய நண்பர்களே யோசிக்க வேண்டும்.//
அரபு நாடுகளிலோ, இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலோ நடக்கும் விசயத்தை அவர்களது பழக்கவழக்கத்துடன் தான் பார்க்க வேண்டியிருக்கும். அரபு நாடுகள் மட்டுமல்லாது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் எங்கும் மாட்டு இறைச்சியே பிராதனமான அசைவ உணவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, அது அவர்களது உணவுப் பழக்கங்களில் ஒன்று.
@@ ஆரூரன்,
நன்றிங்க நண்பரே!!
செந்தில் நானும் அமீரகத்தில் இருப்பதால் சொல்கிறேன்...
இங்கே எல்லோரும் ஒரே நேரத்தில் பின்பற்றுவதற்கு காரணம் கட்டுப்பாடும் விதிமுறைகளும்தான்....!
நமது நாட்டில் வலியுறுத்தலுக்கான சட்டம் இல்லை. எல்லாமே அவரவர் விருப்பம்.
தெருவிலே சிறு நீர் கழிப்பது இந்திய பிரஜைகள் சுதந்திரதை மிஸ் யூஸ் செய்தல் அல்லது பொது கழிப்பிடங்கள் அமைத்தாலும் முறையாக பின்பற்றாமை என்று நிறைய காரணங்களை அடுக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி தோழர்!
புனித ரமலான் மாதம் பற்றி விவரித்த விதம் அருமை.மனதார பாராட்டுகிறேன்.எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
நல்ல பதிவு.. நானும் அமீரகத்தில்தான் இருக்கிறேன். http://faaique.blogspot.com/
நல்ல அலசலுங்க... ரமலான் நோன்பைப்பற்றி தெரிந்துகொண்டேன்...
இதில் தேவா அவர்களின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்.
அருமையான பதிவு நண்பரே,
ரமலான் நோம்பு நானும் நோற்க முடிவு செய்திருக்கிறேன்,பார்ப்போம்.கடவுள் சித்தம்.
இறைச்சி என்று சர்ச்சை வந்தால் எல்லாமும் பாவம் தானே,என்னை பொறுத்த வரை இரண்டு வகை
சைவ உணவாளர்,அசைவ உணவாளர்.
மாடு மட்டும் தெய்வம்,நாய் மட்டும் தெய்வம் என்னும் கொள்கை ஏற்புடையதில்லை,பன்றி கூட தான் வராக அவதாரம்,அதையும் தானே நம்மூரில் சர்வ சாதரணமாக விற்கின்றனர்?இன்னும் கேட்டால் இன்றைய நாட்களில் இந்துக்கள் நிறைய பேர் மாட்டுக்கறியை பெருசு என செல்லமாக வாங்கி சமைக்கின்றனர்.எனக்கு கிராமப்புறத்தில் எப்படி என தெரியாது.
தேவா பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
*****
மதம் ஆட்சி நடத்தினால் கட்டுப்பாடோடு இருக்க முடியும் என்று தான் வளைகுடா நாடுகளைப் பார்த்து இந்துத்துவாக்கள் கூறுகிறார்கள். நான் அதைச் சரி என்று சொல்லமாட்டேன்.
ரம்ஜான் மாதத்தில் பகல் பொழுதில் இளம் பெண் ஒருத்தி பீர் அருந்தினாள் என்பதற்காக அவளுக்கு சரியத் நீதிமன்றத்தில் பிரம்படி தண்டனை கொடுக்கும்படி மலேசியாவில் தீர்ப்பு எழுதப்பட்டது. எல்லோரும் தண்டனைக்கு பயந்து ஒழுக்கம் கடைபிடிப்பவர்கள், அப்படி கடைபிடிக்காதவர்களை ஒழுக்கமற்றவர்கள் என்று அரசாங்கம் விதிமுறை வகுப்பது மக்கள் ஆட்சித்தத்துவத்தில் முறையானதும் இல்லை.
சகோதரரே!
ரமளான் பற்றிய உங்களின் விளக்கம் அருமை. நன்றி.
//அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..//
ஒவ்வொரு விஷயத்திலும் நம் நாடும் இம்மாதிரி சிறப்படையாதா என்ற ஏக்கம்தான் வருகிறது. கடுமையான விதிமுறைகளும், அவற்றை அமுல்படுத்த நேர்மையான அதிகாரிகளும் இல்லாமைதான் நம்நாட்டின் குறை.
ரமலான் நோன்பு குறித்த நல்ல இடுகை செந்தில்
@@ தேவா,
இங்கே எல்லோரும் ஒரே நேரத்தில் பின்பற்றுவதற்கு காரணம் கட்டுப்பாடும் விதிமுறைகளும்தான்....!
நமது நாட்டில் வலியுறுத்தலுக்கான சட்டம் இல்லை. எல்லாமே அவரவர் விருப்பம்
///
நீங்கள் சொல்வது முழுக்க உண்மை. இருந்தாலும் என் எண்ணம்.. சட்டம் இருந்தால் ஒழுங்காகப் பின்பற்றுவதை ஏன் நம்மால் நம் ஊரில் பின்பற்ற முடிவதில்லை?
நன்றிங்க.
@@ அசியா ஒமர்,
நன்றிங்க
@@ முகம்மது ஃபாய்க்,
நன்றிங்க
@@ பாலாசி,
நன்றிங்க
@@ கார்த்திகேயன்,
அருமை. நீங்கள் ரமலான் நோன்பு இருப்பதாக முடிவு செய்திருப்பதற்கு ஒரு தனி வாழ்த்துகள்.
உங்கள் கருத்தும் யோசிக்க வேண்டியது தான்.
@@ கோவி.கண்ணன்,
//தேவா பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
*****
மதம் ஆட்சி நடத்தினால் கட்டுப்பாடோடு இருக்க முடியும் என்று தான் வளைகுடா நாடுகளைப் பார்த்து இந்துத்துவாக்கள் கூறுகிறார்கள். நான் அதைச் சரி என்று சொல்லமாட்டேன்.
//
சரியான கருத்து. உங்கள் கருத்துகளுக்கு நன்றி
@@ அப்துல் குத்துஸ்,
நன்றிங்க
@@ ஹூசைனம்மா,
என்று தணியும் ஆதங்கம்? கேள்விக்கு பதில் தான் இல்லை. நன்றிங்க
@@ கதிர்,
நன்றிங்க.
" இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது."
புனித ரமலானைப் பற்றி சிறப்பாகவும்,அழகாகவும் பதிவு செய்து இருக்கிறீர்கள். செந்தில்.
வாழ்த்துக்கள்.
அருமையான எளிமையான பதிவு
good post!
I am Geetha from udumalpet
my blog udtgeeth.blogspot.com
நோன்பின் மகிமை பற்றி நல்ல பகிர்வு
வாழ்த்துக்கள்
Post a Comment